Monday, June 18, 2012

ஆன்-சைட் அமெரிக்கா 1


என் புருஷனும் கச்சேரிக்குப் போனான் என்பது போல், என் தங்கமணி கூட 'எங்க ரங்கமணி ஆன்-சைட் போயிருக்காரு' என்று சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டது. காலம் போன காலத்தில் நம்மை அனுப்பி படாத பாடு படுத்துகிறார்கள். எப்படியோ நானும் 'அமெரிக்கா' வந்து விட்டேன்.

அதற்காக முதலில் விசா நேர்காணலுக்கு அனுப்பும்போதே பயங்கரமாக தயார் செய்தனர். 'கண்ணைப் பார்த்து பேசு, மசால் கோட்டை தாண்டாமல் நில், பயப்படாமல் பேசு, ஆரம்பிக்கும்போதும், முடிக்கும்போதும் நன்றி சொல்' எனப் பலப் பல விஷயங்கள். அங்கு என்னடாவென்றால் கல்யாணம் ஆகி விட்டதா என்று சம்பந்தமே இல்லாமல் கேட்டு விசா கொடுத்து விட்டனர்.

சரி, அலுவலகத்தில், இதோ அதோ என்று இழுத்தடித்து, கடைசியில் கிளம்ப வேண்டும் என்று நிச்சயமாக தெரிந்த பின், மூன்று மாதத்திற்கு தேவியான அரிசி, தொக்கு, ரெடி மிக்ஸ் என்று பலப் பல விஷயங்களை தயார் செய்ய வேண்டும். அதற்கு அங்கிருந்து திரும்ப வந்த நண்பர்களின் உதவி மிக முக்கியம். அவர்களின் உதவியோடு எல்லாம் வாங்கி, ஆயத்தப்பட வேண்டும்.

விமானத்தில், நினைத்தது போலவே, உலக வரலாற்றில் முதல் முறையாக எனக்கு அருகில் ஒரு அழகிய வெளிநாட்டு இளம் பெண். ஆனால், அதற்கு அந்தப் பக்கம், நம்மாளு. "அவருக்கு இதாம் மொத தடவையாம். சீட் பெல்ட் போட தெரியாதாம்." அட பக்கி. அதுக்கப்புறம் அவன் போட்ட கடலைல அந்த பொண்ணே கடுப்பாகி சீட் மாறி போயிடுச்சி.

இறங்கிய பின், ஓரிரு நாட்கள் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலவே இருந்தது. பேசுவதும் புரியாமல், என்ன செய்வதென்றும் தெரியாமல். அதன் பின்புதான் ஓரளவு தெளிவானது. என்னதான் நிறைய படித்திருந்தாலும், நண்பர்கள் மூலம் கேள்விப் பட்டிருந்தாலும், நேரில் காணும்போது உண்மை கொஞ்சம் உறைக்கத்தான் செய்கிறது.

விதிகளை மதிக்கும் பண்பு. அதில் பயத்தை விட நிறைய மரியாதையே உள்ளது போல படுகிறது. ஏற்கனவே நம்மூரில் சாலை நடைமுறையைப் பற்றி குமுறி இருக்கிறேன். வேலையை சரியாக செய்தவுடன் மனமுவந்து பாராட்டுகிறார்கள். நம்மூரில் தலை கீழாக நின்றாலும் அது நடக்காது.யாராக இருந்தாலும் மதிக்கும் குணம். குழந்தைகளுக்கும் ஏன் விலங்குகளுக்குக் கூட நிறைய மரியாதை. இருந்தாலும் திருஷ்டி இல்லாமலா? ஒரு சில பேர் நம்மைப் பார்த்தாலே, ஏதோ வாந்தி வருவது போல முகம் மாறுவது. நம்மைப் பார்த்து புன்னகை செய்தாலும், ஏதாவது உதவி கேட்டால் ஒதுங்கி விடுவது (என்னுடைய அனுபவம்). அதிலும் இங்கு ரொம்ப நாளாக இருக்கும் நம்மாட்களோ, அவர்களே பரவாயில்லை எனும்படி ஆக்கி விட்டார்கள். தமிழில் பேசுகிறார்களே என்று "எப்படி இருக்கீங்க" என்றால் "Doing Good" என்று சொல்லி விட்டு ஓடி விடுகிறார்கள்.


இன்னொரு மிக முக்கியமான விஷயம். கலாச்சாரம் என்று ஏதோ உண்டாமே. நமக்கே அது கிட்டத்தட்ட காணாமல் போய் விட்டது. இங்கே என்னுடைய வெள்ளைக்கார அதிகாரி தன்னுடைய குடும்ப புகைப்படத்தைக் காட்டி (நம்மூரில் அது எப்போது நடக்காது) அது என்னுடைய பெண், பக்கத்தில் இருப்பது அவளுடைய 'Boy Friend' என்றார். நமக்குத்தான் எவ்வளவோ கேள்விப்பட்டிருந்தாலும், படித்திருந்தாலும் சற்றே 'சுரீர்' என்றது.


இன்னொரு முக்கியமான தகுதி, கார் ஓட்டுவது. இல்லையெனில் யாரையாவது நம்பிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். வீடியோ கேமில் ஓட்டுவது போல சுலபம்தான் என்றாலும், விதிகள்தான் மிகவும் முக்கியம். எனக்கு மூன்று மாதம்தான் என்பதால் பிரச்சினை இல்லை.

எல்லாம் எங்களுக்குத் தெரியும், நாங்களும் அமெரிக்கா போயிருக்கோம் என்பவர்களுக்காக, "நானும் போயிருக்கேன். இத வச்சி ஒரு பதிவு போடலாமுன்னுதான்.. வேற ஒன்னுமில்லீங்கோ"Tuesday, June 5, 2012

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

அனைவருக்கும் வணக்கம். இந்த நான்கு மாத கால இடைவெளியை பூர்த்தி செய்ய, அடிக்கடி பதிவு போட வேண்டும் என்று எண்ணியுள்ளேன். பார்ப்போம். நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்..

கஹாணி. சமீபத்தில் மிகவும் ரசித்த திரைப்படம். பாகிஸ்தானில் இருந்தும், சீனாவில் இருந்தும் வரும் தீவிரவாதிகள், சண்டை, பாடல்கள் எதுவும் இல்லாத, ஆனாலும் ஒரு அருமையான ரசிக்கும் வகையில் இருந்த திரைப்படம். மௌன குருவை விட அட்டகாசமான திரைப்படம். உண்மையிலே இது போன்ற திரைப்படங்களை அப்படியே ரீமேக்கினால், உண்மையிலேயே 'ஒஸ்தியாக' இருக்கும். கொல்கத்தாவில், மெட்ரோ ரயிலில் நடக்கும் விபத்து. காணாமல் போன கணவனைத் தேடி வரும் இளம்பெண், சாதாரண அரசாங்க ஊழியர்கள் போர்வையில் நாட்டுக்கு நல்லதும் கெட்டதும் செய்யும் ஆட்கள் என்று பல முடிச்சுகள் போட்டு, இறுதியில் அட்டகாசமான முடிவு உள்ள படம்.

டெல்லி பெல்லி. என்ன தைரியத்தில் இந்த படத்தை தமிழில் எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. கருவை மட்டும் வைத்துக் கொண்டு, தமிழுக்கேற்றவாறு கலாசாரம் கெடாமல் எடுக்கிறோம் என்றால் சாதாரண மசாலா படத்தை விட கேவலமாக இருக்கும். பார்க்கலாம். ரசிக்கும் படி இருந்தால், உண்மையிலேயே மிகவும் சந்தோஷம்.

மற்றபடி, ஒரு கல் ஒரு கண்ணாடி, வழக்கு எண் என பல படங்கள். வழக்கு எண், வழக்கத்திலிருந்து சற்றே மாறுபட்டிருந்த படம். ஆனாலும், காட்சிகள் அந்தந்த பாத்திரங்களின் பார்வையில் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். OK OK ஓகே. கலகலப்பு கல கல. மற்றபடி எதுவுமில்லை.

ரொம்ப நாள் முன், சன் டிவியில் ரமணி vs ரமணி என்ற தொடர் வந்தது. யாருக்காவது நினைவில் உள்ளதா என்று தெரியவில்லை. அப்போது அவ்வளவாக புரியவில்லை என்றாலும் எனக்கு பார்க்க மிகவும் பிடிக்கும். அது ஹிட் என்பதால் இரண்டாம் பாகம் கூட வந்தது. ஆனால், அது அவ்வளவாக எனக்குப் பிடிக்கவில்லை. இப்போது முதல் பாகம் பார்க்கும்போதுதான் புரிகிறது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பே, இப்போதுள்ள தம்பதியர் எப்படி இருப்பார்கள் என்பதை தெளிவாக காட்டியிருப்பார்கள். நாகா இப்படியெல்லாம் எடுத்து விட்டு பின் ஏன் 'ஆனந்தபுரத்து வீடு' என்ற மொக்கை படத்தை எடுத்தாரோ தெரியவில்லை.

கணவனை வாடா போடா என அழைப்பது, சமையல் தெரியாமல் தினமும் வெளியில் சாப்பிடுவது, பள்ளியறைக்கு செல்லப் பெயர், விளம்பர நிறுவன வேலை, ICICI வங்கி வேலை, கிரெடிட் கார்டு, கைப்பேசி, 'க்ளப்டோமேனியா' போன்ற சொற்கள் (இது பற்றி தெரியவில்லையெனில், கண்களால் கைது செய் படம் பார்க்கவும்). தாலியை கழற்றி வைப்பது என பல அட்டகாசங்கள். அதிலும் குறிப்பாக, கீழே வரும் பகுதி எனக்கு மிகவும் பிடித்தது.


கற்பனை கையாடல். இதைப் பார்த்தவுடன் உங்களுக்கு ஏதாவது திரைப்படம் நினைவுக்கு வரலாம். எனக்கு அலை பாயுதே நினைவுக்கு வந்தது. அதே போல சுஜாதாவின் 'நிர்வாண நகரம்' படித்தவர்களுக்கு 'மௌன குரு' படம் பார்க்கும்போது நினைவுக்கு வந்திருக்கலாம். (பொது தொலைப்பேசியை உடைக்கும் காட்சி). இதே போல, ரமணா படத்தில் வரும் மருத்துவமனை காட்சி, ஒரு ராஜேஷ் குமார் நாவலில் வரும். இதைப் பற்றி முன்பே எழுதி உள்ளேன். இவை அனைத்துமே படத்தின் கதைக்கு அவ்வளவாக சம்பந்தமில்லாத காட்சிகள்தான். ஆனாலும், அவற்றின் உண்மையான உரிமையாளர்கள் சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லை என்பது என் எண்ணம். இதனால் அந்த இயக்குனர்களின் மேல் சிறிய வருத்தமும், சற்றே சந்தேகமும் கூட வருகிறது. ஏதேனும் நல்ல காட்சிகள் பார்க்கும் போது 'எங்கிருந்து சுட்டிருப்பார்களோ' என்று. கலப்பு படத்தில் கூட சந்தானம் வரும் காட்சிகள் எனக்கு 'கண்டேன் காதலை' படத்தை நினைவூட்டியது. முறைப்பெண், தாத்தா. என்னவோ போங்க.

இன்னொரு வருத்தமான நிகழ்வு. ஆனந்த விகடன் - மதன் பிரிவு. இதில் உள்குத்தாக நிறைய விஷயங்கள் நடந்திருக்கும். நஷ்டம் என்னவோ நமக்குத்தான் என்று சொல்ல முடியாது. கூடிய விரைவில் 'ஓ பக்கங்கள்' போல குமுதத்திலோ, கல்கியிலோ அல்லது 'அம்மா' சார்பில் ஆரம்பிக்கும் வார இதழிலோ 'மதன் பதில்கள்' வரலாம். காத்திருப்போம்.