Sunday, November 20, 2022

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

இன்னும் பதிவுகளைத் தேடிவரும் பதிவர்களுக்கு வணக்கம். மாதத்திற்கு ஒன்று என்று எண்ணியது வருடத்திற்கு ஒரு முறை என்று மாறி விடும் போல. இருந்தாலும் பரவாயில்லை, தோன்றும்போது எழுத வேண்டியதுதான். 

இளையராஜா:

கமல் எப்போது கட்சி ஆரம்பித்தாரோ, அப்போதே அவர் மீது இருந்த மதிப்பு போய் விட்டது. இப்போது ராஜா மீதும்தான். வெற்றிமாறன் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். நடு நிலை என்று கிடையாது. அது மறைமுகமாக ஒரு நிலைக்கு ஆதரவாக இருப்பதுதான் என்றான். யோசித்துப் பார்த்தால் அது உண்மைதான். இன்னொரு உண்மையும் என்னவென்றால், நாம் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு செல்லும்போது நம்முடைய கருத்தும், அரசியல் நிலைப்பாடும் மாறுகிறது. 


இட ஒதுக்கீட்டில் படித்த நானே, வீடு, நல்ல வேலை வந்தவுடன் இப்போது இட ஒதுக்கீடு தேவையில்லை என்று எண்ண ஆரம்பித்து விட்டேன். கல்லூரி திரைப்படத்தில், மிக அழகாக இதனைக் காட்சிப்படுத்தி இருப்பார்கள். எத்தனை தலைமுறைகளாக மறுக்கப்பட்ட கல்வி, வேலை ஒரு தலைமுறையில் கிடைத்தவுடன் நமக்கு எல்லாமே கிடைத்து விட்டது போல எண்ணம் வந்து விட்டது. சரி வழி தவறி வந்து விட்டேன். இதைப்பற்றி பின்னர் விரிவாக பார்க்கலாம். 


எனக்கு பொழுது போகாத போது விக்கிப்பீடியாவில் பழைய படங்கள் பற்றி படித்துக்கொண்டிருப்பேன். அதில் பல படங்களில், ராஜாவின் இசையைப் பற்றி சொல்லி இருக்கவே மாட்டார்கள். அப்படியே இருந்தாலும், நன்றாகவே இல்லை, கேவலமாக உள்ளது, என்றுதான் இருக்கும். அனைவருக்கும் தெரியும், ஒரு மனிதனுக்கு பாராட்டு எவ்வளவு முக்கியம் என்று. ஆனால், ஊரே உங்களை பாராட்டும்போது பெரிய ஆட்கள் எல்லாம் உங்களை அழுத்தும்போது கண்டிப்பாக நீங்களே உங்களை பற்றி பெருமையாக பேச ஆரம்பிப்பீர்கள். அதுதான் ராஜாவுக்கும் நடக்கிறது. 

"உன் பின்னாடி எல்லாம் வர வேண்டி இருக்கு, எல்லாம் என் தலையெழுத்து" என்று வந்தால், "அப்படியா, உன்ன கொஞ்சம் வச்சு செஞ்சாதான் திருந்துவ" என்ற கண்டிப்பாக எண்ணி இருப்பார். அதன் விளைவே ரஹ்மான். எனக்கு தெரிந்து ரஹ்மான் ராஜாவை நேரில் பார்த்துப் பழகியதால் தான் இன்னும் அடக்கி வாசிக்கிறார் என்று நினைக்கிறேன். 

ராஜா இதற்கு மேல் சாதிக்க வேண்டும் என்று கிடையாது. ஆனால், இப்போது ஒரு சார்பு நிலை எடுத்ததால், இனி அவருக்கு எந்த விருது கிடைத்தாலும் அது அவருக்கு பெருமையாக இருக்காது. அந்த வகையில் எனக்கு வருத்தம்தான். 

விமர்சனம்:

இப்போதெல்லாம் வீட்டிலிருந்து வேலை செய்யும்போதும், சனி ஞாயிறு என எல்லா நாளும் குறைந்தது 3 படங்களாவது பார்த்து விடுகிறேன். இந்த வருடம், இதுவரை எந்த விமர்சனமும் போடவே இல்லை. யாரும் இப்போது படிப்பதற்கு ஆர்வம் காட்டுவது இல்லை. யூடியூபில் கூட ஷார்ட்ஸ் தான் நிறைய பார்க்கிறார்கள். ஒரு மனிதனின் கவனம் இப்போது 8 நொடிகள் மட்டுமே. அதற்குள் அவர்களை கவர வேண்டும். அடச்சே. மறுபடியும் மாறி மாறி போகிறேன். 

சரி, இந்த வருடம் இதுவரை வந்த படங்களில், மிகவும் பிடித்தது என்று எதுவும் இல்லை. தமிழில் டைரி, சர்தார், திருச்சிற்றம்பலம் படங்கள் எனக்கு கொஞ்சம் பிடித்திருந்தன. ஆனால், மலையாளத்தில் நிறைய படங்கள். ஒவ்வொன்றும் அட்டகாசமாக உள்ளன. ஒரு வரி கதையை வைத்துக்கொண்டு எப்படி எடுக்க முடிகிறது என்பதுதான் ஆச்சரியம். மற்ற மொழிகளில் இப்படி எடுத்தாலும், மலையாளத்தில் மிக அதிகம். 

தள்ளுமாலா (பல்ப் பிக்சன் பாதிப்பு), ஜன கன மன, Rorschach, நீதான் கேஸ் கொடு, சல்யூட், புழு, தீர்ப்பு என நிறைய படங்கள். அதிலும் மம்முட்டி இந்த வருடம் இறங்கி அடித்துள்ளார். அதன் பிறகு பிரித்விராஜும், துல்கரும். அதிலும் புழு மற்றும் Rorschach படங்களில் மம்முட்டி ஏற்றுள்ள வேடங்கள், உண்மையில் கமல் கூட நடிப்பாரா என்பது சந்தேகம். முடிந்தால் பார்க்கவும். இப்போதைக்கு அவ்வளவுதான். 

கொஞ்சம் விரிவான விமர்சனங்களோடு மீண்டும் பதிவிடுகிறேன்.