Sunday, May 6, 2012

என்ன வாழ்க்கடா இது??


அடடடா.. ஒரு பதிவு போடலாம்னு நெனச்சு, அத எழுதி பதிவிட படாத பாடு பட வேண்டி இருக்கப்பா.. என்ன எழுதன்னே தெரியலே.. உலகத்தில நெறைய விஷயங்கள் நடக்குது. ஆனா நமக்குத்தான் ஒன்னும் சிக்க மாட்டிங்குது.. கொடுமையடா..மனசுல நெறைய இருக்கு.. அத எழுதனும்னு உக்காந்தா, அந்த எழுத்துதான், வார்த்தை வர மாட்டேங்குது.

தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.. தினசரி நிறைய மரணங்கள் பற்றி படிக்கிறோம்.. பார்க்கிறோம்.. "அவ்வளவுதான்.. போய்ட்டாங்க.. இனிமே அதப்பத்தி பேசி என்ன ஆகப் போவுது.. ஆக வேண்டிய வேலையைப் பாருங்க.. May his/her soul Rest In Piece" என்று எண்ணி விடுகிறோம்.. முதல் முறையாக ஒரு மரணம்.. பிரிவை உணர்த்திய இழப்பு.. எனது அத்தை.. அப்பாவின் தங்கை. மிக சாதாரணமாக ஒரு ஞாயிறு அன்று, "சரி அடுத்த வாரம் பாக்கலாம்" என்று சொல்லி விட்டு வந்து தூங்கியவன், அதிகாலையில் எழுப்பியது அந்த செய்திதான். மாரடைப்பு..

திருமணத்திற்கு பிறகு, உயிர் பயம் மிக மிக அதிகமாகி விட்டது.. நம்மை நம்பி ஒரு உயிர்.. அந்த உயிருக்குள் ஒரு உயிர்.. முன்பெல்லாம், சாலையில் மிக சாதாரணமாக சில்லறை வாறி "அதெல்லாம் ஒண்ணுமில்ல மச்சான்.. டக்குனு போயிரலாமுன்னு நெனச்சேன்" என்றெல்லாம் பீலா விட்டுத் திரிந்த காலம். இப்போது எல்லாம் சாலை விபத்தில் வாலிபர் பலி என்றாலே உடம்பு உதறல் எடுக்கிறது..

அதிகாலை 6 மணிக்கெல்லாம் சிக்னல் போட்டு விடுகின்றனர். அதை யாரும் மதிப்பதுமில்லை. சிக்னல் இல்லையென்றால் கூட, வலது பக்கம் திரும்பும்போது இரு பக்கமும் பார்த்து திரும்புவார்கள். ஆனால், வேகமாக வரும்போது, பச்சை எரிந்தால், வந்த வேகத்தில் திரும்ப வேண்டியது, அந்த பக்கம் இருந்து எவனாவது வந்தால், "நான் நல்லவன்பா" என்ற நினைப்போடு போக வேண்டியதுதான். ஒரு சில நண்பர்களின் மேல் இதனால் எனக்கு கோபம் கூட உண்டு.. சிக்னலை மதிக்காதது, ஆம்புலன்ஸ் போனால், அதன் பின்னாலேயே ஒட்டிக்கொண்டு போக வேண்டியது..

தினமும் எத்தனையோ தவறுகள் உலகில் நடக்கின்றன.. ஊடகங்கள், திரைப்படங்கள் என்று வேறு வேறு பெயர்களில், வேறு வேறு இடங்களில் நிறைய.. 'அந்நியன்' படம் பார்க்கும்போது சிரித்தேன். "இதெல்லாம் ஒரு மேட்டர்னு கொலை செய்யலாமா" என்று. ஆனால், இதையே கீழ்க் கண்ட தினமணி கார்டூனும் நிரூபிக்கிறது.


"மொதல்ல சிக்னல மீறற எல்லரையும் என்கவுண்டர்ல போடுங்க சார். இவனுங்களைவிட பெரிய பயங்கரவாதிகள் நாட்லே யாரும் கிடையாது"


இதையெல்லாம் எப்படி தடுப்பது. யார் யார் தவறு செய்கிறார்கள்? நான் அலுவலகம் செய்வது அசாதாராண நேரம். அந்த நேரங்களில், மஞ்சள் நிற நம்பர் பிளேட்காரர்கள் யாருமே இல்லாத அந்த சாலையில் சிக்னலுக்காக நிற்பதையும் பார்த்திருக்கிறேன். இருக்குமதி செய்யப்பட்ட 'பேன்சி' நம்பர் கொண்ட வண்டிகள் மீறுவதையும் பார்த்திருக்கிறேன். அனைவருக்கும் 'இது நம்மூரு' என்ற எண்ணமா என்று தெரியவில்லை.

இப்போதுதான் விதிகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை/அபராதம் என்றனர். ஆனாலும் ஒன்றும் குறையவில்லை. அதுதான் அணைத்து இடங்களிலும் கேமரா உள்ளதே. வெளிநாடுகளைப் போல, அவ்வப்போது அதைப் பார்த்து அதில் விதிகளை மீறுவோருக்கு நோட்டிஸ் அனுப்பினால் கூட கொஞ்சம் பயம் வருமே. கொஞ்ச நாள் இதை செய்தால் கூட நன்றாக இருக்கும். குறிப்பாக மாநகராட்சி பேருந்து ஓட்டுநர்களுக்கும், அரசு வாகனங்களுக்கும் கூட. இது நடக்க சாத்தியமே இல்லைதான்.


வேளச்சேரியில் இருந்து தரமணி போகும்போது, எதிரில் Wrong sideல் வேகமாக வரும் வண்டியைப் பார்த்து பயந்து ஓரமாக ஒதுங்கும்போதும் சரி. வேளச்சேரி புறவழிச்சாலையில் இருந்து, குருநானக் கல்லூரிக்கு திரும்ப அதிகம் 12 வினாடிகள் கொடுப்பார்கள். அதற்கும் இடம் தராமல், இரு பக்கமும் வண்டி போகும்போது தடுமாறி அந்தப் பக்கம் செல்லும்போதும் வண்டி ஓட்டும் அன்பர்கள் அசிங்கமாக சொல்லுவார்கள் "ஏண்டா பேமானி. பாத்து வர மாட்ட?" அப்போது மட்டும் சற்றே சத்தமாக கத்துவேன். கேட்குமோ என்னவோ தெரியாது.

"நீங்க போய் உலகத்த காப்பாத்துங்க. எனக்கு அவசர வேல எதுவும் இல்ல".


எப்படியாக இருந்தாலும், மக்களுக்கு பயம் வர வேண்டும். எனக்கு உள்ளது. இனி கண்டிப்பாக நான் நல்லவனாக இருப்பேன். அனைவருக்கும் பயம் வர வேண்டுமா? சட்டம் தன் கடமையை முறையாக செய்ய வேண்டும். அல்லது, வாகன ஓட்டிகள் அனைவரும், தங்கள் மனதிற்கு பிடித்தவர்களோடு ஒரு நாள் முழுதும், நீங்கள் எப்போதும் ஓட்டுவதுபோல போய் வாருங்கள். பயம் வரலாம். அப்படியே கொஞ்சம் ஐந்து நொடிகள் பொறுமையும்.