Sunday, February 17, 2013

விஸ்வரூபம் - விமர்சனமும் உள்ளது


போன பதிவில்,கமல் இனி மற்ற நடிகர்கள் போல மசாலாப் படங்களை கொடுக்க வேண்டுமென சொல்லியிருந்தேன். நிறைய (சரி சரி, ஒரு சில) கண்டனங்கள். அந்த வார்த்தைகள், எனக்குப் பிடித்த ஒருவருக்கு வந்த கஷ்டங்களால், "ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்கள், மற்றவர்களைப் போலவே இருந்து விடலாமே" என்ற ஆதங்கத்தில் வந்தது. அது மட்டுமில்லாமல், அந்த பதிவே, ஒரு விளம்பரம்தானே.

நான் கமலின் தீவிர ரசிகன். இணையத்தில் இணைந்த பிறகு, அதுவும் பதிவர் ஆன பிறகு, கமலின் எனக்குப் பிடித்த படங்கள் ஆங்கிலப் படங்களின் தழுவல் என்று தெரிந்த பின்னரும் கூட நான் கமலின் ஆதரவாளன்தான். இந்த பிட்டைப் படியுங்கள்..

கமல் பதில்கள் ஆனந்த விகடனில் வந்த போது, ஒரு வாசகர் நேரடியாக ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். "உங்களுடைய படங்கள் நிறைய ஆங்கிலப் படங்களின் தழுவல் என்று இணையத்தில் நிறைய விவாதங்கள் நடக்கின்றனவே. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன" என்று கேட்டிருந்தார். அதற்கு கமல் சொன்ன பதில் "என்னுடைய படங்கள் அப்படி இல்லை. அவை அனைத்தும் என்னுடைய் குழந்தைகளே" என்பது போல சொல்லியிருந்தார். ஆனால், அவர் கழுவலில் நழுவல் போல கூட பதில் சொல்லவில்லை. இல்லை என்பதையே அழுத்தி சொல்லியிருந்தார். எனக்கு அது அவர் மீதிருந்த மரியாதையை சற்றே குறைத்து விட்டது. அவர் 'இருந்திருக்கலாம்' என்று சொல்லியிருந்தால் கூட, ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், மறுக்கவில்லை அல்லவா என்று சப்பைக்கட்டு கட்டலாம். ஆனால், கமல்?

இருந்தாலும் கமலை என்னால் விட்டுத் தர முடியவில்லை. ஏனென்று தெரியவில்லை. எதையாவது நோட்டை, நொள்ளை சொல்லும் நாம் நம்மைச் சார்ந்தவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், எப்படியாவது சப்பைக்கட்டு கட்டத்தான் பார்க்கிறோம். லஞ்சத்தால் நாடு அழிகிறது நாசமாய்ப் போகிறது எனும் நாம், நமது சகோதரன் டிராபிக் போலீசிடம் மாட்டி விட்டு, நமக்கு போன் செய்து "லைசென்ஸ் இல்லன்னு 500 ரூபா கேக்குறாங்க" என்றவுடன், "50 இல்ல 100 குடு, விட்ருவான்" என்கிறோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சரியில்லை என்று சொல்லும் நம்மில் பல பேருடைய பெற்றோர்களோ, நெருங்கிய உறவினர்களோ கண்டிப்பாக அரசு ஊழியர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்படி என்பதைப் பற்றி நாம் யோசிக்க மாட்டோம். அதே போலத்தான் என்னைப் பொருத்தவரை கமலும். அவர் தப்பே செய்திருந்தாலும், எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.

கமலுக்கு ஒரு பிரச்சினை என்றவுடனே, பதிவுகளில் நிறைய பேர் கமலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பதிவுகள். சினிமாவைப் பிடித்தவர்கள் நிறைய பேர் கமலுக்கு ஆதரவளித்தனர். ஆனால், பல பேர் கமல் ஏதோ அவர்களுடைய குடும்பத்தை அழித்து விட்டது போல கமலுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்றெல்லாம் கூவினார்கள். யாரோ ஒருவர் DtHல் 300 கோடி வசூலித்தது என்று கொளுத்தி விட, பல பேர், எப்படி, கூட்டி, கழித்துப் பார்த்தாலும் அவ்வளவு வரவில்லையே, (x+y)*(a+b)=a+b+c, ம்ம், எப்படி பாத்தாலும் கணக்கு தப்பா வருதே என்றெல்லாம் இன்னொரு திரி கொளுத்தினர். இதே சமயம் வேறு யாராவது தயாரித்திருந்தால் அவ்வளவுதான், "கமலுக்கு அடுத்தவன் காசுல ஆட்டம் போடறதே வழக்கமா போச்சு. தில்லிருந்தா சொந்த காசப் போட்டு, படம் எடுத்து இந்த மாதிரி பண்ண சொல்லேன்" என்பார்கள்.

ஒரு படம் வந்தால், பார்த்து விட்டு, நன்றாக இருக்கிறதா, இல்லையா என்று சொல்லலாம். அது அவரவர் கருத்து. அதை விட்டு விட்டு எவ்வளவு வசூலித்தது, DtHல் போட்டா வேஸ்ட் என்பதெல்லாம் நமக்கு தேவையில்லாதது. கமல் உங்கள் அலுவலகம் வந்து, உங்களுடன் அமர்ந்து, "என்ன கோடு அடிக்கிற, நல்லா பெரிய கோடா போடு, இந்த ப்ரோகிராம்ல நடுவுல விளம்பரம் வராதா" என்றெல்லாம் கேட்டால் எப்படி இருக்கும்?

ஒரு படம் என்பது ஒரு பொருள்தான். அதை மளிகை கடை மூலம் கொடுப்பதா, வீட்டுக்கு வீடு கொடுப்பதா என்பதெல்லாம், அந்த முதலாளியைப் பொறுத்தது. அதில் வரும் பிரச்சனைகளை, அந்த முதலாளியும், மளிகைக் கடைக்காரும் பேசி, தீர்த்துக் கொள்வார்கள். அதை விட்டு விட்டு, நாம் குறுக்கே போய், "நீ வீட்டுக்கு வீடு கொடுத்தா வாங்க மாட்டோம்" என்று சொல்லுவது நியாயமா? பிடிக்கவில்லையா, வாங்காதே.

"என்னது, சிவாஜி செத்துட்டாரா?, இந்தியாவுக்கு சுதந்திரம் கெடச்சிருச்சா?" என்று பின்னூட்டமிட வேண்டாம். நிறுத்தி விடுகிறேன். "ஒரு வெளம்பரம், இன்னும் பத்து நாள் கழிச்சி போட்டா யாரும் சீண்ட மாட்டாங்க இல்ல”, "இப்ப மட்டும் என்னவாம்" என்கிறீர்களா, அதுவும் சரிதான்.

விமர்சனம்: 

படம் இரண்டு நாட்களுக்கு முன், S2வில் பார்த்தேன். தமிழ்நாடு வெர்ஷன். இரண்டு தியேட்டரிலும் விஸ்வரூபம், நான் இருந்த தியேட்டர் காலை ஒன்பது மணிக்கு முழுதும் நிரம்பியிருந்தது. உண்மையில் கமல் முஸ்லிம் அமைப்புகளுக்கும், தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைக் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். ஒரு வேலை, சொன்னபடி பொங்கல் நேரத்தில் வெளி வந்திருந்தால், இந்த அளவு வெற்றி பெற்றிருக்குமா என்று தெரியவில்லை. கமலுக்கே 'லட்டு' தான் கிடைத்திருக்கும். படம் பார்த்த அனைவரும், "இந்த படத்தில் அப்படி என்ன உள்ளது என்று எதிர்த்தார்களாம்?" என்ற கேள்வியுடன்தான் வெளிவந்தனர். படத்தில் உள்ள ஓட்டைகளை யாரும் கவனிக்கவில்லை. கமலுக்கு நல்ல அறுவடைதான்.

ஒவ்வாத மணவாழ்க்கையில் உள்ள, கதக் நாட்டியக் கலைஞன். தனது மனைவியின் சந்தேகப் போக்கினால், இருவருக்கும் ஆபத்து ஏற்பட, தன்னொரு இன்னொரு முகத்தைக் காட்ட வேண்டிய நிலைமை. அது தோண்ட தோண்ட பூதம் போல ஆப்கானிஸ்தான் வரை போக, முடிவு என்ன என்று நானும் காத்திருக்கிறேன். எனக்கு சில சந்தேகங்கள்.

கமல் சார், படத்திற்கு பிரச்சினை வந்த பிறகு, இரண்டு பாகங்களாக பிரிக்கலாம் என்று முடிவு செய்தீர்களா அல்லது அதற்கு முன்னரேவா? ஏனென்றால், முதல் சண்டைக் காட்சியை மக்கள் எப்படி ரசிப்பார்கள் என்று தெரிந்து, முதலில் வேகமாகவும், பின் பாடலோடு இணைத்து, மெதுவான காட்சியமைப்பில் கொடுத்த தாங்கள், வில்லன் அழிக்கப்பட்டால்தான் மக்களுக்கு படம் முடிந்த திருப்தி வரும் என்பது தெரியாமல் இருக்காது. எனவே, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தீர்களா?

பொதுவாக ஒரு படம் இரண்டு பாகங்கள் என்றால், இரண்டையும் தனித்தனியாக பார்த்தாலும் புரிய வேண்டும், தொடர்ந்து பார்த்தாலும் புரிய வேண்டும், ஆனால், இதில் பல கேள்விகளுக்கு விடையளிக்காமல், இரண்டாம் பாகத்தையும் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும் என்றாக்கி விட்டீர்களே?

கமல் தன்னை ஒருவர் தொடர்ந்து வருகிறார் என்று தெரிந்தும், அவர் ஏன் தொழுகை செய்ய போகிறார்? அது மட்டுமின்றி, அவரை ஏன் அங்கே சிக்க வைக்க வேண்டும்?

பூஜா கமலை சில காரண காரியங்களுக்காக கல்யாணம் செய்தது போல, கமலும் அவரை ஒரு சில காரண காரியங்களுக்காக கல்யாணம் செய்தாரா? அதாவது, அவர் வேலை பார்க்கும் இடத்தில நடக்கும் தில்லு முல்லுகளைக் கண்டறிவதற்கு. (கமல், இது உங்கள் கதையுடன் பொருந்தியிருந்தால், என்னை உங்கள் உதவியாளனாக சேர்த்துக் கொள்வீர்களா?)

உமர் எப்படி கமல் ஒரு உளவாளி என்று கண்டு பிடித்தார்?

இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில், இரண்டாம் பாகத்தில் வந்து விடுமா அல்லது மூன்றாம் பாகம் வேறு உள்ளதா?

Tuesday, February 5, 2013

விமர்சனம் 2013!!

இந்த வருடம் இதுவரை வந்த படங்கள், ஒரு பார்வை. ரம் பம் பம் ஆரம்பம். சரி சரி ஓடாதீங்க. 

அலெக்ஸ் பாண்டியன்: இந்தப் படத்தை அனைவரும் கழுவி கழுவி ஊற்றி, நன்கு சுத்தமாக இருப்பதால், நான் எதுவும் சொல்லவில்லை. ஒரு சில கீச்சுக்கள் மட்டும்.

"அலெக்ஸ் பாண்டியனுக்கு நம்ம வடிவேலோட டெலெக்ஸ் பாண்டியன் எவ்வளவோ மேல். 

டிரீம்வொர்க்ஸ் அனிமேஷன்ஸ், ஸ்டுடியோ கிரீன் மீது வழக்கு. அலெக்ஸ் பெயருக்கு களங்கம் உண்டாக்கியதாக."


இந்த படம் வெளிவர, மற்ற படங்களைத் தடுத்ததாக சில செய்திகள். சூர்யா, கார்த்தி மீது ஒரு நல்ல எண்ணம் இருந்து வருகிறது. அந்த எண்ணம் போனால் எனக்கென்ன, இருந்தால் எனக்கென்ன என்கிறீர்களா. சரிதான். ஆனால், என்ன ஆகும் என்றால், தியேட்டர் போய் படம் பார்க்கும் எண்ணம் போய் விடும். சரி போகாதே என்கிறீர்களா.

சமர்: ஒரு வித்தியாசமான திரில்லர். இதையும் 'The Game' படத்தின் தழுவல் என்றெல்லாம் பதிவுகள். நான் என்ன நினைக்கின்றேன் என்றால், அங்கெல்லாம் போக வேண்டாம். "மேனியெல்லாம் சிறகுகள்" என்ற சுபாவின் கதை உள்ளது. அந்த புத்தகம் என்னிடம் இப்போது காணவில்லை. இல்லையெனில் அது எப்போது எழுதப்பட்டது என்பதையும் சொல்லியிருக்கலாம். அதுவும் இதே போல மனித உணர்வுகளுடன் ஆடும் விளையாட்டுதான். அதில் காட்டில் நடக்கும். இதில் வெளிநாட்டில் நடக்கிறது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா: பாக்கியராஜ் தனது மகனை வைத்து 'ரீமேக்' செய்ய திட்டமிட்டதாக சொன்னவுடன், "சார், உங்க பையன், உங்க கதை, நீங்க எடுக்கலாம், எங்கள பாத்தா உங்களுக்கு பாவமா இல்லையா?" என்றுதான் கேட்க தோன்றியது. நல்லா யோசிச்சுப் பாருங்க சார், நீங்க ஒரு தகப்பன் ஆனா பின்பு, இயக்குனரா உங்களால வெற்றி பெற முடியல. வேணாம் சார். எல்லோரும் நல்லாருப்போம். விட்ருங்க.

எனக்கென்னவோ, சந்தானம் முதலிலேயே பாக்யராஜிடம் போய், "சார் நீங்களே இயக்குங்க" என்று மட்டும் சொல்லியிருந்தால், படம் இன்னும் பயங்கர வெற்றி அடைந்திருக்கும் என்று தோன்றுகிறது. இருந்தாலும், பவரின் பவரால் வெற்றி.

கடல்: 'கடல் உள் வாங்கிருச்சாமே, கடல் - டல், கடல் அல்ல, கலங்கிய குட்டை, அடடே, கடலையே கழுவி கழுவி ஊற்றுகிறார்களே, கடல் பாத்ததுக்கு என்னைத் தூக்கி கடலில் தூக்கிப் போட்டிருக்கலாம், ரஹ்மான் என்ற கட்டு மரம் மட்டும் இல்லாவிட்டால், கடலில் மூழ்கியிருப்பேன்', என்று கடல் படத்தை அனைவரும் சொல்லிவிட்டார்கள்.

இருந்தாலும், எனக்கு பிடித்த ஒரு விமர்சனம், இன்னும் சொல்லப் போனால் ஒரு பன்ச். நம்ம அக்கிலீக்ஸ் அண்ணாச்சியோடதுதான்.

"கடல் பார்க்கணும்னு நினைக்கிறவங்க மெரினாவுகோ இல்லை வேற ஏதோ பீச்சுக்கோ போய் பார்த்துக்கோங்க. எங்க ஊர்ல பீச் இல்லன்னு சொல்றவங்க கடல் போட்டோவ வெறிச்சு வெறிச்சு பாத்துக்கோங்க ஆனா தியேட்டர் பக்கம் மட்டும் போய்டாதீங்க"


கீழே ஒரு கணக்கு உள்ளது. கூட்டிக் கழிச்சி விடை சரியா. சொல்லுங்க.

அர்ஜுன்+மம்முட்டி = வந்தே மாதரம், மொக்கை
மம்முட்டி+அரவிந்த் சாமி = புதையல், மகா மொக்கை.
அரவிந்த் சாமி+அர்ஜுன் = கடல், மரண மொக்கை.

எப்படி பாத்தாலும், நாமதான் பாவம் போலிருக்கே.

டேவிட்: 'ஒரு வீடு இரு வாசல்' படத்திற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? அதில் முதல் கதை முழுதும் முடிந்த பின் இரண்டாம் கதை வரும். கடைசிக் காட்சியில் இரண்டு கதைகளும் இணையும். இந்தப் படத்தில் நான் லீனியர், அதாவது மாறி மாறி வருகின்றன. மற்றபடி இரண்டும் மொக்கைதான்.

விஸ்வரூபம்: எப்படியும் தியேட்டரில் ஒரு முறை, எந்தெந்த காட்சிகள் கத்தரிக்கப்பட்டுள்ளன என்று பார்க்க திருட்டு சிடி, என்று நிறைய முறை பார்க்க வேண்டி இருக்கும். இதுவரை கமல் நடிப்பு(ம்) தவிர மற்ற துறைகளில் பங்கேற்ற படங்களில், கடைசியில் இருப்பது 'மன்மதன் அம்பு'. இது கண்டிப்பாக அதற்குக் கீழ் போகாது.

ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்து விட்டேன். இந்த நான்கு படங்களும் நான் இன்னும் பார்க்கவில்லை. சும்மா படித்தும், கேட்டும் தெரிந்தும் எழுதிய பதிவு. அம்புட்டுதேன்.