Friday, February 24, 2017

அரசியல் மல்லுக்கட்டு!

ஜெயலலிதா இறந்தவுடன் பதிவிட்ட பின்பு. பொங்கல் முடிந்து ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தால், தினமும் நடைபெற்ற போராட்டங்கள், அரசியல் மாற்றங்களால் எங்கே அசிங்கப்பட்டு விடுவோமோ என்று போடாமலே இருந்தேன். நான்கைந்து முறை திருத்தமும் செய்தேன். இப்போது கூட, சற்று சந்தேகத்துடன்தான் பதிவிடுகிறேன். ஆதியோடந்தமாக பார்ப்போம்.

ஜல்லிக்கட்டு போராட்டம்:

"ஜெயலலிதா இருந்திருந்தால், இப்படி ஒரு போராட்டம் நடந்திருக்குமா, போன 2 வருஷம் மட்டும் நடக்கலியே, அப்ப ஏன் போராட்டம் பண்ணல?" என்றெல்லாம் ஒரு சாரார் கேட்டனர். இதற்கு காரணம் எல்லாம் கேட்டால், பெரியார் காலத்தில் இருந்து வர வேண்டும். எளிமையாக சொல்கிறேனே. 

ஏற்கனெவே மத்திய அரசின் மீதிருந்த கோபம்தான், அதுவும் குறிப்பாக தமிழர்களை மதிக்காமல் இருப்பது, ஹிந்தி திணிப்பு, காவிரி விவகாரத்தில் அலட்சியம் போன்றவை நீறு பூத்த நெருப்பாக எல்லோர் மனத்திலும் இருந்ததுதான், போராட்டமாக வெடித்தது. இதை இன்னும் மக்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற எண்ணம்தான், போராட்டத்தில் "மோடி ஒழிக" என்று கத்த வைத்தது. (ஐயோ அது நான் இல்லிங்கோ!).

நமது அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் என்றாலும் சட்டத்தை மீறாதவர்கள்(?). அதாவது பாலத்தைக் கட்டாமலே, கட்டினேன் என்று சொல்ல மாட்டார்கள். மாறாக, கட்டுவதற்கு யார் யாரிடம் எவ்வளவு வாங்க முடியும் என்றுதான் யோசிப்பார்கள். அதனால்தான் காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவை கர்நாடகம் மதிக்காவிட்டாலும் சும்மா இருந்தனர். எந்த பிரச்சினை வந்தாலும், இங்கு யாருக்கும் எதுவும் நேரவில்லை.

ஆனாலும், இப்படி ஒரு போராட்டம் யாருமே எதிர்பாராதது. அதாவது, இது போராட்டமே அல்ல. எல்லோரும் ஒன்றாக குழுமினர். "காக்கைகள்தானே. இரை தீர்ந்தவுடன் கலைந்து விடும், இல்லையா ஒரு வெடி வெடித்தால் போதும்" என்றுதான் எல்லோரும் எண்ணியிருப்பர். அதே போல ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நாட்டிலும் கூடியது, உண்மையிலேயே மகிழ்ச்சி.

"அந்த பிரச்சினைக்கு கூடியிருக்கலாமே, இந்த பிரச்சினைக்கு கூடியிருக்கலாமே" என்றவர்களுக்கு பதில், அவையாவும் அரசாங்கமோ, சட்டமோ தீர்க்க வேண்டியவை. இது நம் உரிமை மறுப்பு, இன்னும் சொல்லப் போனால் நம்மை ஏமாற்றிக் கொண்டிருந்தனர் என்பதுதான் முதல் காரணம். இதே போல தினமும் இறங்கினால் அது நீர்த்துப் போய்விடும். மீண்டும் இது போல மக்கள் போராட்டம் நடக்கக் கூடாது என அரசு எண்ணினால், அது போல பிரச்சினைகளை வளரவிடக்கூடாது. அவ்வளவே.

முன்பு ஒரு பதிவில், இது போன்ற முகப்புத்தக போராட்டங்களைக் கிண்டல் செய்திருந்தேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அதே போல, "இதுவும் கடந்து போகும்" என்ற மனநிலை எல்லா தமிழர்க்கும் பொதுவான குணம். எனவே, அதே போல பொங்கல் வரை எதையாவது சொல்லி ஓட்டி விடலாம் என்று எண்ணியிருப்பர். பொங்கல் முடிந்தவுடன் எப்படியும் அவனவன் வேலையைப் பார்த்துக்கொண்டு போய் விடுவான் என்றுதான் நினைத்திருப்பர்.

ஒரு வேளை, ஜெயலலிதா இருந்து அதை வேறு விதமாக அடக்க முயன்றிருந்தால், வெற்றி கூட பெற்றிருக்கலாம். அதாவது போராட்டத்தின் இறுதியேதான் அப்போது ஆரம்பமாக இருந்திருக்கும்.பின் விளைவுகள் வேறு விதமாக இருந்திருக்கும். நடக்காததைப் பற்றி யோசிக்கத் தேவையில்லை.

சசிகலா:

காஸநோவா 99 என்றொரு நாவல் உண்டு. நான் கூட அதைப் பற்றி எழுதி உள்ளேன். அதே போல, 33 வருடங்கள் காத்திருந்து, சரியான சந்தர்ப்பத்தை நடராஜனும், சசிகலாவும் அடைந்துள்ளனர். ஆனால், அரசியலில் உள்ள அரசியலால் பொன் முட்டையிடும் வாத்தை அறுத்த கதையாகி விட்டது. என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதா ஒரு பொம்மைதான். இருந்தாலும், அதிகாரமே ஒரு போதைதானே. அது இல்லாமல் எப்படி என்று கூட எண்ணியிருக்கலாம். சசிகலா இன்னும் சற்று பொறுத்திருக்கலாம். பார்ப்போம்.

இப்போது குற்றவாளி என்று தீர்ப்பு வந்து விட்டது. ஜெயாவும் குற்றவாளிதான் என்று குதிப்பவர்கள், ஏன் 2001, 2011, 2016ல் அந்த குற்றவாளியைத் தேர்ந்தெடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். 2006-2011ல் திமுக ஆடிய ஆட்டம் அப்படி. கருணாநிதி, அதுவே தனக்கு இறுதி முதலமைச்சர் தருணம் என்று எண்ணினாரோ இல்லையோ, அவரை சார்ந்தோர் அப்படி எண்ணி ஆடிய ஆட்டம் 2016 வரை எதிரொலித்தது. 

இப்போது நமக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை என்பது போல தோன்றுகிறது. நமக்கு யாரும் வேண்டாம் என்று காண்பிக்க வேண்டும். என்ன செய்யலாம். பொறுத்திருப்போம். 2018 பாதிக்குள் நான் தேர்தலை எதிர்பார்க்கிறேன். (122-117=5) 6 பேரின் ஆட்டத்தைக் கலைப்பதெல்லாம் சாதாரணம்.

ஒரு நண்பர் கேட்டார். "எதுக்கு தேவையில்லாம அரசியல் எல்லாம் எழுதற. சும்மா காமெடியா நாள் போஸ்ட் போடு" என்றார். இது எனது ஆதங்கம். அவ்வளவே.