Thursday, April 24, 2014

தவறுக்குக் காரணம் பெற்றோர்களே!! மாணவர்களே!!

எத்தனை நூற்றாண்டுகள் (முன்னோக்கி சென்றாலும், பின்னோக்கி சென்றாலும்) வாதாட ஒரு நல்ல தலைப்பு இதுதான். மன்னராட்சி முதல் மக்களாட்சி வரை, இந்த இரு பிரிவினருக்குமே பிரச்சினைதான். இருந்தாலும், இந்தப் பதிவு, என்னுடைய முந்தைய பதிவின் தொடர்ச்சியாக, கல்வி பற்றி மட்டுமே இடுகிறேன், முடிந்தவரை.

இந்த பிரச்சினைக்கு முதலும், முதன்மையானதுமான காரணம் தலைமுறை வித்தியாசம். முன்பெல்லாம் ஒரு தலைமுறை என்பது 33 வருடங்கள் என்று சொல்வார்கள், இப்போதெல்லாம் அது 33 நிமிடங்கள்/நொடிகளாக மாறி விட்டது. கடந்த ஆண்டு கல்லூரி முடித்து, வேலைக்கு போக ஆரம்பித்த சொந்தக்கார பையன், அவனை விட இரண்டு வயது சிறிய, கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவனிடம் "இது என்ன புது கேம்?, எப்ப வந்துச்சு?' என்று கேட்க, அவன் சொன்னான், "நீயெல்லாம் பழைய ஆளுடா, போ போ".

உடன் வேலை பார்க்கும் ஊழியர், தன்னுடைய 4 வயது மகனுக்கு இப்போது பள்ளியில் (LKG) சேர்த்துள்ளார். சாப்பிடும்போது, அடுத்து அழியப்போகும் ச்சே சேர்க்கப் போகும் எங்களைப் போன்ற நான்கைந்து பேர் விசாரித்தோம்.

"எவ்ளோ ஆச்சு?"

"டெபாசிட், டொனேஷன், புக் பீஸ், பஸ் பீஸ் அது இதுன்னு கிட்டத்தட்ட 2 லட்சம் ஆச்சு"

"அடேங்கப்பா, நாம காலேஜு படிச்சி முடிச்ச 16 வருஷ படிப்புக்கே இவ்ளோ ஆகலையேப்பா, நானெல்லாம் இங்க சேத்த மாட்டேன்பா, ஊர்ல கொண்டு போயி ஏதாவது கவர்ன்மெண்டு ஸ்கூல்ல தள்ள வேண்டியதுதான்"

அவர் நக்கலாக, "நானும் இப்படித்தான் பேசுனேன், சும்மா விசாரிச்சதுக்கே, சொந்தக்காரன், பக்கத்து வீட்டுக்காரன் எல்லாம் போட்ட போடுல, எங்க வீட்டுல அரண்டு போயி, சமச்சீர் எல்லாம் சும்மா, கண்டிப்பா CBSEல தான் போடணும், இந்த ஸ்கூல்னா பரவாயில்லன்னு சொல்லி, அதுக்காக நாயா அலைஞ்சு, மினிஸ்டர் லெட்டெர் வாங்கி, சேத்துருக்கேன், உனக்கும் வரும் பார். ஆள் நம்ம கைவசம் இருக்கு, கண்டிப்பா என்கிட்டே வந்து கேப்ப பார்" என்றார்.

அவர் இன்னும் சொன்ன நிறைய விஷயங்களைக் கேட்டபோது 'குங்குமப் பொட்டு கவுண்டர்', 'அபியும் நானும்' படத்தில் வருவதெல்லாம் சும்மா என்பது புரிந்தது. அதை விட்டு விடுவோம்.

நானும் யோசித்துப் பார்க்கிறேன், என் சொந்த ஊரில் (என் தாத்தா, அம்மா, நான் அனைவரும் படித்த, வீட்டிலிருந்து 10 அடி மட்டுமே தள்ளி உள்ள) 'ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்' சேர்க்க வேண்டும் என்று நான் சொல்லும்போதெல்லாம், என் அம்மாவும், மனைவியும் நக்கலாக சிரிக்கிறார்கள். "அங்கெல்லாம் இப்ப யாரு படிக்கிறா? இன்னும் நாலஞ்சு வருஷத்துல இழுத்து மூடிருவாங்க, இன்னொன்னு தெரிஞ்சுக்கோ, ஊருக்குள்ள டவுன் பஸ் வருதோ இல்லையோ, ஸ்கூல் பஸ் 10 வருது. ஊருக்குள்ள நம்மாளுங்க புள்ளங்க எல்லாம் வெளி ஸ்கூல்லதான் படிக்கிறாங்க, தெரிஞ்சுக்க" என்கிறார்கள்.

பொதுவாக, இன்னும் எல்லோருடைய அடி மனத்திலும் 'கல்வி' முக்கியம் என்பது படிந்திருந்தாலும், அது கற்பிக்கப்படுவதற்கும், திணிக்கப்படுவற்கும் வித்தியாசம் தெரியாமலே உள்ளனர். அந்தப் பள்ளிகளில் விளையாட்டோ, நீதி போதனை வகுப்போ இல்லை என்று சொன்னால், "வீட்டுக்கு வந்து குதிக்கத்தானே போகுது, நீதிக் கதை எல்லாம்தான் இப்ப சுட்டி டிவியிலே சொல்றாங்களே" என்கிறார்கள். இதைத்தாண்டி "படிப்பைத் தாண்டி குழந்தைக்கு ஏதாவது" என்றவுடனே, "ம், கண்டிப்பா, பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ், அடுத்த வருஷம் கராத்தே, அப்புறம் கிரிக்கெட் கூட" என்கிறார்கள்.

"அவனுக்கு என்ன வரும்" என்றால், "சின்னப் பையன், இப்ப என்ன தெரியும், எல்லாம் தெரிஞ்சுக்கிட்டும்" என்கிறார்கள். இது ஆரம்பக் கல்விக்காக. அதன் பின்னர் அனைவரின் லட்சியமும் "MBBS லட்சியம், BE நிச்சயம்" (தேர்தல் உபயம்) என்று அடுத்த இலக்கை எய்கின்றனர். "சரிங்க, இப்பவாவது, அவனுக்கு என்ன ஆகணும்னு கேளுங்க" என்றால், "ரெண்டும்கெட்டான் வயசு, நாமதான் சொல்லணும்" என்பார்கள், அதைத்தாண்டி பையனோ/பெண்ணோ தன் விருப்பத்தை தெரிவித்தால், காரமாகவோ அல்லது பதமாகவோ "அந்த மாமாவும் இப்படித்தான் சொல்லி, கண்டத படிச்சு, இப்ப பாரு சும்மா சுத்தறான், எல்லாரும் அவன திட்றாங்க, இந்த மாமா பாரு, சொன்னபடி படிச்சு அமெரிக்காவுல நல்ல வேலைல இருக்காங்க" என்று குழப்புவர்.

ஒரு விளம்பரம்:

[ஊரில் நன்றாக படித்து, பொறியியல் முடித்து இரண்டு முறை அமெரிக்காவும் போய் விட்டு வந்தாகி விட்டது. கல்யாணத்திற்கு முன் மாதம் ஒரு முறை ஊருக்கு போவேன். இப்போது இரண்டு/மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்றாகி விட்டது. ஊரிலும், சொந்தத்திலும் என்னை ஒரு உதாரணமாக காட்டியுள்ளனர். என் நண்பன், சுமாராக படித்து, ஊரிலேயே இளங்கலை முடித்து, தோட்டம், சிறு சிறு வேலை பார்த்து, கொஞ்சம் அப்பா சொத்தை அழித்து, ஒரு நான்கு வருடங்கள் அனைவரின் சாபத்தையும் வாங்கி, இப்போது இரண்டு லாரி, கடை, தோட்டம் என்று சொந்த ஊரிலேயே ஜம்மென்று வாழ்கிறான். இருந்தாலும், இன்னும் அவன் வீட்டில், நான் சென்று வந்தால், என்னைக் காட்டி அவனுக்கு குத்தல் பேச்சு விழும், அவன் என்னைப் பார்த்து பொறாமைப் படுகிறானா என்று தெரியாது, ஆனால், எனக்கு அவனைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது]

சரி விஷயத்திற்கு வருவோம். பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்கு அறிவைக் கொடுக்க வேண்டும் என்று பள்ளிகளில் சேர்த்தவில்லை. பிள்ளைகளை முதலீடு செய்கிறோம். இவ்வளவு பணம் கட்டி சேர்த்தால், குறைந்த பட்சம் இவ்வளவு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும், இந்த சம்பளத்தில் வேலை வாங்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம்.

சரி பெற்றோர்களே, அந்தப் பள்ளியில் சேர்த்தால், மாநில அளவில் முதலிடம், அட குறைந்த பட்சம் அதிக மதிப்பெண்கள் எடுத்து நல்ல பொறியியல் கல்லூரியில் இடம் வாங்கி விடலாம் என்ற கணக்கு சரிதான். கடந்த பத்து வருடங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் முதலிடம் எடுத்த மாணவர்கள், தற்போது என்ன செய்கிறார்கள் என்று தெரியுமா? எனக்கும் தெரியாது, ஆனால், கண்டிப்பாக இந்தியாவிலோ, இல்லை வெளி நாட்டிலோ, எங்கிருந்தாலும் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக இருப்பார்களே தவிர எதையும் சாதித்திருக்க மாட்டார்கள், சாதிக்கவும் இல்லை. ("தேவை இல்லேன்றேன், எதுக்குன்றேன்" என்கிறார்கள்).

மாணவர்களோ, இப்போதெல்லாம் வைத்தால் குடுமி, அடித்தால் மொட்டை என்ற மனநிலையில்தான் உள்ளனர். எனக்கு பிடித்ததை நீ கொடுக்கவில்லை என்றால் உனக்கு பிடித்ததை செய்ய மாட்டேன் என்கின்றனர். முன்பெல்லாம் குறைந்த பட்சம் இரண்டாம் ஆளுக்குத் தெரியாமல் தப்பு செய்ய முடியாது. பெட்டிக் கடையில் சிகரெட் கேட்டால் (கடமைக்காகவாவது) "யாருக்குடா?" என்று கேட்பார்கள். அதனால் ஓரளவுக்காவது பயம் இருந்தது. இப்போதெல்லாம், 'அதெல்லாம் அசால்ட்டுடா" என்கிறார்கள். எப்படி தெரியாமல் தப்பு செய்வது என்று இணையத்தில் தேடுகின்றனர். இன்னும் நிறைய சொல்லலாம். இன்னொரு பதிவில்.

பெற்றோர்களே, இந்த கல்வி முறை என்ன கற்றுக் கொடுத்துள்ளது தெரியுமா? சிக்னலில் ஆள் இல்லை என்றால் தாண்டிப்போ, சாலையில் யாராவது அடிபட்டுக் கிடந்தால், பரிதாபப்பட்டு ஓரமாக செல், கண் முன்னே தப்பு நடந்தால் நமக்கெதுக்கு வம்பு என்று கண்டு கொள்ளாதே, முடியவில்லையா பேஸ் புக்கில் பகிர்ந்துடு அல்லது உன் வலைப்பூவில் எழுதிடு (நீ யாரென்று சொல்லாமல்). தொடரும் போடலாமா என்று தெரியவில்லை. ஆனால், இன்னொன்று போடலாம். 'முடியாது'

Wednesday, March 26, 2014

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

அலுவல் பணிகள் காரணமாக வெளியூரில் சுற்ற இருப்பதால் அவசரத்திற்காகவும், கணக்கு காட்டவும், இந்தப் பிட்டுப் பதிவு இடப்படுகிறது.

தேர்தல் 2014:

ஒரு வியாழன் அன்று தேர்தல் வருகிறது, அனைவரும் வெள்ளிக்கிழமை விடுமுறை எடுத்து, தங்களது ஜனநாக கடமையை செய்யத் துடிக்கின்றனர். நானோ, ஊரில் கோயில் திருவிழா என்று இரண்டு நாள் விடுமுறை எடுத்ததால், என்னால் எனது ஜனநாயக கடமையை இந்த முறை செய்ய முடியாமல் போய் விடும் போல உள்ளது. ஆதார் அட்டைக்காக அனைவரது கை ரேகையையும் எடுத்தார்களே, அதைப் பயன்படுத்தி, எந்த வாக்குச்சாவடியாக இருந்தாலும், நம் கை ரேகை வைத்தால், நம்முடைய தொகுதி வேட்பாளர்கள் சின்னம் வந்து 'தொடு திரை' மூலம் நமது வாக்கை பதிவு செய்வது போல வைக்கலாமே. இதன் மூலம், இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும், அனைவரது வாக்குகளும் பதிவாகுமே? சிந்திப்பார்களா? அல்லது நான் சர்வாதிரிகாரியாக மாறித்தான் நடக்குமா, தெரியவில்லையே. எது எப்படி இருப்பினும், நான் அளிக்கும் வாக்கு NOTAவிற்குத்தான். பரவாயில்லை. போன முறை நான் 49'O' என்று சொன்னவுடன், என்னை வளைத்துக் கட்டி தொலைத்து விட்டனர். இந்த முறை தவறுகிறது. பரவாயில்லை. அடுத்த முறை விட மாட்டேன்.

விமர்சனம்:


அவ்வளவாக எந்தப் படமும் பார்க்க முடியவில்லை. வீட்டில் தங்கமணி, குழந்தை இருவரையும் சமாளிப்பதே பெரிய படமாக எடுக்கலாம் போல. தவறிப் போய் பார்த்த கோலி சோடா படம் கூட, நன்றாக இருந்தாலும், 'இருக்க எடம் கொடுத்தா' என்ற பழமொழியை நினைவூட்டியதால், கவரவில்லை.




தெகிடி: லக்கி சொன்னது போலவே, ஒரு ராஜேஷ் குமார் கதை படிப்பது போலத்தான் இருந்தது. படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், இடைவேளையும், இறுதிக் காட்சியையும் ஒரே மாதிரி வைத்தது. ஆனாலும், அந்த முடிவு, 2008ல் வந்த ஷெர்லக் ஹோம்ஸ் படம் போல உள்ளது. பார்ப்போம் அந்த முகமறியா வில்லன் யாராக இருக்கும் என்று. (இரண்டாம் பாகம் வந்தால். தயவு செய்து வேறு ஏதாவது மொக்கை படம் எடுத்து. தெகிடி-2 என்று எங்களை ஏமாற்ற வேண்டாம். வில்லாவில் பட்டதே போதும்).



த்ரிஷ்யம்: திடீரென தமிழ்நாட்டில், 'கமல் ஹாசன் நடிக்கவிருக்கும்' என்று இதை திரையிட ஆரம்பித்து விட்டனர். எத்தனை நாள்தான் தமிழ்ப் படமே பார்ப்பது (எத்தனை நாள்தான் நல்ல பிரதிக்கு காத்திருப்பது?!?!) என்று போய்ப் பார்த்து விட்டேன். பற்றி சொல்வதற்கு முன்னால், ஒரு தெனாலி ராமன் கதை படித்து விட்டு வாருங்கள்.

இந்த நகைச்சுவையான கதையை, ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சினையோடு இணைத்தால், அதுதான் 'த்ரிஷ்யம்'. அந்தப் பிரச்சினையில் இருந்து, தனது குடும்பத்தைக் காப்பாற்ற, இந்தக் கதையைப் பயன்படுத்துவதாகவே எனக்கு தோன்றியது. அதிலும் குறிப்பாக, பிணத்தைத் தோண்டி எடுக்கும் காட்சி. (அதற்கடுத்த இறுதிக் காட்சியை என்னால் யூகிக்க முடிந்தது, அட நெஜமாத்தாங்க. ஏனென்றால், படத்தின் ஆரம்பமே அங்குதானே ஆரம்பிக்கிறது)

இந்தப் படம் ஏன், மற்ற த்ரில்லர் வகைப் படங்களில் இருந்து தனித்து நிற்கிறது என்றால், எந்த 'த்ரில்லர்'' படமாக இருந்தாலும், இறுதியில் முடிச்சை அவிழ்க்கும்போது திடீரென புதுக் கதை வரும். (அதே கண்கள் படம் தவிர, ஏனென்றால், அதில் அந்தக் கதையை முன்பே அசோகன் சொல்லி விடுவார்).

ஆனால், இந்தப் படத்தில், கதை ஒரே நேர்க்கோட்டில் செல்கிறது, தன்னை அசிங்கமாக படம் எடுத்தவனை கொல்லும் மகள். அந்த பிணத்தை மறைக்கும் தாய், அதைப் பார்த்து விடும் இளைய மகள். கொலை செய்யப்பட்டவன் காவல் துறை உயர் அதிகாரியின் பையன். காவல்துறை விசாரணையில் இருந்தும், கொலைக் குற்றத்தில் இருந்தும் தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் குடும்பத் தலைவன். எப்படி என்பதுதான் படமே.

மோகன்லால் ஒரு அமைதியான,அடக்கமான குடும்பத் தலைவனாக வருகிறார். மகளை ஒரு காவல் துறை அதிகாரி அடிக்கும்போது கூட, , தடுக்கவே முயற்சி செய்கிறார். தமிழில்,அது கமலாக இருந்தாலும், தம்பி ராமையாவாக இருந்தாலும், திருப்பி ஒரு அடியாவது அடித்தால்தான் நமக்கு திருப்தியாக இருக்கும். பார்ப்போம்.

திரிஷ்யம் - கண்டிப்பாக பாருங்கள். சப் டைட்டில் இல்லாமலேயே படம் புரிந்தது.

புத்தகம்:

கடந்த இரண்டு வருடங்களாக புத்தக கண்காட்சிக்கு செல்லவில்லை. என்ன புத்தகம் கடைசியாக படித்தேன் என்று யோசித்தால், 'ஆனந்த விகடன்' கூட நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. கல்யாணம் ஆகி விட்டால், மூளை மங்கி விடும் என்று படித்தது உண்மைதான் போல.

6174 என்ற புத்தகத்தைப் பற்றி அதிஷா எழுதியதைப் படித்தவுடன், அதை வாங்க வேண்டுமென்று தோன்றியது. இன்னமும் நினைவில்தான் உள்ளது. வாங்கலாம் என்றால், விலையைப் பார்த்து விட்டால், தங்கமணியிடம் இருந்து கொமட்டில் ஒரு குத்து விழும். 'அதே காசுக்கு பொடவை கேட்டா, 1008 சாக்கு சொல்ல வேண்டியது, புத்தகம் ஒரு கேடா' என்று. சரி. காலம் கனியும் வரை காத்திருப்போம்.

வீடு:

இந்த சென்னைப் பட்டணத்தில், எனக்கு ஒரு ஆகாயத்தில் (நான்காவது மாடி) காணி நிலமும், அதிலே ஒரு வீடும் கட்டித் தருவதாக சொல்லி, நான் காசையும் கட்டி, அவர்கள் வீட்டையும் கட்டி விட்டார்கள். சரிடா, சாவியைக் கொடுடா, என்றால், அரசுக்கு இன்னும் 'முக்கியமான' பேப்பர் போகவில்லை, என்று இழு இழுவென இழுக்கிறார்கள். இப்போது என்னடாவென்றால், தேர்தல் வந்து விட்டது, இன்னும் ஒரு ரெண்டு மாசம்தான் சார், ஒரு வருஷம் பொறுத்தீங்க, இன்னும் கொஞ்ச நாள் பொறுங்க சார்' என்று சொல்கிறார்கள். நண்பனிடம் புலம்பினால், அவன் சொன்னான்' 'சரி விடுறா, எனக்கு இந்தா இந்தான்னு சொல்லி மூணு வருஷம் ஆச்சு, இன்னும் கொடுக்கல' என்றான். சரி, அவனப் பாத்து ஆறுதல் அடஞ்சுக்குவோம்னு விட்டுட்டேன்.

பின்னூட்டம்:

யாராவது, ஏதாவது போட்டா உண்டு, அதுவம், இந்த பதிவு சம்பந்தமா இருந்தா பரவால்ல. இந்தப் பதிவுல 10 பின்னூட்டம் இருந்தாலும், அதுல ஒன்னு கூட பதிவுக்கு சம்பந்தமே இல்ல. (அதுல பாதிக்கு மேல நானே போட்டது). அந்த மாதிரி இதுக்கு இல்லாம இருந்தா பரவால்ல.

Wednesday, February 19, 2014

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

போன பதிவோட தொடர்ச்சியாத்தான் ஒரு பதிவு எழுதனும்னு இருந்தேன். ஆனா, ரொம்ப சீரியஸா இருக்கும் அப்டின்னு (இதான் செம காமெடியே என்கிறீர்களா) ஒரு சின்ன பிட்டு போட்டு விட்ரலாமுன்னு. 

சிவிகை விருதுகளின் தொடர்ச்சியாக இன்னும் மூன்று விருதுகளை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.

'உண்மையிலேயே ரொம்ப தைரியந்தான்' சரவணன்:



இந்த விருதை எங்கேயும் எப்போதும் சரவணனுக்கும் சேர்த்தே அளிக்கிறேன். சட்டக்கல்லூரி கலவரத்தைக் கையில் எடுத்து 'இவன் வேற மாதிரி' என்று காட்டியதற்காக.

'சிறந்த மேலாளர்' மணி ரத்னம்:



எந்த ஒரு நிறுவனத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு வேலை செய்யும் யாராக இருந்தாலும் சொல்லுவது "என் மேனேஜருக்கு ஒன்னும் தெரியாது, நாங்க செய்யற வேலைய வச்சே பொழப்ப ஒட்டிக்கிட்டிருக்கார்' என்று சொல்லுவார்கள். 

மேலாளர் பணியைப் பொருத்தவரை வேலை செய்யத் தெரிய வேண்டியதில்லை, என்ன வேலை, எப்படி வேலை வாங்க வேண்டும் என்று மட்டும் தெரிந்தால் போதும். மணி அந்த கால MBA அல்லவா. அவரது படங்களில், அதில் வேலை செய்தவர்களின் அதிகபட்ச திறமை அந்தப் படத்தில் இருக்கும். இசை, ஒளிப்பதிவு, நடிப்பு, என்று அனைவரின் திறமையையும் உறிஞ்சி எடுத்திருப்பார். ஆனால், தனது வேலையில் சொதப்பியிருப்பார். எனவே, அவர் சிறந்த மேலாளர்.

'பழைய சோறு' ஜில்லா, வீரம்:



ஊரில், சோறு நிறைய மீதி ஆகி விட்டது என்றால் என்ன செய்வார்கள் என்றால், கொஞ்சம் புளியிலும், எழுமிச்சை, தயிர், தக்காளி என்று கிளறி விடுவார்கள். அது இன்னும் இரண்டு வேளைக்கு நன்றாகவே இருக்கும். முன்பெல்லாம், எங்கேயாவது வெளியூர் சென்றால் 'கட்டிசோறு கட்டிக்கொண்டு' போவார்கள். 

இதே போல ஒரு பழைய கதையை வைத்து, வேறு வேறு சுவைகளில் கிண்டித் தந்துள்ளனர். பக்கத்து கேரளாவில் த்ரிஷ்யம், மெமரீஸ், மும்பை போலிஸ் என்று பிரியாணியாக போட, இவர்களோ மொக்கை போடுகிறார்கள்.

இரு படங்களிலும், நாயகனை விபத்துக்கு உள்ளாக்குகின்றனர், கொலை செய்ய வரும் அல்லக்கையை உடைத்து யார் கொல்ல அனுப்பியது அல்லது யாரைக் கொல்ல அனுப்பியது என்று கண்டு பிடிகிறார்கள். தனக்கு நெருக்கமானவர்கள் காரில் தூங்குவதால், தூக்கம் கலையாமல் சண்டை போடுகிறார்கள். இரண்டிலும் ஒரு உருப்படியான காட்சி கூட இல்லை. எல்லாம் நம் தலை எழுத்து.

இளையராஜா vs ரஹ்மான்:

மக்களே யாரும் கோபப்பட வேண்டாம். பொறுமை, பொறுமை. அமைதி ஆகி விட்டீர்களா. சரி, இந்த மூன்றாம் கோணம் பதிவில், ஒரு குறிப்பிட்ட நிலைமையை (சிச்சுவேசன், ஸ் அப்பா) எடுத்து, அதில் ராஜா எவ்வாறு இசை அமைத்துள்ளார், ரஹ்மான் எவ்வாறு அமைத்துள்ளார் என்று சொல்லியிருப்பார். திட்டோ, பாராட்டோ, அந்தப் பதிவில் போய் இடவும்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், தமிழில் 'தாண்டியா' பாட்டு என்றால் முதலில் நினைவுக்கு வருவது 'காதலர் தினம்' படத்தில் வரும் 'தாண்டியா ஆட்டமும் ஆட', ஏனெனில் பாடலிலேயே அந்த வரி வருகிறது,



அது இல்லாமல் நினைவுக்கு வரும் இன்னொரு பாடல் 'கலைஞன்' படத்தில் வரும் 'தில் பர் ஜானே' என்ற பாடல்.



இவை இரண்டில் எது சிறந்தது என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். அது உங்கள் விருப்பம். ஆனால், இவை தவிர வேறு ஏதாவது உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லலாம்.

மலையாள த்ரில்லர்கள்:

கடந்த வருடம் சிறந்த த்ரில்லர் படங்கள் வந்தது, எனக்கு தெரிந்து மலையாளத்தில்தான். ஒவ்வொன்றும் அட்டகாசம்.

மும்பை போலிஸ்: படத்தின் இறுதிக்கு முன்னே, ஒரு காட்சியில் கொலையாளியை யூகித்து விட்டாலும் (பிரித்விராஜ் கேமரா மூலம் கொலை நடந்த இடத்தில் கொலையாளி ஓடி வரும் வழியைப் பார்ப்பது), கொலைக்கான காரணம் எதிர்பாராதது. 

மெமரீஸ்: கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், இதுவும் அட்டகாசமான படம்தான். இதில் கொலையாளியின் பெயர், ஏன் கொலை செய்கிறான் என்றெல்லாம் தெரியும், ஆனால் ஆள் யார் என்பதுதான் ஆட்டமே.

இன்னும் 'த்ரிஷ்யம்' பார்க்கவில்லை. இது மலையாளத்தில் இரண்டாவது சிறந்த த்ரில்லர் என்றும், முதலில் 'யவனிகா' என்ற படமும் உள்ளது என்று படித்தேன். அதையும் தரவிறக்கம் செய்துள்ளேன். பார்த்து விட்டு சொல்கிறேன்.

பொதுவாக இதுவரை எனக்கு வாய்த்த திரில்லர் படங்கள் மூன்று வகை. எல்லோருக்கும் இதுதான் என நினைக்கிறேன்.

படம் முழுக்க ஒரு வித பரபரப்பை உண்டாக்கி, அதைப் பூர்த்தி செய்யும் விதத்தில் முடிவு இருக்கும் (தமிழில் பிட்சா தவிர வேறு எதுவும் தோன்றவில்லை. மற்ற மொழிகளில் என்றால் கஹானி, மும்பை போலிஸ், லுசியா).

படம் முழுக்க ஒரு வித பரபரப்பை உண்டாக்கி, பொசுக்கென்று சப்பையாக முடிப்பது (நிறைய படங்கள், ராம், கலைஞன்)

படம் இழு இழுவென இழுத்து விட்டு, கடைசியில் படாரென ஒரு முடிச்சு அவிழ்ப்பது (பொம்மலாட்டம் அந்த கடைசி காட்சிக்காகவே அவ்வளவு மொக்கையைத் தாங்கிக் கொண்டேன், சமீபத்தில் தகராறு).

இது தவிர, சில படங்கள் சம்பந்தமே இல்லாமல் கடைசியில் டிவிஸ்ட் என்று சொதப்பலுக்கு மேல் சொதப்புவது (சுட்ட கதை, மங்காத்தா, வாமனன்)

அவ்வளவுதான் பிட்டு.. அடுத்து ஒரு சீரியஸ் பதிவு, அட சிரிக்காதீங்க..

Sunday, January 12, 2014

நாமக்கல் கல்விப் பண்ணைகள்

இதே தலைப்பில் ஏற்கனவே தமிழ் ஹிந்துவிலும், முரளிக்கண்ணன் வலைப்பதிவிலும் வந்து விட்டது. இருந்தாலும், நானும் அந்த ஊரைச் சேர்ந்தவன் என்ற முறையில் என் கருத்தையும் கூறுகிறேன். இதில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் என்னுடைய சொந்த அனுபவக் கருத்துக்களே. ஆதாரங்கள் எதுவுமில்லை.

நாமக்கல்லில், தில்லைபுரம் என்ற பகுதி உள்ளது. அரசு பள்ளிகளுக்கு மிக அருகே உள்ள அந்த பகுதி கிட்டத்தட்ட 2001 வரை 'டியுஷன்புரம்' என்றே அழைக்கப்பட்டதாகும். அதுவரை ராசிபுரம் மற்றும் திருச்செங்கோட்டில் இரண்டு கல்விப் பண்ணைகள் இருந்தன. அங்கே 10ம் வகுப்பு முடித்த உங்களது குட்டிக் கோழிகளை ('அதை' அடிச்சா 'A' சான்றிதழ்தான்) அங்கே விட்டால், இரண்டு ஆண்டுகள் முடிவில், நுழைவுத்தேர்வும் முடித்து கண்டிப்பாக ஓரளவு நல்ல கொழுத்த பிராய்லர் கோழியாக மாற்றித் தருவார்கள்.

அதுவரை நாமக்கல் நகரில் தலை சிறந்த பள்ளிகளாக விளங்கியவை, நம்புங்கள் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் தான். யாரும் மாநில அளவில சாதிக்கவில்லை என்றாலும், நல்ல தேர்ச்சி விகிதம், சராசரியாக நல்ல மதிப்பெண்கள் என்ற அளவில் இருந்தன.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அப்போது முதன் முதலாக சன் தொலைக்காட்சியில் மாவட்ட அளவில் சிறந்த 5 பள்ளிகள் என்று வந்த கருத்துக்கணிப்பில், நாமக்கல்லில் முதலிடம் பெற்ற பள்ளி 'அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் (தெற்கு)'. அதற்கடுத்த வருடங்களில் முதலிடம் 'மாற்றப்பட்டது'.

இதற்கு மிக முக்கிய காரணம், தில்லைபுரம். நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து தலை சிறந்த மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் அங்கேதான் தனி வகுப்பு எடுப்பார்கள். 5 மணிக்கு மேல் அந்த பகுதியே சும்மா களை கட்டும். நாமக்கல் நகரை சுற்றி உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ மாணவியர் ஒரே இடத்தில் கூடினால் சும்மாவா?.

அப்போது அந்த ஆசிரியர்கள் யாரும் யாரையும் 'பிராய்லர்' கோழியாக மாற்றவில்லை. ஏன், எதற்கு, எப்படி என்று சொல்லுவார்கள். அதைக் கற்றுக்கொண்டோருக்கு அறிவு வளர்ந்தது. பெண்களை மட்டும் பார்க்க வந்தோருக்கு, சரி விடுங்க.

மார்ச் மாத இறுதியில், தனித்தனியாக உள்ள ஆசிரியர்கள்  (எனக்குத் தெரிந்த வரை) 3 குழுவாக இணைந்து நுழைவுத் தேர்வுக்கு வகுப்பு எடுப்பார்கள். ஒரு பாடத்திற்கு இரண்டு முதல் மூன்று ஆசிரியர்கள், இரண்டு ஆண்டுகளாக படித்த பாடங்களை 40 நாட்களில் அட்டகாசமாக நினைவூட்டுவர். ராசிபுரத்தில் உள்ள பள்ளி அப்போது இதற்கு பயங்கர புகழ். ஏனென்றால் அங்கே 'ராத்தங்கல்' கட்டாயம். பணமும் அதிகம். எனவே, நல்ல பள்ளி.

2001 மார்ச்சில், அந்த 3 குழு சற்றே உடைந்து, ஒரு புதுக்குழு சேர்ந்து, காவெட்டிப்பட்டியில், தற்போது பரபரப்பாக பேசப்படும் 'குறிஞ்சி' நுழைவுத் தேர்வு பயிற்சி மையம் ஆரம்பித்தனர். அதே ஆண்டு இறுதியில், அங்கே மேல்நிலைப்பள்ளியும் தொடங்கப்பட்டது. உடனே, அரசுப் பள்ளிகளில் படித்த பலர், அங்கிருந்து வேரோடு பிடுங்கப்பட்டு, இங்கே கொண்டு வந்து சேர்க்கப்பட்டனர்.

அந்த ஆண்டில், ஓரளவு நல்ல மதிப்பெண்கள் பெற்று மாணவர்கள் தேறினர். அடுத்த ஆண்டிலிருந்து அரசுப் பள்ளிகளின் சேர்க்கை குறைய ஆரம்பித்தது. எல்லா பெற்றோர்களும், அரசுப் பள்ளியில் சேர்ந்தால் எப்படியும் டியுஷன் போக வேண்டும், ஆனால், அந்தப் பள்ளியில் அதே ஆசிரியர்கள் முழு நேரமும் எடுக்கிறார்களே என்று காரணம் சொன்னனர். 

குறிஞ்சி பள்ளி சம்பாதிப்பதைப் பார்த்ததும், இங்கே டியுஷன் எடுத்த மற்ற ஆசிரியர்களுக்கும் கை அரிக்க ஆரம்பித்தது. அவ்வளவுதான். அதன் பின் ஆரம்பித்தது மாணவர்களின் அழிவு காலம். ரெட்டிப்பட்டி, அணியாபுரம், நல்லி பாளையம் என்று பல இடங்களில் பல பள்ளிகள் தொடங்கப்பட்டன. எந்த பள்ளிகள் அதிகம் பணம் பிடுங்கி, அதிக விதிமுறைகளை விதிக்கிறார்களோ, அவைகளே நல்ல பள்ளிகள் என்று அடையாளம் காணப்பட்டன.

இன்னொரு முக்கியமான விஷயம், இந்த அனைத்து தனியார் பள்ளிகளிலும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும், அரசு ஆசிரியர்கள், ஒரு காலத்தில் அவர்களிடம் டியுஷன் போவதை பெருமையாக கருதப்பட்டவர்கள். எனவே, அந்த தனியார் பள்ளிகள், அவர்கள் வேலை பார்க்கும் அரசுப் பள்ளிகளை விட சிறந்தவையாக மாறின. மாற்றப்பட்டன.

ஆரம்பத்தில் எல்லாப் பள்ளிகளும் ஓரளவு நன்றாகத்தான் இருந்தன. ஆனால், இந்த நுழைவுத் தேர்வுகள் எப்போது நீக்கப்பட்டனவோ, அப்போது பிடித்தது சனியன். ஏனென்றால், நுழைவுத் தேர்வுக்கு மனப்பாடம் செய்வதை விட, சற்றே புரிந்து படிக்க வேண்டும். ஆனால், நுழைவுத் தேர்வு இல்லை எனும்போது, அரசுப் பொதுத் தேர்வில் மட்டும் முழு மதிப்பெண் எடுத்தால் போதும். அப்போதுதான், பள்ளிகள் பண்ணைகளாக மாறின.

மாணவர்கள் பொதுவாக தவறு செய்வது ஒரு மதிப்பெண் வினாக்களில் தான். மற்றபடி, மனப்பாடம் செய்தால் மற்ற பதில்களை எழுதி விடலாம். எனவே, மாணவர்கள் முதலில் நன்றாக 'தட்ட' வைக்கிறார்கள்.(கட்டுரையில் குறிப்பிடப்பட்டது போல, மெமரி கார்டாக மாற்றப்படுகிறார்கள்). மற்றபடி, தேர்வின் போது, எந்த மாணவர்களும் அந்த ஒரு மதிப்பெண் வினாக்கள் 'எப்படியாவது' சரியாக எழுதி விடுவார்கள். (ஆனால், நீங்கள் எந்த மாணவனைக் கேட்டாலும், அடித்துக் கேட்டாலும் கூட, அந்த உண்மையை அவர்கள் சொல்ல மாட்டார்கள்)

மாநில அளவில் இடங்கள் வாங்கியவுடன், மீண்டும் அதை தக்க வைத்துக் கொள்வதற்காக, 'எந்த அளவிற்கும்' இறங்க தயாராக உள்ளனர். அதில் முதலாவதுதான், மாணவர்களை 'கோழிகளாக' மாற்றுவது.

ஆசிரியல் தொழில் புனிதமானது என்றெல்லாம் வசனம் பேச வேண்டாம். ஆனால், அந்தத் தொழிலை, உலகின் மற்ற தொழிலை விட கீழ்த்தரமாக ஆக்கி விட்டார்கள். இது போன்ற பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மதிப்பெண்கள் கிடைக்கிறதே தவிர 'கல்வி' கிடைக்கிறதா என்றும் யாரும் பார்ப்பதில்லை.

"எங்க மேல மட்டும்தான் தப்பா, இந்த ஸ்கூலே இப்படித்தான்னு எல்லோருக்கும் தெரியும், தெரிஞ்சுதானே சேத்துறாங்க" என்று எந்த ஆசிரியரும் போங்க வேண்டாம். இந்தப் பதிவு இன்னும் தொடரும்.


இதில் தவறு எங்கே என்றால், மாறி மாறி குற்றம் சொல்லுவார்கள். இப்போதுதானே பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் பற்றி சொன்னேன். இன்னும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பற்றியும் ஒரு பதிவு உண்டு.



இதில் என்னுடைய முக்கியமான கருத்து. நுழைவுத் தேர்வு தேவை. நுழைவுத் தேர்வு வைப்பதால் பாதிக்கப்பட்டது கிராமப்புற மாணவர்கள் கிடையாது, பணமிருந்தும், படிப்பு வராத மாணவர்களே.

இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால், அந்தப் பள்ளிகளில் பணி புரியும்(?) தலை சிறந்த (அரசு) ஆசிரியர்களின் வாரிசுகள் யாருமே, எனக்குத் தெரிந்த வரை, உருப்படி இல்லை. அவர்கள் பாணியிலே சொல்வதென்றால், "பன்னெண்டாவதுல இவ்ளோதான் வாங்கினியா, அந்த ஸ்கூல்ல படிச்சேவா?"

Tuesday, December 31, 2013

சிவிகை சினிமா விருதுகள்

அடடே, இன்னிக்கு தேதி 31 ஆயிடுச்சி, இன்னும் நாம பதிவ போடலியே, என்ன செய்யலாம். சரி எதையாவது எழுதி வைப்போம். அட, விருது கொடுக்கிறேன்னு வேற சொல்லிட்டமே. சரி பாப்போம்.

'கெட்ட பையன்' கார்த்தி:



கார்த்தி ஆரம்பத்தில் இருந்து நடித்த அனைத்துப் படங்களையும் பார்த்தால், அந்த பாத்திரங்கள் நிஜத்தில் நம்முன்னே இருந்தால், கண்டிப்பாக நாம் விரும்பவே மாட்டோம். காதலி வாங்கிக் கொடுக்கும் சட்டை, மாமனார் வாங்கும் சரக்கு எதுவாக இருந்தாலும் இருப்பதிலேயே அதிக விலையாக எடுக்க வேண்டியது, நண்பர்கள் வேலை வாங்கித் தர முயற்சி எடுத்தால் பெண் பின்னால் ஓடுவது என்று இப்போது பிரியாணி வரை 'கெட்ட பையனாகவே' இருக்கிறார். மற்ற நடிகர்களும் அதே போலத்தான் நடிக்கிறார்கள் என்றாலும், கார்த்தி, என்னைப் பொறுத்தவரை ரொம்ப மோசமான பையன்.

'உண்மையிலேயே ரொம்ப தைரியந்தான்' சுசீந்திரன், விஷ்ணுவர்தன்:



பாண்டிய நாடு, ஆரம்பம் இவை இரண்டில் எது நல்ல படம் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், இரண்டு படங்களின் மையக்கரு நாட்டில் நடந்த, பரவலாக அனைவருக்கும் தெரிந்த கதை. தைரியமாக சம்பந்தப்பட்ட நபர்களை மையப்படுத்தியே எடுத்த இருவருக்குமே, ரொம்ப தைரியந்தான்.

'செல்லக்குட்டி' இமான்:



என்னதான் ராஜா, ரஹ்மான் என்று சொன்னாலும், இந்த வருடத்தின் செல்லக்குட்டி இமான்தான். 'கும்கி' மூலம் மனதில் நுழைந்தவர், வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாண்டிய நாடு என்று 'செல்லக்குட்டி' ஆகி விட்டார். அதிலும் என் ஒன்றே கால் வயது மகளுக்கு பிடித்த பாடல்கள் அனைத்துக்கும் இசை இமான்தான். அவரின் பணி தொடர்க.

'இளைத்த சிங்கம்' இளையராஜா:



யாரும் கோபிக்க வேண்டாம். அவருக்கு உடல் நிலை சரியில்லை, பாடல்கள் கூட அவ்வளவாக இல்லை. ஆனாலும், தான் சிங்கம்தான் என்பதை 'தலைமுறைகள்', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' மூலமும் நிரூபித்து விட்டார். அவர் மீண்டும் இசைக்கு தான் ராஜா என்று நிரூபிப்பார். 

அவரின் பின்னணி இசையின் தொடர் வெற்றிக்குக் காரணம், ஒரு காட்சியில் முதலில் பார்வையாளனை எது அடைய வேண்டும் ஒலியா, ஒளியா என்பதை மிகத் தெளிவாக உணர்ந்தவர். ஒரு சோகமான காட்சிக்கு, அந்த சோகத்தை நாம் உணர்வதற்குள் மற்ற இசையமைப்பாளர்கள் வயலினை இழுத்து எரிச்சலூட்டுவார்கள். ஆனால், அவரோ, அந்தக் காட்சி பார்வையாளனை பாதித்த பின், இசை வரும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம், 'அபூர்வ சகோதரர்கள்' படக் காட்சி. அதிலும் குறிப்பாக, ஸ்ரீவித்யா பேசும்போது வரும் இசை.



'சிறந்த நடு நிலை நாளிதழ்' தினமலர்:



இதற்கு நான் ஏன், எதற்கு என்று விளக்கம் அளிக்க தேவையில்லை. அரசியலை விடுங்கள். இளையராஜா பற்றி ஒரு 10 செய்திகள் வந்தால், அதில் கண்டிப்பாக 8 செய்திகளில் அவரைப் பற்றி 'குத்தலான' செய்தி இருக்கும். உதாரணம், அவர் 'மேடை நிகழ்ச்சி' பற்றிய செய்தியில் 'ஒரு காலத்தில் மேடையில் பாடுவதை இளக்காரமாக பேசியவர்' என்று சம்பந்தமில்லாமல் ஒரு வரி இருக்கும். அதை இங்கே படிக்கலாம். இதே போலத்தான் அவர் மக்கள் முன்னிலையில் மெட்டமைக்கும் நிகழ்ச்சிக்கும் இருந்தது.

இன்னும் குறிப்பாக இரு செய்திகளை சொல்லலாம்.
உலக இசை அமைப்பாளர்களுக்கு இளையராஜா சவால்
எந்த படத்துக்கும் 3 நாட்களுக்குமேல் இசை அமைத்ததில்லை: இளையராஜா சவால்

இரண்டு செய்திகளிலும் ராஜா சொன்ன முக்கிய கருத்து "நான் எந்தப் படத்திற்கும் மூன்று நாட்களுக்கு மேல் இசை அமைத்தது இல்லை" அந்த இரண்டிலும் ராஜா சொன்னதை படித்துப் பாருங்கள். அதில் எங்கேயும் 'சவால்' என்றே சொல்லவில்லை. ஆனால், இரண்டிலும் உள்ள முக்கிய தலைப்பு 'இளையராஜா சவால்'.

தின மலரின் மீது எனக்கு மிகவும் மதிப்பு இருந்தது. அதற்கு முக்கிய காரணம், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையின் போது இரு மாநில முதல்வர்களும் தங்களது மாநிலத்தின் விளக்கங்களை பத்தரிகையில் விளம்பரமாக அளித்தனர். நம் மாநிலத்தின் விளக்கம், எந்த மலையாள பத்திரிக்கையிலும் வரவில்லை. ஆனால், அவர்களின் விளக்கம் அனைத்து தமிழ் பத்திரிக்கையிலும் வந்தது, தினமலர் தவிர. பத்திரிக்கை தர்மம் அது இது என்று ஆயிரம் காரணம் சொன்னாலும், எனக்கு அப்போது தினமலரைப் பிடித்தது. அது மட்டுமன்றி ஒரு சில விழிப்புணர்வு விளம்பரங்களையும் வெளியிட்டது.

ஆனாலும், அரசியல் மற்றும் மற்ற அனைத்து விஷயங்களிலும் அவர்களின் நடு நிலைமையைப் பார்த்து, இந்த விருதை அவர்களுக்கு அளிக்கிறேன்.

சிறந்த பதிவர்: 

நாந்தான். வேற யாரு. என்னப் பத்தியும் ஒருத்தங்க பெருமையா (சரி சரி, அடிச்சுட்டேன்) எழுதியிருக்காங்க. அதனால், நானே சிறந்த பதிவர் என்று நானே தீர்ப்பு கூறி, நானே பரிசை வழங்கி, நானே பெற்றுக் கொள்கிறேன்.

அனைவருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். எப்படியோ மாதம் ஒரு பதிவைப் போட்டு விட்டேன். அடுத்த வருடம் பார்ப்போம் எப்படி என்று.

Saturday, November 30, 2013

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

மாசக் கடைசி ஆயிடுச்சி. பத்து பைசா கையில் இல்லை. இந்த மாசம் கட்ட வேண்டிய பாக்கி கூட கட்டி முடிக்க முடியல. அட அது கூட பரவால்ல, இன்னும் இந்த மாசத்துக்குன்னு ஒரு பதிவைப் போட முடியல. அதனால, எப்படியாவது ஒரு பதிவ போட்டே ஆகணும்னு ஒக்காந்துட்டேன். இனி உங்க தலை எழுத்து. படிங்க.

விமர்சனம் ஒன்னும் பெருசா இல்லீங்க. எல்லாரும் எல்லாத்தையும் ஏற்கனேவே கிழிச்சுட்டாங்க. நான் தனியா என்னத்த சொல்ல. நான் சொல்லி, நீங்க அதப் படிக்கிறதுக்குள்ள, அந்த படம் எல்லாத்தையும் டிவியில ரெண்டு வாட்டி போட்டுடறாங்க. அப்புறம் என்ன.

பாத்ததுல புடிச்சதுன்னா, அது 'பாண்டிய நாடு, மூடர் கூடம், 6'. 'விடியும் முன்' நல்லா இருக்குன்னு எல்லோரும் சொல்றாங்க. பாக்கணும். 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' பரவால்ல. நானும் கடைசி வரைக்கும் ஏதாவது நெஞ்சப் பிழியற கத வரும்னு பாத்தேன். ஆனா, எதுவும் வல்ல. ராஜாவோட பின்னணி, கடைசி அரை மணி நேரம், சான்சே இல்ல.

தமிழ் ஹிந்துல, ஒரு கட்டுரை வந்திருக்கு. படிச்சுப் பாருங்க. தமிழ் சினிமாவில் பாடல்கள் அவசியமா? அதுல, அவற்றில் பாடல்கள் இல்லாமல், சுமார் 35 நேரடிப் படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன அப்படின்னு சொல்றாங்க. கணக்கு சரியா அப்டின்னு தெரியல. இருந்தாலும் உருவம் படம், அதுல ஒரே ஒரு நிமிஷம் மட்டும் ஒரு பாட்டு வரும், அது கணக்குல வருமான்னு தெரியல.

பாட்டு இல்லாம வந்த முக்காவாசி படம் பேய்ப் படம், ஆக்சன், இல்லேன்னா த்ரில்லர் தான். ஒரு சாதாரண காமெடி இல்லேன்னா குடும்பப் படம் (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் கணக்குல வருமா? என்னது ஆரம்பத்துல பாட்டு வந்ததால அவுட்டா?) வந்ததே இல்ல. சரி, எனக்கு தெரியல.

கூகுள் பண்ணியும், என் அறிவுக்கு எட்டிய வரையும் வந்த படங்கள். (1. அந்த நாள், 2. பேசும் படம், 3. குருதிப்புனல், 4. மறுபக்கம், 5. வீடு, 6. பசி, 7. கடமை கண்ணியம் கட்டுப்பாடு, 8. சந்தியா ராகம், 9. ஆரண்ய காண்டம், 10. நடுநிசி நாய்கள், 11. யுத்தம் செய், 11. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்) மற்றபடி அது, உருவம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்று அரைப்பாட்டு, ஒரு பாட்டு போன்றவற்றையும் வைத்தாலும் 20 தேறும். மற்றவற்றை தெரிந்தால் சொல்லுங்களேன்.

வேற என்னங்க ஸ்பெசல், ஊருல எல்லோரும் மெகா சீரியல் பாக்காம, ஒருத்தர ஒருத்தர் மூஞ்சிய பாக்காம இருட்டுல இருக்காங்க. சென்னையிலும் இனி தெனமும் 2 மணி நேரம்தான் கரண்டு இருக்குமாம். சேச்சே. தப்பா சொல்லிட்டேன். போகுமாம்.

முன்னாடியெல்லாம், டீக்கடைல பேப்பர் படிக்கும்போது அரசியல் பேசி சண்டை வந்து மூஞ்சி மொகரை எல்லாம் உடைஞ்சி ரத்தம் வரும். இப்ப எல்லாரும் இணையத்திலே சண்டை போட்டு அந்த சுவாரஸ்யமே இல்லாமே போகுது. தின மலர்ல தான் இது ரொம்ப முக்கியமா நடக்குது. அந்த வகையில, தினத்தந்தி இன்னும் கருத்து போட அனுமதிக்கல. டீக்கடையில மட்டுந்தான் சண்டை போட அனுமதிக்குது.

இந்த பத்திரிக்கை தர்மம், நடு நிலைமை அப்படின்னா, கிலோ என்ன விலைன்னு எல்லோரும் கேக்கிறாங்க. குறிப்பா தின, தின, தின அடக் கருமம் எல்லாந்தாங்க.

இந்த ஏற்காடு இடைத் தேர்தல்ல 'யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை' (NOTA) அப்படின்னு ஒரு 5% வோட்டு விழும் அப்படின்னு நான் நெனைக்கிறேன். பாக்கலாம்.

அடுத்த மாசமும் இதே மாதிரி கடைசி நேரத்துல தான் போடுவேன்னு  நெனைக்கிறேன். அது மட்டும் இல்லீங்க. நானும் விருது தரலாமுன்னு இருக்கேன். விளம்பரதாரர்கள் வரவேற்கப் படுகிறார்கள்.

மத்தபடி பாத்தீங்கன்னா, நாடு எப்பவும் போல நாசமா போயிட்டிருக்கு. எனக்கு அதப்பத்தி கவலைப்பட நேரம் இல்ல. ஏன்னா, என்னோட இளவரசி என்ன ஒக்கார விடாம ஓட விடுறாங்க. தொப்பையும் கொறையுது. என்ன  ஒரு மெயில் பாக்க முடியல. ஒரு பதிவ படிக்க/அடிக்க முடியல. இருந்தாலும் சந்தோஷம்.

இதனால எல்லோருக்கும் சொல்றது என்னன்னா, அண்ணன் இந்த மாசத்துக்கு ஒரு பதிவு போட்டுட்டாரு!!!

Tuesday, October 29, 2013

நான் சர்வாதிகாரி ஆனால் - 1

இது பள்ளிகளில் பிள்ளைகளை 'நான் மன்னன் ஆனால்' என்ற தலைப்பில் கட்டுரை எழுது என்று சொல்வது போல் உள்ளது என்று நீங்கள் நினைத்தாலும் சரி. இது என்னுடைய முந்தைய ஆதங்கத்தின் தொடர்ச்சியே.

இதில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்கள் முட்டாள்தனமாகவும், நடைமுறைக்கு சாத்தியமில்லாமலும், சில பல திரைப்படங்களின் பாதிப்புகளாகவும் தெரியலாம். இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நான் எண்ணியவை. இவற்றை ஒரு முதலமைச்சரோ, பிரதமரோ செய்ய முடியாமல் போகலாம். எனவேதான் 'சர்வாதிகாரி'.

கல்வி:

அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அனைவரும் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களது வேலை பறிக்கப்படும்.

அரசுக் கல்லூரிகளிலும், வேலை வாய்ப்பிலும் அரசுப் பள்ளிகளில் படித்தோருக்கு முன்னுரிமை.

எட்டாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை, அனைத்து 5 ஆண்டுகளுக்கும் பொதுவான இறுதி தேர்வு வைக்கப்படும். (இது பாடங்களை முன் கூட்டியே நடத்துவதை தவிர்க்க).

மதிப்பெண்கள், பாடங்களை மட்டும் பொறுத்து இல்லாமல், மாணாக்கர்களின் தனித்திறமைக்கும் சேர்த்து நிர்ணயிக்கபடும். இது சரி வராத பட்சத்தில், மாணாக்கர்களின் தனித்திறமைக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

ஒவ்வொரு மாணவ மாணவியரும், படிப்பைத் தவிர வேறு ஏதாவது ஒன்றில் சான்றிதழ் கண்டிப்பாக பெற வேண்டும்.

2000ஆம் ஆண்டிற்குப் பின் பிறந்த அனைத்து குழந்தைகளும், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு வரையாவது படித்திருக்க வேண்டும்.

அனைவருக்கும், கட்டாயமாக அவரவர் தாய் மொழியை எழுத, படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும். 

பாலியல் கல்வி, அவசிய சட்டங்கள் பற்றிய அறிவு போதிக்கப்படும்.

அரசுப்பள்ளிகளுக்கு ஒரு சீருடை, தனியார் பள்ளிகளுக்கு ஒரு சீருடை. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு விதமான சீருடை கிடையாது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தனியாக டியுஷன் எடுப்பது, வேறு பள்ளிகளில் பகுதி நேரமாக பணி புரிவது தெரிந்தால், பணி நீக்கம் செய்யப்படுவர்.

அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச தகுதிகள் இல்லாத அனைத்துப் பள்ளிகளும்/ கல்லூரிகளும் மூடப்படும் (கழிவறை, விளையாட்டுத் திடல், அவசர வழி).

கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் விரும்பத் தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால், குற்றங்களைப் பொறுத்து மன்னிப்பு, சான்றிதழ் வழங்கப்படாது, கடவுச்சீட்டு (சரி விடுங்க பாஸ்போர்ட்) வழங்கப்படாது. அதிகபட்சம் சிறை தண்டனையும் வழங்கப்படும்.

இட ஒதுக்கீடு:

அனைத்து சாதிகளும், மதங்களும் (முதல்வன் படத்தின் தாக்கம்) நான்கே நான்கு பிரிவுகளின் கீழ் கொண்டு வரப்படும். (பொது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்). சாதி மற்றும் மதம் அனைத்து இடங்களில் இருந்தும் நீக்கப்பட்டு, ஒதுக்கீடு என்பது மட்டும் இருக்கும்.

எந்த பிரிவின் கீழ் யார் இருந்தாலும், அவர்களின் கல்வி முடிந்து, முதல் பணியில் சேரும் வரை மட்டுமே அவர்கள் இட ஒதுக்கீடுக்கு உட்படுவர். அதன் பின் வரும் அனைத்து பதவி உயர்விற்கும், சம்பள உயர்விற்கும், அவர்களும் பொதுப் பிரிவின் கீழ்தான் போட்டியிட வேண்டும்.

ஒருவர் தனது வேலையை இட ஒதுக்கீட்டின் மூலம் பெற்று விட்டால் அல்லது உயர் கல்வி முடித்து விட்டாலோ, அவர்களது வாரிசுகள் அனைவரும் பொதுப் பிரிவின் கீழ் வந்து விடுவர். ஏனென்றால் ஒதுக்கீடு சேர வேண்டியவர்களுக்கு மட்டுமே சேர வேண்டும். (நான் பார்த்தவரை, தாழ்த்தப்பட்டோர் பிரிவில் என்னுடன் படித்த அனைவரின் பெற்றோரும் அரசுப் பணிகளில் உள்ளோர்)

இந்த விதி மாற்றுத் திறனாளிகளுக்கும் பொருந்தும். அதிலும் மாற்றுத் திறனாளிகள் என்பதற்கான விதி சரியாக வரையறுக்கப்படும். (என்னுடன் கல்லூரியில் படித்த ஒரு மாற்றுத் திறனாளி - வலது கை கட்டை விரல், இடது கை கட்டை விரலை விட சற்றே, மிக சற்றே சிறியது)

சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து:

எந்த குற்றமாக இருந்தாலும், அபராதம் கிடையாது, சிறை தண்டனைதான். மக்களில் பாதி பேர், "என்ன 100 ரூவா லஞ்சம் கேப்பான், இல்லையா, 500 ரூபா அபராதம், அவ்வளவுதானே, தூக்கி வீசிட்டு போக வேண்டியத்தானே' என்பார்கள். எனவேதான் இது. குற்றங்களைப் பொறுத்து அரை நாள் முதல் ஆயுள் முழுதும் சிறையில் இருக்கும்படி தண்டனை வழங்கப்படும்.

சாலை விதிகளை மதிக்கவில்லை என்றாலும் சிறைதான். அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் கண்காணிப்பு கருவி பொருத்தப்படும். தினமும் அதைப் பார்த்து, விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வாகன ஓட்டுனர் குற்றத்தின் அளவைப் பொறுத்து சிறை தண்டனை. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சந்திப்புகளில், அவ்வப்போது கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு சோதிக்கப்படும். இதை ஒரு பத்து நாள் செய்தாலே, மக்கள் தானாக சாலை விதிகளை மதித்து நடப்பர்.

எந்த வண்டியாக இருந்தாலும் (மீன் பாடி வண்டி உட்பட) கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும். அனைத்து வண்டிகளும், நீக்க முடியாத முறையில் வாகன எண்களை, நான்கு புறமும் பதிந்திருக்கும்படி செய்ய வேண்டும்.

பாலியல் குற்றங்கள், திட்டமிட்ட கொலை, வன்முறை, குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள், இவை அனைத்திற்கும் ஆயுள் முழுதும் தனிமைச் சிறை. அவர்கள் தினமும் வேலை செய்ய வேண்டும். அந்த சம்பளத்திற்கு சாப்பாடு. வேலை செய்ய மறுத்தால், சோறு, தண்ணீர் இல்லை. அது அவரவர் இஷ்டம். இது கொடூரமாக தெரியலாம். ஆனால், வேறு வழியில்லை.

அப்படி இல்லையெனில், அவர்களது புகைப் படங்கள் அவர்கள் வெளி வந்தவுடனே, நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் காட்டப்படும்.

சாலை மறியல், பந்த் செய்ய யாருக்கும் அனுமதி இல்லை.

எந்த பிரச்சினை என்றாலும், சம்பந்தப் பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அனைவரும் சேர்ந்து மனு கொடுத்தால், அந்த அதிகாரி நீக்கப்படுவார். (சுதேசி படத்தில் வந்தது).

நீதிபதிகளும் மனிதர்கள்தான். எனவே, ஒரு மன்றத்தில் தீர்ப்பு வழங்குவதற்கு முன், அது குறிப்பிட்ட குழுவின் முன் வைத்து விவாதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். அதுவே இறுதி தீர்ப்பாகும். அதன் பின் மேல் கோர்ட், கீழ் கோர்ட் என்று எதுவும் இல்லை. இது நேரம் எடுக்கும் செயல் என்றாலும், ஒரே தீர்ப்பாக இருக்கும்.

ஒரு குற்றத்தில், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் விரும்பும் வழக்கறிஞரை வைத்து வாதாடிக் கொள்ளலாம். அரசு வழக்கறிஞரே வேண்டும் என்ற தேவையில்லை. அதற்கான செலவை அரசே ஏற்றுக் கொள்ளும்.

குற்றப் பின்னணி கொண்ட யாரும் அரசுப் பதவியில் இருக்கக் கூடாது. அதே நேரம், யாராவது வேண்டுமென்றே வழக்கு போட்டிருந்தால், வழக்கு போட்டவர்களுக்கு சிறை.

இது சற்றே அவசரத்திலும், ஆதங்கத்திலும் எழுதிய பதிவு. மக்கள் தங்களுக்கு தோன்றியவற்றையும் சொல்லலாம். மற்ற துறைகள் பற்றியும் சொல்லலாம். சொல்லுவேன்.

தொடரும்!