Saturday, February 21, 2009

மொக்கை படங்களும், கவர்ந்த காட்சிகளும்

ஒரு திரைப்படம் எவ்வளவுதான் மொக்கையாக இருந்தாலும், அதில் ஒரு சில (குறைந்தது ஒன்று) நமக்கு (எனக்கு?) மிகவும் பிடிக்கும். [நான் நகைச்சுவைக் காட்சிகளைப் பற்றி சொல்லவில்லை. அவை தனிக் கணக்கு] அவற்றில் எனக்கு ஞாபகம் உள்ளவைகளைப் பற்றி சொல்கிறேன்.

முதலில் மருத்துவர் விஜயின் 'திருமலை'. படத்தை பற்றி நான் சொல்ல போவதில்லை. அதில் என்னை மிகவும் கவர்ந்த காட்சி.

திருமணத்தன்று காதலியுடன் ஓடி வரும் நண்பனைக் கூட்டிப்போய், திருமணம் செய்துவைப்பார் என்று நினைக்க, அவரோ திருமண மண்டபம் கூட்டிப்போய், அந்த மாப்பிள்ளையிடம் மன்னிப்பு கேட்க வைக்கும் காட்சி. இதுவரை அந்த பாத்திரத்தை ஒரு பொருட்டாக எந்த படத்திலுமே மதித்ததில்லை. அதிலும் பெண்ணின் தந்தை நண்பனிடம், "எப்படிரா எம்பொண்ணை நீ காப்பாத்துவ? அவளுக்கு அழத் தெரியுமுன்னே எனக்கு இன்னிக்குத்தாண்டா தெரியும்" என்பார். நண்பனோ அரண்டு போய் விஜயை அழைக்க, அவரோ "கேக்குறார்ல, சொல்லு" என்பார். அருமையான, என்னைக் கவர்ந்த காட்சி. இதுவரை, இது போல வேறு படத்தில் நான் பார்த்ததில்லை. ஆனாலும், 'சாக்லேட்' படத்தில் வரும் அந்த அமெரிக்க மாப்பிள்ளை பாத்திரமும் நன்றாக, ஓரளவு கிறுக்குத்தனமில்லாமல் இருக்கும்.

மற்றொரு படமான ஆதியில், அவரின் அறிமுக காட்சி. தற்கொலை செய்ய முயற்சிப்பவனைக் காப்பாற்றும் காட்சி. கொஞ்சம் ஓவராக இருந்தாலும், எனக்கு மிகவும் பிடிக்கும். தண்டவாளத்தில் தற்கொலைக்கு படுத்திருப்பவனைக் காப்பாற்றுவார் என்று நினைக்க, அவரோ அவனையும் தாண்டி, ரயிலை நோக்கி ஓட, அவன் எழுந்து ஓடி, தலைவரைக் காப்பாற்றுவான். படம் முடியும்போதுதான் அவன் ஏண்டா காப்பாற்றினான் என்று தோன்றியது.

அஜித்தின் 'ஜனா'. படம் பார்க்க போகும்போது, டிக்கெட் வாங்க ஒருவன் செல்ல, நாங்கள் காத்திருந்தோம். படம் முடிந்து வந்து கொண்டிருந்தவர்களிடம், 'படம் எப்படி?' என்று கேட்க, ஒருவர் சொன்னார். "கொன்னுட்டான் போ!".. முழு அர்த்தம் எங்களுக்கு உள்ளேதான் விளங்கியது.

அதில் வரும் ஃப்ளாஷ் பேக் காட்சியில், ஒரு வில்லனைப் பார்க்க ஆயுதமின்றி போவார். அவனோ திடீரென துப்பாக்கியை நீட்டி, "நான் நெனச்சா உன்ன இங்கயே முடிச்சிருவேன்" என்பார். உடனே அஜித் ஏதோ பேசுவார். (தூக்க கலக்கம்.. கவனிக்கவில்லை அப்போது) பின் கையை நீட்ட, உடனே வில்லனின் ஆட்கள் துப்பாக்கியை அவரிடம் கொடுத்துவிட்டு அவரின் பின்புறம் வந்து விடுவர். அப்போது நன்றாக இருந்தது. பின் நண்பன் அது ஒரு ஆங்கிலப் பட காப்பி என்றான். அப்போது நம்பவில்லை. 'மலைக்கோட்டை' பார்த்தபின் நம்பினேன்.

சத்யராஜின் 'என்னம்மா கண்ணு'. எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. அதிலும், முடிவில் நண்பனாக வரும் ரஞ்சித், சத்யராஜையும், காதலி தேவயானியையும் பற்றி தவறாகக் கூற, தேவயானி சத்யராஜிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்வார். ஆனால், அவரோ பின் நண்பன் சொன்ன குற்றம் உண்மையாகிவிடும் என்றும், ஒருபோதும் அவரை அந்த கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை என்றும் கூறிவிட்டு, தேவயானியை விரும்பிய ஒருவருக்கு மணமுடித்து வைப்பார். எனக்கென்னவோ இதனால்தான் படம் ஓடவில்லையோ என்று தோன்றியது.

விஜயகாந்தின் காவல்துறை சம்பந்தப்பட்ட திரைப்படங்களில், சில சம்பவங்களுக்கு வில்லன்தான் காரணம் என்று தோன்றும். ஆனால், தலைவர்தான் அதற்கு பின்னால் இருப்பார். வில்லனின் காதலியை நான்கு பேர் துரத்த, சரி தலைவர் வருவார் காப்பாற்ற என்று பார்த்தால், வில்லன் வருவான். என்னடா என்றால், அந்த ஆட்களே தலைவரின் செட் அப்தான். அதன் பின்னும் வில்லனை துரத்திக்கொண்டு அவன் இடத்திற்கு போக, அங்கு ஒரு கும்பலே அவரை பயங்கரமாக கலாய்க்கும். "இது பழைய மாடல் பிஸ்டல் ஆச்சே. இதுல சுட்டா நீ கணக்கு காமிக்கணும் தெரியுமா?" என்க, அவர் பொசுக்கென்று சுட்டு விட்டு "ஆமாடா, இது பழைய மாடல்தான். எனக்கு கணக்கு எப்படி காமிக்கணும்னு தெரியும்" என்பார். இதே போல நிறைய காட்சிகள் தொடர்ந்து அடுத்தடுத்து வருவதால், சலித்து விட்டது.

இவை தவிர, ஒரு சில நல்ல படங்களில், வழக்கமான பாணி அல்லது முடிவு இல்லாத படங்களும் உண்டு. அஜித்தின் பில்லா படத்தில், அவருக்கும், நயன்தாராவுக்கும் காதல் என்ற ஒன்றே இல்லாமலிருக்கும். அதே போல, 'கண்ணெதிரே தோன்றினாள்' படத்தில், கரண் இறுதிவரை தனது முதல் தங்கையின் காதலை ஒப்புக் கொள்ளவே மாட்டார். இவையிரண்டும் சற்றே சராசரியிலிருந்து மாறுபட்டவை. காட்சிகளாக வராது(?).

இவையாவும் எனக்கு அவ்வப்போது ஞாபகம் வந்தவை. மக்களுக்கு தோன்றுபவைகளை பின்னூட்டங்களிலிட வேண்டுகிறேன்.

தலைப்பில் 'கவர்ந்த' காட்சிகள் என்பதால், இன்னும் சிலவற்றையும் சேர்க்க வேண்டும். ஆனால், 'ஏ'டாகூடமாக ஆகிவிடக்கூடாது என்பதால், இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

[சார், இந்த மாசத்துக்கு ஒரு பதிவ...

போட்டாச்சு போட்டாச்சு..]

Sunday, January 25, 2009

ஒரு தமிழனும், மூன்று ஹிந்தி படங்களும்

நாங்கள் எப்போதும் 'சார்லி சாப்ளின்' படங்களையும் 'ஷகீலா' படங்களையுமே மௌன படங்களாக பார்ப்போம். ஆனால், காலம் செய்த கோலம், ஒரு நல்ல ஹிந்தி படத்தையும் அப்படி பார்க்க வேண்டியதாக போய் விட்டது. விவரங்கள் கீழே.

இந்த வாரம் மூன்று நாள் விடுமுறை என்று, எப்போதோ பதிவிறக்கம் செய்யப்பட்ட மூன்று திரைப்படங்களை பார்த்தோம். அவை முறையே,

1. SlumDog Millionaire (குப்பைநாய் பணக்காரன்), [மன்னிக்க.. இதை நான் ஹிந்தியில் சேர்த்து விட்டேன்.. பதிவின் தலைப்புக்காக]

2. A Wednesday (ஒரு புதன்கிழமை).. [இதுதான் மௌனப்படம்.. ]

3. கஜினி [இதெல்லாம் போன வருஷமே போயாச்சு நீங்க சொல்றது புரியுது.. என்ன செய்ய..]

இவற்றை பற்றி நான் விமர்சனம் எழுதவில்லை. சும்மா.. சொல்ல வேண்டும் என்று தோன்றியது மட்டும்..

SlumDog Millionaire (குப்பைநாய் பணக்காரன்)

உண்மையிலேயே அருமையான திரைக்கதை, இசை, இயக்கம்.. அந்த சிறுவர்களின் நடிப்பும் அட்டகாசம். அந்த கடைசி கேள்வியும், அதற்கான flashback, தொடர்ந்து வரும் காட்சிகள் அனைத்துமே அருமை. எனக்கு இந்த வீடியோதான் நினைவுக்கு வந்தது. பின்னணி இசை அற்புதம். அது பற்றி தனி பதிவு உண்டு. மற்றபடி என்னால் வேறு எடையும் அலசி காயப்போட முடியவில்லை.. மன்னிக்கவும்.

படம் முடிந்த பின்னர், படத்தை பற்றி விவாதிக்கும்போதுதான் logic பற்றி பேசினோம்.. படத்தில் யாருமே நல்லவர்கள் இல்லை. இர்பான் கான் மட்டும்தான் ஓரளவு நல்லவர் போல இருந்தது. மற்றபடி யாருமில்லை. நாயகன் வாழ்வில் நடந்த சம்பவங்களை வைத்து கேள்விகளுக்கு விடை அளிக்கிறான். அதுவும் அடுத்தடுத்த கேள்விகளுக்கேற்ப வயதும் ஏறுகிறது. உள்ளூர் ஆட்கள் அனைவரும், ஏன் அண்ணன் தம்பி கூட ஆங்கிலத்தில்தான் பேசிக் கொள்கிறார்கள். கேட்டால் 'ஆங்கில படம்' என்கின்றனர்.

ஒரு ரசிகனாக எனக்கு படம் மிகவும் பிடித்தது. ஒரு இந்தியனாக பிடிக்கவில்லை. படத்தில் வருபவை அனைத்தும் பொய்யில்லாமல் இருக்கலாம். ஆனால், அவை மட்டுமே உண்மையில்லை என்பது என் தாழ்மையான/உயர்மையான கருத்து..

A Wednesday (ஒரு புதன்கிழமை)

முன்பு பார்த்த படத்திற்கு அப்படியே எதிர்.. படத்தில் வரும் முக்கிய பாத்திரங்கள் அனைவருமே மிக நல்லவர்கள்.. [தீவிரவாதிகளை விட்டுவிடுங்கள்].. படத்திற்கு audio ஏதோ பிரச்சினை. எனவே, sub-title வைத்து சமாளித்து விட்டோம். [சத்தம் இருந்திருந்தாலும் வைத்திருப்போம் என்பது வேறு விஷயம்]. எனக்கு அனுபம் கேரின் கதாபாத்திரம் மிகவும் பிடித்தது. பிரச்சினையின் தீவிரத்தை உணரும்போதும், பின் உத்தரவிடுவதும் கம்பீரம். அதை விட மிக பிடித்தது, கடைசியில் வரும் அனுஜ், Hacker. படத்தில் முக்கியமான ஐந்து பாத்திரங்கள்.. ஐவருமே அழகாக செய்துள்ளனர். இறுதியில், நஸ்ருதீன் ஷாவின் பெயர்.. உண்மையாகவே அருமை.

கஜினி

படம் பார்த்தபோது, பரவாயில்லையே, தமிழில் கோட்டை விட்ட இடங்களை எல்லாம் முருகதாஸ் சரி செய்து விட்டாரே என்று நினைத்தேன். ஆனாலும் தமிழ் அளவுக்கு இல்லை.. ஏனென்று தெரியவில்லை. அமீர் கான் சண்டைக் காட்சிகளில் சட்டையை கழட்டுகிறார் மன்னிக்க பட்டையை கிளப்புகிறார்.. மற்ற காட்சிகளை நம்மையும் அறியாமல் 'சூர்யா நல்ல பண்ணியிருந்தார்' என்று நினைக்க வைக்கிறார். குறிப்பாக, அசின் சஞ்சயாக நடிக்க ஆள் தயார் செய்யும்போது சூர்யா வருவார். 'சஞ்சய் வந்திருக்காரு' என்று அசின் சொல்லும்போது சூர்யாவின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கும். அதே போல, அசின் காதலை சொன்னவுடன், 'நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லணும்' என்று வாயசைப்பார். ஆனால், அதையே அசினும் சத்தமாக சொல்லுவார். அது இவை இரண்டும் அமீரிடம் இல்லை. ஜியா கான் வந்து மருத்துவமனையில் பார்த்து உண்மையை சொல்லும்போது, அவர் கதறுவார். எங்களுக்கு கண்ணில் நீர் வந்து விட்டது [சிரித்து சிரித்து].. ரஹ்மான் வழக்கம் போல அருமை.அமீர் ஜியாகானை துரத்தும்போது வரும் 'Run run' மிக அருமை. அதுதான் இப்போது என் ring tone.

சரி அது ஏன் தமிழன் என்று கேட்கிறீர்களா?? 'தமிழன்டா நான் ஒரு தமிழன்டா' என்ற பாடலுள்ள 'சிலம்பாட்டம்' படத்தை திருட்டு வீடியோவில் கூட நான் பார்க்கவில்லை. நான் கடைசியாக பார்த்த தமிழ் படம் 'Shanghai KNights'. [உபயம் சன்.. இப்போதுதான்].. சும்மா தமாசு..

எனவே மக்களே, உங்களது கருத்துகளையும் கொட்ட வேண்டுகிறேன். [என் தலையில் அல்ல]..

Friday, December 26, 2008

வாழ்த்துக்கள்!!

பதிவின் பக்கமே வந்து பல நாட்களாகி விட்டதால், சும்மா ஒரு பதிவு. அனைவருக்கும் சற்றே தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

எனக்கு இந்த புது வருட கொண்டாட்டங்களில் ஆர்வம்
கிடையாது. ஒவ்வொரு நாள் எழும்போதும் அது புது நாள். ஏன் ஒரு நாளை மட்டும் கொண்டாட வேண்டும்? பிறந்த நாள் கூட கடமைக்குத்தான்.. இருந்தாலும் பதிவு போட ஏதாவது வேண்டாமா? அதனால் தான்..

என்னுடைய புத்தாண்டு லட்சியம் ஒன்றே ஒன்றுதான். எங்காவது தேதியை எழுதும்போது வருடத்தை 2009 என்று எழுத வேண்டும். ஏனென்றால் குறைந்தது இரண்டு மாதமாவது ஆகும் எனக்கு. . உங்களுக்கு???

Thursday, November 27, 2008

மகிழ்ச்சியாய் இருந்தது (இருப்பது) எப்போது??

தனிமையில் இருக்கும்போது அடிக்கடி தோன்றுவது இதுதான்.. நான் எப்போது சந்தோஷமாய் இருந்துள்ளேன்? அறியா வயதிலா, பருவ வயதிலா, கல்லுரியிலா அல்லது வேலைக்கு போன பிறகா?

கொஞ்சம் ஆழமாய் யோசிக்கும்போது, ஒரு காலகட்டத்தை கடந்த பின், அதைப்பற்றி நினைக்கும்போது, அந்த கால கட்டத்தில்தான் மிக மகிழ்ச்சியாய் இருந்ததாய் தோன்றுகிறது.

ஆனால் அந்தந்த காலகட்டங்களிலோ, அதற்கு அடுத்த கட்டத்தில்தான் மகிழ்ச்சியாக இருப்போம் என்று எண்ணியதுண்டு.. இதனாலேயே, முழுவதுமாக அந்த மகிழ்ச்சியை அனுபவித்ததில்லையோ என தோன்றியதுண்டு. இதைப்பற்றி தனிப்பதிவு இடுகிறேன்.

ஆனால், தினசரி வாழ்க்கையில் வரும் அற்ப சந்தோஷங்கள்தான் நாம் உண்மையாக அனுபவிப்பவை. என்னுடைய அற்பத்தனத்தை பதிவிட்டுள்ளேன். உங்களுடையவை பின்னூட்டத்தில்...

தினசரி பேருந்திலும், ரயிலிலும் கும்பலில் நசுங்கி, பிதுங்கி பயணிக்கும்போது, எவனாவது செல்பேசியில் சத்தமாக பாட்டு போட்டால் எரிச்சலாக வரும். அப்போது நமக்கு மிகவும் பிடித்த, ரொம்ப நாள் கேட்காத பாடல் வரும்போது, அந்த நான்கைந்து நிமிடங்கள்...

அதே பயணத்தில் ஏதாவது அழகான பெண், அதுவும் நாம் பார்க்கும் கோணத்தில் இருந்தால், அது ஒரு சுகானுபவம். அந்த பெண்ணும் நம்மை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டால், இறங்கவே மனம் வராது.

ஏதாவது நெடுந்தூர பயணத்தில், நாம் அரைத்தூக்கத்திலும், பேருந்து பயண நெரிசலில் அதிக நேரம் நிற்கும்போது, ஓட்டுனர் வண்டியை இரண்டடி நகர்த்தும்போது, ஏதோ சொந்த ஊரையே அடைந்து விட்டது போல சந்தோஷம்.

கடற்கரையில் சுண்டல் வாங்கி சாப்பிட்டபின், அந்த சுண்டல் மடித்த தாளில் நல்ல கவிதை/கட்டுரை/கதை இருக்கும்போது.

என்றாவது வீட்டில் பழைய பொருட்களை நோண்டிக்கொண்டிருக்கும்போது, எப்போதோ தேடிய பொருள் கிடைக்கும்போது வரும் நினைவுகள்..

'றேடியோஸ்பதி' புதிருக்கு விடை தெரியும்போது..

'ஒரு பதிவிட்டபின், அதுவும் தமிழ்மணத்தில் வந்த பின், வருகை தந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போதும், அவர்கள் பின்னூட்டமிடும்போதும்.. இப்போதைக்கு மகிழ்ச்சியான விஷயம் அதுதான்..

என்னதான் இதே போல பல சந்தோஷங்கள் இருந்தாலும், முல்லாவோ/தெனாலிராமனோ/பீர்பாலோ அவருடைய மன்னருக்கு சொல்லி புரியவைத்த 'அந்த' செயல்தான் உண்மையிலே சந்தோஷமான விஷயம். புரிந்தவர்கள் சிரித்துக்கொள்ளவும். புரியாதவர்கள் எங்கேயாவது படித்து, சிரித்துக்கொள்ளவும்.

Sunday, November 23, 2008

நேர் காணல்

மக்களே, மீண்டும் உங்கள் கண்களை குளமாக்குவதற்கு மன்னிக்கவும். பழைய விகடனிலிருந்து , உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க(?) அடுத்த பதிவு. இதில், சில, பல பேட்டிகள் உள்ளன. (முந்தைய பதிவு)

கார்த்தி ராஜா, பவதாரிணி மற்றும் யுவனின் பேட்டிகள் உள்ளன. யுவனின் வெள்ளந்தியான பதில்கள் (படிப்பு வரல சார், அதான் ஸ்கூலுக்கே போகல.. ரஹ்மானின் இசையில் 'காதல் ரோஜாவே' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்) நன்றாக உள்ளன. அந்த பக்கம் மட்டும் (இன்னும்) கொஞ்சம் கண்ணைச் சுருக்கிப் படிக்கவும்.



ஆர். கே. செல்வமணி பேட்டி: 'வளர்ப்பு மகன்', 'அடிமை' (பார்த்திபனின் சோத்துக்கட்சி) போன்ற படங்கள் என்ன நிலை என்று முரளி கண்ணன் சொல்ல வேண்டுகிறேன். வழக்கம் போல, ரஜினி பற்றியும், ரோஜா பற்றியும் கூட உள்ளன.



பி. சி. ஸ்ரீராம் பேட்டி: குருதிப்புனல் படம் பற்றி சொன்ன முக்கிய விஷயம். "என் பையன் ரஜனி ரசிகன். அவன் முத்து படம்தான் பார்ப்பான். அவனும் விரும்பி பார்க்கும்படி குருதிப்புனல் பண்ணனும்". பையன் (அப்போது) பார்த்தானா தெரியவில்லை.

படத்தில் தனுஷாக வரும் அரவிந்த் நானல்ல.. (என்னளவிற்கு புகைப்படம் எடுப்பதில் சிறந்தவர் இல்லையென்றாலும்) அவர்தான் புதுப்பேட்டை, குசேலன்(?) படங்களின் ஒளிப்பதிவாளர் 'அரவிந்த் கிருஷ்ணா' என்று நினைக்கிறேன். சரியா?




(இந்த பதிவை உங்களுக்கு வழங்கியவர்கள் சங்கர நேத்ராலயா மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை. )

Sunday, November 16, 2008

பேரம் பேசுவது எப்படி???

சக பதிவர் இம்சை அரசியின் பதிவை படித்தபோதே நானும் அதைப்பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், நாம் இருக்கும் 'பிசி'யில்... சரி அதை விடுங்க..

நமக்கும் பேரம் பேசுவதற்கும் 'ஒளியாண்டு' கணக்கில் தூரம். பேரம் பேசுவதாய் நினைத்து கடைக்காரர் சொன்னதை விட அதிகமாக கொடுத்துதான் எனக்கு நடந்தது. அவ்வளவு உருகிய கதை சொன்னார். ஆனால், இது அதைப்பற்றியதல்ல.

கல்லூரி படிக்கும்போது, 10 நாட்கள் குல்லு, மணாலி என்று பயணம் போயிருந்தோம். மணாலியில், ஏதோ இடத்தில், பனியில் விளையாடிக்கொண்டிருந்தோம். பின், நானும் இன்னும் இரு நண்பர்களும், ஒரு சிறிய குட்டிச்சுவரில் உட்கார்ந்தோம்.

அப்போது ஒரு மலைவாசி போல ஒரு ஆள் வந்து, குங்குமப்பூ விற்றுக்கொண்டிருந்தான். (நம்முடைய ஹிந்தி அறிவிற்கு, அது இன்னொருவர் சொல்லி தெரிய வந்தது.) நாங்கள் அவரையே பார்த்துக்கொண்டிருந்ததால், எங்களருகில் வந்தார். மிகவும் சிறிய கண்ணாடி பாட்டில்களில் போட்டு வைத்திருந்தார். மீறிப்போனால், ஒரு பாட்டிலில் உள்ள பூ, 10 கிராம் கூட தேறாது.

என் நண்பன் நாராயணன் என்பவன், வீட்டில் குங்குமப்பூ கேட்டார்கள் என்று வாங்க போவதாக சொன்னான். எனவே, பேச்சு வார்த்தை தொடங்கியது. நாங்கள் அரைகுறை ஆங்கிலம், அவை ஹிந்தி. உங்களுக்காக சப்-டைட்டில் மட்டும்.

"எவ்வளவுங்க இது"

"அம்பது ரூவாப்பா"

நாராயணன் ஒரு கணம் யோசித்து "ஏக் ரூப்யா' என்றான். (இது முக்கிய தருணம்.. சற்றே கற்பனைக் குதிரையை தட்டி யோசித்தி பாருங்கள்.. )

நான் குட்டி சுவற்றின் பின்னால் எட்டிக் குதித்து விட்டேன். இன்னொருவன் கீழே குதித்து பத்தடி ஓடிப்போய் நின்று கொண்டான். நாராயணனோ அசையவில்லை.

அவர் அவனை ஏற, இறங்க பார்த்து விட்டு அப்படியே சென்று விட்டார். நாங்கள் திரும்பி வந்து, அவன் உயிருக்கு ஆபத்து (நமக்கும்தான்) இல்லை என்று உறுதி செய்து கொண்டு கேட்டோம். "அது எப்பிடிரா மனசாட்சியே இல்லாம அப்படி கேட்ட?? ஒருவேளை அடி விழுந்திருந்தா??'

அவன் பொறுமையாக சொன்னான். "அது ஒன்னும் அவ்வளவு காசில்ல. பேரம் படியலேன்னா அவ்வளவுதான்.. அதுக்கேன் கை வைக்கிறான்".

அப்போது திரும்பி வந்தார். நாங்கள் இருவரும் மறுபடியும் தயாரானோம். அவரோ, "நாப்பது ரூவா கொடுங்க" என்றார்.

நம்மாள் மீண்டும் சொன்னான். "ஏக் ரூப்யா.'

இப்போது அவர் ஒரு முறை முறைத்து விட்டு போனார். எனக்கோ சற்று உதற ஆரம்பித்து விட்டது. "டேய். அந்தாளு ஆளுங்களை கூட்டிக்கிட்டு வரதுக்குள்ள ஓடிரலாண்டா" என்றேன். அவனோ 'ச்சீ.. சும்மா இரு.. அத வாங்காம போறதில்ல" என்றான்.

இப்போது அவர்கள் இரண்டு பேராக வந்தார்கள். இன்னொருவன் நடுங்குவது எனக்கு பார்க்கும்போதே தெரிந்தது. எனக்கும்தான். அவர்கள் அருகே வந்து "சாப், ரொம்ப கஷ்டப்பட்டு, காட்டுல அலைஞ்சு, திரிஞ்சு எடுத்தது சாப்.. இருவத்தஞ்சாவது கொடுங்க சாப்" என்றார். (அவர் இன்னும் பயங்கர சோகமாக சொன்னார்.. எனக்கு கண்ணில் கண்ணீர் வந்து விட்டது).

நம்மாள் மீண்டும் அதே டயலாக்.. விலை இருபது, பதினைந்து, பத்து, எட்டு என்று வந்து விட்டது.. நான் நாராயணனிடம் மெதுவாக, "டேய். அந்த பாட்டிலுக்காவது எட்டு ரூவா கொடுக்கலாண்டா" என்றேன். ஒரே வார்த்தை "பாக்கலாண்டா"..


ஐந்து ரூபாய்க்கு வரும்போது, அவன் பரந்த மனதோடு, "சரி.. ரெண்டு ரூவா" என்றான். அவர்களுக்கு பயங்கர சந்தோஷம். எப்படியாவது நான்கு ரூபாய்க்கு முடித்துவிட வேண்டும் என்ற நோக்கம் புரிந்தது. எங்களாலும் தாங்க முடியவில்லை. (இந்த சம்பவம் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நடந்தது.) "டேய். இவ்வளவு நேரம் பசினதுக்காவது மூன்ருவா கொடுக்கலாண்டா" என்றோம். அதற்கும் அவர்கள் பேரமும் மூன்று ரூபாய்க்கு வந்தது. நல்லபடியாகவும் முடிந்தது. எங்களுக்கும் போன உயிர் திரும்ப வந்தது.

ஐந்து பாட்டில்கள், பதினைந்து ரூபாய். அவர்கள் கிளம்பிய பின் கேட்டோம். "ஏண்டா.. அப்படி பேரம் பேசி வாங்கி இத என்ன பண்ணுவ?? பாவம் ஒரு பத்து ரூவாவாவது கொடுத்திருக்கலாம்".


அவனோ "இதுவே அவனுக்கு பெரிய லாபமா இருக்கும். இல்லேனா யாருமே கொடுக்க மாட்டாங்க" என்றான்.

"உனக்கு மனசில பெரிய புத்திசாலின்னு நெனப்பா?? சரி. ஒருவேளை இது போலியா இருந்தா" என்று கேட்டோம்.

மிக பொறுமையுடன் சொன்னான்.

"அவன் நம்ம எல்லார விட புத்திசாலின்னு நான் ஒத்துக்கிறேன்"

ஆனால், எங்களால் யார் புத்திசாலி என்று கண்டுபிடிக்க முடியவில்லை. பயணத்தின் நடுவே, நாராயணன் அந்த பாட்டில்களை தவற விட்டு விட்டான்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்???

Friday, October 31, 2008

தீபாவளி படங்களின் (சூடான) விமர்சனம்

கமல், ரஜினி, மம்முட்டி, சரத் என்று, தீபாவளி ஒரே கலக்கல்தான் போங்க..


கடுப்பாகி அடிக்க வர வேண்டாம். கொஞ்ச நாட்களுக்கு முன், ஒரு பழைய ஆனந்த விகடன் கையில் கிடைத்தது. சமீப காலமாக அவர்களே பழைய கட்டுரைகளை போடுகிறார்களே என்றுதான் நினைத்தேன். ஆனால், அந்த இதழ் வர இன்னும் நாளாகும் என்பதால் நானே பதிவிடுகிறேன். அதை கொண்டு வர முடியாத சூழலில் இருந்ததால், Digi Camஇல் புகைப்படமாக எடுத்து வந்தேன். படங்களை கிளிக்கி பெரிதாக்கி படித்துக் கொள்ளவும். கொஞ்சம் தெளிவாக நானே தட்டச்சு பண்ணி பின்பு இடுகிறேன். இப்போதைக்கு இவ்வளவுதான். மன்னிக்கவும். உங்களுடைய கருத்துக்கள் பின்னூட்டத்தில்..





இன்னும் சில பல கட்டுரைகளும் உள்ளன. நானே என்றாவது ஒரு நாள்தான் பதிவிடுகிறேன் என்பதால், அதெல்லாம் பிற்பாடு இடுகிறேன். அதுவரை பின்னூட்டம் கோரி, உங்களிடமிருந்து விடை பெறுவது..



ரவிந்த்