Monday, May 8, 2017

பாஹுபலி 2: ஒரு பிரம்மாண்ட கதைக்கான தேடல்!

படம் 1000 கோடி வசூல் செய்து விட்டதாம். நான் விமர்சனம் செய்யவில்லை. அதனாலதான். செய்திருந்தால், இன்னொரு 150 ரூபாயை கொஞ்சம் முன்னரே வசூலித்திருக்கும். அவ்வளவே.

எல்லோரும் சொல்லும் பொதுவான கருத்து, முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம்தான் நன்றாக இருந்தது என்று. ஆனால், எனக்கோ முதல் பாகம்தான் பிடித்தது. ஏனென்றால், படம் முதல் பாகம் படம் என்ன திசையில் செல்கிறது என்பதை கொஞ்சம் யோசிக்க விடாமல் நிறைய யூகங்களை படம் பார்க்கும் போது எழுப்பியது. முடிந்த பின் ஏமாற்றம் என்பது வேறு விஷயம். குறிப்பாக நாயகன் சாதாரண மனிதர்களை விட மேலான சக்தி படைத்தவன், தெய்வப்பிறவி என்பது போல வந்த காட்சிகள். "தன்னைத்தானே சுமந்து கிட்டு லிங்கம் நடந்து போகுது" போன்ற வரிகள் (எனக்கு) இன்னும் சில வித்தியாசமான எதிர்பார்ப்புகளை உண்டாக்கின. ஆனால், படம் சராசரி தெலுங்கு படம்தான் என்பதை உணர்த்தியது.


இரண்டாம் பாகத்தின் கதை கண்டிப்பாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதன் திரைக்கதை வடிவம்தான் என் ஆர்வத்திற்கு காரணமாக இருந்தது. அதில் எனக்கு சற்றே ஏமாற்றம்தான். என்னாலேயே ஓரளவு யூகிக்க முடிந்தது (?) என்றால் பாருங்களேன். முதல் பாகத்தை அடிக்கடி பார்க்கும் என் மகளுக்கு கூட இரண்டாம் பாகம் பிடிக்கவில்லை. காரணம் முதல் பாகத்தின் பிரம்மாண்டம் இயற்கையை சார்ந்து இருந்தது. காடுகள், அருவி, பனி மலைகள் என. ஆனால், இரண்டாம் பாகம் முழுக்க அரண்மனை, கோட்டை போன்றவைதான். அது கூட காரணமாக இருக்கலாம்.


அதே போல பாத்திரப்படைப்புகளின் சில குழப்பங்கள். முதல் பாகத்தில் எந்த விஷயமாக இருந்தாலும், தீர்க்கமாக யோசித்து முடிவெடுக்கும் ராஜமாதா, இதில் சராசரிப் பெண்ணைப் போல நடந்து கொள்கிறார். மகனின் திருமண விஷயத்தில் சரி. ஆனால், அதி முக்கியமான கட்டத்தில் கூட அவரசரப்பட்டு முடிவெடுப்பது என்பது, என்ன சொல்ல.

அதே போல கட்டப்பா. ராஜமாதாவைக் காப்பாற்ற ராணாவை அடிக்கிறார், ராஜமாதாவைக் கொன்றபின் அடிபணிகிறார். நம்ம ஊர் காவல் துறை போல. அப்போது யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கு வணக்கம் வைத்து ராஜ மரியாதை கொடுப்பது (ராஜமாதாவைக் கொன்ற பின், ராணாவுக்கு அடி பணிவது), அதிகாரம் இல்லை என்றவுடன் ஏறி மிதிப்பது (ராஜமாதா குழந்தை பாகுபலியை மன்னர் என்று அறிவித்த பின், அவரைக் காப்பாற்ற ராணாவை அடிப்பது). பல்வாள்தேவன் புத்திசாலியா அல்லது முரட்டு முட்டாளா என்றும் தெரியவில்லை.

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவும், கணினி வரைகலையும்தான். அட்டகாசம். எனக்கு மிகவும் பிடித்தது "ஒரே ஓர் ஊரில்" பாடல்தான். என்னைப் பொறுத்தவரை இரு படங்களின் கதை, திரைக்கதை இரண்டுமே, ஒரு சராசரி தெலுங்குப் படத்திற்கு என்ன தேவையோ அது மட்டுமே உள்ளது. அனால், அதை உருவாக்கிய விதம்தான், படத்தை கண்டிப்பாக திரையரங்கில் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது.

பிரம்மாண்டம் என்றால், நாயகன் வில்லன் மட்டும் சராசரி மனிதர்களை போல இல்லை. படத்தில் வரும் யானை, எருமை போன்றவை கூட பிரம்மாண்டமாக உள்ளன. ஆனால், அவை தனியாக துருத்துக் கொண்டோ, கிராபிக்ஸ் என்றோ தெரியவில்லை. அங்குதான் ராஜமவுலியின் வெற்றி அடங்கி உள்ளது.

உண்மையில் நான் ஈ படம் தவிர வேறெந்த ராஜமவுலியின் படமும் தமிழில் ஓடியதில்லை. ஏனென்றால் அவையாவும் அக்மார்க் தெலுங்குப் படங்கள். கஜேந்திரா ராஜமவுலியின் படம் என்றால் (அதாவது கதை, திரைக்கதை) என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? யமதொங்கா என்றொரு படம் உண்டு. சத்தியமாக ஒரு சாதாரண தமிழ் ரசிகனால் அதைப் பார்க்க முடியாது.

ஷங்கர் படம் போல தேவையில்லாத பிரம்மாண்டம் எல்லாம் காட்டாமல் அதை படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் காட்டி "அட அந்த ஸீன் (காட்சி) மொக்கையா இருந்தா என்ன, அந்த visual (காட்சியமைப்பு) எப்படி இருந்துச்சு" என்று ரசிக்க வைக்கிறார் ராஜமவுலி.

அதாவது சில படங்கள் எவ்வளவு மோசமான பிரிண்டில் பார்த்தாலும் நன்றாக இருக்கும். 8 தோட்டாக்கள், மாநகரம் போன்றவை. ஆனால், பாஹுபலி, ஒரு திரையரங்கில் மட்டுமே பார்த்து ரசிக்க முடியும். அதனால்தான் முதல் நாளே இணையத்தில் வெளிவந்தாலும், 1000 கோடி வசூலிக்க முடிகிறது. அதாவது ரஹ்மானின் இசை போல. ஒரு கரகர வானொலியில் உங்களால் ரஹ்மானின் பாடலைக் கண்டிப்பாக ரசித்துக் கேட்க முடியாது. அதே போலத்தான் இந்தப்படமும்.

நான் பொதுவாக நல்ல, அல்லது எனக்கு மிகவும் பிடித்த படங்களை தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்வேன். எந்த மொழியாக இருப்பினும் அதன் அளவு 700MB அல்லது அதிக பட்சம் 1GB. ஆனால் பாஹுபலி 1 மட்டும் 5.1 தரத்தில் 5GB ஆக தரவிறக்கம் செய்துள்ளேன். ஒருவேளை இரண்டு பாகங்களும் சேர்த்து DVD ஆக வெளியிட்டால் கண்டிப்பாக வாங்குவேன்.

மொத்தத்தில் கண்களுக்கு மிகச்சிறந்த விருந்தளிக்கும் தரமான படம். கண்டிப்பாக கதை, திரைக்கதையில் இல்லை. ஆனால், இதே சாதனையை முறியடிக்க மீண்டும் ராஜமவுலியால் மட்டுமே முடியும். அழுத்தமான திரைக்கதையும், பிரம்மாண்டத்துடனும். நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.