Wednesday, August 5, 2009

நான் ரீமேக் செய்ய விரும்பும் படங்கள்!!!

பல படங்களைப் பார்த்த பின்பு, 'அடடா, நல்லாத்தான் இருந்தது.. என்ன, நடுவுல அந்த சீன மட்டும் கொஞ்சம் மாத்தியிருந்தா படம் சூப்பரா இருந்திருக்கும்.. தேவையில்லாம லவ்வு சீன் வேற. அந்த பாட்டு வேற தேவையில்லாம' என்று நமக்கு பல கருத்துக்கள் தோன்றும்..

இது போல பல படங்கள் தேவையில்லாத காட்சியமைப்புகளாலேயே தோல்வியடைந்துள்ளன. சில படங்கள் ஆங்கிலப் படங்களை காப்பி அடித்திருந்தாலும், ஒழுங்காக அதை செய்யாததாலேயே தோல்வியடையும். நான் பார்த்த சில தமிழ் படங்கள், எனக்கு மிகவும் பிடித்தவை, ஆனாலும் சில காரணங்களால் தோல்வியடைந்திருக்கும். அவற்றைப்பற்றி என்னுடைய பார்வை. ஏன், எதனால், எப்படி போன்ற காரணங்கள் என்னுடைய மாறுகண்ணின் ஓரப்பார்வையில் அலசப்படுகின்றன..

சின்ன ராஜா:

கார்த்திக் இரு வேடங்களிலும், ரோஜா, பிரியா ராமன் மற்றும் மணிவண்ணன் நடித்து, வெளிவந்த படம்.. ஆங்கிலப்படத்தின் தழுவலா என்று தெரியவில்லை.

கார்த்திக்கின் தந்தைக்கு இரட்டைக் குழந்தைகள்.. இரண்டும் கார்த்திக்தான். ஒருவர் பாட்டியிடம் நல்லவராகவும், இன்னொருவர் பணக்கார தந்தையிடம் செல்லமாகவும், பொறுப்பற்ற ஊதாரியாகவும் வளருவார். இதை சகிக்க முடியாமல், அவரது அப்பா, சொத்தை நல்ல கார்த்திக் பெயரில் எழுதி வைத்து விடுவார். அதனால் கோபத்தில் அவரைக் கொன்று விடுவார்.

பழியும் கெட்ட கார்த்திக் மேல்தான் விழும். ஆனால், சின்ன ஆள்மாறாட்டம் செய்து, நல்ல கார்த்திக் பெயரில் அவர் வீட்டுக்கு வந்து விட்டு, அவரை சிறைக்கு அனுப்பி விடுவார். காதலி ரோஜா, பாட்டி அனைவரையும் தான்தான் நல்ல கார்த்திக் என்று நம்ப வைத்தும் விடுவார். மணிவண்ணனுக்கு மட்டுந்தான் சந்தேகம் இருக்கும். ஆனாலும், அதையும் காட்டிக்கொள்ளாமல் உடனிருப்பார்.

பிரியா ராமன் வக்கீலாக வந்து, சிறையிலுள்ள கார்த்திக்கு ஆதரவாக இருப்பார். அவர்தான் நல்ல கார்த்திக் என்று நிரூபிக்க அனைத்து ஆதாரங்களும், எதிராகவே திரும்பும். பார்த்தால், அவரும் கெட்ட கார்த்திக்கின் ஆள்தான். இறுதியில், சிறையில் சிறு சண்டையில் ஆளை மாற்றி விட்டு வெளியே வருவார். இதற்கு நடுவில் பிரியா, மணிவண்ணனையும் கொன்று விடுவார்கள். இறுதியில் சுபம்.

படம் பார்த்து வெகு நாட்களாகி விட்டது. எனவே, என்னுடைய திரைக்கதையும் உள்ளே இருக்கலாம். ஷொட்டு, குட்டு இரண்டும் எனக்கே சொந்தம்.

படம் பார்க்க எனக்கு மிகவும் பிடிந்திருந்தது. ஆனாலும், ஒரு சீரற்ற திரைக்கதையால் தடுமாறும். சின்ன வயதிலிருந்து வளர்த்த பாட்டியால் கூட கண்டு பிடிக்க முடியாமலிருப்பது. வழக்கம் போல காவல் துறை போன்றவை. இப்போது யாராவது நல்ல திரைக்கதை அமைத்தால் கண்டிப்பாக நான் பார்ப்பேன்.

சுதேசி:

விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு நல்ல ஆரம்பப்புள்ளியாக வந்திருக்க வேண்டிய படம். நிஜமாகவே நல்ல கதை. மொக்கை திரைக்கதை. தேவையில்லாமல் அத்தை மகள், டூயட் எல்லாம் வைத்து சொதப்பி விட்டார்கள்.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்ததே, கொலை செய்த காட்சியை வைத்து முதலமைச்சரை மிரட்டி, மக்களுக்கு நன்மை செய்ய வைப்பார். இறுதியில் அவர் திருந்தி, விஜயகாந்தை அரசியலுக்கு அழைப்பார். தான் சிறைக்குப் போவதாகவும் சொல்வார். ஆனால் அவரோ நீங்களே செய்யுங்கள். மக்களை பொறுத்தவரை நீங்கள் நல்லவராகவே இருங்கள். அந்த ஆதாரம் என்னிடமே இருக்கட்டும் என்று சொல்வார். இதிலிருந்து ஒரு பாதியை சுட்டு 'வாமனன்' படத்தை எடுத்திருப்பார்கள்.

கண்ணோடு காண்பதெல்லாம்:

அர்ஜுன் வித்தியாசமாக, எதிர் மறை கதாபாத்திரத்தில் நடித்த படம். தான் துரத்தி துரத்திக் காதலிப்பவளை, பெண் பார்க்க வரும் அர்ஜுனிடம், நாயகன் அவள் தன் காதலி என்று சொல்ல, அவரும் பெருந்தன்மையாக விலகி விடுவார்.

ஆனால் நாயகனின் தொந்தரவு தாங்க முடியாத நாயகி, அர்ஜுன் தன்னை திருமணம் செய்யப் போவதாகக் கூற, அவனோ இருக்காது என்று மறுக்க, இருவரும் அர்ஜுனைப் பார்க்க போவார்கள். அர்ஜுன் தன் கனவுப் பெண்ணைப் பார்த்து, அவளிடம் தனது காதலை சொல்லும் நேரத்தில், இவர்கள் வந்து குழப்பி விட, காதலி கோபித்துக் கொண்டு போய் விடுவாள். இதற்கிடையே, நாயகன் நாயகி இடையே காதலும் வந்து விடும். அர்ஜுனோ அவர்கள் சேரக்கூடாது என்று துரத்த, கடைசியில் வழக்கம் போல சொதப்பி இருப்பார்கள்.

படத்தில் ஒரு நல்ல பாடலும், சோனாலி பிந்த்ரே என்ற சுமாரான பிகரும் உண்டு. பரவாயில்லை.

சபாஷ்:

பார்த்திபன், திவ்யா உண்ணி, ரஞ்சித் நடித்தது.

அருமையான திரில்லர் படம். மனைவியை மானபங்கப்படுத்தி, தற்கொலைக்கு தூண்டிய நெருங்கிய நண்பனை (மனைவியின் பழைய காதலன்) பழி வாங்கும் நாயகன். கண் தெரியாதவன் போல நடிக்கும் நாயகனை எப்படியாவது மாட்ட வைக்கத் துடிக்கும் நண்பன். இறுதியில், நண்பனுக்கு தண்டனை கிடைக்க தன் பார்வையையே இழக்கும் நாயகன்.

படத்தில் பாடல்களையும், தேவையில்லாத காதல் காட்சிகளை நீக்கினால் அருமையான ஆங்கிலப் படம் போல இருக்கும். சமீபத்தில் இதே போல தோன்றிய படம் 'நியுட்டனின் மூன்றாம் விதி'.

புதிய முகம்:

லாஜிக் பொத்தல்களை மட்டும் தைத்து விட்டால், உண்மையிலே அருமையான படம். (எல்லா படமுமே அப்படித்தான் என்கிறீர்களா!?!) அருமையான பாடல்கள், பின்னணி இசை. ஆனாலும், மற்ற துறைகள் ஒத்துழைக்காததால், சற்று சறுக்கி விட்டது.

படத்தில், பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பின், குள்ளமான, ஒல்லியான வினீத், உயரமாக, குண்டாக மாறிவிடுவார். இது ஒரு பொத்தல் என்பது என் கருத்து. இதே போல நிறைய அங்கங்கே..

ஆஹா:

அருமையான, குடும்பப்பாங்கான, சிறு சிறு திருப்பங்களுடன் கூடிய நல்ல படம். நம்பவே முடியாமல் தேவா அருமையாக இசையமைத்த 'முதன் முதலில் பார்த்தேன்' என்ற பாடலும் உள்ள படம். 'பெப்சி' விளம்பரம் தந்த படம். தமிழர் கலாச்சாரத்தை காப்பாற்றும் இன்னொரு படம். ஆனாலும் ஏதோ குறையும் படம். கண்டு பிடித்துக் கொடுத்தால் 'ஆஹா!!' என்று சந்தோஷப் படுவேன்.

இவை தவிர நிறைய படங்கள் கிளைமாக்சில்தான் சொதப்பியிருப்பார்கள். அவற்றை தனிப்பதிவில்தான் இட வேண்டும். நான் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் (ஆஹா, புதிய முகம் தவிர) அவ்வளவாக தெரியாத படங்கள் என்று நான் நினைக்கிறேன். உங்களது தேர்வையும் பின்னூட்டத்தில் குறிப்பிடவும். நன்றி.

13 comments:

  1. ரீமேக் செய்யுங்க பார்க்கிறோம் ;) நல்ல பார்வை

    ReplyDelete
  2. நீங்கள் சொன்னவை எல்லாமே நல்ல படங்கள் சபாஷ் என் விருப்பப் படங்களில் எப்போதுமே உள்ள படம். அதில் ஒரு கட்டத்தில் தர்மத்தின் வாழ்வு தனி சூது கவ்வும் என்றூ சொல்ல, தர்மமும் சில ச்மயம் மண்ணை கவ்வும் என்ற வசனம் வரும்.

    இது போல அபிமன்யு என்ற பார்த்திபன் - ரகுவரன் நடித்த ஒரு படமும் அருமையான படம். பெரிதாக வெற்றி பெறவில்லை என்றூ நினைக்கின்றேன்.

    ReplyDelete
  3. இதுபோல எனக்கும் ஒரு பட்டியல் உண்டு.. ஆனால்.. எழுத சோம்பலாக இருக்கிறது.

    நல்லா இருக்கு! புதியமுகம் படத்தில் சொல்லி இருப்பது சாதா பொத்தல் இல்லை. மகா பொத்தல்! :))

    நீங்க எடுங்க தலிவா.. நாங்க இருக்கோம் பார்க்க! :)

    ReplyDelete
  4. // ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

    இதுபோல எனக்கும் ஒரு பட்டியல் உண்டு.. ஆனால்.. எழுத சோம்பலாக இருக்கிறது.

    நல்லா இருக்கு! புதியமுகம் படத்தில் சொல்லி இருப்பது சாதா பொத்தல் இல்லை. மகா பொத்தல்! :))

    நீங்க எடுங்க தலிவா.. நாங்க இருக்கோம் பார்க்க! :)//

    ரிப்பீட்டே :-)

    -சென்ஷி
    பாகச செயலாளர்
    ஷார்ஜா கிளை

    ReplyDelete
  5. கொடுமையான விசயம் என்னன்னா நீங்க குறிப்பிட்டு இருக்குற எல்லா படத்தையும் நான் பார்த்திருக்குறதுதான்.

    சின்ன ராஜாவுல கதை மாத்திரம் இல்லை. நடிப்பு மகா கேவலமா இருக்கும். டைம்ன்னு ஒரு மொக்கை படம் பார்க்குற வரைக்கும் சின்ன ராஜாதான் நான் பார்த்த மிக மோசமான படம்ங்கற லிஸ்ட்ல வச்சிருந்தேன்.

    புதிய முகம், ஆஹா, கண்ணோடு காண்பதெல்லாம் பாட்டுக்கள் பிடிச்சிருந்தது.

    ஞாபகம் வர்றப்ப மீண்டும் வந்து தொடர்வேன் :-)

    ReplyDelete
  6. அனைவரின் வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப Danks...

    \\ரீமேக் செய்யுங்க பார்க்கிறோம் ;) நல்ல பார்வை\\

    \\நீங்க எடுங்க தலிவா.. நாங்க இருக்கோம் பார்க்க! :)\\

    \\ரிப்பீட்டே :-)\\

    கானா, பால பாரதி, சென்ஷி

    நீங்க மூணு பேரும் சுமூகமா முடிவு பண்ணி, யார் யாரு என்ன படம் தயாரிக்கலாம்னு முடிவு பண்ணுங்க.. நான் வெய்ட் பண்றேன்.. சரியா!?!?

    \\டைம்ன்னு ஒரு மொக்கை படம் பார்க்குற வரைக்கும் சின்ன ராஜாதான் நான் பார்த்த மிக மோசமான படம்ங்கற லிஸ்ட்ல வச்சிருந்தேன்.\\

    டைம் படத்தில் பாடல்கள் அட்டகாசமாக இருக்கும். சிம்ரனும் கூட... 'நிறம் பிரித்துப் பார்த்தேன்' பாடலை இன்னும் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  7. சிவிகையில் பயணித்த வழிப்போக்கனுக்கு நன்றி...

    ReplyDelete
  8. ஆனாலும் மக்களே, யாருமே அவர்களுடைய தெரிவுகளை சொல்லவே இல்லையே??.. ஒரு வேளை அவர்களே பதிவிடுவார்களோ?? எல்லாம் நன்மைக்கே!!

    ReplyDelete
  9. // அரவிந்த் said...

    ஆனாலும் மக்களே, யாருமே அவர்களுடைய தெரிவுகளை சொல்லவே இல்லையே??.. ஒரு வேளை அவர்களே பதிவிடுவார்களோ?? எல்லாம் நன்மைக்கே!!//

    உங்க அடுத்த போஸ்ட்டுக்காக காத்திருக்கிறோம் தலைவரே ;)

    ReplyDelete
  10. \\உங்க அடுத்த போஸ்ட்டுக்காக காத்திருக்கிறோம் தலைவரே ;)\\

    அதையா ரீமேக் பண்ண போறீங்க?? எ.கோ.ச.இ??? :-)

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..