Wednesday, October 17, 2018

The Purge Series! ஆனா இது அதுல்ல??

எப்போது செய்திகள் பார்த்தாலும், கொலை, கொள்ளை. தினமும் நாம் பார்க்கும் நிகழ்வுகள் எல்லாமே, நமக்கு எதிர்மறை எண்ணங்களையே தூண்டுகின்றன. அப்படிப்பட்ட சமயங்களில் இந்தியன், அந்நியன் போன்ற ஷங்கர் படங்கள், பழைய SA சந்திரசேகர் படங்கள் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியதுதான். 

நிஜத்தில், யாராவது தவறு செய்யும்போது "அட ஏம்பா இப்படி பண்ற" என்று கேட்கக்கூட நமக்கு (எனக்கு) பயம். நமக்கெதுக்கு வம்பு, யார்க்குதானே நடக்குது என்று போய் விடுகிறேன். அதே போல ராட்ஷசன் படத்தில் வரும் கொலைகாரன் போல ஆட்களைப் பார்க்கும்போது "எப்படித்தான் இந்த பண்றதுக்கு மனசு வந்துச்சோ தெரியல" என்கிறோம். 

உண்மையில் நாம் ஒவ்வொருவருக்கும் குரூரமான, வக்கிரமான எண்ணங்களும் ஆசைகளும் இருக்கும். ஆனால் நம் ஆழ் மனதில் உள்ள பயம் அதை செய்ய விடாது. அதை தாண்டி ஒரு முறை எதையாவது செய்து விட்டால் அவ்வளவுதான். ருசி கண்ட பூனையாக மாறி விடுவோம். தற்கொலை எண்ணம் கூட அப்படிதான். எனக்கென்னவோ நிறைய படங்களில் வரும் கொடூரமான காட்சிகளை பார்க்கும்போது அது அந்த இயக்குனரின் ஆழ் மனதின் ஆசைகளாக இருக்குமோ என்று தோன்றும். சரி விடுங்க. 

"உங்களுக்கு ஒரு வாய்ப்பு. ஒரு நாள் ராத்திரி, நீங்க யாரை வேணும்னாலும் கொல்லலாம். யாரும் இந்தக் கேள்வியும் கேக்க மாட்டோம்" என்று அரசு சொல்கிறது எனில், என்ன செய்வீர்கள். சிறு வயதில் நம்மை அடித்த பள்ளி வாத்தியார் முதல், அலுவலகத்தில் உள்ள மேலாளர் வரை எல்லோரையும் கொல்ல தோன்றும் அல்லவா. அதே போல, நம்மையும் கொல்ல வேண்டும் என்று சிலருக்கு தோன்றும் அல்லவா. இப்போது நம் நிலை வாழ்வா, சாவா என்றாகி விட்டது. குறிப்பாக சொன்னால், புதுப்பேட்டை படத்தில் வருவது போல "இன்னைக்கி ராத்திரி தாண்டுவியான்னு பார்ப்போம்" என்றாகி விடும். 

இப்படி ஒரு எண்ணம்தான் ஒருவருக்கு தோன்றியது. அதன் விளைவுதான் The Purge series. இதுவரை 4 பாகங்கள் வந்துள்ளன. ஒரு சிறு பார்வை. 

The Purge (2013):


அமெரிக்காவில், 2014ல் புதியதாக ஆட்சிக்கு வரும் ஒரு கட்சி, பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் என்பதால், அதைக் குறைக்க ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ம் தேதி இரவு 7 மணி முதல், அடுத்த நாள் காலை 7 மணி வரை, கொலை உட்பட எந்த குற்றங்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். தண்டனை கிடையாது என்று சட்டம் கொண்டு வருகிறது. இதற்கு Purge Day (களையெடுப்பு நாள்) என்று பெயர். இதன் விளைவாக அடுத்த ஏழெட்டு வருடங்களில் வேலை வாய்ப்பின்மை, வறுமை, சட்ட விரோத நடவடிக்கைகள் எல்லாமே கட்டுக்குள் வருகிறது. 

2022ல், ஜேம்ஸ், பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனர், மனைவி கல்லூரியில் படிக்கும் மகள், பள்ளியில் படிக்கும் மகன் என வாழ்ந்து வருகிறார். மகள் தன்னை வயது மிக மிக அதிகமான ஒருவனைக் காதலிப்பது அப்பாவுக்கு பிடிக்கவில்லை. இவர்கள் தயாரிக்கும் பாதுகாப்பு உபகரணங்களைத்தான் நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள். அதனாலேயே குறுகிய காலத்தில் பெரிய பணக்காரன் ஆனதால், அண்டை வீட்டாரும் பொறாமை வேறு. 

2022 மார்ச் 21 இரவு வீட்டிற்கு வந்து எல்லா பாதுகாப்பையும் உறுதி செய்து மனைவி மக்களோடு சாப்பிட்டு விட்டு இருக்கும்போது, மகளின் காதலன், ஏற்கனவே வீட்டிற்கு வந்து ஒளிந்து கொண்டிருந்தவன், ஜேம்ஸை கொல்ல நினைக்கிறான். அதே நேரம், சாலையோரம் இருக்கும் ஏழை ஒருவனை ஒரு கும்பல் சும்மா கொலை செய்ய முயற்சிக்க, ஜேம்ஸின் மகன் வீட்டின் பாதுகாப்பை விலக்கி, அவனை வீட்டிற்கு வரவைத்து காப்பாற்றுகிறான். அதே நேரம் காதலன் ஜேம்ஸை சுட, அவன் தப்பித்து, மகளின் காதலனை சுட்டு விடுகிறான். உள்ளே வந்த வெளியாள், அவ்வளவு பெரிய வீட்டில் போய் ஒளிந்து கொள்கிறான். 

அவனை தேடி வந்த கும்பல், அவனை வெளியே விடவில்லை என்றால், ஜேம்ஸ் மற்றும் குடும்பத்தினரை கொள்ள வேண்டி இருக்கும் என மிரட்டுகிறது. எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே படம். 

The Purge: Anarchy (2014):


2023 மார்ச் 21. வருடாந்திர களையெடுப்பு (purge) நிகழ்வு இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆரம்பிக்க இருக்கிறது. ஒரு உணவகத்தில் வேலை பார்க்கும் பெண், வயதுக்கு வந்த மகள், உடல் நிலை சரியில்லாத தந்தையுடன் இருக்கிறார். ஒரு இளம் கணவன், மனைவி. தங்களுக்கு கருத்து வேற்றுமை இருப்பதால், விவாகரத்து பற்றி சகோதரியுடன் பேச செல்கிறார்கள். தனியாக ஒரு காவல் அதிகாரி. போதையில் வண்டி ஓட்டி, தனது மகனை கொன்று விட்டு எப்படியோ வெளியில் வந்து விட்ட பணக்காரனை இன்று கொல்ல வேண்டும் என்று துடிக்கிறான். இவர்களுக்குள் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டமே இந்தப்படம். 

போன படத்திற்கும் இதற்கும் பெரியதாக தொடர்பு இருக்காது. அதில் வெளியாளாக வருபவர், இதில் போராளியாக வருவார். இதில் பணக்காரர்கள் எப்படி இந்த களையெடுப்பு நாளை கொண்டாடுகிறார்கள் என்றெல்லாம் வரும். பணம் கொடுத்து, ஆளை கூட்டி வந்து கொலை செய்வது, எங்கெங்கு எல்லாம் வீடில்லாத ஏழைகள் இருப்பார்களோ அவர்களை தேடிப்போய் கொள்வது என்றெல்லாம் வரும். 

இந்தப் படம் பார்க்கும் போதுதான் தோன்றியது இப்படியெல்லாமாடா யோசிப்பீங்க? 

The Purge: Election Year (2016):


இந்த களையெடுப்பு நிகழ்வால் தனது குடும்பத்தை இழந்த ரோன் என்ற பெண், அதற்காக போராடி, ஜனாதிபதி தேர்தலில் நிற்கிறார். தான் வென்றால், இந்த நிகழ்வு ஒழிக்கப்படும் என்கிறார். அவரது பாதுகாப்பிற்க்கு போன படத்தில் வநத காவல் அதிகாரிதான் இருக்கிறார். முதல் இரண்டு படங்களில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் கொல்லக்கூடாது என்ற விதி இருக்கும். ஆனால், இதில் அந்த விதி நீக்கப்பட்டு விடும், ரோனைக் கொல்வதற்காக. 

இதற்கு நடுவில் எப்படியாவது தனது கடையைக் காப்பாற்ற வேண்டி துடிக்கும் ஒரு மளிகை கடைக்காரர்(?) அவரின் உதவியாளர், தோழி மற்றும் புரட்சியாளாரான முதல் பாகத்தில் வந்த அந்நியர். ரோன் கடத்தப்படுகிறார். கடைசியில் என்ன நடக்கிறது என்று நீங்களே பாருங்கள். இதில் மருத்துவ சுற்றுலா போல களையெடுப்பு சுற்றுலா என கொலை செய்வதற்காகவே அமெரிக்கா வருவார்கள். ஆத்தி என்று தோன்றியது. 

The First Purge (2018):


இது முந்தைய கதை. எப்படி இந்த களையெடுப்பு நிகழ்வு தோன்றியது. முதன் முதலில் நியூயார்க் நகரில் ஒரு குறிப்பிட்ட, ஏழைகள் நிறைந்த இடத்தில் ஒரு முன் மாதிரி நிகழ்வாக அறிமுகப்படுத்துகிறார்கள். பல பேர் அதை எதிர்க்கின்றனர். இருந்தாலும் பணம் கொடுத்து மக்களைத் தூண்டுகின்றனர். 

ஒரு போதைப்பொருள் வியாபாரி, அவனுடைய முன்னாள் காதலி, அவளது தம்பி, இரு தோழிகள், தம்பியை சீண்டிக்கொண்டே இருக்கும் ஒருவன் என வழக்கம் போல ஆட்கள். மக்களுக்கு சரியாக புரியாமல் எல்லோரும் இந்த நிகழ்வை சந்தோசமாக கொண்டாட, அதை மாற்ற அரசே ஆட்களை இறக்கி நிறைய பேரைக் கொல்கிறது. பிறகுதான் மக்களுக்கு விளைவுகள் புரிகிறது. இருந்தாலும், இதே வெற்றி என்று சொல்லி அரசு அதை நடைமுறைப்படுத்துகிறது. அவ்வளவுதான் நான்கு பாகங்களும். 

பொதுவாகவே அமெரிக்க மக்கள் கொஞ்சம் பயந்தவர்கள். "இந்த உலகம் சீக்கிரம் அழியப்போகுது, நம்மள காப்பாத்த யாராவது இருந்தா நல்ல இருக்கும்" என்ற எண்ணங்களே அங்கு சூப்பர் ஹீரோ படங்கள் வெற்றி பெற காரணம் என்று எங்கோ, எப்போதோ படித்துள்ளேன். இதுவும் அதே போல "ஒருவேளை இப்படி இருந்தா நல்லா இருக்குமோ" என்று எண்ணும் அளவிற்கு இருக்கும். ஆனால்,இதை வைத்து எப்படி ஏழைகள் கொல்லப்படுகிறார்கள், பணக்காரர்கள் எப்படி இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள் என்றெல்லாம் காண்பித்திருப்பார்கள். 

"சரி, இதைப்பத்தி இவ்ளோ சொல்ற அளவுக்கு என்ன இருக்கு" என்று நினைப்பவர்களுக்கு, படத்தில் வரும் சில காட்சிகள்/வசனங்கள். ஏழ்மையை ஒழிக்கிறேன் என்று சொல்லி ஏழைகளைக் கொல்வார்கள். அடிக்கடி புதிய அமெரிக்கா பிறக்கிறது என்பார்கள். ஒரு நாடு நன்றாக இருக்க நீ உன் உயிரை தியாகம் செய்கிறாய் என்று சொல்லி சொல்லி கொலை செய்வார்கள். நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கெல்லாம் முந்தைய அரசே காரணம் என்பார்கள். நாடு சுத்தமாக இது போன்ற அறுவை சிகிச்சை அவசியம் என்பார்கள். இது எல்லாவற்றையும் எங்கோ கேட்டது போல இருக்கிறதா. அதுதான் அதேதான்.