Sunday, April 26, 2020

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

அனைவருக்கும் வணக்கம். வழக்கம் போல சோம்பேறித்தனம்தான். அதுவும் இந்த வீட்டு சிறை ஆரம்பித்த பிறகு, வீட்டம்மாவும், குட்டி இளவரசியும் கூடவே இருப்பதால், "எங்களை விட இதுதான் முக்கியமா". என்று எப்போது எடுத்தாலும் கேள்வி கேட்பதால், இந்த நேரத்தில் கூட பதிவு போட முடியவில்லை. இருந்தாலும், அப்படியெல்லாம் விட முடியாதுல்ல. அதான். 

கொரோனா:

2 மாதங்களுக்கு முன்பு, அலுவலகத்தில் இருந்து "எப்படி முன்னேத்தலாம், முன்னேறலாம்" என்று கிழக்கு கடற்கரை சாலையில் 4 நாட்கள் ரூம் போட்டு யோசித்தோம். அப்போது "ஏதோ இந்த சீனாவுல கொரோனான்னு நோய் வந்துருக்காம். அதனால, அங்க இருந்து யாரும் இங்க வரல. பயப்படாதீங்க. நமக்கு அதனால எதுவும் லாபம் இருக்குமா" என்றெல்லாம் பேசினார்கள். கடைசியாக "நமக்கெல்லாம் வராதுப்பா" என்று சொன்னார்கள். 

எண்ணி ஒரு மண்டலத்தில் (48 நாட்கள்), வீட்டில் உட்கார வைத்து விட்டது. இந்த வீட்டில் இருந்து வேலை செய்வது (WFH - Work From Home) என்பது மிகவும் சந்தோசமான விஷயம் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், இப்போது தங்களின் கருத்தை மாற்றிக்கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன், நான் உட்பட. 

"முன்னாடி கூட, வீட்டுக்கு வந்துட்டா ஏதோ கொஞ்ச நேரம் போன் மட்டும்தான் பேசுவீங்க. இப்ப என்னடான்னா, எப்ப பாத்தாலும், போன், லேப்டாப், என்னைய கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க. வீட்டுல இருந்து வேல பாக்க சொன்னா, எப்ப பாத்தாலும் வேல மட்டும்தானா" என்றெல்லாம் வீட்டில் திட்டு. திட்டுவது வீட்டம்மா இல்லை, குட்டி இளவரசி. அவளை சமாளிப்பது ஒரு பெரிய வேலையாக உள்ளது. அதிலும் நான் பேசுவதையெல்லாம் கேட்டு விட்டு, "இதுதான் உங்க வேலையா" என்று கிண்டல் வேறு. அதை சமாளிப்பதுதான் பெரும் பிரச்சினையாக உள்ளது. 

எங்களுக்கு முதன்மையான பணி வருவது இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் இருந்து. அங்கேயே நிலைமை படு மோசம். எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும், அதை அப்படியே நிறுத்தவும் என்று சொல்லி விட்டார்கள். எனவே கொஞ்சம் வேலை, கொஞ்சம் விளையாட்டு என்று சமாளிக்கிறோம். 

மளிகை, காய்கறிகள் பிரச்சினை இல்லை. அதே போல ரொம்பவெல்லாம் அலையாமல் இருப்பதை வைத்து சமாளித்துக் கொள்கிறோம். நாக்கைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தாலே, இன்னும் 2 மாதம் கூட சமாளிக்கலாம் போல. 

ஒரே பிரச்சினை என்னவென்றால், மக்கள் ஒன்று மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். அல்லது மிகவும் பயப்படுகிறார்கள். கொஞ்ச வருடங்களுக்கு முன், இந்தோனேஷியாவில் பூகம்பம் வந்தது, உடனே நம்மூரில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. நம்மூரில் கூட அந்த அதிர்வு இருந்தது. நம்மாட்கள் என்ன செய்தார்கள். உடனே கும்பல் கும்பலாக கிளம்பி கடற்கரைக்கு போய் விட்டார்கள். அதிலும் ஒரு ஆள், "சார், சுனாமி வருதுன்னு சொன்னாங்க, நானும் குடும்பத்தோடு பாக்கலாம்னு வந்தேன். ஆனா சுனாமி வரல" என்று சோகமாக சொல்கிறார். 

இப்போது கூட தெரிந்த ஆட்கள் எல்லாம் வெளியே சுற்றுகிறார்கள். கேட்டால், யார் யார் வெளியே சுற்றுகிறார்கள் என்று பார்த்தார்களாம். "அவர்களும் உங்களை மாதிரியே வந்திருக்கலாமே" என்றால், "இல்லீங்க, அவங்க வேணும்னே வந்து சுத்துறாங்க" என்கிறார். சரிதான் என்று எண்ணிக்கொண்டேன். 

எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் நிறைய பஞ்சாயத்துகள். "எனக்கு சமைக்க ஆள் வரணும், என் குழந்தைய பாத்துக்க ஆயாவை விடணும், என் மாமா வீடு இங்க பக்கத்துல இருக்கு. நான் அங்கேயும் போவேன், இங்கேயும் வருவேன்" என்றெல்லாம் நிறைய விதமான கோரிக்கைகள். அடப்போங்கய்யா என்றாகி விட்டது. 

அதிலும், இந்த 4 நாட்கள் முழு ஊரடங்கிற்கு, எதற்காக சொன்னார்களோ, அதுவே ஆப்பாகி விட்டது. விளைவுகள் இன்னும் 4 முதல் 14 நாட்களில் தெரியும் என்று நினைக்கிறேன். நானும்தான் வெளியே போய் வாங்கினேன். அந்த எல்லாரும் என்ன செய்யறாங்க அப்படின்னு பாத்த ஆளு. ம்ம். 

திரை விமர்சனம்:

போன பதிவிற்கு பின் திரையரங்கம் எதுவும் செல்லவில்லை. எல்லாமே வீட்டில்தான். தர்பார், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஓ மை கடவுளே என்று எல்லாமே OTTயில்தான். Netflix கூட 4 நண்பர்கள் சேர்ந்து சந்தா கட்டி பயன்படுத்துகிறோம். மாதம் 200 ருபாய் மட்டும்தான். இப்போது ஹாட்ஸ்டார் உடன் டிஸ்னி வேறு வருவதால் மக்களுக்கும் ஓகே. அதில் VIP. sunNXT தேவைப்படும்போது மட்டும். மொத்தத்தில் மாதம் அதிகபட்சம் 400 மட்டுமே ஆகிறது. எப்போதோ DTH எல்லாம் எப்போதோ தூக்கி பரணில் போட்டு விட்டோம். ஆனாலும், எந்த படமும் அவ்வளவாக மனதை ஈர்க்கவில்லை. 

ரமணி vs ரமணி சீசன் 2:

ரொம்ப நாள் முன்பு ரமணி vs ரமணி சீசன் 1 பற்றி எழுதி இருந்தேன். அது ஒளிபரப்படும்போது முழுவதும் பார்த்த நினைவு இருந்தது. மீண்டும் 8 வருடம் முன்பு பார்த்தபோது, அப்போது புதிதாக திருமணம் ஆயிருந்ததால், நன்றாக இருந்தது. சீசன் 2 அப்போது ஏனோ பிடிக்கவில்லை. அது மட்டுமின்றி அது ராஜ் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.


அப்போது நாமக்கல் பள்ளிக்கு சென்று விட்டதால், அவ்வளவாக பார்த்த நினைவும் இல்லை. ஆனால், இப்போது 7 வயது பெண் குழந்தையுடன் அதைப் பார்க்கும்போது, சீசன் 2 தான் ரொம்ப நன்றாக இருக்கிறது. ஏனென்றால், அனுபவம்தான். 

நாகாவின் தொடர்கள் மிக அருமையாக இருக்கும். மர்ம தேசம் தொடர்களில் நடித்தவர்களை அப்படியே வேறு பரிமாணத்தில் இந்த தொடர்களில் காட்டி இருப்பார். சீசன் 1ல், வாசுகி. மர்ம தேசம் தொடரில் கிராமத்துப் பெண்ணாக வந்தவர் இதில் விளம்பர நிறுவனம் நடத்துபவர். சீசன் 2ல், தேவதர்ஷினி. விடாது கருப்பு தொடரில் மருத்துவம் படித்த, நவ நாகரிக பெண், இதில், குடும்ப தலைவி. அப்போது பார்க்கும்போது கூட, குழப்பம் வரவில்லை. 

என்ன, பழைய வேலைக்காரிகள் ஜோக், கீழ்த்தட்டு மக்களை (மட்டும்) கொஞ்சம் கேவலமாக காட்டி இருப்பது என சில குறைகள். இருந்தாலும், எந்த காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருப்பதே வெற்றிதான். இப்போது கவிதாலயா மீண்டும் யூடியூபில் ஏற்றி உள்ளார்கள். பார்த்து ரசியுங்கள். 

ரமணி vs ரமணி சீசன் 1 
ரமணி vs ரமணி சீசன் 2