Wednesday, December 2, 2009

க்ரைம் நாவல். ஆசிரியர் - ராஜேஷ் குமார்

யார்ரா இவன்?? பெரிய ______ மாதிரி சொல்ல வந்துட்டான்னு நெனக்காதீங்க... சும்மா எனக்கு தெரிஞ்சத சொல்லலாமுன்னு நெனச்சேன்.. அம்புட்டுதேன்.. அதுவுமில்லாம, நான் சொல்ல வந்தது நம்ம மாத நாவலாசிரியர்கள் பத்திதேன்.. நெறைய சொல்லனுமுன்னு ஆசங்க.. கொஞ்ச கொஞ்சமா சொல்றேன்..

ராஜேஷ் குமார்:

ஒரு காலத்தில், ராஜேஷ் குமாரை விட சிறந்த நாவலாசிரியர் உலகத்திலேயே கிடையாது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அந்தளவிற்கு வெறித்தனமான ரசிகனாக இருந்தேன். அவரது மாத நாவல் 'க்ரைம் நாவல்'. எனக்கு தெரிந்து தமிழ் மாத நாவல்களில் விலை அதிகமானதும், அதிகம் விற்பனையாவதும் அதுதான். எனவே, அப்போது பழைய புத்தக கடைதான் அந்த நாவலுக்கு. பழைய புத்தக கடையில், மற்றவர்களின் புத்தகங்கள் பாதி விலை என்றால், ராஜேஷ் குமாரின் நாவல் மட்டும், பாதிக்கு மேல், ஒரு ரூபாய் அதிகம். இதிலிருந்து அவரின் பெருமை தெரியும் என்று நினைக்கிறேன்.

அந்த நாவலில் 'ட்ரங்க் கால்', 'விளக்கம் ப்ளீஸ் விவேக்' (இது தனியே புத்தகமாகவும் வெளியானது) மற்றும் அரட்டை (ஞாபகம் இல்லை) பகுதிகளும் நன்றாக இருக்கும். சமீப காலங்களில்தான் படிப்பது சற்றே குறைந்து விட்டது. பள்ளியில் படிக்கும்போது, வீட்டில் திட்டுவார்கள் என்று அங்கங்கே ஒளித்து வைத்த க்ரைம் நாவல்கள் இன்னும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அவரது நாவல்களில் வரும் துப்பறியும் நாயகன் விவேகானந்தன் என்கிற விவேக், புலனாய்வுதுறை உயரதிகாரி. அவரது மனைவி ரூபலா. காவல்துறையில் அவரது நண்பர் கோகுல் நாத். இப்போதெல்லாம், விஷ்ணு என்கிற உதவியாளரும். எனக்கு தெரிந்து, நாவலாசிரியர்களின் நாயகர்களில், விவேக் மட்டும்தான் அரசாங்க அதிகாரி. நிறைய முறை, ஸ்காட்லாந்து போலீஸால் துப்பறிய முடியாத வழக்குகளையும், விவேக் கண்டு பிடித்துள்ளார். பல வருடங்களுக்கு முன், ஒரு கதையில் நடந்த விவேக்-ரூபலா திருமணத்திற்கு மொய்ப்பணம் மட்டும் சில ஆயிரங்கள் தேறியதாக படித்துள்ளேன்.

விவேக் - ரூபலா வரும் நாவல் என்றால் எப்பாடு பட்டாவது அதை வாங்கி விடுவேன். ஊருக்குள், புத்தக மாற்று முறையில், விவேக் வரும் ஒரு புத்தகத்திற்கு, இரண்டு புத்தகங்களைக் கொடுத்தெல்லாம் வாங்கியுள்ளேன். அது மட்டுமன்றி, அவரது கதைகளின் தலைப்பு, எதுகை மோனையோடு இருக்கும். அஞ்சாதே அஞ்சு (இது தொடராக வந்தது), விட்டு விடு விவேக், தப்பு தப்பாய் ஒரு தப்பு, இந்தியனாய் இரு எனப் பல. அவரது இன்னும் சில நாவல்களும் தொலைக்காட்சியில் தொடராக வந்துள்ளன.

அவரது கதைகளில், தொழில் நுட்பங்கள் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும். கம்ப்யுட்டர், அதில் 'பாஸ் வேர்டு' என்ற பாதுகாப்பு உள்ளது என்பதெல்லாம் எனக்கு க்ரைம் நாவல் மூலம்தான் தெரியும். கிரிப்டோகிராபி பற்றியெல்லாம், தமிழில் பல வருடங்களுக்கு முன்பே எழுதியுள்ளார். தற்போது ஓரளவிற்கு விவரம் தெரிந்தாலும், அதற்கு முன்னோடி ராஜேஷ் குமார்தான். மற்ற தமிழ் கதாசிரியர்களுடன் பார்க்கும்போது, அவர் டெக்னிக்கலாக, சற்று முன்னுள்ளார் என்பது என் கருத்து.

பொதுவாக அவரது கதைகள் கடைசி இரு அத்தியாயங்களுக்கு முன் வரை பயங்கரமாக இருக்கும். கடைசியில் (என்னைப் பொறுத்த வரை) நம்ப முடியாமல் இருக்கும். பெரும்பாலும் இரு கதைகளாக பயணித்து, இறுதி அத்தியாயத்தில் ஒன்று சேரும். இதை கலாய்த்து, அவரே ஒரு கதை எழுதியுள்ளார். கடைசி வரை அவை இரு வேறு கதைகளாகவே வரும்.

ரமணா படத்தில் வரும் மருத்துவமனையில் பிணத்தை வைத்து வியாபாரம் செய்யும் காட்சி, அதற்கு ரொம்ப நாள் முன்பே அவரது கதையில் வந்து விட்டது. படத்தில் அதற்காக நன்றி தெரிவித்தது போல தெரியவில்லை. யாரும் அதைப் பற்றியும் சொல்லவும் இல்லை.

திரையுலகில் அவரது எந்த கதையும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. தற்போது ஏதோ ஒரு படத்திற்கு (படத்தின் பெயர் அகராதி) கதை, திரைக்கதை அமைத்துள்ளார். மேலும் ஆனந்த விகடனில் ஒரு தொடரும் எழுதி வருகிறார். (தலைப்பு: இனி, மின்மினி). விவேக், அவரது உதவியாளர் விஷ்ணு துப்பறியும் கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.அவரைப் பற்றி இன்னொரு பதிவு இங்கே.

3 comments:

  1. He is not such a great writer, please. You must read other authors also in order to decide. For example, Rajesh kumar uses English terms most inappropriately, as if he doesn't know the actual meaning. I cannot quote anything now, since I stopped reading his junk long ago.

    ReplyDelete
  2. கள்ள அழகரே,

    நானும் நிறைய இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு மற்றவர்களின் படைப்புகளையும் படித்துள்ளேன். அந்த வயதில், எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். தற்போது நானும் அவ்வளவாக படிப்பதில்லை. எனக்கு பல தொழில் நுட்ப வார்த்தைகள் அவர் கதைகள் மூலமாகவே அறிமுகம். சரியாக பயன்படுத்தப்பட்டதா என்பது வேறு. சுஜாதா தவிர, எனக்கு தெரிந்து தமிழில் அதிகம் பயன்படுத்துவது அவர்தான். அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன்.

    ReplyDelete
  3. //ரமணா படத்தில் வரும் மருத்துவமனையில் பிணத்தை வைத்து வியாபாரம் செய்யும் காட்சி, அதற்கு ரொம்ப நாள் முன்பே அவரது கதையில் வந்து விட்டது. படத்தில் அதற்காக நன்றி தெரிவித்தது போல தெரியவில்லை. யாரும் அதைப் பற்றியும் சொல்லவும் இல்லை.//

    அந்த நாவலின் பெயர் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது!

    "சிவப்பு வட்டத்துக்குள் சிந்துஜா"

    இதுமட்டுமல்ல இன்னும் சில படங்களும் அவரது நாவலை அடிப்படையாக கொண்டவைதான், ஏனே அவரின் பெயர் நன்றி தெரிவித்து கூட குறிப்பிடப்படவில்லை :-(

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..