Thursday, April 28, 2016

மாற்றான் தோட்டத்து மல்லிகைகள்

கொஞ்சம் வித்தியாசமாக மொழிக்கொன்றாக ஒரு படம் பார்ப்போமே என நினைத்தேன். விளைவு, ஒரு பதிவு.

ஜாலி LLB என்கிற மனிதன் - ஹிந்தி:


எப்போது இணையம் வந்ததோ, அப்போது இருந்தே ஒரு படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது என்றால், அதை உடனே அதனை தரவிறக்கம் செய்து பார்த்து விடுவேன். தமிழில் தோன்றினால் பார்ப்பேன். அதனாலேயே தமிழில், அது நன்றாகவே இருந்தாலும் பிடிப்பதில்லை.

இப்போது 'தோழா' படம் கூட அங்கங்கே பார்த்தேன். எனக்கு என்னவோ பிடிக்கவில்லை. கண்டிப்பாக காதல் இருந்தே ஆக வேண்டும் என்று கட்டாயமா என்ன. The Intouchables படத்தில் வருவது போல நாகார்ஜுனாவிற்கு திருமண வயதில் பெண் இருந்தார் என வைத்திருக்கலாமே, என்றுதான் தோன்றியது. சரி பரவாயில்லை. நம்ம உதயநிதி படத்தை தொலைக்காட்சியில் கூட பார்க்க முடியாது, எனவே, மனிதன் படத்தை ஹிந்தியிலே பார்த்து விட்டேன்.


ஒரு பணக்கார பையன் ஏற்படுத்தும் விபத்து. அது நீதிமன்றத்தில் எப்படி விளையாடுகிறது, இதில் குடி போதையில் வண்டி ஓட்டி, நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றிக் கொன்ற ஒரு பணக்காரன், அவனுக்காக வாதாடும் இந்தியாவின் பெரிய வக்கீல், இதில் ஆர்வக்கோளாறில் உள்ளே வரும் இளம் வக்கீல், இவர்களுக்கு இடையேயான கதை.


படம் பாதிக்கு மேல், நீதிமன்றத்தில்தான் நடக்கிறது. அவ்வப்போது நாம் கேள்விப்பட்ட, மருத்துவரின் 15 வயது மகன் பிரசவம் பார்த்தது, இசையைத் திருடியவர்கள் மீது வழக்கு என சில நகைக்க முடியாத நகைச்சுவைக் காட்சிகள். அவ்வளவு ஒன்றும் நன்றாக இல்லை எனலாம். சத்தியமாக உதியநிதிக்கு சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை.

படத்தில் ஒளிப்பதிவு கோணங்கள் கூட மாறியது போல தெரியவில்லை. எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம். ஒரு இயக்குனரின் வேலை என்ன. தன்னுடைய கதை, அடுத்தவருடைய கதை என எதுவாக இருந்தாலும், கதை, திரைக்கதை, வசனங்களை கொடுத்து இயக்கினால் கூட சரி எஸ்.பி.முத்துராமன் போல. ஆனால், ஒரு வேற்று மொழிப்படம், அதை அப்படியே ஆட்களை மட்டும் மாற்றி, வசனங்களை அப்படியே தமிழ்ப்படுத்துவதற்கு எதற்கு ஒரு பெரிய இயக்குனர். நண்பன் படம் பார்த்தது முதலே எனக்கு இந்த சந்தேகம். யாராவது தெளிவாக விளக்கினால் பரவாயில்லை.

இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் உணர்ச்சியும், கண்ணீரும் பொங்க நாயகன் நீண்ட வசனம் பேசும் காட்சி வரும். அதில் உதயநிதியைக் காண எனக்கு சக்தி இல்லையப்பா. எனக்குத் தெரிந்து தமிழுக்கும், ஹிந்திக்கும் தெரிந்த ஒரே வித்தியாசம், ஹிந்தியில் நாயகன் மீரட்டில் இருந்து டெல்லி போவார். நாயகியிடம் 2 மணி நேரத்தில் தேவையென்றால் வந்து விடுவேன் என்பார். இந்தப் படத்தில் பொள்ளாச்சியில் இருந்து சென்னை போவாராம். தூரமும், நேரமும் அதிகம். படத்திலும் 2 பாட்டை வைத்து நேரத்தை இழுத்து விடுவர் என நினைக்கிறேன்.

ஆக்சிடெண்ட் (Accident) - கன்னடம்:

ஜாலி LLB பார்த்தவுடனே இந்தப் படமும் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பே பத்தரிக்கை, அரசியல் என எல்லோரையும் கிழி கழி என கிழித்திருப்பார்கள். அதிலும் இதே கதைதான்.

போதையில் விபத்தை ஏற்படுத்தும் பெரிய அரசியல்வாதியின் மகன், அதைக் கண்டு பிடித்தும் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கும் காவல்துறை (கண்டு பிடித்த அதிகாரியை கட்டாய விடுமுறையில் அனுப்புவது, ), அதை வைத்து எப்படியாவது பரபரப்பை உண்டாக்க நினைக்கும் பத்திரிக்கையாளர் (அவர் நீதிக்காக போராடுவதை விட இது ஒரு சென்சேஷனல் நியுஸ் என பரபரப்பார், விபத்தில் தப்பியவரை அதை நினைவூட்டி அழ வைத்து படம் எடுத்துக் கொள்வார்), விசுவாசம், பணத்திற்காக சிறை செல்லும் வேலைக்காரர், அதையும் அரசியல் ஆதாயத்திற்கு உபயோகிப்பது என பாத்திரங்களும், அட்டகாசமான திரைக்கதையும் உள்ள படம். இசை இளையராஜா என்பதால்தான் இந்தப் படமே எனக்கு தெரிய வந்தது.


பாடல்கள், குலுக்கல் நடனம் என எதுவும் இல்லாமல் 1980களில் படமா என ஆச்சரியமாக உள்ளது. இப்படத்தை இயக்கிய சங்கர் நாக் ஒரு விபத்தில் இறந்து போய் விட்டார். அதற்கு தனியாக பின்னணி காரணங்களை கன்னடக்காரர்களிடம் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். எனக்கு கொஞ்சம் கொஞ்சம் கன்னடம் தெரியும். மற்றபடி மொழி ஒரு பிரச்சினையாக இருக்காது. நம்பிப் பார்க்கலாம்.

சார்லி - மலையாளம்:

எனக்கு மௌன ராகம் கார்த்திக்கின் நவீன அவதாரம் போல தோன்றியது, இந்தப் படம் பார்த்தபோது. ஒரு வேளை இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் அந்த கார்த்திக்தான் சரியான பொருத்தம். அடுத்த நொடி பற்றிக் கவலைப்படாமல், மற்றவர்களை சந்தோஷப்படுத்தி வாழும் மனிதனும், அவனைத் தேடி அலையும், அதே போன்ற பெண்ணைப் பற்றியுமான கதை. தமிழில் சரியாக வராது.


மலையாளத்தில் மட்டும் எப்படி இப்படி கதையே இல்லாமல், அல்லது ஒரு வரிக்கதையை மட்டும் வைத்து நல்ல படம் கொடுக்கிறார்கள் என தெரியவில்லை. இதே போல பெரிதாக கதை இல்லாமல், ஆனாலும் ரசித்த படங்கள் ஓம் சாந்தி ஒஷானா, மகேஷிண்டே பிரதிகாரம் போன்றவை. தமிழில் இதே போலவே எனக்கு தெரிந்த ஒரே படம் களவாணி தான்.

க்ஷணம் (Kshanam) - தெலுங்கு:

துணை எழுத்து (?), சரி விடுப்பா, சப் டைட்டில் இல்லாமல்தான் பார்த்தேன். அவ்வளவாக புரியவில்லை. மலையாளம் அவ்வளவு பிரச்சினை இல்லை. தெலுங்கு கொஞ்சம் கஷ்டம். ஆனாலும் ஒரு நல்ல படம். மீண்டும் தெளிவாக பார்த்து, நன்றாக இருந்தால், மீண்டும் இதைப்பற்றி எழுதுகிறேன். தெலுங்கு புரிந்து கொள்வேன், நல்ல படங்கள் பார்ப்பேன் என நீங்கள் நினைத்தால், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படமே இது. சிபிராஜ் தமிழில் நடிக்கப் போகிறாராம். எனவே, சீக்கிரம் தெலுங்கிலேயே பார்த்து விடுங்கள்.

தி ஹேட்புல் எய்ட் (The Hateful Eight) - ஆங்கிலம்:

இந்தப் படமும், தி ரெவெனெண்ட் (The Revenent நான் செத்துப் பொழச்சவன்டா, தமிழில் சரியா?) படமும் தரவிறக்கம் செய்து விட்டாலும், பார்க்காமலே இருந்தேன். இரண்டு படங்களுமே இரண்டரை மணி நேரத்திற்கு அதிகம் என்பதால், கொஞ்சம் சோம்பேறித்தனம். ஆனாலும், ஒரே நாளில் இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்த்து முடித்து விட்டேன். ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக போனாலும், போகப் போக சுவாரஸ்யமாக இருந்தது. அதுவும், இந்த சென்னை வெயிலுக்கு, இந்த இரண்டு படங்கள் பார்க்கும் போது, எனக்கே சற்று குளிரத்தான் செய்தது.


டிகாப்ரியோ படம் அமைதி என்றால், டரண்டினொ படம் அதிரடி. அவரது பாணி நக்கல் வசனங்களும் முன்னதை விட சற்று சுவாரஸ்யம் அதிகமாகவே இருந்தது. ஒரு பெண் கைதி,அவளை தூக்கிலிட கூட்டிப் போகும் ஒருவர், வண்டி ஓட்டுபவர், நடுவில் உதவி கேட்டு, உடன் வரும் இருவர், செல்லும் வழியில் தங்கும் விடுதியில் ஏற்கனவே இருக்கும் மூவர், விடுதியின் உதவியாளர் என எட்டு பேர். கணக்கு இடிக்குதே என்கிறீர்களா, இவர்களில் நால்வர் அந்த பெண் கைதியை தப்பிக்க வைக்க வந்திருப்பவர், இருவர் அப்பாவி, ஒரு ஆள் ஒளிந்து கொண்டு என் கணக்கில் வரவில்லை. என சுவாரஸ்யமாக போகும் படம். குழம்ப வேண்டாம். பார்த்து ரசியுங்கள். வன்முறை அதிகம். அதனால், பாருங்கள். ரசிக்க முடியுமா என தெரியவில்லை. கண்டிப்பாக இரண்டு படங்களையும் பார்த்திருப்பீர்கள், இல்லையென்றாலும் பார்க்கலாம்.

தெறி - தமிழ்:

கடைசியாக திரையரங்கம் சென்று பார்த்தாகி விட்டது. மகளுடன்தான் போனேன். முதல் முறையாக அழாமல், தூங்காமல் பார்த்தாள். எனக்குத்தான் தூக்கம் வந்தது. சில காட்சிகளில் சற்றே பயந்தாலும், பெரிதாக அழவில்லை. ஒரு வார நாள், அதுவும் திங்களன்று, நாமக்கல் போன்ற ஊரில், பாதிக்கு மேல் கூட்டம், அதுவும் படம் வந்து 10 நாள் கழித்து. அனைவரும் குழந்தை குட்டியுடன். ஏன் வெயில் இப்படி அடிக்காது, மழை இப்படி ஊத்தாது?


நமக்கு என்னத்த சொல்ல. படத்தில் புதிதாக ஒன்று கூட இல்லை. முன்பெல்லாம் பொதிகையில் திரை மாலை என்ற நிகழ்ச்சி போடுவார்கள். ஒவ்வொரு படத்தில் இருந்தும் சில காட்சிகள் அல்லது பாடல்கள் என. அதே போலவே இருந்தது. கேரளாவில் விஜயை ஒருவர் பழைய பெயர் சொல்லிக் கூப்பிட்டதும் ஒரு முக பாவனை காமிப்பார் பாருங்கள். முடியல.

பொதுவாக மற்ற படத்தில் இருந்து சுட்டாலும், படம் பார்க்கும்போது அது நம் நினைவுக்கு வராமல் செய்ய வேண்டும். தனி ஒருவன் போல. ஆனால், இது படத்தின் பெயர் உட்பட அனைத்து படங்களும் நினைவுக்கு வருகின்றன. அப்படி இல்லையென்றாலும் அவர்களே நினைவூட்டுகிறார்கள். ("பெரிய வேட்டையாடு விளையாடு கமலு"). தான் செய்யும் வேலை பிடிக்காத, வருங்கால மாமனாருடன் பேசும்போது திடீரென அடியாட்கள் கொள்ள வர, அவர்களைத் தாக்கும்போது மாமனார் கோவித்துக் கொண்டு செல்லும் காட்சி எதில் என முதலில் நினைவுக்கு வரவில்லை. பிறகு வந்து விட்டது. முதல்வன்.

உண்மை என்னவென்றால், வேதாளம் படத்திற்கும், இந்தப் படத்திற்கும் 2 வித்தியாசங்கள்தான்.
1. அதில் ரவுடி, இதில் போலிஸ்.
2. அதில் தங்கை, நினைவுகள் போய் விடும். (நியாயமாக கெட்டவர்களிடம் இருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்றினால் காதல்தான் வர வேண்டும். வித்தியாசமாக இந்தப் படத்தில் அண்ணன் பாசம் வரும்.) தெறியில் மனைவி, இறந்து விடுவார்.

ஒரு ஆளுக்கு ஒன்று இரண்டு இரண்டு படங்களும் பிடிக்கும் அல்லது இரண்டுமே பிடிக்காது. ஒன்றுதான் பிடிக்கும், ஒன்று பிடிக்காது என்றால், அது பொய். படத்தில் பின்னணி இசை பரவாயில்லை. பாடல்கள் மொக்கை. அது ஏன் சைந்தவி பாடும் பாடல்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறதோ தெரியவில்லை.

என் பெண்ணிற்கு பிடித்ததே. விஜய் 60க்கு காத்திருக்கோம்.

4 comments:

  1. Sir, nice article, watch "AA dinagalu" Kannada movie, it's excellent, that's music also from ilayaraja, it's about a real incident

    ReplyDelete
    Replies
    1. Thank you Ganesh. I heard the songs. But, yet to see the movie. Surely will do.

      Delete
  2. நன்றாக அலசி உள்ளீர்கள்

    தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
    http://tebooks.friendhood.net/t1-topic

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. தேவைப்படும்போது செய்கிறேன்.

      Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..