Friday, February 20, 2015

என் அத்தை !

இது முந்தைய பதிவின் தொடர்ச்சி. என்னுடைய அனுபவங்களின் பதிவு என்பதால், படிப்பவர்களுக்கு சலிப்பு உண்டாகாமல் இருக்கும் என்று நம்புகிறேன்.

கொங்கு மாவட்டங்களில் உள்ள ஒரு நம்பிக்கை என்னவென்றால், ஆண்:பெண் என்ற குழந்தைகள் விகிதம் 1:3 அல்லது 3:1 என்று இருந்தால், அந்த குடும்பம் உருப்படாமல் போகும். அதே போலவே ஒரு குடும்பத்தில் , என் அப்பாவோடு சேர்த்து இரு அண்ணன்கள், ஒரு தம்பியோடு பிறந்தவர்தான் என் அத்தை.

15 வயது வரை ஒரு வேலை கூட செய்யாமல், சுகமாக பள்ளிக்கு மட்டும் சென்று வந்தவர். வீட்டில் தலை துவட்டக் கூட ஒரு ஆள் என்று சொகுசாக வாழ்ந்தவர். வசதியான குடும்பம். திடீரென தாத்தா இறந்து விட, அனைத்து சொத்துக்களும் கையை விட்டுப் போக, 15 வயதில் மாமா மகனுக்கு வாழ்க்கைப்பட்டு, டெல்லிக்கு சென்றார். அடுத்த வருடமே கையில் ஒரு மகன். எப்படியோ, தட்டித்தடவி, சமாளித்து, சில வருடங்கள் கழித்து சென்னை வந்தனர்.

பாதியில் விட்ட படிப்பை முடித்து விட்டு பட்டப் படிப்பும், பின் ஆசிரியர் பயிற்சி படிப்பும் படித்தார். சில வருடங்கள் கழித்து, சகோதரர்களுக்கு திருமணம் நடந்தது. இன்னொரு மகன் பிறந்தான். ஏற்கனவே 3 சகோதரர்கள், பிறந்த இரண்டுமே ஆண்கள் என்பதால், சகோதரர்களுக்காவது பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டினார். 'ஆர்த்தி' என்ற பெயரும் தயார்.

முதல் அண்ணனுக்கு பையன். சரி, போனால் போகிறது, 'அரவிந்த்' (நானேதான்) என்று பெயர் அவரே எடுத்துத் தந்தார். இரண்டாவது அண்ணனுக்கும் பையன் .பொறுத்துக்கொண்டு 'அஷ்வின்' என்று பெயர் வைத்தார். மொத்தமாக மூன்று அண்ணன்களுக்கும் சேர்த்து நான்கு மருமகன்கள் தான் அவருக்கு வாய்த்தனர். கடைசியில், தனது கணவரின் தங்கைக்கு பிறந்த பெண் குழந்தைக்கு 'ஆர்த்தி' என்று பெயர் வைத்து தன் ஆசையைத் தீர்த்துக் கொண்டார்.

நாங்கள் நாமக்கல்லிலும், அவர் சென்னையிலும் என்றாலும், என்னுடைய வளர்ச்சியை கவனித்துக் கொண்டேதான் இருந்தார். அவர் எப்போதாவதுதான் ஊருக்கு வருவார், அது மட்டுமின்றி அவரின் மகன்களும் என்னை விட பெரியவர்கள், சென்னையில் வளர்பவர்கள் என்பதால் ஊரில் ரொம்ப நாட்கள் இருக்க மாட்டார்கள். எனக்கும் அப்போதெல்லாம் அவரிடம் அவ்வளவு பாசமாக இல்லை. பார்த்தால் கொஞ்ச நேரம் பேசி விட்டு ஓடி விடுவேன், என்றாலும், என் மேல் அவருக்கு கொஞ்சம் பாசம் அதிகம். மூத்த மருமகன் என்பதாலும் இருக்கலாம், அல்லது அடுத்த தலைமுறைகளில் நான் மட்டும் புத்தகம் படிப்பவன் என்பதாலும் இருக்கலாம்.

சொல்ல மறந்து விட்டேனே. அவர் ஆங்கில இலக்கியம் படித்தவர். சிறு வயதிலேயே ஆனந்த விகடன், குமுதம் மட்டுமின்றி கல்கி, சாண்டில்யன், தேவன், அசோகமித்திரன் என்று படித்தவர். ஆங்கில இலக்கியம் படிக்கும்போதே ஷேக்ஸ்பியர், பால் கோகேலோ எல்லாம் படித்தவர். அதே போலவே அவரின் சகோதரர்களும்தான். ஆனால், ஒரு வாரிசு கூட படிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. நானும் ஒன்றும் அவ்வளவு பெரிதாக படிப்பதில்லை. (என்னுடைய படிப்பு ஆர்வத்தை நீங்கள் இந்த ஆரம்பம், இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி பதிவுகளில் தெரிந்து கொள்ளலாம்). ஆனாலும், "இதாவது படிக்கிறானே" என்று சந்தோசப்பட்டவர்.

நன்கு விவரம் அறிந்த பதிமன் பருவங்களில், என் அம்மாவின் தொந்தரவு தாளாமல் அத்தைக்கு கடிதம் எழுத ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள், நிறைய கடிதங்கள் "இதைப்படி, அதைப்பற்றி தெரிந்து கொள்" என்று அன்பாகவும், என்னுடைய ஆர்வத்தைப் புரிந்து கொண்டும் என்ன செய்ய வேண்டும் என்று எழுதுவார். அப்போதுதான் கொஞ்சம் அத்தையின் மேல் பாசம் வந்தது. இன்னமும் அந்தக் கடிதங்கள் என்னிடம் பத்திரமாக உள்ளன.

இந்நிலையில் திடீரெனெ மாமா மாரடைப்பால் காலமானார். சென்னையில் சொந்த வீடு கொஞ்சம் சேமிப்பு என்று இருந்தாலும், இதனால் மிகவும் பாதிக்கப்பட்டார். பணம் இருந்தாலும், ஒரு மாறுதலுக்காகவும், தேவைகளை சமாளிக்கவும் ஆசிரியையாக வேலைக்குப் போனார். கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஆசிரியையாக வேலை பார்த்தார். ஒரு மாணவரைக் கூட அடித்ததோ, கடிந்து பேசியதோ கிடையாது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்தும் அவருடன் நிறைய மாணவர்கள் தொடர்பில் இருந்தது கண்டு நான் வியந்துள்ளேன்.

அதுவரை சென்னைக்கு மிகக் குறைவான முறையே நான் போயிருந்தேன். பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்ததும், சென்னைக்கு அனுப்ப சொல்லி அத்தை கேட்க, என்னை அனுப்பினார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதம் சென்னையில். எனக்காக எல்லாம் பார்த்துப் பார்த்து செய்தார். திரும்பி வந்து மேல்நிலைக்கல்வியில் கொஞ்சம் 'பிசி' ஆகிவிட்டேன். அத்தையின் இரண்டாவது மகனும் (என்னைவிட ஒரு வருடம் மூத்தவர்) +2 என்பதால் கடிதத் தொடர்பும் சற்றே குறைந்து விட்டது.

அதன் பின் சென்னையில் கல்லூரி சேர்ந்தாலும், அவ்வளவாக அங்கே போகவில்லை. தோணவும் இல்லை. அவர்களும் கூப்பிட்டுக் கொண்டே இருந்தார். பேருந்தில் பயணம் செய்து, கொஞ்ச தூரம் நடந்து போக வேண்டும் என்பதால், ஓரிரு முறை மட்டுமே முதல் வருடத்தில் சென்றேன். மூத்த மகனுக்கு அதற்குள் வேலை கிடைக்க, அதன் பொருட்டு இடம் மாறினார்கள். புது இடம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில். நான் குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகில். எனவே அதன் பின் எல்லா வாரமும் செல்ல ஆரம்பித்தேன்.

அதற்குக் காரணம் பாசம் என்று மட்டும் சொல்ல முடியாது. அங்கே இருந்த கணினி , இணையம் இணைப்பு, தொலைகாட்சி மற்றும் புத்தகங்கள். என் நண்பர்கள் அனைவருமே "உண்மைய சொல்லு, உங்க அத்த வீட்டுல பொண்ணு இருக்குதான?" என்று ஓட்டும் அளவிற்கு அடிக்கடி சென்றேன். அத்தை ஆங்கில ஆசிரியை என்பதால் அருகில் உள்ள அனைத்து சொந்தக்காரர்களும் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க இங்கே அனுப்புவார்கள். அவர்களும் ஆர்வத்துடன் வருவார்கள். காரணம் முதலில் அவர்களுக்கு (வீட்டில் அவர்களுக்கு கொடுக்காத, அவர்களுக்கு பிடித்தமானவற்றை) சாப்பிடக் கொடுப்பார். நிறைய விளையாட விடுவார். பாடத்தையும் சொல்லிக்குடுத்து விடுவார்.

நானும் தமிழ் வழிக்கல்வி என்றாலும், தட்டித்தடவி ஆங்கிலம் பேச உதவினார். கல்லூரி இறுதி வருடத்தில் ஒவ்வொரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் தவறும்போதேல்லா "விடு கண்ணு, இத விட பெருசா நமக்கு கண்டிப்பா கெடைக்கும்" என்றெல்லாம் ஆறுதல் அளிப்பார். அதன் பின் வேலை கிடைத்து மைசூருக்கு சென்று விட்டேன். ஒரு வருடம் கழித்துதான் சென்னை வந்தேன். தினமும் ஒரு முறையாவது பேசி விடுவார்.

சென்னை வந்த பின் மீண்டும் விடுமுறைகளில் அங்கேதான். அப்போது அவரது மூத்த மகனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்தனர். பல்வேறு காரணங்களால் தடங்கல்கள். "நீ மட்டும் பொண்ணா பொறந்திருந்தா இவ்ளோ கஷ்டம் எனக்கு வந்திருக்குமா?" என்று செல்லாமாக கோவித்துக் கொண்டார். "மூணு பேர்ல ஒருத்தனாவது லவ் பண்ணுங்கடா" என்று செல்லமாக அலுத்துக் கொண்டார். கடைசியாக கல்யாணமும் நடந்தது.

ஒரு மாமியாராக இல்லாமல், ஒரு அன்பான தாயாக, தனது மகனின் அன்பை இன்னொரு புதிதாக வந்த பெண் பகிர்ந்துக் கொள்ளப் போகிறாள் என்பதால், எல்லாவற்றிற்கும் தயாராகவே இருந்தார். அப்படி எதுவும் நடக்கவில்லை. அதே நேரத்தில் அவரது இளைய மகன் அமெரிக்கா சென்றார். இவரையும் வர வேண்டும் என்று சொல்ல, ஒரு இரண்டு வருடங்கள் காடாறு மாதம் நாடாறு மாதம் என்று ஓட்டினார்.

இந்த நிலையில் எனக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. அந்த சமயம் அவர் இங்கு இல்லை. அவர் திரும்பி வந்த பின்தான் திருமணம் என்பதால் மூன்று மாதங்கள் தள்ளி தேதி வைக்கப்பட்டது. அதுவரை தினமும் இரண்டு முறை போன் செய்து பேசுபவர், அதன் பின் என்னை "எப்போ பிரீயா இருக்கியோ, அப்போ மிஸ்ஸிடு கால் கொடு, நான் பண்றேன்" என்றார். திருமணம் முடிந்த பின் அதிகமாக அங்கு செல்லவில்லை. வீட்டுக்கு போனாலும் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் இருந்து விட்டு உடனே வந்து விடுவோம்.

அதற்குள் சில பல உட்கட்சிப் பூசல்களினால் எங்களுக்குள்ளேயே சில மனஸ்தாபங்கள். அதனால் அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். அதன் பின் மனைவி கர்ப்பமாக இருந்த போது ஊருக்குப் போனதால் நானும் மீண்டும் அடிக்கடி அத்தை வீட்டிற்கு போனேன். ஊரில் ஒரு திருமணம். அதனால் அனைவரும் அங்கே வந்திருந்தனர். அங்கே சிலர் பேசிய பேச்சுக்கள், ஏற்கனவே வீட்டில் இருந்த குழப்பங்கள், திடீரென மகனுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு எல்லாம் அவர் மனதை பாதித்து விட்டன.

சென்னைக்கு வந்த பின் என்னிடம் மட்டும் நடுவில் ஒரு நாள் தூங்கும்போது நெஞ்சு வலித்தது என்றும், யாரிடமும் சொல்லவில்லை என்றும் கூறினார். அதனால் சண்டை போட்டு, ஏற்கனவே சர்க்கரை, ரத்த அழுத்தம் எல்லாம் இருந்ததால், ஒரு முழு உடல் பரிசோதனை செய்யலாம் என்று எல்லாம் புக் பண்ணி வைத்தார்.

வழக்கம் போல ஒரு சனியன்று வீட்டிற்கு போனேன். அன்று இரவு அங்கேயே தங்கி விட்டு, அடுத்த நாள் மாலை வீட்டிற்கு கிளம்பினேன். "இருந்துட்டு காலைல இங்கே இருந்தே ஆபிஸ் போயேன்? நாங்க வெளிய போறோம்." என்றார். நானோ "எனக்கு அங்க கொஞ்சம் வேல இருக்கு" என்று கிளம்பி விட்டேன். வந்து ஒன்றும் பெரிதாக கிழிக்கவில்லை. மனைவியுடன் போனில் கடலை போட்டு விட்டு தூங்கி விட்டேன்.

திடீரென நள்ளிரவு 2 மணிக்கு போன். அத்தை வீட்டுக்கு பக்கத்து வீட்டுகாரர் "அரவிந்த், உடனே கெளம்பி வா, அத்த இறந்துட்டாங்க" என்றார். அவரது கணவரைப் போலவே, அவரது 53ம் வயதில் மாரடைப்பால் காலமானார். எல்லோரும் வந்தார்கள். எல்லாமும் முடிந்தது. அதன் பின் என் அத்தையை நான் மறந்து விட்டேன். இன்னும் சில தினங்களில் மூன்று ஆண்டும் முடியப் போகிறது. என்ன வாழ்க்கடா இது.

தொடரும்..

Monday, February 16, 2015

சினிமா 2015 - 'ஐ' முதல் 'அனேகன்' வரை

மொக் 'ஐ':
 

இந்த சங்கருக்கு (என்னது, அப்படி சொல்லக்கூடாதா? அப்புறம், ஓ சரி சரி) ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? ஊர்ல ஒரே மாவ வச்சி வட, பஜ்ஜி, போண்டா சுடர மாதிரி, ஒரே கதைய வச்சி (நண்பன்/மகள்/தங்கை இறக்க வேண்டும். அதற்கு காரணமான சமுதாய பிரச்சினையைத் தீர்க்க கொலை செய்ய/கொள்ளை அடிக்க வேண்டும்), கொஞ்சம் கொஞ்சம் திரைக்கதைய மாத்தி (உபயம், சுஜாதா) கொஞ்சம் ஒப்பெத்திட்டாறு. அப்புறமா ரஜினிய வச்சி ரெண்டு படம். அப்புறம் என்ன செய்யறது? விஜய்தான் கெடச்சாரு. அவரு முடிய வெட்டவே ஒத்துக்க மாட்டாரே? சரி ஒப்பெத்துவோம்னு சொல்லி 'நண்பன்' ஆயிட்டாரு. அப்புறமா, நம்ம விக்ரம் சிக்குனாறு. அப்ப சந்தோசத்துல 'ஐ'ன்னு ச அடச்சே ஷங்கர் குதிச்சதுல, விக்ரம் 'ஐ' சூப்பர் டைட்டில்னு நெனைக்க, நமக்கு 'ஐ ஐ'ஓன்னு ஆயிடுச்சு.

நம்ம ஹாய் மதன், ஜெயா டிவியில 'அந்நியன்' படம் வரும்போது ஒன்னு சொன்னாரு. 'ஷங்கர் வெளிநாட்டுல இருக்குற மாதிரி வீடியோ ஆல்பம் எடுக்கலாம். கண்டிப்பா நல்லா வரும்' அப்டின்னாரு. அத மறுபடி யாராவது ஷங்கர்கிட்ட சொன்னா பரவால்ல. அதே போல, ரயிலுக்கு, வீட்டுக்கும் கலரடிச்ச நேரத்துல, கொஞ்சம் கதைய நல்லா யோசிச்சிருக்கலாம்னு சொன்னாரு. 'ஐ' பாக்கும்போது எனக்கும் அதே நெனப்புதான். 10 வெளம்பரம், 5 பாட்டு எடுக்க உக்காந்து யோசிச்சீங்களே, இன்னும் கொஞ்சம் திரைக்கதையை யோசிக்கக் கூடாதா?

தாங்கல-ஆம்பள:

சில படங்கள தரவிறக்கம் பண்ணி பாக்கும்போது, "அடடா, இத தியேட்டர்ல போயி பாத்திருக்கலாமே" அப்டீன்னு தோணும். இன்னும் ஒரு சில படங்கள அப்படி பாக்கும்போது, தேவையில்லாம இப்ப நேரத்த வீணடிச்சுட்டோம்னு வருத்தப்படுறதா, இல்ல காசு மிச்சம்னு சந்தோசப்படுறதா அப்டின்னு கொழப்பம் வரும். இது அந்த வகைய சேந்தது. பொதுவாவே சுந்தர் C மேல ஒரு மருவாதி இருந்தது. 'Soul Kitchen' படம் பாத்தப்ப கூட ஒன்னும் தோணல. ஆனா, அப்ப கொடுத்த ஒரு பேட்டிலதான் செம காண்டு. அதுக்கப்புறம் அரண்மனை படத்துல மொத சீனே கடுப்பாயிடுச்சு. ஏன்னு கேக்குறவுங்க 1408ன்னு ஒரு பேய்ப்படம் பாருங்க தெரியும். தம்பி விஷாலு, இப்படியே படம் எடுத்தேன்னா பாக்டரிய இழுத்து மூட வேண்டியதுதான்.

'டர்ர்'லிங்க்:

ஏற்கனவே இதன் மூலமான 'பிரேம கதா சித்திரம்' படத்தையும், அதை வைத்து காப்பியடிக்கப்பட்ட '1 பந்து 4 ரன் 1 விக்கட்' படத்தையும் ஏற்கனவே பார்த்திருந்ததால், அவ்வளவு பெரிய ஈர்ப்பில்லை. ஆனாலும், அதையும் தாண்டி சற்றே கவனத்தை ஈர்த்தது. நகைச்சுவை அளவுக்கு மீறாமல் நன்றாகவே எடுத்திருந்தனர். முதல் பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். கார் திருடுவது, மந்திரியை அடிப்பது எல்லாம் கொஞ்சம் மொக்கை. மற்றபடி, மற்ற இரண்டு படங்களுக்கு, எவ்வளவோ தேவலை.

என்னை அரிந்தால்:

தலைப்பில் எழுத்துப்பிழை எதுவும் இல்லை. சுப்ரமணியபுரம் படத்தில் வருவது போல அறுக்கவில்லை என்றாலும், கொஞ்சம் மொக்கைதான். எப்போதும் போல தமிழ், ஆங்கில கெட்ட வார்த்தை பேசும் நாயகன், விவாகரத்தான நாயகி (ஒரு படத்துல சரி, எல்லாப் படத்துலயுமா?) இறக்கின்ற ஒரு நாயகி, பழி வாங்கல் என 'முடியல'. கொஞ்சம் கோட்டுக்கு இந்தப் பக்கமும் வாங்க நாயரே. ஓ மன்னிக்கணும் மேனன் சார்.

இ'ச்சை':

ஆங்கிலத்திலும்,ஹிந்தியிலும் இப்போதெல்லாம் உயிரோடு உள்ள பெரிய ஆட்களின் வாழ்க்கை வரலாறை எடுக்கிறார்கள். படங்கள் சொதப்பலாக இருந்தாலும், அவர்களை யாரும் கேவலப்படுத்தவில்லை. தமிழில் முன்பொரு காலத்தில் நிறைய வந்தன. தற்போது ராஜசேகரன் மட்டும் பெரியார், பாரதி, ராமானுஜன் என்று இல்லாத சாதனையாளர்கள் பற்றி எடுக்கிறார்.

இந்தப் படம் பற்றி சூர்யா கூறும்போது, ஒருவரின் வளர்ச்சியினால் பாதிக்கப்படும் இன்னொருவரின் சூழ்ச்சிகளே இந்த கதை. அது இசைத்துறை. அவ்வளவுதான். என்றார். எல்லாம் சரிதான். ஆனால், அந்த பெரிய இசையமைப்பாளர் சொல்லும் வார்த்தைகளும் ("நான் துப்பறதுதான் இசை") நடந்து கொள்ளும் விதமும் (முகத்தில் தூக்கி விசிறி அடிப்பது - தளபதி சமயத்தில் நடந்தது என நான் கேள்விப்பட்டுள்ளேன், இந்தப்படம் வருவதற்கு முன்பே), இசைக்கடல், இசை வேந்தன் போன்றவை, சத்யராஜை சரஸ்வதியை கும்பிடுவராகவும், சூர்யா 'வேறு' மதத்தை சேர்ந்தவராக காட்டியதும், இயக்குனர் தன்னுடைய அடுத்த படத்திற்கு (அவமானப்படுத்தப்பட்ட படம் வேறு) இசையமைக்க கூப்பிடுவதும், அது மட்டுமின்றி, பிரகாஷ்ராஜ் நடிக்கவில்லை என்றவுடன் கங்கை அமரனை நடிக்க வைக்க முயற்சி செய்தது எல்லாம் வைத்துப் பார்த்தால், ஒன்று சூர்யாவுக்கு ரஹ்மானை ரொம்பப் பிடித்திருக்க வேண்டும் அல்லது இளையராஜாவால் ரொம்ப அவமானப்பட்டிருக்க வேண்டும் அல்லது இவை இரண்டுமேவாக கூட இருக்கலாம்.

பொதுவாக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான ஆட்களின் எதிராளியை, எதிரியாக நினைத்து அவர்களை திட்டுவதும், கேவலமாக பேசுவதும் பரம்பரை பரம்பரையாக நடப்பதுதான். ஆனால், படமாகவே எடுப்பது இதுதான் முதல் முறை. இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்.

இந்தப் படத்தின் இறுதிக் காட்சியை 'மிகப் பெரிய திருப்பம்' என்று சொல்லுபவர்கள் எல்லாம், இருபது வருடத்திற்கு முந்தைய குமுதத்தில் வந்த ஒரு பக்க கதை, சிறுகதைகளை படிக்க வேண்டுகிறேன். அதெல்லாம் முடியாது என்பவர்கள், சிவாஜி நடித்த 'முதல் தேதி' என்ற படத்தைப் பார்க்கவும்.

உலகத்தில் எல்லோருக்குமே, ஒரு முறையாவது வக்கிரமான எண்ணங்கள் தோன்றும். 99 சதவிகித மக்கள் தைரியமின்றி, அதைக் கற்பனையில் மட்டுமே நடத்தி கொள்வார்கள். வெகு சிலர் அதை செய்து பார்க்க வேண்டுமென்று எண்ணி, கொடூரமான சைக்கோவாக மாறுவார்கள். இன்னும் சில பேர், அதை கலை என்ற பெயரில் படமாக எடுத்து மற்றவர்களுக்கு அந்த எண்ணங்களை அதிகரிக்க செய்வார்கள். நிறைய ஆங்கிலப் படங்கள் இதற்கு உதாரணம். தமிழில் நடுநிசி நாய்கள், பாய்ஸ், மற்றும் சூர்யா படங்கள். இன்னும் நிறைய உள்ளன. நினைவுக்கு வந்தவை இவைதான்.

"ஒரு படத்த படமா பாக்கணும். இப்ப காந்தி படத்தப் பாத்தா நீ என்ன திருந்திருவியா?" என்று கேட்காதீர்கள். எப்போதுமே நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் வேகமாக பரவும். ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு விஷம் விழுவது போலத்தான்.

மற்றவை:

இவை தவிர சென்ற ஆண்டு இறுதியில் வந்த மீகாமன், வெள்ளைக்கார துரை போன்றவற்றை பார்த்தேன். ஒரு முறை பார்க்கலாம். நடு நடுவே புலன் விசாரணை - 2, தொட்டால் தொடரும், தரணி என நிறைய பார்க்கவில்லை. தரணி நன்றாக உள்ளதாக கேள்வி. ஆனாலும் படம் ஓடும் நேரமும் நமது நேரமும் ஒன்றவில்லை. தரவிறக்கமும் செய்ய முடியவில்லை. இன்னமும் அனேகனும் பார்க்கவில்லை. ஓரிரு நாளில் பார்த்த பின், ஏதாவது (B)பிட்டு போடுகிறேன். இல்லையென்றால் நீங்கள் தப்பித்ததாக எண்ணிக் கொள்ளுங்கள்.