Tuesday, January 27, 2015

சொந்த பந்தம்

நரகத்தில் (மன்னிக்கவும்) நகரத்தில் பிறந்து, வாழ்ந்த எனது நண்பர்களுக்கு உறவுகளின் அர்த்தம் புரிந்ததில்லை. அவர்கள் பொதுவாக விடுமுறைகளில் மட்டும் ஊருக்கு போய் விட்டு வருகிறார்கள். பத்தாவது வந்தவுடன் அதுவும் நின்று விடுகிறது. அதன் பின் சுத்தம். "ஊர்லயெல்லாம் போனா ரெண்டு நாள் நல்லாருக்கும். அப்புறம் செம போர்" என்பார்கள். அது மட்டுமில்லாமல் அத்தை, சித்தி, பெரியம்மா, சின்னம்மா எல்லோரும் ஆண்ட்டி, ஆண்கள் எல்லாம் 'அங்கிள்', அம்மாயிக்கும் பாட்டிக்கும் வித்தியாசம் தெரியாது. வாரிசுகள் எல்லாம் மொத்தமாக 'கசின்ஸ்'. இது அத்தை பொண்ணா, இல்ல மாமா பொண்ணா என்றால் "ரெண்டு பேருக்கும்தான் பொண்ணு" என்று நம் மூக்கை உடைப்பார்கள்.

கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு போகவே மாட்டார்கள். கேட்டால், "எங்க வேல பாக்கிற, எவ்ளோ சம்பளம், ஒரு பொண்ணு இருக்கு, ஊருக்கே வர மாட்டேங்கிற, என்ன தெரியுதா யாருன்னு" என்றெல்லாம் கேள்வி கேட்டு படுத்துவார்கள். என்பார்கள். அதே போல, நிறைய படங்கள் பார்த்து விட்டு "நீ ஊர்ல இருக்க உன் மாமன் பொண்ணத்தான் கல்யாணம் பண்ணுவியா?" என்பார்கள். உண்மையை சொன்னால், ஊரில் உள்ள என் மாமாவிடம் யாராவது இதைக் கேட்டால், "சின்னப் பசங்க கிட்ட இப்படியா பேசுவ?" என்று துரத்தி அடிப்பார். அதே போல " நீ ஊருக்குப் போனா பொங்கல் வச்சி குலவை போட்டு, மேள தாளத்தோட, கூட்டிட்டு போவாங்களா, உங்க ஊர்ல பண்ணையாரு, ஜமீன்தாரு எல்லாம் இருக்காங்களா" என்றெல்லாம் படுத்துவார்கள்.

என் மகளுக்கும் இதுதான் நடக்கப் போகிறது. எப்படி தவிர்ப்பது என்ற யோசனையில் உள்ளேன். ஏன், ஊரை விட்டு சென்னை வந்து பத்து வருடங்களில் எனக்கே இப்போது அப்படி ஆகி விட்டது. இப்போதாவது அவ்வப்போது ஊருக்குப் போகிறேன். இன்னும் அடுத்த வருடம் குழந்தையை பள்ளியில் சேர்த்து விட்டால் அவ்வளவுதான். இதை நண்பனிடம் சொல்லும்போது அவன் சொன்னான். "இதுக்கு சென்னைல இருந்தா என்ன, இல்ல அமெரிக்காவுல இருந்தா என்ன" என்று பழைய பதிவுக்கு இப்போது பதிலடி கொடுத்தான். 



சென்னையில் அதிக பட்சம் மூன்று நான்கு வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே பழக்கமான நிலையில், ஒரு 500 பேர் வசிக்கும் எனது ஊரில் ஓரளவு எல்லோரையும் தெரியும், அப்படி எனக்குத் தெரியாவிட்டாலும், என்னை ஊரில் எல்லோருக்கும் தெரியும் என்றால் "அது எப்படி, எங்கே, அந்த 500 பேர் பெரும் வேண்டாம், ஒரு 200 பேர்த்தோட பேர் சொல்லு பார்க்கலாம்" என்பார்கள். அவர்களுக்கு அந்த கிராமத்தின் உறவுகளை சொல்லி புரிய வைக்க முடியவில்லை.

ஒரு முறை நண்பர்கள் அனைவரும், ஒவ்வொருவரின் ஊருக்கு சென்றோம். அப்போது, ஊரில் அனைவரும் பார்க்கும்போதெல்லாம் "கூட படிக்கிற பசங்களா? ஊர சுத்திப் பாக்க வந்திங்களா? கொல்லிமலை போனீங்களா? தோட்டத்துக்கு கூட்டிப் போனியா" என்றெல்லாம் விசாரிக்க, அப்போதுதான் கொஞ்சம் நம்பினார்கள். அப்போதும் "நீ ஆள் எதுவும் செட் பண்ணினியா" என்று கூட கேட்டார்கள்.

பொதுவாக ஊருக்குள், இரு வகையாக சொந்தங்கள் இருக்கும். சொந்த இடம், வந்த இடம். அதாவது என் தாத்தாவுக்கு இரு மகன்கள். அதில் ஒருவர் வெளியூரில் இருந்தாலும், இதுதான் அவருக்கு சொந்த ஊர். என் அம்மா, இதே ஊரிலேயே இருந்தாலும், என் தந்தையின் சொந்த ஊர் வேறு என்பதால், நாங்கள் வெளியூர் வாசிகள்தான். அதை வைத்தே விளையாட்டாக ஓட்டுவார்கள். 25 வருடங்களுக்கு முன் என்னிடம் கேட்ட அதே கேள்வி இந்து என் மகளிடமும் கேட்கப்படுகிறது "ஏய், நீ எந்த ஊரு". நாங்கள் "சிவியாம் பாளையம்" என்றால், "இது உங்க ஊர் இல்ல, உங்க ஊருக்குப் போங்க" என்பார்கள். எங்களுக்கு ஆதரவாக எங்களது பங்காளிக் கூட்டத்தில் இருந்து ஆதரவு வரும். "இது எங்க வீடு, எங்க ஊரு, அப்படித்தான் வருவோம்னு சொல்லு. என்ன பண்ணுவீங்கன்னு கேளு" என்பார்கள்.

அதே போல, ஊரிலேயே வளர்ந்து வரும் வாரிசுகளுக்கு, விடுமுறையில் வெளியூரில் இருந்து சொந்த பந்தங்கள் வருகின்றன என்றாலே, சந்தோசத்தோடு பயமும் வரும். ஏனென்றால், அவர்கள் வந்தால், நம்மை விட்டு விட்டு விட்டு அவர்களை கொஞ்ச ஆரம்பிப்பார்கள். எனவேதான், யாரும் என் வீட்டிற்கு வருவதை விட, நான் அவர்கள் வீட்டுக்குப் போவதை விரும்புவேன். ஏனென்றால், விருந்தாளிகள் தவறு செய்தாலும், பழியும், அடியும் அவர்கள் மீது விழாது. "அவன்தான் ஊர்ல இருந்து வந்திருக்கான். அவனுக்கு கொடுக்க வேண்டியதுதான, நீதான் ஏதாவது பண்ணியிருப்ப" என்று தன் பிள்ளைகளையே தாக்குவார்கள்.

"சரி, திடீர்னு என்ன சொந்த பந்தங்கள் மேல இவ்ளோ பாசம்" என்கிறீர்களா? ஒன்றுமில்லை. நம்முடைய வாழ்க்கையில் பல பெண்கள் வந்திருப்பார்கள். அம்மா, மனைவி, மகள் என வேறு வேறு வடிவங்கள். இந்த மூவரும் இல்லாமல் என் வாழ்க்கை இல்லை. உடன் பிரிவா சகோதரிகள் நிறைய உண்டு. சொந்தத்திலும், நட்பிலும் நிறைய பெண்கள் உண்டு. அனைவருமே, நான் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள்தான். அனைவருக்கும் என் வாழ்க்கையில் குறிப்பிட்ட இடம் உண்டு. ஆனால், என்னைப் பற்றி மிக சரியாக புரிந்து கொண்டு, எனக்கு என்ன வரும் என்று எனக்கே உணர வைத்த, இன்று என்னுடன் இல்லாத என் தந்தையின் தங்கை, என் அத்தை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆரம்பித்து, அப்படியே உள்ளது. அதற்கான முன்னுரைதான் இது.

தொடரும்.

Tuesday, December 30, 2014

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

எப்படியோ இன்னொரு வருடமும் ஓடிப்போய் விட்டது. போன வருடத்தை விட இந்த வருடம் பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இருந்தாலும், மாதம் ஒன்று என்ற கணக்கு வந்து விட்டது.

பதிவு ஆரம்பித்து 7 வருடங்கள் ஆகி விட்டது. 50 பதிவுகள் போட 5 வருடங்கள் ஆனது. அடுத்த இரண்டு வருடங்களில் ஓரளவு எண்ணிக்கையை கூட்டி விட்டேன். அடுத்த வருடத்தில் 100ஐ தொட லட்சியம். 90 நிச்சயம்.

வாழ்க்கையில் பெரிதாக மாற்றம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. சொந்த வீட்டிற்கு மாறினேன். அவ்வளவுதான். "எவ்ளோ சந்தோசமான விஷயம், இவ்ளோ சோகமா சொல்றியே" என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

இந்த வருடம் என்னென்ன செய்ய வேண்டும். குழந்தைக்கு இரண்டரை வயது ஆகப்போகிறது. பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விசாரிக்க ஆரம்பித்தால், கண்ணைக் கட்டுகிறது. அபியும் நானும், குங்குமப் போட்டு கவுண்டர் படங்களில் வருவதெல்லாம் வெறும் துளிகள்தான். உண்மையில் அது ஒரு கடல். நான் பதினாறு வருடங்கள் படித்த படிப்புக்கான செலவு, என் மகளின் ஒரு வருடத்திற்கு பத்தாது.

முன்பெல்லாம் குழந்தை என்பது ஒரு வரம். இப்போதெல்லாம் குழந்தை என்பது ஒரு பொருள். மற்றவர்கள் முன்பு "பாத்தியா என்னொடத, எவ்ளோ சூப்பரா இருக்கு. சூப்பர் சிங்கர், ஸ்கூல் டாப்பர், மெடிக்கல் சீட்டு புக் பண்ணியிருக்கேன்" என்று அளவில் உள்ளது. குழந்தையை நாம் குழந்தையாக பார்த்தாலும், நம்மை சுற்றியுள்ளவர்கள் அதை மாற்றி விடுகிறார்கள்.

சரி விடுங்கள். அனைவருக்கும் 2014 மங்களகரமாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். வரும் ஆண்டு இன்னும் வளமாகவும், செழிப்பாகவும் இருக்கும் என வாழ்த்துகிறேன். போன ஆணைப் பற்றி என்ன கூறலாம்? போன வருடம் போட்டது போலவே விருதுகள் தரலாமா? இல்ல இப்படியே இழுத்து மூடலாமா? பதிவு சின்னதா இருக்கே? ஏதாவது மொக்கைய போடுவோம்.

பிடித்த படங்கள்:

ஆரம்பத்தில் ஜில்லா, வீரம் என்று மொக்கையாக ஆரம்பித்தாலும், வழக்கம் போல நாம் எதிர் பார்க்காத படங்களே நம் மனதைக் கவரும். அந்த வகையில் என்னைக் கவர்ந்த அந்த படங்கள்,

தெகிடி
யாமிருக்க பயமே
பூவரசம் பீப்பி
சதுரங்க வேட்டை
சலீம்
திருடன் போலிஸ்
வேலையில்லா பட்டதாரி (சிறப்பு இடம்)
செவன்த் டே (மலையாளம்)

இவைகளில் பாதிக்கு மேல், நான் திருட்டுத்தனமாக பார்த்தவைதான். சொல்ல வெட்கமாகத்தான் உள்ளது. உண்மையில் கத்தி, அஞ்சான், லிங்கா படங்களைப் போய் பார்த்ததற்கு பதில், இவைகளில் அனைத்தையும் பார்த்திருக்கலாம். ஆனால், நன்றாக உள்ளது என தெரிவதற்குள் படம் ஒரு காட்சியாக மாற்றப்படுகிறது. எப்படியாவது போக வேண்டும் என்று நினைப்பததற்குள் தூக்கப்படுகிறது. இது ஒரு நொண்டி சாக்குதான் என்றாலும், இதுதான் உண்மை. இனிமேல், இந்த தவறுகளை குறைத்துக்கொள்ள எண்ணியுள்ளேன். இந்த மாத கடைசியில் வந்த சில படங்கள் பார்க்கவில்லை.

இன்னொரு சொல்ல வெட்கப்பட வேண்டிய விஷயம், ஒரு உருப்படியான புத்தகத்தையும் படிக்கவில்லை. இதற்கு முன்பு மட்டும் ஒன்றும் கிழிக்கவில்லை என்றாலும், ஏதாவது ஒரு கதைப்புத்தமாவது படிப்பேன். இந்த வருடம் சுத்தம். அவ்வப்போது பயணங்களில் ஆனந்த விகடன் படித்ததோடு சரி. இந்த சேத்தன் பகத்தின் அனைத்து கதைகளையும் படித்துள்ளேன். இந்த சமீபத்திய கதை 'Half Girl Friend' இன்னும் படிக்கவில்லை.

அது கூட பரவாயில்லை. ஒரு முழுமையான தமிழ் புத்தகம் கூட படிக்கவில்லை. இத்தனைக்கும், ஊரில், என் வீட்டின் அருகேயே நூலகம் உள்ளது. ஒரு காலத்தில், அதே நூலகத்தில், எந்த புத்தகம் எங்கே இருக்கும் என எனக்கு மட்டும்தான் தெரியும். நான்தான் அங்கே தொகுப்பு வாரியாகவும், ஆசிரியர் வாரியாகவும் அடுக்கியே வைப்பேன். எந்த புத்தகமாக இருந்தாலும், முதலில் நான்தான் படிப்பேன், குறைந்தது இரண்டு பக்கங்களாவது, அதை என்ன தொகுப்பில் வைப்பது என்று. சிறுகதைகளோ, நாவல்களோ முழுதும் படித்த பின்தான் அது நூலகமே போய்ச் சேரும். அது ஒரு காலம்.

ஒரு விளம்பரம்: நான் தமிழ் படிக்கும் வேகம் மிக அதிகம். எப்படி என்றெல்லாம் சொல்லத் தெரியவில்லை. நண்பர்களே "நீ படிக்கிறியா இல்ல சும்மா பாக்குறியா" என்றுதான் கேட்பார்கள். இன்னொரு காரணமும் உண்டு, ஒரு புத்தகம் ஒரே மூச்சில் படித்து விட்டு திரும்ப யாரிடமாவது கொடுத்தால் "என்னாச்சு, புடிக்கலையா, அதுக்குள்ள கொடுத்திட்ட" என்று (அனைவருமே) கேட்பார்கள்.

"சரி, இப்ப என்ன அடுத்த வருஷம் படிச்சு கிழிக்க போறியா" என்று கேட்டால், இல்லை. ஆனால் மகளுக்கு எப்படியாவது மடிக்கணினி, கைப்பேசியை விட மதிப்பு வாய்ந்தது புத்தகங்கள்தான் என உணர வைக்க வேண்டும். இரண்டு வயது குழந்தைதான். கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைப்பேன். கண்டிப்பாக அவளிடம் இருந்து, நான் மீண்டும் படிக்க கற்றுகொள்வேன் என நம்புகிறேன். நம்பிக்கைதான வாழ்க்கை.

அனைவருக்கும் அனைத்தும் சிறக்க வாழ்த்துக்கள்!

Saturday, December 13, 2014

லிங்கா: அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் இல்ல

முன் குறிப்பு, முக்கிய குறிப்பு: நான் ரஜினி ரசிகன் அல்ல. கொஞ்சம் சொந்தக்கதையும் உள்ளது. மொக்கையான பதிவு.



அஞ்சான் பார்த்து நோஞ்சான் ஆனதால், இந்த முறை முன் பதிவு செய்யவில்லை. வெள்ளியன்று படம் பார்த்து விட்டு, சமூக வலைத்தளங்களும், நமது பதிவர்களும் கொடுத்த விமர்சனங்களில் இருந்து முதலுக்கு மோசமில்லை என்று முடிவு செய்து காலைக்காட்சிக்கு முன் பதிவு செய்தேன். 

நான் மட்டும் என்பதால், ஒரே ஒரு டிக்கட், வேளச்சேரி லுக்சில் கிடைத்தது. காலை 7:45க்கு படம். எனவே, 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். சீக்கிரம் கிளம்பி, நண்பன் வீட்டில் வண்டியை விட வேண்டும் (இல்லேன்னா 100 ரூவா அழனும்) என்றெல்லாம் எண்ணிக்கொண்டே, அலாரம் வைக்காமல் தூங்கி விட்டேன். எழுந்து பார்த்தால் மணி 6:45. அவசர அவசரமாக ஹீட்டர் போட்டு காத்திருந்தால், அது என்ன பிரச்சினையோ சுடு தண்ணீர் வரவில்லை. அவசர அவசரமாக அடுப்பில் வைத்து, குளித்து கீழே வந்தால், பேய் மழை. என்னடா இது சோதனை என்று கவசங்களை அணிந்து, கிளம்பி, வேறு வழியில்லாமல் நேராக தியேட்டருக்கே வந்து விட்டேன். 

150, அதோட இன்னொரு 100. கவுண்டமணி போல 'என் பணத்துக்கு வொர்த்தா இருக்கும்' என்று நம்பி உள்ளே போனேன். நான் உள்ளே போகும்போதே கால்மணி நேரம் தாமதம். ரஜினி அறிமுகப் பாடல் முடிந்து, அனுஷ்காவே வந்து விட்டார். அப்படி ஒன்னும் முக்கியமான காட்சி முடிந்திருக்காது என்று தெரியும் என்பதால், பொறுமையாய் போய் அமர்ந்தேன்.

கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எல்லா ரஜினி படம் போலவே, பெரிய ரஜினி மக்களுக்கு அணை கட்டி நல்லது செய்து சொத்துக்களை இழந்து, ஊர் மக்களால் அனாதையாக்கி துரத்தப்படுகிறார். பொதுவாக மகன் ரஜினி வந்து அவப்பெயரை துடைப்பார். ஆனால், இதில் பேரனின் பெயர் உள்ளதால், பேரனாக வந்து தாத்தாவின் களங்கத்தைத் துடைக்கிறார். 

பொதுவான ரஜினி படங்களின் எல்லா மசாலாக்களும் இதில் உள்ளது. ஆனால், இந்தப் படத்தில் ரஜினிக்கு சரியான எதிரியே இல்லை. தாத்தா ரஜினிக்கு எதிரியாக வரும் ஆங்கிலேயரை, அவரது மனைவியே திருத்துகிறார். பேரன் ரஜினிக்கு "யாரையாவது வில்லனாக்கனுமே?" என்று யோசித்து, வழக்கம் போல ஊரில் உள்ள ஒரு அரசியல்வாதியை வில்லன் ஆக்கி விட்டார்கள். 

முதலில் பாராட்டப்பட வேண்டியது இயக்குனர்தான். இந்த குறைந்த காலத்தில், இத்தனை நடிகர்களைக் கொண்டு பிரம்மாண்டமான காட்சிகளை எடுத்துள்ளார். அதிலும் அந்த அணை கட்டும் காட்சிகள், பிரமாதம். என்னதான் பணம் நிறையக் கொடுத்தாலும், அதற்கேற்றார்போல வேளை நடக்க வேண்டுமே. ரவிக்குமார் நடத்தியிருக்கிறார். அதே போல, ஓரளவு நல்ல கதை, திரைக்கதையை பக்காவாக தயார் செய்யவெல்லாம் நேரமில்லை, அதான் ரஜினி இருக்காரே என்று துணிந்து இறங்கி உள்ளனர். அதனால்தான், முதலில் அவரை திட்டவும் வேண்டி உள்ளது. 

படத்தின் இடைவேளை வரும்போதுதான் "என்னாது, இப்போதான் இடைவேளையா?" என்று தோன்றியது. அதன் பின் ஓரளவு பரவாயில்லாமல் போனாலும், மீண்டும் இறுதியில் சலிக்க ஆரம்பித்து விட்டது. அதுவும் இறுதி சண்டைக்காட்சிகளில் ரஜினி ரசிகர்களே நக்கலாக சிரிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு அபாரம். இசை பரவாயில்லை. பொதுவாக ரஹ்மான் ரஜினிக்காக கொடுக்கும் பின்னணி இசை எப்போதுமே எனக்கு மிகவும் பிடிக்கும். எந்திரனில் கெட்ட சிட்டிக்கு வரும் இசை, சிவாஜியில் சிங்கப்பாதையை தேர்ந்து எடுத்தவுடன் வரும் இசை, மொட்டை ரஜினிக்கு வரும் இசை, முத்துவில் ராதாரவி வரும்போது வரும் பின்னணி என நான் தேர்ந்தெடுத்து கேட்பவை நிறைய. இதில் அப்படி சொல்வது போல, இப்போது தெரியவில்லை. ஆனாலும், டிரைலரில் வரும் இசையும், ரயில் சண்டைக்காட்சியில் வரும் இசையும் அபாரம்.



1939ம் ஆண்டு காட்சிகளுக்காக ரொம்பவெல்லாம் கஷ்டப்படாமல் எடுத்திருக்கிறார்கள். மொபைல் போன் காண்பிக்கவில்லை, நாயகிக்கு ரவிக்கை இல்லை. ஒரு பழைய கார். கொஞ்சம் வெள்ளைக்காரங்க. ரஜினி எப்பவும் கோட்டு சூட்டு. சுதந்திரத்திற்கு முன்னால், என்பதால், சுதந்திரத்திற்காக போராடுகிறோம் என்று ஒரு சண்டை, அவ்ளோதான். ஆனால், அந்தக் கதையை மட்டுமே, இன்னுமொரு வலுவான வில்லன் பாத்திரம் சேர்த்து படமாக எடுத்திருக்கலாம். படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

மற்றபடி, நான் செலவு செய்த 250ரூபாய்க்கு, இந்தப் படம் எனக்கு திருப்தியைத் தரவில்லை. படத்தில், தாத்தா ரஜினி வரும் வரை கூக்குரல் இட்ட ரசிகர்கள் கூட, இடைவேளைக்கு பிறகு அடங்கி விட்டனர். நான் புக் செய்யும்போது, நாந்தான் கடைசி இடம். ஆனால், படம் பார்க்க வந்த பொது பாதிக்கு மேல் காலியாகத்தான் இருந்தது. இதற்கு கண்டிப்பாக மழை மட்டுமே காரணம் இல்லை என்று நான் நினைக்கிறேன். .

தமிழில் சூப்பர் ஹீரோ படங்களே இல்லை. ரஜினி நடிக்கும் (வரும்?) எல்லாப் படங்களுமே சூப்பர் ஹீரோ படம்தான். அதில் என்ன லாஜிக் மீறல் இருந்தாலும், ரஜினியால் அதை செய்ய முடியும் என்று மறந்து விடுவோம். அதே போலத்தான் இந்தப் படமும் எனலாம், இன்னும் சற்று பட்டை தீட்டி இருந்தால்.

படம் முடிந்த உடனே மனதில் தோன்றியவை: 

பென்னி குயிக் தனது சொத்துக்களை விற்று அணை கட்டினார். இவர்களோ, அவர்கள் சம்பாதிக்க அதைப்பற்றி படம் எடுத்து, அவருக்கும் கெட்டப் பெயரை உண்டாக்கி, பணம் சம்பாதிக்கிறார்களே? (பக்கத்தில் உட்கார்திருந்த ஒருவர் பேசியது, "ஏ மச்சி, ஒரு வேளை அந்த முல்லை பெரியாறு அணையையும் நம்மாளுதான் எவனாவது கட்டியிருப்பானோ?", அதற்கு பதில் "ச்சே ச்சே, அப்படி இருந்தா அது இன்னும் இவ்ளோ நல்லா இருக்குமா").

ரஜினி படம் பார்ப்பதற்கு பதிலாக 'ர' படம் பார்க்க போயிருக்கலாமோ?

சில கேள்விகள்:

"எங்களுக்கு எதுவும் தேவையில்லை. ரஜினி வந்தால் மட்டும் போதும்" என்றுதானே ரசிகர்கள் நினைக்கிறார்கள். அப்புறம் ஏன் தேவையில்லாமல் இரண்டு நாயகிகள், தேவையில்லாத பாடல்கள். என்னதான் படம் என்றாலும், ரஜினி நாயகிகளுடன் கொஞ்சும்போது, எனக்கே ஒரு மாதிரி இருக்கிறது. ஏன், திரைக்கதையில் அவர்களை திணித்து உள்ளீர்கள்? தாத்தா ரஜினி ஏற்கனேவே திருமணம் ஆகியுள்ளவர் போலவும், அனுஷ்கா பாத்திரத்தை ஆண் பாத்திரமாகவும் வைத்திருக்கலாமே? என்னுடைய கேள்விக்குக் காரணம், ரஜினி கொடுத்த பேட்டிதான்.

மக்களுக்கு தேவை ரஜினி திரையில் ஆட வேண்டும், அடிக்க வேண்டும். ஆனால், கண்டிப்பாக இருபது வயது பெண்ணுடனும், ஐஸ்வர்யா ராயுடனும்தான் ஆட வேண்டும் என்று யாரும் எதிர் பார்ப்பதில்லை. (இது கமலுக்கும்தான்)

ரஜினியைப் பிடிக்காதவர்கள் ரஜினி அமிதாப் போல நடிக்க வேண்டும் என்று கூறுவது மேற்கூறிய காரணத்திற்காக மட்டுமே. ரஜினி மட்டும் ஜோடி இல்லாமல், ஒரு முழு நீள அதிரடிப் படத்தில் நடிக்கட்டுமே, கண்டிப்பாக இப்படி சொல்லியவர்கள் வாயை மூடுவார்கள். நானும்தான்.

Wednesday, November 5, 2014

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

சில பல காரணங்களால் கடந்த இரண்டு மாதங்களாக பதிவு போட முடியவில்லை. அது மட்டுமில்லாமல் அஞ்சானின் பாதிப்பில் இருந்தே இன்னும் மீளவில்லை. எனவே சில பல பிட்டுக்கள் மட்டும்.

புது வீடு:

8 வருடங்களாக இருந்த வாடகை வீட்டிலிருந்து, சொந்த வீட்டிற்கு மாறியாகி விட்டது. வேளச்சேரியில் இருந்து மீண்டும் குரோம்பேட்டை. கல்லூரிக் காலம் கிழக்கு குரோம்பேட்டை, தற்போது மேற்கு குரோம்பேட்டை.

என்னதான் இருந்தாலும், 8 வருடங்கள் ஒரே இடத்தில் இருந்து விட்டு மாறும்போது சொந்த வீடு என்றாலும், இன்னும் செட் ஆகவே இல்லை. நண்பர்களுடன் 5 வருடங்கள், சரியாக எனக்கு திருமணம் ஆகும்போது நண்பர்கள் ஆன் சைட், சொந்த வீடு என கலைய, நானே வீட்டுக்காரருடன் பேசி, வாடகை சற்றே குறைத்து, குடியேறி 3 வருடங்களும் முடிந்து விட்டது. சொந்த வீட்டை வாடகைக்கு விடலாம் என்றால் "அதெப்புடி, சொந்த வீட்டை விட்டுட்டு வாடகை வீட்டுல இருக்கிறது" என்று எல்லோரும் பொங்க, மாறியாகி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நிறைய வேலைகள். எல்லாம் முடித்து இணையத்தை இணைக்க இவ்வளவு நாட்களாகி விட்டது.

பயணம்:

முன்பு அலுவலகம் செல்ல தூரம் குறைவு. அதற்கே 'உயிர் பயம்'. இப்போதோ, பயண தூரம் இரு மடங்கு, அதுவும் GST சாலை. நள்ளிரவில் திரும்பும்போது எந்த சிக்னலிலும் நிற்பதில்லை. நின்றால் காலிதான். அதுவும் இல்லாமல் மெட்ரோ வேலை வேறு நடப்பதால், திடீரென குறுகிய சாலைகள் வந்து விடும். நம் பாடு திண்டாட்டம்தான். எதிர் திசையில் நம்மை நோக்கி (அவ்வளவாக) வர மாட்டார்கள் என்றாலும், சற்று கவனக் குறைவாக இருந்தால், நம்மை அரைத்து கூழாக்கி விடுவார்கள். கவனம்.

விமர்சனம்:

அஞ்சானுக்குப் பிறகு நன்றாக டியூன் ஆகி இருந்ததால், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மட்டும் பார்த்தேன். அதன் பிறகு தினமும் வேலை நிறைய வந்ததால், தியேட்டருக்கே போகவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின் 'கத்தி' பார்த்தேன். படத்திலும், படத்தைப் பற்றியும் 1000 சர்ச்சைகள் இருந்தாலும், கூறப்பட்டுள்ள கருத்து மிக முக்கியம். மற்றபடி அரண்மனை, சலீம், ஜீவா, மெட்ராஸ் போன்ற படங்களை தரவிறக்கம் செய்தே பார்த்தேன். எல்லாமே நேரத்தைக் கடத்த உதவும். மற்றபடி ஒன்றுமில்லை. 

அரசியல்:

மக்களின் முதல்வரின் ஆணைக்கிணங்க, மாக்களின் முதல்வர் நாடாள, வாயில் கை சூப்பிக் கொண்டு நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டும், பதிவிட்டுக் கொண்டும், மக்களா அல்லது மாக்களா என்று தெரியாமல் இருக்கிறோம். இப்படியே போனால், "வெளங்கிரும்". 

நிகழ்வுகள்:

பாலியல் பலாத்காரம். முன்பெல்லாம் ஒரு கிளுகிளுப்பான செய்தியாக படித்து விட்டு போய் விடுவேன். இப்போது 2 வயது பெண்ணுக்கு தகப்பன் என்று ஆனவுடன், குழந்தையை யார் தூக்கினாலும் மனது 'பகீர்' என்கிறது. இதற்கு முன் இப்படியெல்லாம் நடக்கவில்லையா, அல்லது இப்போதுதான் இந்த செய்திகளை வெளியிடுகிறார்களா? என்றே தெரியவில்லை.

நமது செய்திகளை எப்போதும் நம்பக்கூடாது என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம், காவல் நிலையத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட ஒரு இளைஞனின் செய்திகள். ஆறு வேறு வேறு தமிழ் இணையங்களில் இருந்து எடுத்துள்ளவை.

தினமலர்
தினத்தந்தி
தமிழ் ஹிந்து
விகடன்
ஒன் இந்தியா
தினமணி

இவர்களில் சிறந்த திரைக்கதைக்கான முதல் பரிசு 'தின மலர்'. இரண்டாம் பரிசு 'தின தந்தி'. ஏன் தினமலருக்கு என்றால், அந்த SI கொல்லப்பட்ட நபரை தம்பி போல பார்த்துக் கொண்டார் என்றும், கொல்லப்பட்ட நபரும் அந்த SIயை அண்ணா என்றுதான் அழைப்பார் என்றும் ஒரு செய்தி இருந்தது. அந்த செய்தியை இப்போது காணவில்லை.

அதற்குள் மாக்களின் அடச்சே, மக்களின் முதல்வருக்கு குழம்பிய குட்டையில் இருந்து மீன் கிடைத்து விட்டதால், இந்த செய்திகள் இத்தோடு நிறுத்தப்படுகின்றன.

மற்றபடி உருப்படியான ஒரு செய்தி என்றால் தமிழ் ஹிந்துவில் வரும் 'மெல்லத் தமிழன் இனி..!' என்ற தொடர். குடியினால் நிகழும் எதிர் வினைகளை, உண்மை நிகழ்வுகளைப் பற்றிய தொடர். படியுங்கள்..

Friday, August 15, 2014

அஞ்சான் - நோஞ்சான்


நான் பதிவெழுத ஆரம்பித்த பின், இது முறை கூட முதல் நாள் முதல் ஷோ பார்த்ததில்லை. அதற்கு முன் நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்த எந்த எந்தப் படமும் ஓடியதில்லை (கண்ணுக்குள் நிலவு, ஷாக், பீமா, அருள் இன்னும் சில). அதை விட முக்கியம் எனக்கு பிடித்ததேயில்லை. (நிறைய ஓடாத படங்கள்தான் நமக்குப் பிடிக்குமே, அன்பே சிவம் போல)  ஆனால், தவிர்க்க இயலாத காரணங்களால்(?) இன்று முதல் நாள் முதல் ஷோ அஞ்சான் பார்த்து விட்டேன்.

இந்தப் படம் ஓடினால் "எப்படி ஓடியது?" என்றெல்லாம் கேள்வி தேவையில்லை. ஏழாம் அறிவு, வேலாயுதம், ஆரம்பம், ஜில்லா, வீரம் எல்லாம் எப்படி ஓடியதோ, அதே போல இதுவும் ஓடியிருக்கும் என்று நினைக்க வேண்டியதுதான். அஞ்சானும் அந்தப் பட்டியலில் சேர்ந்து விட்டது. இப்படியொரு படத்திற்கு என்னுடைய மாதமொரு பதிவு என்ற சபதத்தை உடைத்து, 75ஆவது பதிவையும் (விளம்பரம்) போடுவது மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், மக்களின் நலன் கருதி வெளியிடுகிறேன். 

கதை என்று பார்த்தால், தன் சகோதரன் ராஜுவைத் தேடி மும்பை வருகிறார் கிருஷ்ணா எனும் சூர்யா. இங்கு வந்தால்தான் தெரிகிறது ராஜூ ஒரு பெரிய ரவுடி, அவனையும் அவனது உயிர் நண்பனையும் எதிரிகளும் துரோகிகளும் சேர்ந்து கொன்று விட்டனர் என்று. இவனையும் கொல்ல வேண்டும் என்று அந்த கும்பல் துரத்த, சில பல திருப்பங்களுடன் இனிதே படம் முடிகிறது.

இப்படி எல்லாம் சொல்ல வேண்டும் என்று ஆசைதான். ஆனால், 'டிவிஸ்ட்' என்று லிங்குசாமி எதெல்லாம் நினைக்கிறாரோ, அது எல்லாம் குழந்தை கூட சொல்லும். படம் பார்க்கும்போது, எனக்கு கேபிள் சங்கர் எழுதிய அலெக்ஸ் பாண்டியன் விமர்சனம்தான் நினைவுக்கு வந்தது.

லிங்கு சார், கே(G)ட்ட அடைக்கிறது எல்லாம் ஒரு படத்துல சரி. இன்னும் பத்து படத்துக்கு அதே சீன வக்கினும்னு நெனச்சா எப்படி. இப்பல்லாம் ரெண்டு வயசு கொழந்தையே, ஒரு தடவ பார்த்த பாட்ட, அடுத்த வாட்டி போட்டா மாத்த சொல்லுது (அனுபவம்). இது சூர்யாவுக்காக பண்ணுன மூணாவது கதையாம். மீதி இருந்த ரெண்டு கதைல ஒன்னத்தான் கார்த்தி அடுத்து நடிக்கப் போற படமாம். மூணாவது கதையே கேவலமா இருக்குன்னா, மீதி ரெண்டு இன்னும் எவ்ளோ கேவலமா இருக்கும்? ப்பா, முடியல.

படத்துல, கிருஷ்ணாகிட்ட ஒருத்தர் கதை சொல்லுவார் "இந்த எடத்துக்கு வர ராஜுவும், சந்துருவும் என்ன வெல கொடுத்தாங்க தெரியுமா?" என்பார். உடனே, பிளாஷ்பேக் வரும். சரி ஏதோ அழுத்தமான காட்சிகள் வரும் என்றால், ஐட்டம் சாங் வருகிறது. அது முடிந்தவுடன் மீண்டும் அதே காட்சி வருகிறது. என்ன எழவோ? இந்த கண்றாவி போதாதென்று காதல் வேறு.

"நிதானமா நின்னு யோசி, உனக்கானவன் உன் கண்ணுல படுவான்" என்று நாயகிக்கு நாயகனே சொல்லுவார் (பிச்சக்காரனுக்கு செக்யுரிட்டி பிச்சக்காரனே, இதுதான் எனக்கும் தோணியது). அப்படி நாயகி யோசிக்கும்போது, நாயகன் அந்தப் பக்கம் போய், துப்பாகியால் ஒருவனை சுடுவார். உடனே நாயகிக்கு காதல் வருகிறது. (இந்த வகையில் எனக்கு இயக்குனர் விஷ்ணுவர்தன் பரவாயில்லை. பில்லா படத்திலும் சரி, ஆரம்பம் படத்திலும் சரி, தேவையில்லாத காதல் காட்சிகள் நாயகன் அஜித்துக்கு இல்லை. அவரக்கு அஜித்தின் மேல் என்ன எரிச்சலோ) 

படத்தில் நகைச்சுவைக்கு குறையே இல்லை. சூரி இருப்பதால் சொல்லவில்லை. அது மொக்கை. நாயகன் ஒரு பெரிய தாதா. நாயகியைக் கடத்தி விட்டதாக போலிஸ் அவரை இரண்டு முறை துரத்துகிறது. நாயகி காதலில் விழுந்து, நாயகனுடன் சுற்றுபோது மீண்டும் நாயகியைக் காணாமல் காவல்துறை தேடுகிறது. அப்போது நாயகனுக்கு போன் பண்ணி "இந்த முறையும் அந்தப் பெண்ணைக் காணவில்லை, ஆனால் நாங்கள் உங்களை சந்தேகப்படவில்லை. இது பார் யுவர் இன்பார்மேசன்" என்பார்கள். உடனே நாயகன் "இல்ல அவ என்னோடத்தான் இருக்கா, நாங்க லவ் பண்றோம். திஸ் இஸ் பார் யுவர் இன்பார்மேசன்" என்பார். இந்த லட்சணத்தில் பெண்ணின் அப்பா, காவல் துறை உயர் அதிகாரி வேறு. இனிமே நான் ஆபிஸ்ல மெயில் அனுப்பும்போது எப்படி FYI போடுவேன்? கன்றாவிடா.

அதே போல உயிருக்கு பயந்து ஓடி ஒளிபவன், ஜாலியாக குதிரைப் பந்தயம் பார்த்துகொண்டிருப்பான். திருடும் ஏழை சிறுவன், ஆப்பிள் லாப்டாப்பை திறந்து உள்ளே உள்ள போட்டோவை பார்க்கிறான். ராஜு பாயை, ஊரில் உள்ள அனைவரும் பார்க்கும் இடங்களில்தான் சுற்றுகிறார், ஆனால் பாருங்கள் வில்லன்களுக்கு மட்டும் எங்கே என்று தெரிய மாட்டேன்கிறது.


படத்தில் பரட்டை தாடி மீசை எல்லாம் வைத்து பக்கி மாதிரி ஒரு பாத்திரம் உள்ளது. "ராஜூ பாய்" என்று கத்துமே, அதேதான். அது எதற்கு இந்தப் படத்தில் என்றே தெரியவில்லை. அதே போல போலிஸ். நீங்கள் இந்த ட்ரைலரில் பார்க்கும் அனைத்துக் காட்சிகளுமே, படத்தின் கதையோட்டத்தில் மொக்கையாகவே இருக்கும்.

படத்தில் நாயகியைக் கடத்துவார்கள். சரி ரொம்ப சீரியசான சீன் என்று பார்த்தால், "நீங்க என்ன கடத்தல, நானாத்தான் வந்தேன், அதனால, இது உங்க கணக்குல வராது" என்பார். அப்போதே உஷாராகி கிளம்பியிருக்க வேண்டும். படத்தில் சூர்யா வேறு அடிக்கடி "நீ சாவுரதையும் நாந்தான் முடிவு பண்ணனும்" என்பார். அது படம் பார்ப்பவர்களைக் குறிக்கும் போல.

இந்தப் படம் பார்க்கும்போது, உங்களுக்கு கண்டிப்பாக லிங்குசாமியின் எல்லா படங்களும் நினைவுக்கு வரும். காட்சிகள் அது போல உள்ளது. பீமா படத்தில், திடீரென ரகுவரனைக் கடத்தி வைத்திருப்பார்கள் எப்படி என்றெல்லாம் தெரியாது. அதே போல இதிலும் வரும். ஆனால், கொஞ்சம் உஷாராக, எப்படி என்று இரு காட்சிகள் வைத்து விட்டார்கள். கடைசி சண்டையில் ஒரு மிகப்பெரிய டிவிஸ்ட் உள்ளது. ரொம்பவும் எதிர்பார்க்க வேண்டாம். அது ஏற்கனவே ஜனா என்ற மொக்கைப் படத்தில் வந்து விட்டது.

படத்தில் நல்லதே இல்லையா? இரண்டு பாடல்களும், சில இடங்களில் பின்னணி இசையும் பரவாயில்லை. ஒளிப்பதிவும் பரவாயில்லை. மற்றபடி சமந்தா வரும் பாடல்களில் ஏன் ஒரு பட்டனை மட்டும் போட்டிருந்தாரோ? ஒரு வேளை அதையும் கழட்டி விட்டிருந்தால் இன்னும், ம்ம்.

படத்தில் என்னைக் கவர்ந்த காட்சி, நாணயம் சுண்டி விட்டு விழுவதற்குள் அனைவரையும் வீழ்த்துவது. இது இரண்டு இடங்களில் இரு வேறு பாத்திரங்களுக்கு வரும். அது அவர்களின் நட்பின் புரிதலையும் காட்டும்.

படம் பார்க்கவே முடியாதா என்றால், என்னால் முடியவில்லை. உங்களுக்கு சூர்யா பிடிக்கும் என்றால் சரி (சமந்தாவென்றாலும் சரி). மற்றபடி, கொஞ்சம் கஷ்டம்தான்.

மாற்றான் - தோற்றான். அஞ்சான் - நோஞ்சான். சூர்யா, நீ வேற வேலை இருந்தா போய் பார்யா.

எனக்கென்னவோ சிவகுமார் குடும்பத்திற்கே யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டனர் என்று நினைக்கிறேன். எதற்கும் ஒரு பரிகாரம் செய்வது நல்லது. லிங்குசாமி சார், நீங்கள் படங்களை வெளியிடுவதோடு மற்றும் நிறுத்திக்கொள்ளலாம். முடியாது இப்படித்தான் என்று படம் எடுத்து எங்களைக் கொல்லலாம் என்று என்ன வேண்டாம். முடியல சார், சத்தியமா.

கடைசியாக ஒன்று. படத்தில், எல்லோரும் ராஜூ பாய், ராஜூ பாய் என்று கத்துவார்கள், பக்கத்தில் இருந்தவர் மெதுவாக சொன்னார் "ராஜூ பாய்தாங்க, ராஜி, ராஜாத்தில்லாம் தாங்க கேர்ள்".

அஞ்சான் பார்க்க தேவை, கொஞ்சம் அம்ருதாஞ்சன். அம்புட்டுதேன்.

"நீ என்ன பெரிய இவனா? முடிஞ்சா நீ ஒரு நல்ல படமா எடேன்" என்பவர்களின் கவனத்திற்கு மட்டும். நீங்கள் சரவணபவன் போய் சாப்பிடுகிறீர்கள். சாப்பாட்டில் ஏதோ ஒரு குறை. உடனே நீங்கள் உங்கள் முகப்புத்தகத்திலோ, கீச்சுகளிலோ இட்டு விடுகிறீர்கள். உடனே அந்த மேலாளர், "சார், சும்மா கொற சொல்லாதீங்க. நீங்க வேணும்னா வந்து இந்த ஹோட்டல நடத்திப் பாருங்க" என்றால் என்ன சொல்வீர்களோ அதே பதிலை எடுத்துக் கொள்ளலாம்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!!!

Thursday, August 7, 2014

வேலையில்லா பட்டதாரி ஜிகர்தண்டாவுடன் ஆடும் சதுரங்க வேட்டை

இந்த முறை, நிஜமாகவே சுட சுட விமர்சனம், இல்ல இல்ல என்னுடைய கருத்துக்கள்தான். தங்கமணி வேறு ஊரில் இல்லை. வந்த இரண்டு படங்களும் சரி, ஏற்கனவே வந்த இரண்டு படங்களும் சரி, எல்லாமே நன்றாக உள்ளது என்று சொல்லும் போது எப்படி பார்க்காமல் இருக்க முடியும்?

அது மட்டும் இல்லாமல் வேளச்சேரியில் இருப்பதால் உள்ள வசதி என்னவென்றால், நடந்து போய், பீனிக்ஸ் மாலில் படம் பார்க்கலாம். அப்படி இல்லையா, 'விடுறா S2க்கு' என போகலாம். அப்படியும் இல்லையா, 'துணையிருப்பாள் ராஜலக்ஷ்மி'.

ஜிகர்தண்டா:


ஞாயிறு மாலை ஆறு மணியளவில், திடீரென மின்சாரம் தடை, ஆனால், சம்சாரம் தடை இல்லை. வீட்டில் உட்கார்ந்து என்ன செய்ய? உடனே கிளம்பி ராஜலக்ஷ்மி வந்து "பாத்துட்டோம்ல, நாங்கள்லாம் யாரு?".

ஒரு இளம் இயக்குனர் ரவுடிகள் பற்றி படம் எடுக்க, மதுரைக்கு வந்து ஒரு ரவுடியை தொடர முயற்சிக்க, ஒரு கட்டத்தில் அவனிடம் மாட்டிக்கொள்ள, என் கதையில் நானே நடிக்கிறேன் என்று ரவுடி சொல்ல, அதன் பின் நடக்கும் சம்பவங்களே இந்த படம்.

உண்மையில் இந்தப் படம் எனக்கு பிடித்ததா இல்லையா என்றே சொல்லத் தெரியவில்லை. உண்மையிலேயே ஒளிப்பதிவும், இசையும் ஆங்கிலப்படங்களுக்கு இணையாகவே இருந்தன. ஆனால், எனக்குத்தான் என்னவோ போலிருந்தது. (சன் டிவியில் வரும் மஹாபாரதம் ஏன் நமக்கு பிடிக்கவில்லை, நாம் பக்கத்து வீட்டுக்காரர்கள் போல உள்ளவர்கள் அதில் நடிப்பதால். அதுவே விஜய் டிவியில் வரும் டப்பிங் நன்றாக இருப்பது போல தோன்றும். இதுவும் அது போலத்தான் இருந்தது.) படத்தின் முற்பாதியில் அதிரடியாக பாயும் கதை, இரண்டாம் பாதியில் அப்படியே காமெடியாக (வடிவேலுக்கு வரும் அறிமுக காட்சி போல) மாறிவிட்டது.

துரோகம் செய்யும் அடியாளைக் கண்டு பிடிக்க திட்டங்களை சொல்லி, கையும் களவுமாகப் பிடிப்பது நன்றாக இருந்தாலும், காமிரா முன் உட்கார்ந்து தாங்கள் செய்த கொலைகளை விலாவாரியாக சொல்வது என்ன லாஜிக்கோ? வசூல் ராஜா படத்தில், பிரபு கமலிடம் சொல்லுவார் "நீ பாட்டுக்கு இங்க வந்துட்ட, அதனால, உன்ன டொக்கு ஆயிட்டன்னு சொல்றாங்க' என்பார். உடனே, கமல் கோவமாக "அப்டியா, யாரு" என்று கேட்டு விட்டு "சரி, நாம படிக்க வந்துட்டோம், படிக்கிற வேலயைப் பாப்போம்" என்பார். அதுதான் இரண்டாம் பாதியில் நினைவுக்கு வந்தது.

கண்டிப்பாக, வித்தியாசமான படம், (கொஞ்சம் கூட பிட்சா படம் நினைவுக்கு வந்து விடக்கூடாது என்று மெனக்கெட்டுள்ளார்.) அதனாலேயே அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. முதல் பாதியில், அளவோடு வரும் நகைச்சுவை, இரண்டாம் பாதியில் மிஞ்சியது போல தோன்றியது. அதிலும் குறிப்பாக இறுதிக்காட்சிகள். (சொன்னால் சுவாரஸ்யம் போய் விடும்.)

இந்தப் படத்தில் காதல் என்ற ஒன்று தேவையே இல்லை. அப்படி ஒன்றும் உண்மைக் காதலாகவும் அது இல்லை. அதை நீக்கி விட்டு, நீளத்தை குறைக்கலாம். மற்றபடி பல காட்சிகள் அட்டகாசம். ஒரே ஷாட்டில் வரும், தியேட்டரில் நடக்கும் கொலை முயற்சி, அடியாளின் துரோகத்தைக் கண்டுபிடிப்பது, நடிக்க முயற்சி செய்யும் காட்சிகள், இன்னும் பல.

ராஜலக்ஷ்மியில் கொடுத்த 80 ரூவாய்க்கு, இதுக்கு மேல நான் கூவக் கூடாது.

சதுரங்க வேட்டை:

வாயையும் மூளையும் மட்டும் மூலதனமாக வைத்து, மற்றவர்களின் ஆசையை பணமாக மாற்றி வாழும் ஆள், திருந்தி வாழ நினைக்கும்போது முன் செய்த பாவங்கள் தொடர்ந்து வர, என்ன ஆயிற்று என்பதே கதை.

மைசூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நாள், போன் பேசிக்கொண்டே நடந்து போய்க் கொண்டிருந்தேன். திடீரென ஒரு 40 வயதுள்ள ஒரு ஆள் வந்து "ஸார், நீங்க தமிழா, தயவு செஞ்சு உதவி பண்ணுங்க ஸார், ஊர்ல இருந்து இங்க சொந்தக்காரன் ஒருத்தன பாக்கவந்தேன், எல்லாத்தையும் திருடிட்டாங்க, போன் நம்பரும் ஞாபகம் இல்ல, 100 ரூபா கொடுத்தா நான் ஏன் சொந்த ஊருக்கே திரும்பி போயிடுவேன் ஸார், உங்க போன் நம்பர் மட்டும் கொடுங்க. போய் போன் பண்ணி, உங்க அட்ரஸ் வாங்கி காச அனுப்பறேன்" என்றான்.

நான் புத்திசாலித்தனமாக "நானே வந்து டிக்கட் எடுத்து தரேன், வாங்க" என்றேன். அவனும் "சாமி, சாமி, கோடி புண்ணியம் வாங்க" என்றான். நான் சற்றே குழம்பி, "சரி, இந்தாங்க பணம், என் போன் நம்பர். இங்கிருந்து டவுன் பஸ் புடிச்சு, சிட்டி பஸ் ஸ்டாண்ட் போய், உங்க ஊர் போங்க" என்று அனுப்பினேன். 9 வருடங்கள் ஆகி விட்டது, இன்னும் போன் வரவில்லை. இது பரிதாபத்தில் நான் ஏமாந்த கதை. ஆனால், படத்தில் இது போல காட்சிகள் இல்லை. ஆனால் ஒரு வசனம் உண்டு. "கருணை காட்டுறது முக்கியம் இல்லை, ஆனா, அந்த கருணையை எப்படி காசாக்குறதுன்னு யோசி"

சென்னையில் ஒரு நாள், திடீரென ஒரு நண்பன் அழைத்தான். "டேய், நல்லா இருக்கியா, உன்ன பாக்கனும்போல இருக்கு, திருவான்மியூர் வாயேன். ஜெயந்தி தியேட்டர் கிட்ட நில்லு, நானே உன்ன வந்து கூட்டிப் போறேன்" என்றான். நானும்,எங்களுக்கு பொதுவான இன்னொரு நண்பனுடன் வந்து நின்றேன். இருவருமே பயங்கரமாக யோசித்தோம். "இம்புட்டு பாசத்தோட கூப்பிடுறான்? என்னவா இருக்கும்?". வந்து ஒரு சந்துக்குள் உள்ள பெரிய வீட்டுக்கு கூட்டிப் போனான். "ஒண்ணுமில்ல, ஒரு சின்ன டிஸ்கஸன்" என்றான்.

திடீரென, ஒரு டிப் டாப் வாலிபர் வந்து, ஒண்ணுக்கு ரெண்டுக்கு என்று ஆத்தோ ஆத்தென்று ஆத்தி விட்டு "நான் என்னோட சாஃப்ட்வேர் வேலய, விட்டுட்டு, இதுக்காக ஆள் பிடிச்சு, ஹோண்டா சிட்டி கார வாங்கியிருக்கேன். நீங்களும் சேருங்க" என்றான். இது என் நண்பன் ஆசையில் ஏமாந்த கதை. இதுதான் படந்தின் முக்கிய அம்சம். அடுத்தவன் பேராசையைத் தூண்டி பணம் பறிப்பது. அதற்கான வசனம் "நான் யாரையும் போய் ஏமாத்துல. ஏமாற தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தேன்" அதன் பின் நாங்கள் என் நண்பனிடம் பேசியது எல்லாம் சென்சாரில் கட் ஆகிவிடும். அந்த டிப் டாப் வாலிபரின் பேச்சு அப்படியே அச்சு அசலாக இந்தப் படத்தில் வந்தது. என்ன, கார்தான் ஹோண்டா சிட்டியில் இருந்து BMW ஆக மாறி விட்டது.

நாம் பல முறை வாழ்க்கையில் ஏமாற்றப்படுகிறோம் என்பதையே உணர்வதில்லை. அப்படியே தெரிந்தாலும், அதை அப்படியே துடைத்து விட்டு அடுத்த முறை ஏமாற தயாராகிறோம். கேட்டால் "எல்லோரையும் ஒரே மாதிரி நெனக்கலாமா" என்கிறோம். படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, நகைக்கடை காட்சிதான், அதன் பின் MLM மற்ற அனைத்திலும் அவர்கள் குறிப்பிட்ட ஒருவரை மட்டுமே ஏமாறுகின்றனர். (சரி ஈமு மேட்டர் ஓகே).

அதிலும் குறிப்பாக எங்கெங்கு மக்கள் ஏமாந்தனரோ, அதே இடங்களைத் தேர்வு செய்தது அருமை. இந்தப் படத்தில் எனக்குப் பிடிக்காத காட்சிகள் என்றால், அந்த பிளாஷ்பேக் மற்றும் திருந்தி வாழும் காட்சிகள். நம் மக்களுக்கு அதுதான் தேவை என்பதால் வைத்து விட்டார்கள் போல. முடிந்தால் இதே போல வேறு வேறு ஏமாற்று வேலைகளை வைத்து இன்னும் நான்கைந்து பாகங்கள் கூட எடுக்கலாம். ஆனால் ஒன்று, இதைப்போல ஆயிரம் படங்கள் வந்தாலும் நம் மக்கள் திருந்த மாட்டார்கள் (நான் உட்பட).

வேலையில்லாப் பட்டதாரி:

தனுஷோட பொல்லாதவன், படிக்காதவன் ரெண்டோட கதைய லேசா எடுங்க. மிஸ்டர் பாரத் படத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப் போட்டு கலக்குங்க. கொஞ்சம் அம்மா செண்டிமெண்ட், அப்புறம் முந்திரிப் பருப்பு தூவற மாதிரி காமெடி வசனம். எல்லாத்தையும் நல்லா கலந்தா, சுட சுட VIP தயார். படத்துல எதுவுமே கூட குறைய இல்ல. சரியான கலவை.

தன் சகலைய நக்கல் பண்ண எடுத்திருந்தாலும், நல்லாவே அதை பண்ணியிருக்காங்க. (ஏன் இதை அடிச்சு சொல்றேன்னா, கடைசியா வர்ற மன்னிப்பு சீன வச்சித்தான்). ஆனாலும் இந்தப் படம் எனக்கு கொஞ்சம் அதிகமாவே பிடிச்சிது. அதுக்குக் காரணம் தனி பதிவாவே வரும்.

சரபம்:

படம் பார்க்க வேண்டும் என்று முயற்சித்தேன். சற்றே அலைச்சல் அதிகமாக இருந்ததால், பார்க்கவில்லை. நன்றாக உள்ளது என்று கேள்வி. நன்றாக இருந்தால், இன்னொரு பதிவு போட வேண்டியதுதான். பார்த்த இன்னொரு நல்ல படத்தை விமர்சிக்கிறேன்.

பூவரசம் பீப்பீ:

துப்பாக்கி படத்தோட அட்டக் காப்பி. அதுல விஜய் லீவுல நாட்டக் காப்பாத்துறாரு. இது பட்ஜெட் கம்மிங்கறதால, சின்னப் பசங்க, குட்டி ஊர காப்பாத்துறதா மாத்திட்டாங்க.

அருமையான இயக்கம். நிறைய காட்சிகள் மிகை என்று தோன்றினாலும், இந்த காலத்தில் கண்டிப்பாக நடக்கலாம். என்ன, இது போல அதிக பிரசங்கித்தனமாக ஒரு 10 பேர் இருந்தால், படம் பார்த்து விட்டு, இன்னும் 10 பேர் அதே போல நடக்க முயற்சி செய்வார்கள். அதுதான் பிரச்சினை. எனவே, காதல் (போன்ற) காட்சிகளை குறைத்திருக்கலாம். மற்றபடி தரமான படம். அதனால்தான் வெற்றி பெறவில்லை போல. 

பதிவின் தலைப்பிற்காக யாரும் தனியாக பின்னூட்டத்தில் பாராட்ட வேண்டாம். எனக்கு புகழ்ச்சி பிடிக்காது.

Saturday, July 12, 2014

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

போன முறை போட்ட பதிவு பலருக்கு மண்டைக் குடைச்சல் கொடுத்ததால், இந்த முறை பொத்தாம் பொதுவாக ஒரு பதிவு.

விமர்சனம்:

சைவம்: வெற்றிகரமாக குழந்தையுடன் இரண்டாவது முறையாக திரையரங்கம் சென்று பார்த்தோம். இதில் எப்படியும் ஆடு, மாடு வரும் என்று போனோம். இன்னும் கொஞ்ச நேரம் கத்தரித்து ஒன்றரை மணி நேரப் படமாக்கி இருக்கலாம். நமக்குத்தான் பொறுமை போய் விட்டது.

"ஆமாமா, அப்படியே போட்டுட்டாலும். இவன் விமர்சனம் போடும்போது அந்தப் படத்த டிவியிலே நாலு வாட்டி போட்டிருப்பாங்க" என்றுதானே நினைக்கிறீர்கள். சரிதான். என்ன செய்வது. நானும் சுட சுட ஒரு படத்தின் விமர்சனம் போட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். இப்போதிருக்கும் நிலையில் உடனே நான் விமர்சனம் போட வேண்டும் என்றால், ஏதேனும் நெடுந்தொடருக்குத்தான் போட வேண்டும்.

எல்லா தொல்லைக்காட்சிகளிலும் வரும் நெடுந்தொடர்கள் அனைத்துமே, ஒரு நல்ல திரைப்படத்தின் தலைப்பைக் கொண்டுள்ளன. அந்தப் படத்தைப் பற்றி ஏதாவது இணையத்தில் தேடினால், இவை வந்து விழுந்து எரிச்சல் ஊட்டுகின்றன. இதைப் பற்றி ஏற்கனவே 'உதிரிப்பூக்களில்' எழுதியிருந்தேன்.

எல்லா நெடுந்தொடர்களிலும் இன்னும் முத்தக் காட்சிகளும் படுக்கையறைக் காட்சிகளும்தான் வரவில்லை. ஆனால், அவற்றுக்கு இணையாக (அல்லது அவையே பரவாயில்லை) எனும் அளவிற்கு வசனங்களும் காட்சிகளும் உள்ளன. இதை எழுத ஆரம்பித்தால், அதுவே ஒரு நெடுந்தொடராக போகும் அபாயம் உள்ளதால், இத்துடன் நிறுத்தி விடுகிறேன்.

அரசியல்:

இதைப் பற்றி எழுதக் கூடாது என்றுதான் இருந்தேன். ஆனாலும், வேறு என்ன எழுதி பதிவை நீளமாக்குவது என்று தெரியாததால், வேறு வழியின்றி எழுதுகிறேன்.

விலைவாசி உயர்வு என்பது தவிர்க்க இயலாத செயல். எனவே இந்த கசப்பு மருந்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், முந்தைய அரசு கொண்டு வந்த பொது ஏன் நீங்கள் நீலிக்கண்ணீர் வடித்தீர்கள்? வருமான வரி விலக்கு 5 லட்சம் வரை என்று ஏன் சொன்னீர்கள்? படிப்படியாக உயர்த்தப்படும் என்றாவது சொல்லியிருக்க வேண்டும். ஒரு வேளை அப்போது நிதி நிலைமை பற்றி தெரியாது என்றால் நீங்கள் அரசை நிர்வகிக்கவே தகுதி இல்லை.

இந்த லட்சணத்தில் ரயில் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டமாம். "டேய், முன்னாடி ஏத்துனதே நீங்கதான்டா. எங்களைப் பாத்தா உங்களுக்கு எப்படித்தான் தோணுதோ".

புது அரசு மட்டும் வரட்டும், பாலாறும் தேனாறும் ஓடும்னு சொன்னவங்க, இப்ப என்ன சொல்றங்க? "அதுக்குள்ள என்ன அவசரம், இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்" என்பார்கள். எத்தனை வருஷம் ஆனாலும் இப்படித்தான். ஏனென்றால், மக்களிடம் (மக்களுமே) யாரும் உண்மையாக இருக்க விரும்புவதில்லை. மற்றவர்களை சங்கடப்பட வைக்ககூடாது என்று, பிற்காலத்தில் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

ஒரு மருத்துவரிடம் சென்று, நோய் குணமாகவில்லை என்று இன்னொரு மருத்துவரிடம் போனால், அவர் முன்னவர் கொடுத்த மருந்தை மாற்றி வேறொன்று கொடுப்பார். பெயர்தான் வேறே தவிர, உள்ளிருக்கும் மருந்து ஒன்றே. அதே போலத்தான் அரசாங்க மாற்றமும்.

"இதுக்குத்தான் படிச்சவங்க அரசியலுக்கு வரணும்கிறது" என்பர்களுக்கு, இந்த படிப்பு அரசியலை விட்டு ஒதுங்கவே கற்றுத் தந்துள்ளது. பல வருடங்களுக்கு முன் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் "படித்தவர்கள் கட்சி (பரீத்ரக்ஷன என்று நினைக்கிறேன்)" என்று புதிதாக தோன்றி போட்டியிட்டது. சென்னையில், திமுக, அதிமுகவை அடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்தது. அடுத்த நாளே மாதங்களில் கட்சி சுக்கு நூறாக உடைந்தது. இப்போதுள்ள சாமானிய மக்கள் கட்சிக்கும் அதேதான் நடக்கிறது. இதைத்தான் நம்மூரில் "படிச்சவன் பாட்டக் கெடுத்தான்" என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

உடனே யாராவது, "இவ்ளோ சொல்றியே, நீ?" என்று சண்டைக்கு வர வேண்டாம். ஏனென்றால் பதில் உங்களுக்கே தெரியும். சரித்திரத்தை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், உண்மையாகவே இந்த சமுதாயத்திற்காகவும், மக்களுக்காகவும் பாடுபட்டவர்களும், அவர்களை சார்ந்தவர்க்களும் நல்ல நிலையில் இருந்ததே இல்லை. இன்னமும் அவர்களின் சந்ததியினர் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் உள்ளனர். நம் மக்கள் அதைப் பார்த்துதான் "நமக்கெதுக்கப்பா வம்பு, நாம உண்டு நம்ம வேல உண்டுன்னு போனோமா வந்தோமான்னு இருக்கணும்" என்று வளர்க்கின்றனர். ஏதோ ஒரு திரைப்படத்தில் வருவது போல "இந்த சமுதாயத்துல உங்க எல்லோருக்காக கஷ்டப்பட ஒருத்தன் வேணும், ஆனா, அவன் அவன் உங்க வீட்டுல இருந்து வரக்கூடாது".

சொந்தக்கதை அது சோகக்கதை:

சென்னையில் நடந்த கட்டிட விபத்து நேரடியாக அங்கு நூறு பேரை பாதித்தது என்றால், மறைமுகமாக பல்லாயிரம் பேரை பாதித்துள்ளது. நான் அங்கு வீடு வாங்கவில்லை. ஆனால், வீடு வாங்கிய கட்டிடத்திற்கு அனுமதி பெறுவதில் சிக்கலாம். "நீ ஒழுங்காதான கட்டியிருக்க" என்று கேட்டால், "அதெல்லாம் சரிதான் சார், ஆனா, அது நொள்ள, இது நொட்டன்னு சொல்லி இப்ப காசு நெறைய கேப்பாங்க சார்" என்கிறார்கள். பளார் பளார் என்று அறைய வேண்டும் என்றுதான் தோன்றுகிறது, ஆனால் பதிவுதான் போட முடிகிறது.

குற்றம் செய்தவர்களை விட, குற்றம் செய்யத் தூண்டியவர்களுக்கு தண்டனை அதிகமாம். அதே போல, குற்றத்தைப் பற்றி தெரிந்தும் வெளியே சொல்லாமல் இருப்பதும் பெருங்குற்றமாம். அப்படிப் பார்த்தால் நாட்டில் எல்லார் பெயரிலும் குறைந்தது நான்கு வழக்காவது இருக்க வேண்டும்.