Thursday, April 24, 2014

தவறுக்குக் காரணம் பெற்றோர்களே!! மாணவர்களே!!

எத்தனை நூற்றாண்டுகள் (முன்னோக்கி சென்றாலும், பின்னோக்கி சென்றாலும்) வாதாட ஒரு நல்ல தலைப்பு இதுதான். மன்னராட்சி முதல் மக்களாட்சி வரை, இந்த இரு பிரிவினருக்குமே பிரச்சினைதான். இருந்தாலும், இந்தப் பதிவு, என்னுடைய முந்தைய பதிவின் தொடர்ச்சியாக, கல்வி பற்றி மட்டுமே இடுகிறேன், முடிந்தவரை.

இந்த பிரச்சினைக்கு முதலும், முதன்மையானதுமான காரணம் தலைமுறை வித்தியாசம். முன்பெல்லாம் ஒரு தலைமுறை என்பது 33 வருடங்கள் என்று சொல்வார்கள், இப்போதெல்லாம் அது 33 நிமிடங்கள்/நொடிகளாக மாறி விட்டது. கடந்த ஆண்டு கல்லூரி முடித்து, வேலைக்கு போக ஆரம்பித்த சொந்தக்கார பையன், அவனை விட இரண்டு வயது சிறிய, கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவனிடம் "இது என்ன புது கேம்?, எப்ப வந்துச்சு?' என்று கேட்க, அவன் சொன்னான், "நீயெல்லாம் பழைய ஆளுடா, போ போ".

உடன் வேலை பார்க்கும் ஊழியர், தன்னுடைய 4 வயது மகனுக்கு இப்போது பள்ளியில் (LKG) சேர்த்துள்ளார். சாப்பிடும்போது, அடுத்து அழியப்போகும் ச்சே சேர்க்கப் போகும் எங்களைப் போன்ற நான்கைந்து பேர் விசாரித்தோம்.

"எவ்ளோ ஆச்சு?"

"டெபாசிட், டொனேஷன், புக் பீஸ், பஸ் பீஸ் அது இதுன்னு கிட்டத்தட்ட 2 லட்சம் ஆச்சு"

"அடேங்கப்பா, நாம காலேஜு படிச்சி முடிச்ச 16 வருஷ படிப்புக்கே இவ்ளோ ஆகலையேப்பா, நானெல்லாம் இங்க சேத்த மாட்டேன்பா, ஊர்ல கொண்டு போயி ஏதாவது கவர்ன்மெண்டு ஸ்கூல்ல தள்ள வேண்டியதுதான்"

அவர் நக்கலாக, "நானும் இப்படித்தான் பேசுனேன், சும்மா விசாரிச்சதுக்கே, சொந்தக்காரன், பக்கத்து வீட்டுக்காரன் எல்லாம் போட்ட போடுல, எங்க வீட்டுல அரண்டு போயி, சமச்சீர் எல்லாம் சும்மா, கண்டிப்பா CBSEல தான் போடணும், இந்த ஸ்கூல்னா பரவாயில்லன்னு சொல்லி, அதுக்காக நாயா அலைஞ்சு, மினிஸ்டர் லெட்டெர் வாங்கி, சேத்துருக்கேன், உனக்கும் வரும் பார். ஆள் நம்ம கைவசம் இருக்கு, கண்டிப்பா என்கிட்டே வந்து கேப்ப பார்" என்றார்.

அவர் இன்னும் சொன்ன நிறைய விஷயங்களைக் கேட்டபோது 'குங்குமப் பொட்டு கவுண்டர்', 'அபியும் நானும்' படத்தில் வருவதெல்லாம் சும்மா என்பது புரிந்தது. அதை விட்டு விடுவோம்.

நானும் யோசித்துப் பார்க்கிறேன், என் சொந்த ஊரில் (என் தாத்தா, அம்மா, நான் அனைவரும் படித்த, வீட்டிலிருந்து 10 அடி மட்டுமே தள்ளி உள்ள) 'ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்' சேர்க்க வேண்டும் என்று நான் சொல்லும்போதெல்லாம், என் அம்மாவும், மனைவியும் நக்கலாக சிரிக்கிறார்கள். "அங்கெல்லாம் இப்ப யாரு படிக்கிறா? இன்னும் நாலஞ்சு வருஷத்துல இழுத்து மூடிருவாங்க, இன்னொன்னு தெரிஞ்சுக்கோ, ஊருக்குள்ள டவுன் பஸ் வருதோ இல்லையோ, ஸ்கூல் பஸ் 10 வருது. ஊருக்குள்ள நம்மாளுங்க புள்ளங்க எல்லாம் வெளி ஸ்கூல்லதான் படிக்கிறாங்க, தெரிஞ்சுக்க" என்கிறார்கள்.

பொதுவாக, இன்னும் எல்லோருடைய அடி மனத்திலும் 'கல்வி' முக்கியம் என்பது படிந்திருந்தாலும், அது கற்பிக்கப்படுவதற்கும், திணிக்கப்படுவற்கும் வித்தியாசம் தெரியாமலே உள்ளனர். அந்தப் பள்ளிகளில் விளையாட்டோ, நீதி போதனை வகுப்போ இல்லை என்று சொன்னால், "வீட்டுக்கு வந்து குதிக்கத்தானே போகுது, நீதிக் கதை எல்லாம்தான் இப்ப சுட்டி டிவியிலே சொல்றாங்களே" என்கிறார்கள். இதைத்தாண்டி "படிப்பைத் தாண்டி குழந்தைக்கு ஏதாவது" என்றவுடனே, "ம், கண்டிப்பா, பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ், அடுத்த வருஷம் கராத்தே, அப்புறம் கிரிக்கெட் கூட" என்கிறார்கள்.

"அவனுக்கு என்ன வரும்" என்றால், "சின்னப் பையன், இப்ப என்ன தெரியும், எல்லாம் தெரிஞ்சுக்கிட்டும்" என்கிறார்கள். இது ஆரம்பக் கல்விக்காக. அதன் பின்னர் அனைவரின் லட்சியமும் "MBBS லட்சியம், BE நிச்சயம்" (தேர்தல் உபயம்) என்று அடுத்த இலக்கை எய்கின்றனர். "சரிங்க, இப்பவாவது, அவனுக்கு என்ன ஆகணும்னு கேளுங்க" என்றால், "ரெண்டும்கெட்டான் வயசு, நாமதான் சொல்லணும்" என்பார்கள், அதைத்தாண்டி பையனோ/பெண்ணோ தன் விருப்பத்தை தெரிவித்தால், காரமாகவோ அல்லது பதமாகவோ "அந்த மாமாவும் இப்படித்தான் சொல்லி, கண்டத படிச்சு, இப்ப பாரு சும்மா சுத்தறான், எல்லாரும் அவன திட்றாங்க, இந்த மாமா பாரு, சொன்னபடி படிச்சு அமெரிக்காவுல நல்ல வேலைல இருக்காங்க" என்று குழப்புவர்.

ஒரு விளம்பரம்:

[ஊரில் நன்றாக படித்து, பொறியியல் முடித்து இரண்டு முறை அமெரிக்காவும் போய் விட்டு வந்தாகி விட்டது. கல்யாணத்திற்கு முன் மாதம் ஒரு முறை ஊருக்கு போவேன். இப்போது இரண்டு/மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்றாகி விட்டது. ஊரிலும், சொந்தத்திலும் என்னை ஒரு உதாரணமாக காட்டியுள்ளனர். என் நண்பன், சுமாராக படித்து, ஊரிலேயே இளங்கலை முடித்து, தோட்டம், சிறு சிறு வேலை பார்த்து, கொஞ்சம் அப்பா சொத்தை அழித்து, ஒரு நான்கு வருடங்கள் அனைவரின் சாபத்தையும் வாங்கி, இப்போது இரண்டு லாரி, கடை, தோட்டம் என்று சொந்த ஊரிலேயே ஜம்மென்று வாழ்கிறான். இருந்தாலும், இன்னும் அவன் வீட்டில், நான் சென்று வந்தால், என்னைக் காட்டி அவனுக்கு குத்தல் பேச்சு விழும், அவன் என்னைப் பார்த்து பொறாமைப் படுகிறானா என்று தெரியாது, ஆனால், எனக்கு அவனைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது]

சரி விஷயத்திற்கு வருவோம். பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்கு அறிவைக் கொடுக்க வேண்டும் என்று பள்ளிகளில் சேர்த்தவில்லை. பிள்ளைகளை முதலீடு செய்கிறோம். இவ்வளவு பணம் கட்டி சேர்த்தால், குறைந்த பட்சம் இவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும், இந்த சம்பளத்தில் வேலை வாங்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம்.

சரி பெற்றோர்களே, அந்தப் பள்ளியில் சேர்த்தால், மாநில அளவில் முதலிடம், அட குறைந்த பட்சம் அதிக மதிப்பெண்கள் எடுத்து நல்ல பொறியியல் கல்லூரியில் இடம் வாங்கி விடலாம் என்ற கணக்கு சரிதான். கடந்த பத்து வருடங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் முதலிடம் எடுத்த மாணவர்கள், தற்போது என்ன செய்கிறார்கள் என்று தெரியுமா? எனக்கும் தெரியாது, ஆனால், கண்டிப்பாக இந்தியாவிலோ, இல்லை வெளி நாட்டிலோ, எங்கிருந்தாலும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக இருப்பார்களே தவிர எதையும் சாதித்திருக்க மாட்டார்கள், சாதிக்கவும் இல்லை. ("தேவை இல்லேன்றேன், எதுக்குன்றேன்" என்கிறார்கள்).

மாணவர்களோ, இப்போதெல்லாம் வைத்தால் குடுமி, அடித்தால் மொட்டை என்ற மனநிலையில்தான் உள்ளனர். எனக்கு பிடித்ததை நீ கொடுக்கவில்லை என்றால் உனக்கு பிடித்ததை செய்ய மாட்டேன் என்கின்றனர். முன்பெல்லாம் குறைந்த பட்சம் இரண்டாம் ஆளுக்குத் தெரியாமல் தப்பு செய்ய முடியாது. பெட்டிக் கடையில் சிகரெட் கேட்டால் (கடமைக்காகவாவது) "யாருக்குடா?" என்று கேட்பார்கள். அதனால் ஓரளவுக்காவது பயம் இருந்தது. இப்போதெல்லாம், 'அதெல்லாம் அசால்ட்டுடா" என்கிறார்கள். எப்படி தெரியாமல் தப்பு செய்வது என்று இணையத்தில் தேடுகின்றனர். இன்னும் நிறைய சொல்லலாம். இன்னொரு பதிவில்.

பெற்றோர்களே, இந்த கல்வி முறை என்ன கற்றுக் கொடுத்துள்ளது தெரியுமா? சிக்னலில் ஆள் இல்லை என்றால் தாண்டிப்போ, சாலையில் யாராவது அடிபட்டுக் கிடந்தால், பரிதாபப்பட்டு ஓரமாக செல், கண் முன்னே தப்பு நடந்தால் நமக்கெதுக்கு வம்பு என்று கண்டு கொள்ளாதே, முடியவில்லையா பேஸ் புக்கில் பகிர்ந்துடு அல்லது உன் வலைப்பூவில் எழுதிடு (நீ யாரென்று சொல்லாமல்). தொடரும் போடலாமா என்று தெரியவில்லை. ஆனால், இன்னொன்று போடலாம். 'முடியாது'