Saturday, December 25, 2021

OTT விமர்சனங்கள்:..!

எப்போதும் திரையரங்கம் சென்று படம் பார்த்து விமர்சனம் எழுதுவேன். ஆனால், இப்போது எல்லாமே OTTதான். முதலில் இருந்தே Amazon Prime வைத்துளேன். அது 499/- இருந்த காலத்திலேயே பார்க்க ஆரம்பித்தேன். நடுவில் கொஞ்ச நாள் விட்டு விட்டேன். பிறகு Airtel மூலமாக Disney ஹாட்ஸ்டார். இன்னும் 3 நண்பர்களுடன் சேர்ந்து Netflixம் வாங்கி விட்டேன். கடையாக Times Prime மூலமாக SonyLIV, Zee இரண்டும் வந்து விட்டது. இவையே போதும், போதும் என்னும் அளவிற்கு படங்கள் வருகின்றன. இந்த முறை வித்தியாசமாக, OTT தளங்கள் பற்றி பார்ப்போம். 

Netflix : 

Netflix தமிழுக்கு எவனோ ஒருவன் பில்லி சூன்யம் வைத்து விட்டான் என்று நினைக்கிறேன். மண்டேலா படம் தவிர வேறு எதுவும் தமிழில் உருப்படியாக அதில் வரவில்லை. அதிலும் 'ஜகமே தந்திரம்', தயாரிப்பாளரின் தந்திரமா, அல்லது தனுஷின் தந்திரமா என்று தெரியவில்லை. திரையரங்குகளில் வெளியாகி இருந்தால், அதோகதிதான். இப்போது இதே நிலைதான் பொன்னியின் செல்வனுக்கு நிகழப் போகிறது. 

ஒரு வேளை நவரசா வெளி வராமல் இருந்திருந்தால் கூட, அந்த படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்திருக்கும். இப்போதோ. அதை சுக்கு நூறாக உடைத்து விட்டனர். அனைத்து ரசங்களிலும் துருத்திக்கொண்டு தெரியும் முந்திரி. பாதாம் பருப்புகள் போல நடிகர்கள். கதைக்குள் நாம் நுழைவதற்குள் படம் முடிவது போல தோன்றுகிறது. ஆனால், 10 நிமிட குறும்படங்களிலேயே, நம்மை பாதிக்கும் அளவிற்கு நிறைய படங்கள் உள்ளன. ஏன், கார்த்திக் சுப்பாராஜின் ஆரம்ப கால குறும்படங்கள் அட்டகாசமாக இருக்கும். ஆனால் இப்போதோ? 

போன பதிவில்தான் 'படத்தை எல்லாம் பாத்துட்டு தானே ரிலீஸ் பண்ணுவீங்க' என்று கேட்டேன். இதில், ஒரு படத்தை மீதி 8 இயக்குநர்களோ அல்லது தயாரிப்பாளரோ கூடவா பார்க்கவில்லை. அவளது பார்த்து விட்டு 'அப்பாடா, நம்மளை விட மோசமாத்தான் எடுத்திருக்கான்' என்று உள்ளூர மகிழ்ந்தார்களோ என்னமோ. 'நவரசம்' என்பதற்கு பதில் 'நவ விஷம்' என்று வைத்திருக்கலாம். 

அதன் பிறகும் வந்த தமிழ்ப்படங்கள் எல்லாமே மரண மொக்கை. துக்ளக் தர்பார், முகிழ், லாபம் என்று விஜய் சேதுபதியும் சேர்ந்து சதி செய்கிறார் போல. கடைசியாக 'அண்ணாத்தே' வேறு, முடியல. டாக்டர் மட்டும் பரவாயில்லை. 

Amazon Prime:

Netflix அளவிற்கு மோசமில்லை என்றாலும், இதிலும் மொக்கை திரைப்படங்கள்தான். கோடியில் ஒருவன், Friendship, தலைவி, சிண்ட்ரெல்லா என தமிழ் கொஞ்சம் மோசம்தான். ஜெய் பீம் மட்டும்தான் உருப்படியான படம். வரும் காலங்களில் பார்ப்போம். 

Diesney + Hotstar:

இதில் ஓரளவு பரவாயில்லை. நிறைய தெலுங்கு டப்பிங் படங்கள், 'ஓ மணப்பெண்ணே' போல சில குடும்ப படங்கள் உள்ளன. இருந்தாலும் இதிலும் நெற்றிக்கண், எம் ஜி ஆர் மகன், சிவகுமாரின் சபதம் என்று பல மொக்கைகளும், சுல்தான், லிப்ட் என்று ஒரு முறை பார்க்கும் திரைப்படங்களும் உள்ளன. 

Zee5:

இதுவும் ஓரளவு பரவாயில்லை. இதுவும் ஓரளவு பரவாயில்லை. பல நல்ல படங்களும் உள்ளன. வினோதய சித்தம், அரண்மனை 3, டிக்கிலோனா என்று ஒரு முறை ரசிக்கக்கூடிய பல படங்கள் உள்ளன. 

SonyLIV:

இதுவும் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. தற்போது மாநாடு, இதற்கு முன் திட்டம் இரண்டு, வாழ் போன்ற படங்கள். ஆனால், மற்ற தளங்களோடு ஒப்பிடும்போது தமிழில், மிக மிக குறைவான படங்களே உள்ளன.  

SunNXT:

முன்னொரு காலத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். இப்போது அதிலுள்ள படங்கள் அனைத்தும் மற்ற தளங்களில் உள்ளதால் பயன்படுத்துவதில்லை. 

சரி. இப்போது மொத்தத்தில் எது பரவாயில்லை என்று பார்ப்போம். நீங்கள் நிறைய சீரியல் பார்ப்பீர்கள், வீட்டிலும் குழந்தைகள் உள்ளனர் என்றால் உங்களுக்கு Disney பரவாயில்லை. எனக்கு நெடுந்தொடர் முக்கியம் இல்லை, படங்களும் முக்கியம், குழந்தைகளும் உள்ளனர் என்றால், Amazon Primeக்கு போகலாம். 

எனக்கு இன்னும் ஆங்கிலத் தொடர்களும் வேண்டும் என்றால் Netflix போகலாம். இப்போது எல்லா OTT தளங்களும் விலையை ஏற்றி விட்டனர், ஆனால், Netflix மட்டும் குறைத்துள்ளது. அப்படி பார்த்தாலும், அதுதான் இப்போதைக்கு அதிகம். இவை அனைத்தும் அலசி ஆராய இங்கே செல்லவும். மற்றபடி, அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.  

Sunday, July 4, 2021

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

அனைவருக்கும் வணக்கம். இப்போதெல்லாம், பதிவுகள் Orkut போல கடந்த காலம் ஆகி விட்டது. Spaces, Clubhouse என அடுத்தடுத்து மக்கள் சென்று கொண்டே உள்ளனர். நம்மைப்போல், (சரி சரி) என்னைப்போல வயதானவர்கள்தான் "என்ன இருந்தாலும் அந்த காலம் போல வருமா" என்று புலம்பிக்கொண்டு இருக்கிறோம். சரி. நமக்கு என்ன வருகிறதோ, அதையே செய்வோம். போகிறவரை போகட்டும். 

குறு விமரிசனங்கள்:

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் ஒரு காட்சி வரும். "படத்தை எடுத்து முடிச்ச அப்புறம், போட்டு பாத்துட்டு ரிலீஸ் பண்ணுவீங்களா, இல்ல அப்படியே பண்ணுவீங்களா?" என்று ஒரு திரைக்கதை விவாதம் நடக்கும் இடத்தில கூட்டி பெருக்கும் பெண் கேட்பார். "எல்லோரும் பாத்துதான், தேவைன்னா மாத்திதான் ரிலீஸ் பண்ணுவோம்" என்பார்கள். "அப்புறம் ஏன் இவ்வளவு கேவலமான படங்கள் வருது" என்பார். எனக்கும் இதே போல சந்தேகம் நிறைய படங்களுக்கு வந்துள்ளது.

'மமகிகி' என்றொரு zee5 படம். ஏதோ கல்லூரி கதை என்று பார்த்தால், கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல், காட்சிகளாக எடுத்து வைத்து கடுப்பேற்றி விட்டனர். அதன் பின் அதே போல யோசிக்க வைத்த திரைப்படம்தான் 'ஈஸ்வரன்'. அதே போல 'ஜகமே தந்திரம்'. எப்பா டேய் முடியலடா சாமி. தயவு செய்து கலாய்ப்பதற்கு கூட இந்த படங்களைப் பார்க்க வேண்டாம். மற்றபடி, அவ்வளவாக படங்கள் பார்ப்பதற்கும் நேரம் இருப்பதில்லை.

Work from Home: 

முதல் 6 மாதங்கள் கொஞ்சம் நன்றாக இருந்தது. அதன் பிறகு என்னவோ எப்போது பார்த்தாலும் வேலையே செய்து கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. ஊரில்தான் இருக்கிறோம். நடுவில் ஒரு சில வீட்டு வேலைகளையும் செய்து வெளியே போய் வந்தாலும், ஒரு தனிமையோ, சுதந்திரமோ அல்லது 'அப்பாடா' என்கிற இடைவேளையோ கிடைப்பதில்லை. 

மகளுக்கும் online வகுப்புகள். இரண்டு நாட்களுக்கு பிறகு அவளுக்கும் பிடிக்கவில்லை. ஒரு மாறுதலுக்காக சென்னை சென்று இருக்கலாம் என யோசிக்கிறோம். பார்ப்போம். ஊருக்கு வந்ததில் நடந்த நன்மை என்னவென்றால், மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்ததுதான். கொஞ்ச நாள் சிலம்பமும் கூட. 

அரசியல்: 

எங்களது அடுக்கு மாடி குடியிருப்பில், யாருமே பொறுப்பிற்கு வர விரும்ப மாட்டார்கள். ஆனால், அது நொள்ளை, இது நொட்டை, இப்படி செய்யலாமே இதை ஏன் செய்கிறீர்கள் என்றெல்லாம் கேட்பார்கள். ஒரு சில விதிமுறைகள் உள்ளன என்றாலும் கேட்க மாட்டார்கள். அதை மீறி ஒரு வேளை பொறுப்பிற்கு வந்தாலும், அதைப்பற்றி பேச மாட்டார்கள். 

அதே நிலைமைதான் இப்போது திமுகவிற்கும். பாஜகவோ அதைப்பற்றி கவலைப்படவேயில்லை. மக்களையே திசை திருப்பக்குவதற்காக, உண்மை நிலை தெரிந்தாலும், அதைப்பற்றி சொல்லாமல், மக்களை குழப்புவது. பிரச்சினையை மட்டுமே முன்னெடுப்பது. பாதிக்கப்பட்டது என்னவோ நாம்தான். 

கொரோனா தடுப்பூசி: 

45+ வயதிற்கு போட்டபோதெல்லாம் எல்லோரும் தெறித்து ஓடினார்கள். ஆனால், இப்போது எல்லோரும் எனக்கு வேண்டும், உனக்கு வேண்டும் என்று போட்டி போட, ஊசி கிடைப்பதே கஷ்டமாக உள்ளது. அல்லது தினமும் 3 அல்லது 4 மணி நேரம் நின்று ஊசி போட வேண்டி உள்ளது. இங்கு தனியார் மருத்துவமனைகளிலும் கிடைப்பதில்லை. எனவே இன்னும் ஊசி போடவில்லை. குறைந்தது ஒரு ஊசி போட்டு விட்டு, சென்னை போகலாம் என்று யோசிக்கிறோம். அங்கேயும் வீட்டிற்குள்தான் இருக்க வேண்டும். இருந்தாலும், பார்ப்போமே. 

முதலாவது அலையில் சற்றே தப்பித்தோம் பிழைத்தோம் என்றாகி விட்டது. இரண்டாவது அலையில், நிறைய தெரிந்த ஆட்கள் எல்லோரையும் வாரி சுருட்டி சென்று விட்டது. விளையாட்டாக எடுத்துக்கொள்ளாதீர்கள். 

Sunday, April 25, 2021

அரசியல் விளையாட்டு!

தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே அரசியல் பதிவு ஒன்று போட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், மடிக்கணினியில் சில பல பிரச்சினைகள், ஊரில் வேறு அலைபேசியின் இணையம் மிகவும் மெதுவாக இருந்ததால், அலுவலக வேலைக்கே நேரம் சரியாக இருந்தது. அது சரி, நாம சொன்ன மாதிரியா எல்லோரும் ஓட்டு போட போறாங்க? 


அப்போது இருந்த கட்சிகளும் மாறவில்லை, ஆனால், அப்போது இருந்த இரு பெரும் ஆளுமைகள் இப்போது இல்லை. ஆளுமை என்றே யாரும் இல்லை இப்போது. எனவே கருத்துக்கள் கொஞ்சம் மாறி உள்ளன. . 

திமுக: 

2006-11ல் ஆடிய ஆட்டத்தினால், 2011ல் அடி விழுந்தது. 2014ல் அது படு தோல்விக்கு வழி வகுத்தது. ஆனால், அப்போது இருந்த அதிமுகவும், தேமுதிகவும், பாமகவும் அதை சரியான முறையில் பயன்படுத்தி இருந்தால், 2016ல் திமுக என்ற கட்சியே இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், ஆட்சியைப் பிடிக்கும் போல என்ற அளவிற்கு வந்த திமுக, 2019ல் 38 பாராளுமன்ற தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது, அதுவும் கருணாநிதி இல்லாமல். இப்போது பாஜாகவிற்கு தாங்களே மாற்று என்ற பலம் அவர்களின் உள்ளது. அதனாலேயே அவர்கள் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம் என்பது என் கணிப்பு. 

அதிமுக: 

ஜெயலலிதா மறைவு, பன்னீரின் தர்ம யுத்தத்திற்கு பின் எடப்பாடி ஆட்சிக்கு வந்தவுடன், இன்னும் எத்தனை நாளோ என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், எல்லா எண்ணங்களையும் தவிடு பொடியாக்கி 4 வருடங்களை கடந்து விட்டார். 2019ல், முடிந்த அளவு சம்பாதித்து விட்டு ஓடி விடலாம் என்ற எண்ணத்தில்தான் இருந்திருப்பார்கள் போல. ஆனால், அப்போது நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி நம்பிக்கையை கூட்டி, இப்போது தைரியமாக, எப்படியும் 40+ வாங்கி எதிர்க்கட்சியாகி விடுவார்கள் போல. 

ஆனால், அடுத்த தேர்தல் வரை இந்த கட்சி இருக்குமா, அப்படி இருந்தாலும் இதே போல கூட்டணிக்கும் தலைமை தாங்கும் அளவிற்கு இருக்குமா என்பது சந்தேகம்தான். ஆட்சியில் இருக்கும்போதே பயப்படுவார்கள். அடுத்த முறை, பாண்டிச்சேரி போல ஒரு 20 இடங்கள் வாங்கிக்கொண்டு யாருக்காவது ஆதரவு அளிப்பார்கள் என நினைக்கிறேன். அது திமுகவிற்காக கூட இருக்கலாம். கட்சி உடையலாம், அல்லது உடைக்கப்பட்டு சாதி கட்சியாக கூட மாற வாய்ப்பு உள்ளது.

இந்த கட்சிகள், இந்த தேர்தலில் எல்லாம் நாங்களும் இருக்கிறோம் என்று காண்பித்தால் மட்டும் போதும். அடுத்த 5 வருடங்களில் ஸ்டாலின் தான் ஒரு நல்ல தலைவர் என்று நிரூபிக்க வேண்டும். எடப்பாடி தான் ஒரு நல்ல எதிர்க்கட்சி தலைவர் என்று காட்ட வேண்டும். மிரட்டலுக்கு பதுங்கலாம் ஆனால், அடி பணிய மாட்டோம். எங்களுக்கு மாற்று நாங்களே என்று நிரூபிக்க வேண்டும். 

அதை விட்டு விட்டு உதயநிதியை முன்னிறுத்துவது, முடிந்தவரை சம்பாதிக்கலாம் என்று நினைத்தால், பொன் முட்டையிட்ட கோழி கதைதான். பல நல்ல ஆளுமைகள் இரு கட்சிகளிலும் இருக்கிறார்கள். அவர்களை அடுத்து முன் நிறுத்தினால் மட்டுமே உருப்படும் 

பாமக: 

'எங்களுக்கும் குடும்பம், குழந்தை இருக்குல்ல, பசிக்கும்ல' என்று அடக்கி வாசிக்கிறார்கள். நமக்குன்னு அடிமைங்க இருக்காங்க. அவங்கள வச்சி அப்பப்ப காசு பார்த்துக்கலாம் என்று எண்ணுவார்கள் போல. சாதி இருக்கும் வரை, அவர்களுக்கு கவலை இல்லை. 

மக்கள் நீதி மையம்: 

எனக்கு கமலின் நடிப்பு மிகவும் பிடிக்கும். அதற்காக அரசியலிலும் நடித்தால் எப்படி. முன்பொரு காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, ஏன் என்று கேட்டார். மக்களுக்கு நல்லது செய்ய என்றார்கள். நான் இப்போதே நல்லது செய்து கொண்டுதான் இருக்கிறேன். நல்லது செய்ய அரசியலுக்கு வர வேண்டும் என்று தேவையில்லை என்றெல்லாம் கதை விட்டார்.

இப்போதோ நடிச்சா ஹீரோதான் எனப்து போல, ஜெயிச்சா CMதான் என்கிறார். இட ஒதுக்கீடு பற்றி கேட்டால் பதுங்குகிறார், 100 நாள் வேலை திட்டம் மக்களை சோம்பேறி ஆக்குகிறது என்கிறார். திட்டத்தின் குறைகளை களைவது பற்றி பேச மாட்டேன் என்கிறார். கோவை தெற்கு தொகுதிக்கு என் செய்கிறார் என்று பார்ப்போம்.  

மதிமுக, விசி: 

ஒட்டுண்ணி போல பழகி விட்டார்கள். திருமாவின் தொலை நோக்கு பார்வை மீது நம்பிக்கை உள்ளது. ஆனாலும் சாதிக்கட்சி, மற்ற சாதிகளின் மீதான பார்வை மட்டுமே பிரச்சினை. நல்ல ஆளுமையாக வளர்வது தமிழகத்திற்கு நல்லது. வைகோ, என்ன சொல்ல. அவ்வளவுதான். 

நாம் தமிழர் பற்றி எல்லாம் கூற ஒன்றுமில்லை. 

பாஜக: 

கண்டிப்பாக இவர்களது குறிக்கோள் 2031 அல்லது 2036ல், கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதுதான். நீ முன்னாடி போட்ட பதிவுல எல்லாம், இந்த திமுக, அதிமுக எல்லாம் நெறைய கொள்ளை அடிச்சுது, அது எல்லாத்தையும் ஒழிக்கணும்னு சொன்ன. அப்ப அதுக்கு சரியானது பாஜக தானே என்று கேட்பது புரிகிறது. 

நிறைய தமிழ்ப்படங்களில் நாயகன் சிறு சிறு திருட்டுகள் செய்வார், மக்களுக்கு கோபம் இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. திடீரென ஒரு பெரிய வில்லன் வருவான். அவனால் எல்லாமே அழியும் என்று தெரிந்தவுடன் அவனை எதிர்த்து நாயகியுடன் இணைவார்கள். அதேதான் இங்கேயும். இப்போது கூட இரு திராவிட கட்சிகளும் ஓட்டிற்கு பணம் கொடுத்துள்ளனர். எனவே கண்டிப்பாக திருடுவார்கள். 

ஆனால் பாஜக விஷம். வட இந்தியாவில் பார்த்தீர்கள் என்றால், இவர்கள் எதிரிகளை அழிக்கிறார்கள். அதாவது ஒரு ஆள் மட்டும் ஓடி ஜெயிப்பது போல. அது மிகவும் ஆபத்தானது. நம்மூரில் இரண்டு கட்சிகள் இருந்ததாலேயே நம்மால் இவ்வளவு முன்னேற முடிந்தது.  

அடுத்து ஒரு தலைவர் தன்னை நிரூபிக்கும் வரை நமக்கு வேறு வழி இல்லை. காத்திருப்போம்.