Sunday, October 4, 2009

ரஜினி vs கமல் / மம்முட்டி vs மோகன் லால்

ஒரு வருடத்திற்கு சற்றே முன்பு, தசாவதாரத்தைப் பற்றி எழுதாமல் ஒரு பதிவர் இருந்தால், ஏதோ அவர் பதிவுத் துரோக குற்றம் செய்தவர் போல அனைவரும் பார்த்தனர். இப்போது அதே போல 'உன்னைப் போல் ஒருவன்'. பதிவு போடவில்லை என்றால், நீ என்னைப் போல் ஒருவன் இல்லை என்று ஒதுக்கி விடுவார்கள் போல. எனவே, என்னுடைய பங்கு, பதிவு.

எல்லோரும் படத்தைப் பற்றி அனைத்து விதங்களிலும் அலசி விட்டார்கள். நீரஜ் பாண்டே மற்றும் கமல் கூட அதைப் பற்றி யோசித்து இருக்க மாட்டார்கள். சாண்ட்விச் சாப்பிடுகிறார், உயர்தர செருப்பு அணிந்திருக்கிறார், துப்பாக்கி வைத்திருக்கிறார், கண்ணாடி போட்டிருக்கிறார், சட்டை வேறு அணிந்திருக்கிறார் என்பது வரை சொல்லி விட்டார்கள்.

நானும் ஒரு பதிவிட வேண்டும் என்று எண்ணியபின், எல்லாமே வந்து விட்டதே, ஏதாவது ஒரு நல்ல பதிவை எடுத்து ரீமிக்ஸ் பண்ணலாமா என்றும் யோசித்தேன். பிறகுதான் இந்த தலைப்பு ஞாபகம் வந்தது. பதிவும் வந்து விட்டது.

பதிவின் தலைப்பிற்கேற்ப, தளபதி மற்றும் உன்னைப் போல் ஒருவன் ஆகிய இரு படங்களைப் பற்றி எனது கருத்துக்களை எழுதுகிறேன்.

ஒரு புதன்கிழமை (A Wednesday) நான் ஏற்கனவே பார்த்திருந்ததால், கமல் அதை எப்படி தமிழ்ப்படுத்தியிருப்பார் என்ற எதிர் பார்ப்பு மட்டுமே இருந்தது. அதுவும் பாடல் வெளியிட்ட பின், அது இன்னும் எகிறி விட்டது. அந்த படத்தில் பாடல்களா என்று. ஆனால், கமல் நம்மைப் போல ஒருவர் இல்லையே! கலக்கி விட்டார்.

தளபதி. ரஜினி, மம்முட்டி, மணி ரத்னம், இளையராஜா, சந்தோஷ் சிவன் என்று அனைத்து ஜாம்பவான்களும் இணைந்து, இசைந்து(?) பணியாற்றிய படம். பொதுவுடமையாக்கப்பட்ட ஒரு கதையின் நவீன காலத்து ரீமேக்.

இரு படங்களுக்கும், கடினப்பட்டு, நான் கண்டு பிடித்த ஒற்றுமைகளாவன. இரண்டுமே ரீமேக். இரு படங்களிலும் தலா ஒரு முன்னணி தமிழ் மற்றும் மலையாள நாயகர்கள் நடித்துள்ளனர். மம்முட்டி, கமல் இருவரும் முதலில் கெட்டவர்கள் போல சித்தரிக்கப்படுவார்கள். இரு படங்களிலும் அருமையான பாடல்கள் படமாக்கப்படவில்லை. ரஜினி, கமல் இருவருமே தனது உண்மையான பெயரை சொல்லிக்கொள்ள மாட்டார்கள். (ரஜினி 'தளபதி என்று சொல்லிக்கொள்வார்). இருவரும் தான் செய்யும் வன்முறை/தீவிரவாத செயல்களுக்கு, பெண்களுக்கு நிகழ்ந்த வன்செயல்களை முக்கிய, தங்கள் செயல்களை நியாயப் படுத்த காரணமாக சொல்வார்கள். வேறெதாவது இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லவும்.

நடிப்பைப் பொறுத்தவரை, ரஜினி தவிர மற்ற மூவரும், விருதுகளுக்கான போட்டியில் சற்று முன், பின்னேதான் இருக்கிறார்கள். ரஜினியோ விருது பெறவில்லையே தவிர, சற்றும் சளைத்தவரல்ல என்பதை பல படங்களில் நிரூபித்துள்ளார்.

தளபதி படத்தில் நடிப்பதற்கான இடங்கள் அதிகம். ஆனால், உன்னைப் போல் ஒருவனில், வெறும் பேச்சு மட்டும்தான். இந்த இரு பாடங்களில், என்னைப் பொறுத்தவரை முதலிடம் மோகன் லாலுக்குத்தான். அலட்டிக்கொள்ளாமல், நவரசத்தையும் முக பாவங்களிலேயே காட்டி, அசத்தி விட்டார்.

திரைக்கதை, வசனம் இரண்டிலும் என்னைப் பொறுத்தவரை உன்னைப் போல் ஒருவன் முந்துகிறது. (இன்னும் சொல்வதென்றால், A Wednesday இன்னும் நன்றாக இருந்தது என்பது என் கருத்து. ஆங்கில வசனங்கள் அதில் நன்றாக பொருந்தியது. குறிப்பாக அந்த ஹாக்கர் முதலில் சொல்லும் He is good, but not the best அதன் பின் He is not just good, he is the best என்பதும், எனக்கு மிகவும் பிடித்தது.) ஒரு பொது மனிதன் இப்படி மாறுவதற்கு சொல்லும் காரணங்கள் ஹிந்தி படத்தில் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும். பெயரே தெரியாத, தினசரி உடன் பயணிக்கும் பயணியின் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளும் அந்த காட்சி. அதே போல உணர்ச்சியை தமிழில் கொடுக்கவே 'கருவறுத்தல்' போன்றவற்றை கமல் கொண்டு வந்திருக்க வேண்டும். அது நடந்தது யாருடைய மகளுக்கு என்பதை நம்முடைய அனுமானத்திற்கு விட்டிருப்பதும் அந்த உணர்ச்சிக்காகத்தான்.

தளபதியில் நிறைய விஷயங்களை காட்சிகளிலும், பின்னணி இசையிலும் புரிய வைத்து விடுவார்கள். ரஜினியும், மம்முட்டியும் அரவிந்தசாமியை சந்திக்கும் காட்சியில், "தேவா, சூர்யா ரெண்டு பேர்" என்ற வசனம் வரும்போது தேவா வரும் இடத்தில் ரஜினியையும், சூர்யா எனுமிடத்தில் மம்முட்டியையும் காட்டுவார்கள். நட்பின் ஆழத்தைக் காட்டும் இடம். பின்னணி இசைக்கு எதை சொல்ல, எதை விட? அந்த கோயில் காட்சி ஒன்று போதுமே.

A Wednesday படத்திற்கும், உன்னைப் போல் ஒருவனுக்கும் மேலோட்டமாக பார்த்தால், அந்த புதன் கிழமையைத் தவிர வேறு வித்தியாசமே இல்லை (வசனங்களை விட்டு விடுவோம்). நான் முதலில் போக்கிரி தெலுங்கு பார்த்தேன். பின் தமிழில் பார்த்த பின் நண்பர்களிடம், "எதுக்கு தேவையில்லாம திரும்ப எடுத்தாங்களோ? கிராபிக்ஸ்ல விஜய் முகத்த மட்டும் மகேஷ் பாபு முகத்துக்கு பதிலா மாத்தியிருக்கலாம், இலியானாவும் இருந்திருக்கும்" என்றேன். இப்போது உன்னைப் போல் ஒருவனை பார்த்த பின், எனக்குள் முதலில் எழுந்த எண்ணமும் கிட்டத்தட்ட அதேதான். கமலின் மற்ற ரீமேக் படங்களில், திரைக்கதையில் வித்தியாசங்கள் காட்டியிருப்பார். ஆனால், ஒரு நல்ல படத்தை அதன் சாரம் குறையாமல் மக்களிடம் கொண்டு சேர்க்க, கமல் செய்ததில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

மக்கள் கூறுவது போல, ஏதாவது ஒரு குப்பனோ, சுப்பனோ அந்த பாத்திரத்தில் நடித்திருந்தால், "அவர் குண்டு வைப்பதும், மோகன் லாலுக்கு சவால் விடுவது நம்பும்படியே இல்லை. வேறு யாராவது பெரிய ஆளை போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று சொல்வார்கள். அக்கரைப் பச்சை. கமலும் காய்த்த மரமல்லவா!!

மொத்தத்தில் இரண்டுமே அருமையான படங்களே. இரண்டு படங்களும் இந்த ஒரு காரணத்தால்/நபரால் வெற்றி பெற்றது என்று சொல்ல முடியாது என்று கூறி, இடப் போகும் பின்னூட்டங்களுக்கு நன்றி கூறி, விடை பெறுகிறேன். நன்றி, வணக்கம்.

இந்த இரு படங்களையும் ஒப்பிடுவது போல, வேறு மடத்தனம் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். நானும் அதைத்தான் நினைத்தேன். ஆனாலும் என்ன செய்ய. ஏதாவது செய்ய வேண்டுமே. உங்களது கருத்துக்களை இட வேண்டும்.


5 comments:

  1. ரூம் போட்டு யோசிசீங்களா? :)

    ReplyDelete
  2. //"அவர் குண்டு வைப்பதும், மோகன் லாலுக்கு சவால் விடுவது நம்பும்படியே இல்லை. வேறு யாராவது பெரிய ஆளை போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்"//

    உண்மை

    ReplyDelete
  3. வித்தியாசமான ஒப்பீடு அல்லது அலசல்..
    (தேவையில்லையோன்னு தோணுது)

    ReplyDelete
  4. \\ரூம் போட்டு யோசிசீங்களா? :)\\

    ஆமான்னு சொன்ன ரூம் போட்டு அடிப்பீங்களோ???

    நன்றி SUREஷ் (பழனியிலிருந்து)..

    தமிழ், நான் டம்மி பீசுங்க.. இது சும்மா எழுதினேன்.. எல்லோருமே ஏதோதோ எழுதறாங்களேன்னு நான் மல்லாக்க, குப்புறப் படுத்து எல்லாம் ரோசிச்சு எழுதினேன்.. அம்புட்டுதேன்.. மன்னிச்சு விட்ருங்க..

    நடுவில் ஒரு சில வரிகள் ஒப்பிட்டு எழுதி விட்டேன்.. அதனால அப்படி தெரியலாம்.. மத்தபடி எதுவும் தப்பா, மக்கள் மனம் புண்படும்படி இல்லேன்னு நெனக்கிறேன்.. அடுத்து வேண்டுமானால், ஒரு சீரியஸ் பதிவு இடுகிறேன்..

    ReplyDelete
  5. அப்படி நான் சொல்ல வரவில்லை அரவிந்த்...
    இன்னும் பெட்டரா நல்ல பதிவுகள் நீங்க தரலாமேன்னு சொன்னேன்.
    //. அதனால அப்படி தெரியலாம்.. மத்தபடி எதுவும் தப்பா, மக்கள் மனம் புண்படும்படி இல்லேன்னு நெனக்கிறேன்.//
    அப்படி எல்லாம் இல்லை. எனக்குத் தோணியதைச் சொன்னேன்.

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..