Wednesday, July 4, 2012

ஆன்-சைட் அமெரிக்கா 2

மக்களே!ஆன்-சைட் வந்த பிறகு நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதிகள் என்னவென்றால், நிறைய படங்களை  Stream செய்து பார்க்க பழகிக் கொள்ள வேண்டும். YouTubeல் கன்னா பின்னாவென்று (நல்ல) காட்சிக் கோப்புகளைப் பார்க்க பழகிக் கொள்ள வேண்டும். "எனக்கு அதிலெல்லாம் அவ்வளவா interest இல்லீங்க" என்பவர்கள், என்னைப் போல பதிவர் ஆக வேண்டும் (சும்மா, தமாசுக்கு). எதுவும் இல்லைஎன்றால், பிடித்து வைத்த பிள்ளையார் என்பார்களே, அது போல ஆக வேண்டும் வீட்டுக்கு வந்து விட்டால்.

மடிக்கணினி என்னிடம் இல்லாத காலம் அது. ஆன்-சைட் போய் விட்டு வந்த ஒரு நண்பனின் கணினியை பயன்படுத்துவேன். அவனோ, அலுவலகத்திலிருந்து திரும்பிய பின், அதை சீண்டவே மாட்டான். கேட்டால், "இத கட்டிக்கிட்டுதான் ஒரு வருஷம் குடும்பம் நடத்துனேன். இங்கேயுமா. வேண்டாண்டா சாமி" என்றான். இப்போது கல்யாணம் ஆகி விட்டது. மடிக்கணிணியே பரவாயில்லை, வேண்டாமென்றால் அமர்த்தி விடலாம். ஆனால், சரி விடுங்க பாஸ்.

இன்னொரு மிக முக்கியமான, முதல் முறை வரும்போது தவிர்க்க முடியாத விஷயம், பணப் பரிமாற்ற விகிதம் (Conversion). எதை எடுத்தாலும், மனம்  உடனே, அதை ஐம்பதால் பெருக்கி, நம்மூரில் அது எந்த விலை என்று பார்த்து, 'வேண்டாம்' என முடிவு செய்து விடும். நான் இது வரை பார்த்த வரை, நம்மூரை விட குறைந்த விலை பார்த்தது பெப்சி போன்ற குளிர் பானங்களில்தான். (இது கொஞ்சம் இல்ல ரொம்பவே அதிகம் என்கிறீர்களா, நான் தினசரி உபயோகம் பற்றி மட்டும் சொன்னேன்)

இன்னொரு கொடூரம், நம்மூரைப் போல, மேலே சூரியனைப் பார்த்து மணி என்னவென்று கணித்தீர்கள் என்றால், காலிதான். இப்போதுதான் கோடைக் காலம். காலை ஐந்தரை மணிக்கே சூரியன் பிரகாசமாக உதித்து விடும். "லேசா இருட்டு கட்டுதே, ஆறரை இருக்கும்" என்று என்னும்போது மணி ஒன்பதரைக்கு மேல் ஆகி இருக்கும். இது அப்படியே தலை கீழாக பனிக்காலத்தில் இருக்கும் என்றனர். முடியலை.

நேர மண்டலம். இங்கு மட்டும் மொத்தம் நான்கு நேர மண்டலங்கள் உள்ளன. சரி, நம்ம நண்பன் ஒருத்தன் அமெரிக்காவில் இருக்கானே, என்று இரவு பத்து மணிக்கு அழைத்தால், அவனோ "டேய், இங்க மணி பனிரெண்டுக்கு மேலாச்சுடா, இது Eastern டா, தூங்க விடுடா" என்று கத்தினான். என்ன கொடுமை சரவணன் இது

இது பற்றி, நமது சக பதிவர் பாலா, விலாவரியாக புட்டு, புட்டு வைத்துள்ளார். அவரது "பிரமச்சாரிகளுக்கு" என்ற பதிவு மிக மிக பிரபலமானது. கல்யாணத்திற்கு முன், வீட்டில், அவர் சொன்னது போலவே, பல பிட்டுகளை போட்டுள்ளேன். சரி விடுங்க. அவரது ஆன்-சைட் பதிவில், கடைசியில் உள்ள பன்ச், "ஆன்சைட்ன்றது பப்ளிக் டாய்லெட் மாதிரி, உள்ள இருக்கறவன் வெளிய வரனும் நெனப்பான், வெளிய இருக்கறவன் உள்ள போகனும் நெனப்பான்." இதை மட்டும், அவரது உத்தரவின்றி பயன்படுத்திக் கொள்கிறேன். மன்னிப்பாராக!

கிளம்புவதற்கு முன், அனைவருமே சொல்வது "என்னால அங்க ரொம்ப நாள் எல்லாம் இருக்க முடியாது. எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் வந்துடுவேன்" என்பதுதான். சொன்ன அனைவருமே, சென்ற ஒரு வருடம் கழித்து, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி, இன்னும் தங்கிக் கொண்டே இருப்பர். பணம். வந்த பிறகு, கையில் புரளும் பணத்தைப் பார்த்தவுடன், "இன்னும் கொஞ்ச நாள், இன்னும் கொஞ்ச நாள்" என்று மனம் அரிக்க ஆரம்பித்து விடும் (இது எனக்கும் பொருந்தும்). குடும்பத்துடன் இங்கு வந்தவர்களோ, (மனைவி, குழந்தை, பார்த்துக்கொள்ள தனது தாய், தந்தை) கொஞ்ச நாள் சமாளிக்க முடியும். பின்? கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் ஒரு வாழக்கை முறையிலும், பின் ஓரிரு வருடங்கள் வேறொரு வாழ்க்கை முறையிலும் வாழ்ந்து விட்டு, இரண்டையும் விட முடியாமல் துன்பப் படுபவர்கள் நிறைய.

பெற்றவர்கள் இருக்கும்போது எங்கேயோ போய் விட்டு, இல்லாத போது "ஐயோ கடைசி நேரத்தில பக்கத்துல இல்லையே" என்று கதற வேண்டியது. உறவினரின் நண்பருக்கு நடந்தது எனக் கேள்விப்பட்ட விஷயம். அவரது அம்மா, அமெரிக்காவில் அவருடன் இருக்கும்போது திடீரென இறந்து விட்டார். ஊருக்கு செல்ல நிறைய பணம் கட்ட வேண்டியிருந்தது. அதைக் கட்டுவதற்குள், உடல் எடுத்துச் செல்ல முடியாத நிலையில் உள்ளது, எங்கே எரிக்க வேண்டும் என நிர்ப்பந்தம். வேறு வழியின்றி, அங்கேயே எரித்து விட்டு, அஸ்தியோடு நின்றாராம்.

எனது நண்பன் ஒருவன், அமெரிக்காவில் இருந்தே Skypeல் அவனுடைய நிச்சயதார்த்தத்தை செய்தான். அதை பெருமையாக வேறு பிரபலப்படுத்தினான். இங்கு, குடியுரிமைக்கு காத்திருக்கும் ஒருவரிடம் பேசும்போது சொன்னார். "பணம், சொந்த ஊர்ல பேரு. லீவ்ல ஊருக்கு போனோம்னா, கெடக்கிற மரியாதையே வேற. நாம ஊர்லயே இருந்தோம்னா, அட அவனா, இங்கதான்பா இருக்கான். எப்போ வேணா பாத்துக்கலாம் என்பார்கள்." நாம் எதை இழக்கிறோம் என்பது இழந்த பின்தான் தெரியும். நாம் சந்தோசமாகத்தான் இருந்தோம் என்பது அது இல்லாத போதுதான் உரைக்கும்.

சென்னையில் இருந்து, ஏதாவது என்றால் ஊருக்கு செல்ல, குறைந்த பட்சம் ஏழு மணி நேரமாவது ஆகிறது. அதற்குள் ஏதாவது நடந்து விடுமோ என மனது துடிக்கிறது. என் அம்மா, சென்னையில் இரண்டு நாட்கள் இருந்து விட்டு, "என்ன ஊரடா இது, எப்படித்தான் இருக்கீங்களோ, முடிஞ்சளவு ஊர்ப்பக்கம் ஏதாவது வேலை பாத்து வந்திரு" என்றார். இதற்குதான், அப்போதே மாடு மேய்க்க போயிருக்க வேண்டும். என்ன செய்ய.

இவ்வளும் புலம்பி விட்டு, வாய்ப்பு கிடைத்தால் நானும் இங்கு இருப்பேன். என்ன செய்ய. ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும். எதை இழந்து எதைப் பெற வேண்டுமென்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் ஒன்று, எதை செய்தாலும் "ஒரு வேளை, அந்த முடிவையே எடுத்திருக்கலாமோ" என்று புலம்பத்தான் செய்வோம். மனித மனம்.

4 comments:

  1. Can't agree with all your points. But, most of the points are correct only. Felt same experience in many things. Flow of writing is good.

    ReplyDelete
  2. தினமலர் - வாரமலரில் வந்தது. உங்களுக்காக..

    http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=10960&ncat=2

    \\பணமும், பதவியும் சொகுசை தரலாம். ஆனால், நிம்மதியை தர முடியாது என்பர். இது பற்றி யாரும் அதிகமாய் சிந்திப்பதில்லை. பட்டு மெத்தையில், "ஏசி'யில், விலை உயர்ந்த உடை, உடல் முழுக்க நகைகள், எதிரே எல்.இ.டி., "டிவி' கையருகே ருசியான உணவு வகைகள் மற்ற வஸ்துக்களுடன் படுக்கைக்கு போகலாம்.
    எல்லாமிருந்தும் தூக்கம் வரவில்லை... தூங்க முடியவில்லை என்றால், இவற்றால் என்ன பயன்? தரையில் படுப்பவன், உடனே தூங்கி விடுகிறான். பட்டு மெத்தையில் தூங்க முடியவில்லை என்றால், இவை இரண்டில் எது உசத்தி?
    வெளிநாட்டு மோகம், பலரையும் இந்த அவஸ்தைக்கு ஆளாக்கியிருப்பது உண்மை.
    கல்வி, பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ளவும், வசதிகளைத் தேடிக் கொள்ளவும், வெளிநாடு செல்லலாம்; தப்பில்லை. எந்த நிலைக்கு போனாலும், எத்தனை உயரத்தைத் தொட்டாலும், நாம்... நம் மண், நம் கலாசாரம், பாரம்பரியம், நாம் நடந்து வந்த பாதை எல்லாம் மாய்ந்து விடக் கூடாது.
    வெளிநாடுகளில் வசதி வாய்ப்புகள், சொகுசு எல்லாம் அதிகமிருக்கலாம். அவை, நமக்கு நிரந்தரமல்ல என்பதும் நிச்சயம். அதை மறந்து, சொகுசு எனும் போதைக்கு அடிமையாகும் போது, பிரச்னைகள் ஆரம்பித்து விடுகின்றன//

    ReplyDelete
  3. அமெரிக்க தமிழன்July 10, 2012 at 1:38 AM

    நீங்க எந்த பக்கம் பேசறீங்கண்ணே புரியலையே??

    ReplyDelete
  4. \\அமெரிக்க தமிழன் said...
    நீங்க எந்த பக்கம் பேசறீங்கண்ணே புரியலையே??\\

    கமல் பணியில் 'தெரியலேப்பா'. ரஜினி பாணியில் 'எது சரியோ அது பக்கம்'.
    நான் கமல் ரசிகன். நீங்கள்?

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..