Wednesday, August 24, 2011

நமக்கேன் வம்பு. இதுவே எங்க ஊரா இருந்தா??

சென்னையில் ஒரு பிரபல மூன்று நட்சத்திர விடுதியிலுள்ள உணவு விடுதிக்கு, முதல் முறை வெளிநாடு செல்லும் நண்பன் (மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையுடன்), திருமணம் நிச்சயிக்கப்பட்ட புது மாப்பிள்ளைகள் இருவர், மற்றும் இரு புதுமணத் தம்பதியினர், கடைசியாக போனால் போகட்டும் என்று இரு கட்டை பிரமச்சாரிகள் என்று பத்து பேர் சாப்பிடப் போனோம். எங்களுக்கே தெரியும், அங்கு ஒரு நாள் சாப்பிட ஆகும் செலவில் பத்து முறை பத்து பேர் வெளியில் நன்றாக சாப்பிடலாம் என்று. இருந்தாலும், இது எப்போதோ ஒரு முறை (அதுவே கடைசி முறையாகி விட்டது) என்று கிளம்பிப் போனோம்.

ஒரு காலத்தில் அந்த இடத்தை வெளியிலிருந்து பெருமூச்சோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். அப்படியேவே போயிருக்கலாம். உள்ளே போனவுடன், சற்று நேரம் அனைவரும் வரும் வரை காத்திருந்தோம். அதன் பின், அனைவரும் வந்தவுடன் உள்ளே போனோம். நண்பனின் ஒரு வயது குழந்தையின் காலில், நடந்தால் சத்தம் வரும் காலனியை அணிவித்திருந்தார்கள். அவன் அங்குமிங்கும் ஓட, சத்தம் சற்று அதிகமாகவே வந்தது. உடனே வந்து அதை எடுத்து விடுமாறு கூறினர். சரி, மற்றவர்களுக்கு அது தொந்தரவுதானே என்று நாங்களும் கழற்றி விட்டோம்.

அங்கு சாப்பிட வந்த எல்லோரையும் எங்கேயோ பார்த்தது போலவே இருந்தது. குறிப்பாக ஒருவர், பின்புதான் நண்பன் சொன்னான் 'அவர்தான் குருநாத் மெய்யப்பன், CSK முதலாளி'. சரிதான் என்று நினைத்துக்கொண்டு, 'இரண்டாம் பக்கத்தில் நாலாவதாக உள்ளது, முதல் பக்கத்தில் மூன்றாவதாக உள்ளது' என்று தடுமாறி சொல்லி விட்டோம். பின் வழக்கம் போல நாங்கள் பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். சொன்ன அனைத்தும் வந்தன.

எங்களில் சைவ பட்சிகள் நால்வர். மற்ற ஆறு பேரும் அசைவம். சைவப் பிராணிகள் பச்சை நிற மேலாடையும், அசைவப் பிராணிகள் சிகப்பு மேலாடையும் அணிய வேண்டுமாம். எங்களுக்கு முழுதும் சிகப்பு மட்டுமே வைத்திருந்தனர். நாங்கள் அனைவரும் அதை மடித்து பத்திரமாக வைத்திருந்தோம். வந்தவுடனே அசைவத்தை மாற்றிப் பரிமாறி விட்டனர். இங்கே இல்லை அங்கே என்றவுடன் மேலாடையை அணிய வேண்டியதுதானே? என்றனர். அதன் பின்பே பச்சை உடையும் கொடுத்தனர்.

சரி எல்லாம் வந்து விட்டன என்று முள்கரண்டி (அட Spoon & Fork) கேட்டால், இங்கு இந்திய கலாச்சாரப்படி சாப்பிட வேண்டும், அதெல்லாம் கொடுப்பதில்லை என்றனர். சற்றே கோபம் வந்தாலும், சரி நாம் எப்போதும் சாப்பிடுவதுதானே என்று நினைத்து சாப்பிட ஆரம்பித்தோம். பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு 'பணக்காரத்தனமிக்க' தம்பதியினர் அவர்களுக்கு உணவு வந்தவுடன் ஒரு பார்வை பார்த்தனர். உடனே தோசை சுடும் கரண்டி வரை எல்லாமே அங்கே போய் விட்டது. சரிதான் இதற்கு மேல் இருந்தால் சரிப்படாது என்று கடைசியாக முடிக்கலாம் என்று ஒரு பரிமாறுபவரை அழைத்தோம். அவரிடம் நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே மேலாளர் ஒருவர் வந்து "அங்கே போய்க் கவனி, இங்கே என்ன வேலை" என்று சொன்னார். பில் கொடுப்பதற்கு முன், அந்த விடுதியின் சிறப்பு அட்டை இருக்கிறதா என்று கேட்டார். இல்லை, வேறு ஏதாவது கடன் அட்டைக்கு எதுவும் தள்ளுபடி உண்டா என்றவுடன், "அது எதுவும் இல்லை என்றதால்தான் கேட்டேன்" என்றார். தலையில் அடித்துக் கொண்டு மிச்சமுள்ள மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று கிளம்பி விட்டோம்.

இதனால் அறியப்படும் நீதி யாதெனில், அளவுக்கு மீறி ஆசைப்படக்கூடாது. மீறி ஆசைப்பட்டாலும், நம் சத்தம் அதிகமாக இருக்க வேண்டும். Spoon கொடுக்க முடியாது என்றவுடனே கத்தியிருக்க வேண்டும். நமக்கு அதெல்லாம் வந்தால்தானே. சராசரியிலும் சராசரிக்கு கீழேதான் நாங்கள். 'நமக்கேன் வம்பு', சரி பொறுத்துப் போகலாம் என்று வந்ததற்கு, ஒரு பதிவுதான் மிச்சம்.

நான் நான் என்று பேசி எதுவும் நடக்காது. நாம் சேர்ந்துதான் செய்ய வேண்டும். மற்றவர்களின் அனுபவங்களை அங்கேயும், இங்கேயும் படிக்கலாம். இதற்காக முகப்புத்தகத்தில் ஒரு குழுமமும் உள்ளது. மக்களின் நலன் கருதி வெளியிடுவது அரவிந்த்.

'என் விகடனில்' ஒரு முறை இயக்குனர் வெற்றி மாறன் சொன்னார், சென்னையில் சாலையில் ஒருவருக்கு ஒரு விபத்து அல்லது பிரச்சினை என்றால், உதவிக்கு வருபவர்கள் கண்டிப்பாக சென்னையை சேர்ந்தவர்களாக மட்டுமே இருப்பார்கள். அதுவும் உண்மைதான். எங்கள் வீட்டில் எல்லாம், எந்தப் பிரச்சினைக்கும் போக வேண்டாம், அது நம்ம ஊரில்லை என்று சொல்லி சொல்லி எல்லாமே மரத்து விட்டது. நமக்கென்ன, நமக்கேன் வம்பு என்றே ஒதுங்கி ஒதுங்கி போகிறோம். பெரிய இடமானாலும் சரி, சின்ன இடமானாலும் சரி. வெளியூர்க்காரர்கள் அனைவரும் சென்னையில் ஒரு பிரச்சினையில் சிக்கி, எப்படியாவது தப்பித்து வந்த பின் சொல்லும் வார்த்தை, "இதே எங்க ஊரா மட்டும் இருந்தது, அவ்ளோதான்".

நான் ஊரில் இருந்தால் சாலையில் வண்டியில் போகும்போது, நடந்து செல்பவர்கள் திரும்பிப் பார்த்தாலே, "வரிங்களா?' என்று கேட்பேன். இங்கோ, வயதானவர்கள் கையை நீட்டினால் கூட நிற்பதில்லை. ஒரு முறை பட்ட அனுபவம் அப்படி. "நான் நேரா போகணும், இங்க எறங்குங்க" என்றவுடன் "இவ்ளோ தூரம் வந்துட்ட இல்ல, இன்னும் கொஞ்சம் உள்ள போனா என்னவாம்" என்று திட்டு வாங்கியதுதான் மிச்சம். இதற்குதான் சொல்லியிருக்கிறார்கள் " கால் வயித்துக் கஞ்சினாலும், நம்ம வூட்டு கஞ்சியா இருக்கணும்".

"இப்படி எல்லாம் பெரிய ________ மாதிரி எழுதுறியே, நீ என்ன பண்ணப் போற" என்று கேட்கிறீர்களா? நான் இது போல சம்பவங்கள் நடந்த பின், தனியாக என் கற்பனையில் அவர்களை அடிப்பேன். சென்னையைப் பொறுத்தவரை, யார் முதலில் குரலை உயர்த்திப் பேசுகிறார்களோ, அவர்களே நியாயஸ்தர்கள். நம் மீது எந்தத் தவறும் இல்லை என்று சமாதானப் படுத்திக் கொண்டு பொறுத்துப் போனோம், போகிறோம், போவோம். இதற்காக உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்றாலும், அந்த ஒரு கணத்தில் வரும் கோபம், குறைந்தது அந்த முழு நாளையே அழித்து விடும்.

காலையில் ஆறு மணிக்கு அலுவலுக்கு வண்டியில் வேளச்சேரியில் இருந்து தரமணி போகும்போது, எதிரில் Wrong sideல் வேகமாக வரும் வண்டியைப் பார்த்து பயந்து ஓரமாக ஒதுங்கும்போதும் சரி. வேளச்சேரி புறவழிச்சாலையில் இருந்து, குருநானக் கல்லூரிக்கு திரும்ப அதிகம் 12 வினாடிகள் கொடுப்பார்கள். அதற்கும் இடம் தராமல், இரு பக்கமும் வண்டி போகும்போது தடுமாறி அந்தப் பக்கம் செல்லும்போதும் வண்டி ஓட்டும் அன்பர்கள் அசிங்கமாக சொல்லுவார்கள் "ஏண்டா பேமானி. பாத்து வர மாட்ட?" அப்போது மட்டும் சற்றே சத்தமாக கத்துவேன். கேட்குமோ என்னவோ தெரியாது.


"நீங்க போய் உலகத்த காப்பாத்துங்க. எனக்கு அவசர வேல எதுவும் இல்ல". அதன் பின் நினைத்துக் கொள்வேன். "மவனே, நீ மட்டும் எங்க ஊருக்கு வா.."

Monday, July 18, 2011

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

வணக்கம்! வணக்கம்!! வணக்கம்!!!

திரைப்படம்:

போன பிட்டில் கூறியதற்குப் பின், நல்ல படம் என்று எதையுமே பார்க்கவில்லை. 'கோ' ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம். அழகர்சாமியின் குதிரை இன்னும் பார்க்கவில்லை. ஆனாலும், அந்த சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த கதை. (மீண்டும் படித்தபின்தான் தெரிந்தது). அதன் பின் ஆர்வமாக பார்க்க வேண்டும் என்று நினைத்த படங்கள் இந்த மாதம்தான் வந்தன. ஒன்று ஏண்டா பார்த்தோம் என்றானது. மற்றொன்று. முன்னதையும் சேர்த்து ஜீரணித்து விட்டது.

அவன் இவன் - என்னதான் பாலா நினைத்தாலும், அவரால் அவரை மாற்றிக்கொள்ள முடியாது போல. படத்தில் எல்லாவற்றையும் அந்தரத்தில் விட்டு விட்டு 'சுபம்' மட்டும் போட்டால் பிடிக்கும் என்று நினைத்து விட்டாரோ என்று தெரியவில்லை. மற்ற படங்களில் காட்சிகளில் இருந்த அழுத்தம், இதில் இல்லை. பிதாமகன் படத்தில் விக்ரம் பேசமாட்டார் என்று நாம் நினைப்போம். ஆனால், அவர் உரையாடுவது போல காட்சிகளை பாலா வைக்கவில்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக, இடைவேளைக்கு முன், கொல்லப்பட்ட போலீஸின் உடலை எரித்துவிட்டு வீட்டிற்கு வந்த பின், சூர்யா உரையாடும் காட்சி. "நீ என்ன பண்ணிட்டு வந்திருக்க தெரியுமா?" என்று கேட்பார். ஆனால், என்ன, எனக்கு பொழுதே போகாத தருணத்தில் பார்த்த படம் என்பதால், பொழுது போனது. அதன் பின் 180. சில பாடல்களுக்கும், ஒளிப்பதிவிற்கும் நன்றாக இருந்தது.

ஆரண்ய காண்டம். நம்முடன் படிக்கும் ஒரு மாணவன், கணக்கு பாடத்தில், வழிமுறைகளை வித்தியாசமாகக் கையாண்டு, விடையை கண்டறிந்தால், "வேற எங்கயாவது டியுஷன் போறானோ?" என்று சந்தேகப் படுவோம். அதே போலவே இந்தப் படமும். "எந்த ஊர்ப் படமோ தெரியலியே".

என்னதான் இருந்தாலும், இந்த முயற்சி ஒரு துணிச்சல் என்றே சொல்லலாம். அதுவும், நாம் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. டிரைலரில் காண்பித்த காட்சிகளுக்கு நேர் மாறான காட்சிகள் படத்தில் வந்தன. கடைசி வரை மக்கள் சிரித்த சீரியஸ் படங்கள் நிறைய இருந்தாலும், இது சற்றே வித்தியாசமானது. கூரான, காயப்படுத்தும் வசனங்கள் இருந்தாலும், நினைத்து நினைத்து சிரிக்கும் வசனங்களும் உண்டு. சிறு சிறு காட்சிகளிலும் உள்ள வித்தியாசம். குறிப்பாக சப்ப சுப்புவை விபத்திலிருந்து காப்பாற்றும் இடம். அங்கே போகும் ஆட்டோக்கள் இரண்டும் 'ஓரம் போ' படத்தில் வருபவை. கட்டை விரல் காட்சி. இறுதியில் "சொதப்பிட்டியா சுப்பு?" என்று கேட்கையில் அவள் "இல்லையே" என்று சொல்லும் இடம்.

பின்னணி இசை. கொஞ்சம் வித்தியாசமாக இருப்பவை, நமக்கு பிடித்தவர்கள் செய்திருந்தால், "சான்சே இல்ல... எப்படி வித்தியாசமா பண்ணியிருக்கான்" என்போம். பிடிக்காத ஆள் என்றால், "கேவலமா இருக்கு, கொஞ்சம் கூட ஒட்டவே இல்ல" என்போம். யுவனை எனக்குப் பிடிக்கும். தேவையில்லாத இடங்களில் இசையின்றியும், பழைய பாடல்கள் போட்டும், நன்றாகவே இருந்தது. மொத்த பின்னணி இசை பதினைந்து நிமிடங்களை தாண்டாது போல. தொகுத்துள்ளனர். எனக்கு மிகவும் பிடித்தது சம்பத் போலிசிடமிருந்து தப்பிக்கும்போது வரும் இசை ( 2.46 முதல் 4.50 வரை) மற்றும் லாட்ஜுக்கு கஜேந்திரனின் ஆட்கள் வரும்போது வரும் இசை (6.25 முதல் 7.15 வரை).பழைய பாடல்கள் வரும் இடங்களில், அவை காட்சிகளுக்கு பொருந்தும் வகையில் அமைத்திருப்பதாக இயக்குனர் கூறியிருந்தார். எனக்கு ஒரு சில இடங்கள் பிடிபட்டன. பெயர் போடும்போது "பாடல்கள் - வாலி, கங்கை அமரன்" என்று வந்தது. ஏனென்று தெரியவில்லை. ஏனெனில் எனக்கு தெரிந்து வைரமுத்து எழுதிய பாடல் கூட வரும்.

எனக்கு இணை நடிகர்களில் மிகவும் பிடித்தவர்கள் பசுபதி, கிஷோர், சம்பத். (பிரகாஷ் ராஜ் கணக்கில் வரமாட்டார்.. அவர் தனி) ஒரு சில படங்களை இவர்களில் யாரவது ஒருவர் இருந்தால் கூட நான் பார்ப்பேன். இதுவரை ஒருவர் கூட ஏமாற்றியதில்லை. மொத்தத்தில் 'ஆரண்ய காண்டம்' அருமையான, நல்ல படம். ரசிப்பவர்களுக்கு மட்டும்.

வேணுவனம்: ஆனந்த விகடனில் 'மூங்கில் மூச்சு' எழுதும் சுகாவின் வலைத்தளம். அருமையான எழுத்து நடை. எனக்கு மிகவும் பிடித்த தொடர். இந்த பதிவிலும் அதே போலவே. முடிவில் அவர் வைக்கும் நகைச்சுவை 'பஞ்ச்' மிக நன்றாக இருக்கும். வாசித்துப் பார்க்கவும்.

நான் மீண்டும் வருவேன்.

Saturday, May 28, 2011

ரயில் பயணம் - தேசாந்திரி

பொதுவாகவே எனக்கு ரயில் பயணம் அவ்வளவாக பிடிக்காது. (எங்களூருக்கு ரயில் இன்னும் வராதது கூட காரணமாக இருக்கலாம்). இந்த சமீபத்திய பயணத்திற்குப் பின் சுத்தமாக பிடிக்காமல் போய் விட்டது.
பகல் பயணம் என்பதால், ரயிலிலேயே போக முடிவு செய்து, முன் பதிவும் செய்தாகி விட்டது. AC Chair Car. கிளம்பிப் போய், வழக்கம் போல அட்டவணையில் எனது பேரை முதலில் பார்த்து விட்டு, மற்ற பயணிகளின் பெயர் தவிர மற்ற விவரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது இருக்கை எண் 35. 34ல் பார்த்தால், பெயர் போட்டு F 25 என்று இருந்தது. "அட, நமக்கு இப்படி எல்லாம் நடக்காதே, சரி சீட்டெல்லாம் எப்படி இருக்கும்? ஒரு வேளை 3X3, இல்ல 2X3, எதுவா இருந்தாலும் இருந்தாலும் கண்டிப்பா பக்கத்துக்கு சீட்டுதான். ஒரு வேளை 2X2ஆ இருந்தா? பரவால்ல, நடுவுல கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேப்பு, அவ்வளவுதான!" இவை அனைத்தும் கணப் பொழுதில் மனதில் வந்து போய் விட்டன.
உள்ளே வேகமாய்ப் போய்ப் பார்த்தவன் அப்படியே நொந்து போய் விட்டேன். முதல் வரிசை மட்டும் 2X2 இருக்கைகள். அதன் பின் அனைத்தும் 3X2 இருக்கைகள். எனவே, 34 எனக்கு முந்திய வரிசை. இருக்கையில் அமர்ந்தவனை, கொஞ்ச நேரத்தில் அனைவரும் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டனர். பின்ன, சும்மா சிரிச்சிக்கிட்டே இருந்தா என்ன நெனப்பாங்க? அதுவுமில்லாம, அந்த பொண்ணு ரொம்ப சுமாருதான். (சீ சீ!)

எனக்கும் என்ன செய்ய என்று தெரியாமல், கொண்டு வந்திருந்த எஸ். ராமகிருஷ்ணனின் 'தேசாந்திரி'யை படிக்க நேர்ந்தது. ஏற்கனவே தொடராக வந்தபோது படித்திருந்தாலும், ஏனோ இந்த பயணத்தின் போது படிக்க வேண்டுமென்று தோன்றியது(?). அட நெசமாத்தாங்க. படிக்கும்போது நிறைய தோன்றியது. ஆனால், என்னால் உடனே செய்ய முடிந்தது 'பதிவு' மட்டும்தான். அதனால் ஆரம்பித்து விட்டேன். முடித்து விடுங்கள்.
எங்கு பயணம் சென்றாலும், புகைப்படமோ, குறிப்போ எடுப்பதில்லை, பொருட்களும் வாங்குவதில்லை என்ற முதல் வரியே நமக்கு எதிராக இருந்தது. ஒரு சுற்றுலாத் தலமன்றி, வித்தியாசமான இடங்களுக்கும், நாம் மதிப்பெண் பெறுவதற்காக படித்த இடங்களுக்கும் சென்று வந்த அனுபவங்கள் பயணத்தின் போது படிக்க மிகவும் நன்றாக இருந்தன. அதே போலவே பயணம் போக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், எனது வீட்டிலிருந்து ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பயணத்தில் உள்ள நாமக்கல் மலைக்கோட்டை மீது நான் ஏறியதில்லை. வீட்டிலிருந்து வெளியே வந்தால் தெரியும் கொல்லிமலையிலும் ஒரு முறைக்கு மேல் ஏறியதில்லை. அலுவலக வேலையாக பல முறை மதுரைக்கு போயிருந்தாலும், இன்னும் திருமலை நாயக்கர் மகாலைப் பார்க்காதவன். சென்னை வந்து பாத்து வருடமாகியும், இது வரை கூட முதல் முறை சரியாக ஒரு இடத்திற்கு சென்றதில்லை. அப்படிப்பட்ட முடவன், கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?

ஆனாலும், கொஞ்சம் வித்தியாசமான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையும் இல்லாமல் இல்லை. எங்கேயாவது வித்தியாசமான இடங்களுக்கு போக வேண்டும் என்று நினைத்தாலும், நானே என் எண்ணங்களுக்கு ஏதாவது தடை போட்டு விடுவேன். அது மட்டுமன்றி தனியே பயணம் செய்ய நான் விரும்ப மாட்டேன். ஏனெனில், எனக்கு அவ்வப்போது தோன்றுவதை உடனே யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும். எனவே, செல்லுமிடத்தில் எல்லாம் கும்பலாக சுற்றி விட்டு புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டு வந்து விடுவோம்.

பல நினைவுகளை கிளறிவிட்டது இந்த நூல். ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பதும், விடுமுறையில் சொந்தங்களின் வீட்டிற்கு போய் வருவதும் நினைவுக்கு வந்தன. குறிப்பாக, இந்த கவிதைகள் என்னவோ செய்தது. (சாராம்சம் மட்டும் கொடுத்துள்ளேன்).

தரையைத் துடைக்க,
மை படிந்த கையைத் துடைக்க,
பாத்திரங்களை சுத்தப்படுத்த,
வடகம் உலர்த்த எனப் பல வகைகளில்
உதவுகிறது இறந்து போன பாட்டியின் புடவை.

அவர் குறிப்பிட்ட பல இடங்களில், சில இடங்களுக்கு நான் சென்று வந்துள்ளேன். அநேக பொது மக்கள் சென்று வந்திருப்போம். கண்டிப்பாக இது ஒரு முன்னுரை மட்டுமே. நிச்சயம் மக்கள் ரசிக்கும் வண்ணம் ஒரு பயணக்கட்டுரையை விரைவில் எழுதுகிறேன். "எவன் படிப்பான்?" என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

Sunday, April 24, 2011

ஒளியில்லாத ஒலிபொதுவாக, பல இளையராஜாவின் பாடல்களைக் கேட்டது மட்டுமே உண்டு. எனக்குள்ளேயே ஏதாவது கற்பனையில் அந்தப் பாட்டை ஓட விட்டுக் கொள்வேன். எப்போதாவது, அந்தப் பாடலைப் பார்த்து விட்டால், சற்றே மனம் நோகும். உதாரணமாக கீழே வரும் பாடல். இதைப் பற்றி ஏற்கனவே ஒரு முக்கியமான பதிவில் நான் கூறியுள்ளேன்.இதே போல பல பாடல் உண்டு. ஆனால், திரையிலேயே வராத சில ராஜாவின் பாடல்களைப் பகிர விரும்புகிறேன். தீவிர ராஜா ரசிகர்களுக்கு இந்தப் பாடல்களை மிக நன்றாக தெரியும். ரி-மிக்ஸ் என்ற பெயரில் கொலை செய்யாமல், இதையே ஏதாவது வரப் போகும் புதிய படங்களில் நேரடியாக பயன்படுத்தலாமே.

புத்தம் புது காலை - அலைகள் ஓய்வதில்லை:

ஒரு காலை வணக்கத்தோடு ஆரம்பிக்கிறேன். எப்போதுமே, காலை எழுந்தவுடனே கேட்கும் பாடல் இதுதான். நாயகி பாடுவதாக வருவதாக இருக்கலாம்.'உயர்ந்த உள்ளம்' படத்தில் வரும் காலைத் தென்றல்' பாடல் போலவே இருக்கும். காலையில் எழுந்தவுடனே எப்போதும் கேட்பதுண்டு.

தற்போது 'பா' ஹிந்திப் படத்தில் அருமையாக பயன்படுத்தியுள்ளனர்.சொல்லாத ராகங்கள் - மகா நதி:சிறையில் நாயகனும் நாயகியும் சந்திக்கும்போது வரும் பாடல். அட்டகாசமான பாடல். ஆனால், இந்தப் பட்டதில் தேவையேயில்லை என்று இதற்கு பதில், இதை விட அழகாக பின்னணி இசை போட்டு நிரப்பி விட்டார்.சொல்லி விடு வெள்ளி நிலவே - அமைதிப்படை:

அல்வா விஷயத்தால், மற்ற நல்ல விஷயங்கள் இந்தப் படத்தில் வெளி வராமலே போய் விட்டது. அதில் இந்தப் பாடலும் ஒன்று. ஆனாலும், பின்னணி இசையாக கிடைக்கிற இடங்களில் அனைத்தும் ராஜா ராஜாங்கம் நடத்தியிருப்பார்.புத்தம் புது பூ - தளபதி:

விருந்திலே எல்லாமே ரொம்ப நல்லா இருந்துச்சு.. ஆமாமா.. பாயாசத்துல முந்திரி இருந்துச்சா?? அடடா, சரியா கவனிக்கலையே.. மத்த எல்லாத்தையும் சாப்பிட்டதில, அத கவனிக்கலப்பா. லேசா தட்டுப்பட்ட மாதிரி தெரிஞ்சுது.

இதே போலவே, இந்தப் பாடலும். பின்னணி இசையாக லேசாக வரும். அப்படியே போய் விட்டது. மணி ரத்னமே இதை எங்காவது பயன்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.உன் நெஞ்சத் தொட்டுச் சொல்- ராஜாதி ராஜா:

இந்தப் பாடல் பற்றிய ஒரு நல்ல தகவல் உள்ள பதிவு. அந்த காலத்தில், 'ராஜாதி ராஜா/சத்யா' இரண்டும் உள்ள கேசட் வாங்கினேன். இரண்டில் உள்ள பாடல்கும் மாறி மாறி வரும். எனவே, இந்தப் பாடல் எந்தப் படம் என்று பயங்கரமாக குழம்பி இருந்தேன். இரண்டு படத்திலும் வரும் என்று கூட நம்பிய காலம் அது.ஒரு மாலை நேரம் வந்தது - நான் மகான் அல்ல:

இந்த பாடல் மட்டும் சொல்லக் காரணம் உண்டு. இதைப் படமாக்கிய பின்பு, யுவன் அதே ஒளியமைப்புக்கு, இன்னும் நன்றாக பாடல் இருக்க வேண்டுமென்றுதான் 'இறகைப் போலே' பாடல் போட்டதாக கூறப்பட்டது. இந்தப் பாடலுக்கு, அந்த ஒளியமைப்பும் நன்றாகவே பொருந்தும். சும்மா முயன்று பார்த்தேன்.இதே போலவே, நிறைய பாடல்கள் உள்ளன. எனக்கு தோன்றியதை மட்டும் பதிவு செய்துள்ளேன்.

Monday, March 28, 2011

அழகிய மொழியில் அபியும் நானும் பயணம்கல்லூரி இறுதி ஆண்டில் ஒரு நாள், தாம்பரம் வித்யா தியேட்டரில், ஸ்பைடர் மேன் 2 படம் பார்க்கலாம் என்று நண்பர்களுடன் போனோம். அங்கோ, அந்த படத்தைத் தூக்கி விட்டு, 'அழகிய தீயே' என்று போஸ்டர் ஒட்டியிருந்தது. என்னடா, இங்கு கூட பிட்டு படம் ஓட்ட ஆரம்பித்து விட்டார்களா என்று யோசித்தோம். பாவம் இந்த பிரசன்னா. இப்படியா ஆக வேண்டும் என்று நினைத்த பொது, திடீரென நண்பன் சொன்னான் "டேய், பிரகாஷ் ராஜ் படம்டா". சரி, வந்தது வந்து விட்டோம் என்று உள்ளே போய் உட்கார்ந்தோம். மொத்தமாகவே, இருபது முப்பது பேர்தான். அதில் நாங்களே ஏழெட்டு பேர்.

சரி, கொஞ்சம் கலாசி விட்டுப் போகலாம் என்றுதான் போனோம். ஆனால், எங்களை விட, படத்தில் அவர்கள் கலாசியதுதான் அதிகம். ஒரு வழக்கமான, நட்பு - காதல் கதை என்றாலும், அதைக் கொண்டு போன விதம்தான் முக்கியம். அருமையான வசனங்கள். பிரசன்னாவை முதன் முதலில் ரசிக்க முடிந்தது. பிரகாஷ் ராஜ் அருமையாக நடித்தார் என்பது, அட போங்க சார்.

அதன் பின் கொஞ்ச நாள் கழித்து 'பொன்னியின் செல்வன்' படம் வெளியானது. ஆனால் படம் பார்க்கவில்லை. இதுவரையிலும் பார்க்கவில்லை. விரைவில் பார்க்க வேண்டும். படத்தின் நாயகனை நினைத்துதான் கொஞ்சம் பயம். ஆனாலும் நாயகிக்காகவாவது பார்க்க வேண்டும்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து, பொழுதே போகாத 2007 பிப்ரவரி மாதம், ஒரு வெள்ளிக் கிழமையன்று இரண்டு படங்கள் வெளிவந்தன. இரண்டுமே, எங்களது எதிர்பார்ப்பில் இல்லாததால், அதைக் கண்டு கொள்ளவில்லை. "ஏதோ பருத்தி வீரன்னு படம். சூர்யாவோட தம்பியாம். ஆனா ஊனா, வீட்டு வீட்டுக்கு நடிக்க கெளம்பி வந்தருவான்கப்பா. அப்புறம் மொழி. காது கேட்காத, வாய் பேச முடியாத பொண்ணாம். போட்டு அழுக வச்சிருவாங்க. வேண்டவே வேண்டாம்பா" என்று விட்டு விட்டோம். எங்களது எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டன இந்த இரண்டு படங்களும். மிகவும் குறிப்பாக மொழி. Thi Hinduவில் அதன் வகை நகைச்சுவை (Genre : Comedy) என்று இருந்தது. இரண்டு படங்களையும் இரு முறை தியேட்டரிலும், அதன் பின் 'மொழி' படம் மொசெர்பியரில் வந்தபோது, கிட்டத்தட்ட அதை பரிசாக வாங்கியே கொடுக்க ஆரம்பித்தோம். என் அம்மா பார்க்க வேண்டும் என்று நான் நினைத்த/நினைக்க வைத்த ஒரே படம் இதுதான்.

'பயணம்'. சமீபத்தில் வந்த மற்றுமொரு அருமையான, ராதா மோகனின் படைப்பு. படத்தில் சிறு சிறு குறைகள் இருந்தாலும், அவை ராதா மோகனின் பொதுவான கிளிஷேக்கள் என்பதால், எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. சில பல முக்கிய காட்சிகள் காமெடி ஆனாலும், அவர்களே அதை கலாசியதால் மன்னிப்போம். "ஓ.. நீங்க தமிழா? அப்பா நாம தமிழிலேயே பேசலாம்" என்று கடத்தல்காரன் சொல்லும்போது எல்லோரும் சிரித்து விட்டோம். பிறிதொரு காட்சியில், "யூசுப் கான் எப்படி தமிழ்ல பேச முடியும்?", "இப்படியெல்லாம் பாத்தா படம் எடுக்க முடியாது சார்" என்று வரும்.

அபியும் நானும். இந்தப் படம் எனக்கு மிக மிக மிகப் பிடித்த படம். ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான காதல், காமமற்ற அன்பு, பாசம், நேசம் (நட்பும் கூட) பற்றிய படம். படம் தந்தை மகள் பற்றி இருந்தாலும், சாராம்சம் தாய் மகன், சகோதரன் சகோதரி (சற்று வயது வித்தியாசம் அதிகமான), ஏன் இரண்டு வயது அக்கா மகளுக்கும், தாய் மாமாவுக்கும் கூட வரலாம். தனது அன்பினை பங்கு போட இன்னொருவர் வருவதால் ஏற்படும் ஈகோ பற்றி அற்புதமாக காண்பித்த படம். இதில் சற்று காமம் கலந்து 'செல்லமே' படமும், மிகுதியாக கலந்து 'நடுநிசி நாய்கள்' படமும் வந்திருப்பதாக நான் நினைக்கிறேன். (முன்னே/பின்னே எல்லாம் விட்டு விடுங்கள். சும்மா, ஒரு ஒப்பீடு).

"நம்ம குழந்தைங்க வளந்துருவாங்க. ஆனா, நாம வளராம அப்படியே இருப்போம்" வசனம். நிதர்சனமான உண்மை. நாம் முதன் முதலில் அவர்களை எப்போது பார்த்தோமோ, அவர்கள் அப்படியே இருப்பார்கள் என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருப்போம். எனக்கு உடன் பிறந்தோர் யாரும் இல்லை. ஆனால், தூரத்து சொந்தங்கள் என்ற முறையில் சில பல தங்கைகள் உண்டு. கல்லூரி முடித்து, வேலைக்குப் போகும்போது, அவர்கள் படித்துக் கொண்டிருந்ததால், என்னிடம் 'என்ன செய்யலாம்' என்று (பெற்றோரின் தொந்தரவு தாளாமல்தான்) கேட்பார்கள். அப்போதிருந்து, இன்று வரை, அவர்களிடம், 'எனக்கு எல்லாம் தெரியும்' என்ற பாணியில்தான் பேசி வருகிறேன். இத்தனைக்கும், அவர்கள் என்னை விட நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குப் போய் விட்டனர். இருந்தாலும், என்னை சற்றும் ஒதுக்காமல், இன்னும் என் கருத்தைக் கேட்பார்கள்.

சிறு வயதில், அவ்வப்போது, ஒழுங்காக படிக்கவில்லை எண்டு வீட்டில் அம்மாவிடமிருந்து அடி விழும்போது, என் அம்மாவின் அம்மாதான் என்னைக் காப்பாற்றுவார்கள். அவருக்கு, என் தாய் மாமாவின் மகன் மேல் (மகன் வழி மூத்த பேரன்) சற்று பாசம் அதிகம். அவன் என்னை விட ஐந்து வயது சிறியவன். அப்போதெல்லாம், இதற்காகவே, அவனை அடித்தும் கூட இருக்கிறேன். இப்போது நினைத்தாலும் வெட்கமாக உள்ளது. இவையனைத்துமே, நன்றாக, உணர்வுப்பூர்வமாக படத்தில் காட்டப்பட்டிருந்தன.

பொதுவாக நாம் அடிக்கடி பார்க்கும்/பழகும் பாத்திரங்களும், வசனங்கள்தான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நமது வீட்டிலோ அல்லது பக்கத்துக்கு வீட்டிலோ அடிக்கடி இது போல கேட்டிருப்போம்.

"இப்படியெல்லாம் கொடூரமான ஆளுங்கெல்லாம் கூட இருப்பாங்களா?? ஏன், உன் வீட்டு ஆளுங்க இல்ல."
"யாரிந்த பிச்சக்காரன். உன் சொந்தக்காரனா?"

அதே போல காதல் வரும் தருணங்களை ஒவ்வொரு படத்திலும், அழகாக சொல்லியிருப்பதும் நன்றாக இருக்கும். "பூம்", "மணியோசை, பல்ப் எரிவது", "மேஜிக்கல் மொமென்ட்ஸ்", "Stockholm Syndrome" என்று ஹைக்கூ போல.

முன்பெல்லாம் யாராவது "Its a feel good movie" என்று சொன்னால் எனக்கு சத்தியமாக புரியவே புரியாது. இப்போதெல்லாம், தெளிவான ஒரு கருத்து. "ஓ. ராதா மோகன் படமா?" என்று. ஒவ்வொரு இயக்குனருக்கும், 'இவர் இப்படிதான்' என்ற முத்திரை விழுந்து விடக்கூடாது என்று இருப்பார்கள். ஆனால், ராதா மோகன் அவர்களே, நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து. அவருடன் எனக்கு அவ்வளவு இடைவெளி இருப்பதாக நான் எண்ணவில்லை. எனவே, ஒரு நண்பனின் கருத்தாக இதை நான் கூறுகிறேன்.

Sunday, February 27, 2011

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

அல்லாரும் நல்லா கீறிங்களா?? என்ன எழுத என்று தெரியாததால், வழக்கம் போலவே, ஓர் பிட்டை போட்டுவிட்டு போகலாம் என்றுள்ளேன். போன பிட்டை பார்க்க, ரசிக்க(?)

திரைப்படங்கள்:

இதுவரை பார்த்த படங்கள் அனைத்துமே மிக நன்றாகவே உள்ளன. 'ஆடுகளத்தில்' ஆரம்பம். பொங்கலுக்கு வெளியான மற்ற இரண்டு ரீமேக் படங்களின் ஒரிஜினலைப் பார்த்து விட்டதால், ஆடுகளமே முதலில் பார்த்தேன். படம் பார்த்தபோது பிடிக்கவில்லை. மிகவும் மெதுவாக போனது போல இருந்தது. பிறகுதான், அதைப் பற்றி யோசிக்கும்போதுதான் ஒரு திருப்தி வந்தது. ஆனாலும், படத்தில் எனக்கு அந்த காதல் பிடிக்கவில்லை. இறுதியில், தனுஷுடன் போனில் பேசும் அந்த காட்சி மற்றும் 'ஒத்த சொல்லால' பாட்டுக்காக பொறுத்துக் கொள்ளலாம்.

அதை சரிப்படுத்தும் வகையில், இந்த மாதம் வந்த அனைத்து திரைப்படங்களுமே எனக்கு மிகவும் பிடித்தன. 'யுத்தம் செய்', 'பயணம்' மற்றும் 'நடுநிசி நாய்கள்', அதே வரிசையில். ஏனென்றால், மூன்று படங்களுமே, ஒரு தமிழ் த்ரில்லர் படம் எப்படி இருக்க வேண்டும் என்று இருக்குமோ, அப்படி இல்லை. இருக்கை நுனிக்கு வரவைக்கும் காட்சிகள், 'பர பர' என ஓடுவது, திடீரென வரும் பின்னணி இசை, காதல், பாட்டு என்று இல்லாமல், எனக்கு பிடித்த மாதிரி இருந்தது. இந்த மூன்று படங்களுமே, தமிழில் வரவேற்கத்தக்க முயற்சி.

'யுத்தம் செய்' படத்தில், இடைவேளைக்குப் பின், ஓரளவிற்கு ஊகித்து விட்டாலும், திரைக்கதை, காட்சியமைப்புகள் அருமை. நிறைய பாத்திரங்களை வசனங்கள் மூலமே அறிந்து கொள்ள வேண்டியிருப்பதால், சற்றே முதலில் குழம்பினாலும், பின் சரியாகி விட்டது. ஒளிப்பதிவு, இசை அட்டகாசம். படம் மிகவும் இயல்பாக இருந்தது. ஆரம்ப காட்சிகள், காவல் நிலைய காட்சி போன்றவை மிகவும் புதிதாக இருந்தன. படத்தில், தர்பூசணி திருடும் காட்சியை விட, அதிகமாக சிரித்தது 'அப்புக்குட்டி' என்று சேரன் சொன்னபோதுதான். அந்த ஒரு கணம், இயக்குனர் சேரன் கண் முன்னே வந்து விட்டார்.

'பயணம்'. சரோஜா போலவே காமெடி திரில்லர். படம் பார்க்கும் நாமும், அந்த பயணிகள் போலவே ஜாலியாகவே இருந்தது போலவே இருந்தோம். இருக்கையின் நுனிக்கு வரவைக்கும் அளவிற்கு எந்த காட்சிகளும் இல்லை. வசனங்கள் அட்டகாசம். நகைச்சுவையாகவும் சரி, நாட்டு நடப்பானாலும் சரி. படம் சற்றே நெடுந்தொடர் போலவும், குறைந்த செலவில் எடுக்கப்பட்ட பிரமாண்டமான (?) படம் போலவும் தோன்றியது.

'நடுநிசி நாய்கள்'. பாலியல் வன்முறையை வைத்து படம் எடுக்கும்போது, அதைப் பற்றி காட்சிகள் இல்லாமலேயே, அதன் அழுத்தத்தை உணர்த்த முடியும் என்று சில படங்கள் வந்தாலும், எல்லாவற்றையும் காட்டி, நம்மை எரிச்சலூட்டும் வகையில் இருந்த படம். தேவையே இல்லாத காட்சிகள், வசனங்கள் மூலம் சொல்லப்பட்டவை மீண்டும் காட்சிகளாக வருவது, லாஜிக் பொத்தல்கள் என்று பொறுமையை சோதித்து விட்டது. என்னைப் பொருத்தவரை முதல் பாதியின் நீளத்தை இன்னும் சற்று குறைத்திருக்கலாம். ஒளிப்பதிவு அருமை. படத்தில், மருத்துவமனையில் வாக்குமூலம் கொடுக்கும் காட்சியில், எனக்கென்னவோ பயணம் படத்தில் வரும் காட்சிதான் நினைவுக்கு வந்தது. "நீதான் யூசுப் கான், உலகமே உன்னப் பாத்து பயப்படுது.. ஏய், என்னடா, ஓவராக்ட் பண்றியா?, வாய ஒரு பக்கமா இழுக்குற."

மொத்தத்தில், காதலர் தினம் மட்டும்தான், காதலே இல்லாத படங்கள்தான்.

சிறுகதை:

ரொம்ப நாள் முன்பு குமுதத்தில் வந்த ஒரு பக்க சிறு கதை.

கல்லூரியில், மிக அழகான, பணக்காரியான பெண்ணிடம் பழக வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை. வழிபவர்களை வழக்கம் போலவே அவள் ஒதுக்குகிறாள். நாயகன் ஒரு முறை அவளிடம் நேராக சென்று "உன்னப் பாத்தா செத்துப் போன என் தங்கச்சி மாதிரியே இருக்க. என்ன உன் அண்ணனா ஏத்துக்குவியா?" என்று கேட்டு, ஒரு ராக்கியும் கட்டிக் கொள்கிறான். அவன் நண்பன் கேட்கிறான், "நீ லூசாடா? போய் தங்கச்சின்னு சொல்லிட்ட" என்றதும் அவன் சொல்கிறான். "நீங்க எப்பவும் சூப்பர் பிகர்னு பாக்கறீங்க. எனக்க அவ பிரண்ட் கொஞ்சம் சுமாரா இருந்தாலும், எனக்கு பிடிச்சுது. இப்ப எனக்கு அவளும் சிக்கிடுவா, இவகிட்டையும் நல்ல பேர். எப்பூடீ".

கொசுறு:

இதுவரை எழுதியதே கொசுறு என்பதால், எதுவும் இல்லை. மன்னிக்க!


Saturday, January 1, 2011

2oi!

ஒரு வழியாக 2010 முடிந்து விட்டது. கடைசியாக இந்த வருடமும் 'வழக்கம் போலவே' முடிந்து விட்டது. வருட ஆரம்பத்தில், இனி மாதம் ஒரு பதிவாவது இட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இரண்டு மாதத்திற்கு ஒன்றுதான் இட முடிந்தது. சரி பாதி சபதம்தான் நிறைவேறியுள்ளது. பரவாயில்லை. மக்கள் நன்றாக இருந்தால் சரிதான். எந்த சபதமும் எடுக்கக்கூடாது என்பதுதான் இந்த வருட சபதம்.

கடந்த பத்தாண்டுகளைத் திரும்பிப் பார்க்கிறேன். "ஓரமா நின்னு பார்ரா" என்று சொல்வது புரிகிறது. பரவாயில்லை. பல விதமான இன்ப துன்பங்கள் "தம்பி, இது வெறும் டிரையிலர் தான்" என்ற வகையில் வந்து போய் விட்டன. வாழ்க்கை இன்னும் இருக்கிறது என்பதை உணர வைக்கும் சம்பவங்களும் பல. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிஜமாகவே ஒரு மிருகம் இருக்கும் என்பதும் அதில் ஒன்று. மற்றொன்று நானும் பெரிய மனுஷனாகி விட்டேன்.

கொஞ்சம் ஓவராக போய் விட்டோனோ? சரி விடுங்கள். வழக்கம் போல ஆரம்பிப்போம். வருட ஆரம்பம் கொஞ்சம் கொடூரமாகத்தான் ஆரம்பித்தது. 'ஆயிரத்தில் ஒருவன்' என ஆரம்பித்து, 'கனிமொழி'யில் முடிந்து விட்டது. பரவாயில்லை. எல்லாம் நன்மைக்கே.

இசை எனும்போது, வழக்கம் போல எனக்கு, ரஹ்மானும், யுவனும் இந்த வருடத்தின் நல்ல இசையைக் கொடுத்தனர் என்றுதான் நினைத்திருந்தேன். இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசைக்கு விருது என்ற போதும், அப்படி என்ன அந்த படத்தில் என்று கண்டு கொள்ளவில்லை. ஆனால், பழசி ராஜா படம் பார்த்த பின், நான் ராஜா ரசிகன் என்று மீண்டும் பெருமையோடு கூறிக்கொள்கிறேன். "ஏன், நந்தலாலாவிற்கு என்ன குறை" என்பவர்களுக்கு, என்னுடைய கருத்து என்னவென்றால், தனி மனிதனின் உணர்சிகளை இசை வடிவமாக்குவது என்பது ராஜாவிற்கு சாதாரணம். ஆனால், சரி சொல்ல தெரியவில்லை. ஒரே ஒரு காட்சி, எனக்கு மிக மிக பிடித்த காட்சி. ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் செய்ய வரும்போது, "தனியாகத்தானே வந்துள்ளான். கைது செய்யலாமே" எனும்போது அவரது படையைக் காட்டுவார்கள். அப்போது வரும் இசை. ராஜா ராஜாதான்.

மற்றபடி நம் பதிவுகளை எடுத்துக் கொண்டால், சொன்னதைப்போல் செய்யாமல் பாதி மட்டுமே செய்ததால், மக்கள் தப்பித்தனர். இந்த வருடம் அது போல அல்லாமல் இருக்க அனைவரும் ஆண்டவனைப் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சொல்ல மறந்து விட்டேனே. அனைவுக்கும் இனிய புத்தாண்டு, பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு, ஆயுத பூஜை, தீபாவளி, கிருஸ்துமஸ், ரமலான், பிறந்த நாள் மற்றும் 2012ன் புத்தாண்டு வாழ்த்துக்கள்:-)