Friday, March 31, 2017

அக்கரைச் சீமை திரையினிலே!

ஒன்றுமில்லை. முன்பு எழுதிய பதிவு போலவே பிற மொழி திரைப்படங்கள் பற்றிய பதிவுதான். பேருதான் சும்மா. சரி, பார்ப்போம்.

பிங்க் (Pink) - ஹிந்தி:


"ஒரு பெண் முடியாது என்று சொன்னால், அதன் அர்த்தம் முடியாது என்பதுதான்", இதுவே படத்தின் கரு. ஒரு பெண், தனது நண்பிகளுடன் இரவு வெளியே இருந்தபோது மானபங்கப்படுத்தப்பட்டாள் என்று கேள்விப்பட்டவுடன், "அந்த நேரத்துல பொண்ணுங்க ஏன் வெளிய போனாங்க" என்று என்னும் சராசரி ஆண்தான் நான். என்னதான் வெளியே பெண்ணீயம் பேசினாலும் "நான் ஆம்பளடீ" என்று வீட்டில் கத்தியிருக்கிறேன்.

சரி அத விடுங்க. வழக்கம் போல முழுக்க முழுக்க நீதிமன்றத்தில் நடக்கும் கதை. என்ன நடந்தது, என்பது படம் பார்க்கும் நமக்கும் அவர்கள் பேசுவது மூலம் நாமே அனுமானித்துக் கொள்ள வேண்டியுள்ளது. கொஞ்சம் ஜாலி LLB நினைவுக்கு வந்தாலும், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். அமிதாப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஏன் இது போன்ற படங்கள் தமிழில் வருவதில்லை என்றால், கண்டிப்பாக ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும். நடிப்பாரா, நடித்தாலும் பிளாஷ் பேக்கில் ஒரு சண்டை வேறு வைக்க வேண்டும். எனக்காக இல்லப்பா, ரசிகர்களுக்காக.

தங்கல் யுத்தம் - படத்தின் முன்னோட்டத்திலேயே முழுக்கதையும் வந்து விட்டது. ஆனாலும் 3 மணி நேரம் நம் கவனம் சிதறாமல் பார்க்க வைத்த படம். தனியாக அலசுகிறேன்.

யு - டர்ன் (U-Turn) கன்னடம்:


பொதுவாக இந்த சமூகத்தோடு நான் பொதுவாக இணைந்திருப்பது சாலைப் பயணங்களில்தான். அதைப் பற்றிய ஒரு பதிவின் மூலம்தான் நான் அகில உலக புகழ் வேறு அடைந்தேன். "இதுல என்ன பெருசா நடந்திட போகுது" என்று செய்யும் சில காரியங்கள் ஏற்படுத்தும் விளைவுகள்தான் இந்தப் படம்.

பெங்களூருவில்,ஒரு மேம்பாலத்தில் கொஞ்ச தூரம் போய்த் திரும்ப சங்கடப்பட்டு, நடுவில் வைத்திருக்கும் கல்லை எடுத்து நகர்த்தி விட்டு செல்பவர்கள் திடீரென மரணமடைகிறார்கள். சாலை விதிகளை மீறுவோர் பற்றி ஒரு கட்டுரை எழுத ஒரு பெண் நிருபர் அந்த மேம்பாலத்தை தேர்ந்தெடுக்கிறார். விதிவசத்தால் அவர் பலிகடா ஆகிறார். ஏன், எதனால் என்பதுதான் இந்தப் படம். பொதுவாக ஒரு விபத்து நடந்தால், அடுத்து என்ன நடக்க வேண்டும் என்று நான் நினைத்தேனோ அது இந்தப் படத்தில் நடக்கிறது. கண்டிப்பாக பார்க்கலாம்.

கம்மட்டிப்பாடம் (Kammattipadam) மலையாளம்:


மலையாளத்தின் 'மெட்றாஸ்' திரைப்படம். இதிலும் நாயகனின் நண்பன் கொல்லப்படுகிறான். இறுதியில் வழக்கம் போல தெரிவது, கொன்றவன் எதிரி அல்ல, துரோகி என்பது. ஆனால், இதில் இளம் பருவம் முதல், வாலிபம் மற்றும் வயதானவரை நம்மையும் கூடவே அழைத்து செல்வதுதான் படத்தின் பலம். நண்பியாக இருந்தாலும், சாதி காரணமாக ஒடுக்கப்படுவது, ஆதிக்க சக்தியின் ஆக்கிரமிப்புகள் என பல விஷயங்கள் உள்ளன. சற்று பொறுமையாக பார்க்க வேண்டிய படம்.

ஒழிவுதிவசத்தே களி: படம் என் பொறுமையை மிகவும் சோதித்தது. ஆனால், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்பதை இந்தப் படத்தின் மூலம்தான் தெரிந்து கொண்டேன். இதே சாதி வெறி பற்றிய படம்தான், அடுத்த மராத்திய படம்.

சாய்ராட் (Sairat) மராத்தி:


இளையராஜா இரண்டு மராத்திப் படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்று செய்தி வந்தபோது கூட படம் பார்க்க தோன்றவில்லை. ஆனால், இந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள் இளையராஜாதான் எங்கள் மானசீக குரு என்று பேட்டி கொடுத்த போதுதான், "பார்றா" என்று தோன்றியது. ரொம்ப நாள் கழித்து நல்ல பிரிண்ட் வந்தவுடன்தான் பார்த்தேன்.

"ஆதலால் காதல் செய்வீர்" படம் பார்த்திருந்தால், அதில் கடைசியில் வரும் பாடல், இதிலும் அருமையாக பொருந்தும். படம் சொல்லும் செய்தி, இந்த உலகம் அழிந்தால்தான் அது போன்ற விஷயங்கள் நடக்காமல் இருக்கும். படமும் உங்களுக்கு "காதல்" படத்தை நினைவூட்டும்.

ஆணவக்கொலை, கவுரவக்கொலை என்று என்னென்ன சொன்னாலும் அதன் இன்னொரு பெயர் பொறாமைதான். எப்போதும் நம் உதவி எதிர்பார்க்கும் குழந்தை, நம் உதவி இன்றி ஒரு வேலையை செய்தவுடன் எப்படி உற்சாகப்படுத்துவோம், அதை விட்டு விட்டு அரிவாளா தூக்குவோம். அதையே வளர்ந்த பின் செய்தால் மட்டும் ஏன் வெறுக்கிறோம்.

"அப்பன், ஆத்தா பாத்து கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்களா? எதுக்கு இப்படி அலையனும்" என்று எண்ணினால், மன்னிக்கவும்.

பெல்லி சூப்புலு (Pelli Chooppulu) - தெலுங்கு:


இதுவரை பார்த்த படங்கள் எல்லாமே, சற்று மனதை உலுக்கும் வகை. "கொஞ்சம் ஜாலியா ஏதாவது சொல்லுங்களே" என்றால் இந்தப் படம்தான். "ஆஹா கல்யாணம்" என்று ஒரு படம் வந்ததே, அதே போலத்தான் இதுவும். ஆனாலும் ஓர் 'Feel Good' படம்.

தவறான வீட்டிற்கு பெண் பார்க்க செல்லும் நாயகன், நாயகியுடன் தனியறையில் மாட்டிக்கொள்கிறான். கூடவே ஒரு சிறுவனும் இருப்பதால் 'A' படம் ஆகவில்லை. பின் உண்மை தெரிந்து சென்று விடுகின்றனர். ஆயினும் அவரவர் லட்சியம் என்ன என்பதை அடுத்தவருக்கு உணர்த்தி விடுகின்றனர். அதன் பின் நடப்பதே படம். கண்டிப்பாக பார்க்கலாம்.

"என்னப்பா இவ்ளோ சொன்ன. ஒரு தமிழ் படம் கூட சொல்லலியே" என்பவர்களுக்காக,

பைரவா - பை ரவா அண்ட் டூ உப்புமா.
ரம் - கொடூரம்
யாக்கை - மொக்கை
பகடி ஆட்டம், என்னோடு விளையாடு - ரெண்டுமே போங்காட்டம்
போகன் - ஸ்ஸ், முடியல
சி3 - காது வலி
அதே கண்கள் - இலுப்பைப்பூ.

அவ்வளவுதான்.

Friday, February 24, 2017

அரசியல் மல்லுக்கட்டு!

ஜெயலலிதா இறந்தவுடன் பதிவிட்ட பின்பு. பொங்கல் முடிந்து ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தால், தினமும் நடைபெற்ற போராட்டங்கள், அரசியல் மாற்றங்களால் எங்கே அசிங்கப்பட்டு விடுவோமோ என்று போடாமலே இருந்தேன். நான்கைந்து முறை திருத்தமும் செய்தேன். இப்போது கூட, சற்று சந்தேகத்துடன்தான் பதிவிடுகிறேன். ஆதியோடந்தமாக பார்ப்போம்.

ஜல்லிக்கட்டு போராட்டம்:

"ஜெயலலிதா இருந்திருந்தால், இப்படி ஒரு போராட்டம் நடந்திருக்குமா, போன 2 வருஷம் மட்டும் நடக்கலியே, அப்ப ஏன் போராட்டம் பண்ணல?" என்றெல்லாம் ஒரு சாரார் கேட்டனர். இதற்கு காரணம் எல்லாம் கேட்டால், பெரியார் காலத்தில் இருந்து வர வேண்டும். எளிமையாக சொல்கிறேனே. 

ஏற்கனெவே மத்திய அரசின் மீதிருந்த கோபம்தான், அதுவும் குறிப்பாக தமிழர்களை மதிக்காமல் இருப்பது, ஹிந்தி திணிப்பு, காவிரி விவகாரத்தில் அலட்சியம் போன்றவை நீறு பூத்த நெருப்பாக எல்லோர் மனத்திலும் இருந்ததுதான், போராட்டமாக வெடித்தது. இதை இன்னும் மக்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற எண்ணம்தான், போராட்டத்தில் "மோடி ஒழிக" என்று கத்த வைத்தது. (ஐயோ அது நான் இல்லிங்கோ!).

நமது அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் என்றாலும் சட்டத்தை மீறாதவர்கள்(?). அதாவது பாலத்தைக் கட்டாமலே, கட்டினேன் என்று சொல்ல மாட்டார்கள். மாறாக, கட்டுவதற்கு யார் யாரிடம் எவ்வளவு வாங்க முடியும் என்றுதான் யோசிப்பார்கள். அதனால்தான் காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவை கர்நாடகம் மதிக்காவிட்டாலும் சும்மா இருந்தனர். எந்த பிரச்சினை வந்தாலும், இங்கு யாருக்கும் எதுவும் நேரவில்லை.

ஆனாலும், இப்படி ஒரு போராட்டம் யாருமே எதிர்பாராதது. அதாவது, இது போராட்டமே அல்ல. எல்லோரும் ஒன்றாக குழுமினர். "காக்கைகள்தானே. இரை தீர்ந்தவுடன் கலைந்து விடும், இல்லையா ஒரு வெடி வெடித்தால் போதும்" என்றுதான் எல்லோரும் எண்ணியிருப்பர். அதே போல ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நாட்டிலும் கூடியது, உண்மையிலேயே மகிழ்ச்சி.

"அந்த பிரச்சினைக்கு கூடியிருக்கலாமே, இந்த பிரச்சினைக்கு கூடியிருக்கலாமே" என்றவர்களுக்கு பதில், அவையாவும் அரசாங்கமோ, சட்டமோ தீர்க்க வேண்டியவை. இது நம் உரிமை மறுப்பு, இன்னும் சொல்லப் போனால் நம்மை ஏமாற்றிக் கொண்டிருந்தனர் என்பதுதான் முதல் காரணம். இதே போல தினமும் இறங்கினால் அது நீர்த்துப் போய்விடும். மீண்டும் இது போல மக்கள் போராட்டம் நடக்கக் கூடாது என அரசு எண்ணினால், அது போல பிரச்சினைகளை வளரவிடக்கூடாது. அவ்வளவே.

முன்பு ஒரு பதிவில், இது போன்ற முகப்புத்தக போராட்டங்களைக் கிண்டல் செய்திருந்தேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அதே போல, "இதுவும் கடந்து போகும்" என்ற மனநிலை எல்லா தமிழர்க்கும் பொதுவான குணம். எனவே, அதே போல பொங்கல் வரை எதையாவது சொல்லி ஓட்டி விடலாம் என்று எண்ணியிருப்பர். பொங்கல் முடிந்தவுடன் எப்படியும் அவனவன் வேலையைப் பார்த்துக்கொண்டு போய் விடுவான் என்றுதான் நினைத்திருப்பர்.

ஒரு வேளை, ஜெயலலிதா இருந்து அதை வேறு விதமாக அடக்க முயன்றிருந்தால், வெற்றி கூட பெற்றிருக்கலாம். அதாவது போராட்டத்தின் இறுதியேதான் அப்போது ஆரம்பமாக இருந்திருக்கும்.பின் விளைவுகள் வேறு விதமாக இருந்திருக்கும். நடக்காததைப் பற்றி யோசிக்கத் தேவையில்லை.

சசிகலா:

காஸநோவா 99 என்றொரு நாவல் உண்டு. நான் கூட அதைப் பற்றி எழுதி உள்ளேன். அதே போல, 33 வருடங்கள் காத்திருந்து, சரியான சந்தர்ப்பத்தை நடராஜனும், சசிகலாவும் அடைந்துள்ளனர். ஆனால், அரசியலில் உள்ள அரசியலால் பொன் முட்டையிடும் வாத்தை அறுத்த கதையாகி விட்டது. என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதா ஒரு பொம்மைதான். இருந்தாலும், அதிகாரமே ஒரு போதைதானே. அது இல்லாமல் எப்படி என்று கூட எண்ணியிருக்கலாம். சசிகலா இன்னும் சற்று பொறுத்திருக்கலாம். பார்ப்போம்.

இப்போது குற்றவாளி என்று தீர்ப்பு வந்து விட்டது. ஜெயாவும் குற்றவாளிதான் என்று குதிப்பவர்கள், ஏன் 2001, 2011, 2016ல் அந்த குற்றவாளியைத் தேர்ந்தெடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். 2006-2011ல் திமுக ஆடிய ஆட்டம் அப்படி. கருணாநிதி, அதுவே தனக்கு இறுதி முதலமைச்சர் தருணம் என்று எண்ணினாரோ இல்லையோ, அவரை சார்ந்தோர் அப்படி எண்ணி ஆடிய ஆட்டம் 2016 வரை எதிரொலித்தது. 

இப்போது நமக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை என்பது போல தோன்றுகிறது. நமக்கு யாரும் வேண்டாம் என்று காண்பிக்க வேண்டும். என்ன செய்யலாம். பொறுத்திருப்போம். 2018 பாதிக்குள் நான் தேர்தலை எதிர்பார்க்கிறேன். (122-117=5) 6 பேரின் ஆட்டத்தைக் கலைப்பதெல்லாம் சாதாரணம்.

ஒரு நண்பர் கேட்டார். "எதுக்கு தேவையில்லாம அரசியல் எல்லாம் எழுதற. சும்மா காமெடியா நாள் போஸ்ட் போடு" என்றார். இது எனது ஆதங்கம். அவ்வளவே.

Sunday, January 8, 2017

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

கடைசியாக பணம் பற்றி எழுதிய பின்பு, 50 நாட்கள் கழித்து மீண்டும் எழுதலாம் என்று நினைத்தால் முடியவில்லை. அதற்குள் நிறைய நடந்து விட்டது. ஜெயலலிதா மரணம், புயல், புத்தாண்டு என காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது. 

சொல்ல மறந்து விட்டேனே. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். எழுதுவதற்கு நிறைய விஷயம் இருக்கிறது, ஆசையும் இருக்கிறது. ஆனால், நேரம்தான் இல்லை. சில விஷயங்கள் பற்றி மட்டும் சொல்கிறேன்.

ஜெயலலிதா:

நம்மூரில் எப்போதுமே ஒரு விஷயம் என்னவென்றால், ஒருவர் இறந்து விட்டால், அவரைப் பற்றி நல்ல விஷயங்கள் மட்டுமே பேச வேண்டும். கெட்ட விஷயங்களை மறந்து விட வேண்டும் என்பதுதான். நம் சட்டத்தில் கூட, ஒருவர் இறந்து விட்டால், அவர் பெயர் குற்றப் பத்திரிகையில் இருந்து நீக்கப்படும். இது சரியா என்று விவாதிக்கத் தேவையில்லை.

என்னைப் பொறுத்தவரை, கருணாநிதி, மன்மோகன்சிங், மோடி என யார் வந்தாலும், நான் என் வேலையை பார்த்துக் கொண்டுள்ளேன். இவர்களால் நேரடியாக பாதிக்கப்பட்டதில்லை. ஆனால், ஜெயலலிதா கொண்டு வந்த சட்டங்களால், நேரடியாக ஒரு முறை பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.

1999ல் கருணாநிதி ஒரு சட்டம் கொண்டு வந்தார். கிராமப்புற பள்ளிகளில் 12வது முடிக்கும் மாணவர்களுக்கு, பொறியியல் சேர்க்கையில் 15 சதவிகித இட ஒதுக்கீடு என்று. நான் அப்போதுதான் 10ஆவது முடித்திருந்தேன். ஆனால், நான் படித்த கிராமத்துப் பள்ளியில் அப்போதுதான் மேல்நிலைக்கல்வி ஆரம்பித்ததால், எதற்கு விபரீதம் என என்னை நாமக்கல் பள்ளியில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கே படித்த படிப்பைப் பற்றி ஏற்கனேவே சொல்லி இருக்கிறேன். சரி விடுங்கள்.

2001ல் 12ஆவது முடித்து, நுழைவுத் தேர்வும் முடிந்து விட்டது. தேர்தல் நடந்தது. அம்மா வந்தார்கள். கருணாநிதியைத் தூக்கி உள்ளே போட்டார்கள். அன்றுதான் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒற்றை சாளர முறைக்கான தரவரிசையை அறிவித்தார்கள். இந்த கொடுமையில் அதை ஒரு நாள் கழித்துதான் தெரிந்து கொள்ள முடிந்தது. அம்மா அறிவித்தார், இனி 15 சதவிகித ஒதுக்கீடு 25 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. அதுவும் இந்தக் கல்வியாண்டு முதலே என அறிவித்தார்.

கோயமுத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் கண்டிப்பாக கிடைக்கும் என நம்பிக்கையோடு இருந்த எனக்கு இடி. அதன் பின் எப்படியோ படித்து, இப்படி இருக்கிறேன். சரி இட ஒதுக்கீடு என்ன ஆனது என்கிறீர்களா? வழக்கம் போல சில பேர் வழக்கு போட்டார்கள். நீதிமன்றம், அந்த 25 சதவிகிதத்தை ரத்து செய்தது. அரசு மேல்முறையீடு செய்யவில்லை. அதன் பின் வந்த கருணாநிதி அரசும், அதைக் கண்டு கொள்ளவில்லை.

ஒருவேளை நான் கிராமத்துப் பள்ளியில் படித்து, அந்த இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்திருந்தால், நான் வேறு மாதிரி பேசியிருக்கலாம். அம்மாவிற்கு நன்றி கூட சொல்லியிருக்கலாம். யாருக்குத் தெரியும். இப்போதும் நான் நன்றாகவே உள்ளேன். எங்கள் வீட்டில் அப்போது சொன்னது, "எங்கிருந்தாலும் நல்ல படிச்சா பிரச்சினையே இல்ல". படித்தால்தானே.

அது மட்டுமின்றி, என்னைப் பொறுத்தவரை, கடைசி வரை ஜெயலலிதா ஒரு பொம்மைதான். ஆட்டி வைத்தவர்கள் நிறைய. இப்போது சசிகலா வந்தாலும், அவரும் கைப்பாவைதான். எப்போதும் அமைச்சர்கள் கையில் அதிகாரம் இருந்தாலும், ஆட்சி செய்வது அதிகாரிகள்தான். நடராஜனும் ஒரு அரசு அதிகாரியாக இருந்தவர். ஆட்சியும் கையில் இருந்தால், ஒரு காட்டு காட்டுவார் என்றுதான் தெரியவில்லை. பார்ப்போம்.

வார்த் புயல்:

வார்தா, வரதா, வல்லையா என்றெல்லாம் சொன்னாலும், நான் புயல்டா என்று ஒரு காட்டு காட்டி விட்டது. அந்த திங்கள் காலைதான் ஊரில் இருந்து எல்லோரும் நனைந்து கொண்டே சென்னை வந்தோம். தாமதம் ஆனதால், அலுவலக வண்டி போய் விட்டது. மழை பெய்ததால், எதற்கு என்று வீட்டிலேயே உட்கார்ந்தேன்.

மதியத்திற்கு மேல், ஆடிய ஆட்டத்தில் "தப்பிச்சோண்டா சாமி" என்றுதான் தோன்றியது. அன்று மாலை 6 மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பியவர்கள், விடியற்காலை 3 மணி, 4 மணிக்கெல்லாம் வீட்டிற்கு போய் சேர்ந்திருக்கிறார்கள். புயல் என்றால் வழக்கம் போல ஆந்திரா, ஒரிசா பக்கம் போய் விடும் என்று எண்ணியவர்களுக்கெல்லாம் தண்ணி காட்டி விட்டது. சென்னையில் இத்தனை மரங்கள் இருந்தனவா என எண்ணியவர்களுக்கெல்லாம் யுவகிருஷ்ணா பதில் அளித்துள்ளார்.

பொழுதுபோக்கு:

இபோது தினமும் அலுவலக வண்டியில் காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் பயணம் என்பதால், தினமும் ஒரு படம் பார்த்து விடுகிறேன். வீட்டிலும், இப்போது ஏர்டெல் இணைப்பு வாங்கி, உள்ள டேட்டாவை காலி செய்ய படமாக இறக்கித் தள்ளியாகி விட்டது. கலைக்கு மொழி கிடையாது என்பதால் மானாவாரியாக படம் தரவிறக்கம் செய்தாகி விட்டது.

ஆண்டவன் கட்டளை படத்திற்கு பிறகு, திரையரங்கமும் செல்லவில்லை. அதன் பிறகு வந்த படங்களின் விமர்சனங்கள் எதையும் பார்க்க வேண்டும் என்றே தோன்றவில்லை. விமர்சனங்கள் நன்றாக இருந்ததால், துருவங்கள் 16 படம் திரையரங்கம் சென்று பார்த்தோம். உண்மையிலேயே அருமை.

எப்போதும், யாரோ செய்யும் தவறுகளால், சம்பந்தமே இல்லாத நபர் பாதிக்கப்படுவார். சாலையில் திடீரென ஒருவர் திரும்பும்போது, பின்னால் வருபவர் பதறி நிற்க, அதன் பின்னால் வருபவர் அவர் மேல் இடித்து இருவரும் சண்டை போட்டுக் கொள்வார்கள். உண்மையில் காரணமான நபர் வீட்டில் இருப்பார்.

அதே போல, ஒரு மழை பெய்யும் இரவில் நடக்கும் சில சம்பவங்கள், காவல்துறையின் விசாரணை என 16 மணி நேரத்தில் நடக்கும் கதை. முடிவுறா அந்த வழக்கு, 5 வருடம் கழித்து எப்படி முடித்து வைக்கப்படுகிறது என்பதே கதை. தவற விடக்கூடாத படம். இயக்குனரின் வயது 22 என்பது மிக ஆச்சரியமான விஷயம். தயாரிப்பு அவரது பெற்றோரே என்பது இன்னும் ஆச்சரியம்.

அச்சம் என்பது மடமையடா படம் பற்றி மட்டும் சொல்ல விரும்புகிறேன். உண்மையிலேயே இந்தப் படத்தை படக்குழுவினர் முடித்து விட்டு போட்டுப் பார்த்தார்களா, இல்லை இன்னும் தாமதம் ஆனால் என்ன செய்வது என அப்படியே வெளியிட்டு விட்டார்களா என்றே தெரியவில்லை. ஏன் துரத்துகிறார்கள் என்பதற்கு காரணம் சொல்கிறார்களே, முடியவில்லை. 3 வருடங்களாக சிம்புவைத் தேடுவதைத் தவிர வேறு வேலையே இல்லையா? மேனன் அவ்வளவுதானா? 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' தலைப்பே படத்தின் விமர்சனத்தைக் குறிக்கிறது என விமர்சனம் வராமல் இருந்தால் சரி.

மற்றபடி, பிறமொழிபடங்களில் நிறைய மனதைக் கவர்ந்தன. அவற்றைப் பற்றி தனியாக ஒரு பதிவில் சொல்கிறேன். எல்லாம் நீங்கள் பார்த்தவையாகத்தான் இருக்கும். இருந்தாலும், அண்ணன் ஒரு பதிவு போடணுமே.