Wednesday, April 24, 2013

உதிரிப்பூக்கள் - கதைக்குத் தேவையான கவர்ச்சி

நீங்க கவர்ச்சியா நடிப்பீங்களா?

கதைக்குத் தேவையான கவர்ச்சினா, கவர்ச்சி காட்றதுல தப்பில்ல.

எந்த நடிகையை எடுத்துக் கொண்டாலும், இந்த கேள்வி உண்டு. இதே பதிலும் நிறைய பேரிடம் வந்ததும் உண்டு. இந்த கேள்வி எனக்கு எப்படி தோன்றும் என்றால், இதற்கு எனக்கு ஒரு கேள்வி கேட்க வேண்டும் போல உள்ளது. அட, அதில்லீங்க, "படத்துல, நீங்க நகைச்சுவை நடிகரோட கை கோத்துக்கிட்டு போற மாதிரி ஒரு காட்சி" என்று சொன்னால், அதில் நீங்கள் நடிப்பீர்களா? கண்டிப்பாக மாட்டீர்கள். நாயகனுடன் மட்டும்தான் ஜோடியாக நடிப்பேன் என்பீர்கள்.

கதைக்கு அது தேவைதான், ஆனால், நடிக்க மாட்டீர்கள். சமீபத்தில் 'பத்ம' விருதை ஒதுக்கிய ஜானகி அம்மாளை ரசித்தேன். ஆனாலும், அவரது கருத்தில் ஒன்றே ஒன்றுதான் இடித்தது. அதாவது, ஒரு படத்தில், இவர் பாட வேண்டிய பாடல் நகைச்சுவை நடிகைக்கு ஒதுக்கப்பட்டதாகவும், அதனால் அதை தான் பாடவில்லை என்றும் சொல்லியிருந்தார். கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஜானகி அவர்கள், குரலை நன்றாக மாற்றிப் பாடக்கூடியவர். அவரால், அந்த நகைச்சுவை உணர்வைக் கொடுக்க முடியும் என்பதால்தான் அவர் அழைக்கப்பட்டிருப்பார்.என்னவோ போங்கள்.


உதிரிப்பூக்கள் என்ற (சீரியல் அல்ல) ஒரு பழைய படம் உள்ளது. நிறைய பேர், தமிழில் உள்ள உலகத் திரைப்படம் என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால், படம் பார்த்தால் "அப்படி எதுவும் தெரியவில்லையே, படம் ஒரு சாதாரண கதைதான், இதில் என்ன உள்ளது என்று ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார்கள்" என்றுதான் எல்லோருக்கும் தோன்றும். இதே கேள்வியை நான் ஒரு பதிவிலும் பார்த்திருக்கிறேன்.

நம்மவர்களுக்கு, உலகப்படம் என்றாலே ஒரு முறை பார்த்தால் புரியக்கூடாது, திரைக்கதை ஒரே நேர்க்கோட்டில் போவது போல இருக்கக்கூடாது என்று நிறைய நியதிகளை நாமே வகுத்து விட்டோம். அதனால்தான் இந்த படத்தில் அப்படி என்ன உள்ளது என்ற கேள்வி வருகிறது. இந்தப் படத்தை சிறு வயதிலேயே DDயில் பார்த்திருக்கிறேன். அப்போது இந்தப் படம் எனக்குப் பிடிக்கவில்லை (கவனிக்க. புரியவில்லை என்று சொல்லவில்லை). ஏனென்றால் சண்டை இல்லை, கவுண்டமணி செந்தில் இல்லை.

இந்தப் படத்தில் ஏதோ உள்ளது என்று எப்போது தெரிந்தது என்றால், என் மாமா பொதுவாக படமே பார்க்க மாட்டார். அவரது மகன்களுக்காக ரஜினி படங்கள் மட்டுமே கூட்டிப் போவார். அவர் பார்த்து கண் கலங்கிய படம் 'உதிரிப்பூக்கள்'. இதை என் அத்தை என்னிடம் சொல்லியபோதுதான் முதன் முதலில் "இந்தப் படத்தில் என்னமோ உள்ளது போலவே?" என்று நினைத்தேன்.

இந்தப் படத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அலசி விட்டார்கள் நானும் என் பங்குக்கு, என்னுடைய புரிதல்களை பகிர்கிறேன்.



படத்தின் பாத்திரங்கள். படத்தில் கெட்டவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். விஜயனின் ஒரு சில குணங்களே, அவரைக் கெட்டவராக மாற்றும். தேவையில்லாமல் ஓவராக பேசும் குழந்தைகள் இல்லை. இன்னும் சொல்லப் போனால் படத்தில் நாயகன் நாயகி என்று கூட சொல்ல முடியாது.

அதே போல படத்தின் வசனங்கள். விஜயனின் இரண்டாவது மனைவி, அவரின் குணம் தெரிந்து கிளம்பும்போது, விஜயன் தடுப்பார். அப்போது சொல்லுவார் "என்னை நாங்க இப்போதைக்கு தடுக்கலாம் ஆனா, நாளைக்கே நான் உங்களது சொத்துல விஷம் வைக்க முடியும்" என்பார். தேவையில்லாத அழுகையே இருக்காது. குறிப்பால் உணர்த்தும் காட்சிகள். கணவன் பூ, இனிப்பு எல்லாம் வாங்கி அனுப்பிவிட்டு, இரவு சினிமாவுக்கு போகலாம், சமைக்க வேணாம். வெளியே சாப்பிடப் போகிறோம் என்று சொல்லி அனுப்பியவுடன், அஷ்வினி மேலே பார்ப்பார் ("மழை வருதா என்ன" என்பது போல). ஒரு சாதாரண காட்சிதான். ஆனால், அது ஒரு அசாதாரண நிகழ்வு என்பதையும் உணர்த்தியிருப்பார். 

இந்தப் படத்தில், நாயகி குளிக்கப் போவது போல வரும். ஆனால், குளியல் காட்சி இல்லை. வறுமையால் நாயகி உடை கிழிந்திருக்கும் அனால் 'கிளிவேஜ்' இருக்காது. உடைகள் கிழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவாள். ஆனால், விரசம் இருக்காது.

படத்தில் பல முக்கியமான, கதைக்குத் தேவையான காட்சிகள் படத்தில் வராது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், இறுதிக் காட்சியில் விஜயன் தண்ணீரில் மூழ்கி இறக்கும் காட்சி, விஜயன் சரத்பாபுவை அடிப்பது போன்றவை.

படத்தின் இசை பற்றி தனியாக சொல்ல வேண்டுமா? இளையராஜா. 'அழகிய கண்ணே' பாடல் ஒன்று போதுமே. ஆனால், இங்கே உள்ளது படத்தின் ஆரம்பத்தில், இளையராஜாவின் குரலில் வரும் பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல்.


உதிரிப்பூக்கள் - பார்க்கப்பட மட்டுமல்ல போற்றப்படவும் வேண்டியது.

டிஸ்கி: கூகிள் போய் 'உதிரிப்பூக்கள்' என்று தேடினால் சன் டிவியில் வரும் சீரியல்தான் வருகிறது. திரைப்படங்களின் பெயர்களை இது போன்று சீரியல்களுக்கு பயன்படுத்துவதையும் தடுக்க வேண்டும்..

Monday, April 8, 2013

பல குறும்படங்களும், சில விளம்பரங்களும்!!!

இங்கே நான் பகிர்ந்துள்ள நிறைய குறும்படங்களை அறிமுகப்படுத்திய அண்ணன் சுரேஷ் குமார் அவர்களுக்கு நன்றி.. நன்றி.. நன்றி..

சும்மா, நான் மிகவும் ரசித்த, ரசித்துக் கொண்டிருக்கின்ற குறும்படங்கள் பற்றிய பார்வை, விளம்பர இடைவேளைகளோடு உள்ளது. நிகழ்ச்சிக்குப் போவோமா?

ஜக்கு பாய்ஸ்:

நான்கு வருடங்கள் இருக்கும். அப்போதுதான் குறும்படங்கள் வந்த புதிது. ஆன் சைட்டில் இருந்து நண்பன் ஒரு இணைப்பை அனுப்பி, "கண்டிப்பாக பார்" என்று சொல்லியிருந்தான். சரி பாக்காலாம், என்று நாங்களும் விட்டு விட்டோம்.

ஒரு பொழுது போகாத நாளில், நான் மட்டும், அதை பார்க்க ஆரம்பித்தேன். இரண்டு நிமிடங்களில் "என்ன எழவுடா இது" என்று தோன்றியது. அதன் பின், சும்மா பர பரவென் பட்டாசு கிளப்பியது. இத்தனைக்கும், அப்போது நான் ஆணி பிடுங்கும் வேலையில் இல்லை. தானியங்கித் துறையில் இருந்தேன். இருந்தாலும், எனக்கும், அந்த குறும்படத்தில் வரும் சம்பவங்கள் பொருந்தியது என்பது உண்மை. இந்தப் படத்தைப் பின் தரவிறக்கம் செய்து, கிட்டத்தட்ட விளம்பரமே செய்தோம். ஆணி பிடுங்கும் துறை உள்ளவரை, இந்தப் படமும் நிலைத்திருக்கும்.



ஒரு சிறிய இடைவேளைக்குப் பின்னர் சந்திப்போம்.

ஒரு காலத்தில், எல்லா வங்கி மற்றும் காப்பீடு நிறுவன விளம்பரங்கள் அனைத்தும், குழந்தைகளை மையப்படுத்தி, மிகவும் ரசிக்கும் வகையில் வந்தன. அதில், எனக்கு மிகவும் பிடித்தது இந்த விளம்பரம்தான். அதுவும், அந்த குழந்தையின் பாவனைகள், அப்பப்பா...



சரி, மீண்டும் குறும்படங்களுக்குப் போகலாம். 

குறும்படங்கள் எல்லாம் நல்ல இருக்கும் போலவே என்று என்று தினமும் வீட்டிற்கு வந்து குறும்படங்கள் பார்க்க ஆரம்பித்தோம். நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டோம். அப்பா, ஆள விடுங்கடா சாமி என்றாகி விட்டது. அதன் பின், எப்போதாவது நாளைய இயக்குனர் மட்டும் பார்க்க ஆரம்பித்தோம்.

துரு: 

அப்போதுதான் ஒரு நாள் இந்தக் குறும்படத்தைப் பார்த்தோம். பார்த்தவுடனே, அதை மீண்டும் பார்க்க வேண்டுமே என்று தோன்றியது. ஏனென்றால், நீங்களும் பாருங்கள், உங்களுக்கும் தெரியும். அதன் பின், இதையும் வலையுலாவி, கண்டு பிடித்தோம்.




இந்த குறும்படத்தின் இயக்குனர் 'கார்த்திக் சுப்பராஜ்' இப்போது பிட்சா என்ற வெற்றிப் படத்தின் இயக்குனர். வாழ்த்துக்கள். அவரின் அடுத்த படிப்பிற்காக காத்திருக்கிறோம். 

ராமசாமி: 

திடீரென, யாரோ பகிர்ந்த ஒரு படம். மொக்கையாகத்தான் இருந்தது. ஆனாலும், கடைசியில் வரும் 'ராமசாமி' பாத்திரம், அதற்காகவே ரசித்து சிரிக்கலாம். அதுவரை சற்றே பொறுமையாக பார்க்க வேண்டுகிறேன்.



மீண்டும் ஒரு விளம்பர இடைவேளை.

சமீபத்தில் வந்த காப்பீட்டு விளம்பரம். ஹிந்தியில்தால் பாடல் எனக்கு ரசிக்கும்படி உள்ளது. ஆண்கள் பற்றிய, ஒரு மிக நல்ல விளம்பரம். 



மீண்டும் நிகழ்ச்சிக்கு போவோமா?

Pastense:

இந்தப் படத்தைப் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. சிறு குறிப்பு மட்டும்தான். இதை ஒரு அழுகாட்சிக் காவியமாகாக் கூட எடுத்திருக்கலாம், ஆனால், கடைசி வரை நகைச்சுவை இழையோடும். கவனியுங்கள்.



"இப்படியே போனா பந்து கடைதான் வைக்கணும்", "என்னது, தேங்கா பேசுது?", "டேய் ஊறுகா சப்பி" இவை முதலிரண்டு நிமிடங்களில் வரும் வசனங்கள்.. கவனித்தீர்களா?

இவை இரண்டும் குறும் படங்கள் அல்ல. ஆனால், 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்திற்கு முதன் முதலில் வந்த விளம்பரங்கள். அட்டகாசம். இப்போது பார்க்கும்போதுதான் ஏன் அந்த இரண்டாவது விளம்பரம் என்று தெரிகிறது. முதல் காணொளியில், கடைசியாக வரும் சிறுவனின் பாவனைகள்.. ப்பா!!







ஆனால் ஒரு சந்தேகம். இதில் வரும் யாருமே படத்தில் வரவில்லையே, ஏன்? என்னாச்சு?!!!

இதே போல இன்னும் நிறைய (ஓரளவு தேர்ந்தெடுக்கப்பட்ட) திரைப்படங்களை சுரேஷ் குமாரின் இந்த அடையாளத்திலும், இந்தப் பதிவிலும் காணலாம். சும்மா.. மக்களுக்கு நாலு நல்லப் படத்தைப் பத்தி சொல்லலாமுன்னு வந்தேன்.. அம்புட்டுதேன்.. (பதிவு கணக்குல ஒன்னு சேத்துக்கப்பு)

Friday, March 29, 2013

ச்சே, என்ன மாதிரி ஜென்மங்களோ!?

காலை நேரம். தூக்கக் கலக்கம்.

"ஏ, பாப்பா கத்திக்கிட்டே இருக்கு பாரு, என்ன பண்ணிக்கிட்டிருக்க?"

"எனக்கு மட்டும் என்ன ஏழு கையா இருக்கு, நீங்கதான் கொஞ்சம் என்னன்னு பாக்குறது" 

முனகிக்கொண்டே எழுந்து, "ஏ, கன்னுக்குட்டி, செல்லம், என்னாச்சு, ஏன் அழுவுற" என்று குழந்தையைத் தூக்கி, ஏமாத்தி, பொம்மையைக் கொடுத்து சமாதானப்படுத்தினேன்.

"ஏய். காபியும், அந்த பேப்பரையும் கொண்டா" என்று கத்தி முடிக்கும் முன்பு இரண்டும் என் முன்னால் இருந்தது. "ச்சே ச்சே, எப்ப பாரு அங்க கற்பழிப்பு, இங்க பலாத்காரம், சினிமாவுல மதுரை அரிவாள் கலாசாரம் மாதிரி, இப்ப கற்பழிப்பு கலாச்சாரம் போலிருக்கு" என்றபடி, போய்க் குளித்து விட்டு வரும்போது, இட்லி தயாராக இருந்தது.

"ஏங்க, சாயந்திரம் வரும்போது நான் சொன்னத வாங்கிட்டு வாங்களேன்" என்றாள் மனைவி. "அதெல்லாம் போய் என்னால வாங்க முடியாது. பாப்பாவ தூங்க வச்சிட்டு நீயே போயி வாங்கிக்க. நான் வேற இன்னக்கி ஆபிஸ் வேலையா திருவள்ளூர் போகணும். ராத்திரி வர லேட்டாகும்" என்று கத்தி விட்டு கிளம்பினேன்.

பேருந்து நிறுத்தம் சென்று, தாம்பரம் பேருந்து ஏறினேன். "அப்பப்பா என்ன கும்பல்" என்று எண்ணியவாறே, ஒரு ஓரமாக நின்று கொண்டேன். இன்னும் அரை மணி நேரம் போகணுமே என்று எண்ணிக்கொண்டே, சும்மா உள்ளே நோட்டமிட்டேன்.



"அடப்பாவி, அந்தப் பொண்ண ஒரு பொறுக்கி எப்படி ஒரசிக்கிட்டிருக்கான், எவனாவது ஏதாவது கேக்குறானா பாரேன்" என்றபடி எல்லாரையும் பார்த்தேன். எல்லோரும் அங்கெ பார்த்து விட்டு பார்வையைத் திருப்பிக் கொண்டனர். "ச்சே, என்ன மனுஷங்களோ" என்றபடி மீண்டும் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். "இந்தப் பொண்ணாவது ஏதாவது சொல்லாம், யாருக்குத் தெரியும், அதுக்கும் ஆசையோ என்னவோ, ச்சே ச்சே" என்றபடி தாம்பரம் வந்து இறங்கினேன். அந்தப் பெண் கண்ணில் ஏதோ தூசி போல, தலையைக் குனிந்து கொண்டு, கண்களைத் தடவிக் கொண்டு போனது.

பின் ஓடிப்போய், திருவள்ளூர் செல்லும் பேருந்தைப் பார்த்தேன். முதல் பேருந்தில் உட்கார இடம் இல்லை. இன்னும் நேரம் இருந்ததால் அடுத்த பேருந்தில் ஜன்னலோர சீட்டில் அமர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சம் இந்தப் பேருந்தும் கும்பல் ஆனது.



பேருந்து கிளம்பும் நேரத்தில் ஒரு கணவன் மனைவி ஏறினர். அந்தப் பெண்ணுக்கு சற்றே மேடிட்ட வயிறு. ஏறியவுடன், அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்தனர். இடம் எங்குமில்லை. யாரும் எழுவது போல தெரியவில்லை. நான் எழ நினைத்தேன். பிறகு யோசித்து இன்னும் இரண்டு மணி நேரம் நிற்க வேண்டுமா, திரும்பி வரும்போது என்றால் பரவாயில்லை என்று யோசித்து, கண்களை மூடிக்கொண்டேன்.

மாலை வேலையெல்லாம் முடிந்து மீண்டும் தாம்பரம் வந்தேன். ஐந்தாறு வயதுள்ள சிறுவன் சிறுமி இருவரும் "சார் சார்" என்று பின்னாடியே வந்தார்கள். "போங்க போங்க, சில்லறை இல்லை, சும்மா நைனைன்னு பின்னாடி வராதீங்க" என்று விரட்டினேன்.

வீட்டுக்கு நடந்து போகும் வழியில், குழந்தைக்கு பொம்மைகள் வாங்கினேன். மனைவி கேட்டது நினைவுக்கு வந்தது. சரி, எப்படியும் வாங்கியிருப்பாள் என்று என்ன்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

டிவி ஓடிக்கொண்டிருந்தது. குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. "என்னடி, நீ கேட்டத வாங்கிட்டியா" என்றேன். எதுவும் பதில் இல்லை. "இதப் பாரு, அதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம், நான் போயி எப்படிக் கேக்க முடியும்?" என்றபடி உடை மாற்றிக்கொண்டு வந்தேன். சாப்பாடு தயாராக இருந்தது. ரிமோட்டை எடுத்து வேறு மாற்றினேன். "அமில வீச்சால் இன்னொரு பெண் பலி" என்று செய்தி ஓடியது. "என்ன கொடுமையடா" என்று நினைத்துக்கொண்டே மீண்டும் மாற்றினேன். அந்நியன் படம் ஆரம்பித்திருந்தது. பின் சாப்பிட்டேன்.

மனைவியிடம் இன்று பேருந்தில் நடந்ததையெல்லாம் சொன்னேன். "எல்லோரும் வேடிக்கை பாத்துக்கிட்டே இருக்காங்க, என்ன மனுஷங்களோ" என்றேன். டிவியில் "யாராவது சோடா வங்கி வாங்களேன்" என்று ஒருவர் கத்திக் கொண்டிருந்தார். மனைவி பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டு வந்தாள்.

"தூங்கலியா?" என்று கேட்டாள். "இல்ல ஒரு பதிவு எழுதலாம்னு இருக்கேன். நான் முடிச்சிட்டு தூங்கறேன்" என்றேன். "எதப்பத்தி?" என்றாள்.

"பாரேன், இந்த அமில கலாச்சாரம், கற்பழிப்பு. நாடு எவ்வளவு எவ்வளவு மோசமா இருக்கு. பெண்களுக்குன்னு பாதுகாப்பே இல்ல. இதப் பத்தி ஒரு பதிவு போட்டே ஆகணும் கண்டிப்பா. மாணவர்கள் எல்லாம் இலங்கைப் பிரச்சினைக்கு போராட்டம் பண்றாங்க. நம்மால முடிஞ்சத, ஒரு பதிவாவது போடனுமுல்ல" என்றேன்.

என் மனைவி என்னைப் பார்த்து சிரிப்பது போல தோன்றியது.

டிஸ்கி 1: உங்களில் யார் யோக்கியமானவனோ அவன் முதலில் கல்லை எரியட்டும். - இயேசு

டிஸ்கி 2: மத்தவங்க மனசு புண்படும்படி ஒரு வார்த்தை சொன்னாலும், மனசுல நினைத்தால் கூட அது குற்றம்தான் - ஈரம்.

Saturday, March 16, 2013

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

பதிவு போட ஒன்னும் இல்லேல்ல.. அதான் பிட்டு.. 

சமீபத்தில் பார்த்த பிற மொழி திரைப்படங்கள் பற்றிய கருத்துக்கள். 

தலாஷ் (Talaash): உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சத்தியமாக இந்தப் படம் எனக்குப் புரியவேயில்லை. இது நிஜமாகவே பேய்ப் படமா, இல்லை எனக்கு புரியவில்லையா? ஆனாலும் படத்தில் எனக்கு சில காட்சிகள் மிகவும் பிடித்தன. குறிப்பாக, தன மகனின் இறப்பை நினைத்து கலங்கும் அமீர், ஒரு வேளை தன்னுடனே விளையாட வைத்திருக்கலாமோ, தானும் கூட போயிருக்கலாமோ என்று நினைக்கும் காட்சிகள். நாம் அனைவருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அதே போல இறந்தவர்களைப் பற்றி எண்ணியிருப்போம். மற்றபடி நல்ல சப் டைடிலுடன் பார்த்தால் ஒரு வேளை புரியுமோ என்னவோ?


Special 26: படத்தில் சண்டை இல்லை. பறக்கும் டாட்டா சுமோக்கள் இல்லை. ஆனாலும் படம் பரபரவென்று பறக்கிறது. நடுநடுவே காதல் காட்சிகளும், பாடல்கள் மட்டும் வேகத்தடை. A Wednesday படத்தில் பாடல்களோ, காதலோ இல்லாமல் எடுத்த நீங்கள், இந்தப் படத்தில் ஏன் வைத்தீர்களோ? மற்றபடி படத்தில் வரும் டிவிஸ்ட் எல்லாமே, நிஜமாகவே ஊசிகொண்டை வளைவுகள்தான். ஆனால், அவை அனைத்துமே படத்தில் முன்பே சொல்லப்பட்டுவிட்டன. நிறைய இடங்களில் சப் டைட்டில் இல்லாவிட்டாலும், படம் நன்கு புரிந்தது.



ஹரிதாஸ் மற்றும் பரதேசி பட விமர்சனங்கள் படிக்கும்போது பார்க்க வேண்டுமென்ற ஆவல் உள்ளது. பார்ப்போம்.


யாராவது இளையராஜாவிடம் போய் குமுதத்தில் வரும் அவரது கேள்வி பதில்களை நிறுத்தச் சொல்லி சொல்லுங்களேன். நிறைய பேரிடம் அவர் இருக்கும் மரியாதையையும் இழந்து விடுவார் போல் உள்ளது. பொதுவாக ராஜா ரஹ்மான் பிரச்சினை வரும்போதெல்லாம், ராஜாவின் தலைக்கனம் பற்றி பேச்சு வரும். கமல் ரஜினி சண்டையிலும் அதே போல கமலின் பழக்க வழக்கங்கள் பற்றி வரும். அப்போது நான் சொல்வது "நமக்குத் தேவை ராஜாவின் பொருள்தான், அதாவது இசை மட்டும்தான். அதே போல கமலின் படங்கள் பற்றி மட்டும் நாம் பேசுவோம்" என்பேன் வேறு எப்படி சமாளிக்க. இருந்தாலும்,

ராஜா ரொம்பவும் அதிகமாக பேசுவது உண்மைதான். பாரதிராஜா அவரைப் பற்றி குறை சொன்னால், இவர் அதை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். அவரைத் திட்டுவது ஊடகங்களில் வந்து விட்டது என்று இவரும் ஊடகம் வழியாகத்தானே கண்டனங்களைத் தெரிவிக்கிறார்? இசையமைப்பாளர் வாய்ப்பே எதிர்பாராமல் வந்தது என்றால் என்ன என்று எனக்கும் புரியவில்லை. இவர் வாய்ப்பே கேட்கவில்லை என்கிறாரா? ஒருவர் SPB உங்களைப் பற்றி நிறைய புகழ்கிறாரே, நீங்கள் ஏன் அவரைப் பற்றி அவ்வளவாக மேடைகளில் பேசுவது இல்லை என்றதற்கு, அவர் என் மீது வைத்துள்ள மதிப்பு அப்படி, நான் வைத்துள்ளது இப்படி என்கிறார்.

MSV அன்னக்கிளி இசையைக் கேட்டபோது நீங்கள் என்ன நினைத்தீர்கள் என்ற கேள்விக்கு (உண்மையாகவோ, பொய்யாகவோ) பதிலளித்துள்ளார். ஆனால், ராஜாவிடம் ரோஜா படத்தின் இசைக் கேட்டபோது நீங்கள் என்ன நினைத்தீர்கள் என்ற கேள்வியைக் கேட்டால் என்ன சொல்வார்? நான் அந்தக் குப்பைகளை கேட்பதில்லை என்பார். (நீ இந்தக் கேள்வியை குமுதத்திற்கு அனுப்பினாயா நாயே என்றால், இல்லை. அனுப்பினால் பிரசுரம் ஆகாது, ஆனாலும் இதுதான் பதிலாக இருக்கும்). ஒருவேளை இளைய தலைமுறை இசையமைப்பாளர்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டால், கண்டிப்பாக யுவன் மற்றும் கார்த்திக்கைத்தான் சொல்லுவார். ஏனென்றால் ஏற்கனவே எங்கோ படித்துள்ளேன். அதில் சமீபத்தில் ரசித்த வேறு இசையமைப்பாளரின் பாடல் என்ற கேள்விக்கு, கார்த்திக் ராஜாவின் ஹிந்திப் பட பாடலைதான் சொன்னார். "ஏண்டா பக்கி, உனக்குத் தேவை ராஜாவின் இசை மட்டும்தானே, பின்ன எதுக்கு இந்த கதை" என்ற பின்னூட்டங்கள் வேண்டாம். ஏதோ சொல்லத் தோன்றியது. ஏனென்றால் எனக்கு ராஜாவைப் பிடிக்கும்.

என்னுடைய மிகப் பழைய பதிவின் சாராம்சம், ராஜா ஒரு கண்டிப்பான கணக்கு வாத்தியார். அவரிடம் யாராவது "இந்த கணக்குக்கு இந்த மாதிரியும் வழிமுறை வச்சி போடலாமா?" என்று கேட்டால், "நான் சொல்லிக் கொடுத்த மாதிரி மட்டும் பண்ணு" எனலாம். ஆனால், ரஹ்மானோ, நட்பு பாராட்டும் நண்பன், எப்படி வேண்டுமானாலும் கேட்கலாம்.

என்னதான் சொல்லுங்க, இந்த பஞ்சாயத்து ஓயாது. கடைசியாக ஒரு பெரிய சந்தேகம். முகவரி படத்தில் வரும் VMC ஹனீபாவின் பாத்திரம் இளையராஜாவா? படம் வந்தபோது யாரும் எதிர்க்கவில்லையா? பார்க்கலாம். இசை படத்திற்காக காத்திருக்கிறேன். 

Sunday, February 17, 2013

விஸ்வரூபம் - விமர்சனமும் உள்ளது


போன பதிவில்,கமல் இனி மற்ற நடிகர்கள் போல மசாலாப் படங்களை கொடுக்க வேண்டுமென சொல்லியிருந்தேன். நிறைய (சரி சரி, ஒரு சில) கண்டனங்கள். அந்த வார்த்தைகள், எனக்குப் பிடித்த ஒருவருக்கு வந்த கஷ்டங்களால், "ஏன் இப்படி கஷ்டப்படுகிறீர்கள், மற்றவர்களைப் போலவே இருந்து விடலாமே" என்ற ஆதங்கத்தில் வந்தது. அது மட்டுமில்லாமல், அந்த பதிவே, ஒரு விளம்பரம்தானே.

நான் கமலின் தீவிர ரசிகன். இணையத்தில் இணைந்த பிறகு, அதுவும் பதிவர் ஆன பிறகு, கமலின் எனக்குப் பிடித்த படங்கள் ஆங்கிலப் படங்களின் தழுவல் என்று தெரிந்த பின்னரும் கூட நான் கமலின் ஆதரவாளன்தான். இந்த பிட்டைப் படியுங்கள்..

கமல் பதில்கள் ஆனந்த விகடனில் வந்த போது, ஒரு வாசகர் நேரடியாக ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். "உங்களுடைய படங்கள் நிறைய ஆங்கிலப் படங்களின் தழுவல் என்று இணையத்தில் நிறைய விவாதங்கள் நடக்கின்றனவே. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன" என்று கேட்டிருந்தார். அதற்கு கமல் சொன்ன பதில் "என்னுடைய படங்கள் அப்படி இல்லை. அவை அனைத்தும் என்னுடைய் குழந்தைகளே" என்பது போல சொல்லியிருந்தார். ஆனால், அவர் கழுவலில் நழுவல் போல கூட பதில் சொல்லவில்லை. இல்லை என்பதையே அழுத்தி சொல்லியிருந்தார். எனக்கு அது அவர் மீதிருந்த மரியாதையை சற்றே குறைத்து விட்டது. அவர் 'இருந்திருக்கலாம்' என்று சொல்லியிருந்தால் கூட, ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், மறுக்கவில்லை அல்லவா என்று சப்பைக்கட்டு கட்டலாம். ஆனால், கமல்?

இருந்தாலும் கமலை என்னால் விட்டுத் தர முடியவில்லை. ஏனென்று தெரியவில்லை. எதையாவது நோட்டை, நொள்ளை சொல்லும் நாம் நம்மைச் சார்ந்தவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், எப்படியாவது சப்பைக்கட்டு கட்டத்தான் பார்க்கிறோம். லஞ்சத்தால் நாடு அழிகிறது நாசமாய்ப் போகிறது எனும் நாம், நமது சகோதரன் டிராபிக் போலீசிடம் மாட்டி விட்டு, நமக்கு போன் செய்து "லைசென்ஸ் இல்லன்னு 500 ரூபா கேக்குறாங்க" என்றவுடன், "50 இல்ல 100 குடு, விட்ருவான்" என்கிறோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சரியில்லை என்று சொல்லும் நம்மில் பல பேருடைய பெற்றோர்களோ, நெருங்கிய உறவினர்களோ கண்டிப்பாக அரசு ஊழியர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்படி என்பதைப் பற்றி நாம் யோசிக்க மாட்டோம். அதே போலத்தான் என்னைப் பொருத்தவரை கமலும். அவர் தப்பே செய்திருந்தாலும், எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை.

கமலுக்கு ஒரு பிரச்சினை என்றவுடனே, பதிவுகளில் நிறைய பேர் கமலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பதிவுகள். சினிமாவைப் பிடித்தவர்கள் நிறைய பேர் கமலுக்கு ஆதரவளித்தனர். ஆனால், பல பேர் கமல் ஏதோ அவர்களுடைய குடும்பத்தை அழித்து விட்டது போல கமலுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்றெல்லாம் கூவினார்கள். யாரோ ஒருவர் DtHல் 300 கோடி வசூலித்தது என்று கொளுத்தி விட, பல பேர், எப்படி, கூட்டி, கழித்துப் பார்த்தாலும் அவ்வளவு வரவில்லையே, (x+y)*(a+b)=a+b+c, ம்ம், எப்படி பாத்தாலும் கணக்கு தப்பா வருதே என்றெல்லாம் இன்னொரு திரி கொளுத்தினர். இதே சமயம் வேறு யாராவது தயாரித்திருந்தால் அவ்வளவுதான், "கமலுக்கு அடுத்தவன் காசுல ஆட்டம் போடறதே வழக்கமா போச்சு. தில்லிருந்தா சொந்த காசப் போட்டு, படம் எடுத்து இந்த மாதிரி பண்ண சொல்லேன்" என்பார்கள்.

ஒரு படம் வந்தால், பார்த்து விட்டு, நன்றாக இருக்கிறதா, இல்லையா என்று சொல்லலாம். அது அவரவர் கருத்து. அதை விட்டு விட்டு எவ்வளவு வசூலித்தது, DtHல் போட்டா வேஸ்ட் என்பதெல்லாம் நமக்கு தேவையில்லாதது. கமல் உங்கள் அலுவலகம் வந்து, உங்களுடன் அமர்ந்து, "என்ன கோடு அடிக்கிற, நல்லா பெரிய கோடா போடு, இந்த ப்ரோகிராம்ல நடுவுல விளம்பரம் வராதா" என்றெல்லாம் கேட்டால் எப்படி இருக்கும்?

ஒரு படம் என்பது ஒரு பொருள்தான். அதை மளிகை கடை மூலம் கொடுப்பதா, வீட்டுக்கு வீடு கொடுப்பதா என்பதெல்லாம், அந்த முதலாளியைப் பொறுத்தது. அதில் வரும் பிரச்சனைகளை, அந்த முதலாளியும், மளிகைக் கடைக்காரும் பேசி, தீர்த்துக் கொள்வார்கள். அதை விட்டு விட்டு, நாம் குறுக்கே போய், "நீ வீட்டுக்கு வீடு கொடுத்தா வாங்க மாட்டோம்" என்று சொல்லுவது நியாயமா? பிடிக்கவில்லையா, வாங்காதே.

"என்னது, சிவாஜி செத்துட்டாரா?, இந்தியாவுக்கு சுதந்திரம் கெடச்சிருச்சா?" என்று பின்னூட்டமிட வேண்டாம். நிறுத்தி விடுகிறேன். "ஒரு வெளம்பரம், இன்னும் பத்து நாள் கழிச்சி போட்டா யாரும் சீண்ட மாட்டாங்க இல்ல”, "இப்ப மட்டும் என்னவாம்" என்கிறீர்களா, அதுவும் சரிதான்.

விமர்சனம்: 

படம் இரண்டு நாட்களுக்கு முன், S2வில் பார்த்தேன். தமிழ்நாடு வெர்ஷன். இரண்டு தியேட்டரிலும் விஸ்வரூபம், நான் இருந்த தியேட்டர் காலை ஒன்பது மணிக்கு முழுதும் நிரம்பியிருந்தது. உண்மையில் கமல் முஸ்லிம் அமைப்புகளுக்கும், தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைக் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். ஒரு வேலை, சொன்னபடி பொங்கல் நேரத்தில் வெளி வந்திருந்தால், இந்த அளவு வெற்றி பெற்றிருக்குமா என்று தெரியவில்லை. கமலுக்கே 'லட்டு' தான் கிடைத்திருக்கும். படம் பார்த்த அனைவரும், "இந்த படத்தில் அப்படி என்ன உள்ளது என்று எதிர்த்தார்களாம்?" என்ற கேள்வியுடன்தான் வெளிவந்தனர். படத்தில் உள்ள ஓட்டைகளை யாரும் கவனிக்கவில்லை. கமலுக்கு நல்ல அறுவடைதான்.

ஒவ்வாத மணவாழ்க்கையில் உள்ள, கதக் நாட்டியக் கலைஞன். தனது மனைவியின் சந்தேகப் போக்கினால், இருவருக்கும் ஆபத்து ஏற்பட, தன்னொரு இன்னொரு முகத்தைக் காட்ட வேண்டிய நிலைமை. அது தோண்ட தோண்ட பூதம் போல ஆப்கானிஸ்தான் வரை போக, முடிவு என்ன என்று நானும் காத்திருக்கிறேன். எனக்கு சில சந்தேகங்கள்.

கமல் சார், படத்திற்கு பிரச்சினை வந்த பிறகு, இரண்டு பாகங்களாக பிரிக்கலாம் என்று முடிவு செய்தீர்களா அல்லது அதற்கு முன்னரேவா? ஏனென்றால், முதல் சண்டைக் காட்சியை மக்கள் எப்படி ரசிப்பார்கள் என்று தெரிந்து, முதலில் வேகமாகவும், பின் பாடலோடு இணைத்து, மெதுவான காட்சியமைப்பில் கொடுத்த தாங்கள், வில்லன் அழிக்கப்பட்டால்தான் மக்களுக்கு படம் முடிந்த திருப்தி வரும் என்பது தெரியாமல் இருக்காது. எனவே, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தீர்களா?

பொதுவாக ஒரு படம் இரண்டு பாகங்கள் என்றால், இரண்டையும் தனித்தனியாக பார்த்தாலும் புரிய வேண்டும், தொடர்ந்து பார்த்தாலும் புரிய வேண்டும், ஆனால், இதில் பல கேள்விகளுக்கு விடையளிக்காமல், இரண்டாம் பாகத்தையும் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும் என்றாக்கி விட்டீர்களே?

கமல் தன்னை ஒருவர் தொடர்ந்து வருகிறார் என்று தெரிந்தும், அவர் ஏன் தொழுகை செய்ய போகிறார்? அது மட்டுமின்றி, அவரை ஏன் அங்கே சிக்க வைக்க வேண்டும்?

பூஜா கமலை சில காரண காரியங்களுக்காக கல்யாணம் செய்தது போல, கமலும் அவரை ஒரு சில காரண காரியங்களுக்காக கல்யாணம் செய்தாரா? அதாவது, அவர் வேலை பார்க்கும் இடத்தில நடக்கும் தில்லு முல்லுகளைக் கண்டறிவதற்கு. (கமல், இது உங்கள் கதையுடன் பொருந்தியிருந்தால், என்னை உங்கள் உதவியாளனாக சேர்த்துக் கொள்வீர்களா?)

உமர் எப்படி கமல் ஒரு உளவாளி என்று கண்டு பிடித்தார்?

இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில், இரண்டாம் பாகத்தில் வந்து விடுமா அல்லது மூன்றாம் பாகம் வேறு உள்ளதா?

Tuesday, February 5, 2013

விமர்சனம் 2013!!

இந்த வருடம் இதுவரை வந்த படங்கள், ஒரு பார்வை. ரம் பம் பம் ஆரம்பம். சரி சரி ஓடாதீங்க. 

அலெக்ஸ் பாண்டியன்: இந்தப் படத்தை அனைவரும் கழுவி கழுவி ஊற்றி, நன்கு சுத்தமாக இருப்பதால், நான் எதுவும் சொல்லவில்லை. ஒரு சில கீச்சுக்கள் மட்டும்.

"அலெக்ஸ் பாண்டியனுக்கு நம்ம வடிவேலோட டெலெக்ஸ் பாண்டியன் எவ்வளவோ மேல். 

டிரீம்வொர்க்ஸ் அனிமேஷன்ஸ், ஸ்டுடியோ கிரீன் மீது வழக்கு. அலெக்ஸ் பெயருக்கு களங்கம் உண்டாக்கியதாக."


இந்த படம் வெளிவர, மற்ற படங்களைத் தடுத்ததாக சில செய்திகள். சூர்யா, கார்த்தி மீது ஒரு நல்ல எண்ணம் இருந்து வருகிறது. அந்த எண்ணம் போனால் எனக்கென்ன, இருந்தால் எனக்கென்ன என்கிறீர்களா. சரிதான். ஆனால், என்ன ஆகும் என்றால், தியேட்டர் போய் படம் பார்க்கும் எண்ணம் போய் விடும். சரி போகாதே என்கிறீர்களா.

சமர்: ஒரு வித்தியாசமான திரில்லர். இதையும் 'The Game' படத்தின் தழுவல் என்றெல்லாம் பதிவுகள். நான் என்ன நினைக்கின்றேன் என்றால், அங்கெல்லாம் போக வேண்டாம். "மேனியெல்லாம் சிறகுகள்" என்ற சுபாவின் கதை உள்ளது. அந்த புத்தகம் என்னிடம் இப்போது காணவில்லை. இல்லையெனில் அது எப்போது எழுதப்பட்டது என்பதையும் சொல்லியிருக்கலாம். அதுவும் இதே போல மனித உணர்வுகளுடன் ஆடும் விளையாட்டுதான். அதில் காட்டில் நடக்கும். இதில் வெளிநாட்டில் நடக்கிறது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா: பாக்கியராஜ் தனது மகனை வைத்து 'ரீமேக்' செய்ய திட்டமிட்டதாக சொன்னவுடன், "சார், உங்க பையன், உங்க கதை, நீங்க எடுக்கலாம், எங்கள பாத்தா உங்களுக்கு பாவமா இல்லையா?" என்றுதான் கேட்க தோன்றியது. நல்லா யோசிச்சுப் பாருங்க சார், நீங்க ஒரு தகப்பன் ஆனா பின்பு, இயக்குனரா உங்களால வெற்றி பெற முடியல. வேணாம் சார். எல்லோரும் நல்லாருப்போம். விட்ருங்க.

எனக்கென்னவோ, சந்தானம் முதலிலேயே பாக்யராஜிடம் போய், "சார் நீங்களே இயக்குங்க" என்று மட்டும் சொல்லியிருந்தால், படம் இன்னும் பயங்கர வெற்றி அடைந்திருக்கும் என்று தோன்றுகிறது. இருந்தாலும், பவரின் பவரால் வெற்றி.

கடல்: 'கடல் உள் வாங்கிருச்சாமே, கடல் - டல், கடல் அல்ல, கலங்கிய குட்டை, அடடே, கடலையே கழுவி கழுவி ஊற்றுகிறார்களே, கடல் பாத்ததுக்கு என்னைத் தூக்கி கடலில் தூக்கிப் போட்டிருக்கலாம், ரஹ்மான் என்ற கட்டு மரம் மட்டும் இல்லாவிட்டால், கடலில் மூழ்கியிருப்பேன்', என்று கடல் படத்தை அனைவரும் சொல்லிவிட்டார்கள்.

இருந்தாலும், எனக்கு பிடித்த ஒரு விமர்சனம், இன்னும் சொல்லப் போனால் ஒரு பன்ச். நம்ம அக்கிலீக்ஸ் அண்ணாச்சியோடதுதான்.

"கடல் பார்க்கணும்னு நினைக்கிறவங்க மெரினாவுகோ இல்லை வேற ஏதோ பீச்சுக்கோ போய் பார்த்துக்கோங்க. எங்க ஊர்ல பீச் இல்லன்னு சொல்றவங்க கடல் போட்டோவ வெறிச்சு வெறிச்சு பாத்துக்கோங்க ஆனா தியேட்டர் பக்கம் மட்டும் போய்டாதீங்க"


கீழே ஒரு கணக்கு உள்ளது. கூட்டிக் கழிச்சி விடை சரியா. சொல்லுங்க.

அர்ஜுன்+மம்முட்டி = வந்தே மாதரம், மொக்கை
மம்முட்டி+அரவிந்த் சாமி = புதையல், மகா மொக்கை.
அரவிந்த் சாமி+அர்ஜுன் = கடல், மரண மொக்கை.

எப்படி பாத்தாலும், நாமதான் பாவம் போலிருக்கே.

டேவிட்: 'ஒரு வீடு இரு வாசல்' படத்திற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? அதில் முதல் கதை முழுதும் முடிந்த பின் இரண்டாம் கதை வரும். கடைசிக் காட்சியில் இரண்டு கதைகளும் இணையும். இந்தப் படத்தில் நான் லீனியர், அதாவது மாறி மாறி வருகின்றன. மற்றபடி இரண்டும் மொக்கைதான்.

விஸ்வரூபம்: எப்படியும் தியேட்டரில் ஒரு முறை, எந்தெந்த காட்சிகள் கத்தரிக்கப்பட்டுள்ளன என்று பார்க்க திருட்டு சிடி, என்று நிறைய முறை பார்க்க வேண்டி இருக்கும். இதுவரை கமல் நடிப்பு(ம்) தவிர மற்ற துறைகளில் பங்கேற்ற படங்களில், கடைசியில் இருப்பது 'மன்மதன் அம்பு'. இது கண்டிப்பாக அதற்குக் கீழ் போகாது.

ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்து விட்டேன். இந்த நான்கு படங்களும் நான் இன்னும் பார்க்கவில்லை. சும்மா படித்தும், கேட்டும் தெரிந்தும் எழுதிய பதிவு. அம்புட்டுதேன்.  

Thursday, January 31, 2013

விஸ்வரூபம் - தவறு கமல் மீதுதான்

முதலில் கமலுக்கு வன்மையாக என்னுடைய கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை வருடங்கள் நிறைய அரசியல்வாதிகளுடன் பழகியும்அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லையா அல்லது தன்னைப் பற்றிய தலைக்கனமா என்று தெரியவில்லை. அது மட்டுமின்றி ஒரு பிரபலம் தன்னுடைய கருத்தை பொதுவில் சொல்லும்போது அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எடுத்தோ கொள்வார்கள் என்பதை அவர் உணரவில்லை. என்னுடைய இந்தப் பதிவை யாரும் சீண்டப் போவதில்லை. ஆனால்ரஜினி திடீரென 'கமல் மீது தவறுஎன்று சொன்னால் என்ன ஆகும்எவ்வளவு பெரிய பிரச்சினை ஆகும்.

முதலில் உரிமையை வேறொரு தொலைக்காட்சிக்கு கொடுத்து விட்டுமீண்டும் கை மாற்றியதாக செய்திகள். இதற்காக அந்த தொலைகாட்சி வழக்கு தொடர்ந்திருக்கலாம் ஆனால் ஆட்சி அவர்களிடம் உள்ளது. போதாக்குறைக்கு கமல் வேறு 'இது என்னுடைய பொருள், இதை எப்படி விற்க வேண்டும் என்று எனக்கு தெரியும்" என்று சீன் போட்டார். அது DtH பற்றித்தான் என்று நாம் நினைத்திருந்தோம் ஆனால் உண்மை என்ன என்று தெரியாதல்லவா

கொஞ்ச நாட்களுக்கு முன் "நீங்கள் கடனில் உள்ளீர்களா" என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு "நீங்கள்தான் அப்படி சொல்லிக்கொள்கிறீர்கள்நான் ஆடி காரில்தான் போய் வருகிறேன்" என்றவர்இன்று வேறு வழியின்றி உண்மையை ஒப்புக்கொண்டு விட்டார். 

இந்த சம்பவத்தை இரண்டு வகையில் எடுத்துக் கொள்ளலாம். 
கமலைப் பிடித்தவர்களுக்கு: தன்னுடைய கஷ்டம் விளம்பரம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக அவர் முன்பு அப்படி சொல்லியிருக்கலாம். இப்போது தன்னிடம் இழக்க ஒன்றுமில்லை என்பதால் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார் எனலாம்.
கமலைப் பிடிக்காதவர்களுக்கு: அப்போதும் இப்போதும் மாற்றி மாற்றி பேசுகிறார். தன்னிடம் ஏதுமில்லை என்றெல்லாம் கண் கலங்கினால் மக்கள் ஆதரவு கிடைக்கும் படத்துக்கும் விளம்பரம் ஆகும். அவர் ஒரு நல்ல நடிகர் அல்லவா என்பார்கள்.

கமல் மீதுஅவரது தொழிலில் நிறை பேர் வைத்த குற்றச்சாட்டுபணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டார். சரண்சாய் மீராஎன்று நிறைய பேர். உண்மைபொய் என்பதெல்லாம் அப்புறம். பொதுவாக நாம் ஒருவரிடம் ஒரு வேலை கொடுக்கிறோம். அது பாதியில் உள்ளபோது ஏதேனும் வேறுபாடு வந்துவேலையை நிறுத்தி விட்டால்குறிப்பிட்ட பணத்தை மட்டும் நாம் கொடுப்போம்அல்லது திரும்ப வாங்கிக் கொள்வோம். இது சுமூகமாக நடக்காவிட்டால்வழக்குதான். இதேதான் கமலுக்கும். 

அடுத்த பிரச்சினைக்கு வருவோம். தசாவதாரம்மன்மதன் அம்பு படங்கள் வந்த பொதுஇந்து அமைப்புகள் சொன்னது என்னவென்றால், "இந்து அமைப்புகள் ஒன்றும் செய்ய மாட்டோம் என்று எண்ணி கமல் இந்துக்களை கேவலப்படுத்தி படம் எடுக்கிறார். அவர் ஏன் முஸ்லிம் பற்றி படம் எடுக்கவில்லை?" என்றார்கள். சரி இப்போது எடுத்து பிரச்சினை ஆகி விட்டது. அவர்கள் யாருக்காவது ஒரு பக்கமாக நின்று பேசலாமே? "கமல் எப்போதும் இப்படித்தான்" என்று முஸ்லிம்களுக்கு ஆதரவாக நிற்கலாம். ஏன் நிற்கவில்லை. விளம்பரம் வராது. அவர்களை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

முஸ்லிம் அமைப்புகள். "நாங்கள் குட்ட குட்ட குனிந்து கொண்டே இருக்க வேண்டுமாரோஜாபம்பாய்உன்னைப் போல் ஒருவன்துப்பாக்கி என்று பல படங்கள். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று பொங்கி விட்டோம்". நல்லது மிக நல்லது. அந்த படங்கள் வெளியாகி ஓடி விட்டன. ஆனால்இன்றும் ரோஜா படம் சுதந்திர தினம்குடியரசு தினம் என்று பொதிகை தொலைக்காட்சியில் வருகிறதே. அதை ஏன் தடை செய்ய நீங்கள் கோரவில்லைஒரு பத்து வயதுப் பையன் 'ரோஜாபடத்தை தொலைக்காட்சியில் பார்த்து விட்டுஉங்கள் மதத்தின் மேல் துவேஷம் கொள்ளலாம் இல்லையாமற்ற படங்கள் அனைத்தும்தமிழகத்தில் எந்த வகையிலும் திரையிடவோவெளியிடவோதொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவோ கூடாது என்று ஏன் நீங்கள் தடை கோரவில்லை? (இது அனைத்து விஜயகாந்த் படங்களுக்கும் பொருந்தும்.) ஏனென்றால் விளம்பரம் கிடைக்காது. 

கமல் அந்த திரைப்படத்தை தனியே திரையிட்டுக் காண்பித்ததும்அவரிடம் ஒன்றுமே சொல்லாமல்இரண்டு நாட்கள் கழித்து போர்க்கொடி தூக்கினீர்கள். கேட்டதற்குபடம் பார்த்ததில் அவ்வளவு கோபம்பாடல்கள் இல்லைசண்டை இல்லை. முஸ்லிம்களுக்கு எதிரான ஆவணப் படம் போல உள்ளது என்று. ஏன் அப்போதே நீங்கள் கமலிடம் பேசவில்லை. இரண்டு நாட்கள் எங்கு ரூம் போட்டு யோசித்தீர்கள்?

Oh My God ஹிந்தி படம். அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டது. அது இந்திய முஸ்லிம்களை நேரடியாக குறிக்கிறது. அதை எதிர்த்து நீங்கள் போராடவில்லை. இந்த படம் அங்கு வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது (என்று நினைக்கிறேன்). நீங்கள் போராட்டம் செய்கிறீர்கள்.

மற்றவர்கள் போல நீங்கள் அதை ஏன் கண்டிக்கவில்லைஇதை ஏன் கண்டிக்கவில்லை என்று நான் கேட்க மாட்டேன்இந்தப் படத்தை மட்டும் ஏன் தடை செய்கிறீர்கள் என்றுதான் கேட்கிறேன்.

நாட்டில் இதுவரை படங்களால் இந்து முஸ்லிம் ஒற்றுமையோ, சாதிப் பிரச்சினையோ ஏற்பட்டதில்லை. குண்டுவெடிப்பு, வேறு பல பிரசினைகளின்போதுதான் கலவரமே ஏற்பட்டது. மக்கள் யாரும் படங்களைப் பார்த்து அப்படியே நம்புவதற்கு கமல் ஒன்றும் எம்.ஜி.ஆர். அல்ல. இப்போது கமல் ரசிகர்கள் அனைவரும் தேவையின்றி பாரம்பரிய முஸ்லிம்களை ஒரு எதிரி போல பாவிப்பர். 

தமிழக அரசுமன்னிக்கவும்ஜெயலலிதாவின் என்னுடைய ஆட்சி: படங்களை தடை செய்வது என்பது தேவையில்லாத ஒன்று. இது டேம் 999 படத்துக்கும் பொருந்தும். அது வழக்கம் போல வெளிவந்திருந்தால் கூட யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அப்போது கேரளா-தமிழகம் இடையே பிரச்சினை உச்சத்தில் இருந்த காலம். எனவேஅதை தள்ளி மட்டும் வைத்திருக்கலாம். முழுதும் தடை செய்தது தேவையில்லாத ஒன்றுதேவையில்லாத விளம்பரம். இப்போது கூட உச்ச நீதிமன்றம்முல்லைப் பெரியாறு பற்றிய வழக்கு தீர்ப்புக்கு காத்திருப்பதால்இதை வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ளது.

டேம் 999, இருவர் போன்ற படங்கள் நேரடியாக பெயர் சொல்லி குறிப்பிடப்படவில்லை என்றாலும்சுய அறிவு உள்ள யாராக இருந்தாலும்அது எதைப் பற்றிக் குறிக்கிறது என்று அனைவருக்கும் புரியும் வகையில் இருந்தது. ஆனால் இது அப்படியா என்று பார்க்க வேண்டும். 

ஒருவேளை படம் எப்போதும் போல வந்திருந்தால் கூட ஒன்றும் நடந்திருக்காது. ஆனால் இப்போது வெளியிட்டால், மத இயக்கத்தினர் உடனே படத்தை தடை செய்ய வேண்டும் என்று பேரணி, ஊர்வலங்கள் நடத்துவர். சட்டம் ஒழுங்கு கண்டிப்பாக சீர்குலையும். படம் நிரந்தரமாக தடை செய்யப்படும். 

"நிறுத்து. இது என்னுடைய ஆட்சிக்கு தேவையில்லாத விளக்கம். நான்என்னுடைய ஆட்சியிலே என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்." என்கிறீர்களாசரிதான்.

கமல் அவர்களே,

டெல்லி கற்பழிப்பு பழைய சோறு. நீங்கள் இப்போதைக்கு சுடு சோறு. இன்னும் ஓரிரு நாட்கள்தான். அதன் பின் நீங்களும் அனைத்து செய்திகளில்பதிவுகளில்எண்ணங்களில் இருந்து பின்னால் சென்று பின்னர் மறக்கப் படுவீர்கள். நீங்கள் சொன்னது போலஇது உங்களுடைய பிரச்சினை. நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். தங்களின் திரையுலக நண்பர்கள்ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது. அவரவர்களுக்கு வேலை உள்ளது.

தயவு செய்துமற்றவர்களின் படங்களில் மட்டும் நடியுங்கள். தங்களின் கதைஇயக்கம் தயாரிப்பு எதுவும் வேண்டாம். ஒரு  நகைச்சுவைப் படம்ஒரு மசாலா படம். அது போதும் எங்களுக்கு. உங்களுடை தொழில்நுட்பங்கள்புது முயற்சிகளால்உங்களுக்கும் லாபம் இல்லைஎங்களுக்கும் ஒன்றுமில்லை. எல்லோரும் அம்மணமாக உள்ள ஊரில்நீங்கள் மட்டும் அந்த பதினாறு வயதில் இருந்து இன்னும் கோமணத்துடன் உள்ளீர்கள்.

கடந்த தேர்தலின்போது உங்களுக்கு 200 கோடியும்மருதநாயகம் படத்தை முடிக்க பணமும் தருவதாக ஒரு அரசியல் கட்சி சொன்னதாக ஒரு வதந்தி வந்தது. இப்போது அதை ஒருவேளை ஓசியிலேயேஇல்லை இல்லை உங்களது பணம் 100 கோடியில் நடத்தி விடுவார்களோ என்று சந்தேகமாக உள்ளது. ஆனால்நீங்கள் அப்படி போக மாட்டீர்கள் என்று தெரியும்.

இப்படிக்கு,

தங்களிடம் இருந்து மீண்டும் ஒரு சகலகலா வல்லவனையும்வேட்டையாடு விளையாடுவையும்சிங்கார வேலனையும் மட்டும் எதிர் பார்க்கும் ஒரு தமிழன்.