Monday, January 7, 2008

கமலும் நானும்

இளையராஜா போல கமல் எனக்கு அறிமுகம் ஆகவில்லை. எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலே எனக்கு அவரைப் பிடிக்கும். அந்த வயதில் என் நண்பர்கள் அனைவருக்கும் ரஜினியைப் பிடித்திருக்க, எனக்கு மட்டும் ஏன் கமல் பிடித்தது என தெரியவில்லை. அது தவறில்லை என விவரம் தெரிந்த பின் புரிந்தது.

நான் சின்ன வயதில் (ஓரளவு விவரம் தெரிந்து) பார்த்த படம் 'அபூர்வ சகோதரர்கள்'. உடனே அது எனக்கு பிடித்து விட்டது. அதன் பின் 'மைக்கேல் மதன காம ராஜன்'. சொல்லவே தேவையில்லை. அவ்வப்போது சில படங்கள் புரியாவிட்டாலும் (சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, ராஜ பார்வை போன்ற பரீட்சார்த்த திரைப்படங்கள்) எனக்கு கமலை மிகவும் பிடித்து போனது.

இப்போது என்னுடைய திரைப்பட திரட்டுக்களில் முதன்மையானவை கமலின் பரீட்சார்த்த திரைப்படங்கள்தான். அவற்றை பார்க்காவிட்டாலும், தொலைக்காட்சியில் போடும்போது கண்டிப்பாக தவறவிடமாட்டேன். இல்லாதபோதுதான் அருமை தெரியும் என்பார்கள். நான் அதை கமலின் திரைப்பட திரட்டுக்களின் மூலம் உணருகிறேன்.

Friday, December 7, 2007

இளையராஜாவும் நானும்

அனைவரும் நலமா? முதலில் வணக்கம் வைத்தாகி விட்டது. அடுத்து என்ன எழுத? கடவுளைப் பற்றி எழுதலாம் என்றால் நமக்கோ நம்பிக்கை இல்லை. எதையாவது எழுதி வீணாக அடி வாங்குவானேன்? எனவே, இசைக் கடவுளைப் பற்றி எழுதலாம் என்றுள்ளேன்.

10ம் வகுப்பு வரை அனைத்து பாடல்களையும் சும்மா கேட்டுக்கொண்டிருப்பேன். அனுபவித்தேனே தவிர ஆராயவில்லை. அப்போது வீட்டில் வெறும் ரேடியோ மட்டும்தான். திருச்சி மற்றும் இலங்கை நிலையங்கள் கேட்பேன். 11ம் வகுப்பு படிக்கும்போது சிங்கபூரிலிருந்த உறவினர் 'Philips 2 in 1' கொடுத்தார். அதற்கு பிறகுதான் ஒலி நாடாக்கள் வாங்க ஆரம்பித்தேன். வீட்டில் கொடுக்கும் பணத்தில் எல்லாம் வாங்க முடியாது. என் நண்பன் (பெரியம்மா பையன். 3 வயது பெரியவன்) 'மோகன் ஹிட்ஸ்', 'ரஜினி ஹிட்ஸ்', 'கமல் ஹிட்ஸ்' என்று வாங்க சொன்னான். அவன் சொன்ன காரணம், ஒரு படத்தின் ஒலி நாடாவில் நமக்கு பிடித்த பாடல் ஒன்றோ, இரண்டோதான் இருக்கும். அதற்கு பதிலாக இது போல வாங்கினால் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும். சரி, வயதில் பெரியவன் சொல்கிறானே என்று என்று நானும் நம்பி வாங்கினேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. கேட்க கேட்க இனிமையாக இருக்க, விவரங்களை தேடினேன். அதன் பிறகுதான் இளையராஜா எனக்கு மிகவும் நெருக்கமானார்.

கல்லூரிக்கு வந்த பின்பு, முதல் வருடம் மீண்டும் வானொலி மட்டும்தான். அப்போது கூட இளையராஜா என்ற பெயர் கேட்டால் கவனம் பாடல் மீதுதான். இரண்டாம் வருடம், எனது நண்பன் கணினி வாங்கி விட்டான். வழக்கம் போல அனைத்து பாடல்களும் இறக்கப்பட்டன. நான் இளையராஜா பாடல்கள் மட்டும் கேட்பேன். கொஞ்சம் கொஞ்சமாக பின்னணி இசையையும் உணர ஆரம்பித்தேன். ராஜா என்னுள் முழுமையாக இறங்கி விட்டார்.

இன்று வரை மட்டுமல்ல, நான் இறக்கும் வரை ராஜாவைத் தவிர வேறு யாரும் என் மனதை கவர மாட்டார்கள்.

Tuesday, November 13, 2007

நான் வணங்குகிறேன்

இந்த வலைப்பூவை படிப்பவர்களுக்கு என்னுடைய நன்றிகள்... தெரிந்து வந்திருந்தாலும் வழி(லை) தவறி வந்திருந்தாலும் சரி.. அவ்வப்போது கிறுக்குவதை படிக்கவும். பிடித்திருந்தால் பாராட்ட வேண்டியதில்லை.. ஆனால் தவறென்றால் தலையில் குட்டலாம்..