Friday, April 15, 2022

இணைய தொடர் விமர்சனங்கள்..!

90களின் இறுதியில் என்று நினைக்கிறேன். அப்போது, தமிழ் தொலைக்காட்சிகளில் ஒரு நாளில் மட்டும் 750 மணி நேரத்திற்கும் அதிகமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது என்று. இப்போது அது கிட்டத்தட்ட 3 மடங்காக மாறி இருக்கும் என நினைக்கிறேன். 

அதே போல இப்போது இணையத் தொடர்கள். கன்னா பின்னாவென ஒவ்வொரு OTTயிலும் நிறைய தொடர்கள். முன்னொரு காலத்தில் நிறைய குறும்படங்கள் பார்ப்பேன். 10 பார்த்தால் ஒன்றுதான் தேறும். அதே போலத்தான் இவையும். பார்த்தவற்றில் தேறிய, அல்லது எனக்குப் பிடித்த சிலவற்றைப் பார்ப்போம். 

விலங்கு (Zee5):


பார்த்தவரையில், தமிழில் தேறிய ஒரே ஒரு தொடர் இதுதான். எல்லா இணைய தொடர்களிலும் இருக்கும் பெரிய பிரச்சினை, அதை முழுவதுமாக முடிக்காமல் நம்முடைய அனுமானத்திற்கு விட்டு விடுவது. அதே போல பல பிரச்சினைகளை ஆரம்பித்து, கோர்த்து, கடைசியாக எல்லாவற்றையும் கோர்த்து பாதியை முடித்து விடுவர். 

இதிலும் அதே போலவே ஒரு வீட்டில் நடக்கும் கொள்ளையைப் பற்றி காண்பித்து விட்டு, அப்படியே விட்டு விட்டார் இயக்குனர். ஒரு வேளை, காவல்துறை எப்படியெல்லாம் செய்யும் என்பதற்காக காண்பித்தார்களோ என்னவோ. மற்றபடி ஓரிரு வார்த்தை பிரயோகங்கள் தவிர, கண்டிப்பாக வீட்டில் பார்க்கும் அளவிற்கு உள்ளது. 

தொடர்ச்சியாக காணாமல் போகும் சிலர், சில மரணங்கள், அதில் காணாமல் போகும் ஒரு தலை, இவற்றை விசாரிக்கும் அதிகாரி, அவரின் நிறைமாத கர்ப்பிணி மனைவி, ஒரு அப்பாவி, சில கள்ளத்தொடர்புகள் என்று விரியும் கதை. திரில்லர் வகை. 

ஒரு சின்ன குடும்ப கதை:


ஒரு இணைய தொடர் என்றால், இப்படித்தான் இருக்க வேண்டும், அதாவது கெட்ட வார்த்தைகள், முத்தம், அரை நிர்வாணம் என்று எல்லாமோ, அல்லது ஏதாவது ஒன்றோ இருக்க வேண்டும் என்று. ஆனால், நெடுந்தொடர் போலவும் இல்லாமல், இணைய தொடர் போலவும் இல்லாமல் முழுக்க முழுக்க நகைச்சுவையான தொடர். கண்டிப்பாக குடும்பத்துடன் அமர்ந்து, ரசித்து பார்க்கலாம். 

ஒரு குடும்ப தலைவர் திடீரென இறந்து விட, அவர் 25 லட்சம் கடன் வாங்கியதாக வங்கியில் இருந்து வர, அதை என்ன செய்தார் என்று தெரியாமல் அம்மாவும், படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் மகனும் மண்டை காய, அதைத் தொடர்ந்து நடக்கும் கூத்துதான் கதை.

இரை (ஆஹா):


நம்ம சரத் நடித்தது. 1990களுக்கும், தற்போதைக்கு மாறி மாறி நடக்கும் கதை. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றிய கதை. அவ்வளவு மோசமில்லை, என்றாலும் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க முடியாது. 

The Familyman I & II (Prime):


ஒரு உளவுத்துறை அதிகாரியாக உள்ள, குடும்பத்தின் கஷ்டங்களையும், வேலையின் கொடுமையையும் அனுபவிக்கும் மனிதனின் கதை. கதையில் பல சர்ச்சைகள் இருந்தாலும், அதில் வரும் ஒரு வசனம் எனக்கு மிகவும் பிடித்தது. "பிரதமரோடு நமக்கு கொள்கையில் மாறுபாடு இருக்கலாம், ஆனால், நம்முடைய கடமை பிரதமரைக் காப்பது மட்டும்தான்". இதே வசனத்தை என்னால், என்னுடைய அலுவலுக்கும் பொருத்திக்கொள்ள முடிந்தது. 

இவை தவிர, உலகமே அறிந்த மணி ஹெய்ஸ்ட், Squid Game, தற்போது வந்துள்ள All of us are Dead பற்றி எல்லாம் இப்போது கூறி, உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

இவை தவிர, நேரடியாக OTTயில் வந்த படங்களில் டாணாக்காரன் மட்டுமே தேறியது. மாறன், அன்பறிவு, Clap எல்லாம் தயவு செய்து நேரமிருந்தால் கூட பார்க்க வேண்டாம். 

இப்போது ஓரளவிற்கு நிலைமை சரியாகி விட்டதால், RRR மற்றும் Beast திரையரங்கம் சென்றே பார்த்தோம். RRR 3D யில் பார்க்க நன்றாகவே இருந்தது. Beast மகளுக்காக. இரண்டுமே சாதாரண தெலுங்கு பட உணர்வையே கொடுத்தன. ஆனாலும் மக்களை கண்டிப்பாக திரையரங்கம் கூட்டி வந்ததில் முக்கிய பங்கு இவை இரண்டிற்கும் உண்டு. பார்ப்போம். 

1 comment:

  1. OTT தொடர்கள் நிறைய நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. அதனால் இது போன்ற பரிந்துரைகள் பயனுள்ளவையாக உள்ளது. உன் பரிந்துரையின் பேரில் family story பார்க்கலாம் என்று உள்ளேன்

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..