Monday, December 28, 2020

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்!

குளிக்கும்போது நெறைய எழுதணும்னு தோணுது, ஆனா எழுதணும்னு ஒக்காந்தா, அந்த எழுத்துதான், வார்த்தை வர மாட்டேங்குது. "குளித்து முடிக்கையில் பதிவு கொட்டுது, அதை அடிக்க நினைக்கையில் மனைவி திட்டுது" (அதே இசையில் பாடிக் கொள்ளவும்). 

ஒரு வேளை, அவர்கள் ஊரிலும், நான் இங்கேயும் மாட்டி இருந்தால், நிலைமை வேறு மாதிரி ஆகி இருக்கும். பதிவுகளாக போட்டு தள்ளி இருப்பேன். ஆனால் நடந்ததே வேறு. 'சாதா குமார்' இப்போது 'கொரோனா குமார்' ஆகி விட்டதாலும், வேலையும், வீட்டு வேலையாக, மன்னிக்கவும் வீட்டிலிருந்து வேலை என்று மாறிவிட்டதாலும், ஊருக்கே வந்து விட்டோம். 

இதுவும் ஒரு வகையில் நன்றாகவே இருக்கிறது. ஊரில் சரியாக சிக்னல் வேறு கிடைக்கவில்லை. இருந்தாலும் அப்படி இப்படி என்று சமாளித்து 3 மாதங்களும் ஓடி விட்டது. இதோ தீபாவளி முடிந்து, சொந்தக்காரன் கல்யாணம் முடிந்து, கார்த்திகை தீபம் முடிந்து, இப்போது பொங்கல் முடிந்து என்று போய்க் கொண்டிருக்கிறது. அதன் பிறகு தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்திரை 1 என்று போகப்போகிறதோ என்னவோ. பார்ப்போம். 

சென்னையில் இருந்தவரை முகப்புத்தகத்திலேயே மூழ்கி இருப்பேன். அதுவும் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் எல்லாம் மிக அதிகம். சாதாரணமாக யோசித்தால் கூட சங்கி, ஆன்டி இந்தியன், கிருப கிருப என்றுதான் தோன்றும். சில பதிவுகளைப் பார்த்தால் எரிச்சல் வரும். உடனே எதிர் வினையாற்ற தோன்றும். பல நண்பர்கள் எதிரிகள் போல தோன்ற ஆரம்பித்து விட்டார்கள். நிறைய நண்பர்கள் இருப்பதால் நீக்கவும் மனம் வரவில்லை. 

முதலில் அலைபேசியில் இருந்து செயலியை நீக்கினேன். பின் உலவியில் சென்று கடவுச்சொல்லை மாற்றி விட்டேன். 10 நாள் பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டி விட்டேன். பின் தோன்றும் போதெல்லாம் உல் நுழைய நினைத்தால், கடவுச்சொல் மறந்து விட்டேன் என்று போவேன், பிறகு வேண்டாம் என்று விடுவேன். இப்போதெல்லாம் தோன்றுவதே இல்லை. தேவைப்பட்டால் செய்திகள் மட்டும் படிப்பேன். 

விமர்சனம்: 

இங்கு வந்தபிறகு படம் பார்ப்பதையே நிறுத்தி விட்டாயிற்று. தினமும் நெடுந்தொடர்தான். ஓடவும் முடியவில்லை, ஒளியவும் முடியவில்லை. (நல்லவேளையாக இங்கு யாரும் அதை பார்ப்பதில்லை). முன்பு ஒரு காலத்தில் சன் டிவி பார்க்காமல் இருந்ததே கிடையாது. ஆனால், இப்போது சன் டிவி பார்த்தே பல வருடங்கள் ஓடி விட்டன. இங்கோ சன், விஜய், ஜீ தமிழ் என்று எதை எடுத்தாலும், அடுத்தவனை எப்படி அழிப்பது என்ற நாடகம்தான்.


"அதுல பாருங்க. எம் பொண்டாட்டி இருக்காளே, அவ கிட்ட இந்த மாதிரி நாடகம் எல்லாம் பாக்காதடி அப்டின்னா,படத்திலயும் அப்டித்தான் இருக்குன்னு சொல்றா. அடியேய். படம் 3 மணி நேரத்துல முடிஞ்சுறும், ஆனா, இந்த கருமத்துல தெனம் தெனம் நீங்க அடுத்து என்னவாகும்னு நீங்க பாக்கணும்னு உங்கள உசுப்பேத்துறாங்க அப்டினா, நம்பவே மாட்டேங்குறா. அதிலயும் இந்த வயசான பெருசுங்க தொல்லையத்தான் தாங்க முடியல. கண்ணு, கொஞ்ச நேரம் வைப்பா. அந்த கடன்காரிக்கு என்னதான் ஆச்சுன்னு பாக்கணும். அந்தப்புள்ளய பாவம் இவ்வளவு கொடுமைப்படுத்தறாங்க" என்றெல்லாம் புலம்பல். 

இதில் இன்னும் கொடுமை என்னவென்றால், நமக்கு பிடித்த பாடல்களை எல்லாம் கொலை செய்கிறார்கள். படங்களில் இருந்து பின்னணி இசையை அப்படியே அடித்து விடுவது, அட அது கூட பரவாயில்லை. இப்போதெல்லாம், காட்சிகளை எல்லாம் கூட சுடுகிறார்கள். முன்பே அப்படித்தானே என்பவர்களுக்கு, அப்போது கூட நிறைய பேருக்கு தெரியாது. இப்போது எல்லாம் ஒரு சந்தேகம் வந்தால், இரண்டு நிமிடங்களில் அது என்ன, எங்கே வந்தது என்று தெரிந்து விடும். இருந்து எப்படி இப்படி செய்கிறார்கள். ஏன் யாருமே கண்டு கொள்வதில்லை என்றும் தெரியவில்லை. இதில் தலைப்பு வேறு. சரி அந்தக் கொடுமையை விடுங்க.

அந்தகாரம்: கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் ஒரு நல்ல பேய்ப் படம். யாவரும் நலம், டிமாண்டி காலனி போல தேவையில்லாமல் எல்லாம் பயமுறுத்தாமல், அதே போல கேவலமாக பேய் என்று யாரையும் காண்பிக்காமல், ஆனாலும் ஒரு வித பயமுறுத்தலுடனே சென்றது.


சூரரைப் போற்று: பரவாயில்லை. உண்மையில் சுய சரிதை படம் என்பதால் மொக்கையாகத்தான் இருக்கும் என நினைத்தேன். ஆனால், அதற்கு மாறாக நன்றாகவே இருந்தது. என்னடா தோத்துக்கிட்டே இருக்கானே என்று கொஞ்சம் கடுப்படித்தாலும் பரவாயில்லை ரகம்.


புத்தம் புது காலை & பாவக்கதைகள்:
நீ மட்டும்தான் மொக்கை பண்ணுவியா, நானும்தாண்டா என்று அமேசானும், நெட்பிளிக்ஸ்ம் சேர்ந்து பாடு படுத்திய படங்கள். ஊரில், செல்பேசியில் அளந்து அளந்து டேட்டாவை சேர்த்து படத்தை தரவிறக்கினால், இப்படி செய்தால் அப்புறம் கடுப்பாகுமா ஆகாதா. 

மற்றபடி லாக்கப், மூக்குத்தி அம்மன், க/பெ ரணசிங்கம் எல்லாம் ஒரு முறை பார்க்கலாம். 

எப்படியோ 2020 முடிந்து விட்டது. 2021 நல்லபடியாக இருக்கும் என்று எண்ணுவோம். கண்டிப்பாக அடுத்த வருடம் மாதமொரு பதிவு என்று மீண்டும் சபதம்..அய்யய்யோ விட்ருங்க. 

2 comments:

  1. வாரம் ஒருமுறை...?

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. \\வாரம் ஒருமுறை...?\\ ஆசைப்படலாம், பேராசைப்படலாமா அண்ணா?

      புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

      Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..