Sunday, December 22, 2019

வருடக் கடைசி விமர்சனங்கள்!

அப்பப்பா.. ஒரு பதிவு போடலாம் என்பதற்குள், முடியவில்லை. சரி. சட்டு புட்டென்று பதிவிற்கு போய் விடுவோம். 

மகளுக்காக The Lion King, Frozen 2 என்று அடிக்கடி திரையரங்கம் செல்வதால், பெரியவர்களுக்கான படங்களை இப்போதெல்லாம் வீட்டிலேயே பார்த்து விடுகிறோம். அதுதான் புதுப் படங்கள் அனைத்தும் அதிகபட்சம் 30 நாட்களில் OTTயில் வந்து விடுகிறதே. நாங்கள் எப்போதோ கேபிள் இணைப்பை துண்டித்து விட்டோம். இன்னும் குறிப்பாக சொன்னால், எப்போது உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யுங்கள் என்று சொன்னார்களோ, அப்போதே அதை தலை முழுகி விட்டோம். 

Amazon Prime, ஹாட்ஸ்டார், Zee5 இவை போதும் போதும் எனும் அளவிற்கு படங்களைக் கொடுக்கின்றன. Netflix மட்டும் இன்னும் கொஞ்சம் விலையைக் குறைத்தால் பரவாயில்லை. 199 ரூபாயில், நம்மால் TVயில் பார்க்க முடியாது என்பது பெரும் குறை. கொஞ்சம் மனது வைக்கவும். 

தம்பி: 

மகளுக்காக அல்லாமல், எங்களுக்காகவும் போய்ப் பார்த்தோம். அருமையான family thriller படம். 15 வருடங்களுக்கு முன் காணாமல் போன மகன், திடீரென கிடைக்கிறான், ஆனால், அவனாலும், அவனுக்கும் ஏற்படும் பிரச்சினைகள், யாரால் ஏற்படுகின்றன, எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் படம். 


முதல் பாதி கொஞ்சம் மொக்கையாகஇருந்தாலும், இரண்டாம் பாதியில் அதை சமாளித்து விடுகிறார்கள். படத்தில் நகைச்சுவை குறைவென்றாலும், கடைசி காட்சியில் கார்த்தி சொல்லும் வசனத்திற்கு திரையரங்கமே விழுந்து விழுந்து சிரித்தது. கிட்டத்தட்ட த்ரிஷ்யம் போலவே, குடும்பத்தை காப்பாற்ற என்ன வேண்டுமென்றாலும் செய்வதுதான் ஒரு வரி கதை. 

அசுரன்:


இதிலும் அதே போலத்தான். குடும்பத்தைக் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்யும் நாயகன். ஆனாலும் அதில் பஞ்சமி நிலம், சாதி வெறி, நிலம் என்று கலந்து செவிட்டில் அடித்தாற் போல சொல்லி உள்ளார்கள். பூமணியின் வெக்கை கதையை பல வருடங்களுக்கு முன்னாள், எங்கேயோ நூலகத்தில் படித்த ஞாபகம். படம் பார்க்கும்போது எதுவும் நினைவுக்கு வரவில்லை. தவற விடக்கூடாத படம். 

கைதி:


நம்பவே முடியாத ஒரு வரி கதையை (எல்லா பெரிய அதிகாரிகளும் ஓரிடத்தில் கூடுவது, கமிஷனர் அலுவலகத்தில் எந்த காவலரும் இல்லாமல் இருப்பது) எடுத்து, அதை வெற்றிக்கரமாக படமாக்கி உள்ளார்கள். அதிரடிக்காட்சிகள், பாடல்களோ, நாயகியோ இல்லாதது மிகப்பெரும் பலம். அடுத்து பின்னணி இசை. இதுவும் தவற விடக்கூடாது படம்தான். 

Badhaai Ho (ஹிந்தி): 

ஒரு ஜெயகாந்தனின் சிறுகதை. தலைப்பு நினைவில் இல்லை. காதல் பிரச்சினையில் (என்றுதான் நினைக்கிறேன்) வீட்டை விட்டு வெளியே போன மகன், மீண்டும் வீட்டிற்கு வருகிறான். எல்லோரும் அவனையும் அவன் அம்மாவையும் சேர்த்து திட்டுகிறார்கள். என்னவென்று பார்த்தல், அவனது அம்மா கர்ப்பமாக இருக்கிறார். "மருமகளும் மாமியாரும் ஒண்ணா புள்ள பெத்துக்க போறாங்க" என்றெல்லாம் பேசுவார்கள். அந்த மகன் அம்மாவை தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்வார். 


இதே போல மலையாளத்திலும் ஒரு படம் வந்ததாக நினைவு. இதில் அதை அப்படியே நகைச்சுவையாக மாற்றி உள்ளனர். கல்யாண மகத்தில் மகன்கள் இருக்கும்போது, அம்மா கர்ப்பம் ஆகிறார். அதை மாமியார், மகன்கள், மகனின் காதலி, அவளது அம்மா, நண்பர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் படம். 

Article 15 (ஹிந்தி): 

அந்தாதுன் படம் பார்த்ததில் இருந்தே ஆயுஷ்மானின் விசிறி ஆகி விட்டேன். அதன் பிறகு பதாய் ஹோ. பிறகு இந்தப் படம். மூன்றும் மூன்று விதம். 


உத்தர பிரதேசத்தில் ஏதோ ஒரு கிராமத்தில், 2 சிறுமிகள் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கி இறந்து கிடக்கிறார்கள். அவர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்பதால், அவர்களின் பெற்றோர்களே அவர்களை கொன்று விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. வெளிநாட்டில் படித்து, தந்தைக்காக காவல் துறையில் வேலை செய்யும் நாயகன், அதன் பின்புலத்தை ஆராய்கிறான். அதில் வரும் சாதி வெறி, வன்மம் எல்லாம், அசுரன் படம் போலவே முகத்தில் அறைகின்றன. 

இதை தமிழில் எடுக்கிறார்களாம். ஒரு காட்சியில், தனக்குக்கீழ் உள்ள காவலர்களிடம், "நீங்களும் அதே சாதிதான்" என்பான் நாயகன். "நாங்களும் கீழ் சாதிதான், ஆனா, அவங்களுக்கு மேல" என்பார் ஒருவர். அதிலும் ஒவ்வொருவரும் தான் இன்னின்ன சாதி என்பதை சொல்லும் காட்சி வேறு இருக்கும். தமிழில் "ஆண்ட சாதி" என்ற வார்த்தையையே வர விடாத ஆட்கள் நம்மாட்கள். பார்ப்போம். 

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

Sunday, October 20, 2019

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

கடந்த சில மாதங்களாக அலுவலகத்தில் வேலை அதிகம், வீட்டிலும் வேலை என்று இருந்ததால் பதிவு போட முடியவில்லை என்று சொல்ல ஆசைதான். ஆனால், உண்மையில் பதிவு போட விருப்பம் இல்லை என்பதுதான் உண்மை. அப்பாடா என்கிறீர்களா.

இப்போதெல்லாம் படிப்பது மிகவும் குறைந்து விட்டது. நானே யோசித்துப் பார்க்கிறேன். கடைசியாக எப்போது புத்தகமாக வாங்கிப் படித்தேன் என்பதே எனக்கு நினைவில்லை. விகடன் கூட இணையத்தில்தான். இப்போது இணையத்தில் கூட எல்லாமே காணொளிக் காட்சிகளாக மட்டுமே மக்கள் ரசிக்கிறார்கள். நண்பர்கள் கூட விமர்சகராக மாற சொன்னார்கள். சரி சரி விடுங்கள்.

நான் விமர்சிக்கும் படங்கள் எல்லாம் அதற்குள் youtubeலேயே வந்து விடும். மற்ற எதையாவது படித்தாலே எரிச்சல் வரும். அதை இன்னும் பேசி காணொளிக் காட்சியாக இட்டால், யார் பார்ப்பார்கள். இப்போதுதான் மகளை கொஞ்சம் கொஞ்சம் படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறேன்.

அவ்வப்போது புத்தக கண்காட்சிக்கு (ஆங்காங்கே நடக்கிறதே) சென்றாலும் இந்தப் புத்தகமும் எனக்காக வாங்குவதில்லை. மகளுக்காகவே. எல்லா இடங்களிலும் குழந்தைக்களுக்கான புத்தகங்களும், இல்லையெனில் சமையல், ஜோதிடம் பற்றிய புத்தகங்களுக்கே மக்கள் செல்கிறார்கள். இது எல்லாக்காலங்களிலும் இருப்பதுதான். வீட்டில் படிப்பதற்கு நாளிதழ் வாங்கினாலும் அது எடைக்கு போட மட்டுமே உபயோகம் ஆகிறது. இன்னும் 10 வருடம் கழித்து எப்படி இருக்குமோ தெரியவில்லை.  

சரி. சில படங்கள் பற்றி பார்ப்போம். 

கோமாளி: ஒரு படத்துடன் நாம் ஒன்ற வேண்டுமானால், ஏதாவது ஒரு நிகழ்வு நம் வாழ்க்கையில் நடந்திருக்க வேண்டும். இந்தப்படத்தில் நாயகன் 1999ல் புதிய வகுப்பிற்கு செல்வான். அது பதினொன்றா அல்லது பனிரெண்டா என்பதை தெளிவாக சொல்லா விட்டாலும், மேல்நிலைக்கல்வி என்று எடுத்துக்கொள்ளலாம். நானும் அதே வருடம் படித்ததால், சட்டென்று ஒரு மின்னல். மற்றபடி, படத்தின் முதல் பார்வையே கதையை தெளிவாக சொல்லி விட்டதால் இன்னும் கொஞ்சம் ஆர்வம் கூடி விட்டது. கடைசியாக, கல்லூரி நண்பர்கள் 4 பேர் சந்தித்து, ஒன்றாக சேர்ந்து பார்த்ததில் படம் மறக்க முடியாததாக மாறி விட்டது. 



தோழர் வெங்கடேசன்: முன்னொரு காலத்தில், தினத்தந்தியில் அடிக்கடி பார்க்கும் ஒரு செய்தி, விபத்திற்கான நஷ்ட ஈடு தராததால், பேருந்து ஜப்தி. இன்று வரை அந்த செய்திகள் வந்து கொண்டே உள்ளன. அதன் பின்னால் இருக்கும் நடப்பு, அந்தப் பேருந்தை வைத்திக்கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள் என்றெல்லாம் தெளிவாக காட்டும் படம். அருமையா சிறு முதலீட்டில் வந்த படம். நானே தரவிறக்கம் செய்துதான் பார்த்தேன். இணையத்தில் எங்குமே வெளியாகவில்லை. கண்டிப்பாக பார்க்கவும். 



தொரட்டி: இன்னொரு சிறு முதலீட்டுப் படம். 80களின் இன்னொரு படம். அதற்காக இளையராஜா, பழைய போஸ்டர் என்றெல்லாம் இல்லை. பணத்திற்காக திருடும் மூவர், கிடை போட்டு பிழைக்கும் நாயகன் நாயகி, காட்டிக்கொடுத்தல், பழி வாங்கல் என்று சற்றே அரைத்த மாவுதான் என்றாலும், பார்க்க நன்றாக உள்ளது. 



சாஹூ: தற்போது அமேசான் பிரைமில் வந்துள்ளது. இந்த 3 படங்கள் தந்த தாக்கத்தைக் கூட இது தரவில்லை. நிறைய பேர் வருகிறார்கள். யுத்தம் செய் படத்திலும் இதே போல. நிறைய ஆட்களைப்பற்றி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். என்ன நடக்கிறது என்றே புரியாது. இதிலும் அதே போலத்தான். திடீரென KGF போல ஒரு கதை சொல்கிறார்கள். என்னவோ போடா மாதவா. 



சிகப்பு மஞ்சள் பச்சை: அக்னி நட்சத்திரம், நேருக்கு நேர் வரிசையில் மாமன் மச்சான் படம். மூன்று படங்களிலும் அந்த உறவுமுறை பிரச்சினையை மட்டும் பேசாமல், அவர்கள் சேர வேண்டும் என்று சம்பந்தமே இல்லாமல், ஒரு கெட்டவன் வருவான். நடுவில் பெண்கள் மாட்டிக்கொண்டு விழிப்பார்கள். ஆனாலும் நம்மை யோசிக்க விடாமல் படத்தோடு ஒன்றி விடுமாறு திரைக்கதை அமைத்துள்ளார் சசி. பார்க்கலாம். 



இன்னும் ஒத்த செருப்பு, அசுரன், மகாமுனி என்று பார்க்க வேண்டிய பட்டியல் நிறைய உள்ளது. 

முன்பு சொன்னது போல, பதிவு எழுத வேண்டுமா என்று பல முறை தோன்றினாலும், கடமையை செய், பலனை எதிர்பாராதே என்ற கீதையின் வார்த்தைக்கிணங்க, பதிவிடுவது நம் கடமை. அதை செவ்வனே செய்வோம். படிக்காதவர்கள் ரத்தம் கக்கி, சீச்சீ வேண்டாம், இணைய வேகம் குறையாக கிடைக்க வேண்டுகிறேன்.  

Sunday, June 30, 2019

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

முந்தைய பதிவு கொஞ்சம் சோகமாகவும், சமுதாய நோக்கத்தோடும் (?) இருந்ததால், இந்த முறை ஜாலிலோ ஜிம்கானா பதிவு. 

தண்ணீர் தண்ணீர்:

தண்ணீர் பிரச்சினை மிக கொடூரணமான நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு காலையில் 4 மணி நேரம், மாலையில் 4 நேரம் இன்றி இருத்தது, காலையில் மட்டும் என்று மாறியது. பிறகு 2 மணி நேரமானது. தற்போது ஒரு மணி நேரமாக உள்ளது. 

கொடுமை என்னவென்றால், அந்த ஒரு மணி நேரத்திலும் கிட்டத்தட்ட 80 ஆயிரம் லிட்டர் தண்ணீர் செலவாகிறது. தற்போது ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீரை அளக்கும் மீட்டர் பொறுத்தி விட்டோம். இனி சற்றே குறையும் என்று எதிர் பார்க்கிறோம். 

படித்தவர்கள், பண்பானவர்கள், அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் நடந்து கொள்பவர்கள், மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்கள்தான் இது போன்ற அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருப்பார்கள் என்று நினைத்தால், தயவு செய்து உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ளுங்கள். எவன் எப்படிப்போனால் எனக்கென்ன, எனக்கு வேண்டியது நடந்தால் போதும் என்பவர்கள்தான் நிறைய. இப்படிப்பட்ட தண்ணீர் பஞ்சத்திலும், "நாந்தான் காசு கொடுக்கிறேன்ல, எனக்கு ஏன் தண்ணி தர மாட்டேன்னு சொல்ற" என்று சண்டை போடும் ஆட்கள்தான் நிறைய உள்ளனர்.  

அஞ்சலி:

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க ஆரம்பித்த பிறகு, அடிக்கடி நான் எழுத நினைத்த திரைப்படம் அஞ்சலி. அந்தப் படம் பார்க்கும் போது 8 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். 

மூக்கு ஒழுக, அரைஞாண் கயிற்றால் இடுப்பில் டிராயர் விழாமல் பிடித்துக் கொண்டு, காலில் செருப்பு கூட போடாமல் சுற்றும்போது, நம்மைப் போன்ற ஒரு பையன் ஜீன்ஸ், டீ சர்ட், ஷூ போட்டுக்கொண்டு, நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியே போய், போட்டுக்கொண்டு மொட்டை மாடி மொட்டை மாடி, இரவு நிலவு என்று பாட்டு பாடியதைப் பார்க்கும்போது, வாயைப்பிளந்து கொண்டு பார்த்தேன். நாமும் அதே போல சுற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டு, வீட்டில் போய் அந்தப் படத்தில் வருவது எல்லாம் வேண்டும் என்று கேட்டு, அடி வாங்கியதுதான் மிச்சம். 

அதன் பிறகு, 10ஆவது படிக்கும் பொது என் அத்தை வீட்டிற்காக முதல் முறை சென்னை வந்தேன். அதுவும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பே. ஆனால், அங்கு பக்கத்துக்கு வீட்டில் யாரென்று தெரியாது, பார்த்தால் சிரிப்பார்கள், அங்கேயெல்லாம் போகக்கூடாது, சிறுவர்கள் இருந்தாலும், வெளியே வந்தால்தான் விளையாட வேண்டும் என்றெல்லாம் சொன்னவுடன், அடப்போங்கப்பா என்றாகி விட்டது. இப்போது நானும் அதே குட்டையில் ஊறிக்கொண்டிருக்கிறேன்.

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்: 

எங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் நல சங்கத்தில், முக்கிய உறுப்பினர்கள் எல்லோருமே ஓய்வு பெற்ற ஆட்கள். அவர்கள் தாங்கள் செய்வதுதான் சரி என்பார்கள், நான் ஏற்கனவே நான்கைந்து இடங்களில் இதே போல இருந்திருக்கிறேன், நிறைய செய்திருக்கிறேன் என்பார்கள். ஐயா, இப்போதைக்கு, இங்கே என்ன தேவை என்று பாருங்கள், அதற்கேற்றாற்போல செய்யுங்கள் என்றால், உடனே கோபப்படுவார்கள். 

அதே போலத்தான் இப்போது இளையராஜாவும். அவர் நிறைய செய்திருக்கிறார். ஆனால், இப்போதைய மக்களின் மன நிலை என்ன, அவர்களின் தேவை என்ன என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. தான் என்ன கொடுக்கிறோமோ அதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார். என்னத்த சொல்ல. 

இதில் கொடுமை என்னவென்றால், இளையராஜாவை விமர்சிக்கும் (ஆதரித்தோ, எதிர்த்தோ) முக்கால்வாசிப் பேர், அவரது பாடல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து கேட்பவர்கள். இதில் நானும் அடக்கம். 


இளையராஜாவின் பாடல்கள் என்பது ஒரு பொருள். நமக்கு பொருள் பிடிக்கிறதா இல்லையா என்பதுதான் முக்கியம். ஆனால், நாம் அதை தயாரிப்பவரை ஏன் விமர்சிக்கிறோம் என்று புரியவில்லை. இது எப்போதும் திரைத்துறையில் மட்டுமே நடக்கிறது. என்னவோ போடா மாதவா. 

"ஏண்டா இதையா ஜாலியாத பதிவுன்னு சொன்ன" என்று சண்டை போட வேண்டாம், ஏதோ புலம்ப வேண்டும் என்று தோன்றியது. அவ்வளவுதான். 


Sunday, June 16, 2019

தமிழகம் - பாலைவனம்

மூன்றரை வருடங்களுக்கு முன்பு, தமிழகம் - மழையகம் என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். அதற்குள், இப்படி ஒரு பதிவு இட வேண்டி வரும் என்று எதிர் பார்க்கவே இல்லை. 

ஒவ்வொரு வருடமும் எங்களது அடுக்கு மாடி குடியிருப்பில் பிப்ரவரி முதல் ஜூன் அல்லது ஜூலை மாதம் வரை தண்ணீர் விலை கொடுத்து வாங்குவோம். ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு லட்சத்து இருபதாயிரம் லிட்டர் வரை வரை தேவைப்படும். கிட்டத்தட்ட 11 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அதில் இரண்டு மட்டுமே உயிருடன் உள்ளன. மழைக்காலங்களில் இன்னும் நான்கைந்து கிணறுகள் ஆதரிக்கும். 

ஒரு நான்கு மாதங்கள் வெளியில் தண்ணீர் வாங்காமல் சமாளிப்போம். கடந்த வருடங்களில் 80 ஆயிரம் லிட்டர் வரை வாங்குவோம். ஆனால், இந்த வருடம் முழுக்க முழுக்க வெளியே வாங்குகிறோம். ஏன் இப்படி என்று யோசித்தால், குடியிருப்பில் மழை நீர் சேகரிப்பு செய்திருக்கிறோம். கழிவறைகளுக்கு கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துகிறோம். 

இருந்தாலும் ஏன்? 2011ல் இருந்து, இந்த ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் எங்களது குடியிருப்பு உட்பட மொத்தமாக (எனக்கு தெரிந்து மட்டும்) குறைந்தது 500 வீடுகள் அதிகரித்திருக்கின்றன. எல்லா அடுக்கு மாடி குடியிருப்புகளும் இதே போல செய்கின்றனவா என்று தெரியாது. அவ்வளவு ஏன், எங்களது குடியிருப்பில் நிறைய பேர் தேவையின்றி தண்ணீரை செலவு செய்வார்கள். கேட்டால், "அதான் காசு கொடுக்குறேன்ல" என்பார்கள். மொத்தமாக எடுத்துக்கொண்டால், 2010ல் இருந்து வீடுகளும் மக்கள் தொகையும் இரு மடங்கு அல்லது மும்மடங்கு அதிகரித்துள்ளது. அதனால் தண்ணீரின் தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. 

சரி. இனி என்ன செய்யப் போகிறோம். நம் மக்கள் எதை தோலை நோக்கு பார்வையில் பார்க்க வேண்டும், எதை குறுகிய கால கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதே தெரியாது. 25 வருடங்கள் கழித்து வருவதற்காக ஆயுள் காப்பீடு எடுப்பார்கள், ஆனால், சிக்னலில் 5 நொடிகள் காத்திருக்க மாட்டார்கள். 

அதே போல இப்போது நாம் செய்யும் பல விஷயங்கள் பிற்காலத்தில் நமக்கு பயன்படும் என்றால், "இப்பத்தான் காசு கொடுத்தா தண்ணி கிடைக்குது. மழ வந்தா தானா தண்ணி வரப்போகுது. இப்ப பாத்தீங்கன்னா ஒரு வருஷம் பஞ்சம் வந்துச்சுன்னா அடுத்த வாட்டி மழை நல்லா வரும். நீங்க வேணும்னா பாருங்களேன். இந்த வருஷம் மழை எப்படி பிச்சு எடுக்கும் பாருங்களேன்." என்பார்கள். சரி, மழை வந்தால், மீண்டும் பஞ்சம் வருமே, அதற்கு என்ன செய்வது என்றால், அது நம்ம விதி என்பார்கள். 

தற்போதுள்ள தண்ணீர் பற்றாக்குறை பற்றி பேச ஆரம்பித்தால், ஒவ்வொருவரும் தங்களுக்கு எவ்வளவு அறிவு உள்ளது என்று காண்பிப்பதற்காக அந்த ஊரில் அப்படி, இந்த ஊரில் இப்படி தண்ணீரை சேமிக்கிறார்கள் என்று வருவார்கள். இந்த வளாகத்தில் அதற்காக வசதி இருக்கிறதா, இதற்கு முன் ஏதாவது செய்திருக்கிறார்களா என்றெல்லாம் பார்ப்பதே இல்லை. மீறி சொன்னால், என் யோசனையை ஏற்பதில்லை என்று பிரச்சினை. அதை தனியாக பார்ப்போம். 

இன்னொன்றும் சொல்கிறேன். பல்லாவரம் துரைப்பாக்கம் சாலையில்தான் 2015ல் மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்தது. ஈச்சங்காடு சந்திப்பில் இருவர் இறந்தும் விட்டனர். ஆனால், இப்போது அந்த சாலையில்தான் அதிகளவு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஓரளவு ஏரிகளையும், சாக்கடைகளையும் தூர் வாரியுள்ளார்கள். ஆனாலும் மழை வந்தால் தாங்குமா என்று தெரியவில்லை. 

சரி, அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன விட்டு செல்லப் போகிறோம் என்றே தெரியவில்லை. நான்கு வீடு, கொஞ்சம் நிலம், நிறைய நகை, வங்கிக் கணக்கில் பணம் என்று மட்டுமே இருக்கும். ஏதோ நான் கூட சிறு வயதில் ஓரிரு மரங்களை நட்டுள்ளேன். அப்போது என்ன செய்வோம் என்றால், ஆளுக்கு கொஞ்சம் புளியங்கொட்டை, வேப்பங்கொட்டை, மாங்ககொட்டை என்று எல்லாவற்றையும் ஓரிடத்தில் புதைத்து தினமும் தண்ணீர் ஊற்றுவோம். யாருடைய விதை சீக்கிரம் முளைக்கிறது, வேகமாக வளர்கிறது என்று பார்ப்போம். அதில் பாதிக்கு மேற்பட்டவை இப்போது இல்லை என்றாலும், இன்னும் பல மரங்கள் உள்ளன. 

என் மகள் பிறந்த போது, என்னுடைய தாத்தா வீட்டில் மூன்று தென்னை மரங்களை நட்டார். இப்போது அதிலிருந்து எங்களுக்கு தேங்காயும், நிழலும் கிடைக்கிறது. என் மகள் எப்போது ஊருக்குப் போனாலும், அதற்கு அவள்தான் தண்ணீர் ஊற்றுவாள். சென்னையிலோ, மரங்களை வெட்டி விட்டு, வீடுகளை கட்டுகிறார்கள். நான் உட்பட எல்லோரும் அங்கேயே வீடு வாங்கி, குடியேறி, தண்ணீர் இல்லை, வெயில் அதிகம் என்று புலம்புகிறோம். மரங்களை வெட்டி, சாலைகளை அகலமாக்கி சீக்கிரம் வீட்டுக்கு போய் என்ன சாதிக்கிறோம்? 

நாமக்கல்லில் இருந்து கரூர், சேலம் சாலைகளில் முன்பெல்லாம் புளியமரமாக இருக்கும். அதை ஏலத்திற்கு விட்டு புளிகளை உலுக்கி, அதை பொறுக்குவதற்கென்றே போவோம். அப்பொடுகு இரு வழி சாலையாக இருந்தது. இப்போது, எல்லா மரங்களும் வெட்டப்பட்டு நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டு விட்டன. எந்த மரங்களும் புதிதாக நடப்படவில்லை. இப்போது வெயில் அதிகம் என்று புலம்புகிறார்கள். 

நாம் கேரளாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. எல்லோரும் வாய் கிழிய பேசுவார்களே தவிர எல்லோருக்கும் அன்றைய பொழுது பிரச்சினை இன்றி போனால் போதும், அப்போதைக்கு ஏதாவது தேறினால் போதும் என்று உள்ளார்கள். இன்னும் கொஞ்ச நாளில் மழை வரும். பிறகு ஆளாளுக்கு அவரவர் வேலையைப் பார்க்க போய் விடுவார்கள். நானும் அடுத்து சினிமா பிட்டு என்று பதிவுகள் போடுவேன். ஒரு வருடம் கழித்து மீண்டும் இதே போல ஒரு பதிவு போடுவேன். அவ்ளோதான். போங்க போங்க. 

Saturday, May 25, 2019

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

கொஞ்சம் வெயிலின் கொடுமையோடு, எனது கொடுமையையும் சேர்த்து அனுபவிக்கவும். 

அரசியல்:

எப்படியோ தேர்தல் முடிந்து விட்டது. நான் கொஞ்சம் கர்நாடகா சட்டமன்றம் போல ஆகும் என நினைத்தேன். சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ், மம்தா எல்லோரும் அதே போலத்தான் நினைத்திருப்பார்கள் போல. 

சரி நம் விதி வலியது. தமிழ்நாடு வழக்கம் போல தனது வேலையைக் காட்டி விட்டது. இன்னமும் பிஜேபி புரிந்து கொள்ளாத ஒரே விஷயம் என்னவென்றால், ஏன் தமிழகத்தில் வெல்ல முடியவில்லை என்றால், மீண்டும் மீண்டும் அவர்கள் செய்யும் தவறு என்னவென்றால், நம்மூரில் மத வெறியைக் கிளப்ப முயற்சி செய்வதுதான். 

எனக்கு இன்னமும் புரியாத விஷயம், முகப்புத்தகத்தில், கீச்சுகளிலும் பிஜேபியை ஆதரிக்கும் ஆட்கள் வாக்களித்தாலே ஒரு 4 சதவிகிதம் வர வேண்டும். நம்மூர் ஆட்கள் பல பேர் கொஞ்சம் நக்கல் பிடித்தவர்கள். யாராவது ஏதாவது சொன்னால், அதை எதிர்க்க வேண்டும். அது அவர்கள் ஆதரிக்கும் விஷயமாக இருந்தாலும் சரி, உடனே அதை எதிர்ப்பார்கள். அது போலத்தான், யாராவது பிஜேபியை எதிர்த்தால், அங்கே போய் பதிவிட்டவர்களை எதிர்க்க வேண்டியது, கடைசியில் வாக்களிக்கும்போது வழக்கம் போல எதிர்த்து வாக்களிக்க வேண்டியது. 

இன்னொரு விஷயம், திமுக பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாய் பெற்ற தெங்கம்பழம் போல. கண்டிப்பாக எதுவும் உருப்படியாக செய்ய முடியாது. செய்தாலும் அதை பங்கு போட அதிமுக வந்து விடும். இனி வழக்கம் போல வெளிநடப்புகளும், புலம்பல்களும்தான் இருக்கும். நம்மாட்கள், வழக்கம் போல நம் வேலையை பார்ப்பார்கள். 

யோசித்துப் பாருங்களேன், ஒருவேளை மொத்தமாக தமிழத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், ஊழல் கொடூரமாக நடக்க ஆரம்பிக்கும். அதே போல, சட்டமன்ற தேர்தலில் மொத்தமாக திமுக வெற்றி பெற்றிருந்தாலும் அதேதான். 

நாங்க எவ்ளோ புத்திசாலி பாத்தீங்களா. 

சரிடா, ஆனா உனக்கு எதுவுமே நல்லதே செய்ய மாட்டார்களே. 

ஆமாமா, அப்படியே செஞ்சுட்டாலும். கடைசி வரைக்கும், மாத்தி மாத்தி எல்லாரையும் கதற வச்சிக்கிட்டே இருப்போமுல்ல. 

விமர்சனம்:

முன்பெல்லாம், நிறைய உலகப்பட விமர்சகர்கள் இருந்தார்கள். மற்ற மொழிப்படங்கள் பற்றி நிறைய எழுதுவார்கள். குறிப்பாக நிறைய கொரியன் படங்கள் பற்றியும் படித்து, அதில் சில படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்போம். ஆனால், இப்போது அப்படி யாரும் எழுதுவது போல தெரியவில்லை. இன்னும் பல பேர் காணொளி இடுகிறார்கள், அனால், அது என்னவோ படிப்பது போல இல்லை. சரி விடுங்கள். 

ரொம்ப நாள் கழித்து ஒரு கொரியன் படம். அதுவும் யாருடைய பதிவிலும் படிக்கவில்லை. அது தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது என்று படித்ததால் பார்த்தேன். 

மிஸ் கிரானி (Ms. Granny - 2014): சிறு வயதில் கணவனை இழந்து, தனது ஒரே மகனை கஷ்டப்பட்டு வளர்த்து, அதனால் பேரன் பேத்தி பெரியவர்கள் ஆனாலும், மகனை தங்குவதால், மருமகளுக்கு கஷ்டம். பேத்திக்கு பாட்டியின் போக்கு பிடிக்கவில்லை, பேரன் மட்டும் ஆதரவு.


மாமியாரின் தினசரி அழுத்தம் காரணமாக, மருமகளுக்கு மாரடைப்பு ஏற்பட, மகனோ தனது தாயை ஆசிரமத்தில் சேர்த்த முடிவு செய்கிறார். இதனால் வருத்தமாடியும் தாய், ஏதோ நினைப்பில் வெளியே போகிறார். கடைசி ஆசை போல, ஒரு கடையில் புகைப்படம் எடுக்கிறார். எடுத்தவுடன், 20 அவரது இளைஞியாக மாறி விடுகிறார். 

இனி தனது விருப்பம் போல வாழ ஆசைப்படுகிறார். பாட வேண்டும் என்ற சிறு வயது ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறார் அவரது பேரன் அவர் மீது காதல் வயப்படுகிறார். அவருக்கு, ஒரு தொலைகாட்சி நிறுவனர் மீது காதல், கடைசியில் தமிழ் படம் போல, படம் முடிகிறது. 

படமும் ஏற்கனவே நிறைய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது போல. எல்லாமே, இந்த காணொளியில் உள்ளது. 


கண்டிப்பாக பார்க்கலாம். தெலுங்கில் பார்க்க கொஞ்சம் பயமாக இருக்கிறது. பார்ப்போம். 

இளையராஜா: 


எப்படியோ எல்லா கல்லூரிகளுக்கும் சென்று வந்து விட்டார் போல. இளையராஜாவிடம் உள்ள பெரிய பிரச்சினை என்னவென்றால், அவருக்கு எல்லாமே தெரியும்தான். ஆனால், இயக்குனர் என்ன, எப்படி கேட்கிறாரோ அதை அவர் கொடுத்தாலே போதும். ஆனால், இது போதும் என்று நினைப்பதாலேயே அவருடைய சிறந்த படைப்பை அவரால் கொடுக்க முடியவில்லை. 

அவதாரம் படத்தின் 'தென்றல் வந்து' பாடல், நாசர் கேட்காமலே கொடுக்கப்பட்டது. அதே போல, ஒவ்வொரு இயக்குனருக்கும் இருக்காதல்லவா. இயக்குனர்களும், அவரிடம் கேட்க பயப்படுகிறார்கள் போல. 

எல்லா இயக்குனர்களும், ஒரு கடமைக்கு, ஆசைக்கு அவருடன் பணி புரிந்து விட்டு, பிறகு அவரவர்க்கு இஷ்டப்பட்ட இசையமைப்பாளர்களுடன் சென்று விடுகின்றனர். கவனித்துப் பாருங்களேன். கடந்த 10 வருடங்களில், எந்த இயக்குனரும் தொடர்ச்சியாக இளையராஜாவுடன் பயணிக்கவில்லை. ஓரிரு படங்கள்தான். இளையராஜா இல்லாமல் படம் எடுக்க மாட்டேன் என்று சொன்ன பால்கி கூட மாறி விட்டார். 

இசைக்கு வயதில்லை. மக்களின் இசையாக மீண்டு(ம்) வர வாழ்த்துக்கள்.   

Monday, April 29, 2019

வார இறுதி படங்கள்!!!

பார்த்து, ரசித்த, கண்டிப்பாக விடுமுறையை வீட்டில் கழிக்க சில திரைப்படங்கள். அனைத்துமே இருக்கை நுனியில் (seat edge thriller) அமர வைக்கும் படங்களே. 

அந்தாதுன் - ஹிந்தி - 2018 (Andhadhun):

ஒரு பார்வையற்ற இசைக்கலைஞன். அவன் காதல், ஒரு கள்ளக்காதல், அதனால் ஒரு கொலை, யாருமில்லாதவர்களின் உறுப்புகளைத் திருடி விற்கும் கும்பல், இவர்களோடு வயலில் உள்ள காய்கறிகளை உண்ணும் முயலைக் கொல்லும் நோக்கத்தோடு துப்பாக்கியுடன் ஒரு விவசாயி இவர்கள் அனைவருக்கும் இடையே நடக்கும் ஒரு கண்ணாமூச்சி ஆட்டமே அந்தாதுன். 



படத்தில் சில திருப்பங்களை நீங்கள் உலகப்படம் பார்ப்பவர்களாக இருந்தால், சுலபமாக யூகிக்கலாம். ஆனாலும், அதைத்தாண்டி படத்தில் நிறைய சிறு சிறு ஆச்சரியங்கள் உள்ளன. நாயகன், தபு, நாயகனுக்கு உண்மையிலேயே பார்வை இருக்கிறதா என்று சோதிக்கும் சிறுவன் என அனைவருமே கவனம் ஈர்க்கின்றனர். படம் உண்மையில் நகைச்சுவைப்படம்தான், இருந்தாலும், இந்தப்பக்கம் அந்தப்பக்கம் திரும்ப விடாமல் கவனம் ஈர்க்க வைக்கிறது. 

தடம் - தமிழ் - 2019:

ஒரு கொலை. கொலைகாரன் ஒரு புகைப்படத்தில் உள்ளான். ஒரே பிரச்சினை, ஒரே மாதிரி இரண்டு பேர். இரண்டு பேரில் ஒருவர்தான் குற்றவாளி, யார் அது, எதற்காக கொன்றான், தண்டனை கிடைத்ததா இல்லையா என்பதை, நிஜமாகவே கடைசி வரை அங்கும், இங்கும் திரும்ப வைக்காமல், நிஜமாகவே மண்டை காய வைத்து விட்டார்கள். உண்மையில் அட்டகாசமான திரைப்படம். 



பொதுவாக துப்பறியும் படங்களில் இவனா, அவனா, என்று நிறைய பேரை சந்தேகப்படுமாறு காட்டுவார்கள். இதில் இரண்டே பேர். இவனா, அவனா என கடைசி வரை, அப்பப்பா. அதிலும் காவல் துறையில், வயதில் சிறியவர் பெரிய பதவியில் இருந்தால் என்ன நடக்கும், ஒருவனை சிக்க வைக்க காவல் துரை எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை எல்லாம் சரியாக காண்பித்துள்ளனர். ஆய்வாளருக்கும், நாயகனுக்கும் உள்ள பிரச்சினையை காட்சிகள் இன்றி வசனங்களில் சொன்ன விதம், கடைசியில் நீதிபதி பேசும் இடம் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. மகிழ் திருமேனியின் அனைத்து படங்களுமே தவற விடக்கூடாதவை. அதில் இது முதலிடம். 

அந்தரிக்ஷம் - தெலுங்கு - 2018 (Anthariksham):

இதுவரை நீங்கள் பார்த்த அனைத்து ஆங்கில திரைப்படங்களில் வருவதுதான். ஒரு பழைய செயற்கை கோள் கட்டுப்பாட்டை இழக்கிறது. அதை மீட்க வேண்டும் என்றால், நாயகன் வர வேண்டும். அவனோ வழக்கம் போல வேறு ஒரு பிரச்சினையால் இது எதுவும் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறான். இப்போது, இதையும், தன் பழைய கணக்கையும் எப்படி தீர்க்கிறான் என்பதுதான் படம். 



தமிழில் டிக் டிக் டிக், தமிழின் முதல் விண்வெளி படம் என்று மொக்கையாக ஒரு படம் எடுத்தார்கள். ஆனால், தெலுங்கில், நிஜமாகவே நன்றாக எடுத்துள்ளார்கள். என்ன, கொஞ்சம் இல்லை இல்லை, நிறையவே இயற்பியல் தெரிந்திருக்க வேண்டும். உண்மையில் பக்காவாக ஆராய்ந்து எடுத்துளார்கள். கட்டுப்பாட்டு அறை, செயற்கை கோள், விண்வெளி என்று அனைத்தும், ஆங்கில படங்கள் அளவுக்கு உள்ளன. நல்ல முயற்சி. 

வெள்ளைப்பூக்கள் - தமிழ் - 2019:

ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி, காதல் திருமணம் செய்து, அமெரிக்காவிலேயே குடியேறிய மகனின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு நடக்கும் சில கடத்தல்களை, தனது பாணியில், அங்குள்ள நண்பனோடு சேர்ந்து ஆராய்கிறார். கண்டுபிடிக்கிறாரா என்பதுதான் கதை. 



படத்தில் இசையமைப்பாளர் உட்பட நிறைய பேர் MITயில் படித்தவர்கள். அவர்களுக்காக பார்த்தேன். பரவாயில்லை. எதிர் பார்த்ததை விட நன்றாகவே இருந்தது. விவேக், சார்லி அட்டகாசமான நடிப்பு. திறமையான நடிகர் சார்லி, நகைச்சுவை, குணச்சித்திரம் இரண்டிலும் கலக்கக்கூடியவர் அவர். இன்னும் பல நல்ல வாய்ப்புகளை அவருக்கு கிடைக்க வேண்டும். 

தில்லுக்கு துட்டு 2: 

பெரிதாக ஒன்றுமில்லை. ஊருக்குள் அட்டகாசம் செய்யும் நாயகனை சிக்க வைக்க, மந்திரவாதியின் பெண்ணுடன் காதல் வர வைக்கின்றனர். காதல் என்றாலே கொல்ல துடிக்கும் பேயைத் தாண்டி, எப்படி நாயகியை திருமணம் செய்கிறார் நாயகன் என்பதுதான் கதை. 



என் பெண்ணிற்கு மிகவும் பிடித்த படம். தொடர்ச்சியாக நான்கைந்து முறை கூட பார்க்கிறாள். அதிலும் இரண்டாம் பாதியின், இரண்டாம் பாதி, அதாவது பேய் வீட்டிற்கு போன பிறகு நடக்கும் காட்சிகள் வயிற்றைப் பதம் பார்க்கும். நிச்சயம் பொழுதுபோக்கிற்கு உகந்த படம். 

இவை தவிர, தப்பித்தவறி கூட பார்த்து விடக்கூடாத படங்கள் சில உள்ளன. 

பொட்டு: யப்பா, முடியலடா சாமி. மனசுல பெரிய லாரன்ஸ் அப்டின்னு நெனப்பு போல. 

தேவ்: என்னவாம். ஒண்ணுமில்ல. சும்மா ஊர் சுத்துனாங்களாம். அப்ப எடுத்த கொஞ்ச நஞ்சத்த படம்னு சொல்றாங்க. 

கண்ணே கலைமானே: நெடுத்தொடரை விட தூரமாக போகிறது, போகிறது. கடைசியில் படம் முடியவில்லை, அதுதான் கொடுமை. 

பூமராங்: Face/off ஒரு சிட்டிகை. தெலுங்கில் வந்த எவடு இரண்டு கரண்டி, கடைசியாக கொஞ்சம் கத்தி படத்தை போட்டு கடைந்தால், பூமராங். 

ஐரா: இருப்பதிலேயே பெருங் கொடுமை இதுதான். கருப்பு நயன்தாரா, வெள்ளை நயன்தாராவை பழி வாங்க ஒரு காரணம் வரும் பாருங்கள். பொதுவாக கடைசியாக வரும் திருப்பங்கள், படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும், பரவாயில்லை என்று தோன்றும். ஆனால் இதில், அப்படியே தலைகீழ். 

அவ்வளவுதாங்க. கண்டிப்பாக குறிப்பிட்டுள்ள படங்களை பாருங்கள்.  

Sunday, April 14, 2019

தேர்தல் களவரம்!

இதோ, அடுத்த திருவிழா ஆரம்பித்து விட்டது. இதில் நாம் வழக்கம் போல பெரிய ஆர்வம் காட்ட மாட்டோம். ஏனென்றால், நமக்கு இதில் பெரிய பலன் இருக்காது. எப்படி என்று கேட்கிறீர்களா? ஒவ்வொன்றாக பார்ப்போம். யார் வென்றாலும், ஆட்சி அமைத்தாலும் சரி, நம்மூரில் வெல்பவர்கள் எதிரணியாகவே இருப்பார்கள், 

அது மட்டுமில்லாமல், எப்படி இருந்தாலும், நாம் தமிழர்கள், அவர்கள் வட நாட்டவர்கள். காவிரியாக இருந்தாலும், முல்லை பெரியாறாக இருந்தாலும், நமக்கு எதிராகவே செயல்படுவார்கள். காலம் காலமாக நடப்பதுதான். 

அனைத்து சமூக வலைத்தளங்களிலும் 50 ஆண்டுகால திராவிடத்தால் வீழ்ந்தோம், இல்லை இல்லை வாழ்ந்தோம் என்று மோதிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் வாழ்ந்தோமா இல்லையா என்பதை என் சிற்றறிவுக்கு எட்டிய வரை சொல்கிறேன். 

இன்னொன்று, நான் வெளிமாநிலங்களில் ஒரே ஒரு வருடம், அதுவும் மைசூரில் வேலை பார்த்தேன். ஒரு சில மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளேன், அவ்வளவே. மற்றபடி எல்லாமே ஏட்டறிவே. திராவிட புரட்சியாளர்களைப் பாருங்களேன், நீட் தேர்வு, எய்ம்ஸ் பற்றி பேச்சு வரும்போதெல்லாம் தமிழகம் எப்படியெல்லாம் முன்னேறியுள்ளது என்று பேசுவார்கள், ஆனால் டெங்கு வரும்போது தமிழகம் மருத்துவத்துறையில் பயங்கரமாக பின் தங்கியுள்ளது என்பார்கள். இவர்களுக்கு இதே வேலைதான். சரி விடுங்கள். 

புள்ளி விவரங்கள் அடிப்படையில் பார்த்தால், தமிழகம் மற்ற மாநிலங்களை விட எவ்வளவோ பரவாயில்லை. அதற்காக முதலிடம் என்றும் சொல்ல முடியாது. முதல் 5 இடங்களுக்குள் கண்டிப்பாக இருக்கும். இவை எல்லாவற்றிக்கும் காரணம், அடித்தளம் என்பது இரண்டு பேர்தான். காமராஜர், பெரியார். 

கிராமப்புறங்களில், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில், குறைந்தபட்சம் எழுதப்படிக்க தெரிந்தவர்களிடம் கேளுங்கள், காமராஜர் பற்றி சொல்வார்கள், அதே போல பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் பெரியார். பெரியார் என்னத்தைக் கிழித்தார், மகளைக் கல்யாணம் செய்தார் என்று பேசுவோர் எல்லாம் கூறுபவர்களைப் பார்த்தால் சிரிப்பாக வரும். அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல என்பதை அவரே சொல்லி இருக்கிறார். அவரைப்பற்றி பிறகு தனிப்பதிவில் பார்ப்போம். 

காமராஜர் திராவிட கட்சி இல்லையே, பெரியார் அரசியல்வாதி இல்லையே என்பவர்களுக்கு, உண்மைதான். அடித்தளமிட்டவர்கள் இவர்கள்தான். ஒரு வேளை சோறு கிடைக்குமே என்று பள்ளிக்கு சென்றவர்கள், இன்று இருக்கும் நிலைமையே வேறு. இவர்கள் போட்ட சாலையை அகலப்படுத்தியது கருணாநிதிதான்

ஆனால், ஒரு கட்டத்தில் ருசி கண்ட பூனையாக மாறி விட்டார்கள். எம்ஜிஆர் வருவதற்கு முன் தனியார் கல்லூரிகள் குறைவு. அவர் அனுமதி கொடுத்த பிறகு, எப்படி பணம் பார்ப்பது என்பதைக் கண்டு பிடித்த பிறகு தடம் மாறியது. அடுத்தடுத்த ஆட்சிக்காலங்களில் இன்னும் மோசமாக மாறி விட்டது. நம் மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக 'நமக்கென்ன வந்தது' மனநிலைக்கு வந்து விட்டார்கள். 

இவ்வளவு ஏன், முருகதாஸ் கூட கண்டிப்பாக அரசுப்பள்ளியில், அரசு கொடுத்த இலவச பஸ் பாஸ் வசதியைக் கூட பயன்படுத்தி இருக்கலாம். இப்போது இலவசங்கள் வேண்டாம் என்கிறார். மனிதன் ஒரு நிலையில் இருந்து கொஞ்சம் மேலே போன பிறகு, கீழே இருப்பவர்களைப் பார்த்தால் இளக்காரமாகாத்தான் இருக்கும். இன்னொன்று, நாம் எப்போது கடைசியாக உபயோகித்தோமோ, அதே நிலைமையிலேயே இன்னும் இருக்கும் என்று நினைக்கிறோம். இதுதான் சாதாரண மனிதனுக்கான பிரச்சினை. 

சரி விடுங்கள். யாருக்கு வாக்களிக்கலாம் என்று முன்பே ஒரு முறை எழுதியுள்ளேன். அதேதான் இப்போதும். "அப்ப நீ சொன்ன மக்கள் நல கூட்டணி என்னாச்சு பாத்தல்ல" என்பவர்களுக்கு, உண்மைதான். அது ஒரு உப்புமா கூட்டணி என்பது தெரிந்ததுதான். மாற்று சக்தி என்பதே நமக்கு இல்லை. 

உப்புமா என்றவுடன்தான் இப்போது உலாவும் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.உப்புமா வேண்டாம் என்று எல்லோரும் வேறு வேறு உணவுகளுக்கு மக்கள் வாக்களிக்க, கடைசியில் உப்புமாவே வெல்கிறதாம். மற்ற மாநிலங்களில் எப்படியோ, நம்மூர் மக்கள் வித்தியாசமானவர்கள். பார்ப்போம். 

மீண்டும் சொல்கிறேன். மாற்றம் ஒரே நாளில் நிகழாது. 

Sunday, February 3, 2019

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

அனைவருக்கும் வணக்கம். தீபாவளி வந்ததே தெரியவில்லை. அதற்குள் பொங்கலே முடிந்து விட்டது. முன்பு ஒரு முறை வேலை பற்றி சொன்னேன் அல்லவா. இப்போது மீண்டும் பழைய நிறுவனத்திற்கே வந்து விட்டேன், நான் வந்த நேரமோ என்னவோ தெரியவில்லை. ஒரு மொக்கை வேலையில் மாட்டி கிட்டத்தட்ட ஒரு மாதம் எல்லா நாளும் அலுவலகம் செல்ல வேண்டி வந்து விட்டது. இப்போதுதான் கொஞ்சம் விடுதலை கிடைத்தது போல உள்ளது. 

அக்கரைப்பச்சை என்பது எப்போதும் உண்மைதான். எப்படியோ இந்த ரணகளத்திலும் கொஞ்சம் கிளுகிளுப்பாக ஏதாவது பதிவிட வேண்டும் என்று தோன்றுகிறது. வருடா வருடம் ஏதாவதுஒரு சபதம் எடுப்பதற்கு பதில், ஒவ்வொரு வருடமும் ஒரே சபதம் தான். இந்த வருடமாவது ஒழுங்காக பதிவிட வேண்டும் என்பதுதான் அது. முதல் மாதமே விட்டு விட்டேன். பார்ப்போம். 

விமர்சனங்கள்: 

பேட்ட: நான் முன்பே நிறைய முறை சொல்லியுள்ளேன். சிறு வயதிலிருந்தே கமல் ரசிகன். ஆனாலும், ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, மனிதன் போன்ற படங்கள் எப்போது போட்டாலும் விரும்பிப் பார்த்த காலங்கள் உண்டு. பேட்ட பார்க்கும் போது அப்படிதான் உணர்ந்தேன். இரண்டாம் பாதி நீளம், நிறைய லாஜிக் குறைபாடுகள் என்று இருந்தாலும் 3 மணி நேர பொழுது போக்கிற்கு உத்திரவாதம் உண்டு. கடைசி நேர 'கார்த்திக் சுப்பாராஜ்' வகை திருப்பம் இருந்தாலும், மற்றபடி பெரிய திரைக்கதை திருப்பமெல்லாம் இல்லை. ஓட்டைப் பானையாக இருந்தாலும், தங்கப்பானை அல்லவா. 

விசுவாசம்: படத்தில் அடுத்து என்ன காட்சி வரும் என்பதை என் 6 வயது மகளே சொல்கிறாள். அவ்வளவு அரதப்பழசான திரைக்கதை. படத்தின் நீளம் மட்டுமே படத்தின் பலம். 

சர்க்கார்: இது இன்னொரு வகையான மொக்கை. முருகதாஸ் தன்னை இன்னொரு ஷங்கர் என்று நினைத்துக் கொள்கிறார் போல. 

2.O: துள்ளுவதோ இளமை படத்தில் எல்லா தவறையும் செய்த பிறகு இறுதியில் இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று விஜயகுமார் சொல்வார். அதே போல தேவையில்லாத ஆணியெல்லாவற்றையும் பிடுங்கி விட்டு, கடைசியில் "சோறு வைங்க, தண்ணி ஊத்துங்க" என்று சொல்வது என்ன வகையோ. பேய்ப்படமும் இல்லாமல், தொழில்நுட்பமாகவும் இல்லாமல் இரண்டுக்கெட்டானாக உள்ளது. என் மகள் முப்பரிமாண முறையில் ரசித்துப் பார்த்தாள். 

இவை அனைத்துமே திரையரங்கம் சென்று பார்த்தோம். உண்மையில் கொடுத்த பணத்திற்கு 3 மணி நேர பொழுதுபோக்கிற்கு பரவாயில்லை. 

செக்கச் சிவந்த வானம்: மதனின் 'வந்தார்கள் வென்றார்கள்' படித்திருப்பார் போல மணிரத்னம். பதவிக்காக தந்தை, சகோதரர்களையே கொல்லும் அளவிற்கு செல்லும் மகன்கள், திருப்பம் தரும் தளபதி என்று அடுத்த வலது, உடனே இடது என தெரிந்த திருப்பங்கள்தான் உள்ளன. 

மற்றபடி இன்னும் ராட்சஸன், வட சென்னை, பரியேறும் பெருமாள் படங்கள் கண்டிப்பாக தவற விடக்கூடாதவை. அடங்க மறு, கனா, துப்பாக்கி முனை, ஜருகண்டி, திமிரு புடிச்சவன் படங்களை கண்டிப்பாக பார்க்கலாம். வருத்தப்பட வைக்காத படங்கள். 

இசை:

இளையராஜாவைப் பார்த்தால் பாவமாக உள்ளது. ஏதோ ஓரிரு கல்லூரிகளுக்குத்தான் செல்கிறார் என்று பார்த்தால், எல்லா கல்லூரிகளுக்கும் சென்று 'நான் மட்டுமே இசையமைப்பாளர், ஆனால், எனக்கு இசை பற்றி ஒன்றுமே தெரியாது' என்று சொல்லி வருகிறார். 

இப்போதெல்லாம் இளையராஜாவிடம் எந்த இயக்குனர் சென்றாலும், அவரது பேச்சுக்கு மறு பேச்சு சொல்லாமல் எந்த இசை கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறார்கள் போல. அதனாலேயே பாடல்கள் மனதில் பதிய மறுக்கின்றன. இருந்தாலும் பின்னணி இசையில் மனிதன் இன்னும் பின்னுகிறார். 

எனக்கு அவர் படங்களை எல்லாம் விட்டு விட்டு How to Name it போல தனி இசைக்கோர்வைகளை வெளியிடலாம். இன்னும் அவரிடம் உள்ள திறமைகளை அவரே வெளிக்கொண்டு வரலாம். ஞானி, எல்லாம் அறிந்தவர், இசைக்கடவுள் என்ற புகழ்ப்போர்வையை வைத்து அவரது திறமைகளை மூடி வைத்து விட்டனர். பார்ப்போம். 

ரஹ்மான் வர வர பின்னுகிறார். சர்க்கார், செக்கச்சிவந்த வானம், 2.ஓ படங்களில் நிஜமாகவே அவரது பின்னணி இசை அட்டகாசம். நான் கடைசியாக ரஹ்மானின் பாடல்களைக் ஒழுங்காக கேட்டது 24 படத்தில் தான். இப்போது மீண்டும் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கும் வகையில் இருந்தது இப்போதுதான். 

யுவன் எல்லாம் சராசரியாக மாறி விட்டார். அனிருத் பட்டையை கிளப்புகிறார். இப்போதைக்கு என் பெண்ணிற்கு பிடித்த பாடல் 'மரணம் மாஸு மரனம் பாடல்தான். வருங்காலங்களில் எப்படி மாறுகிறது என்று பார்ப்போம்.