Thursday, December 31, 2015

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

மழை பற்றி சூட்டோடு சூடாக இன்னொரு பதிவு போடலாம் என நினைத்தால், அதற்குள் ஸ்டிக்கர் பாய்ஸ், பீப் பாட்டு, இளையராஜா கோபம், விஜயகாந்தின் 'த்தூ', கொடும்பாவியை எரிக்கிறேன் என வேட்டியில் தீ வைத்துக் கொள்வது என நான் எழுத வந்த விஷயமே பழங்கஞ்சி ஆகி விட்டது. இருந்தாலும் கடமைன்னு ஒன்னு இருக்கே.

சென்னை இனி என்ன ஆகும்:

ஒன்றும் ஆகாது. மக்கள் வழக்கம் போல தங்களது வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டனர். வீடில்லாமல் கரையோரம் வாழ்ந்தவர்கள் வீடுகள் இடிக்கப்படுகின்றன. ஏரிகளில் கட்டியோர் "இன்னும் எத்தன வருஷம் கழிச்சு அடுத்த மழை வருமோ, அப்ப பாத்துக்கலாம்" என விட்டு விட்டனர். முன்பு வேளச்சேரியில் வாடகைக்கு இருந்த வீட்டில் எல்லாம் தண்ணீர் வந்து விட்டது. அங்கு பெரும்பாலானோர் வெறும் சான்றிதழ்களை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பி உள்ளனர். மீண்டும் திரும்பி வந்து, வழக்கம் போல தங்களது வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

பாய்ந்து பாய்ந்து வேலை செய்த இளம் தன்னார்வலர்கள் "அடுத்த மழை எப்ப வரும்னு காத்திருக்கோம்" என நாஞ்சில் சம்பத் போல உள்ளனர். மழைக்காலத்தில் எல்லா இடங்களிலும் நின்று சென்ற மாநகர பேருந்துகள், தற்போது வழக்கம் போல நிற்க வேண்டிய நிறுத்தங்களில் கூட நிற்காமல் செல்கின்றன. சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் பாலங்களில், 10 அடிக்கும் கீழ் தண்ணீர் செல்கிறது.

மழை முடிந்த பின் சென்னை வந்த எனக்கு "இங்கயா இப்படி" என அதிர்ச்சி தரும் அளவிற்கு எந்த மாற்றமும் இல்லாமல்தான் சென்னை இருக்கிறது.

ஆனாலும், முகநூலில் படித்த தகவல்களைக் காட்டிலும், என் அலுவலக நண்பருக்கு நடந்த உதவிதான் மந்தை நெகிழ வைத்தது. ஒரு வயது குழந்தைக்கு பால் கூட கிடைக்காததால் எப்படியாவது, மனைவியையும், குழந்தையும் சொந்த ஊரான பொள்ளாச்சியில் விட்டு விடலாம் என, மடிப்பாக்கம் வீட்டிலிருந்து வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு கிளம்பி இருக்கிறார்.

இடுப்பளவு நீரில் நடந்து போகும்போது, வண்டியில் வந்த ஒருவர் "என்னங்க குழந்தைய வச்சிக்கிட்டு நடந்து போறீங்க. வாங்க நான் வேணா கொண்டு போய் விடறேன்" என்றிருக்கிறார். நம்மாளோ "பரவால்லீங்க, அதெல்லாம் ஒண்ணுமில்ல, இந்தா பக்கத்துலதான் என்றிருக்கிறார். அடுத்து அவர் சொன்னதுதான் உண்மையில் ஒரு நிமிடம் நெகிழ வைத்தது. "சரீங்க. நீங்க வேணா வண்டியை எடுத்துகிட்டு போய், மனைவி, கொழந்தைய விட்டுட்டு வந்து, திரும்ப என்ன வந்து கூட்டீட்டு போங்க, உங்களை விட்டுட்டு நான் கெளம்பறேன்".

இத்தனை வருட சென்னை அனுபவத்தில் சத்தியமாக இதை நான் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஒரு வேலை நான் இருந்திருந்தால் கூட, இதை செய்திருக்க மாட்டேன். சென்னையை நினைத்து நான் கர்வப்பட்ட சமயம் அதுதான்.

பீப் சாங்:

நான் இன்னும் கேட்கவில்லை. வீட்டில் கேட்கும் நிலையில் பாட்டு இல்லை. ஆனால், இந்த பாட்டை எப்படியாவது கேட்டே ஆக வேண்டும் என எல்லா ஊடகங்களும் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றன. உண்மையில் அது தவறுதலாக வெளிவந்த பாடல், எந்தப் படத்திலும் வெளி வராத பாடல். அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் விட்டிருக்கலாம், அல்லது சிம்பு ஒரு மன்னிப்பு கேட்டிருக்கலாம்.

ஒரு கவிதை வெறும் வரிகளாக இருக்கும் போது, யாரும் அதை அவ்வளவாக நினைவில் வைத்துக் கொள்வதில்லை. ஆனால், இந்தப் பாடல் அப்படி இல்லை. "நேத்து ராத்திரி யம்மா, கட்டிப்புடி, கட்டிப்புடிடா" பாடல்களுக்கு, இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என அனைவருமே பொறுப்பு. ஆனால், இது டம்மி வரிகள் போட்டு பாடியது, அதற்கு முழு முதற் காரணம் சிம்பு மட்டும்தான். அவர் அதை வெளியிடவில்லை (என்று நம்புவோமாக) என்பதாலும், விளையாட்டுத்தனமாக செய்தததாலும் "யார் மனதாவது புண்பட்டிருந்தால்" என வழக்கமான பல்லவியில் ஒரு அறிக்கை விட்டிருந்தாலே முடிந்திருக்கும். அதை விட்டு விட்டு சிம்பு ஒரு பக்கம் முறுக்கிக் கொண்டு போனால், இந்த ஊடகங்கள் எல்லாப் பக்கமும் முறுக்கிக் கொண்டு இருக்கின்றன.

சும்மா இல்லாமல் எல்லோரிடமும் எதற்கு கருத்து என்று தெரியவில்லை. கங்கை அமரன், வைரமுத்து கருத்து சொன்னால், "நீங்க எழுதாத பாட்டா" என்று அவர்கள் மேல் பாய்கிறார்கள். கருத்து சொல்லவில்லை என்றால் "ஏன் சொல்லவில்லை?" என்று பாய்கிறார்கள். என்னாங்கடா உங்க நியாயம்.

ராஜாவின் வாய் எப்படி என எல்லோருக்கும் தெரியும். முடிந்தால் இதைப் படியுங்கள். இதில் பல விஷயங்கள் மிகைப் படுத்தி சொல்லி இருந்தாலும், பல விஷயங்கள் உண்மைதான். அந்த ஹங்கேரி கலைஞர்கள் பற்றிய கேள்விக்கு ராஜா அளித்த பதில் "நான் சொன்னா புரிஞ்சுக்குற அளவுக்கு உங்களுக்கு ஞானம் இருக்கான்னு தெரியலே" என்றுதான். அதே போல மிஷ்கின் பற்றிய கேள்விக்கு சொல்லியது "அதை நீங்கள் இயக்குநரிடம்தான் கேட்க வேண்டும்" என்றுதான். மற்ற சம்பவங்கள் பற்றி நான் கேள்விப்பட்டதுமில்லை, படித்ததுமில்லை.

ஆனாலும், இடம், பொருள், ஏவல் என்பது மிக முக்கியம். ஏனென்றால், அந்த நிகழ்ச்சியில் எனது நண்பர் ஒருவரும் கலந்து கொண்டார். நிறைய புகைப்படங்கள் அவரும் எடுத்தார். அவர் சொன்னது " ரொம்ப நேரம் நின்னு, பொறுமையா கையெழுத்து போட்டு, ஒவ்வொருத்தருக்கும் கொடுத்தார்" என்றார்.

இன்னும் நிறைய சொல்ல தோன்றுகிறது. ஆனால், இப்போதைக்கு போதும். சென்னை போல மீண்டு(ம்) வருவோம். என்ன ஸ்டிக்கர் பாய்ஸ், விஜயகாந்த் பற்றி எல்லாம் சொல்லாமலே போறேனே என்கிறீர்களா? தேர்தல் வரட்டும்னு காத்திருக்கோம்.

Monday, December 7, 2015

தமிழகம் - மழையகம்

முன் குறிப்பு: நான் இப்போது சென்னையில் இல்லை. எனது மனைவியும், குழந்தையும் சென்னையில்தான் உள்ளனர். எனது வீடோ, பகுதியோ வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை.

சென்னையில் எப்போது மழை பெய்தாலும் குறிப்பிட்ட சில இடங்களில், ஆள் அளவிற்கு தண்ணீர் நிற்கும், அந்த பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்படுவார்கள். நான்கு நாட்கள் கழித்து வழக்கம் போல அவரவர் இடத்திற்கு சென்று விடுவார்கள். அவர்கள் விளிம்பு நிலை மனிதர்கள். ஒவ்வொரு வருடமும் அரசு அவர்களுக்கு நிவாரண முகாம்கள் அமைக்கும், நிவாரண நிதி கொடுக்கும். அதைத்தாண்டி அடுத்த வருடம் மழை அவர்களை பாதிக்கக்கூடாது என எந்த முயற்சியும் எடுத்ததில்லை. அவர்களும் கேட்பதில்லை.

ஆனால், மற்றபடி நடுத்தர வர்க்க இடங்களான வேளச்சேரி, மடிப்பாக்கம் போன்ற இடங்களில் முழங்கால் அளவிற்கு நீர் நிற்கும். மழையும் பொதுவாக இரவு பெய்யும். பகலில் வெயில் வாட்டும். நான்கு நாட்களில் அதுவும் வடிந்து விடும். இந்த ஆண்டு அப்படி இல்லாமல், மழையும் நிற்கவில்லை. அது மட்டுமின்றி வெள்ளத்தின் அளவு இரு மடங்காகி விட்டது. 

அந்த விளிம்பு நிலை மனிதர்கள் வழக்கம் போல வெளியேறி விட்டனர். ஆனால், அவர்களது உடைமைகள் அனைத்தும் இழந்து விட்டனர். அதைத் தாண்டி இந்த முறை பாதிக்கப்பட்டது நடுத்தர வர்க்க, யார் வம்பு தும்புக்கும் போகாத, தான் உண்டு தன் வேலை உண்டு என பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியாத நல்லவர்கள்தான்.

எப்படியாவது சென்னையில் ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என மாத சம்பளத்தில் பாதியை வட்டியாக கட்டும் மக்கள்தான். நாங்களும் யாருக்கும் எதுவும் செய்ய மாட்டோம், யாரும் எங்களுக்கும் எதுவும் செய்ய வேண்டாம் என வாழ்ந்த மக்கள் இந்த முறை பாதிக்கப்பட்டு விட்டனர். அந்த நடுத்தர வர்க்க பயம் இருந்ததால்தான், வீடு கிடைத்தால் போதும் என, எங்கே என்று கூட தெரியாமல் வீடு வாங்கினார்கள். "சென்னையில் வெள்ளமா, என்ன காமெடியா?" என்று கேட்டார்கள்.

இன்னும் அந்த பயம் இருந்ததால்தான் முதலில் வெள்ளம் வந்து வடிந்த பின்னும், வீட்டை விட்டு வெளியேறாமல், அடுத்த வெள்ளத்தில் மாட்டிக் கொண்டார்கள். ஒன்றுமே கிடைக்காமல் இருந்தபோதும், மற்றவர்கள் கொண்டு வந்து கொடுத்த உணவை வாங்க மறுத்தார்கள். ஆனால், மழை எல்லோரையும் மாற்றி விட்டது. யாரென்றே தெரியாதவர்களின் வீட்டில் தங்க வைத்து, தெரியாதவர்களை வீட்டில் கொண்டு வந்து தங்க வைத்தது. "வெளையாட்டுப் பசங்க" என்றெல்லாம் திட்டப்பட்டவர்கள் தண்ணீருக்குள் சென்று மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்கள்.

இவை எல்லாம் முகப்புத்தம் மூலம் அறிந்து கொண்டது. அதையும் தாண்டி, இந்த நேரத்திலும் கொள்ளையடிக்கும் 'நல்ல' உள்ளங்கள் பற்றியும் தெரிய வருகிறது. என் மனைவியே பால் 60 ரூபாய்க்கு ஒரு நாள் வாங்க நேரிட்டது. ஆனாலும், வரும் உதவிகள் அனைத்துமே, இந்த நடுத்தர வர்க்கத்தினருக்கே கேட்டு வருகின்றது. மிகவும் பாதிக்கப்பட்ட வட சென்னை, அடையாறு, கூவம் கரையோரப் பகுதிகள், கடலூர் மற்றும் கரையோர மாவட்ட மக்களுக்கு யார் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. வெளியே தெரியாமல் உதவி கிடைத்திருந்தால், மிகவும் சந்தோஷம்.

என்னுடைய ஒரே ஆசை என்ன என்றால், கீழே வரும் என்னுடைய கற்பனைக் கதை, நிஜத்தில் நடக்கக்கூடாது.

நிலத்தரகர்: வேளச்சேரியில ஒரு வீடு வெலைக்கு வருதுங்க, சதுர அடி 6000தான். முடிச்சிடலாமா? கம்மி வெலைங்க.

நான்: ஐயய்யோ, அங்க தண்ணி பயங்கரமா நிக்குமே, இந்த மழைக்கு பாத்திருப்பீங்களே.

நிலத்தரகர்: அட அதனாலதாங்க கம்மியா கெடைக்குது. மழை என்ன இதே மாதியா வருஷா வருஷம் பெய்யும். மறுபடியும் எத்தன வருஷம் கழிச்சு இப்படி பெய்யுமோ. அது மட்டும் இல்லாம, இனி என்ன இப்படியே விட்டுடுவாங்களா? பாதாள சாக்கட வந்துரும். அப்புறம், எவ்ளோ மழை பெஞ்சாலும் அஞ்சு நிமிஷம் கூட தண்ணி நிக்காது. அப்படியே இருந்தாலும், ஒரு ரெண்டு நாளு. அவ்ளோதான்.

நான்: கொஞ்சம் யோசிக்கணுமே.

நிலத்தரகர்: இதப் பாருங்க. இந்த வெல இப்பத்தான் கெடைக்கும். மழைக்கு முன்னாடி சதுர அடி 7500. ஏதோ மழையால இவ்ளோ கம்மி ஆயிருக்கு. இப்ப உட்டா கெடைக்காது. பார்ட்டி வித்துட்டு ஊர்ப்பக்கம் போகலாமுன்னு பாக்குது. ஏதோ நீங்க தெரிஞ்சவங்கன்னு சொன்னேன். நீங்க இல்லேன்னா பின்னாடி இன்னும் பத்து பேரு இருக்காங்க. பாத்துக்குங்க. வருஷத்துல ஒரு நாலு நாளுக்கு பயந்துக்கிட்டு இப்படி ஒரு வாய்ப்பை விட்டுடாதீங்க. சொல்லிப்புட்டேன்.

நான்: பின்னூட்டத்துல என்ன சொல்றாங்கன்னு பாத்துட்டு சொல்றேன்.

Monday, November 23, 2015

கமல் ரசிகனுக்குப் பிடித்த ரஜினி படங்கள்

'தலைப்பே உங்களுக்கு எல்லாம் விளக்கி விடும் என்பதால், நேரே விஷயத்திற்கு போய் விடுவோம். இன்னும் யாருக்காவது சந்தேகம் இருந்தால் கமல் பற்றிய பதிவுகளையும், ரஜினி படங்கள் (எந்திரன், லிங்கா) பற்றிய விமர்சனங்களையும் வேண்டுமானால் படித்து விடுங்கள் (விளம்பரம்!).

அது ஏனென்று தெரியவில்லை, சிறு வயதில் இருந்தே எனக்கு கமல்தான் பிடிக்கும். ஒரு வேளை எல்லோரும் ரஜினி பிடிக்கும் என்று சொன்னதால் எனக்கு கமல் பிடிக்க ஆரம்பித்ததா, இல்லை, ரஜினி போல என்னால் தலை முடி கோத முடியவில்லையே என்ற கோபத்தில் கமல் ரசிகன் ஆனேனா என எனக்கே தெரியவில்லை.

கல்லூரி வரும்வரை, எனக்கு ரஜினி பிடிக்காது என்றெல்லாம் கிடையாது. ரஜினியா கமலா என்றால், கமல் அவ்வளவுதான். கல்லூரிக் காலங்களில்தான் நண்பர்களிடம் ஆரம்பித்த விவாதங்கள், சரி அத விடுங்க. குறிப்பாக ஒரு முக்கிய விஷயம். இது எனக்குப் பிடித்த படங்களில் பட்டியல். அந்தப் படம் எங்கே, இது எங்கே என்றெல்லாம் கேட்க வேண்டாம். அது மட்டும் இல்லாமல் இந்தப் படங்கள் அனைத்தும், ரஜினிக்காக மட்டும் எனக்கு பிடித்தவை. உதாரணமாக, எனக்கு தளபதி மிகவும் பிடிக்கும். இதில் தளபதி இல்லை, ஏனென்றால் ரஜினியை விட இளையராஜாவிற்காகவே அந்த படம் எனக்கு பிடிக்கும்.

ராஜாதி ராஜா:1970களின் இறுதியிலும், 80களின் ஆரம்பத்திலும் பிறந்த யாராக இருந்தாலும் சரி, சிறு வயதில் இந்தப் படத்தை ரசிக்காமல் இருந்திருக்கவே முடியாது. அது யாருடைய ரசிகராக இருந்தாலும் சரி. (போக்கிரி ராஜாவின் தழுவலாக இருந்தாலும்). அதிலும் குறிப்பாக "ஒரு மொட்ட, ஒரு மீச, நாலு ஸ்கூல் பசங்க, அதுக்கு ஒரு தலைவன்" இந்த ஒரு வசனத்தைக் கேட்டாலே எனக்கு பழைய நினைவுகள் வந்து விடும். என்னுடைய சிறு வயது நினைவுகளை கொண்டு வருவாதேலேயே எனக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும்.

இதே போல மனிதன், ராஜா சின்ன ரோஜா, வேலைக்காரன், குரு சிஷ்யன் போன்ற படங்கள். ம்ம், அது ஒரு அழகிய நிலாக்காலம். அந்த நிலாக்காலம் பற்றி தனியாக சொல்கிறேன். கமல் படங்களில் எனக்கு அபூர்வ சகோதரர்கள் மட்டுமே அப்படி நினைவில் உள்ளது என்பதுதான் கசப்பான உண்மை.

"என்னப்பா கொழப்பற, இந்த லாஜிக்படி பாத்தா நீ ரஜினி ரசிகனாத்தான இருக்கணும்" என்கிறீர்களா? பத்து வருடங்களுக்கு முன்புதான் நாங்கள் தொலைகாட்சி வாங்கினோம். அதற்கு முன் பக்கத்துக்கு வீட்டில் போய்தான் பார்க்க வேண்டும். 90களின் ஆரம்பத்தில் வெள்ளி இரவு 9 மணிக்கு தமிழ்ப்படம் போடுவார்கள். ஏதாவது ஒரு நாள் திடீரென ஹிந்தி படம் போட்டு விடுவார்கள்

என் அம்மா எனக்கு நினைவு தெரிந்து டிவியில் எதுவுமே பார்க்க மாட்டார்கள். இப்போது கதை வேறு. அப்படிப்பட்ட அவரே, 'மூன்றாம் பிறை' படம் டிவியில் போட்டபோது இரவு வந்து பார்த்தார்கள். அதிலும் அந்த வாரம் அதன் ஹிந்தி பதிப்பு (சத்மா) தான் திரையிடப்பட்டது. ஆனாலும், அது முழுதும் பார்த்தார்கள். ஆனாலும் வேறு எந்த கமல் படமும் அவர் பார்த்ததில்லை. ஆனால், எனக்கென்னவோ அப்போதுதான் கமல் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.

தம்பிக்கு எந்த ஊரு:பொதுவாக ரஜினியின் காமெடி படங்களில் எல்லோருக்கும் முதலில் சொல்லும் படம் தில்லு முல்லு. என்றாலும், எனக்கு அதையும் தாண்டி பிடித்த படம் இதுதான். படத்தின் ஆரம்பக் காட்சியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நொண்டி அடித்துக்கொண்டே போவார். அப்போது ஆரம்பிக்கும் அந்தக் குறும்பு படம் முழுதுமே பரவி இருக்கும். கதிர் அறுப்பது, மாடு கழுவுவது, பால் கறப்பது, கூழ் சாப்பிடுவது என தூள் பறக்கும். ஆரம்பக்காட்சிகளில் பணத்தை தண்ணீராக செலவு செய்வார். பிற்பாடு, செந்தாமரை ரஜினிக்கு அவர் செய்த வேலைக்கு சம்பளம் கொடுப்பார். ரஜினி அந்தப் பணத்தை நெகிழ்ச்சியோடு பார்ப்பார். "என்னப்பா, இதுக்கு முன்னாடி பணத்தையே பாத்ததில்லையா" என்று கேட்டதற்கு ரஜினி "இந்த மாதிரி பணத்தை நான் இப்பத்தான் பாக்கறேன்" என்பார். நான் முதன் முதலில் சம்பளம் வாங்கியபோது எனக்கு இதுதான் நினைவுக்கு வந்தது.

புதுக்கவிதை:பொதுவாக ரஜினி மிக இயல்பாக நடித்தது என ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களைத்தான் சொல்லுவார்கள். ஆனால், எனக்கு இந்தப் படம்தான் பிடிக்கும். அதே போல விதவை மறுமணம் பற்றிய படங்களில் நாயகி கன்னி கழியாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் இதில் அப்படி எல்லாம் இல்லை (கணவர் ஒரு வாரம் கழித்து இறந்ததாக நாயகி சொல்வார்). அதே போல ரஜினி, சரிதா ஜோடியின் எதிர்பாராத திருப்பம் நன்றாக இருக்கும். ரஜினி கொஞ்சம் கூட ஒப்பனை போடாமல் நடித்த படம் என நினைக்கிறேன். படத்திலேயே அவரை கருப்பன் என சொல்வார்கள்.

நெற்றிக்கண்:ரஜினியே நாயகனாகவும், வில்லனாகவும் நடித்த படங்கள் இரண்டுதான். அதில் எந்திரன் தான் எல்லோரும் முதலில் சொல்வார்கள். ஆனால், எனக்கு நெற்றிக்கண் தான் முதலில். எனக்கு தெரிந்து ரஜினி கல்லூரி மாணவனாக நடித்த ஒரே படம் இதுதான் என நினைக்கிறேன். மகன் ரஜினியிடம் ஒவ்வொரு முறையும் அவர் காட்டும் இயலாமை நடிப்பு, நக்கலாக 'ம்ஹும்' என்று ஒவ்வொரு முறையும் சொல்லி கையில் 'நன்றி' என்று எழுதியதைக் காட்டும் இடமும் அட்டகாசம். எந்திரன் எனக்கு பிடிக்க காரணம் ரஹ்மான், சிட்டி ரஜினி. இதில் ராஜாவும் அட்டகாசமான இசையைக் கொடுத்திருந்தாலும், அது கூடுதல் பலமே. ரஜினிக்காகவே கண்டிப்பாக படம் எனக்குப் பிடித்தது.

கழுகு:கமல்தான் நடக்கப் போவதை முன் கூட்டியே படங்களில் காண்பிப்பார் என்பார்கள். ஆனால், ரஜினி அதற்கு முன்னரே போலி சாமியார்கள் பற்றி இந்தப் படத்தில் சொல்லி இருப்பார். ஏழாம் அறிவு படத்தில் வரும் 'நோக்கு வர்மம்' எல்லாம் முன்னரே இந்தப் படத்தில் வந்து விட்டது. அதே போல ஒரு சொகுசு பேருந்து என்றால் என்ன என்பது இந்தப் படத்தின் மூலம்தான் எனக்கு தெரியும். ஒரு அருமையான மர்ம திரைப்படம். ஆரம்பக் காட்சிகள் சற்றே இழுவையாக இருந்தாலும் போக போக அட்டகாசமாக இருக்கும்.

இவை தவிர இன்னும் நிறைய ரஜினி படங்கள் எனக்கு பிடித்தாலும், இவையே எனது பட்டியலில் முதலில் இருப்பவை.

Saturday, November 14, 2015

பதிவு எண் 96/8

அனைவருக்கும் வணக்கம். இன்றோடு பதிவு எழுத ஆரம்பித்து 8 வருடம் ஆகி விட்டது. அதைப்பற்றி ஒரு சிறிய பதிவு (என்னாது, மறுபடியுமா?). ஏற்கனவே உள்ள ஐம்பதாவது செல்பீ புகழ் பதிவு இங்கே.

பொதுவாக 50ஆவது, 75ஆவது, 100ஆவது பதிவு, அட 110 விதியின் கீழ் 110ஆவது பதிவு என்றால் கூட பரவாயில்லை. அது ஏன் 96ஆவது பதிவு சிறப்பு என்கிறீர்களா? சும்மாதான். இதுவரை மொத்தம் எழுதிய பதிவுகள் 96, இன்றோடு 8 வருடங்கள் முடிந்து விட்டன. ஒரு வருடத்திற்கு சராசரியாக 12 பதிவுகள். மாதம் சராசரியாக ஒரு பதிவு. கஷ்டப்பட்டு (கஷ்டப்படுத்தி?) இந்த சராசரியைக் கொண்டு வந்துள்ளேன்.

அதிக பதிவுகள் எழுதப்பட்ட வருடம் 2015. இதுவரை 17 பதிவுகள். இந்த வருடத்திற்குள் மொத்தம் 100 பதிவுகள் எழுதி விட ஆ! (ச்)சை உள்ளதால், கண்டிப்பாக எண்ணிக்கை கூடும். 50 பதிவுகள் எழுத 5 வருடங்கள், ஆனால் அடுத்த 50 பதிவுகளை 3 ஆண்டுகளில் எழுதியாகி விட்டது. என்னடா கணக்கு சரியா வரலியே என்கிறீர்களா? நம்பிக்கைதான் வாழ்க்கை.

மிக குறைந்த பதிவுகள் எழுதி (மக்கள் சந்தோஷமாக) இருந்த வருடம் 2007. இரண்டே பதிவுகள். அப்போதான் ஆரம்பித்தேன், அதனால்தான். அடுத்து 2010. ஆறு பதிவுகள்.

மிக அதிக பார்வையாளர்களை இழுத்த பதிவு உத்தம வில்லன்: லிங்குவிற்கு சங்கு? 3250+ வருகையாளர்கள், அடுத்து அஞ்சான் - நோஞ்சான், அதற்கு 2700+ வருகையாளர்கள். மிக மொக்கையான பதிவு சும்மா, வாழ்த்துக்கள் என்ற பதிவுகள்தான். ஒற்றை எண்ணிக்கைதான்.

பின்னூட்டங்கள் சராசரியாக பதிவிற்கு 3ல் இருந்து 4 என மாறி உள்ளது. இதுவரை 370 பின்னூட்டங்கள் வந்துள்ளன. (அதில் பாதிக்கு மேல் நானே போட்டது என நினைக்கிறேன்)

ஒரு அதிசயம் என்னவென்றால் அதிக பின்னூட்டமிடப்பட்ட பதிவு மட்டும் இன்னும் மாறாமலே உள்ளது. ராஜா ரசிகனும், ரஹ்மானும்!!! பதிவு 18 பின்னூட்டங்களுடன் உள்ளது. அதே நேரம் உத்தம வில்லன்: லிங்குவிற்கு சங்கு? மற்றும் சென்னையின் வாகன ஓட்டிகள் இரு பதிவுகளும் அதே 18 பின்னூட்டங்களுடன் உள்ளன. பின்னூட்டங்களே இல்லாத பதிவுகள் நிறைய உள்ளன. அதில் இந்தப் பதிவும் சேருமா?

Monday, October 12, 2015

மாயா, புலி, தூங்காவனம், தோழா - விமர்சனம்

புலி:

முதல் நாள் முதல் காட்சி பார்த்தால், அந்தப் படம் பப்படம் ஆகும், அது என்னுடைய ராசி. கடைசியாக அஞ்சான். இந்த ராசி நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல், புலி படம் பார்க்க கூட்டிப் போனார்கள். அதுவும் நம்மூரிலேயே நம்ம ராசி அப்படி. அமெரிக்காவில் சும்மாவா? பொட்டியே வரவில்லை.

அந்த வெள்ளியன்று இங்குள்ள நான்கு நண்பர்கள் சந்திக்கலாம் என்று திட்டம். அது சற்றே சொதப்பி விட, நான் கிளம்பிய நேரத்தில் அலுவலக நண்பர்களும், நான் போவதற்குள், மற்ற நண்பர்களும் புலி படம் பார்த்து விட்டனர். நான் மட்டும் தப்பித்து விட்டேன். "அவ்ளோ ஒன்னும் மோசமில்லடா, ஒரு வாட்டி பாக்கலாம், கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருந்தது." என்றெல்லாம் சமாதானம் சொன்னார்கள். எனக்கோ, சிம்புதேவன் மீதிருந்த நம்பிக்கையும் குறைந்து கொண்டே இருந்தது. விஜய் மீது நம்பிக்கையே இல்லை. எனவே விட்டு விட்டேன். இருந்தாலும் விதி வலியது, கடைசியாக பார்த்துத் தொலைத்து விட்டேன்.

ஒரு பாண்டஸி என்கிற மாயாஜாலப் படம் வருகிறது என்றால், அதில் லாஜிக் பார்க்கக்கூடாது. அதாவது, படம் பார்க்கும் போது நம்மை யோசிக்க வைக்கக் கூடாது. அப்படிதான் இருக்க வேண்டும். ஆனால், புலி அப்படியா இருக்கிறது? இப்போதெல்லாம் குழந்தைகளே நம்மை விட பயங்கரமாக யோசிக்கிறார்கள். ஏன், எப்படி எதற்கு என நாம் கேட்கிறோமோ இல்லையோ, அவர்கள் நன்கு கேட்கிறார்கள். அப்படி இருக்கையில் இது குழந்தைகளுக்கான படம் என வேறு சொல்கிறார்கள், எப்படி என்றுதான் தெரியவில்லை.

அதைவிட ஒரு கொடுமை என்னவென்றால் இசை. தசாவதாரம் படத்தில் வில்லன் பிளட்சர் பாத்திரத்திற்கு அருமையான பின்னணி இசையை தேவிஸ்ரீ பிரசாத் கொடுத்திருந்தார். அருமையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகவே, இந்த படத்திலும் போட்டு விட்டார் போலும்.

ஒன்று இது விஜய் படமாக இருக்க வேண்டும், அல்லது சிம்புதேவன் படமாக இருக்க வேண்டும், இரண்டுமில்லாமல் நடுவில் இரண்டுக்கெட்டானாகி, மொக்கையாகி விட்டது. கருஞ்சிறுத்தை, ஒற்றைக்கண் மனிதன், குள்ள மனிதர்கள், பேசும் ஆமை, மாந்தரீக ராணி, எல்லாம் சரிதான். ஆனால் எதுவுமே சரியில்லை (புரிகிறதா?).

சிம்புதேவனின் கிமுவில் சோமு படியுங்கள். படித்த பிறகுதான் தெரியும் எவ்வளவு மொக்கை என்று. ஆனால், படிக்கும்போது தெரியாது. பரபரப்பாக இருக்கும். அதைக்கூட எடுத்திருக்கலாம். அடப் போங்க சார். இதுக்கு மேல எழுதினா ராஜேந்தர் வந்து பிராண்டி வச்சிருவாரு. வர வர சிம்பு தேவன், விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு ஆகியோரின் மேலிருந்த நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. சீக்கிரம் திரும்பி வாங்க. காத்திருக்கோம்.

மாயா:

புலி முதல் நாளன்று, படம் வர தாமதம் ஆகும் என்று மாயா படம் திரையிட்டார்கள். ஏற்கனவே படம் பற்றி நல்ல விமர்சனங்கள், இணையத்தில் தரமான காணொளி இல்லை (பாக்கறது திருட்டு, இதுல நொள்ள பிரிண்டுதான் வேணுமோ) என்பதால் அதைப் பார்த்தோம். அட்டகாசமான படம். படம் பார்த்த அனைவருமே சற்றே அரண்ட முகத்துடன்தான் வெளியேறினர்.

டிமாண்டி காலனி படத்திற்கு பின், ஒரு தரமான, உண்மையான பேய்ப்படம். படத்திற்கும் படம், அதிலும் குழப்பமில்லாமல் திரைக்கதை என எளிமையாகவே இருந்தது. இதற்கு முன், 'புது முகங்கள் தேவை' என்றொரு படமுண்டு. அதிலும் படத்திற்கும் படம் என சற்றே குழப்பி, கடைசியில் தெளிய வைப்பார்கள். இதில் அந்த அளவு குழப்பம் இல்லை.

குற்றம் கடிதல்:

இதுவும் ஒரு தரமான படம். படம் சற்றே நீளம் போல தோன்றினாலும், படத்திற்கு இது தேவைதான். என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் இது. ஏனென்றால் என் சொந்தக்காரர்கள் நிறைய பேர் ஆசிரியர்கள். என் தங்கமணியோ ஒரு தனியார பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை செய்தவர், அங்கு நடக்கும் அரசியல், நிகழ்வுகள் பற்றி நிறைய சொல்லுவார். எனக்குப் பிடித்த விஷயம், இந்தப் படத்தில் அனைவருமே நல்லவர்கள், அல்லது நல்ல பக்கங்களை மட்டுமே காட்டியது.

தனி ஒருவன், கிருமி போன்ற படங்களும் நன்றாக இருந்தன. ஒரு நகை முரண் என்னவென்றால் காக்கா முட்டை, குற்றம் கடிதல் படங்கள் ஊடகங்களை கற்பழித்தாலும், அதே ஊடகங்கள் அவற்றை கொண்டாடுகின்றன. இது தவிர்க்க இயலாததா இல்லை நிஜமாகவே பாராட்டுகின்றனவா என்றுதான் தெரியவில்லை. 

எப்போதுமே, கடந்து போன படங்கள் பற்றிய விமர்சனமே பார்க்கிறோமோ, ஒரு வித்தியாசத்திற்கு வரப்போகிற படங்களின் விமர்சங்கள் இங்கே.

தோழா (The Intouchables 2011 French):

கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் வெளி வர இருக்கும் படம். ஒரு விபத்தில் சிக்கி கழுத்துக்குக் கீழ் எதுவும் இயங்காமல் இருக்கும் பணக்காரன், எதையும் பற்றி கவலைப்படாமல் ஊர் சுற்றும் ஒருவன் இருவருக்கிடையேயான நட்பே படம். திரைக்கதையில் வரும் நிறைய காட்சிகள் ஏற்கனவே நிறைய படங்களில் வந்து விட்டது. ஒரே மாதிரி வாழும் பணக்காரனின் வீட்டில் வரும் நாயகன், தனது Don't Care சேட்டைகள் மூலம் அவர்களது வாழ்க்கையை மாற்றுவதுதான் படம். பிரெஞ்ச் நாட்டவரால் கொண்டாடப்படும் படமாம் இது. நம்மூரில் என்னவோ எனக்கு நம்பிக்கை இல்லை.

இது ஒரு உண்மைக் கதை. நம்மூரில் தாரை தாரையாய் கண்ணீர் விட வைக்கும் அளவிற்கு காட்சிகள் வைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இது நகைச்சுவை திரைப்படம். நாடகம் பார்ப்பது, இசை நிகழ்ச்சியில் அட்டூழியம் செய்வது, காரியதரிசியிடம் வழிவது, இறுதியில் சவரம் செய்யும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம். கார்த்தி சரியாக பொருந்துவார். தெலுங்கில் ஆனால் நாகார்ஜுனாவை எப்படி ஒப்புக்கொள்வார்களோ தெரியவில்லை. கண்டிப்பாக அவருக்கு பிளாஷ்பேக் காட்சிகள் இருக்கும் என நினைக்கிறேன்.

இந்த படத்தைப் பற்றி ஒரு தெளிவான விமர்சனம் இங்கே.

தூங்காவனம் (Sleepless Night 2011 French):

ஒரு போதைப்பொருள் கடத்தும் கூட்டத்திடம் இருந்து இரண்டு பேர் போதைப்பொருளை திருடுகிறார்கள். அதன் பின், காவல்துறை அதிகாரி கமலின் மகன் கடத்தப்பட்டு, கமலிடம் இருந்து அந்த பொருள் திருப்பிக் கேட்கப்படுகிறது. ஒரு இரவில், கமல் என்ன செய்து தனது மகனை மீட்டார்? கமல் நல்லவரா இல்லை கெட்டவரா? என்பதுதான் கதை.டிரைலர் பார்க்கும்போது, அப்படியே நகலெத்திருப்பது தெளிவாக தெரிகிறது. த்ரிஷாவின் உடை, பாவனைகள், பிரகாஷ்ராஜின் பாவனைகள், கிஷோர் மற்றும் சம்பத்தின் நடிப்பு, லூசுத்தனமான யூகி சேது என அந்தப் படம் பார்த்தவர்கள் அனைவருக்குமே, யார் யார் எந்த பாத்திரங்களில் வருவார்கள் என சுலபமாக கணிக்கும் அளவிற்கு டிரைலர் உள்ளது. கமலுக்கு படத்தில் முத்தக் காட்சிகள், அழும் காட்சிகள் என எல்லாம் உண்டு.

அது என்ன 2011ல் வந்த பிரெஞ்ச் படங்கள் மீது நம்மவர்களுக்கு என்ன ஆர்வம் என்று தெரியவில்லை. பார்ப்போம்.

Saturday, September 26, 2015

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

"என்னடா, வர வர ரொம்ப ஒலகப்பட விமர்சனமா போடறானே" என்றுதானே யோசிக்கிறீர்கள்.. வேற ஒன்னுமில்லீங்க.. "ஒடனே பாக்கணும், கெளம்பி வாங்க" அப்டின்னு ஒபாமா கூப்புட்டாரா, அதான் கெளம்ப வேண்டியதா போச்சு. இங்க வந்து என்ன செய்வோம்னுதான் தெரியும்ல. அதான். அது மட்டுமில்லாம கொஞ்சம், இல்லல்ல ரொம்பவே சோம்பேறியா வேற ஆயாச்சு. அதான் புதுசா எந்த பதிவும் போட முடியல. சந்தோசமா இருந்தீங்களா. அதான் வந்துட்டேன்ல.

கடைசியா என்ன பிட்டு போட்டேன்? ஆங், ஒலகப்பட விமர்சனமா போட்டுக் கொல்கிறேன் (சரிதான்) என்று சொல்லி இருந்தேன். செஞ்சுட்டேன். சரி சரி அத விடுங்க. தமிழ்ல கடைசியா ஒழுங்கா பாத்த படம் 'டிமாண்டி காலனி'. அதுக்கப்புறமே கெளம்பியாச்சு. பாகுபலி முதல் இப்போ மாயா வரை திருட்டுத்தனமாத்தான் பாத்தேன். என்ன செய்ய. இங்க பக்கத்துல இல்ல, தூரத்துல கூட தமிழ்ப்படம் வராது. என்ன செய்ய. என்னவோ புலி வருது புலி வருதுன்னு சொல்றாங்க. பாக்கலாம். இயக்குனர் என்னவோ எனக்கு புடிச்சிருந்தாலும், நாயகன நெனச்சாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு. பாப்போம்.

இங்க அமெரிக்கா எப்படி இருக்கா? அப்படியேத்தான் இருக்கு. இந்த ஊர்க்காரன் கூட நம்மளப் பாத்தா கொஞ்சம் சிரிக்கிறான், மதிக்கிறான். ஆனா நம்ம ஊர்க்காரங்க மொறக்கிறாங்க. "அட நம்ம ஊர்க்காரன் போல இருக்கான்பா" என்று சற்றே பார்த்து சிரித்தால், அப்படியே மொறைக்கிறாங்க.

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்களேன். நம்ம ஊர்ல ஒரு நாலு தெலுங்குக்காரன்களோ, இல்ல மலையாளிகளோ சேந்து சத்தம் போட்டு பேசி சிரிச்சாலோ, இல்ல ஏதாவது கூட்டம் போட்டாலோ நமக்கு எவ்ளோ காண்டாகும். ஆனா, நாம அவங்க ஊருக்கு வந்து இருந்தாலும், நம்மளையும் எவ்வளவோ மதிக்கிறாங்க. சில பல பிரச்சினைகளும் இருக்கு. ஆனா, நம்மூரோடு பாக்கும்போது, இங்க கொஞ்சம் பரவால்ல, அப்டின்னு எனக்கு தோணுது. ஆனா, என்ன இருந்தாலும், நம்ம ஊரு நம்ம ஊருதான். 

மத்தபடி, இங்கிருந்து ஏதாவது வேணும்னா சொல்லுங்க. நம்மாளு மோடி வராரு. வாங்கி அனுப்பறேன். அவ்வளவுதாங்க இந்த மாச பிட்டு. எம்எஸ்வி, அப்துல் கலாம் மரணங்கள், மோடி வெளிநாட்டு பயணங்கள், ஸ்டாலின் நடைப்பயணம், ஜெயலலிதா, அன்புமணி, கபாலி, தூங்காவனம் அப்டின்னு நெறைய சொல்லத் தோணுது. எனக்கெதுக்கு வம்பு. அதனால இத்தோட முடிச்சிக்குறேன். அடுத்த பதிவுல, ஆபத்து வராத மாறி வேணா போட்டுக்கலாம். நான் புள்ள குட்டிக்காரன்பா.

Saturday, August 29, 2015

எங்கடா பொணத்த காணோம்: Sleuth (1972), Diabolique (1955)

சில படங்களைப் பார்க்கும்போது, "எப்படிடா இப்படியெல்லாம் யோசிக்கிறாங்க, ஒரு வேளை இவனுங்க இந்த மாதிரி எதுவும் செஞ்சிருப்பாங்களோ" என்று தோணும். பல வருடங்களுக்கு முன் இப்படி எல்லாம் எடுத்திருப்பதுதான், எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் நிறைய உலகப்படங்கள் பார்க்கும் வழக்கம் உடையவராக இருந்தால், ஓரளவு இரு படங்களின் முடிவையும் கணிக்க முடியும். ஓரளவுதான், அதுவும் முதல் படத்திற்குதான்

Diabolique (1955):

ஒரு உறைவிடப் பள்ளியின் தலைமை முரட்டு தலைமை ஆசிரியர், அது அவரது மாமனாரின் பள்ளி, மனைவியும் ஆசிரியை, உடல் நலம் சரி இல்லாதவர். இன்னும் 2 ஆசிரியர்களும், இன்னொரு ஆசிரியையும் உள்ளனர். அந்த ஆசிரியைதான் துணைவி. இருவரையும் பாடாய்ப் படுத்துவதால் மனைவி, துணைவி இருவரும் சேர்ந்து அந்த தலைமை ஆசிரியரைக் கொலை செய்ய திட்டமிடுகின்றனர். ஒரு விடுமுறை நாளில், பக்காவாக திட்டமிட்டு, கொலையும் செய்து, பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் பிணத்தைத் தள்ளி விடுகின்றனர். குடி போதையில் தடுமாறி விழுந்தது போல இருக்கும் என நம்புகின்றனர்.

பிணம் வெளியே வருமென பார்த்தால் வரவில்லை. சரி என இன்னொரு திட்டம் போட்டு, நீச்சல் குளத்தில் உள்ள நீரை வெளியேற்றிப் பார்த்தால், பிணத்தைக் காணோம். இரண்டு பேரும் பீதியிலேயே அலைய, பள்ளியில் தலைமை ஆசிரியரைப் பார்த்ததாக ஒரு மாணவர் வேறு சொல்ல, நமக்கும் சேர்த்து தலை சுற்றுகிறது. பயத்தில் துணைவியோ ஊரை விட்டே ஓடுகிறார். இந்த நிலையில் எங்கே அனாதை பிணம் கிடைத்தாலும், மனைவி அங்கே சென்று பார்க்க, ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, "நான் உன் புருஷனைக் கண்டு புடிக்கிறேன்" என்று உள்ளே வருகிறார். அவராவது பிணத்தைக் கண்டு பிடித்தாரா என்பதுதான் கதை.

Sleuth (1955):

ஒரு வயதான துப்பறியும் எழுத்தாளர், அவரது இளம் மனைவி. இல்லறமோ சரியில்லை. அவருக்கு ஒரு ரகசிய காதலி. மனைவிக்கு ஒரு காதலன். அந்த காதலன், அந்த வித்தியாசமான எழுத்தாளரை சந்திக்க, வினோதமான அவரது வீட்டிற்கு வருகிறான். அவர் விவாக ரத்து கொடுத்தால், அவரது மனைவியை மணந்து கொள்ளலாம் என பேச வருகிறான். அவரோ, "நான் விவாக ரத்து கொடுத்தால், நிறைய பணம் ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டும். அப்புறம் நான் என்ன செய்ய" என்கிறார். அது மட்டுமில்லாமல், அவளொரு ஆடம்பரப் பிரியை, உன்னால் அந்த யானையைக் கட்டி தீனி போட முடியாது என்கிறார். பின் அவரே ஒரு வழி சொல்லுகிறார்.

அவரது வீட்டில் உள்ள நகைகளை அவனைக் கொள்ளையடிக்க சொல்கிறார். தடயமில்லாமல் செய்யவும் அவரே வழி சொல்கிறார். "நகை உனக்கு, இன்ஸ்யுரன்ஸ் பணம் எனக்கு" என்கிறார். எல்லாம் முடியும் நேரத்தில், அவன் நெத்தியில் துப்பாக்கி வைத்து "ஏண்டா, நீ பாட்டுக்கு வருவ, என் பொண்டாட்டிய கூட்டிட்டு போவ, நான் வேடிக்கை பாக்கணுமா" என்கிறார். இதுவரை நான் நினைத்தபடிதான் படம் போனது.

அதன் பிறகு, காணாமல் போன அந்த காதலனைப் பற்றி விசாரிக்கிறேன் என ஒரு காவல்துறை அதிகாரி வருகிறார். கிடுக்குப் பிடி போட்டு கேட்கும் கேள்வியில், எழுத்தாளர் மாட்டுகிறார். "சரி, நீ அவன கொன்னுட்ட, பொணம் எங்க?" என்று கேட்கிறார். அதன் பின் என்ன என்பதும், மாறி மாறி வரும் திருப்பங்களும் படம் பார்த்தால் தெரியும். படம் முழுக்க ஒரே வீட்டுக்குள்தான். படம் முழுதும் ஒரே ஆளோ, அல்லது இரண்டு பேர் பேசுவதுதான் படமே.

இந்த இரண்டு படங்களிலும், எல்லோரும் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள். ஆனால், மிக சாதாரணமாக கதையில் திருப்பங்கள் நிகழும். இந்த இரண்டு படங்களையும் மறு ஆக்கம் கூட செய்திருக்கிறார்கள். ஆனால், மூலப் படம் பார்ப்பதே சிறந்தது என்பது என் எண்ணம். பொறுமை மிக முக்கியம் அமைச்சரே. அடுத்த பதிவில், இதே போல ஒரே அறையில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய (நான் பார்த்த) படங்கள் பற்றிப் பார்ப்போம்.

Thursday, July 30, 2015

கிறிஸ்டோபர் நோலன்

'கஜினி' படம் வந்தபோது 'மெமெண்டோ' படத்தின் காப்பி என நண்பர்கள் அதை தரவிறக்கம் செய்து பார்த்தனர். அனைவரும் இரண்டு நாள் முழுக்க தலைவலியோடு திரிந்தனர். எனவே, நான் அதை பார்க்கவில்லை. அதே போல 'பிரஸ்டீஜ்' படமும் ஒருவன் பார்த்து விட்டு பிதற்றிக்கொண்டு இருந்ததால், ஏதாவது பதிவர்கள் அந்தப் படத்தைப் பற்றி எழுதி இருந்தாலும், அப்படியே தள்ளிப் போய் விடுவேன்.

நாம இயக்குனர் வரிசையில் படம் பாப்போம் என நோலனின் படங்கள் அனைத்தையும் தரவிறக்கம் செய்தேன். அதன் விளைவே இந்தப் பதிவு. அது என்னவோ தெரியவில்லை, அவரின் படங்கள் எல்லாமே எனக்கு சுஜாதா கதைகளை நினைவூட்டுகிறது. அதாவது அந்த கதையின் முடிவுகள். அவரது படங்களைப் பற்றி நிறைய பதிவுகளை நீங்கள் படிக்கலாம். இதில் என்னுடைய கருத்துகள் மட்டுமே.

குறும்படங்கள்:

அவர் சில குறும்படங்களும் இயக்கி உள்ளார் போல. ஒன்று மட்டுமே காணக் கிடைத்தது. யாராவது இனி 'நானும் ஒலகப்படம் பாக்கணும்' என்று நினைத்தால், முதலில் இந்த குறும்படத்தைக் காணுங்கள். அதில் தெளிவாகி விட்டீர்கள் எனில், ம், ஆரம்பிக்கட்டும்.


FOLLOWING (1998):


ஒரே ஒரு முறை மட்டும் பார்த்து, நான் குழம்பாமல் எனக்கு புரிந்த படம் இதுதான். வெட்டியாக இருந்தால், பீச்சில் உட்கார்ந்து கடலை சாப்பிட்டுக் கொண்டு, கடலைப் பார்த்தக் கொண்டு இருக்க வேண்டும், அப்படி இல்லாமல் 'சும்மா எவன்/எவள் பின்னாடியாவது சும்மா போலாம்' என்றால் என்ன ஆகும் என்பதுதான் கதை. (இந்த பரோட்டவைக் கொத்தி, நடுவில் மானே, தேனே பொன்மானே என்றெல்லாம் போட்டு, கேவலமாக போன கொத்து பரோட்டா படம்தான் வாமனன்). "செய்யாத கொலைக்கு எனக்கு தண்டனை கொடுத்துட்டாங்க எசமான்" என்றெல்லாம் நம்மாட்கள் புலம்பி, அதைத் தீர்க்கும் கதை கிடையாது. அதுதான் படத்தின் முடிவே.

மெமெண்டோ (MEMENTO) (2000):


என்ன நடந்தாலும் அடுத்த 5 நிமிடங்களில் மறந்து விடும் ஆள், அவன் கண் முன்னே அவன் மனைவியைக் கொன்ற வில்லன், அவனுக்கு உதவி செய்யும் ஒரு பெண், எல்லாவற்றையும் மறந்து விடுவதால் உடம்பில் பச்சை குத்திக் கொண்டு, ஒரு போலராய்டு கேமரா வைத்து எல்லாவற்றையும் புகைப்படம் எடுப்பது, இவைதான் தேவையானவை. இதை வைத்து மண்டைக்குள் சுர்ரென்று காரம் ஏறும் அளவுக்கு படம் எடுத்த ஆள் நோலன். நம்மூருக்கு தேவையான மசாலா எல்லாம் சேர்த்து, காசு அள்ளியவர் முருகதாஸ்.


இந்தப் படம் பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது அமீர் கானின் ஒரு பேட்டி. "நான் மெமெண்டோ படம் பாத்தேன். எனக்கு அந்த படமே புரியல (அல்லது புடிக்கல). அப்புறமா அந்தப் படத்தோட கருவ(?) மட்டும் வச்சு வந்த கஜினி எனக்கு ரொம்ப புடிச்சிது. அதனாலதான் அத ரீமேக் பண்றேன்" என்றார். அமீர்கானுக்கே(??) புரியாத படம், நமக்கு அவ்வளவு சீக்கிரம் புரியுமா? ஒரு முறை பாருங்கள். இந்தப் படத்திற்கு நிறைய கோனார் உரைகளை நம் பதிவர்கள் எழுதி உள்ளார்கள். அதைப் படித்து விட்டு மீண்டும் பார்த்தால், இன்னும் சற்று பு(பி)ரிவது போல இருக்கும். மீண்டும் ஒரு முறை பாருங்கள்.

INSOMNIA (2002):


ஒரு மிகச் சிறந்த துப்பறியும் திரைப்படம். ஒரு கொலையை துப்பறிய வரும் அதிகாரி, கொலைகாரனைத் தேடும்போது, தவறுதலாக தன்னுடன் பணியாற்றும், சற்றே அவருடன் பிரச்சினை உள்ள சக அதிகாரியை தெரியாமல் சுட்டுக் கொன்று விட, அதை அந்த கொலைகாரன் பார்த்து விட, பிறகு ஆரம்பிக்கிறது ஆட்டம். அதன் பிறகு நடக்கும் ஒப்பந்தம் (பேக்கரியை நீ வச்சுக்க, உன் அக்காவ நான் வச்சுக்கிறேன்).

நோலனின் படங்களில் ஒரே நேர்க்கோட்டில், குழப்பாமல் செல்லும் ஒரே படம் இதுதான். கதை, திரைக்கதை அவரல்ல. இயக்கம் மட்டுமே. அத கூட காரணமாக இருக்கலாம். தவற விடக்கூடாத திரைப்படம். நாம் நிறைய படங்களில் காமெடியாக பார்த்து சிரித்த ராபின் வில்லியம்ஸ், இதில் கொடூரமான வில்லனாக கலக்கி இருப்பார்.

THE PRESTIGE (2000):


இந்தப் படத்திற்கும் நிறைய பேர் உரை எழுதி உள்ளனர். இரு மாய வித்தைக்காரர்கள் (மேஜிக் செய்பவர்கள்) இடையே உள்ள போட்டி, பொறாமைதான். இருவருக்கும்(?) அதனால் வாழ்க்கையே போகிறது. 1900க்கும் முந்தைய கால கட்ட கதை. இது இரண்டு முறை பார்த்தவுடன் ஓரளவு புரிந்து விட்டது. இதன் முக்கியக் கருவை மட்டும் வைத்து தமிழில் 'வில்லன்' படமும், ஹிந்தியில் தூம் 3 படமும் எடுத்துள்ளனர்.

THE DARK KNIGHT TRILOGY (2005, 2008, 2012):

இது முன்பே பார்த்து விட்டேன். ஒரு சூப்பர் ஹீரோ படம். எனக்கு பொதுவாக காமிக்ஸ் அவ்வளவாக பிடிக்காது. அதே போலத்தான் சூப்பர் ஹீரோக்களும். ஆனாலும், இதில் நோலன் வித்தியாசமாக எடுத்திருந்தாலும், எனக்கென்னவோ அவ்வளவாக பிடிக்கவில்லை. "என்னதான் இருந்தாலும் இப்படியா வில்லன்கிட்ட அடி வாங்குறது" என்றுதான் தோன்றியது. (அப்புறம் ஏன் நீ காமிக்ஸ் பத்தி பதிவு எழுதுற சிவாவை உன் பதிவுல வச்சிருக்க என்கிறீர்களா? நன்பேண்டா). எனவே ஒரு டைம் பாஸுக்காக நண்பர்களுடன் பார்த்தேன். ஆனாலும், நோலன் படம் என்று தெரியும் வகையிலும் சில (பல?) காட்சிகள் உண்டு.

INCEPTION (2010), INTERSTELLAR (2014):


நானும் முக்கி, முனகி எத்தனையோ கோனார் உரைகளைப் படித்துப் படித்துப் பார்க்கிறேன், இந்த இரண்டு படங்களும் சுத்தமாக புரியவேயில்லை. புரிவது போல இருந்தாலும், சில சமயங்களில் வேறு சந்தேகங்கள் வருகின்றன. அதற்கு இயற்பியல், வேதியியல், கணிதம் எல்லாம் மீண்டும் படிக்க வேண்டும் போல உள்ளது. கனவுக்குள் புகுந்து வருவது, கருந்துளைக்குள் நுழைவது, முடியல. கண்ணக் கட்டுது. தமிழில் வந்த 'இன்று நேற்று நாளை' படமே எனக்கு சில இடங்களில் புரியாதபோது, இந்தப்படம் அவ்வளவு சீக்கிரம் புரியும் என நினைத்தால், அது என் தவறுதான்.

நீங்கள் மிகவும் பொறுமைசாலி, அதே போல நேரம் போக வேண்டும், கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது படம் பார்க்கலாம் என்று நினைத்தால் மட்டுமே, இவரது படங்கள் பார்க்கவும். இல்லையேல் ஏற்படும் பின் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது.

Tuesday, June 30, 2015

ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1993): புலம் பெயர்ந்தோரின் வலி

நான் பதிவு எழுதும் படங்கள் எல்லாம் நிறைய படம் பார்ப்பவர்கள் தேய்த்து எடுத்திருப்பார்கள். ஒரு வகையில் நான் பார்ப்பதே அந்த மாதிரி படங்கள்தான். ஏனென்றால், படம் பார்த்த பின், ஒவ்வொரு பதிவரும் அந்தப் படத்தைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள், நமக்கு தோன்றியதுதான் அவர்களுக்கும் தோன்றியதா என்பதற்காகவே.

ஏனென்றால் ஏற்கனவே குறும்படங்கள் பார்த்த அனுபவம். ஒரு 10 குறும்படங்கள் பார்த்தால்தான் ஒன்றாவது தேறும். அதே பெரிய படங்களுக்கு எல்லாம் நேரத்தை செலவு செய்ய முடியாது என்று, மற்றவர்கள் கூறும் படங்களையே பார்க்க ஆரம்பித்தேன். அதில் காமெடி என்னவென்றால், அதிலும் எனக்கு 10ல் ஒன்றுதான் பிடிக்கிறது.

அந்த படங்கள் பற்றிய எனது பார்வையே இந்த ஒலகப்பட பதிவுகள். என்னுடைய புரிதலையே நான் எழுதுகிறேன். தவறு ஏதேனும் இருப்பின், தயங்காமல் சுட்டிக்காட்டலாம்.


எல்லாம் சரிதான். ஏன் இந்தப்படம் முதலில்? அதற்கு நிறைய காரணங்கள் உண்டு. கல்லூரிக்காலங்களில் இந்தப் படத்தில் உள்ள 'அந்த ஒரு சில காட்சிகள்' மட்டுமே பார்த்துள்ளேன். படம் முழுதும் பார்த்ததில்லை. அதே போல படத்தின் நீளம், படம் முழுதும் கருப்பு வெள்ளை என சில தயக்கங்கள். போதாக்குறைக்கு இந்தியன் படத்தில் கமல் வேறு "நல்ல படம், தியேட்டர்ல யாருமே இருக்க மாட்டாங்க" என்று வேறு சொல்லுவாரா, சரிதான் மொக்கைப் படம் போல என்று விட்டு விட்டேன்.

அதன் பின் "என்ன, இது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் படமா" என்று மட்டும் கேட்டு விட்டு மீண்டும் விட்டு விட்டேன். அதன் பின் ஒரு மிக கடினமான நாளில் இந்தப் படத்தைப் பார்த்து விட்டேன்.

என்னை மிகவும் பாதித்த விஷயங்கள். ஒரு நிர்வாணமாக ஓடும் பெண்களைப் பார்த்து பரிதாபமும், அழுகையும் வரும் என அதுவரை நான் எதிர் பார்த்ததில்லை. அவ்வளவு ஏன், 'அங்கே கை வைத்தார்கள், இங்கே துணி நழுவியது' என நம் கண்களை எங்கோ பார்க்க வைக்கும் காணொளிகள் அதிகம். ஆனால், அந்தக் காணொளியின் நோக்கம் அதுவாக இருக்காது. அதே போலத்தான் இந்தப் படமும்.

அதே போல, தமிழில் எவ்வளவு மொக்கையான படமாக இருந்தாலும், சில காட்சிகளில் உணர்சிவசப்படுவேன், காரணம் மொழி. மற்றபடி மற்ற மொழிப்படங்களில் அவ்வளவாக இல்லை, அப்படியே இருந்தாலும், இந்தப் படம் அளவிற்கு இல்லை என்பதே உண்மை.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில், யூதர்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களை விட்டு அகதிகளாக வெளியேற்றப்படுகின்றனர். அவர்களின் சொத்துகள் ஜெர்மானியர்களால் அபகரிக்கப்படுகிறது. அதில் ஷிண்ட்லர் என்பவர் எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்பது போல, யூதர் ஒருவருக்கு சொந்தமான, பாத்திரங்கள் செய்யும் தொழிற்சாலையை வாங்கி, அதில் குறைந்த சம்பளத்திற்கு யூதர்களை வேலைக்கு சேர்த்து நிறைய சம்பாதிக்கிறார். அதற்காக ஜெர்மானிய அதிகாரிகளுக்கு லஞ்சத்தை வாரி இறைக்கிறார். குடித்து, கும்மாளமிடுகிறார்.

அந்த தொழிற்சாலையில் மேலாளர் போல இருக்கும் ஸ்டெர்ன் எனும் யூதர், தன்னால் முடிந்த அளவு யூதர்களை இந்த தொழிற்சாலைக்கு வேலைக்காக கூட்டி வந்து, ஜெர்மானியர்களின் கொடுமையில் இருந்து காப்பாற்றுகிறார். அதே நேரம் யூதர்கள் மீதான கொடுமைகள் அதிகரிக்கின்றன. அவற்றைப் பார்த்து ஜெர்மானியரான ஷிண்ட்லருக்கே மனம் மாறுகிறது. அதிலும் உச்சகட்ட கொடுமையாக யூதர்கள் செங்கல் சூளையில் உயிரோடு கொளுத்தப்படுகிறார்கள்.

இதனைப் பார்த்ததும், எப்படியாவது தன்னால் முடிந்தவரை யூதர்களை காப்பாற்ற வேண்டும் என எண்ணி, தன்னுடைய சொந்த ஊரில் உள்ள தொழிற்சாலைக்கு யூதர்கள் வேண்டும் என கேட்டு, ஒரு பெயர்ப்பட்டியலை தயாரிக்கிறார். ஒவ்வொரு ஆளுக்காகவும் லஞ்சம் கொடுக்க தன சொத்துக்களையே அளிக்கிறார். அப்படி அவரால் காப்பாற்ற முடிந்ததா என்பதே படம். இது ஒரு உண்மைக்கதை. இந்த ஷிண்ட்லர் பற்றிய மேலதிக விவரங்களை நீங்கள் கூகுளிடம் பெறலாம்.

"கொடுமை கொடுமை" என்பவற்றை கேட்பதை விட, படிப்பதை விட பார்ப்பது என்பது கொடுமையானது. அதிலும் அந்தக் காட்சிகள் அனைத்தும், உண்மையாக நடந்த இடங்களில் எடுக்கப்பட்டது என தெரியும்போது வரும் வலி இன்னும் அதிகம். சொல்ல வெட்கமாகத்தான் உள்ளது, இலங்கையில் நம் சகோதரர்களும் சகோதரிகளும் இப்படித்தானே துயரப்பட்டு இருப்பார்கள் என இந்தப் படம் பார்க்கும்போதுதான் இன்னும் அதிகமாக வலித்தது.

எனக்கு தோன்றியது என்னவென்றால், ஒருவேளை இலங்கையில் நடந்த இனக்கலவரம் பற்றி படம் எடுக்க சரியான ஆள், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தான். "அவர் யூதர், அதனால் இந்தப் படம் அவருக்கு நெருக்கமான படம்" என்று சொல்லலாம். ஆனால், நம்மூரில் முழக்கமிட்டுக் கொண்டு திரியும் எந்த சினிமாக்காரனும், அவர்களின் உணர்வுகளை நமக்கு காட்சிப்படுத்த இயலாது. அவர்களுக்கு அதை வைத்து பணம் பண்ணவும், அதில் காதலை மட்டும் சொல்லவும், அரசியல் ஆக்கவும்தான் தெரியும். அப்படியே புரிந்தாலும் அதை நம்மூரில் எடுக்க முடியாது.அப்படியே புரிந்தாலும் அதை நம்மூரில் எடுக்க முடியாது.

ஒரு அழிக்கப்பட்ட இனத்தின் வலி தெரிய வேண்டும் என்றால், நாம் எவ்வளவு சொகுசாக வாழ்கிறோம் என தெரிய வேண்டும் என்றால், இந்தப் படத்தை நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேணும். உண்மையில் நான் சொன்ன கதை சாதாரணமாக தெரியலாம். ஆனால், காட்சிகள் உங்களை கதற வைக்கும். அவற்றை எழுத்தில் சொல்ல இயலவில்லை.

இந்தப் படத்தில் குறிப்பிடத் தகுந்த காட்சிகள் என தனியாக எதுவும் இல்லை. படம் முழுதுமே குறிப்பிடத்தக்கதுதான். படத்தில் பல நிர்வாணக் காட்சிகள் உண்டு. அவை யாவும் பாலியல் உணர்வுகளை தூண்டாது. அதனால்தான், படம் பாருங்கள் என்கிறேன். இந்தப்படம் மட்டும் நீங்கள் பார்த்து விட்டீர்கள் என்றால், என்னைப் பொருத்தவரை நீங்கள் எந்த மொழி உலகப்படங்களும் பார்க்க தயாராகி விட்டீர்கள் என்று அர்த்தம்.

Wednesday, June 3, 2015

மாஸ் - தமாஸ், டிமாண்டி காலனி - பக்கா மாஸ்

டிமாண்டி காலனி:

படம் வந்து விட்டாலும், கொஞ்சம் பொறுமையாகவே இருந்தேன். வந்த விமர்சனங்கள் கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கவே, "விடுறா வண்டியை" என போய் பார்த்து விட்டு வந்து விட்டேன்.

முதலில் இந்தப் படம் எப்படி மற்ற பேய்ப் படங்களில் இருந்து வித்தியாசப்படுகிறது என்று பார்ப்போம். நீங்கள் நிறைய உலகப் பேய்ப் படங்கள் பார்த்திருந்தால், இந்தப் படமும் உங்களுக்குப் பிடிக்கும். பாதி விஷயங்களுக்கு விடை இருக்காது. படம் முழுதும் பயம் மட்டும்தான் இருக்க வேண்டுமென முடிவு செய்து விட்டார்கள்.

நான் சொன்னது போன்ற (?) கதைதான். நான்கு நண்பர்கள், ஒரு ஆர்வத்தில் பேய் வீடு என்று சொல்லப்படும் டிமாண்டி காலனியில் உள்ள வீட்டிற்கு போகிறார்கள். கூட உள்ள பயந்தாங்கொள்ளி நண்பனை பயமுறுத்துகிறார்கள். ஆனாலும் அமானுஷ்யத்தை உணர்ந்து, வெளியேறி விடுகிறார்கள். அதன் பின் அவர்கள் வீட்டில் அடுத்த நாள் ஆரம்பிக்கும் அதகளம், நம்மையும் மிரள வைக்கிறது.

இந்த படம் பற்றி ஒன்றுமே தெரியாத ஆள் பார்க்க ஆரம்பித்தால், முதல் அரை மணி நேரம் கதை எப்படி போகும் என்றே தெரியாது. நான்கு நண்பர்கள், வேறு வேறு வேலை, டாஸ்மாக் பாட்டு என போகும் படம், அப்படியே திசை மாறுகிறது. இந்தப் படத்தில் இன்னொரு குறிப்பிடப் பட வேண்டிய விஷயம், "இப்ப பேய் வருமா?" என நம்மை யோசிக்க வைக்கவே மாட்டார்கள். போகிற போக்கில் புளியைக் கரைப்பார்கள். (அருள்நிதி திரைச்சீலையை ஒதுக்க அதில் பேய் தெரிவது, மெழுகுவர்த்தி எடுத்துக் கொண்டு வர வர கண் வெண்மையாக மாறுவது, ஜோசியர் சொன்ன விஷயத்தை போனில் மீண்டும் கேட்பது)

நான் டிக்கெட் வாங்க போகும்போது ஒரு கல்லூரி கும்பலில் ஒரு ஆள் வரவில்லை என எனக்கு அந்த டிக்கெட்டைக் கொடுத்து விட்டனர். படத்தைக் கத்திக் கத்திக் கலாய்க்க வேண்டும் என்று எண்ணினார்கள் போல. அவர்களுக்கு இயக்குனர் அந்த வாய்ப்பே கொடுக்கவில்லை. படம் முடிந்த பொது, அந்த கும்பலில் சிலருக்கே பேய் அடித்தது போல இருந்தது. அதிலும் படம் முடியும் போது மணி இரவு சரியாக 12. சில குடும்பங்கள் "கும்பலா இருக்கே, ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு போலாமே" என தர்ம சங்கடத்துடன் காத்திருந்தனர். வார நாளின் இரவுக் காட்சியில் அந்த கும்பல் சற்று அதிகம்தான்.

பொதுவாக ஒரு வீட்டுக்குள் மட்டும் இருக்கும் பேய் அந்த வீட்டில் உள்ளவர்களை மட்டுமே பழி வாங்கும். இந்த பேய் கொஞ்சம் வித்தியாசமாக அந்த மனிதர்களின் வீட்டிற்கு போய் பழி வாங்குகிறது. கொஞ்சம் கொஞ்சம் உலகப்படங்கள் நினைவுக்கு வரலாம் (1408-அறை பனி போல உறைவது, பைனல் டெஸ்டிநேஷன்-போன் ஓவனுக்குள் விழுந்து ஷாக் அடிப்பது போன்றவை).

அதே போல முதலில் நாடி ஜோதிடத்தை நக்கல் செய்தும், பின் அதையே ரொம்ப முக்கியமானதாக காட்டியதுதான் ஏன் என தெரியவில்லை. அருள்நிதியின் அது போன்ற பாத்திர படைப்பிற்கான காரணமும் தெரியவில்லை, தேவையுமில்லை. ஏனென்றால் அந்த உதவி இயக்குனரின் பாத்திரம் தவிர மற்றவர்கள் செய்யும் வேலைகள் படத்தை முதல் அரை மணி நேரம் நகர்த்தவே உதவுகின்றன. அந்த டாஸ்மாக் பாடலும், இந்த காட்சிகளிலும் கத்திரி போட்டால், இன்னும் நன்றாக இருக்கும்.

உருவம் படம் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அந்தப் படத்தில், டைட்டிலில் எல்லோருடைய பெயரும் வந்த பிறகு, இயக்குனரின் பெயரும் வந்த பிறகு இறுதியாகத்தான் இளையராஜாவின் பெயர் வரும். அந்த இயக்குனர் ராஜாவின் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் போலும். ஒரு காலே அரைக்கால் பாட்டுதான் வரும். அந்த பின்னணி இசை என்னை பயமுறுத்தியதா என எனக்கு அவ்வளவு நினைவில்லை. மீண்டும் அதை சோதித்துப் பார்க்கும் பொறுமையும் இல்லை. (ஆனால் பிள்ளை நிலா அட்டகாசம்) இந்தப் படத்தில் பின்னணி இசை அபாரம், பயமுறுத்தியது. சற்றே காது வலி வந்தாலும்.

காஞ்சனா போன்ற காமெடி பேய்களைப் பார்த்து சலித்திருந்தால், டிமாண்டி காலனி வரை போய் விட்டு வாருங்கள். கண்டிப்பாக உங்களை ஏமாற்றாது.

மாசு (எ) மாசிலாமணி:


உண்மையில் நான் இந்த படம் பார்க்கவில்லை. தவிர்க்க இயலாத சந்தர்ப்பத்தில், அலுவலக நண்பர் ஒருவருடன் அரை மணி நேரம் திருட்டுத்தனமாக பார்க்க நேரிட்டது. பின் கண்டிப்பாக தியேட்டர் போக வேண்டும் என முடிவு செய்து விட்டேன். அப்படியே போனாலும் தனியாக விமர்சனம் எழுத வேண்டும் என தோன்றாது போல. எனக்கென்னவோ வெங்கட் பிரபுவிடம் சரக்கு தீர்ந்து விட்டதோ என தோன்றுகிறது. சென்னை 28ல் இருந்து பிரியாணி வரை தரம் குறைந்து கொண்டேதான் வருகிறது. 

நினைவு தெரிந்து ஒரு இயக்குனரின் அனைத்து படங்களையும் தியேட்டர் சென்று பார்த்தது வெங்கட் பிரபு படங்கள் மட்டும்தான். அதிலும் முதல் 4 படங்கள் நண்பர்களுடன் சென்றபோது மிக சந்தோசமாக இருந்தன. எனக்கும், முதலில் வெங்கட் இதே போலவே படங்களை (யுவன், பிரேம்ஜி என வழக்கமான கூட்டணி) எடுத்தால் நன்றாக இருக்குமே, எதற்காக மாற வேண்டும் என்றுதான் தோன்றியது. ஆனால், இப்படியே போனால், "கொஞ்சம் இல்ல, ரொம்ப கஷ்டம்".

Friday, May 22, 2015

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

விமர்சனம்:

நான் முந்தைய பதிவில் கூறியது போல, உத்தம வில்லன் மட்டுமே பார்த்தேன். அதன் பிறகு வேறு எதுவும் பார்க்கவில்லை. இந்தியா பாகிஸ்தான் படம் நன்றாக உள்ளது எனப் படித்தேன். விஜய் ஆண்டனியை நான், சலீம் படங்களில் பேசா மடந்தையாக ரசிக்க முடிந்தது. ஆனால், அவரது காமெடி நமக்கு பிடிக்குமா என்று தெரியாததால் பார்க்கவில்லை. 36 வயதினிலே படத்திற்கு ரொம்ப நாள் முன்பே How Old Are You? பார்த்து விட்டேன். முடிந்தால், மனைவியைக் கூட்டிக் கொண்டு போய் பார்க்கலாம் என்றுள்ளேன்.

சமீப காலங்களில் எல்லா படங்களும் நன்றாக உள்ளது, ஓரளவு ஓடுகிறது என்று படிக்கும்போது தமிழ் சினிமா பிழைத்து விடும் போல உள்ளது. கண்மணி - காஞ்சனா இரண்டுமே நல்ல வெற்றி, வை ராஜா வை - உத்தம வில்லன் இரண்டுமே சுமாரான வெற்றி, இந்தியா பாகிஸ்தான், புறம்போக்கு, 36 வயதினிலே, இவை யாவும் நன்றாக உள்ளன என்ற மக்கள் கருத்து. எந்த படமும் மொக்கை, ஊத்திக்கொண்டது எனக் கேட்கவில்லை. எனவே, தமிழ் சினிமா நல்ல திசையில் பயணிக்கிறது என நினைக்கிறேன். இதே போல 'மாஸ்' படமும் தொடர்ந்தால் நல்லது.

சொல்ல மறந்து விட்டேனே. அருள்நிதியின் 'டிமாண்டி காலனி' படத்திற்கும் காத்திருக்கிறேன். ஏனென்றால், சென்னையின் திகில் இடங்கள் பற்றி ஏற்கனவே தெரியும், அதே போல ஒரு இடம் பயமுறுத்துவது போல இருக்கும் என்றால், நான்கு இளைஞர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தோன்றுமோ, அதே போன்ற கதை போல இருக்கும் போல. ஏமாற்றாமல் இருந்தால் சரி.

இவரா இப்படி (அ) இவர் இப்படியா?

நமக்கு முன் பின் தெரியாத, அல்லது பழகி இராத மனிதர் ஒரு தப்பான ஆள் என அப்போது நாம் நினைப்போம்?

1. அவரை முதலில் பார்த்தவுடன் நம் மனதில் தோன்றும் எண்ணம். ஆள் கருப்பாக, குண்டாக, பரட்டை தலை போல, லுங்கி அல்லது கசங்கிய உடை என்று இருந்தால், நம்மையும் அறியாமல் "மோசமான ஆளா இருப்பான் போல" என்று தோன்றும். 

2. அவர் பற்றிய செவி வழி தகவல்கள் அல்லது, நமக்கு தெரிந்த யாரோ ஒருவர் சொல்லும் எதிர்மறைக் கருத்துகள்.

3. இதுவே அவர் ஒரு பிரபலமாக இருப்பின், நமக்கு பிடித்தால் சரி, பிடிக்கவில்லை எனில், அவரைப் பற்றிய எதிர் மறையான செய்தி எதில் வந்தாலும், உடனே "ஓ அப்படியா" என நாமே இன்னும் சில கற்பனைகளை சேர்த்துக் கொள்வோம்.


விஜயகாந்த்: பொதுவாக இவரைப் பற்றி 'படித்தவர்கள்' யாரும் ஒழுங்காக சொல்வதே இல்லை. என்னைப் பொருத்தவரை இவர் ஒரு அப்பாவி. விவரம் தெரிந்தவர்கள் இவரை நன்கு பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். 'பங்காளி' என்ற சத்தியராஜ் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் அவரை மதுவுக்கு அடிமையாக்கி, தனது சொல்படி ஆட்டி வைத்துக் கொண்டிருப்பார்கள். இவரும் அதே போலத்தான்.

பழைய படங்களில், அதாவது 80களில், 'சூப்பர் டைட்டில்ஸ் - கரிசல் ராஜா' என்று வரும் பார்த்திருப்பீர்களா என்று தெரியாது. அவரின் பேட்டி ஒரு முறை பல ஆண்டுகளுக்கு முன், குமுதத்திலோ, விகடனிலோ வந்திருந்தது. அதில் அவர் சொன்ன ஒரு விஷயம் இன்னும் என் மனதில் உள்ளது. "எனக்கு எல்லா நடிகர்களையும் தெரியும். என் கல்யாணத்திற்கு எல்லாரையும் பாத்து பத்திரிகை கொடுத்திருந்தேன். ஆனா, என்னையும் ஒரு சக தொழிலாளியா மதிச்சு, என் கல்யாணத்துக்கு வந்த ஒரே ஆள், விஜயகாந்த் மட்டும்தான்" என்று சொல்லி இருந்தார்.

அதே போல, அவரது கட்சியில் ஜெயித்து, சட்டமன்ற உறுப்பினர் ஆகி, இப்போது அம்மா பக்கம் தாவி உள்ள அருண் பாண்டியன் அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னது. "நான் கஷ்டப்பட்ட காலத்துல எனக்கு உதவி செஞ்சது விஜயகாந்த் தான். அப்புறம் படத்துல நடிக்க ஆரம்பிச்ச பின்னாடி, நான் ஒரு முடிவு செஞ்சேன். என்னோட நூறாவது படம் நானே இயக்கணும், அதுல கண்டிப்பா விஜயகாந்த் நடிக்கணும். அதுக்காக காத்திருந்து நான் இந்தப் படத்த எடுக்கிறேன்" என்று தனது நூறாவது படமான 'தேவன்' பட வெளியீட்டின்போது கூறினார்.

இனி நான் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும் மக்களுக்குத் தெரியும். இருந்தாலும், விஜயகாந்த் தனக்கு முக்கிய திருப்பு முனையாக அமைந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் இயக்குனர் சந்திரசேகர், தனது மகன் விஜயை தமிழ் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்க கஷ்டப்பட்டபோது, விஜயுடன் கவுரவ தோற்றத்தில், சந்திரசேகர் இயக்கத்தில் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்தார். அதே போல சூர்யாவுக்காக 'பெரியண்ணா' படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்தார். நடிகர் சங்க தலைவராக இருந்தபோது, சிங்கப்பூர் மலேசியாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, நடிகர் சங்க கடனை அடைத்தார். காவல் துறையினருக்கு ஒரு மதிப்பை தன் படங்கள் மூலம் அளித்தார். அதே போல, முடிந்தவரை, சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நடித்தார். தனது அலுவலகத்தில் எப்போதும் அன்னதானம் அளிப்பார்.

கொஞ்சம் சுயமாக யோசித்து, சொந்தமாக முடிவுகள் எடுப்பார், சொந்தக்காரர்களை விட்டுவிட்டு வேறு சிறந்த ஆட்களை தன்னை சுற்றி வைத்துக் கொள்வார் என்றால், என் ஓட்டு இவருக்குத்தான். ஆனால், நடக்குமா எனபது சந்தேகம்தான்.

ஒலகப்படம்:

கல்லூரி வந்து சேரும் வரை, தமிழ்ப்படங்களைத் தவிர வேறு எதுவும் பார்த்ததில்லை. ஆங்கிலப் படம் என்றாலே 'ச்சீ' என்று எல்லார் முன்னாலும் சொல்லி விட்டு, பின் சத்தம் இல்லாமலும், யாரும் இல்லாமலும் பார்த்தே பழக்கம். ஜாக்கிசானைத் தவிர வேறு எந்த வெளிநாட்டு நடிகரையும் தெரியாது. கல்லூரி வந்த பிறகுதான் ஓரளவு ஆங்கிலப் படங்களும், பிற திராவிட மற்றும் ஹிந்தி மொழிப் படங்கள் பார்க்க ஆரம்பித்தோம். அதுவும், ஏதாவது ஒரு படம் வேறு மொழியில் இருந்து ரீமேக் செய்யப்பட்டால், அதைப் பார்த்து விட்டு, பின் அந்த மொழியிலும் பார்ப்போம். போக போக, முதலில் அந்த மூலப்படத்தை பார்த்து விட்டு, தேவைப்பட்டால் நகலைப் பார்க்க ஆரம்பித்தோம்.

அதன் பின், பதிவுலகம் வந்த பின் பல பதிவர்கள் மூலமாக பல்வேறு மொழிப் படங்களைப் பற்றி தெரிந்தாலும், எல்லாமே பார்க்க மாட்டேன். துப்பறிவது, மர்மம், பேய், சண்டைப் படங்களையே பொதுவாக தேர்வு பார்ப்பேன். அவ்வப்போது காமெடி. அவ்வப்போது சில 'ஒலக படங்களைப்' பார்த்தாலும் அவை எனக்கு ஏனோ அவ்வளவாக பிடிக்கவில்லை. எந்த படமாக இருப்பினும், அதில் பல காட்சிகளை நம் அனுமானத்திற்கு விட்டு விடுவது ஏன் என எனக்குப் புரியவில்லை. எல்லாப் படங்களிலும் லாஜிக் நிறைய இடித்தது. ஆனாலும், நம்மை அதைப்பற்றி யோசிக்க விடாமல், "ஒரு வேளை இப்படித்தான் இருக்குமோ, இல்ல அப்படி இருக்குமோ" என்று வேறு வகையில் நம் கவனத்தை திருப்பி விடுகிறார்கள்.

விஸ்வரூபம், உத்தமவில்லன் படங்களும் கொஞ்சம் இப்படித்தான் சில விஷயங்களை நம் அனுமானத்திற்கு விட்டிருந்தன. கமல் ரசிகன் என்று சொல்லிக் கொல்லும் (சரியாகத்தான் டைப்பி உள்ளேன்) எனக்கே அது பிடிக்கவில்லை. அப்புறம் எப்படி இந்த உலகப் படங்களை நான் ரசிப்பது.

அதற்கும் வழி உள்ளது. நிறைய நேரம் இருக்க வேண்டும், தனியாக இருக்க வேண்டும். ஒரே படத்தை குறைந்த பட்சம் இரண்டு முறை பார்ப்பதற்கு பொறுமை வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியம் "யார் யாரெல்லாம் உத்தமர்களோ, அவர்களுக்கு மட்டுமே இந்தப் படம் புரியும்" என்ற மனநிலை. கீழே வரும் காணொளியில் 2:01:24ல் இருந்து பார்க்கவும். அதன் பின் "நேக்கு புரிஞ்சிடுத்து" என்று சொல்லுவீர்கள்.


இவையெல்லாம் இருந்தாலும், "ஒரு லக்கினத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவனாக" இருக்க வேண்டும். ஒலகப்பட விமர்சகராகப் போகும் எனக்கு, நானே இந்த காணொளியை சமர்ப்பித்துக் கொள்கிறேன்.


ஆமாங்க. நானும், இனி ஏதாவது ஒலகப்படம் பாத்து விமர்சனம் எழுதலாம்னு இருக்கேன். ஏன்னா, ஏற்கனவே நிறைய பேர், நெறைய எழுதி இருக்காங்க. அங்கங்கே கொஞ்சம் எடுத்து, பட்டி, டிங்கரிங் எல்லாம் பாத்து போட்டா, ஒரு பதிவு சூடா தயார்.

Friday, May 8, 2015

அம்மா!


அம்மா. உலகத்தில் 99 சதவிகித பேருக்கு பிடித்த (அல்லது பிடிக்கும் என்று சொல்கின்ற) பெண். நான் ஒரே மகன்தான் என்றாலும், செல்லம் எல்லாம் கிடையாது. பத்தாம் வகுப்பு படிக்கும்போது கூட துரத்தி துரத்தி அடித்துள்ளார்கள். நான் பொய் சொல்லவில்லை. எதற்காக, எதுவாக இருந்தாலும் ஓரளவுதானே? அளவிற்கு மீறினால் அடிதான்.

சிறு வயதிலேயே புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து விட்டேன். அதுவும் குறிப்பாக சாப்பிடும்போது படித்துக் கொண்டே சாப்பிடுவேன். ஓரிரு முறை "சாப்டுட்டு படிடா" என்பார்கள். கேட்கவில்லை என்றால், முதுகு பழுத்து விடும். அதே போல தேர்வு நேரங்களில் "மத்த நாள் மாதிரி இல்ல. பரிட்ச வருது. இப்ப பாடத்த படி. லீவுல கத புக்க படிக்கலாம்" என்பார். கொஞ்ச நேரம் மட்டும் படிக்கறேன் என்று ஆரம்பிப்பேன். அப்புறம், ம்ம்ம் (அழுவுறேங்க).

அந்த காலத்து SSLC. எனவே நான் ஐந்தாவது படிக்கும் வரை அவரே சொல்லித் தந்தார். நானும் டை கட்டி ஸூ போட்டுக் கொண்டு LKG போக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், பக்கத்தில் அப்படி பள்ளியும் இல்லை, பணமும் இல்லை. எனவே 6 வயதில் காது தொட முடிந்தவுடன் (புரியும் என்று நினைக்கிறேன்) ஒன்றாம் வகுப்புதான் சேர்க்க முடியும். அப்போதெல்லாம் மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கிலமே வரும். ஆனால், எனக்கு வீட்டிலேயே ABCD, அ ஆ இ ஈ எல்லாம் சொல்லிக் கொடுத்தார்.

பத்தடி எடுத்து வைத்தால் பள்ளிக்கூடம். தலைமை ஆசிரியரும் சொந்தக்காரர்தான். எனவே, சும்மாவே போய் கொஞ்ச நாள் பள்ளியில் இருந்தேன். ஆறாம் வகுப்பு பக்கத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பள்ளியில்தான் அனைவரும் சேருவார்கள். சைக்கிள் தேவை. ஆனால், என்னையோ 5 கிலோ மீட்டர் தள்ளி உள்ள பள்ளியில் சேர்த்தார். எங்க ஊரில் இருந்து யாரும் அங்கு சேர மாட்டார்கள். பேருந்தில்தான் போய் வர வேண்டும். சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்று சொல்லி விட்டார். இல்லையென்றால் நாமக்கல்லில் இருந்து அந்தப் பள்ளிக்கு எங்கள் ஊர் வழியாகத்தான் போக வேண்டும். எனவே, நிறைய ஆசிரியர்கள் அப்படித்தான் போவார்கள். அவர்களுடன் போய் வரலாம். அதை விட முக்கியம். அப்போது இருந்த தலைமை ஆசிரியர் சொந்தக்காரர். எனக்கோ எரிச்சல்.

அப்போது எட்டாவது வரையே இலவச பாஸ். "சரி அப்புறம் சைக்கிள் வாங்கித்தானே ஆகணும்" என்று விட்டு விட்டேன். என் நேரம், நான் எட்டாவது வரும்போது கருணாநிதி பனிரெண்டாம் வகுப்பு வரை இலவச பாஸ் என்று சொல்லி விட்டார். எப்போதும் மற்றவர்களிடம் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும், அதாவது தனித்துத் தெரிய வேண்டும் என்று சொல்லுவார். அது நல்ல விதமாக இருக்க வேண்டும், பைத்தியகாரத்தனமாக அல்ல. ஏனென்றால் என்னை அங்கெ சேர்த்த வேண்டாம் என்று எல்லோரும் சொன்னார்கள். "ஊர்ல எல்லாப் பசங்களும் இங்கதான் போறாங்க. அவங்களோட ஒண்ணா போயிட்டு வரலாம், அத விட்டுட்டு, இப்படி தனியா போவனுமா" என்றார்கள். 

தேர்வுகளில் மிக கடினமான கேள்விகள், யாரும் பொதுவாக எழுதாத கேள்விகளையே எழுத சொல்லுவார். ஆசிரியர்கள் எல்லாம் திட்டுவார்கள். "நல்ல கையெழுத்து. அதனால் எல்லோரும் எழுதுற கேள்விக்கு பதில் எழுதுனா, ஒரு ரெண்டு வரி மட்டும் படிச்சிட்டு மார்க் போட்டுடுவாங்க. வேற கேள்வி எழுதுனா, அத படிச்சு, தப்பு எதுவும் இருந்தா மார்க் கொறஞ்சு போயிரும்" என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். என் அம்மாவோ, "மார்க் எல்லாம் வரும். நீ எழுது" என்பார். அதை விட முக்கியமாக அவர் சதவிகிதத்தை (percentage) விட சதமானமே (percentile) முக்கியம் என்றார். அதாவது, நான் 10 மதிப்பெண்களுக்கு மட்டும் எழுதினால் போதும், ஆனால், அந்த 10 மதிப்பெண்களை முழுதாக வாங்க வேண்டும். எனவே, தெரியவில்லை என்றல் ஏனோ தானோ என்றெல்லாம் எதையும் எழுதாதே, ஒழுங்காக தெரிந்ததை மட்டும் எழுது என்றுதான் சொல்வார்.

எனக்கு கணக்கு பிடிக்கும். அதற்கு அவர்தான் தூண்டுகோல். சிறு வயதில் ஊரில் உள்ள வயதான கிழவிகளிடம் கதைப்பாட்டு பாடச் சொல்லி என்னை விளக்கம் கேட்பார். "மேல கொஞ்சம் குருவி, கீழ கொஞ்சம் கதிரு, கதிரொக்குரு குருவி ஒக்காந்தா, ஒரு குருவிக்கு எடம் இல்ல. கதிருக்கு ரெண்டு குருவி ஒக்காந்தா, ஒரு கதிரு மிச்சம்" என்பது ஒரு புதிர். இது என்னிடம் கேட்கப்பட்டபோது நான் மூன்றாம் வகுப்பு படித்தேன். (இப்போதெல்லாம் இதை மூன்று வயதிலேயே சொல்லி விடுகிறார்கள்). அது மட்டுமில்லாமல், நான் புத்தகம் படிப்பதை அவர் தடுக்கவில்லை.

பத்தாம் வகுப்பு வந்தவுடன், கொஞ்சம் பயத்தில் "நல்லா படிக்கணும், இதுல விட்டா அவ்வளவுதான். எப்படியாவது ஸ்கூல் பர்ஸ்ட் வந்துடு, காசு கொடுத்து தினத்தந்தில வர வச்சுறலாம்" என்றெல்லாம் சொன்னார். நான் அவருக்கு அந்த செலவை வைக்கவில்லை. பத்தாம் வகுப்பிற்குப் பின், அவர் எல்லாமே என்னையே முடிவு எடுக்க சொல்லி விட்டார். அதன் பின், இன்று வரை, வீட்டில் எது செய்தாலும், என்னைக் கேட்டு விட்டுதான் செய்வார். நான் அவரைக் கேட்காமல் செய்தாலும் என்னை எதுவும் அவர் கேட்பதில்லை.

கல்லூரியில் சேர்ந்தால் பணம் அதிகம் தேவைப்படும் என்று சிங்கப்பூரில் தெரிந்த வீட்டிற்கு வேலைக்காக சென்றார். உண்மையில் நான் அப்போது வருத்தப்படவே இல்லை. "அப்பா, இனி நம்மள படி படின்னு தொந்தரவு செய்ய மாட்டாங்க" என்றுதான் எண்ணினேன். அங்கே அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்று பின்னால் உணர்ந்தேன். ஊரில், எப்போதும் அரட்டை அடித்துக்கொண்டு சுற்றிலும் தெரிந்தவர்களோடு இருந்து விட்டு, திடீரென யாரோ ஒருவர் வீட்டில், தனியாக, எங்கேயும் வெளியே போகாமல் இருக்கும் கஷ்டம் எனக்கும் சென்னை வரும்போதுதான் புரிந்தது.

அவரது திட்டமிடல் தெளிவாக இருக்கும். என்னிடம் அவர் சொன்னது "நீ காலேஜ் முடிக்கிற நாலு வருஷத்துக்கும் உனக்கு என்னென தேவையோ எல்லாமே வந்துடும். அதுக்கப்புறம் நீ சம்பாதிச்சு எங்களுக்கு கொடுக்கணும்னு அவசியம் இல்ல. உன்ன நீ பாத்துக்கிற மாதிரி இருந்துக்கோ" என்றார். இன்று வரை என்னுடைய சம்பளத்தை எதிர் பார்த்து அவர் இல்லை. தேவையில்லாமல் எதுவுமே வாங்கவில்லை. வீட்டில் டிவியே நான் வேலைக்கு போக ஆரம்பித்த பின்தான் வாங்கினோம். அதுவரை வீட்டில் சைக்கிள் கூட இல்லை. என் தாத்தாவின் பழைய சைக்கிள்தான்.

நான் சம்பாதிக்க ஆரம்பித்து கொஞ்சம் கன்னாபின்னாவென்று செலவு செய்ய ஆரம்பித்தவுடனே (புது அலை பேசி, மடிக்கணினி, ஐ-பாட்) உஷாராகி, மாதா மாதம் என்னிடம் இருந்த பணம் வாங்கி என் திருமணத்திற்கு தங்கம் வாங்கினார். அவரே சேமிக்கவும் ஆரம்பித்தார். அவருடைய ஆசை என்னவென்றால் எப்போதும் கடன் மட்டும் இருக்கக்கூடாது. எனவேதான் எதுவாக இருந்தாலும் முடிந்தவரை அது தேவையா என பார்த்து வாங்க வேண்டும் என்பார். அதனால்தான் கார் கூட வேண்டாம் என்றார். இந்த வீட்டுக் கடனைக் கூட எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடைக்க வேண்டும் என்பதுதான் அவர் ஆசை. இன்னும் கூட அவருக்கு என் சம்பளம் எவ்வளவு என தெரியாது, ஆனால் யாரிடம் எவ்வளவு கடன் வாங்கினேன், எப்படி கட்டிக்கொண்டு இருக்கிறேன், வங்கி வீட்டுக்கடனில் எவ்வளவு மீதி உள்ளது என்பது மட்டும் விசாரித்துக் கொண்டே இருப்பார்.

இதுவரை அவர் என்னிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று எதுவுமே கேட்டதில்லை. எனக்கு முதல் மாத சம்பளம் மட்டும் கையில் பணமாக கொடுத்தார்கள். அதை அப்படியே கொடுத்து விட்டேன். அதன் பின் ஒரு முறை ஆனந்த அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று ஒரு புடவை எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தேன். "என்கிட்டே காசு கொடு, எனக்கு என்ன வேணுமோ நான் எடுத்துக்கிறேன்" என்று அதிர்ச்சி அளித்தார். (இதே போல, இன்னும் கேவலமாக என் மனைவியிடமும் திட்டு வாங்கினேன்.அது வேறு கதை).

அவருக்கு சிறு வயதில் இருந்தே புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற ஆசை என நான் நினைக்கிறேன். எந்தக் கல்யாணத்திற்கு போனாலும் என்னை அப்படியாவது, முடிந்தவரு அங்குள்ள தெரிந்த செல்வாக்கான சொந்தக்காரர் யாரையாவது பிடித்து என்னை ஒரு புகைப்படமாவது எடுக்க எடுக்க வைத்து விடுவார். அப்படியாகவே என்னுடைய ஓரிரு சிறு வயது படங்கள் வீட்டில் உள்ளன. சம்பாதிக்க ஆரம்பித்த உடனே அவர் வாங்க வேண்டும் என்று என்னிடம் சொன்ன ஒரே விஷயம் கேமராதான். இப்போதும் கூட என் மகள் என்ன செய்தாலும் உடனே என்னை புகைப்படம் எடுக்க சொல்லுவார். ஆனால் அவர் இதுவரை ஒரு புகைப்படமும் எடுத்ததில்லை. நான் கேமரா கொடுத்தபோது கூட "எனக்கெதுக்கு, நீ எடு" என்றார்.

அவருடன் போனில் பேசுவது வாரம் ஒரு முறைதான். அவரும் தேவை இல்லாமல் எல்லாம் பேசவும் மாட்டார். கல்லூரிக் காலங்களில், வெளியில் பூத்தில் இருந்து போன் செய்ய வேண்டும், அதுவும் ஊரில் போன் கிடையாது. பக்கத்துக்கு வீட்டிற்கு போன் செய்து, சென்று கூட்டி வர வேண்டும். எனவே, தேவை இல்லாமல் போன் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அது இன்று வரை தொடர்கிறது.

நண்பர்கள் அனைவரும் "ம் சாப்டுட்டேன், ஆபிஸ் கெளம்பறேன். வந்துட்டேன், தூங்கப் போறேன், சரிம்மா, பாத்துகிறேம்மா" என்றெல்லாம் பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். திருமணம் நிச்சயம் ஆனவுடன், "ஏண்டா, ஆளுக்கு உன் ஆளுக்கு மட்டும் அர மணி நேரத்துக்கு ஒரு வாட்டி அப்டேட் கொடுப்ப. உங்க அம்மாகிட்ட வாரத்துக்கு ஒரு வாட்டி, ரெண்டு நிமிஷம் மட்டும் பேசுவியா" என்பார்கள். என் அம்மாவிற்கும் அது தெரியும். ஆனால், நானோ, என் அம்மாவோ இதுவரை அதைப் பற்றி கவலைப்பட்டதேயில்லை. ஆனால், சென்னைக்கோ அல்லது தூரமாக வேறு எங்கு சென்றாலும், சென்றவுடன் மட்டும் "நான் வந்து சேந்துட்டேன்" என்று மட்டும் சொல்லி விட வேண்டும். அது கல்லூரி முதல் இன்று வரை தொடர்கிறது.

இந்தப் பதிவு கூட அன்னையர் தினத்திற்காக இல்லை. இதே வாரம் வந்த என் அம்மாவின் (சான்றிதழில் உள்ள) பிறந்த நாளிற்காக. அவருக்கும் உண்மையான பிறந்த நாள் தெரியாது. எனவேதான் எனக்கு தேதி எல்லாம் மாத்தி எழுத வேண்டாம். சரியான தேதியே சான்றிதழ் எல்லாவற்றிலும் இருக்கட்டும் என்று சொல்லி விட்டார்.

என் அத்தையைப் பற்றி பதிவு போட்ட பின், அம்மா பற்றி சொல்ல வேண்டும் அல்லவா? அதுதான் இந்தப் பதிவு. இன்னும் கூட நான் இப்படி பதிவெல்லாம் எழுதுகிறேன், அதையும் கூட சில பேர் படிக்கிறார்கள் என்றெல்லாம் தெரியாது. எனக்கே அவரிடம் சொல்ல வெட்கமாக உள்ளது. அதில் இன்னும் அவரைப் பற்றியும் எழுதியுள்ளேன் என்று அவரிடம் சொன்னால் அவர் இன்னும் எவ்வளவு வெட்கப்படுவாரோ தெரியவில்லை.