Friday, December 4, 2009

சூப்பர் நாவல் - சுபா

அனைவருக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!

க்ரைம் நாவல் -ராஜேஷ் குமார் பற்றிய பதிவை படித்திருப்பீர்கள். உடனே,எனக்கு அடுத்து நினைவுக்கு வருவது சூப்பர் நாவல் - சுபாதான்.

சுபா
(சுரேஷ்-பாலா):

சூப்பர் நாவல், க்ரைம் நாவலைப் போலஅவ்வளவு சீரியஸாக இருக்காது. சில துணுக்குகள் இருக்கும். அது மட்டுமின்றி நாவலின் அட்டைப் படமும் ரணகளமாக இருக்கும். காரணம், புகைப்பட நிபுணர் கே.வி.ஆனந்த். அதன் பிரதி பலனாகவே, அவர் இயக்கும் படங்களுக்கு சுபா திரைக்கதை அமைக்கின்றனர் என்று நினைக்கிறேன். அது மட்டுமன்றி சூப்பர் நாவலில், சுரேஷ் பாலா இருவரும் நடுவில் சில காலம், அலுவல் காரணமாக பிரிந்திருந்த பொது நடந்த மடல்பரிமாற்றங்கள் வேறு தொடராக வந்தது.

சுபாவின் கதைகளில், துப்பறியும் காட்சிகள் நன்றாக இருக்கும். நம்மால் அதை மனதில் ஓட்டிப் பார்க்கும்படி விவரித்திருப்பார்கள்.பொதுவாக
எல்லா கதாசிரியர்களும் தங்களது கதைகளின் நாயகர்களாக ஒரே பாத்திரத்தை வைத்திருப்பார்கள். ஆனால், எனக்கு தெரிந்து சுபாவிற்கு இரண்டு விதமான நாயகர்கள்.

ஈகிள்ஸ் தனியார் துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்த நரேந்திரன் - வைஜெயந்தி, எம்.டி ராமதாஸ், ஜான்-அனிதா, அப்புறம் ஒரு நாய் (பெயர் மறந்து விட்டது), அவர்களின் காவல்துறை நண்பர் பால் ராஜ்.

நரேன் வைஜ் வரும் கதைகள், அவர்களது ஊடல்,கூடலுடன் அழகாக பயணிக்கும் எனக்கு அவர்கள் தோன்றும் கதைகள் படிக்கும்போது,அந்த கால கமல் ராதாதான் நினைவுக்கு வருவார்கள். அது மட்டுமின்றி, இணைபாத்திரங்களும் நன்றாக படைக்கப்பட்டிருக்கும்.நரேனின் நண்பனாக வரும் ஒரு இணை கதாபாத்திரத்தை, ஆரம்ப கால கதைகளிலேயே போட்டுத் தள்ளி விட்டார்கள். அதன் பின்தான் ஜான் பாத்திரம் வந்தது.

இன்னொரு நாயகன் செல்வா. செல்வா மற்றும்முருகேசன். ராணுவத்தில் குண்டடி பட்டதால் தனியே வந்து துப்பறியும் நிறுவனம் நடத்தும் பாத்திரம். முருகேசனும் அவனுடைய அத்தைகளும் பற்றி சுபா தனியே எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். செல்வா வரும் எல்லா கதைகளிலுமே வரும் நாயகி, செல்வாவுடன் சகஜமாக சுற்றி விட்டு, கடைசியில் 'எஸ்' ஆகிவிடுவார்கள். (கிட்டத்தட்ட வசந்த் போலவே).செல்வா முருகேசன் கதைகளில், கதை எப்போதும் செல்வாவின் பார்வையில்தான் பயணிக்கும். இந்த இரண்டு பாத்திரங்களும் இணைந்து கலக்கிய கதை ஏதோ ஒன்று மட்டும் படித்ததாக ஞாபகம். மக்கள் யாரேனும் படித்திருந்தால் கூறவும். நான் படமாக்க விரும்பும் கதையாக முதலில் சுபாவின் நாவலைத்தான் கூறியுள்ளேன்.

இன்னும் நிறைய பேர் உள்ளனர்.. விரைவில் வரும்.

Wednesday, December 2, 2009

க்ரைம் நாவல். ஆசிரியர் - ராஜேஷ் குமார்

யார்ரா இவன்?? பெரிய ______ மாதிரி சொல்ல வந்துட்டான்னு நெனக்காதீங்க... சும்மா எனக்கு தெரிஞ்சத சொல்லலாமுன்னு நெனச்சேன்.. அம்புட்டுதேன்.. அதுவுமில்லாம, நான் சொல்ல வந்தது நம்ம மாத நாவலாசிரியர்கள் பத்திதேன்.. நெறைய சொல்லனுமுன்னு ஆசங்க.. கொஞ்ச கொஞ்சமா சொல்றேன்..

ராஜேஷ் குமார்:

ஒரு காலத்தில், ராஜேஷ் குமாரை விட சிறந்த நாவலாசிரியர் உலகத்திலேயே கிடையாது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அந்தளவிற்கு வெறித்தனமான ரசிகனாக இருந்தேன். அவரது மாத நாவல் 'க்ரைம் நாவல்'. எனக்கு தெரிந்து தமிழ் மாத நாவல்களில் விலை அதிகமானதும், அதிகம் விற்பனையாவதும் அதுதான். எனவே, அப்போது பழைய புத்தக கடைதான் அந்த நாவலுக்கு. பழைய புத்தக கடையில், மற்றவர்களின் புத்தகங்கள் பாதி விலை என்றால், ராஜேஷ் குமாரின் நாவல் மட்டும், பாதிக்கு மேல், ஒரு ரூபாய் அதிகம். இதிலிருந்து அவரின் பெருமை தெரியும் என்று நினைக்கிறேன்.

அந்த நாவலில் 'ட்ரங்க் கால்', 'விளக்கம் ப்ளீஸ் விவேக்' (இது தனியே புத்தகமாகவும் வெளியானது) மற்றும் அரட்டை (ஞாபகம் இல்லை) பகுதிகளும் நன்றாக இருக்கும். சமீப காலங்களில்தான் படிப்பது சற்றே குறைந்து விட்டது. பள்ளியில் படிக்கும்போது, வீட்டில் திட்டுவார்கள் என்று அங்கங்கே ஒளித்து வைத்த க்ரைம் நாவல்கள் இன்னும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அவரது நாவல்களில் வரும் துப்பறியும் நாயகன் விவேகானந்தன் என்கிற விவேக், புலனாய்வுதுறை உயரதிகாரி. அவரது மனைவி ரூபலா. காவல்துறையில் அவரது நண்பர் கோகுல் நாத். இப்போதெல்லாம், விஷ்ணு என்கிற உதவியாளரும். எனக்கு தெரிந்து, நாவலாசிரியர்களின் நாயகர்களில், விவேக் மட்டும்தான் அரசாங்க அதிகாரி. நிறைய முறை, ஸ்காட்லாந்து போலீஸால் துப்பறிய முடியாத வழக்குகளையும், விவேக் கண்டு பிடித்துள்ளார். பல வருடங்களுக்கு முன், ஒரு கதையில் நடந்த விவேக்-ரூபலா திருமணத்திற்கு மொய்ப்பணம் மட்டும் சில ஆயிரங்கள் தேறியதாக படித்துள்ளேன்.

விவேக் - ரூபலா வரும் நாவல் என்றால் எப்பாடு பட்டாவது அதை வாங்கி விடுவேன். ஊருக்குள், புத்தக மாற்று முறையில், விவேக் வரும் ஒரு புத்தகத்திற்கு, இரண்டு புத்தகங்களைக் கொடுத்தெல்லாம் வாங்கியுள்ளேன். அது மட்டுமன்றி, அவரது கதைகளின் தலைப்பு, எதுகை மோனையோடு இருக்கும். அஞ்சாதே அஞ்சு (இது தொடராக வந்தது), விட்டு விடு விவேக், தப்பு தப்பாய் ஒரு தப்பு, இந்தியனாய் இரு எனப் பல. அவரது இன்னும் சில நாவல்களும் தொலைக்காட்சியில் தொடராக வந்துள்ளன.

அவரது கதைகளில், தொழில் நுட்பங்கள் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும். கம்ப்யுட்டர், அதில் 'பாஸ் வேர்டு' என்ற பாதுகாப்பு உள்ளது என்பதெல்லாம் எனக்கு க்ரைம் நாவல் மூலம்தான் தெரியும். கிரிப்டோகிராபி பற்றியெல்லாம், தமிழில் பல வருடங்களுக்கு முன்பே எழுதியுள்ளார். தற்போது ஓரளவிற்கு விவரம் தெரிந்தாலும், அதற்கு முன்னோடி ராஜேஷ் குமார்தான். மற்ற தமிழ் கதாசிரியர்களுடன் பார்க்கும்போது, அவர் டெக்னிக்கலாக, சற்று முன்னுள்ளார் என்பது என் கருத்து.

பொதுவாக அவரது கதைகள் கடைசி இரு அத்தியாயங்களுக்கு முன் வரை பயங்கரமாக இருக்கும். கடைசியில் (என்னைப் பொறுத்த வரை) நம்ப முடியாமல் இருக்கும். பெரும்பாலும் இரு கதைகளாக பயணித்து, இறுதி அத்தியாயத்தில் ஒன்று சேரும். இதை கலாய்த்து, அவரே ஒரு கதை எழுதியுள்ளார். கடைசி வரை அவை இரு வேறு கதைகளாகவே வரும்.

ரமணா படத்தில் வரும் மருத்துவமனையில் பிணத்தை வைத்து வியாபாரம் செய்யும் காட்சி, அதற்கு ரொம்ப நாள் முன்பே அவரது கதையில் வந்து விட்டது. படத்தில் அதற்காக நன்றி தெரிவித்தது போல தெரியவில்லை. யாரும் அதைப் பற்றியும் சொல்லவும் இல்லை.

திரையுலகில் அவரது எந்த கதையும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. தற்போது ஏதோ ஒரு படத்திற்கு (படத்தின் பெயர் அகராதி) கதை, திரைக்கதை அமைத்துள்ளார். மேலும் ஆனந்த விகடனில் ஒரு தொடரும் எழுதி வருகிறார். (தலைப்பு: இனி, மின்மினி). விவேக், அவரது உதவியாளர் விஷ்ணு துப்பறியும் கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.அவரைப் பற்றி இன்னொரு பதிவு இங்கே.