Sunday, July 4, 2021

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

அனைவருக்கும் வணக்கம். இப்போதெல்லாம், பதிவுகள் Orkut போல கடந்த காலம் ஆகி விட்டது. Spaces, Clubhouse என அடுத்தடுத்து மக்கள் சென்று கொண்டே உள்ளனர். நம்மைப்போல், (சரி சரி) என்னைப்போல வயதானவர்கள்தான் "என்ன இருந்தாலும் அந்த காலம் போல வருமா" என்று புலம்பிக்கொண்டு இருக்கிறோம். சரி. நமக்கு என்ன வருகிறதோ, அதையே செய்வோம். போகிறவரை போகட்டும். 

குறு விமரிசனங்கள்:

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தில் ஒரு காட்சி வரும். "படத்தை எடுத்து முடிச்ச அப்புறம், போட்டு பாத்துட்டு ரிலீஸ் பண்ணுவீங்களா, இல்ல அப்படியே பண்ணுவீங்களா?" என்று ஒரு திரைக்கதை விவாதம் நடக்கும் இடத்தில கூட்டி பெருக்கும் பெண் கேட்பார். "எல்லோரும் பாத்துதான், தேவைன்னா மாத்திதான் ரிலீஸ் பண்ணுவோம்" என்பார்கள். "அப்புறம் ஏன் இவ்வளவு கேவலமான படங்கள் வருது" என்பார். எனக்கும் இதே போல சந்தேகம் நிறைய படங்களுக்கு வந்துள்ளது.

'மமகிகி' என்றொரு zee5 படம். ஏதோ கல்லூரி கதை என்று பார்த்தால், கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல், காட்சிகளாக எடுத்து வைத்து கடுப்பேற்றி விட்டனர். அதன் பின் அதே போல யோசிக்க வைத்த திரைப்படம்தான் 'ஈஸ்வரன்'. அதே போல 'ஜகமே தந்திரம்'. எப்பா டேய் முடியலடா சாமி. தயவு செய்து கலாய்ப்பதற்கு கூட இந்த படங்களைப் பார்க்க வேண்டாம். மற்றபடி, அவ்வளவாக படங்கள் பார்ப்பதற்கும் நேரம் இருப்பதில்லை.

Work from Home: 

முதல் 6 மாதங்கள் கொஞ்சம் நன்றாக இருந்தது. அதன் பிறகு என்னவோ எப்போது பார்த்தாலும் வேலையே செய்து கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. ஊரில்தான் இருக்கிறோம். நடுவில் ஒரு சில வீட்டு வேலைகளையும் செய்து வெளியே போய் வந்தாலும், ஒரு தனிமையோ, சுதந்திரமோ அல்லது 'அப்பாடா' என்கிற இடைவேளையோ கிடைப்பதில்லை. 

மகளுக்கும் online வகுப்புகள். இரண்டு நாட்களுக்கு பிறகு அவளுக்கும் பிடிக்கவில்லை. ஒரு மாறுதலுக்காக சென்னை சென்று இருக்கலாம் என யோசிக்கிறோம். பார்ப்போம். ஊருக்கு வந்ததில் நடந்த நன்மை என்னவென்றால், மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்ததுதான். கொஞ்ச நாள் சிலம்பமும் கூட. 

அரசியல்: 

எங்களது அடுக்கு மாடி குடியிருப்பில், யாருமே பொறுப்பிற்கு வர விரும்ப மாட்டார்கள். ஆனால், அது நொள்ளை, இது நொட்டை, இப்படி செய்யலாமே இதை ஏன் செய்கிறீர்கள் என்றெல்லாம் கேட்பார்கள். ஒரு சில விதிமுறைகள் உள்ளன என்றாலும் கேட்க மாட்டார்கள். அதை மீறி ஒரு வேளை பொறுப்பிற்கு வந்தாலும், அதைப்பற்றி பேச மாட்டார்கள். 

அதே நிலைமைதான் இப்போது திமுகவிற்கும். பாஜகவோ அதைப்பற்றி கவலைப்படவேயில்லை. மக்களையே திசை திருப்பக்குவதற்காக, உண்மை நிலை தெரிந்தாலும், அதைப்பற்றி சொல்லாமல், மக்களை குழப்புவது. பிரச்சினையை மட்டுமே முன்னெடுப்பது. பாதிக்கப்பட்டது என்னவோ நாம்தான். 

கொரோனா தடுப்பூசி: 

45+ வயதிற்கு போட்டபோதெல்லாம் எல்லோரும் தெறித்து ஓடினார்கள். ஆனால், இப்போது எல்லோரும் எனக்கு வேண்டும், உனக்கு வேண்டும் என்று போட்டி போட, ஊசி கிடைப்பதே கஷ்டமாக உள்ளது. அல்லது தினமும் 3 அல்லது 4 மணி நேரம் நின்று ஊசி போட வேண்டி உள்ளது. இங்கு தனியார் மருத்துவமனைகளிலும் கிடைப்பதில்லை. எனவே இன்னும் ஊசி போடவில்லை. குறைந்தது ஒரு ஊசி போட்டு விட்டு, சென்னை போகலாம் என்று யோசிக்கிறோம். அங்கேயும் வீட்டிற்குள்தான் இருக்க வேண்டும். இருந்தாலும், பார்ப்போமே. 

முதலாவது அலையில் சற்றே தப்பித்தோம் பிழைத்தோம் என்றாகி விட்டது. இரண்டாவது அலையில், நிறைய தெரிந்த ஆட்கள் எல்லோரையும் வாரி சுருட்டி சென்று விட்டது. விளையாட்டாக எடுத்துக்கொள்ளாதீர்கள். 

2 comments:

  1. விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக அண்ணா.. தாங்களும் போட்டிருப்பீர்களா என்று நம்புகிறேன்.

      Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..