Thursday, April 2, 2015

சென்னையின் வாகன ஓட்டிகள்

வாகனங்களின் வகைகள் (இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள்) மற்றும் ஓட்டுனர்கள் (பாவப்பட்டவர்கள், ஆபத்தானவர்கள், மிக ஆபத்தானவர்கள்) இரண்டைப் பொறுத்து, என்னுடைய அனுபவத்தில் வகைப்படுத்தி உள்ளேன். இது என்னுடைய முந்தைய பதிவின் தொடர்ச்சி ஆகும். இன்னொரு முக்கிய குறிப்பு. இது சென்னைக்கு மட்டுமே பொருந்தும். நெடுஞ்சாலைகள், மற்ற ஊர்களுக்கு இது பொருந்தாது.

மாநரக பேருந்துகள் - ஆபத்தானவர்கள்:
 
இவர்களை உண்மையில் 'பாவப்பட்டவர்கள்' என்ற வகையில்தான் சேர்க்க வேண்டும். இவர்கள் முட்கள் போல. சேலை இதன் மீது விழுந்தாலும், இதன் மீது சேலை விழுந்தாலும், ஆபத்து என்னவோ சேலைக்குத்தான். அதனால்தான் ஆபத்தானவர்கள் என்று சொல்கிறேன். தினமும் அதிகபட்சம் இரண்டு மணி நேரம் அலுவலகம் சென்று திரும்ப பயணம் செய்யும் நமக்கு எவ்வளவு பிரச்சினை என்றால், 10 மணி நேரம் அவ்வளவு பெரிய வண்டியை இந்த சென்னை சாலையில் ஓட்டுவது என்பது எவ்வளவு பெரிய கொடுமை. அதுவும் எந்தப் பக்கம் எவன் வருவான் என்றும் தெரியாது. படியில் தொங்கி எவனாவது விழுந்தாலும் தொல்லை. திட்டுகளையும் ஏற்க வேண்டும். ஒரே குஷ்டமப்பா. பொதுவாக இவர்களுக்கு வழி விட்டு விடுவது நல்லது.

பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் - மிக ஆபத்தானவர்கள்: 
பீக் அவர்' எனப்படும் நெரிசலான நேர நெருக்கடிக்கு முக்கிய காரணம். இவர்களாக ஒரு இடத்தை 'நிறுத்தம்' என வைத்துக் கொண்டு, அனைவரையும் படுத்துவார்கள். எங்கேயாவது, ஏதாவது நெருக்கடி, நேரமாகி விட்டது என்றால், யாரையும் இடித்துத் தள்ளக் கூட தயங்க மாட்டார்கள். சென்னையின் கல்வித் தந்தையின் கல்லூரி வாகனங்கள் ஏற்படுத்திய விபத்துகளும், அவற்றின் ஓட்டுனர்களின் நடத்தையையும், ராஜீவ் காந்தி சாலையில் செல்லும் அனைவரும் அறிவார்கள். வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்று எழுதி இருக்குமே தவிர, உள்ளே இருக்குமா என்று தெரியாது. மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ஆட்கள்.

தண்ணீர் மற்றும் குப்பை லாரிகள் - மிக மிக ஆபத்தானவர்கள்: 
உண்மையிலேயே வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட வேண்டிய வாகனங்கள். சென்னை போன்ற ஓர் நகரத்தில், தண்ணீர் கொண்டு செல்லும் லாரி அவ்வளவு வேகமாக செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இன்னொரு முக்கிய காரணம், இந்த வேலை செய்பவர்களை பொதுவாக அனைவரும் சற்று இளக்காரமாகவே பார்ப்பார்கள். எனவே, "நீ என்ன மதிக்கிறதில்லை, நானும் உன்ன மதிக்க மாட்டேன். நான் இப்படித்தான்" என்று வண்டி ஓட்டுவார்கள்.

பாதசாரிகள் - ஆபத்தானவர்கள்:
"ஹல்லோ, இருக்கிறதிலேயே பாவமானவங்க நாங்கதான்" என்று சொல்கிறீர்களா? நானும் பாதசாரிதான் சார். எப்பவுமேவா வண்டில போக முடியும்? ஏன் ஆபத்தானவர்கள் என்றால், அவர்கள் சாலையைக் கடக்க சிக்னல் இருந்தாலும், வாகன ஓட்டிகள் மதிப்பதில்லை. எனவே, சாலையில் சற்றே வாகனங்கள் குறைவாக இருக்கும்போது கடப்பது, அப்போது திடீரென முன்னால் வரும் வண்டி நிற்கும், அதை எதிர் பாராமல் பின்னால் வருபவன் இடிக்க, அவர்கள் இருவரும் சண்டை போட ஆரம்பிப்பார்கள், பாதசாரி ஜாலியாக அந்தப் பக்கம் போயிருப்பார்.

அதே போல போன் பேசிக்கொண்டே கடப்பது, பாட்டு கேட்டுக் கொண்டு கடப்பது, ஒரு கையைத் தூக்கிக் கொண்டு மெதுவாக நடப்பது என சில தொல்லைகள். அது மட்டுமில்லாமல் சுரங்கப்பாதை, நடை மேம்பாலம் இருந்தாலும், "நாங்க ரோட்டுக்கு நடுவுலதான் நடப்போம்" என்று நடப்பது. அதை விட முக்கியம், சாலையின் எந்தப் பக்கம் நடப்பது என்பது இதுவரை யாருக்கும் தெளிவாக தெரியாது. நடப்பதற்கு பாதையும் கிடையாது.

சாலையில் அப்படியே ஆட்டோவையோ, ஷேர் ஆட்டோவையோ நிறுத்தி பேரம் பேசுவது,மெதுவாக செல்லும் பேருந்தில் இருந்து திடீரென குதிப்பது, வெளியே குப்பை போடுவது, எச்சில் துப்புதுவது என கொஞ்சம் அக்கப்போரான ஆட்கள்தான். அதிலும் எங்கேயாவது சிறிய அல்லது சேரி போன்ற இடம் என்றால், அவர்கள் நடந்து போகும் வரை நாம் பொறுமையாக பின்னால் போய்த்தான் ஆக வேண்டும். அவர்களையும் குறை சொல்ல முடியாது. ஐந்தாறு வருடங்களுக்கு முன், அந்த சாலையில் தினமும் ஒரு வண்டி வந்தாலே அதிசயம். ஆனால், இன்று அப்படியா? அவர்கள் அப்படியே வாழ்ந்து பழகி இருப்பார்கள்.

ஆட்டோ, ஷேர் ஆட்டோ - மிக மிக ஆபத்தானவர்கள்:
ஒரு 'மிக' போடவா, இல்லை இரண்டு போடவா என சின்ன குழப்பம். ஒரு காலி ஆட்டோ வேகமாக போய்க் கொண்டிருக்கும். திடீரென ஒரு பாதசாரி 'ஆட்டோ' என்று கூப்பிடுவார். பின்னால் யார் வருகிறார்கள் என்று கூட பார்க்காமல், திடீரென நடு ரோட்டில் இருந்து இடது புறம் ஆட்டோ ஒதுங்கும். பின்னால் வருபவன் ஆட்டோவை இடித்து விட்டால், அவன் பரம்பரையே காலி. அதே போல ஷேர் ஆட்டோவில், உள்ளே உட்கார்ந்திருப்பவர் திடீரென "அண்ணே, அப்படியே லெப்ட்ல நிறுத்துங்க" என்பார். அதே பிரச்சினை. அதே கெட்ட வார்த்தை. போகும் பாதையில் சிக்னல் அல்லது ட்ராபிக், உடனே வண்டி மெதுவாக கூட போகாமல் உடனே வலதோ, இடதோ திரும்பும். அதே டெய்லர், அதே வாடகை.

இதுவரை மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டியவர்களைக் கூட பார்த்துள்ளேன். ஆனால், விதிகளை மதித்து, யாரையும் திட்டாமல் இருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரைக் கூட நான் கண்டதில்லை.

மகிழ்வுந்துகள் - மிக ஆபத்தானவர்கள்:
இவர்களும் ஆட்டோ போலத்தான். என்ன, திடீரென நடு ரோட்டில் நிற்க மாட்டார்கள், அது மட்டுமல்ல எங்குமே நிற்க மாட்டார்கள். திடீரென தங்கள் பாதையில் இருந்து விலகி பின்னால் வருபவர்களை பதறடிப்பார்கள். பொதுவாக எந்த வகையாக இருந்தாலும் சில விதி விலக்கானவர்கள் இருப்பார்கள். ஆனால், இந்த 'டெம்போ' வகை வண்டிகள் இதுவரை ஒன்று கூட ஒழுங்காக ஓடி நான் பார்த்ததே இல்லை. அவை கார் போல மிக எளிதாக ஓட்டவும், பேருந்து போல மிக பெரியதாக இருப்பதும்தான் பிரச்சினை என நினைக்கிறேன். "நீ எம்மேல வந்து இடி, சாவு, நான் பாட்டுக்கு போய்க்கிட்டே இருப்பேன்" என்ற தொனியில் செல்வார்கள். அதையும் மீறி, ஏதாவது சொன்னால், போகிற போக்கில் நம்மை 'ஒதுக்கி' விட்டு செல்வார்கள்.

மகிழ்வுந்துகள்-பாவப்பட்டவர்கள்:
இவர்கள் பொதுவாக இந்த சோப்பு டப்பா கார் வாங்கியவர்கள். இவர்கள்தான் சாலையில் ஒரே கோட்டில் செல்வார்கள். பொறுமையாக உள்ளே பண்பலை கேட்டுக்கொண்டு, சிக்னலை மதித்து பொறுமையாக போவார்கள். இருபுறமும் இரு சக்கர வாகனங்கள் வந்து உரசி, டொக்கு ஆக்கினாலும், பொறுமையாக சகித்துக் கொண்டு, அவர்களின் திட்டுகளையும் வாங்கிக் கொண்டு போவார்கள். (முக்கிய குறிப்பு. நான் இன்னும் மகிழ்வுந்து வாங்கவில்லை)

மகிழ்வுந்துகள் - மிக ஆபத்தானவர்கள்:

பொதுவாக பெரிய கார்கள். அல்லக்கைகள் அலப்பரை செய்யும் டாடா சுமோ, ஸ்கார்பியோ போன்றவை. இவை தவிர ரொம்ப நாளாக இரு சக்கர வாகனங்கள் ஓட்டி விட்டு, புதிதாக மகிழ்வுந்து வாங்கியவர்கள் எல்லாமே கொஞ்சம் ஆபத்தானவர்கள்தான். இவர்களை அடையாளம் கண்டு கொள்வதும் சுலபம். கண்டிப்பாக பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்திருக்கும் அல்லது மடக்கப்பட்டிருக்கும். காரில் டொக்கு விழுந்திருக்கும். பேன்சி எண்ணாக இருக்கும்.

இரு சக்கர வாகனங்கள் - மோசமானவர்கள்:

"என்ன, மிக, மிக மிக ஆபத்தானவங்க அப்டிதான சொல்லுவா, அதென்ன மோசமாவனங்க" என்கிறீர்களா? பொதுவாக நம் வண்டியை யாராவது இடித்தாலோ, அல்லது இடிப்பது போல போனாலோ, திட்டுவோம் அல்லது அப்படியே விட்டு விடுவோம். அப்படி இல்லாமல், யாரென்றே தெரியாத ஒருவனை "இவன்லாம் சாகத்தான் போறான்" என்று நினைப்போம் அல்லவா, அந்த வகையினர். சாலையில் போகும் அனைவரையும் பயமுறுத்துவோர். இவர்களை அடையாளம் கண்டு கொள்வது மிக சுலபம். பார்த்தாலே போதும். "என்னப்பா, இப்படி சொல்ற. அப்படி நீ யாரைத்தான் சொல்ற" என்கிறீர்களா? 

ஹெல்மட்டை தலைக்குப் போடாமல் பெட்ரோல் டேங்குக்கு போட்டிருப்பார்கள்.


இண்டிகேட்டர் கண்டிப்பாக உடைந்திருக்கும்.


காதில் பாட்டு கேட்டுக்கொண்டு அல்லது போன் பேசிக்கொண்டு செல்பவர்கள்.


150cc அல்லது அதற்கு மேல் உள்ள வண்டி எனில், கண்டிப்பாக இந்த சாதிதான். ("அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல" என்பவர்களுக்காக. "சொம்மா உர்ர் உர்ருன்னு உருட்டறத்துக்கா இந்த வண்டி வாங்கி இருக்கோம்" என்றுதான் இதுவரை நான் வாங்கிக் கட்டியுள்ளேன்). அதிலும் பின்னால் ஒரு பெண் கட்டிப் பிடித்து உட்கார்ந்திருந்தால், ____(கெட்ட வார்த்தைங்க)


ஸ்கூட்டர் வண்டிகள் ஓட்டுபவர்கள், பெரும்பாலும். (நானும் ஒரு காலத்தில் கல்யாணத்திற்கு முன் ஆக்டிவாதான் ஓட்டினேன். என்னைத் தாண்டிபோய் நிறுத்தி எல்லாம் திட்டி வீடு போயிருக்கிறார்கள். அதன் பிறகுதான் திருந்தினேன்.) இந்த வண்டி பிக் அப் அதிகம் என்பதால் மற்ற வண்டிகள் கியர் மாற்றுவதற்குள் போய் விட வேண்டும் என்று பறப்பார்கள். பின்னால் ஆள் இல்லாவிட்டாலும், கால் வைப்பதற்கான பிளேட்டை மடக்காமல் அடுத்த வண்டியை கீறுவார்கள்.


டேங்கில் ஒரு குழந்தை, நடுவில் ஒரு குழந்தை, பின்னால் மனைவி.யாராவது இடித்தால் கூட குழந்தை செண்டிமெண்ட் கை கொடுக்கும்.


எல்லாவற்றையும் மூடிக்கொண்டு ஓட்டும் பெண்கள். என்னதான் இவர்கள் தவறு செய்தாலும், யாரும் அவர்களை எதுவும் சொல்ல மாட்டார்கள்.


வண்டி ஓட்டும் வயதானவர்கள். இவர்கள் மேல் மோதவே இல்லை என்றாலும் "அய்யய்யோ" என்று கத்தினால், கதை காலி.


வண்டியில் காவல், வழக்கறிஞர், பத்திரிகை என்று எழுதி இருந்தால் (புடிச்சா கேஸ் போட முடியாதுல்ல).


சும்மா சிம்ரன், இலியானாவிற்கு போட்டியாக இடுப்பை வளைத்து, வண்டியை சைடு வாங்கி, மற்றவர்களை பதறடிப்பார்கள்.

இரு சக்கர வாகனங்கள் - மிக மோசமானவர்கள்:

"காலை 8:30க்கு தாம்பரத்தில் இருந்து நான் கிளம்புவேன். 9 மணிக்கெல்லாம் பாரிஸ் கார்னரில் உள்ள ஆபீஸில் நான் இருக்க வேண்டும், டாட்" என்பார்கள். இவர்கள் மிக மோசமான வகையினர். தாங்கள் சாலையில் செல்வதற்காக எந்த அளவிற்கும் போவார்கள். மேலே கூறிய ஆட்கள் இதுலும் வருவார்கள். ஆனாலும், இவர்களை அவர்கள் செய்யும் செயலை வைத்துதான் அறிய முடியும்.

நீங்கள் சிக்னலில் நிற்கும்போது, உங்கள் வண்டிக்கும், முன்னால் ஒரு அங்குல இடைவெளி இருந்தாலும், தங்கள் வண்டி முன் சக்கரத்தை அதில் விட்டு, "சார், கொஞ்சம் வழி விடுங்க" என்பார்கள்.


ஒலிப்பானை திருப்பங்கள், சந்துகளில் எல்லாம் பயன்படுத்த மாட்டார்கள். சிக்னலில் சிகப்பு இருந்தாலும், அழுத்திக் கொண்டே இருப்பார்கள்.


இண்டிகேட்டர், லைட் போடவே மாட்டார்கள், எந்த நேரமாக இருந்தாலும். அல்லது வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகம் போகும் வரை ஏதாவது ஒரு பக்கம் மட்டும் எரிந்து கொண்டே இருக்கும். எண்பதாயிரம் போட்டு வண்டி வாங்கியவர்கள், எண்பது ரூபாய் போட்டு ஒரு இண்டிகேட்டர் சைரன் வாங்கி வைத்திருக்க மாட்டார்கள்.


கொஞ்சம் கூட கூச்சமே இன்றி தவறான திசையில் வருவது, அவர்களுக்கு சிகப்பு போட்டிருந்தாலும் மீறுவது.


திடீரென பாதையில் இருந்து விலகி, அடுத்த சாலைக்கு செல்வது (இதில் பின்னால் வரும் இரண்டு வாகனங்கள் இடித்துக் கொண்டு, சண்டை போடுவார்கள். நம்மாள் அது தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் போயே போயிருப்பார்)


உலக அமைதி பேச்சு வார்த்தை நடத்துவது போல இரண்டு வண்டிகளில் பேசிக் கொண்டே செல்பவர்கள்.


ஏதாவது திருப்பத்தில் வந்து சாலையில் இணையும்போதும், அல்லது வண்டியை எடுக்கும்போதும், ஒரு கடமைக்குக் கூட திரும்பி ஏதாவது வண்டி வருகிறதா என்று பார்க்க மாட்டார்கள்.


நடைமேடையில் வண்டியை ஒட்டிக்கொண்டு போய், அதில் நடப்பவர்களைத் திட்டுவார்கள்.


எங்கேயாவது கும்பல் இருந்தால், வண்டியை ஓரமாகவும் இருத்த மாட்டார்கள், வண்டியை விட்டு இறங்கவும் மாட்டார்கள். "என்னவாம்" என்று யாரிடமாவது கதை கேட்பார்கள்.


ஒரு சிறிய சாலையில், எதிரில் வரும் வண்டி செல்வதற்காக வழி விட்டு நிற்போம். நேராக வந்து அந்த வழியை அடைத்து விட்டு, பின் நம்மைப் பார்த்து "ஏன் இந்தப் பக்கம் வர்ர, அந்தப் பக்கம் போ" என்று எகிறுவார்கள்.


பள்ளி செல்லும் குழந்தைகளை உட்கார வைத்து, எல்லா விதிகளையும் மீறி பள்ளியில் கொண்டு போய் விடுவார்கள். "சாலை விதிகளை மதிக்க வேண்டும்" என பாடம் படித்ததை அது பின்பற்றுமா அல்லது தன் தந்தை என்ன செய்வாரோ அதை செய்யுமா?

இரு சக்கர வாகனங்கள் - பாவப்பட்டவர்கள்:

இவர்களும் கிட்டத்தட்ட மேற்கூறிய வகை ஆட்கள்தான். இவர்களும், அந்த இரு சக்கர மிக மோசமான வாகன ஓட்டிகளும் ஒரே மாதிரிதான் இருப்பர். இருந்தாலும், இன்னும் இவர்களை இனம் கண்டு கொள்வது எப்படி?

சிக்னலில் நிற்கும்போது, நேரம் நிறைய இருந்தால் வண்டியை நிறுத்தி விடுவார்கள்.


சாலையில் போய்க் கொண்டிருக்கும்போது, முடிந்தவரை ஒரே கோட்டில் செல்வார்கள்.


சிகப்பு எந்த நேரத்திலும், எந்த இடத்தில் போட்டிருந்தாலும் நின்று விடுவார்கள்.
பின்னால் இருந்து யாராவது ஒலிப்பானை அழுத்திக் கொண்டிருந்தாலும், என்ன திட்டினாலும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.


சற்றே இடதோ, வலதோ திரும்பினாலும் இண்டிகேட்டர் போடுவார்கள். 
தேவையில்லாமல் ஒலிப்பானை பயன்படுத்த மாட்டார்கள்.

சில சமயம் இவர்களும் மோசமானவர்களாக மாற வாய்ப்பு உள்ளது, அவர்கள் அறியாமலேயே. ஆனால், மோசமானவர்கள் இவர்களாக தெரியாமல் கூட ஆக முடியாது. இன்னொரு கசப்பான உண்மை என்னவென்றால், அந்த மிக மோசமானவர்களிடம் இதில் ஏதாவது ஒரு குணம் இருக்கும்.

இவை எல்லாவற்றிலும் விதி விலக்குகள் உண்டு. ஆனால், மோசமானவர்கள் -ஆபத்தானவர்கள் - பாவப்பட்டவர்கள் என்பதை நீங்கள் லேசாக இடித்து விட்டாலே தெரிந்து விடும். உடனே இறங்கி என்ன, ஏது, யார் மீது என்றெல்லாம் பார்க்காமல் எந்த அளவிற்கு திட்டுகிறார்களோ அதைப் பொறுத்து நீங்கள் ஆபத்தானவர்கள், மிக மிக என்று மோசமானவர்கள் வரை போகலாம்.


இவை தவிர இன்னும், இரவு நேர அட்டூழியம் செய்யும் ஆம்னி பேருந்துகள், கன ரக வாகனங்கள், 'குடி' வண்டிகள், உள்ளே ஆட்கள் இருக்கிறார்களா இல்லையா என்று கூட தெரியாமல் செல்லும் ஆம்புலன்ஸ் வண்டிகள், சைக்கிள் மற்றும் பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும் மூன்று சக்கர வண்டிகள் என நிறைய உள்ளன. என்ன, எல்லோரும் ஒரு 'புரிந்துணர்வு' ஒப்பந்தத்துடன் வண்டி ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிக்காமல் உள்ளது என நினைக்கிறேன்.

வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் கூட இங்கு வந்து வண்டி ஓட்டினால், "இவன்லாம் எங்கயாவது விழுந்து சாகத்தான் போறான்" என்று என்னும் அளவிற்கு நம்மாட்கள் வைத்து விடுவார்கள்.

ஓர் ஆள் 'எப்படியாவது' 10 நிமிடத்தில் வீடு வந்து சேருகிறார் என்றால், கொஞ்சம் பொறுமையாக, எல்லா விதிகளையும் மதித்து சென்றால், அவர் உட்பட அனைவருமே 15 நிமிடங்களில் வீட்டிற்கு போகலாம். "விடுவமா, நாங்க .எங்களுக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவால்ல. உனக்கு ஒரு கண்ணாவது போகணும்" என்றல்லவா உள்ளோம்.

18 comments:

 1. வாகன ஒட்டிகளைப் பற்றி அலசி ஆராய்ந்து விட்டீர்கள்

  ReplyDelete
  Replies
  1. அட ஆமாண்ணே. அவங்க பண்ற அட்டூழியத்துக்கும் அளவே இல்லாம போயிடுச்சு. அதான் என்ன பண்றதுன்னு தெரியல. நாம என்ன அந்நியன் மாதிரி ஆளையா வெட்ட முடியும். நாம பெனாத்தற இடம் இங்கதான். அதான்.

   Delete
 2. அருமை! சென்னையில் வீட்டை விட்டு வெளியே போனவர்கள் பத்திரமாகத் திரும்பி வருவது அவர்கள் ஆயுசு கெட்டி என்பதால்தான்!

  ReplyDelete
  Replies
  1. 'ஆயுசு கெட்டி' அளவுக்கு மோசம் இல்ல. ஆனாலும் ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கும்.

   Delete
 3. 10 வருடம் முன்பே தாங்க முடியவில்லை... போன வருடம் சென்ற போது "ஐயோ...!" இனி வருங்காலத்தில் "அய்யய்யோ"...?

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தனபாலன். ரொம்ப நாளாக இந்தப் பக்கமே காணோம்.
   \\போன வருடம் சென்ற போது "ஐயோ...!" இனி வருங்காலத்தில் "அய்யய்யோ"...?\\
   என்ன செய்வது? வண்டிகள் அதிகரிக்கும் அளவிற்கு, சாலைகள் மேம்படுத்தப்படவில்லை. ஆனாலும், தனி மனித ஒழுக்கம் இருந்தாலே போதும். நமக்கு அது என்ன செய்தாலும் வராது.

   Delete
 4. சென்னையில் இவர்கள் எல்லாம் சேர்ந்து தரும் ஆபத்தை ஊரில் ஒத்தை ஆளாக தரும் ஒரு வாகனம் இருக்கிறது. அது தான் தனியார் பஸ்கள். எதிரில் வரும் போதே அலறி அடித்துக்கொண்டு ஒதுங்க வேண்டியதாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. அதுக்கும் தனியா ஒரு பதிவ போட்டுட்டா போகுது சிவா..

   Delete
 5. வாகன ஆபத்துகளின் வகைகளைச் சொல்லியிருக்கிறீர்கள்...
  ஆனால், அதை காமெடியுடன் சுவாரஸ்யமாகச் சொல்ல்யிருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா.. உண்மையில் இது ஒரு எரிச்சல் பதிவுதான். ஆனால், படிக்கும் மக்களின் நலன் கருதி, மாற்றி விட்டேன்.

   Delete
 6. Unmai ayya. My relative son was hit by a two wheeler in omr last year and died on spot. Who will bring him back now

  ReplyDelete
  Replies
  1. Sorry sir. People are not understanding that accidents are unexpected. அது சரி. சுனாமி வருதுன்னு சொன்ன உடனே, குடும்பத்தோட சுற்றுலா மாதிரி பாக்கப்போன ஆளுதான நம்மாளுங்க.

   Delete
 7. ஒரு பி.ஹெச்.டி யே பண்ணிட்டிங்களே.... அருமை... அருமை...

  ReplyDelete
  Replies
  1. அப்படி எல்லாம் ஒன்னுமில்லீங்க. தெனம் தெனம் பாக்குறதுதான. வருகைக்கு நன்றி நண்பரே.

   Delete
 8. The point is, If the two wheelers are not careful, they are the one getting impacted heavily. Their entire life will be gone...

  I have the live example.. One drunken Motor cyclist came opposite direction in 80 KM speed - hit a cyclist - got slide on the road and hit my car and died on the spot due to head injury. But I am the culprit now.. everybody told that car hit the motor cycle.. Indian rule is whichever vehicle is bigger, they have to take t the accident ownership. Now I running between court, Lawer and insurance company.

  ReplyDelete
  Replies
  1. You are right. Anyone who sees the accidents, will think in that manner only. Anyway, I hope you'll come out of this issue soon.

   Delete
 9. \\வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் கூட இங்கு வந்து வண்டி ஓட்டினால், "இவன்லாம் எங்கயாவது விழுந்து சாகத்தான் போறான்" என்று என்னும் அளவிற்கு நம்மாட்கள் வைத்து விடுவார்கள்.\\ Loved this line.. LOL..

  ReplyDelete
  Replies
  1. Thanks Anony.. உண்மையிலேயே அது ஒரு கடுப்புல எழுதுனது.

   Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..