Wednesday, April 29, 2015

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

கடைசி 2 பதிவுகளும் கொஞ்சம் 'சீரியஸாக' போனதால், மக்களை மகிழ்விக்க கொஞ்சம் பிட்டு. "இதுக்கு அந்த மொக்கையே பரவாயில்ல" என்று எண்ணுபவர்களை விட்டு விடலாம்.

விமர்சனம்:

கடைசியாக 'ராஜ தந்திரம்'தான் காசு கொடுத்து பார்த்தது. அதன் பின் எந்தப் படத்தையும் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. படித்த விமர்சனங்களும் எந்தப் படத்தையும் பார்க்க வேண்டும் என தோன்ற வைக்கவில்லை. ஆனாலும் என்னுடைய சில கருத்துகள் மட்டும்.

கொம்பன்: இந்த இயக்குனரின் முந்தைய படமான ஒண்டிப்புலி, ச்சே குட்டிபுலி அவ்வளவாக பிடிக்கவில்லை. இந்தப் படமும் அதே போல தென் மாவட்ட கதைக்களம் என்பதால் பார்க்க தோன்றவில்லை.

வலியவன்: நல்ல கதைதான், மொக்கை திரைக்கதை. ஆனாலும் இயக்குனரின் ஊர்ப்பாசம் ("நாமக்கல் மாமா போன் பண்ணாரு") மட்டும் ரசிக்க வைத்தது. 40 நிமிடங்களில் இந்தப் படத்தை பார்த்து முடித்து விட்டேன்.

நன்பேண்டா: தரவிறக்கம் செய்து கொஞ்ச நேரம் பார்த்ததிலேயே நிறுத்தி விட்டு, படத்தை அழித்து விட்டேன்.

ஓ காதல் கண்மணி: எனக்கு எப்போதுமே மணி மேல் நம்பிக்கை இல்லை. அவரின் எந்தப் படமும் எனக்கு அவ்வளவாக பிடிக்காது. அவரின் படங்களிலேயே நான் மிக ரசித்தது 'அஞ்சலி' மட்டும்தான். என் நண்பன் அவரின் வெறித்தனமான ரசிகன். ராவணன் படம் வந்தபோது முதல் நாள் தமிழிலும், அடுத்த நாள் ஹிந்தியிலும் என்னை இழுத்துக் கூட்டிக்கொண்டு போனான். அதன் விளைவு, நான் இன்னமும் கடல் படம் பார்க்கவில்லை. அதே போல, இது எனக்கு பிடிக்காத, காதல் பற்றிய படம் என்பதால் பார்க்க வேண்டும் என தோன்றவில்லை.

அவரது படங்களில் அவரை விட மற்ற அனைவரது வேலையையும் நன்கு வாங்கி இருப்பார். அதிலும் குறிப்பாக இசை. ராஜாவும் சரி, ரஹ்மானும் சரி மணி ரத்னத்திற்கு மட்டும் குறை வைத்ததே இல்லை. எனவே, கேட்பதோடு சரி.

காஞ்சனா 2: அதே டைலர், அதே வாடகை என்பதால், நகைச்சுவை காட்சிகளை டிவியில் மட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணம்.

ஆனால், சில மற்ற மொழிப்படங்கள் மனதைக் கவர்ந்தன. பிக்கெட் 43, NH 10, பத்லபூர், போன்றவை. இவை யாவும் ஒரு முறை பார்க்கலாம். சமீப காலங்களில், மற்ற மொழிப் படங்களில் ஏதாவது ஒரு தமிழ் பேசும் பாத்திரம் (NH 10, பத்லபூர் படங்களில் நாயகி தமிழ் பெண்ணாகவோ அல்லது தமிழ் தெரிந்த பெண்ணாகவோ) வருகிறது. 2 ஸ்டேட்ஸ் படத்தின் கதை அப்படி. பொதுவாக மலையாளப் படங்களில் தமிழ் பேசும் பாத்திரங்கள் கெட்டவர்களாகவே வரும். ஆனால், பிக்கெட் 43 படத்தில் அப்படி இல்லை. வீர மரணம் அடைந்த மதுரையை சேர்ந்த சரவணன், மேஜர் முகுந்தன் பற்றி கூட வரும்.

இது எதனால்? இந்திய அளவில் ஹிந்திப் படங்களுக்கு அடுத்து தமிழில்தான் அதிக படங்கள் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்கின்றன. அதிக திறமையானவர்கள் உள்ளனர். ஆனாலும், நம்மூரில் மற்ற மொழிப் படங்கள் ஓடுவது என்பது கொஞ்சம் இல்லை, ரொம்பவும் கஷ்டம். எனவே, எப்படியாவது கவர வேண்டும் என்று எண்ணி இப்படி செய்கின்றனர் என நினைக்கிறேன். ஆனாலும் கஷ்டம்தான்.

அனேகமாக அடுத்து உத்தம வில்லன், மாஸ் இரண்டும் பார்த்து விட்டுத்தான் விமர்சனம். நான் ஏற்கனவே 21 படம் பார்த்து விட்டதால் வை ராஜா வை பார்க்க தோன்றவில்லை. கமலும், வெங்கட் பிரபுவும் இதுவரை எனக்கு குறை வைத்ததில்லை. (பிரியாணி சற்று ஊசிப் போயிருந்தாலும்) I'm waiting.

ஏதோ தோணுச்சு:

நடிப்பு என்றால் என்ன என்பதை யாரும் வரையறுக்க இயலாது. மூச்சு விடாமல் மூன்று பக்க வசனம் பேசுவதும் நடிப்புதான், பேச்சே இல்லாமல் பார்க்கும் ஒரு பார்வை கூட நடிப்புதான். அதே போல என்னைக் குழப்பும் இன்னொரு நகைமுரண் 'இயல்பாக நடிப்பது'. அது எப்படி இயல்பாக நடிக்க முடியும்? நன்றாக சைக்கிள் ஓட்டும் ஒருவனை சைக்கிள் ஓட்டத் தெரியாதது போல நடி என்று சொல்லும்போது, அவன் எப்படி நடித்தாலும் அது இயல்பானது இல்லை. அதுவே சைக்கிள் ஓட்டத் தெரியாதவன் என்றால், அதுதான் அவன் இயல்பு, அவன் நடிக்கவே இல்லை எனலாம்.

"இப்ப உனக்கு என்ன வேணும்" என்கிறீர்களா? ஒன்றுமில்லை. 'ஆடும் கூத்து' என்று ஒரு படம். நிறைய பேருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. அந்தப் படத்தில், ஒரு படம் எடுப்பார்கள். ஆசிரியராக இருக்கும் பிரகாஷ்ராஜ் ஒரு கொடூரமான ஜமீன்தாராக நடிக்க வேண்டும். ஒழுங்காக நடிக்க வராது. பின் எப்படியோ சமாளித்து நடிப்பார். அந்தக் காட்சி முடிந்ததும், இயக்குனராக நடிக்கும் சேரன் கை தட்ட, உடனே, அவரது உடல் மொழி அந்த ஆசிரியராக மாறி விடும். உண்மையில், பிரகாஷ்ராஜ் மீது இருந்த மதிப்பு இன்னும் கூடியது.


என் கேள்விக்கென்ன பதில்?

ஒன்றுமில்லை. விகடனில் முன்பு வந்த 'நானே கேள்வி நானே பதில்' போல. என்ன, நமக்கு கொஞ்சம் வளவள கொழகொழ என்று நிறைய எழுதினால்தான் பிடிக்கும். எனவே, இனிதே ஆரம்பம்.

ஏன் நம் மக்களுக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கிறது?


அது ஒரு ஜென்டில் மேன் விளையாட்டு. அது மட்டுமில்லாமல் நாம் அதில்தான் முதலில் உலகக் கோப்பையை வென்றோம் என்பதெல்லாம் பொய். முதலில் அது நம்மூரின் கில்லி தாண்டு விளையாட்டு போல என்பது தெரியும். அது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி விளையாடுவார்கள். எனது ஊரில் எப்படி என்றால், நாம் அந்த கில்லியை எவ்வளவு தூரம் அடிக்கிறோமோ, அங்கிருந்து நாம் விளையாடும் இடம் வரை அளக்க வேண்டும். அதே நேரம், கில்லியை நாம் காற்றில் எத்தனை முறை அடித்தோமோ, அதற்கேற்றாற்போல் அளக்க வேண்டிய பொருள் மாறும். என்னுடைய நினைவு சரி என்றால், ஒரு அடிக்கு பேட், இரண்டு அடிக்கு கில்லி, மூன்று அடிக்கு ஊக்கு, நான்கு அடிக்கு கடுகு, அதற்கு மேல், தண்ணீர், காற்று என்றெல்லாம் இருக்கும். எனவே, பொதுவாக தூரமாக அடிப்பதற்கு பதில் கில்லியை காற்றிலே நிறைய முறை அடிக்க பார்ப்போம்.

சரி விடுங்க. நாம நம்ம விஷயத்திற்கு வருவோம். நம் மக்களுக்கு பொதுவாக பேராசை அதிகம். விரைவாக பணம் சேர்க்க வேண்டும், கஷ்டப்படாமல் சம்பாதிக்க வேண்டும், மற்றவர்கள் வேலை செய்ய, நாம் சுகமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுவார்கள். "சரி அதுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்" என்கிறீர்களா? பொதுவாக கால் பந்து, கைப்பந்து, ஹாக்கி எனக் குழும விளையாட்டில் அனைவருமே ஆட்டம் முழுதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். கவனம் முழுதும் பந்தின் மீதும், எதிராளிகள் மீதும் இருக்க வேண்டும். ஒரு ஆள், ஓரிடத்தில் தவறி பந்தை விட்டால் அது எதிராளியிடம் சென்று விட்டால், திரும்ப அனைவருமே முயற்சி செய்துதான் ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்ப வேண்டும்.

ஆனால், கிரிக்கெட்டில் அப்படி இல்லை. எந்த நேரத்திலும் பந்து போடுபவர், அடிப்பவர் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். அதன் பின் பந்து எந்த திசையில் போகிறதோ, அங்குள்ள ஓரிருவர் மட்டும் கவனமாக இருந்தால் போதும். எனவே, மூன்று மணி நேர ஆட்டத்தில், ஒரு வீரர் பாதி நேரம் ஓடினாலே மிக அதிகம்.

அடுத்து, மட்டையாளர்கள். ஓடவே தேவை இல்லை. நின்ற இடத்தில் இருந்தே 4, 6 என எடுக்க முடியும். அதே போல ஒரு நேரத்தில் இரண்டு பேருக்குத்தான் வேலை. இன்னும் குறிப்பாக சொன்னால், ஒருவருக்குத்தான் வேலை. அதே போல, அணியில் உள்ள 11 பேரும் மட்டையை பிடிக்க வேண்டிய தேவையும் இல்லை. பந்து வீசுபவர் தவறு செய்தாலும், நமக்கு ரன். இன்னும் குறிப்பாக சொன்னால், ஒரு ஆள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்து பந்து வீசும்போது, அப்படியே சும்மா பேட்டை தூக்கி பந்தை தவற விட்டு அவனைக் கடுப்பேத்துவது என்பது 'என்ன சுகம்'.

மற்ற விளையாட்டுகளில், கோல், புள்ளிகள் என எதுவாக இருந்தாலும் அதிகபட்சம் 100க்குள் அடங்கி விடும். ஆனால், கிரிக்கெட்டில் குறைந்த பட்சம் 200க்கு மேல் போகலாம். அது மனதளவில் நமக்கு 'அதிகம்' என்ற மனப்பாங்கைக் கொடுக்கும். அதே போல மற்ற விளையாட்டுகள் அனைத்தும் கண்டிப்பாக அந்த குறிப்பிட்ட நேரம் விளையாண்டே ஆக வேண்டும். கிரிக்கெட்டில் அதுவும் தேவை இல்லை. இதே போல தடகளம் போன்றவையாக இருந்தாலும், ஒருவரை ஒருவர் எதிர்த்து ஆடும் டென்னிஸ் போன்றவையாக இருந்தாலும், அது குறிப்பிட்ட ஒருவர் மட்டுமே விளையாட முடியும். அதுவும் அவரின் திறமையைப் பொறுத்துதான் எல்லாம்.

கடைசியாக சொல்வது ஒன்றுதான். 'நோகாமல் நோம்பி கும்பிடுவது' கிரிக்கெட்டில் சுலபம். அதனால்தான் நம் மக்களுக்கு இதன் மேல் ஈர்ப்பு வந்திருக்கும்.

அவ்வளவுதாங்க.

Thursday, April 9, 2015

இளையராஜாவைத் திட்டினால் இணையராஜா!

தலைப்பே எதைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று விளங்கி விடும். ஒரு சாரார், இளையராஜா என் உயிருக்கு மேல் என்க, இன்னொரு தரப்போ, அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் இல்ல என்கிறது, இரு தரப்பிலும் எது சரி, எது தவறு என்றெல்லாம் நான் சொல்லவில்லை. "தூத்து, ச்சீ ச்சீ, போ போ, நீயெல்லாம் சின்னப்பய பேசப்படாது, உனக்கென்ன தெரியும்னு சொல்ல வந்துட்ட" என்று சண்டைக்கு வர வேண்டாம். முதலில் முழுதாகப் படிக்கவும்.


பள்ளியில் படிக்கும்போதெல்லாம், இளையராஜா ரசிகன் என்றாலும், யாரிடமும் விவாதிக்க நேரமோ, விஷயமோ இருந்ததில்லை. பொதுவாக எல்லோருடைய பாடல்களைக் கேட்டாலும், ராஜாவின் பாடல்கள் அதில் அதிகம். கல்லூரி வந்தபிறகுதான் ராஜாவா, ரஹ்மானா என்ற பிரச்சினை ஆரம்பித்தது. தினமும் இரவு சாப்பிட்டு விட்டு வந்த பிறகு பேச ஆரம்பித்தால், இரண்டு மணிநேரம் சண்டை போட்டு விட்டுத்தான் தூங்குவோம். "சரி வேணும்னா எல்லார்கிட்டயும் கேக்கலாமா?" என்று சும்மா விசாரித்தால், "ஏய், ஓரமா போயி வெளையாடுங்கப்பா" என்ற மாதிரி பார்ப்பார்கள். அதையும் தாண்டி ரஹ்மான்தான் அதிகம் சொன்னார்கள். உடனே நானோ "இல்லல்ல இது போங்காட்டம்" என்றேன்.

அதே நேரத்தில் டும் டும் டும், துள்ளுவதோ இளமை என 'இளைய'ராஜாக்கள் வேறு வர, நானும் அந்தப் பாடல்களையே அடிக்கடி கேட்பேன். "ஏண்டா, நீ ராஜா குடும்பத்துப் பாட்ட தவிர வேற எதுவும் கேக்க மாட்டியா" என்று என்னைக் கேட்கும் அளவிற்கு இருந்தேன். எனது வகுப்பில் ஒரு வடக்கிந்திய பையன். அவனிடம் நான் தனியாக கேட்டேன். வழக்கம் போல 'ரஹ்மான்' என்றான். உனக்கு இளையராஜா தெரியுமா என்றால், யார் அது என்றான். நான் சத்மா படத்தின் இசையமைப்பாளர் என்றேன். அப்படி ஒரு படமா என்றான். பிறகு சொன்னான் "நான் அவ்வளவாக படம் பார்க்க மாட்டேன், என்னுடைய பொழுதுபோக்கே வேறு. நீ கேட்டவுடன் என் மனதில் வந்த பெயர் ரஹ்மான். அதுதான் சொன்னேன்" என்றான். எப்படியோ, அப்போது எனக்கு ரஹ்மான் மீது வெறுப்பு வந்து, எப்படி எல்லாம் குற்றம் கண்டு பிடிக்க முடியும் என்ற எண்ணம்தான் வந்தது.

கல்லூரி முடிந்து வேலைக்குப் போக ஆரம்பித்த உடனே, யாஹூ ராஜா மற்றும் ரஹ்மான் குழு இரண்டிலும் இணைந்தேன். அதில் ஏதாவது தகவல் கிடைக்கும்(?). ஆனால், அவை இரண்டு குழுமும் மிக மிக கட்டுக் கோப்பாக, அவரவர்களின் பெருமைகளை மட்டும் பேசுமே தவிர, மற்றவர்களை கேவலப்படுத்தாது. அதே நேரம் ஆர்குட் வந்தது. அதில் தினமும் போய் ரஹ்மானுடைய குழுமத்தில் எத்தனை பேர், ராஜாவின் குழுமத்தில் எத்தனை பேர் என தினமும் பார்ப்பேன். நான் எந்தக் கருத்துமே இட மாட்டேன். மற்றவர்களின் கருத்தை அறிந்து, அறிவை(?) மட்டும் வளர்த்துக் கொள்வேன். இங்கும் ரஹ்மானே ஜெயித்தார். அதன் பின்னர்தான் நானும் வலையுலகில் நுழைந்தேன். இதற்கு முன்பே இதே மொக்கையை நான் பதிவாக இட்டுள்ளேன். தைரியம் உள்ளவர்கள் மட்டும் படிக்கவும்.
- இடைவேளை - 

"தம்பி, நீ ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கே" என்கிறீர்களா. சும்மா. வலையுலகில்தான் முதல் முறையாக இளையராஜாவிற்காக அளவு கடந்த ஆதரவைப் பார்த்தேன். அல்லது நான் பார்த்தவை எல்லாம் அப்படி இருந்திருக்கலாம். அதிலும் ராஜாவை உடல், உயிர் என்றெல்லாம் படித்தவுடன் "தாய்ப்பாசத்துல நம்மள மிஞ்சிறுவான் போல இருக்கே" என்றெல்லாம் எண்ணினேன். ஏனென்றால் அப்போது தினத்தந்தியில் வந்த இளையராஜாவின் வரலாற்றை படித்து முடித்திருந்தேன். அதே போல, பள்ளிக் காலத்தில், நூலகத்தில் தமிழ் சினிமா பற்றிய புத்தகங்களைப் படித்து, ராஜா பற்றிய பொது அறிவை வளர்த்து வைத்திருந்தேன். அதன் பின் போக போக இசையைத்தான் ரசிக்க வேண்டும் என்ற புத்தி வந்து, திருந்தி அடங்கி உள்ளேன். 

"சரி, தலைப்புக்கும், இவ்ளோ நேரம் நீ போட்ட மொக்கைக்கும் சம்பந்தமே இல்லையே" என்கிறீர்களா? தலைப்பைப் பார்த்தவுடன் நிறைய பேர் சூடாகி இருப்பார்கள். அவர்களை குளிர்விக்கவே இது. இனி விஷயத்திற்கு வருவோம். கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகி விட்டது பதிவுலகிற்கு வந்து. ராஜாவைப் பற்றி மிகையான கருத்துகளும் படித்துள்ளேன். நிறைய பதிவுகள் ராஜாவைப் பற்றி கேவலமாகப் படித்து விட்டேன். நிறைய முறை உடனே ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றும். ஆனால், என்ன செய்ய, மீறி மீறிப் போனால் ஒரு பதிவுதான் போட முடியும். பல முறை சிரிப்பு வரும். சில பின்னூட்டங்கள் கூட போட்டு, திட்டு வாங்கி உள்ளேன்.

இளையராஜா பக்தர்களுக்கு (சரி ரசிகர்களுக்கு) ஏன் அவரை அவ்வளவு பிடிக்கிறது? இது பற்றி நிறைய பேர் அலசி விட்டாலும், நானும் ஒரு பதிவர் என்ற முறையில் ஏதாவது சொல்ல வேண்டுமல்லாவா. அதனாலதான்.

பொதுவாக 30 வயதிற்கு மேல், 50 வயதிற்கு உட்பட்ட நபர்களே (அனைவரும் அல்ல. ஆனால், இந்த பக்தர்கள் கண்டிப்பாக இந்த வகையாகத்தான் இருக்கும்) ரசிகர்கள், இல்லை வெறியர்கள், இல்லை இல்லை பக்தர்கள் என்பார்கள். ஏனென்றால் இவர்கள் (நானும்) அனைவரும் தங்கள் பதிமன் பருவத்தில் (80களின் இறுதி, 90களின் ஆரம்பம்) ராஜாவையும், அந்த கால ரஹ்மான், தேவாவையும் கேட்டு வளர்ந்தவர்களாக இருப்பார்கள். சில பேர் இது இது மிகையான கருத்து, லொட்டு லொசுக்கு என்றாலும், ஒரு நாளைக்கு 10 பாடல்கள் கேட்டால், அதில் குறைந்தது 6ஆவது இளையராஜாவாகவே இருக்கும்.

அதை விட முக்கியம் காத்திருப்பு. பாடல் நாம் நினைத்த நேரத்தில், நினைத்த பாடலை கேட்க முடியாது. ஒரு பாடல் நன்றாக உள்ளது என யாராவது சொன்னால், எங்கேயாவது முதலில் போய் அதைக் கேட்டு, நமக்குப் பிடித்தால் அந்த ஒலி நாடாவை வாங்கி (அல்லது அந்தப் பாடலை பதிவு செய்து), அதில் அந்தப் பாடலை தேடிக் கண்டு பிடித்துக் கேட்கும்போது வரும் சுகம் இருக்கிறதே. அப்படி அலாதியானது. இப்போது அந்தப் பாடலை நினைத்த நேரம் கேட்க முடிந்தாலும், கேட்கும்போதெல்லாம் நம் மனம் பின்னோக்கிப் பறக்கும்.



இது நமக்குப் பிடித்த பெண்ணைப் பார்க்கும்போது ஒலித்த பாடல், நாம் மிக சந்தோசமாகவோ/சோகமாகவோ இருக்கும்போது நாம் கேட்ட பாடல் என இவர்களின் வாழ்வில் தெரிந்தோ, தெரியாமலோ ராஜா வந்து விடுகிறார். ஏன் இது 70களுக்கு முன்னால் கிடையாதா என்றால், என் சிற்றறிவுக்கு எட்டியவரை அப்போதெல்லாம் மக்கள் நிறைய வேலைக்குத்தான் செல்வார்கள். இரவானால், இரண்டாம் ஆட்டம், ஊரில் கூத்து, அவ்வப்போது திருவிழா, அதில் ஒலிப்பெருக்கியில் பாடல், ஊரில் உள்ள ஒன்றிரண்டு வானொலியில் தினமும் செய்தி, அவ்வப்போது பாடல்கள் என இருந்திருக்கலாம். அப்போது காதல் என்ற உணர்வு அவ்வளவாக மக்களிடம் இல்லை. படங்களும் குடும்பம், அரசியல் என்றே இருந்தன. அதை விட முக்கியம், அவர்களில் அதிகம் இப்போது பதிவர்கள் கிடையாது.



80களில், ஓரளவு மக்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். காதல் படங்கள் நிறைய வர ஆரம்பித்தன. இனக்கவர்ச்சி/காதல் போன்ற உணர்வுகளைத் தூண்டும் வகையில் பாடல்கள். இங்குதான் ராஜாவின் ராஜாங்கம் ஆரம்பித்தது. அதே போல, காத்திருந்து நாம் ஒரு பாடலைக் கேட்பதற்குள், அடுத்து ஒரு படம் வந்து, அதன் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கும். அதே போல, இந்த கால கட்ட ஆசாமிகள்தான் நிறைய பதிவர்களாக உள்ளனர்.

90களுக்கு மேல், ஓரளவு இந்தக் காத்திருப்பு குறைய ஆரம்பித்து விட்டது. பாடல் வந்தால், அதிகபட்சம் அன்று மாலைக்குள் ஒலி நாடா. அனைவரது வீட்டிலும் 2-இன்-1. இன்னும் 2000க்கு மேல் ஒலித்தகடு வந்த பின் கேட்கவே வேண்டாம். எனவே, ரஹ்மான் செய்த புத்திசாலித்தனமான வேலை, காத்திருப்பை உருவாக்கினார். வருடத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு படம். இப்போது பாருங்கள். பாடல் பதிவு செய்த உடனே வந்து விடுகிறது. நினைத்த நேரம், நினைத்த பாடல். காத்திருக்கவே தேவை இல்லை. மக்களும் அனிருத் என் உயிர், இமான் தான் உயிர் என்றெல்லாம் இல்லாமல் கேட்டுக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். அதை விட முக்கியம் இவர்கள் யாருக்கும் பதிவிட நேரம் இல்லை. கேட்டால் "அவன் அவன் டிவிட்டர்ல 140 எழுத்தே போட கஷ்டப்படுறான், இதுல, பதிவு வேற ஒரு கேடா" என்கிறார்கள்.

பதிவுகள் என்பதே "ஊர்ல ஒரு பய கொஞ்ச நேரம் நாம சொல்றத கேக்க மாட்டேங்குறான், எவனாவது நாலு முகம் தெரியாத ஆட்களாவது வந்து படிச்சு ஏதாவது சொல்லட்டும்" என்ற ஆதங்கத்தில்தான் நிறைய பேர் (குறிப்பாக நான்) எழுதுவது. அதில் வந்து ராஜாதான் என் உயிர் என்று சொல்லுங்கள் தப்பில்லை. ஆனால், மத்தவங்க எல்லாம் ​​_ யிர் என்று சொல்ல வேண்டாம். அதே போல "ராஜாவெல்லாம் ஒண்ணுமேயில்ல, அதுக்கு 1500 வருஷத்துக்கு முன்னாடியே இந்த இசை வந்திருச்சு" என்று சொல்லாமல், "இந்த பழைய இசையையும் கேளுங்கள்" என்று சொல்லுங்கள்.

எனக்குத் தெரிந்து நிறைய பேர் பாடகர்களுக்காக வெறித்தனமான ரசிகர்களாக உள்ளனர். என் நண்பன் SPBயின் வெறித்தனமான ரசிகன். அவனுக்கு இசை யார் என்பதெல்லாம் முக்கியமில்லை. அதே போல நிறைய பேர் TMS, ஜானகி, யேசுதாஸ், சுசீலா போன்றோருக்கு வெறித்தனமான ரசிகர்களாக உள்ளனர். பதிவுலகிலும் சில பேரைப் பார்த்ததுண்டு. ஆனால், அவர்களுக்கு வராத எதிர்ப்பு ராஜா ரசிகர்களின் பதிவிற்கு வருகிறது என்றால், அந்த பதிவர்களும் சற்றே யோசித்து, தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த மொத்தப் பதிவுமே செவிடன் (மன்னிக்கவும் இந்த வார்த்தைக்கு) காதில் ஊதிய சங்கு என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும், என்ன செய்ய.சொல்ல வேண்டியது என் கடமை. சொல்லிட்டேன். "அதெல்லாம் சரி, கடைசி வரைக்கும் தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லையே" என்கிறீர்களா? சும்மா. வெவ்வெவ்வே. நல்லதே பதிவில் எழுதுவோம், கெட்டதே தலைப்பில் வைப்போம்.

Thursday, April 2, 2015

சென்னையின் வாகன ஓட்டிகள்

வாகனங்களின் வகைகள் (இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள்) மற்றும் ஓட்டுனர்கள் (பாவப்பட்டவர்கள், ஆபத்தானவர்கள், மிக ஆபத்தானவர்கள்) இரண்டைப் பொறுத்து, என்னுடைய அனுபவத்தில் வகைப்படுத்தி உள்ளேன். இது என்னுடைய முந்தைய பதிவின் தொடர்ச்சி ஆகும். இன்னொரு முக்கிய குறிப்பு. இது சென்னைக்கு மட்டுமே பொருந்தும். நெடுஞ்சாலைகள், மற்ற ஊர்களுக்கு இது பொருந்தாது.

மாநரக பேருந்துகள் - ஆபத்தானவர்கள்:
 
இவர்களை உண்மையில் 'பாவப்பட்டவர்கள்' என்ற வகையில்தான் சேர்க்க வேண்டும். இவர்கள் முட்கள் போல. சேலை இதன் மீது விழுந்தாலும், இதன் மீது சேலை விழுந்தாலும், ஆபத்து என்னவோ சேலைக்குத்தான். அதனால்தான் ஆபத்தானவர்கள் என்று சொல்கிறேன். தினமும் அதிகபட்சம் இரண்டு மணி நேரம் அலுவலகம் சென்று திரும்ப பயணம் செய்யும் நமக்கு எவ்வளவு பிரச்சினை என்றால், 10 மணி நேரம் அவ்வளவு பெரிய வண்டியை இந்த சென்னை சாலையில் ஓட்டுவது என்பது எவ்வளவு பெரிய கொடுமை. அதுவும் எந்தப் பக்கம் எவன் வருவான் என்றும் தெரியாது. படியில் தொங்கி எவனாவது விழுந்தாலும் தொல்லை. திட்டுகளையும் ஏற்க வேண்டும். ஒரே குஷ்டமப்பா. பொதுவாக இவர்களுக்கு வழி விட்டு விடுவது நல்லது.

பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் - மிக ஆபத்தானவர்கள்: 
பீக் அவர்' எனப்படும் நெரிசலான நேர நெருக்கடிக்கு முக்கிய காரணம். இவர்களாக ஒரு இடத்தை 'நிறுத்தம்' என வைத்துக் கொண்டு, அனைவரையும் படுத்துவார்கள். எங்கேயாவது, ஏதாவது நெருக்கடி, நேரமாகி விட்டது என்றால், யாரையும் இடித்துத் தள்ளக் கூட தயங்க மாட்டார்கள். சென்னையின் கல்வித் தந்தையின் கல்லூரி வாகனங்கள் ஏற்படுத்திய விபத்துகளும், அவற்றின் ஓட்டுனர்களின் நடத்தையையும், ராஜீவ் காந்தி சாலையில் செல்லும் அனைவரும் அறிவார்கள். வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்று எழுதி இருக்குமே தவிர, உள்ளே இருக்குமா என்று தெரியாது. மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ஆட்கள்.

தண்ணீர் மற்றும் குப்பை லாரிகள் - மிக மிக ஆபத்தானவர்கள்: 
உண்மையிலேயே வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட வேண்டிய வாகனங்கள். சென்னை போன்ற ஓர் நகரத்தில், தண்ணீர் கொண்டு செல்லும் லாரி அவ்வளவு வேகமாக செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இன்னொரு முக்கிய காரணம், இந்த வேலை செய்பவர்களை பொதுவாக அனைவரும் சற்று இளக்காரமாகவே பார்ப்பார்கள். எனவே, "நீ என்ன மதிக்கிறதில்லை, நானும் உன்ன மதிக்க மாட்டேன். நான் இப்படித்தான்" என்று வண்டி ஓட்டுவார்கள்.

பாதசாரிகள் - ஆபத்தானவர்கள்:
"ஹல்லோ, இருக்கிறதிலேயே பாவமானவங்க நாங்கதான்" என்று சொல்கிறீர்களா? நானும் பாதசாரிதான் சார். எப்பவுமேவா வண்டில போக முடியும்? ஏன் ஆபத்தானவர்கள் என்றால், அவர்கள் சாலையைக் கடக்க சிக்னல் இருந்தாலும், வாகன ஓட்டிகள் மதிப்பதில்லை. எனவே, சாலையில் சற்றே வாகனங்கள் குறைவாக இருக்கும்போது கடப்பது, அப்போது திடீரென முன்னால் வரும் வண்டி நிற்கும், அதை எதிர் பாராமல் பின்னால் வருபவன் இடிக்க, அவர்கள் இருவரும் சண்டை போட ஆரம்பிப்பார்கள், பாதசாரி ஜாலியாக அந்தப் பக்கம் போயிருப்பார்.

அதே போல போன் பேசிக்கொண்டே கடப்பது, பாட்டு கேட்டுக் கொண்டு கடப்பது, ஒரு கையைத் தூக்கிக் கொண்டு மெதுவாக நடப்பது என சில தொல்லைகள். அது மட்டுமில்லாமல் சுரங்கப்பாதை, நடை மேம்பாலம் இருந்தாலும், "நாங்க ரோட்டுக்கு நடுவுலதான் நடப்போம்" என்று நடப்பது. அதை விட முக்கியம், சாலையின் எந்தப் பக்கம் நடப்பது என்பது இதுவரை யாருக்கும் தெளிவாக தெரியாது. நடப்பதற்கு பாதையும் கிடையாது.

சாலையில் அப்படியே ஆட்டோவையோ, ஷேர் ஆட்டோவையோ நிறுத்தி பேரம் பேசுவது,மெதுவாக செல்லும் பேருந்தில் இருந்து திடீரென குதிப்பது, வெளியே குப்பை போடுவது, எச்சில் துப்புதுவது என கொஞ்சம் அக்கப்போரான ஆட்கள்தான். அதிலும் எங்கேயாவது சிறிய அல்லது சேரி போன்ற இடம் என்றால், அவர்கள் நடந்து போகும் வரை நாம் பொறுமையாக பின்னால் போய்த்தான் ஆக வேண்டும். அவர்களையும் குறை சொல்ல முடியாது. ஐந்தாறு வருடங்களுக்கு முன், அந்த சாலையில் தினமும் ஒரு வண்டி வந்தாலே அதிசயம். ஆனால், இன்று அப்படியா? அவர்கள் அப்படியே வாழ்ந்து பழகி இருப்பார்கள்.

ஆட்டோ, ஷேர் ஆட்டோ - மிக மிக ஆபத்தானவர்கள்:
ஒரு 'மிக' போடவா, இல்லை இரண்டு போடவா என சின்ன குழப்பம். ஒரு காலி ஆட்டோ வேகமாக போய்க் கொண்டிருக்கும். திடீரென ஒரு பாதசாரி 'ஆட்டோ' என்று கூப்பிடுவார். பின்னால் யார் வருகிறார்கள் என்று கூட பார்க்காமல், திடீரென நடு ரோட்டில் இருந்து இடது புறம் ஆட்டோ ஒதுங்கும். பின்னால் வருபவன் ஆட்டோவை இடித்து விட்டால், அவன் பரம்பரையே காலி. அதே போல ஷேர் ஆட்டோவில், உள்ளே உட்கார்ந்திருப்பவர் திடீரென "அண்ணே, அப்படியே லெப்ட்ல நிறுத்துங்க" என்பார். அதே பிரச்சினை. அதே கெட்ட வார்த்தை. போகும் பாதையில் சிக்னல் அல்லது ட்ராபிக், உடனே வண்டி மெதுவாக கூட போகாமல் உடனே வலதோ, இடதோ திரும்பும். அதே டெய்லர், அதே வாடகை.

இதுவரை மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டியவர்களைக் கூட பார்த்துள்ளேன். ஆனால், விதிகளை மதித்து, யாரையும் திட்டாமல் இருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரைக் கூட நான் கண்டதில்லை.

மகிழ்வுந்துகள் - மிக ஆபத்தானவர்கள்:
இவர்களும் ஆட்டோ போலத்தான். என்ன, திடீரென நடு ரோட்டில் நிற்க மாட்டார்கள், அது மட்டுமல்ல எங்குமே நிற்க மாட்டார்கள். திடீரென தங்கள் பாதையில் இருந்து விலகி பின்னால் வருபவர்களை பதறடிப்பார்கள். பொதுவாக எந்த வகையாக இருந்தாலும் சில விதி விலக்கானவர்கள் இருப்பார்கள். ஆனால், இந்த 'டெம்போ' வகை வண்டிகள் இதுவரை ஒன்று கூட ஒழுங்காக ஓடி நான் பார்த்ததே இல்லை. அவை கார் போல மிக எளிதாக ஓட்டவும், பேருந்து போல மிக பெரியதாக இருப்பதும்தான் பிரச்சினை என நினைக்கிறேன். "நீ எம்மேல வந்து இடி, சாவு, நான் பாட்டுக்கு போய்க்கிட்டே இருப்பேன்" என்ற தொனியில் செல்வார்கள். அதையும் மீறி, ஏதாவது சொன்னால், போகிற போக்கில் நம்மை 'ஒதுக்கி' விட்டு செல்வார்கள்.

மகிழ்வுந்துகள்-பாவப்பட்டவர்கள்:
இவர்கள் பொதுவாக இந்த சோப்பு டப்பா கார் வாங்கியவர்கள். இவர்கள்தான் சாலையில் ஒரே கோட்டில் செல்வார்கள். பொறுமையாக உள்ளே பண்பலை கேட்டுக்கொண்டு, சிக்னலை மதித்து பொறுமையாக போவார்கள். இருபுறமும் இரு சக்கர வாகனங்கள் வந்து உரசி, டொக்கு ஆக்கினாலும், பொறுமையாக சகித்துக் கொண்டு, அவர்களின் திட்டுகளையும் வாங்கிக் கொண்டு போவார்கள். (முக்கிய குறிப்பு. நான் இன்னும் மகிழ்வுந்து வாங்கவில்லை)

மகிழ்வுந்துகள் - மிக ஆபத்தானவர்கள்:

பொதுவாக பெரிய கார்கள். அல்லக்கைகள் அலப்பரை செய்யும் டாடா சுமோ, ஸ்கார்பியோ போன்றவை. இவை தவிர ரொம்ப நாளாக இரு சக்கர வாகனங்கள் ஓட்டி விட்டு, புதிதாக மகிழ்வுந்து வாங்கியவர்கள் எல்லாமே கொஞ்சம் ஆபத்தானவர்கள்தான். இவர்களை அடையாளம் கண்டு கொள்வதும் சுலபம். கண்டிப்பாக பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்திருக்கும் அல்லது மடக்கப்பட்டிருக்கும். காரில் டொக்கு விழுந்திருக்கும். பேன்சி எண்ணாக இருக்கும்.

இரு சக்கர வாகனங்கள் - மோசமானவர்கள்:

"என்ன, மிக, மிக மிக ஆபத்தானவங்க அப்டிதான சொல்லுவா, அதென்ன மோசமாவனங்க" என்கிறீர்களா? பொதுவாக நம் வண்டியை யாராவது இடித்தாலோ, அல்லது இடிப்பது போல போனாலோ, திட்டுவோம் அல்லது அப்படியே விட்டு விடுவோம். அப்படி இல்லாமல், யாரென்றே தெரியாத ஒருவனை "இவன்லாம் சாகத்தான் போறான்" என்று நினைப்போம் அல்லவா, அந்த வகையினர். சாலையில் போகும் அனைவரையும் பயமுறுத்துவோர். இவர்களை அடையாளம் கண்டு கொள்வது மிக சுலபம். பார்த்தாலே போதும். "என்னப்பா, இப்படி சொல்ற. அப்படி நீ யாரைத்தான் சொல்ற" என்கிறீர்களா? 

ஹெல்மட்டை தலைக்குப் போடாமல் பெட்ரோல் டேங்குக்கு போட்டிருப்பார்கள்.


இண்டிகேட்டர் கண்டிப்பாக உடைந்திருக்கும்.


காதில் பாட்டு கேட்டுக்கொண்டு அல்லது போன் பேசிக்கொண்டு செல்பவர்கள்.


150cc அல்லது அதற்கு மேல் உள்ள வண்டி எனில், கண்டிப்பாக இந்த சாதிதான். ("அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல" என்பவர்களுக்காக. "சொம்மா உர்ர் உர்ருன்னு உருட்டறத்துக்கா இந்த வண்டி வாங்கி இருக்கோம்" என்றுதான் இதுவரை நான் வாங்கிக் கட்டியுள்ளேன்). அதிலும் பின்னால் ஒரு பெண் கட்டிப் பிடித்து உட்கார்ந்திருந்தால், ____(கெட்ட வார்த்தைங்க)


ஸ்கூட்டர் வண்டிகள் ஓட்டுபவர்கள், பெரும்பாலும். (நானும் ஒரு காலத்தில் கல்யாணத்திற்கு முன் ஆக்டிவாதான் ஓட்டினேன். என்னைத் தாண்டிபோய் நிறுத்தி எல்லாம் திட்டி வீடு போயிருக்கிறார்கள். அதன் பிறகுதான் திருந்தினேன்.) இந்த வண்டி பிக் அப் அதிகம் என்பதால் மற்ற வண்டிகள் கியர் மாற்றுவதற்குள் போய் விட வேண்டும் என்று பறப்பார்கள். பின்னால் ஆள் இல்லாவிட்டாலும், கால் வைப்பதற்கான பிளேட்டை மடக்காமல் அடுத்த வண்டியை கீறுவார்கள்.


டேங்கில் ஒரு குழந்தை, நடுவில் ஒரு குழந்தை, பின்னால் மனைவி.யாராவது இடித்தால் கூட குழந்தை செண்டிமெண்ட் கை கொடுக்கும்.


எல்லாவற்றையும் மூடிக்கொண்டு ஓட்டும் பெண்கள். என்னதான் இவர்கள் தவறு செய்தாலும், யாரும் அவர்களை எதுவும் சொல்ல மாட்டார்கள்.


வண்டி ஓட்டும் வயதானவர்கள். இவர்கள் மேல் மோதவே இல்லை என்றாலும் "அய்யய்யோ" என்று கத்தினால், கதை காலி.


வண்டியில் காவல், வழக்கறிஞர், பத்திரிகை என்று எழுதி இருந்தால் (புடிச்சா கேஸ் போட முடியாதுல்ல).


சும்மா சிம்ரன், இலியானாவிற்கு போட்டியாக இடுப்பை வளைத்து, வண்டியை சைடு வாங்கி, மற்றவர்களை பதறடிப்பார்கள்.

இரு சக்கர வாகனங்கள் - மிக மோசமானவர்கள்:

"காலை 8:30க்கு தாம்பரத்தில் இருந்து நான் கிளம்புவேன். 9 மணிக்கெல்லாம் பாரிஸ் கார்னரில் உள்ள ஆபீஸில் நான் இருக்க வேண்டும், டாட்" என்பார்கள். இவர்கள் மிக மோசமான வகையினர். தாங்கள் சாலையில் செல்வதற்காக எந்த அளவிற்கும் போவார்கள். மேலே கூறிய ஆட்கள் இதுலும் வருவார்கள். ஆனாலும், இவர்களை அவர்கள் செய்யும் செயலை வைத்துதான் அறிய முடியும்.

நீங்கள் சிக்னலில் நிற்கும்போது, உங்கள் வண்டிக்கும், முன்னால் ஒரு அங்குல இடைவெளி இருந்தாலும், தங்கள் வண்டி முன் சக்கரத்தை அதில் விட்டு, "சார், கொஞ்சம் வழி விடுங்க" என்பார்கள்.


ஒலிப்பானை திருப்பங்கள், சந்துகளில் எல்லாம் பயன்படுத்த மாட்டார்கள். சிக்னலில் சிகப்பு இருந்தாலும், அழுத்திக் கொண்டே இருப்பார்கள்.


இண்டிகேட்டர், லைட் போடவே மாட்டார்கள், எந்த நேரமாக இருந்தாலும். அல்லது வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகம் போகும் வரை ஏதாவது ஒரு பக்கம் மட்டும் எரிந்து கொண்டே இருக்கும். எண்பதாயிரம் போட்டு வண்டி வாங்கியவர்கள், எண்பது ரூபாய் போட்டு ஒரு இண்டிகேட்டர் சைரன் வாங்கி வைத்திருக்க மாட்டார்கள்.


கொஞ்சம் கூட கூச்சமே இன்றி தவறான திசையில் வருவது, அவர்களுக்கு சிகப்பு போட்டிருந்தாலும் மீறுவது.


திடீரென பாதையில் இருந்து விலகி, அடுத்த சாலைக்கு செல்வது (இதில் பின்னால் வரும் இரண்டு வாகனங்கள் இடித்துக் கொண்டு, சண்டை போடுவார்கள். நம்மாள் அது தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் போயே போயிருப்பார்)


உலக அமைதி பேச்சு வார்த்தை நடத்துவது போல இரண்டு வண்டிகளில் பேசிக் கொண்டே செல்பவர்கள்.


ஏதாவது திருப்பத்தில் வந்து சாலையில் இணையும்போதும், அல்லது வண்டியை எடுக்கும்போதும், ஒரு கடமைக்குக் கூட திரும்பி ஏதாவது வண்டி வருகிறதா என்று பார்க்க மாட்டார்கள்.


நடைமேடையில் வண்டியை ஒட்டிக்கொண்டு போய், அதில் நடப்பவர்களைத் திட்டுவார்கள்.


எங்கேயாவது கும்பல் இருந்தால், வண்டியை ஓரமாகவும் இருத்த மாட்டார்கள், வண்டியை விட்டு இறங்கவும் மாட்டார்கள். "என்னவாம்" என்று யாரிடமாவது கதை கேட்பார்கள்.


ஒரு சிறிய சாலையில், எதிரில் வரும் வண்டி செல்வதற்காக வழி விட்டு நிற்போம். நேராக வந்து அந்த வழியை அடைத்து விட்டு, பின் நம்மைப் பார்த்து "ஏன் இந்தப் பக்கம் வர்ர, அந்தப் பக்கம் போ" என்று எகிறுவார்கள்.


பள்ளி செல்லும் குழந்தைகளை உட்கார வைத்து, எல்லா விதிகளையும் மீறி பள்ளியில் கொண்டு போய் விடுவார்கள். "சாலை விதிகளை மதிக்க வேண்டும்" என பாடம் படித்ததை அது பின்பற்றுமா அல்லது தன் தந்தை என்ன செய்வாரோ அதை செய்யுமா?

இரு சக்கர வாகனங்கள் - பாவப்பட்டவர்கள்:

இவர்களும் கிட்டத்தட்ட மேற்கூறிய வகை ஆட்கள்தான். இவர்களும், அந்த இரு சக்கர மிக மோசமான வாகன ஓட்டிகளும் ஒரே மாதிரிதான் இருப்பர். இருந்தாலும், இன்னும் இவர்களை இனம் கண்டு கொள்வது எப்படி?

சிக்னலில் நிற்கும்போது, நேரம் நிறைய இருந்தால் வண்டியை நிறுத்தி விடுவார்கள்.


சாலையில் போய்க் கொண்டிருக்கும்போது, முடிந்தவரை ஒரே கோட்டில் செல்வார்கள்.


சிகப்பு எந்த நேரத்திலும், எந்த இடத்தில் போட்டிருந்தாலும் நின்று விடுவார்கள்.
பின்னால் இருந்து யாராவது ஒலிப்பானை அழுத்திக் கொண்டிருந்தாலும், என்ன திட்டினாலும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.


சற்றே இடதோ, வலதோ திரும்பினாலும் இண்டிகேட்டர் போடுவார்கள். 
தேவையில்லாமல் ஒலிப்பானை பயன்படுத்த மாட்டார்கள்.

சில சமயம் இவர்களும் மோசமானவர்களாக மாற வாய்ப்பு உள்ளது, அவர்கள் அறியாமலேயே. ஆனால், மோசமானவர்கள் இவர்களாக தெரியாமல் கூட ஆக முடியாது. இன்னொரு கசப்பான உண்மை என்னவென்றால், அந்த மிக மோசமானவர்களிடம் இதில் ஏதாவது ஒரு குணம் இருக்கும்.

இவை எல்லாவற்றிலும் விதி விலக்குகள் உண்டு. ஆனால், மோசமானவர்கள் -ஆபத்தானவர்கள் - பாவப்பட்டவர்கள் என்பதை நீங்கள் லேசாக இடித்து விட்டாலே தெரிந்து விடும். உடனே இறங்கி என்ன, ஏது, யார் மீது என்றெல்லாம் பார்க்காமல் எந்த அளவிற்கு திட்டுகிறார்களோ அதைப் பொறுத்து நீங்கள் ஆபத்தானவர்கள், மிக மிக என்று மோசமானவர்கள் வரை போகலாம்.


இவை தவிர இன்னும், இரவு நேர அட்டூழியம் செய்யும் ஆம்னி பேருந்துகள், கன ரக வாகனங்கள், 'குடி' வண்டிகள், உள்ளே ஆட்கள் இருக்கிறார்களா இல்லையா என்று கூட தெரியாமல் செல்லும் ஆம்புலன்ஸ் வண்டிகள், சைக்கிள் மற்றும் பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும் மூன்று சக்கர வண்டிகள் என நிறைய உள்ளன. என்ன, எல்லோரும் ஒரு 'புரிந்துணர்வு' ஒப்பந்தத்துடன் வண்டி ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிக்காமல் உள்ளது என நினைக்கிறேன்.

வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் கூட இங்கு வந்து வண்டி ஓட்டினால், "இவன்லாம் எங்கயாவது விழுந்து சாகத்தான் போறான்" என்று என்னும் அளவிற்கு நம்மாட்கள் வைத்து விடுவார்கள்.

ஓர் ஆள் 'எப்படியாவது' 10 நிமிடத்தில் வீடு வந்து சேருகிறார் என்றால், கொஞ்சம் பொறுமையாக, எல்லா விதிகளையும் மதித்து சென்றால், அவர் உட்பட அனைவருமே 15 நிமிடங்களில் வீட்டிற்கு போகலாம். "விடுவமா, நாங்க .எங்களுக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவால்ல. உனக்கு ஒரு கண்ணாவது போகணும்" என்றல்லவா உள்ளோம்.