Tuesday, April 27, 2010

இப்போது பிடித்த பத்து பாடல்கள்!!!

நான் சமீப காலங்களில் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் புதுப் பாடல்கள் பற்றிய சிறு பதிவு... இதில் தர வரிசை எதுவும் கிடையாது. திடீரென எங்கேயோ கேட்டதில் நச்சென்று மனதில் உட்கார்ந்து விட்டது. சில புதுப் பாடல்கள் படம் பார்த்த பின். பாடல்களைக் கேட்டு விட்டு, மக்கள் தங்கள் மனதிற்கு பிடித்தவற்றையும் பின்னூட்டமிடலாம்.

பாடல் : ஜில்லென்று ஒரு கலவரம்
படம் : லீலை
இசை : சதீஷ் சக்ரவர்த்தி

படமும் இன்னும் வரவில்லை, இசையமைப்பாளரும் புதியவர், நாயகன் நாயகியும் தெரியாது. எப்போதோ பண்பலையில் கேட்டது. மனதில் தங்கி விட்டது. தினமும் குறைந்தது ஏழெட்டு முறையாவது கேட்டு விடுவேன். இந்த பாடலின் திரையாக்கத்தைக் காண ஆவலுடன் இருக்கிறேன். நீங்களும் கேட்டு சொல்லுங்களேன்?

பாடல் : மழை பெய்யும்போது
படம் : ரேணிகுண்டா
இசை : கணேஷ் ராகவேந்தரா

இந்த படத்தை முதலில் நண்பர்கள் பார்த்து விட்டு வந்து இந்தப் பாடல் நன்றாக இருந்தது என்றனர். நான் கேட்டு விட்டு அப்படி ஒன்றுமே இல்லையே என்றேன். ஆனால், படம் பார்த்த பின் உண்மையிலேயே எனக்கு மிக மிக பிடித்தது. ஹரீஷ் ராகவேந்த்ராவின் குரலும், நடுவில் அவ்வப்போது வரும் ஹம்மிங்கும் அப்படியே எங்கோ போவது போலவே உள்ளது.

பாடல் : லேசா பறக்குது
படம் : வெண்ணிலா கபடிக் குழு
இசை : செல்வ கணேஷ்

இந்தப் பாடலும் படம் பார்த்த பின் மனதில் நச்சென்று நின்று விட்டது. காட்சியமைப்பும் அருமை. எங்களூர் திருவிழாவை ஞாபகப்படுத்தியது. ஆரம்பத்தில வரும் புல்லாங்குழலும், அதன் பின் வரும் குழுப் பாடலுமே அட்டகாசமாய் இருக்கும்.

பாடல் : அவள் அப்படி ஒன்றும்
படம் : அங்காடி தெரு
இசை : விஜய் ஆண்டனி

இந்தப் பாடலை ஏன் பிடிக்கும் என்று சொல்லத் தெரியவில்லை. ஏனென்றால் நமக்கு மிகவும் பிடித்த பெண்ணிடம் இந்தப் பாடலைப் பாட முடியாது. ஆனாலும் ஏதோ ஒன்று மிகவும் கவர்ந்தது. 'நாக்க முக்க' இசையைப்பாளர் அவ்வப்போது மட்டும் இது போன்ற நல்ல பாடல்களைத் தருகிறார். அவருக்கு இன்னும் நல்ல படங்கள் அமைய வேண்டும்.

பாடல் : The King Arrives
படம் : ஆயிரத்தில் ஒருவன்
இசை : G. V. பிரகாஷ்

முதலில் இந்த இசையைக் கேட்டபோது 'என்ன கொடும ஜி வீ இது?' என்று கேட்க தோன்றியது. படம் பார்க்கும்போதுதான், அதுவும், திரையரங்கில் அதன் அம்சம் புரிந்தது. இசைக்கேற்ற நடனமும் அருமையாக இருந்தது. இந்த இசையை எப்போதுமே ஹெட் போனில் கேட்டால் மட்டுமே நன்றாக உள்ளது.

பாடல் : உன் பேரை சொல்லும்போதே
படம் : அங்காடி தெரு
இசை : G. V. பிரகாஷ்

ஆடத் தெரியாத, ஆடப் பிடிக்காத என் போன்றோருக்கு, கஷ்டப் படாமல் ஆடுவதற்கேற்ற பாடல். படத்திலும் மிகவும் சிரமப்படாமல் ஆடியிருப்பார்கள். 'பீலிங்க்ஸ்' இருப்பவர்களுக்கு இன்னும் பிடிக்கும் என்று சொன்னார்கள். உண்மையா என்று 'பீல்' பண்ணுவோர் சொல்லலாம்.

பாடல் : இது வரை
படம் : கோவா
இசை : யுவன்

இந்தப் பாடலையும் முதலில் கேட்டபோது, என்னடா ஆரம்பமே அபசகுனமாக உள்ளதே என்று தோன்றியது. ஆனால், அஜீஷின் குரல் ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையுமே பின்னுக்குத் தள்ளி விட்டது. அநேகருக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

பாடல் : ஜூபி டூபி (zoobi doobi)
படம் : 3 இடியட்ஸ்
இசை : சாந்தனு மொய்த்ரா

வழக்கம் போல பார்த்தது, பிடித்தது சாதியில்லை. படம் பார்த்தபோது சற்றே 'தமிழ்ப்படம்' சாயல் இந்தப் பாடலில் தெரிந்தது. அத்துடன் மறந்தும் விட்டேன். அலுவலகத்தில் இந்தப் பாடலை ஒருவர் 'டோனாக' வைத்திருந்தார். எங்கேயோ கேட்டது போலவே உள்ளதே என்று போசித்து, யோசித்து கடைசியில் கேட்க ஆரம்பித்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

பாடல் : ஈரம் (Theme of Eeram)
படம் : ஈரம்
இசை : தமன்

'இந்தப் பையனுக்குள்ள ஏதோ இருந்திருக்கு பாரேன்' என்று நினைக்க வைத்த படம். இந்த 'தீமை' விட படத்தில் மற்ற இடங்களில் (குறிப்பாக கொலை நடக்கும்போது வரும் இசை) எனக்கு மிகவும் பிடிக்கும். படத்தின் மற்ற பாடல்களுமே அருமை.

பாடல் : நான் போகிறேன்
படம் : நாணயம்
இசை : ஜேம்ஸ் வசந்தன்

அது என்னவோ தெரியவில்லை. இவரின் இசையமைப்பில் வரும் படங்கள் அனைத்திலும் ஒரு பாடல், குறிப்பாக ஒரு மென்மையான காதல் பாடல் வந்து விடுகிறது. அதுவும் நன்றாகவும் இருக்கிறது. சுப்ரமணியபுரம், பசங்க, நாணயம், காவலர் குடியிருப்பு என எல்லாவற்றிலுமே. மிக அருமையான, மென்மையான பாடல்.

அவ்வளோதாங்க.. என்னடா சம்பந்தமே இல்லாம இவனும் பாட்டப் பத்தி எழுதறானேன்னு யோசிக்கிறீங்களா? பதிவு போட்டோ ரொம்ப நாளாச்சா?? ஒரு வருகைப் பதிவுதான்... அம்புட்டுதேன்.. நீங்களும் வருகைய பதிவு செஞ்சிடுங்கோ!!!