Monday, August 19, 2013

இந்தியாவின் சாலை விதிகள்

இந்தியாவில் வண்டி ஓட்ட நீங்கள் எந்த புத்தகத்தைப் படித்தாலும், அது 'நீச்சல் கற்பது எப்படி' புத்தகம் படித்து நீச்சலடிப்பது போலத்தான். வண்டி ஓட்டினால் ஒழிய உங்களால் கற்றுக் கொள்ள முடியாது. ஆனாலும், சில விஷயங்களைத் தெரிந்து கொண்டால் நல்லதுதானே.

நீங்கள் நடந்து செல்பவராக இருந்தாலும் சரி, ஒரு சக்கரத்திலிருந்து பல சக்கரம் வரை எந்த வண்டியாக இருந்தாலும் சரி, நீங்கள் கிளம்பும்போது உங்கள் மனதில் இருக்க வேண்டிய எண்ணம் "ராஜா நகர்வலம் கெளம்பிட்டேன்.. இது எல்லோருக்கும் தெரியும். நான் எப்படி போகிறேனோ, அதுக்கேத்தமாறி மத்தவங்க போகணும்"

உங்களால் கீழே விழாமல், யாரை இடித்தாலும் நீங்கள் விழாமல், பிடிக்க முடியாமல் தப்பித்துப் போகும் அளவிற்குப் போகலாம். சிக்னலில் பின்ன்ன்ன்னால் நிற்கிறீர்களா? 'பச்சை' மாறியவுடன் ஹாரணை அடிக்க ஆரம்பித்து விட வேண்டும். நிறுத்தவே கூடாது, அடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நீங்கள் கிட்டே வந்த நேரத்தில் சிகப்பு மாறி விட்டதா. கவலை வேண்டாம். காவலர் யாரும் உள்ளனரா என்று பார்க்கவும். இருந்தாலும் கவலை வேண்டாம். நீங்கள் செல்லும் பாதையில் கொஞ்சம் இடம் உள்ளது என்றால், சட்டென கிளம்பிப் போய் விடவும். கவலையோ பயமோ வேண்டாம்.

நீங்கள் வேறொரு வண்டி மீது இடித்து விபத்து நேர்ந்து விட்டதா? முதலில் அந்த வண்டி உங்கள் வண்டியை விட உயர்ந்ததா என்று பாருங்கள். (உங்களுடையது இரு சக்கர வாகனம் என்றால், அது நான்கு சக்கரம் மற்றும் அதிகம். அதுவும் இரு சக்கர வாகனமே என்றால், உங்களுடைய வண்டியை விட அதிக விலையாக இருக்க வேண்டும்). அப்படியென்றால் பிரச்சினை இல்லை.

அப்படி இல்லை என்றால், நீங்கள் கீழே படுத்து உருள வேண்டும். வெட்கமாக இருக்கும், முடியாது என்கிறீர்களா? பரவாயில்லை. அசிங்க அசிங்கமாக திட்டிக் கொண்டே சட்டென அந்த வண்டியின் சாவியைப் பிடுங்கி விடுங்க. அவ்வளவுதான்.

நீங்கள் யார் மீது போய் இடித்தாலும், அவர்களையே பழி சொல்ல வேண்டுமா? மனைவியை (அல்லது ஆள், புடவை கட்டியிருத்தல் நலம்) பின்னால் அமர வைத்து சென்று இடிக்கவும். குழந்தை உள்ளதா? மிக மிக நல்லது. எந்த விதிகளுக்கு கீழும் நீங்கள் அடங்க மாட்டீர்கள் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வண்டி ஓட்டி, யாரை வேண்டுமானாலும் இடிக்கலாம் உங்கள் மீதுதான் பரிதாபம் வரும்.

நீங்கள் நடந்து செல்பவரா? உங்கள் மனதில் 'இது எங்கப்பன் ரோடு' என்ற கெத்து இருக்க வேண்டும். சாலையைக் கடக்க வேண்டும் எனும்போது, சட்டென வண்டிகளுக்கு நடுவே புகுந்து விட வேண்டும். யாரேனும் இடித்தால் முந்தைய விதியின் கீழ் வந்து விடுவீர்கள். (உயர்ந்த வண்டி) அதே போல, உங்கள் இஷ்டத்திற்கு நீங்கள் ஆட்டோவைக் கூப்பிட்டு, நடு ரோட்டில் நிறுத்தி, பேரம் பேசி ஏறலாம். யாராவது திட்டினால், ஆட்டோ ஓட்டுனர் பார்த்துக் கொள்வார்.

எங்கேயாவது அவசரமாக போக வேண்டும், ஆனால், சாலையில் நெரிசல் அதிகமாக உள்ளதா? ஏதாவது ஆம்புலன்ஸ் போகிறதா என்று பாருங்கள். அதன் பின்னால் எப்படியாவது ஒட்டிக் கொள்ளுங்கள். எவனும் அதற்கு வழி விட மாட்டான். ஆனாலும், எவனாவது ஒரு சில மாக்கான்கள் வழி விடுவார்கள். அப்போது ஆம்புலன்சொடு ஒட்டிக்கொண்டு போய் விடலாம்.

மிக முக்கியமானது, இதையே நிறைய பேர் செய்யும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்கள் வண்டியில் செல்லும்போது, கால் டாக்ஸி, மாநகரப் பேருந்துகள் விதிகளை மதிக்காமல் வந்தால், நீங்கள் அவர்களது பரம்பரையையே திட்டலாம். ஆனால், நீங்கள் கால் டாக்ஸியிலோ, பேருந்திலோ செல்லும்போது அவர்கள் விதிகளை மீறினால், நீங்கள் கண்டுகொள்ள தேவையில்லை. தேவைப்பட்டால், பாதிக்கப்பட்ட மூன்றாம் நபரைத் திட்டலாம். ஆட்டோ பற்றி, என்ன சொல்ல 'நாம் சம்பாதிப்பதே, அவர்களுக்கு கொடுக்கத்தானே'. 

ஐயோ, எனக்கு இதெல்லாம் வேண்டாம்பா, நான் கண்டிப்பாக சாலை விதிகளைக் கடை பிடிப்பேன்' என்பவரா நீங்கள். உங்களுக்கு மிக முக்கியம் நிறைய பஞ்சு. காதில் கொஞ்சம் வைத்துக் கொள்ள வேண்டும். (ஏனென்றால் அசிங்க அசிங்கமாக வசவு வாங்குவீர்கள்). மீதி கீழே விழுந்தால் ரத்தத்தைத் துடைக்க தேவைப்படும்.

அதே போல, ஆளில்லாத சிக்னலில் 'சிகப்பு' போட்டுள்ளதால் நிற்கிறீர்களா, வலதோ இடதோ எவ்வளவு ஓரமாக நிற்க முடியுமோ அவ்வளவு ஓரமாக நிற்கவும். இல்லையென்றால் பரம்பரை மானமே போய் விடும் வாய்ப்பு உள்ளது.

உங்களுக்கு முன்னால் செல்பவர்கள், முன்னறிப்பிவின்றி இடதோ, வலதோ திரும்பினால், நீங்கள் கோபப்பட முடியாது. அதைப்பற்றி உங்களுக்கு தெரியாதது உங்களின் அறியாமை. அல்லது அவர் போன மாதமே தபால் மூலம் தெரிவித்திருப்பார், நீங்கள் தவற விட்டிருப்பீர்கள்.

மாநகர பேருந்து, குப்பை லாரி, தண்ணீர் லாரி, கால் டாக்ஸி, டெம்போ டிராவெல்லர் வண்டிகளுடன் எந்த வித சகவாசமும் வைத்துக் கொள்ள வேணாம்.அவர்கள் தவறான முறையில் வந்தாலும், மரியாதை கொடுத்து ஒதுக்கிப் போய் விடவும்.

மிக மிக முக்கியம், வெட்கம் மானம் சூடு சுரணை இவை அனைத்தையும் வீட்டிலேயே வைத்து விட்டு சென்று விடவும். உயிர் போனாலும், அவையாவது மிஞ்சும். முடிந்தால், வீட்டை விட்டு வெளியே வராமலேயே இருக்கவும்.

கடவுளிடம் வடிவேலு ஸ்டைலில் ஒரு கேள்வி கேட்க வேண்டும் "என்னங்க, போன வருஷமே உலகத்தை அழிக்கிறேன்னு சொன்னீங்க, அழிக்கல?"

சில கீச்சுக்கள்:

'இவரு செமையான டிரைவர். சூப்பரா ஓட்டுவாரு' என்று யாரையாவது குறிப்பிட்டால், அவர் கண்டிப்பாக சாலை விதிகளை மதிக்க மாட்டார் என்ற அர்த்தம் #அனுபவம்.

சாலை விதிகளை மீறுபவர்களை விட, மதிப்பவர்கள்தான் அதிகம் அடிபடுகிறார்கள். #அனுபவம்.

சிக்னலில் 5 நொடிகள் இருக்கும்போது முன்னே சீறிப் பாய்பவர்களிடம் கேட்க விரும்புவது "சார், அப்படி என்ன சாதிக்கப் போறீங்க"

வெளி நாட்டினருக்கும், நமக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. அவனுக்கு "இது என் நாடு, நான் ஒழுங்காக வைத்திருப்பேன்", நம்மவர்களுக்கோ "இது என் நாடு, நான் வேணும்னாலும் பண்ணுவேன்".