Friday, March 31, 2017

அக்கரைச் சீமை திரையினிலே!

ஒன்றுமில்லை. முன்பு எழுதிய பதிவு போலவே பிற மொழி திரைப்படங்கள் பற்றிய பதிவுதான். பேருதான் சும்மா. சரி, பார்ப்போம்.

பிங்க் (Pink) - ஹிந்தி:


"ஒரு பெண் முடியாது என்று சொன்னால், அதன் அர்த்தம் முடியாது என்பதுதான்", இதுவே படத்தின் கரு. ஒரு பெண், தனது நண்பிகளுடன் இரவு வெளியே இருந்தபோது மானபங்கப்படுத்தப்பட்டாள் என்று கேள்விப்பட்டவுடன், "அந்த நேரத்துல பொண்ணுங்க ஏன் வெளிய போனாங்க" என்று என்னும் சராசரி ஆண்தான் நான். என்னதான் வெளியே பெண்ணீயம் பேசினாலும் "நான் ஆம்பளடீ" என்று வீட்டில் கத்தியிருக்கிறேன்.

சரி அத விடுங்க. வழக்கம் போல முழுக்க முழுக்க நீதிமன்றத்தில் நடக்கும் கதை. என்ன நடந்தது, என்பது படம் பார்க்கும் நமக்கும் அவர்கள் பேசுவது மூலம் நாமே அனுமானித்துக் கொள்ள வேண்டியுள்ளது. கொஞ்சம் ஜாலி LLB நினைவுக்கு வந்தாலும், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். அமிதாப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஏன் இது போன்ற படங்கள் தமிழில் வருவதில்லை என்றால், கண்டிப்பாக ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும். நடிப்பாரா, நடித்தாலும் பிளாஷ் பேக்கில் ஒரு சண்டை வேறு வைக்க வேண்டும். எனக்காக இல்லப்பா, ரசிகர்களுக்காக.

தங்கல் யுத்தம் - படத்தின் முன்னோட்டத்திலேயே முழுக்கதையும் வந்து விட்டது. ஆனாலும் 3 மணி நேரம் நம் கவனம் சிதறாமல் பார்க்க வைத்த படம். தனியாக அலசுகிறேன்.

யு - டர்ன் (U-Turn) கன்னடம்:


பொதுவாக இந்த சமூகத்தோடு நான் பொதுவாக இணைந்திருப்பது சாலைப் பயணங்களில்தான். அதைப் பற்றிய ஒரு பதிவின் மூலம்தான் நான் அகில உலக புகழ் வேறு அடைந்தேன். "இதுல என்ன பெருசா நடந்திட போகுது" என்று செய்யும் சில காரியங்கள் ஏற்படுத்தும் விளைவுகள்தான் இந்தப் படம்.

பெங்களூருவில்,ஒரு மேம்பாலத்தில் கொஞ்ச தூரம் போய்த் திரும்ப சங்கடப்பட்டு, நடுவில் வைத்திருக்கும் கல்லை எடுத்து நகர்த்தி விட்டு செல்பவர்கள் திடீரென மரணமடைகிறார்கள். சாலை விதிகளை மீறுவோர் பற்றி ஒரு கட்டுரை எழுத ஒரு பெண் நிருபர் அந்த மேம்பாலத்தை தேர்ந்தெடுக்கிறார். விதிவசத்தால் அவர் பலிகடா ஆகிறார். ஏன், எதனால் என்பதுதான் இந்தப் படம். பொதுவாக ஒரு விபத்து நடந்தால், அடுத்து என்ன நடக்க வேண்டும் என்று நான் நினைத்தேனோ அது இந்தப் படத்தில் நடக்கிறது. கண்டிப்பாக பார்க்கலாம்.

கம்மட்டிப்பாடம் (Kammattipadam) மலையாளம்:


மலையாளத்தின் 'மெட்றாஸ்' திரைப்படம். இதிலும் நாயகனின் நண்பன் கொல்லப்படுகிறான். இறுதியில் வழக்கம் போல தெரிவது, கொன்றவன் எதிரி அல்ல, துரோகி என்பது. ஆனால், இதில் இளம் பருவம் முதல், வாலிபம் மற்றும் வயதானவரை நம்மையும் கூடவே அழைத்து செல்வதுதான் படத்தின் பலம். நண்பியாக இருந்தாலும், சாதி காரணமாக ஒடுக்கப்படுவது, ஆதிக்க சக்தியின் ஆக்கிரமிப்புகள் என பல விஷயங்கள் உள்ளன. சற்று பொறுமையாக பார்க்க வேண்டிய படம்.

ஒழிவுதிவசத்தே களி: படம் என் பொறுமையை மிகவும் சோதித்தது. ஆனால், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்பதை இந்தப் படத்தின் மூலம்தான் தெரிந்து கொண்டேன். இதே சாதி வெறி பற்றிய படம்தான், அடுத்த மராத்திய படம்.

சாய்ராட் (Sairat) மராத்தி:


இளையராஜா இரண்டு மராத்திப் படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்று செய்தி வந்தபோது கூட படம் பார்க்க தோன்றவில்லை. ஆனால், இந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள் இளையராஜாதான் எங்கள் மானசீக குரு என்று பேட்டி கொடுத்த போதுதான், "பார்றா" என்று தோன்றியது. ரொம்ப நாள் கழித்து நல்ல பிரிண்ட் வந்தவுடன்தான் பார்த்தேன்.

"ஆதலால் காதல் செய்வீர்" படம் பார்த்திருந்தால், அதில் கடைசியில் வரும் பாடல், இதிலும் அருமையாக பொருந்தும். படம் சொல்லும் செய்தி, இந்த உலகம் அழிந்தால்தான் அது போன்ற விஷயங்கள் நடக்காமல் இருக்கும். படமும் உங்களுக்கு "காதல்" படத்தை நினைவூட்டும்.

ஆணவக்கொலை, கவுரவக்கொலை என்று என்னென்ன சொன்னாலும் அதன் இன்னொரு பெயர் பொறாமைதான். எப்போதும் நம் உதவி எதிர்பார்க்கும் குழந்தை, நம் உதவி இன்றி ஒரு வேலையை செய்தவுடன் எப்படி உற்சாகப்படுத்துவோம், அதை விட்டு விட்டு அரிவாளா தூக்குவோம். அதையே வளர்ந்த பின் செய்தால் மட்டும் ஏன் வெறுக்கிறோம்.

"அப்பன், ஆத்தா பாத்து கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்களா? எதுக்கு இப்படி அலையனும்" என்று எண்ணினால், மன்னிக்கவும்.

பெல்லி சூப்புலு (Pelli Chooppulu) - தெலுங்கு:


இதுவரை பார்த்த படங்கள் எல்லாமே, சற்று மனதை உலுக்கும் வகை. "கொஞ்சம் ஜாலியா ஏதாவது சொல்லுங்களே" என்றால் இந்தப் படம்தான். "ஆஹா கல்யாணம்" என்று ஒரு படம் வந்ததே, அதே போலத்தான் இதுவும். ஆனாலும் ஓர் 'Feel Good' படம்.

தவறான வீட்டிற்கு பெண் பார்க்க செல்லும் நாயகன், நாயகியுடன் தனியறையில் மாட்டிக்கொள்கிறான். கூடவே ஒரு சிறுவனும் இருப்பதால் 'A' படம் ஆகவில்லை. பின் உண்மை தெரிந்து சென்று விடுகின்றனர். ஆயினும் அவரவர் லட்சியம் என்ன என்பதை அடுத்தவருக்கு உணர்த்தி விடுகின்றனர். அதன் பின் நடப்பதே படம். கண்டிப்பாக பார்க்கலாம்.

"என்னப்பா இவ்ளோ சொன்ன. ஒரு தமிழ் படம் கூட சொல்லலியே" என்பவர்களுக்காக,

பைரவா - பை ரவா அண்ட் டூ உப்புமா.
ரம் - கொடூரம்
யாக்கை - மொக்கை
பகடி ஆட்டம், என்னோடு விளையாடு - ரெண்டுமே போங்காட்டம்
போகன் - ஸ்ஸ், முடியல
சி3 - காது வலி
அதே கண்கள் - இலுப்பைப்பூ.

அவ்வளவுதான்.