Friday, May 22, 2015

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

விமர்சனம்:

நான் முந்தைய பதிவில் கூறியது போல, உத்தம வில்லன் மட்டுமே பார்த்தேன். அதன் பிறகு வேறு எதுவும் பார்க்கவில்லை. இந்தியா பாகிஸ்தான் படம் நன்றாக உள்ளது எனப் படித்தேன். விஜய் ஆண்டனியை நான், சலீம் படங்களில் பேசா மடந்தையாக ரசிக்க முடிந்தது. ஆனால், அவரது காமெடி நமக்கு பிடிக்குமா என்று தெரியாததால் பார்க்கவில்லை. 36 வயதினிலே படத்திற்கு ரொம்ப நாள் முன்பே How Old Are You? பார்த்து விட்டேன். முடிந்தால், மனைவியைக் கூட்டிக் கொண்டு போய் பார்க்கலாம் என்றுள்ளேன்.

சமீப காலங்களில் எல்லா படங்களும் நன்றாக உள்ளது, ஓரளவு ஓடுகிறது என்று படிக்கும்போது தமிழ் சினிமா பிழைத்து விடும் போல உள்ளது. கண்மணி - காஞ்சனா இரண்டுமே நல்ல வெற்றி, வை ராஜா வை - உத்தம வில்லன் இரண்டுமே சுமாரான வெற்றி, இந்தியா பாகிஸ்தான், புறம்போக்கு, 36 வயதினிலே, இவை யாவும் நன்றாக உள்ளன என்ற மக்கள் கருத்து. எந்த படமும் மொக்கை, ஊத்திக்கொண்டது எனக் கேட்கவில்லை. எனவே, தமிழ் சினிமா நல்ல திசையில் பயணிக்கிறது என நினைக்கிறேன். இதே போல 'மாஸ்' படமும் தொடர்ந்தால் நல்லது.

சொல்ல மறந்து விட்டேனே. அருள்நிதியின் 'டிமாண்டி காலனி' படத்திற்கும் காத்திருக்கிறேன். ஏனென்றால், சென்னையின் திகில் இடங்கள் பற்றி ஏற்கனவே தெரியும், அதே போல ஒரு இடம் பயமுறுத்துவது போல இருக்கும் என்றால், நான்கு இளைஞர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தோன்றுமோ, அதே போன்ற கதை போல இருக்கும் போல. ஏமாற்றாமல் இருந்தால் சரி.

இவரா இப்படி (அ) இவர் இப்படியா?

நமக்கு முன் பின் தெரியாத, அல்லது பழகி இராத மனிதர் ஒரு தப்பான ஆள் என அப்போது நாம் நினைப்போம்?

1. அவரை முதலில் பார்த்தவுடன் நம் மனதில் தோன்றும் எண்ணம். ஆள் கருப்பாக, குண்டாக, பரட்டை தலை போல, லுங்கி அல்லது கசங்கிய உடை என்று இருந்தால், நம்மையும் அறியாமல் "மோசமான ஆளா இருப்பான் போல" என்று தோன்றும். 

2. அவர் பற்றிய செவி வழி தகவல்கள் அல்லது, நமக்கு தெரிந்த யாரோ ஒருவர் சொல்லும் எதிர்மறைக் கருத்துகள்.

3. இதுவே அவர் ஒரு பிரபலமாக இருப்பின், நமக்கு பிடித்தால் சரி, பிடிக்கவில்லை எனில், அவரைப் பற்றிய எதிர் மறையான செய்தி எதில் வந்தாலும், உடனே "ஓ அப்படியா" என நாமே இன்னும் சில கற்பனைகளை சேர்த்துக் கொள்வோம்.


விஜயகாந்த்: பொதுவாக இவரைப் பற்றி 'படித்தவர்கள்' யாரும் ஒழுங்காக சொல்வதே இல்லை. என்னைப் பொருத்தவரை இவர் ஒரு அப்பாவி. விவரம் தெரிந்தவர்கள் இவரை நன்கு பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். 'பங்காளி' என்ற சத்தியராஜ் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் அவரை மதுவுக்கு அடிமையாக்கி, தனது சொல்படி ஆட்டி வைத்துக் கொண்டிருப்பார்கள். இவரும் அதே போலத்தான்.

பழைய படங்களில், அதாவது 80களில், 'சூப்பர் டைட்டில்ஸ் - கரிசல் ராஜா' என்று வரும் பார்த்திருப்பீர்களா என்று தெரியாது. அவரின் பேட்டி ஒரு முறை பல ஆண்டுகளுக்கு முன், குமுதத்திலோ, விகடனிலோ வந்திருந்தது. அதில் அவர் சொன்ன ஒரு விஷயம் இன்னும் என் மனதில் உள்ளது. "எனக்கு எல்லா நடிகர்களையும் தெரியும். என் கல்யாணத்திற்கு எல்லாரையும் பாத்து பத்திரிகை கொடுத்திருந்தேன். ஆனா, என்னையும் ஒரு சக தொழிலாளியா மதிச்சு, என் கல்யாணத்துக்கு வந்த ஒரே ஆள், விஜயகாந்த் மட்டும்தான்" என்று சொல்லி இருந்தார்.

அதே போல, அவரது கட்சியில் ஜெயித்து, சட்டமன்ற உறுப்பினர் ஆகி, இப்போது அம்மா பக்கம் தாவி உள்ள அருண் பாண்டியன் அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னது. "நான் கஷ்டப்பட்ட காலத்துல எனக்கு உதவி செஞ்சது விஜயகாந்த் தான். அப்புறம் படத்துல நடிக்க ஆரம்பிச்ச பின்னாடி, நான் ஒரு முடிவு செஞ்சேன். என்னோட நூறாவது படம் நானே இயக்கணும், அதுல கண்டிப்பா விஜயகாந்த் நடிக்கணும். அதுக்காக காத்திருந்து நான் இந்தப் படத்த எடுக்கிறேன்" என்று தனது நூறாவது படமான 'தேவன்' பட வெளியீட்டின்போது கூறினார்.

இனி நான் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும் மக்களுக்குத் தெரியும். இருந்தாலும், விஜயகாந்த் தனக்கு முக்கிய திருப்பு முனையாக அமைந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் இயக்குனர் சந்திரசேகர், தனது மகன் விஜயை தமிழ் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்க கஷ்டப்பட்டபோது, விஜயுடன் கவுரவ தோற்றத்தில், சந்திரசேகர் இயக்கத்தில் செந்தூரப்பாண்டி படத்தில் நடித்தார். அதே போல சூர்யாவுக்காக 'பெரியண்ணா' படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்தார். நடிகர் சங்க தலைவராக இருந்தபோது, சிங்கப்பூர் மலேசியாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, நடிகர் சங்க கடனை அடைத்தார். காவல் துறையினருக்கு ஒரு மதிப்பை தன் படங்கள் மூலம் அளித்தார். அதே போல, முடிந்தவரை, சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நடித்தார். தனது அலுவலகத்தில் எப்போதும் அன்னதானம் அளிப்பார்.

கொஞ்சம் சுயமாக யோசித்து, சொந்தமாக முடிவுகள் எடுப்பார், சொந்தக்காரர்களை விட்டுவிட்டு வேறு சிறந்த ஆட்களை தன்னை சுற்றி வைத்துக் கொள்வார் என்றால், என் ஓட்டு இவருக்குத்தான். ஆனால், நடக்குமா எனபது சந்தேகம்தான்.

ஒலகப்படம்:

கல்லூரி வந்து சேரும் வரை, தமிழ்ப்படங்களைத் தவிர வேறு எதுவும் பார்த்ததில்லை. ஆங்கிலப் படம் என்றாலே 'ச்சீ' என்று எல்லார் முன்னாலும் சொல்லி விட்டு, பின் சத்தம் இல்லாமலும், யாரும் இல்லாமலும் பார்த்தே பழக்கம். ஜாக்கிசானைத் தவிர வேறு எந்த வெளிநாட்டு நடிகரையும் தெரியாது. கல்லூரி வந்த பிறகுதான் ஓரளவு ஆங்கிலப் படங்களும், பிற திராவிட மற்றும் ஹிந்தி மொழிப் படங்கள் பார்க்க ஆரம்பித்தோம். அதுவும், ஏதாவது ஒரு படம் வேறு மொழியில் இருந்து ரீமேக் செய்யப்பட்டால், அதைப் பார்த்து விட்டு, பின் அந்த மொழியிலும் பார்ப்போம். போக போக, முதலில் அந்த மூலப்படத்தை பார்த்து விட்டு, தேவைப்பட்டால் நகலைப் பார்க்க ஆரம்பித்தோம்.

அதன் பின், பதிவுலகம் வந்த பின் பல பதிவர்கள் மூலமாக பல்வேறு மொழிப் படங்களைப் பற்றி தெரிந்தாலும், எல்லாமே பார்க்க மாட்டேன். துப்பறிவது, மர்மம், பேய், சண்டைப் படங்களையே பொதுவாக தேர்வு பார்ப்பேன். அவ்வப்போது காமெடி. அவ்வப்போது சில 'ஒலக படங்களைப்' பார்த்தாலும் அவை எனக்கு ஏனோ அவ்வளவாக பிடிக்கவில்லை. எந்த படமாக இருப்பினும், அதில் பல காட்சிகளை நம் அனுமானத்திற்கு விட்டு விடுவது ஏன் என எனக்குப் புரியவில்லை. எல்லாப் படங்களிலும் லாஜிக் நிறைய இடித்தது. ஆனாலும், நம்மை அதைப்பற்றி யோசிக்க விடாமல், "ஒரு வேளை இப்படித்தான் இருக்குமோ, இல்ல அப்படி இருக்குமோ" என்று வேறு வகையில் நம் கவனத்தை திருப்பி விடுகிறார்கள்.

விஸ்வரூபம், உத்தமவில்லன் படங்களும் கொஞ்சம் இப்படித்தான் சில விஷயங்களை நம் அனுமானத்திற்கு விட்டிருந்தன. கமல் ரசிகன் என்று சொல்லிக் கொல்லும் (சரியாகத்தான் டைப்பி உள்ளேன்) எனக்கே அது பிடிக்கவில்லை. அப்புறம் எப்படி இந்த உலகப் படங்களை நான் ரசிப்பது.

அதற்கும் வழி உள்ளது. நிறைய நேரம் இருக்க வேண்டும், தனியாக இருக்க வேண்டும். ஒரே படத்தை குறைந்த பட்சம் இரண்டு முறை பார்ப்பதற்கு பொறுமை வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியம் "யார் யாரெல்லாம் உத்தமர்களோ, அவர்களுக்கு மட்டுமே இந்தப் படம் புரியும்" என்ற மனநிலை. கீழே வரும் காணொளியில் 2:01:24ல் இருந்து பார்க்கவும். அதன் பின் "நேக்கு புரிஞ்சிடுத்து" என்று சொல்லுவீர்கள்.


இவையெல்லாம் இருந்தாலும், "ஒரு லக்கினத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவனாக" இருக்க வேண்டும். ஒலகப்பட விமர்சகராகப் போகும் எனக்கு, நானே இந்த காணொளியை சமர்ப்பித்துக் கொள்கிறேன்.


ஆமாங்க. நானும், இனி ஏதாவது ஒலகப்படம் பாத்து விமர்சனம் எழுதலாம்னு இருக்கேன். ஏன்னா, ஏற்கனவே நிறைய பேர், நெறைய எழுதி இருக்காங்க. அங்கங்கே கொஞ்சம் எடுத்து, பட்டி, டிங்கரிங் எல்லாம் பாத்து போட்டா, ஒரு பதிவு சூடா தயார்.

Friday, May 8, 2015

அம்மா!


அம்மா. உலகத்தில் 99 சதவிகித பேருக்கு பிடித்த (அல்லது பிடிக்கும் என்று சொல்கின்ற) பெண். நான் ஒரே மகன்தான் என்றாலும், செல்லம் எல்லாம் கிடையாது. பத்தாம் வகுப்பு படிக்கும்போது கூட துரத்தி துரத்தி அடித்துள்ளார்கள். நான் பொய் சொல்லவில்லை. எதற்காக, எதுவாக இருந்தாலும் ஓரளவுதானே? அளவிற்கு மீறினால் அடிதான்.

சிறு வயதிலேயே புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து விட்டேன். அதுவும் குறிப்பாக சாப்பிடும்போது படித்துக் கொண்டே சாப்பிடுவேன். ஓரிரு முறை "சாப்டுட்டு படிடா" என்பார்கள். கேட்கவில்லை என்றால், முதுகு பழுத்து விடும். அதே போல தேர்வு நேரங்களில் "மத்த நாள் மாதிரி இல்ல. பரிட்ச வருது. இப்ப பாடத்த படி. லீவுல கத புக்க படிக்கலாம்" என்பார். கொஞ்ச நேரம் மட்டும் படிக்கறேன் என்று ஆரம்பிப்பேன். அப்புறம், ம்ம்ம் (அழுவுறேங்க).

அந்த காலத்து SSLC. எனவே நான் ஐந்தாவது படிக்கும் வரை அவரே சொல்லித் தந்தார். நானும் டை கட்டி ஸூ போட்டுக் கொண்டு LKG போக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், பக்கத்தில் அப்படி பள்ளியும் இல்லை, பணமும் இல்லை. எனவே 6 வயதில் காது தொட முடிந்தவுடன் (புரியும் என்று நினைக்கிறேன்) ஒன்றாம் வகுப்புதான் சேர்க்க முடியும். அப்போதெல்லாம் மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கிலமே வரும். ஆனால், எனக்கு வீட்டிலேயே ABCD, அ ஆ இ ஈ எல்லாம் சொல்லிக் கொடுத்தார்.

பத்தடி எடுத்து வைத்தால் பள்ளிக்கூடம். தலைமை ஆசிரியரும் சொந்தக்காரர்தான். எனவே, சும்மாவே போய் கொஞ்ச நாள் பள்ளியில் இருந்தேன். ஆறாம் வகுப்பு பக்கத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பள்ளியில்தான் அனைவரும் சேருவார்கள். சைக்கிள் தேவை. ஆனால், என்னையோ 5 கிலோ மீட்டர் தள்ளி உள்ள பள்ளியில் சேர்த்தார். எங்க ஊரில் இருந்து யாரும் அங்கு சேர மாட்டார்கள். பேருந்தில்தான் போய் வர வேண்டும். சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்று சொல்லி விட்டார். இல்லையென்றால் நாமக்கல்லில் இருந்து அந்தப் பள்ளிக்கு எங்கள் ஊர் வழியாகத்தான் போக வேண்டும். எனவே, நிறைய ஆசிரியர்கள் அப்படித்தான் போவார்கள். அவர்களுடன் போய் வரலாம். அதை விட முக்கியம். அப்போது இருந்த தலைமை ஆசிரியர் சொந்தக்காரர். எனக்கோ எரிச்சல்.

அப்போது எட்டாவது வரையே இலவச பாஸ். "சரி அப்புறம் சைக்கிள் வாங்கித்தானே ஆகணும்" என்று விட்டு விட்டேன். என் நேரம், நான் எட்டாவது வரும்போது கருணாநிதி பனிரெண்டாம் வகுப்பு வரை இலவச பாஸ் என்று சொல்லி விட்டார். எப்போதும் மற்றவர்களிடம் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும், அதாவது தனித்துத் தெரிய வேண்டும் என்று சொல்லுவார். அது நல்ல விதமாக இருக்க வேண்டும், பைத்தியகாரத்தனமாக அல்ல. ஏனென்றால் என்னை அங்கெ சேர்த்த வேண்டாம் என்று எல்லோரும் சொன்னார்கள். "ஊர்ல எல்லாப் பசங்களும் இங்கதான் போறாங்க. அவங்களோட ஒண்ணா போயிட்டு வரலாம், அத விட்டுட்டு, இப்படி தனியா போவனுமா" என்றார்கள். 

தேர்வுகளில் மிக கடினமான கேள்விகள், யாரும் பொதுவாக எழுதாத கேள்விகளையே எழுத சொல்லுவார். ஆசிரியர்கள் எல்லாம் திட்டுவார்கள். "நல்ல கையெழுத்து. அதனால் எல்லோரும் எழுதுற கேள்விக்கு பதில் எழுதுனா, ஒரு ரெண்டு வரி மட்டும் படிச்சிட்டு மார்க் போட்டுடுவாங்க. வேற கேள்வி எழுதுனா, அத படிச்சு, தப்பு எதுவும் இருந்தா மார்க் கொறஞ்சு போயிரும்" என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். என் அம்மாவோ, "மார்க் எல்லாம் வரும். நீ எழுது" என்பார். அதை விட முக்கியமாக அவர் சதவிகிதத்தை (percentage) விட சதமானமே (percentile) முக்கியம் என்றார். அதாவது, நான் 10 மதிப்பெண்களுக்கு மட்டும் எழுதினால் போதும், ஆனால், அந்த 10 மதிப்பெண்களை முழுதாக வாங்க வேண்டும். எனவே, தெரியவில்லை என்றல் ஏனோ தானோ என்றெல்லாம் எதையும் எழுதாதே, ஒழுங்காக தெரிந்ததை மட்டும் எழுது என்றுதான் சொல்வார்.

எனக்கு கணக்கு பிடிக்கும். அதற்கு அவர்தான் தூண்டுகோல். சிறு வயதில் ஊரில் உள்ள வயதான கிழவிகளிடம் கதைப்பாட்டு பாடச் சொல்லி என்னை விளக்கம் கேட்பார். "மேல கொஞ்சம் குருவி, கீழ கொஞ்சம் கதிரு, கதிரொக்குரு குருவி ஒக்காந்தா, ஒரு குருவிக்கு எடம் இல்ல. கதிருக்கு ரெண்டு குருவி ஒக்காந்தா, ஒரு கதிரு மிச்சம்" என்பது ஒரு புதிர். இது என்னிடம் கேட்கப்பட்டபோது நான் மூன்றாம் வகுப்பு படித்தேன். (இப்போதெல்லாம் இதை மூன்று வயதிலேயே சொல்லி விடுகிறார்கள்). அது மட்டுமில்லாமல், நான் புத்தகம் படிப்பதை அவர் தடுக்கவில்லை.

பத்தாம் வகுப்பு வந்தவுடன், கொஞ்சம் பயத்தில் "நல்லா படிக்கணும், இதுல விட்டா அவ்வளவுதான். எப்படியாவது ஸ்கூல் பர்ஸ்ட் வந்துடு, காசு கொடுத்து தினத்தந்தில வர வச்சுறலாம்" என்றெல்லாம் சொன்னார். நான் அவருக்கு அந்த செலவை வைக்கவில்லை. பத்தாம் வகுப்பிற்குப் பின், அவர் எல்லாமே என்னையே முடிவு எடுக்க சொல்லி விட்டார். அதன் பின், இன்று வரை, வீட்டில் எது செய்தாலும், என்னைக் கேட்டு விட்டுதான் செய்வார். நான் அவரைக் கேட்காமல் செய்தாலும் என்னை எதுவும் அவர் கேட்பதில்லை.

கல்லூரியில் சேர்ந்தால் பணம் அதிகம் தேவைப்படும் என்று சிங்கப்பூரில் தெரிந்த வீட்டிற்கு வேலைக்காக சென்றார். உண்மையில் நான் அப்போது வருத்தப்படவே இல்லை. "அப்பா, இனி நம்மள படி படின்னு தொந்தரவு செய்ய மாட்டாங்க" என்றுதான் எண்ணினேன். அங்கே அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்று பின்னால் உணர்ந்தேன். ஊரில், எப்போதும் அரட்டை அடித்துக்கொண்டு சுற்றிலும் தெரிந்தவர்களோடு இருந்து விட்டு, திடீரென யாரோ ஒருவர் வீட்டில், தனியாக, எங்கேயும் வெளியே போகாமல் இருக்கும் கஷ்டம் எனக்கும் சென்னை வரும்போதுதான் புரிந்தது.

அவரது திட்டமிடல் தெளிவாக இருக்கும். என்னிடம் அவர் சொன்னது "நீ காலேஜ் முடிக்கிற நாலு வருஷத்துக்கும் உனக்கு என்னென தேவையோ எல்லாமே வந்துடும். அதுக்கப்புறம் நீ சம்பாதிச்சு எங்களுக்கு கொடுக்கணும்னு அவசியம் இல்ல. உன்ன நீ பாத்துக்கிற மாதிரி இருந்துக்கோ" என்றார். இன்று வரை என்னுடைய சம்பளத்தை எதிர் பார்த்து அவர் இல்லை. தேவையில்லாமல் எதுவுமே வாங்கவில்லை. வீட்டில் டிவியே நான் வேலைக்கு போக ஆரம்பித்த பின்தான் வாங்கினோம். அதுவரை வீட்டில் சைக்கிள் கூட இல்லை. என் தாத்தாவின் பழைய சைக்கிள்தான்.

நான் சம்பாதிக்க ஆரம்பித்து கொஞ்சம் கன்னாபின்னாவென்று செலவு செய்ய ஆரம்பித்தவுடனே (புது அலை பேசி, மடிக்கணினி, ஐ-பாட்) உஷாராகி, மாதா மாதம் என்னிடம் இருந்த பணம் வாங்கி என் திருமணத்திற்கு தங்கம் வாங்கினார். அவரே சேமிக்கவும் ஆரம்பித்தார். அவருடைய ஆசை என்னவென்றால் எப்போதும் கடன் மட்டும் இருக்கக்கூடாது. எனவேதான் எதுவாக இருந்தாலும் முடிந்தவரை அது தேவையா என பார்த்து வாங்க வேண்டும் என்பார். அதனால்தான் கார் கூட வேண்டாம் என்றார். இந்த வீட்டுக் கடனைக் கூட எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடைக்க வேண்டும் என்பதுதான் அவர் ஆசை. இன்னும் கூட அவருக்கு என் சம்பளம் எவ்வளவு என தெரியாது, ஆனால் யாரிடம் எவ்வளவு கடன் வாங்கினேன், எப்படி கட்டிக்கொண்டு இருக்கிறேன், வங்கி வீட்டுக்கடனில் எவ்வளவு மீதி உள்ளது என்பது மட்டும் விசாரித்துக் கொண்டே இருப்பார்.

இதுவரை அவர் என்னிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று எதுவுமே கேட்டதில்லை. எனக்கு முதல் மாத சம்பளம் மட்டும் கையில் பணமாக கொடுத்தார்கள். அதை அப்படியே கொடுத்து விட்டேன். அதன் பின் ஒரு முறை ஆனந்த அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று ஒரு புடவை எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தேன். "என்கிட்டே காசு கொடு, எனக்கு என்ன வேணுமோ நான் எடுத்துக்கிறேன்" என்று அதிர்ச்சி அளித்தார். (இதே போல, இன்னும் கேவலமாக என் மனைவியிடமும் திட்டு வாங்கினேன்.அது வேறு கதை).

அவருக்கு சிறு வயதில் இருந்தே புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற ஆசை என நான் நினைக்கிறேன். எந்தக் கல்யாணத்திற்கு போனாலும் என்னை அப்படியாவது, முடிந்தவரு அங்குள்ள தெரிந்த செல்வாக்கான சொந்தக்காரர் யாரையாவது பிடித்து என்னை ஒரு புகைப்படமாவது எடுக்க எடுக்க வைத்து விடுவார். அப்படியாகவே என்னுடைய ஓரிரு சிறு வயது படங்கள் வீட்டில் உள்ளன. சம்பாதிக்க ஆரம்பித்த உடனே அவர் வாங்க வேண்டும் என்று என்னிடம் சொன்ன ஒரே விஷயம் கேமராதான். இப்போதும் கூட என் மகள் என்ன செய்தாலும் உடனே என்னை புகைப்படம் எடுக்க சொல்லுவார். ஆனால் அவர் இதுவரை ஒரு புகைப்படமும் எடுத்ததில்லை. நான் கேமரா கொடுத்தபோது கூட "எனக்கெதுக்கு, நீ எடு" என்றார்.

அவருடன் போனில் பேசுவது வாரம் ஒரு முறைதான். அவரும் தேவை இல்லாமல் எல்லாம் பேசவும் மாட்டார். கல்லூரிக் காலங்களில், வெளியில் பூத்தில் இருந்து போன் செய்ய வேண்டும், அதுவும் ஊரில் போன் கிடையாது. பக்கத்துக்கு வீட்டிற்கு போன் செய்து, சென்று கூட்டி வர வேண்டும். எனவே, தேவை இல்லாமல் போன் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அது இன்று வரை தொடர்கிறது.

நண்பர்கள் அனைவரும் "ம் சாப்டுட்டேன், ஆபிஸ் கெளம்பறேன். வந்துட்டேன், தூங்கப் போறேன், சரிம்மா, பாத்துகிறேம்மா" என்றெல்லாம் பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். திருமணம் நிச்சயம் ஆனவுடன், "ஏண்டா, ஆளுக்கு உன் ஆளுக்கு மட்டும் அர மணி நேரத்துக்கு ஒரு வாட்டி அப்டேட் கொடுப்ப. உங்க அம்மாகிட்ட வாரத்துக்கு ஒரு வாட்டி, ரெண்டு நிமிஷம் மட்டும் பேசுவியா" என்பார்கள். என் அம்மாவிற்கும் அது தெரியும். ஆனால், நானோ, என் அம்மாவோ இதுவரை அதைப் பற்றி கவலைப்பட்டதேயில்லை. ஆனால், சென்னைக்கோ அல்லது தூரமாக வேறு எங்கு சென்றாலும், சென்றவுடன் மட்டும் "நான் வந்து சேந்துட்டேன்" என்று மட்டும் சொல்லி விட வேண்டும். அது கல்லூரி முதல் இன்று வரை தொடர்கிறது.

இந்தப் பதிவு கூட அன்னையர் தினத்திற்காக இல்லை. இதே வாரம் வந்த என் அம்மாவின் (சான்றிதழில் உள்ள) பிறந்த நாளிற்காக. அவருக்கும் உண்மையான பிறந்த நாள் தெரியாது. எனவேதான் எனக்கு தேதி எல்லாம் மாத்தி எழுத வேண்டாம். சரியான தேதியே சான்றிதழ் எல்லாவற்றிலும் இருக்கட்டும் என்று சொல்லி விட்டார்.

என் அத்தையைப் பற்றி பதிவு போட்ட பின், அம்மா பற்றி சொல்ல வேண்டும் அல்லவா? அதுதான் இந்தப் பதிவு. இன்னும் கூட நான் இப்படி பதிவெல்லாம் எழுதுகிறேன், அதையும் கூட சில பேர் படிக்கிறார்கள் என்றெல்லாம் தெரியாது. எனக்கே அவரிடம் சொல்ல வெட்கமாக உள்ளது. அதில் இன்னும் அவரைப் பற்றியும் எழுதியுள்ளேன் என்று அவரிடம் சொன்னால் அவர் இன்னும் எவ்வளவு வெட்கப்படுவாரோ தெரியவில்லை.

Wednesday, May 6, 2015

உத்தம வில்லன்: லிங்குவிற்கு சங்கு?

படத்திற்கு பொதுவாக கலவையான விமர்சங்களும், கண்டிப்பாக கமலின் தீவிர ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்றும் சொன்னதால் படம் பார்த்து விட்டேன். எனது தீர்ப்பை நான் இறுதியாக கூறுகிறேன்.


படத்தின் பலம்:

1. பாத்திரங்களின் தேர்வு மற்றும் நடிப்பு. நீங்கள் எந்த விமர்சனம் படித்திருந்தாலும், அதில் யாருடைய நடிப்பையும் குறை சொல்லி இருக்க மாட்டார்கள். கமல் முதல் அவரின் வாகன ஓட்டியாக ஒரு காட்சியில் வரும் நடிகர் வரை அனைவரும் நன்றாகவே செய்திருப்பார்கள்.

2. ஒரு பிரபல பிரபல நடிகன் என்றால், அவன் மிக சந்தோசமாக இருப்பான். அவன் வாழ்வில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. சினிமாவில் காட்டுவதை விட அவன் மிக நல்லவனாக இருப்பான். சினிமாவில் அனைவரும், எல்லோருடனும் நட்பாக இருப்பார்கள், அவர்கள் குடும்பங்களில் எல்லாம் பிரச்சினையே இருக்காது என்று கண் மூடித்தனமாக நம்புவர்களை செவிட்டில் அடித்தது போல "இங்கேயும் நாத்தம்தான்" என்பது போன்ற கதை. (நமக்குப் பிடித்த ஆளைப்பற்றி கிசுகிசு வந்தால் அது கட்டுக்கதை, பிடிக்காத ஆளைப்பற்றி வந்தால், இன்னும் இதுக்கு மேல ஏதாவது இருக்கும் பேசுவது).

3. பாயாசத்திலோ, கேசரியிலோ அங்கங்கே பரவியிருக்கும் முந்திரி போன்ற வசனங்கள் மற்றும் காட்சிகள் (கமல் மகள் மற்றும் மகன் சார்ந்த காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்தது, "25 வருஷத்துக்கு முன்னாடி" என கொசுவர்த்தி சுத்தாமல் இரண்டு கடிதங்கள் மூலமே அதை சொன்னது, பட்டாபி பாஸ்கர் கண்ணீர் விட்டு அழுவார். கமல் கோபமாக சொல்லுவார் "அழாதே, உன் மூஞ்சுக்கு அது செட் ஆகலே").

4. வில்லுப்பாட்டுக்காரர் கலைமாமணி சுப்பு ஆறுமுகம், தெய்யம் கலை, பாலசந்தரின் நடிப்புத் திறமை போன்றவற்றை மக்களுக்கு தெரிய வைத்தது.

5. அழுது, கண்ணீர் சிந்தும் அளவிற்கு இறுதிக்காட்சி இருந்தாலும், அதை அப்படியே காட்சியாக்காமல் கடந்து சென்றது (இது பலமா பலவீனமா என சரியாக தெரியவில்லை)

படத்தின் பலவீனம்:

1. படத்தின் நீளம், அதில் வரும் உத்தமனின் கதை.

2. படத்தில் வரும் குறியீடுகள். அந்தக் கதைக்கு ஒருவர் கோனார் உரை வேறு அளித்துள்ளார். இதே போலத்தான் விஸ்வரூபம் படத்திற்கும் ஒரு காணொளி உள்ளது. இன்னும் நம்மூரில் பாதி பேர்க்கு மேல் உலகப்படம் எல்லாம் பார்ப்பதில்லை. அவர்களுக்கு படத்தில் வரும் குறியீடுகளும் தேவையில்லை. இரண்டரை மணி நேர பொழுதுபோக்கு மட்டுமே தேவை.

3. இசை. பொதுவாக கமல் கதை, திரைக்கதை எழுதி, யாரோ ஒருவர் இயக்கினால், கமல்தான் இயக்கினார் என்று ஊருக்கே தெரியும். இப்போது அதே போல ஜிப்ரான் பெயரில் அவரே இசை அமைக்கிறார் என நினைக்கிறேன். ஏனென்றால் இளையராஜாவே ஒரு முறை கமலுக்கு இசையமைக்கும் வகையில் நல்ல இசை ஞானம் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்.

4. முந்திரி பருப்பு நன்றாக இருந்தாலும் திகட்டிய பாயாசம்/கேசரி போல உள்ளது படம். (ஜெயராம் பாத்திரம் பார்க்கும்போது, ஒரு சாமானியன் எனக்கே தளபதி ஜெய்சங்கர் நினைவுக்கு வருகிறாரே, இவ்வளவு மோசமாகவா இருப்பது?)

சில எண்ணங்கள்:

கமல் ஒரு வேளை ஊர்வசிக்கு பதிலாக சரிகாவையும், ஆண்ட்ரியாவிற்கு பதிலாக சிம்ரன் அல்லது கவுதமியையும் மகள் மற்றும் மகன் பாத்திரங்களில்,இரண்டு மகள்களாக ஸ்ருதி, அக்ஷராவையும் போட்டிருந்தால் படம் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும்.

கமல் முன்பு எப்படி என்றால், ஒரு கமல் படம் (அவரே கதை, வசனம் எழுதுவது), இவை கண்டிப்பாக தோல்வியடையும். கமல் ரசிகர்களால் கொண்டாடப்படும், அடுத்த சில வருடங்களில் காவியமாக கூட மாறும். (அன்பே சிவம், மகாநதி) அடுத்து ஒரு காமெடி/மசாலா படம் (முழுவதும் மற்றொரு இயக்குனரின் கதை, வசனம், இயக்கத்தில் நடிப்பது). இது வசூல் ரீதியாக வெற்றி அடையும். ஆனால், அவர் இப்போது வசூல் ரீதியாக குறைந்த பட்சம் நஷ்டம் அடையாது என நினைப்பதை சொந்த தயாரிப்பிலும் (விஸ்வரூபம்), மற்றவைகளை அடுத்தவர் காசிலும் (ஆளவந்தான், மன்மதன் அம்பு, உத்தமவில்லன்) எடுக்கிறாரோ என தோன்றுகிறது.

ஏற்கனவே லிங்குசாமி அஞ்சானால் நோஞ்சான் ஆகிக் கிடக்கிறார். நீங்கள் இந்த படம் மூலம் அவருக்கு வசூலை கொடுத்து உத்தமன் ஆவீர்கள் என்று பார்த்தால், கடைசியில் வில்லன் ஆகி விட்டீர்களே.

கமல் அவர்களே, பிரகாஷ்ராஜ் போல மற்றவர்கள் படங்களில் நடிக்க மட்டும் செய்யுங்கள், அனைவரும் பார்ப்பார்கள். உங்கள் பணத்தில், உங்கள் படத்தை எடுங்கள், தீவிர ரசிகர்களான நாங்களாவது கண்டிப்பாக பார்ப்போம்.

எனக்கென்னவோ பாபநாசம் டிரைலரை பார்த்தால் சர்வ நாசம் என சொல்லத் தோன்றுகிறது. நான் ஏற்கனவே த்ரிஷ்யம் பார்த்து விட்டேன் (மூன்று மொழிகளிலுமே - மலையாளம், தெலுங்கு, கன்னடம்). இதுவரை எந்தப் படமும் இப்படி பார்த்ததில்லை. பாபனாசமும் பார்ப்பேன். என்ன சொன்னாலும் மலையாளம்தான் சிறந்தது. மோகன்லால்தான் சூப்பர். ஏனென்று தெரியவில்லை.

இதுவரை கடந்த 15 வருடங்களில் வந்த எந்த கமல் படமும் எனக்கு பிடிக்காமல் போனதில்லை. குறைந்தபட்சம் இரண்டு முறையாவது பார்த்திருப்பேன். கடைசி இரண்டு இடங்கள் 'உன்னைப் போல் ஒருவன்' (ஹிந்தியில் பார்த்து விட்டதால்) மற்றும் 'மன்மதன் அம்பு'. பாபநாசம் கண்டிப்பாக இதில் வரும்.

உத்தம வில்லன் இந்த அளவிற்கு மோசமாக இல்லாவிட்டாலும், ஒரு பாதியில் வைக்கலாம். ஆனாலும், நான் கமலை நம்புகிறேன், காத்திருக்கிறேன். மீண்டு வாருங்கள்.

Wednesday, April 29, 2015

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

கடைசி 2 பதிவுகளும் கொஞ்சம் 'சீரியஸாக' போனதால், மக்களை மகிழ்விக்க கொஞ்சம் பிட்டு. "இதுக்கு அந்த மொக்கையே பரவாயில்ல" என்று எண்ணுபவர்களை விட்டு விடலாம்.

விமர்சனம்:

கடைசியாக 'ராஜ தந்திரம்'தான் காசு கொடுத்து பார்த்தது. அதன் பின் எந்தப் படத்தையும் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. படித்த விமர்சனங்களும் எந்தப் படத்தையும் பார்க்க வேண்டும் என தோன்ற வைக்கவில்லை. ஆனாலும் என்னுடைய சில கருத்துகள் மட்டும்.

கொம்பன்: இந்த இயக்குனரின் முந்தைய படமான ஒண்டிப்புலி, ச்சே குட்டிபுலி அவ்வளவாக பிடிக்கவில்லை. இந்தப் படமும் அதே போல தென் மாவட்ட கதைக்களம் என்பதால் பார்க்க தோன்றவில்லை.

வலியவன்: நல்ல கதைதான், மொக்கை திரைக்கதை. ஆனாலும் இயக்குனரின் ஊர்ப்பாசம் ("நாமக்கல் மாமா போன் பண்ணாரு") மட்டும் ரசிக்க வைத்தது. 40 நிமிடங்களில் இந்தப் படத்தை பார்த்து முடித்து விட்டேன்.

நன்பேண்டா: தரவிறக்கம் செய்து கொஞ்ச நேரம் பார்த்ததிலேயே நிறுத்தி விட்டு, படத்தை அழித்து விட்டேன்.

ஓ காதல் கண்மணி: எனக்கு எப்போதுமே மணி மேல் நம்பிக்கை இல்லை. அவரின் எந்தப் படமும் எனக்கு அவ்வளவாக பிடிக்காது. அவரின் படங்களிலேயே நான் மிக ரசித்தது 'அஞ்சலி' மட்டும்தான். என் நண்பன் அவரின் வெறித்தனமான ரசிகன். ராவணன் படம் வந்தபோது முதல் நாள் தமிழிலும், அடுத்த நாள் ஹிந்தியிலும் என்னை இழுத்துக் கூட்டிக்கொண்டு போனான். அதன் விளைவு, நான் இன்னமும் கடல் படம் பார்க்கவில்லை. அதே போல, இது எனக்கு பிடிக்காத, காதல் பற்றிய படம் என்பதால் பார்க்க வேண்டும் என தோன்றவில்லை.

அவரது படங்களில் அவரை விட மற்ற அனைவரது வேலையையும் நன்கு வாங்கி இருப்பார். அதிலும் குறிப்பாக இசை. ராஜாவும் சரி, ரஹ்மானும் சரி மணி ரத்னத்திற்கு மட்டும் குறை வைத்ததே இல்லை. எனவே, கேட்பதோடு சரி.

காஞ்சனா 2: அதே டைலர், அதே வாடகை என்பதால், நகைச்சுவை காட்சிகளை டிவியில் மட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணம்.

ஆனால், சில மற்ற மொழிப்படங்கள் மனதைக் கவர்ந்தன. பிக்கெட் 43, NH 10, பத்லபூர், போன்றவை. இவை யாவும் ஒரு முறை பார்க்கலாம். சமீப காலங்களில், மற்ற மொழிப் படங்களில் ஏதாவது ஒரு தமிழ் பேசும் பாத்திரம் (NH 10, பத்லபூர் படங்களில் நாயகி தமிழ் பெண்ணாகவோ அல்லது தமிழ் தெரிந்த பெண்ணாகவோ) வருகிறது. 2 ஸ்டேட்ஸ் படத்தின் கதை அப்படி. பொதுவாக மலையாளப் படங்களில் தமிழ் பேசும் பாத்திரங்கள் கெட்டவர்களாகவே வரும். ஆனால், பிக்கெட் 43 படத்தில் அப்படி இல்லை. வீர மரணம் அடைந்த மதுரையை சேர்ந்த சரவணன், மேஜர் முகுந்தன் பற்றி கூட வரும்.

இது எதனால்? இந்திய அளவில் ஹிந்திப் படங்களுக்கு அடுத்து தமிழில்தான் அதிக படங்கள் நூறு கோடிக்கு மேல் வசூல் செய்கின்றன. அதிக திறமையானவர்கள் உள்ளனர். ஆனாலும், நம்மூரில் மற்ற மொழிப் படங்கள் ஓடுவது என்பது கொஞ்சம் இல்லை, ரொம்பவும் கஷ்டம். எனவே, எப்படியாவது கவர வேண்டும் என்று எண்ணி இப்படி செய்கின்றனர் என நினைக்கிறேன். ஆனாலும் கஷ்டம்தான்.

அனேகமாக அடுத்து உத்தம வில்லன், மாஸ் இரண்டும் பார்த்து விட்டுத்தான் விமர்சனம். நான் ஏற்கனவே 21 படம் பார்த்து விட்டதால் வை ராஜா வை பார்க்க தோன்றவில்லை. கமலும், வெங்கட் பிரபுவும் இதுவரை எனக்கு குறை வைத்ததில்லை. (பிரியாணி சற்று ஊசிப் போயிருந்தாலும்) I'm waiting.

ஏதோ தோணுச்சு:

நடிப்பு என்றால் என்ன என்பதை யாரும் வரையறுக்க இயலாது. மூச்சு விடாமல் மூன்று பக்க வசனம் பேசுவதும் நடிப்புதான், பேச்சே இல்லாமல் பார்க்கும் ஒரு பார்வை கூட நடிப்புதான். அதே போல என்னைக் குழப்பும் இன்னொரு நகைமுரண் 'இயல்பாக நடிப்பது'. அது எப்படி இயல்பாக நடிக்க முடியும்? நன்றாக சைக்கிள் ஓட்டும் ஒருவனை சைக்கிள் ஓட்டத் தெரியாதது போல நடி என்று சொல்லும்போது, அவன் எப்படி நடித்தாலும் அது இயல்பானது இல்லை. அதுவே சைக்கிள் ஓட்டத் தெரியாதவன் என்றால், அதுதான் அவன் இயல்பு, அவன் நடிக்கவே இல்லை எனலாம்.

"இப்ப உனக்கு என்ன வேணும்" என்கிறீர்களா? ஒன்றுமில்லை. 'ஆடும் கூத்து' என்று ஒரு படம். நிறைய பேருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. அந்தப் படத்தில், ஒரு படம் எடுப்பார்கள். ஆசிரியராக இருக்கும் பிரகாஷ்ராஜ் ஒரு கொடூரமான ஜமீன்தாராக நடிக்க வேண்டும். ஒழுங்காக நடிக்க வராது. பின் எப்படியோ சமாளித்து நடிப்பார். அந்தக் காட்சி முடிந்ததும், இயக்குனராக நடிக்கும் சேரன் கை தட்ட, உடனே, அவரது உடல் மொழி அந்த ஆசிரியராக மாறி விடும். உண்மையில், பிரகாஷ்ராஜ் மீது இருந்த மதிப்பு இன்னும் கூடியது.


என் கேள்விக்கென்ன பதில்?

ஒன்றுமில்லை. விகடனில் முன்பு வந்த 'நானே கேள்வி நானே பதில்' போல. என்ன, நமக்கு கொஞ்சம் வளவள கொழகொழ என்று நிறைய எழுதினால்தான் பிடிக்கும். எனவே, இனிதே ஆரம்பம்.

ஏன் நம் மக்களுக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கிறது?


அது ஒரு ஜென்டில் மேன் விளையாட்டு. அது மட்டுமில்லாமல் நாம் அதில்தான் முதலில் உலகக் கோப்பையை வென்றோம் என்பதெல்லாம் பொய். முதலில் அது நம்மூரின் கில்லி தாண்டு விளையாட்டு போல என்பது தெரியும். அது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி விளையாடுவார்கள். எனது ஊரில் எப்படி என்றால், நாம் அந்த கில்லியை எவ்வளவு தூரம் அடிக்கிறோமோ, அங்கிருந்து நாம் விளையாடும் இடம் வரை அளக்க வேண்டும். அதே நேரம், கில்லியை நாம் காற்றில் எத்தனை முறை அடித்தோமோ, அதற்கேற்றாற்போல் அளக்க வேண்டிய பொருள் மாறும். என்னுடைய நினைவு சரி என்றால், ஒரு அடிக்கு பேட், இரண்டு அடிக்கு கில்லி, மூன்று அடிக்கு ஊக்கு, நான்கு அடிக்கு கடுகு, அதற்கு மேல், தண்ணீர், காற்று என்றெல்லாம் இருக்கும். எனவே, பொதுவாக தூரமாக அடிப்பதற்கு பதில் கில்லியை காற்றிலே நிறைய முறை அடிக்க பார்ப்போம்.

சரி விடுங்க. நாம நம்ம விஷயத்திற்கு வருவோம். நம் மக்களுக்கு பொதுவாக பேராசை அதிகம். விரைவாக பணம் சேர்க்க வேண்டும், கஷ்டப்படாமல் சம்பாதிக்க வேண்டும், மற்றவர்கள் வேலை செய்ய, நாம் சுகமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுவார்கள். "சரி அதுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்" என்கிறீர்களா? பொதுவாக கால் பந்து, கைப்பந்து, ஹாக்கி எனக் குழும விளையாட்டில் அனைவருமே ஆட்டம் முழுதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். கவனம் முழுதும் பந்தின் மீதும், எதிராளிகள் மீதும் இருக்க வேண்டும். ஒரு ஆள், ஓரிடத்தில் தவறி பந்தை விட்டால் அது எதிராளியிடம் சென்று விட்டால், திரும்ப அனைவருமே முயற்சி செய்துதான் ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்ப வேண்டும்.

ஆனால், கிரிக்கெட்டில் அப்படி இல்லை. எந்த நேரத்திலும் பந்து போடுபவர், அடிப்பவர் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். அதன் பின் பந்து எந்த திசையில் போகிறதோ, அங்குள்ள ஓரிருவர் மட்டும் கவனமாக இருந்தால் போதும். எனவே, மூன்று மணி நேர ஆட்டத்தில், ஒரு வீரர் பாதி நேரம் ஓடினாலே மிக அதிகம்.

அடுத்து, மட்டையாளர்கள். ஓடவே தேவை இல்லை. நின்ற இடத்தில் இருந்தே 4, 6 என எடுக்க முடியும். அதே போல ஒரு நேரத்தில் இரண்டு பேருக்குத்தான் வேலை. இன்னும் குறிப்பாக சொன்னால், ஒருவருக்குத்தான் வேலை. அதே போல, அணியில் உள்ள 11 பேரும் மட்டையை பிடிக்க வேண்டிய தேவையும் இல்லை. பந்து வீசுபவர் தவறு செய்தாலும், நமக்கு ரன். இன்னும் குறிப்பாக சொன்னால், ஒரு ஆள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்து பந்து வீசும்போது, அப்படியே சும்மா பேட்டை தூக்கி பந்தை தவற விட்டு அவனைக் கடுப்பேத்துவது என்பது 'என்ன சுகம்'.

மற்ற விளையாட்டுகளில், கோல், புள்ளிகள் என எதுவாக இருந்தாலும் அதிகபட்சம் 100க்குள் அடங்கி விடும். ஆனால், கிரிக்கெட்டில் குறைந்த பட்சம் 200க்கு மேல் போகலாம். அது மனதளவில் நமக்கு 'அதிகம்' என்ற மனப்பாங்கைக் கொடுக்கும். அதே போல மற்ற விளையாட்டுகள் அனைத்தும் கண்டிப்பாக அந்த குறிப்பிட்ட நேரம் விளையாண்டே ஆக வேண்டும். கிரிக்கெட்டில் அதுவும் தேவை இல்லை. இதே போல தடகளம் போன்றவையாக இருந்தாலும், ஒருவரை ஒருவர் எதிர்த்து ஆடும் டென்னிஸ் போன்றவையாக இருந்தாலும், அது குறிப்பிட்ட ஒருவர் மட்டுமே விளையாட முடியும். அதுவும் அவரின் திறமையைப் பொறுத்துதான் எல்லாம்.

கடைசியாக சொல்வது ஒன்றுதான். 'நோகாமல் நோம்பி கும்பிடுவது' கிரிக்கெட்டில் சுலபம். அதனால்தான் நம் மக்களுக்கு இதன் மேல் ஈர்ப்பு வந்திருக்கும்.

அவ்வளவுதாங்க.

Thursday, April 9, 2015

இளையராஜாவைத் திட்டினால் இணையராஜா!

தலைப்பே எதைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று விளங்கி விடும். ஒரு சாரார், இளையராஜா என் உயிருக்கு மேல் என்க, இன்னொரு தரப்போ, அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் இல்ல என்கிறது, இரு தரப்பிலும் எது சரி, எது தவறு என்றெல்லாம் நான் சொல்லவில்லை. "தூத்து, ச்சீ ச்சீ, போ போ, நீயெல்லாம் சின்னப்பய பேசப்படாது, உனக்கென்ன தெரியும்னு சொல்ல வந்துட்ட" என்று சண்டைக்கு வர வேண்டாம். முதலில் முழுதாகப் படிக்கவும்.


பள்ளியில் படிக்கும்போதெல்லாம், இளையராஜா ரசிகன் என்றாலும், யாரிடமும் விவாதிக்க நேரமோ, விஷயமோ இருந்ததில்லை. பொதுவாக எல்லோருடைய பாடல்களைக் கேட்டாலும், ராஜாவின் பாடல்கள் அதில் அதிகம். கல்லூரி வந்தபிறகுதான் ராஜாவா, ரஹ்மானா என்ற பிரச்சினை ஆரம்பித்தது. தினமும் இரவு சாப்பிட்டு விட்டு வந்த பிறகு பேச ஆரம்பித்தால், இரண்டு மணிநேரம் சண்டை போட்டு விட்டுத்தான் தூங்குவோம். "சரி வேணும்னா எல்லார்கிட்டயும் கேக்கலாமா?" என்று சும்மா விசாரித்தால், "ஏய், ஓரமா போயி வெளையாடுங்கப்பா" என்ற மாதிரி பார்ப்பார்கள். அதையும் தாண்டி ரஹ்மான்தான் அதிகம் சொன்னார்கள். உடனே நானோ "இல்லல்ல இது போங்காட்டம்" என்றேன்.

அதே நேரத்தில் டும் டும் டும், துள்ளுவதோ இளமை என 'இளைய'ராஜாக்கள் வேறு வர, நானும் அந்தப் பாடல்களையே அடிக்கடி கேட்பேன். "ஏண்டா, நீ ராஜா குடும்பத்துப் பாட்ட தவிர வேற எதுவும் கேக்க மாட்டியா" என்று என்னைக் கேட்கும் அளவிற்கு இருந்தேன். எனது வகுப்பில் ஒரு வடக்கிந்திய பையன். அவனிடம் நான் தனியாக கேட்டேன். வழக்கம் போல 'ரஹ்மான்' என்றான். உனக்கு இளையராஜா தெரியுமா என்றால், யார் அது என்றான். நான் சத்மா படத்தின் இசையமைப்பாளர் என்றேன். அப்படி ஒரு படமா என்றான். பிறகு சொன்னான் "நான் அவ்வளவாக படம் பார்க்க மாட்டேன், என்னுடைய பொழுதுபோக்கே வேறு. நீ கேட்டவுடன் என் மனதில் வந்த பெயர் ரஹ்மான். அதுதான் சொன்னேன்" என்றான். எப்படியோ, அப்போது எனக்கு ரஹ்மான் மீது வெறுப்பு வந்து, எப்படி எல்லாம் குற்றம் கண்டு பிடிக்க முடியும் என்ற எண்ணம்தான் வந்தது.

கல்லூரி முடிந்து வேலைக்குப் போக ஆரம்பித்த உடனே, யாஹூ ராஜா மற்றும் ரஹ்மான் குழு இரண்டிலும் இணைந்தேன். அதில் ஏதாவது தகவல் கிடைக்கும்(?). ஆனால், அவை இரண்டு குழுமும் மிக மிக கட்டுக் கோப்பாக, அவரவர்களின் பெருமைகளை மட்டும் பேசுமே தவிர, மற்றவர்களை கேவலப்படுத்தாது. அதே நேரம் ஆர்குட் வந்தது. அதில் தினமும் போய் ரஹ்மானுடைய குழுமத்தில் எத்தனை பேர், ராஜாவின் குழுமத்தில் எத்தனை பேர் என தினமும் பார்ப்பேன். நான் எந்தக் கருத்துமே இட மாட்டேன். மற்றவர்களின் கருத்தை அறிந்து, அறிவை(?) மட்டும் வளர்த்துக் கொள்வேன். இங்கும் ரஹ்மானே ஜெயித்தார். அதன் பின்னர்தான் நானும் வலையுலகில் நுழைந்தேன். இதற்கு முன்பே இதே மொக்கையை நான் பதிவாக இட்டுள்ளேன். தைரியம் உள்ளவர்கள் மட்டும் படிக்கவும்.
- இடைவேளை - 

"தம்பி, நீ ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கே" என்கிறீர்களா. சும்மா. வலையுலகில்தான் முதல் முறையாக இளையராஜாவிற்காக அளவு கடந்த ஆதரவைப் பார்த்தேன். அல்லது நான் பார்த்தவை எல்லாம் அப்படி இருந்திருக்கலாம். அதிலும் ராஜாவை உடல், உயிர் என்றெல்லாம் படித்தவுடன் "தாய்ப்பாசத்துல நம்மள மிஞ்சிறுவான் போல இருக்கே" என்றெல்லாம் எண்ணினேன். ஏனென்றால் அப்போது தினத்தந்தியில் வந்த இளையராஜாவின் வரலாற்றை படித்து முடித்திருந்தேன். அதே போல, பள்ளிக் காலத்தில், நூலகத்தில் தமிழ் சினிமா பற்றிய புத்தகங்களைப் படித்து, ராஜா பற்றிய பொது அறிவை வளர்த்து வைத்திருந்தேன். அதன் பின் போக போக இசையைத்தான் ரசிக்க வேண்டும் என்ற புத்தி வந்து, திருந்தி அடங்கி உள்ளேன். 

"சரி, தலைப்புக்கும், இவ்ளோ நேரம் நீ போட்ட மொக்கைக்கும் சம்பந்தமே இல்லையே" என்கிறீர்களா? தலைப்பைப் பார்த்தவுடன் நிறைய பேர் சூடாகி இருப்பார்கள். அவர்களை குளிர்விக்கவே இது. இனி விஷயத்திற்கு வருவோம். கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகி விட்டது பதிவுலகிற்கு வந்து. ராஜாவைப் பற்றி மிகையான கருத்துகளும் படித்துள்ளேன். நிறைய பதிவுகள் ராஜாவைப் பற்றி கேவலமாகப் படித்து விட்டேன். நிறைய முறை உடனே ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றும். ஆனால், என்ன செய்ய, மீறி மீறிப் போனால் ஒரு பதிவுதான் போட முடியும். பல முறை சிரிப்பு வரும். சில பின்னூட்டங்கள் கூட போட்டு, திட்டு வாங்கி உள்ளேன்.

இளையராஜா பக்தர்களுக்கு (சரி ரசிகர்களுக்கு) ஏன் அவரை அவ்வளவு பிடிக்கிறது? இது பற்றி நிறைய பேர் அலசி விட்டாலும், நானும் ஒரு பதிவர் என்ற முறையில் ஏதாவது சொல்ல வேண்டுமல்லாவா. அதனாலதான்.

பொதுவாக 30 வயதிற்கு மேல், 50 வயதிற்கு உட்பட்ட நபர்களே (அனைவரும் அல்ல. ஆனால், இந்த பக்தர்கள் கண்டிப்பாக இந்த வகையாகத்தான் இருக்கும்) ரசிகர்கள், இல்லை வெறியர்கள், இல்லை இல்லை பக்தர்கள் என்பார்கள். ஏனென்றால் இவர்கள் (நானும்) அனைவரும் தங்கள் பதிமன் பருவத்தில் (80களின் இறுதி, 90களின் ஆரம்பம்) ராஜாவையும், அந்த கால ரஹ்மான், தேவாவையும் கேட்டு வளர்ந்தவர்களாக இருப்பார்கள். சில பேர் இது இது மிகையான கருத்து, லொட்டு லொசுக்கு என்றாலும், ஒரு நாளைக்கு 10 பாடல்கள் கேட்டால், அதில் குறைந்தது 6ஆவது இளையராஜாவாகவே இருக்கும்.

அதை விட முக்கியம் காத்திருப்பு. பாடல் நாம் நினைத்த நேரத்தில், நினைத்த பாடலை கேட்க முடியாது. ஒரு பாடல் நன்றாக உள்ளது என யாராவது சொன்னால், எங்கேயாவது முதலில் போய் அதைக் கேட்டு, நமக்குப் பிடித்தால் அந்த ஒலி நாடாவை வாங்கி (அல்லது அந்தப் பாடலை பதிவு செய்து), அதில் அந்தப் பாடலை தேடிக் கண்டு பிடித்துக் கேட்கும்போது வரும் சுகம் இருக்கிறதே. அப்படி அலாதியானது. இப்போது அந்தப் பாடலை நினைத்த நேரம் கேட்க முடிந்தாலும், கேட்கும்போதெல்லாம் நம் மனம் பின்னோக்கிப் பறக்கும்.



இது நமக்குப் பிடித்த பெண்ணைப் பார்க்கும்போது ஒலித்த பாடல், நாம் மிக சந்தோசமாகவோ/சோகமாகவோ இருக்கும்போது நாம் கேட்ட பாடல் என இவர்களின் வாழ்வில் தெரிந்தோ, தெரியாமலோ ராஜா வந்து விடுகிறார். ஏன் இது 70களுக்கு முன்னால் கிடையாதா என்றால், என் சிற்றறிவுக்கு எட்டியவரை அப்போதெல்லாம் மக்கள் நிறைய வேலைக்குத்தான் செல்வார்கள். இரவானால், இரண்டாம் ஆட்டம், ஊரில் கூத்து, அவ்வப்போது திருவிழா, அதில் ஒலிப்பெருக்கியில் பாடல், ஊரில் உள்ள ஒன்றிரண்டு வானொலியில் தினமும் செய்தி, அவ்வப்போது பாடல்கள் என இருந்திருக்கலாம். அப்போது காதல் என்ற உணர்வு அவ்வளவாக மக்களிடம் இல்லை. படங்களும் குடும்பம், அரசியல் என்றே இருந்தன. அதை விட முக்கியம், அவர்களில் அதிகம் இப்போது பதிவர்கள் கிடையாது.



80களில், ஓரளவு மக்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். காதல் படங்கள் நிறைய வர ஆரம்பித்தன. இனக்கவர்ச்சி/காதல் போன்ற உணர்வுகளைத் தூண்டும் வகையில் பாடல்கள். இங்குதான் ராஜாவின் ராஜாங்கம் ஆரம்பித்தது. அதே போல, காத்திருந்து நாம் ஒரு பாடலைக் கேட்பதற்குள், அடுத்து ஒரு படம் வந்து, அதன் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கும். அதே போல, இந்த கால கட்ட ஆசாமிகள்தான் நிறைய பதிவர்களாக உள்ளனர்.

90களுக்கு மேல், ஓரளவு இந்தக் காத்திருப்பு குறைய ஆரம்பித்து விட்டது. பாடல் வந்தால், அதிகபட்சம் அன்று மாலைக்குள் ஒலி நாடா. அனைவரது வீட்டிலும் 2-இன்-1. இன்னும் 2000க்கு மேல் ஒலித்தகடு வந்த பின் கேட்கவே வேண்டாம். எனவே, ரஹ்மான் செய்த புத்திசாலித்தனமான வேலை, காத்திருப்பை உருவாக்கினார். வருடத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு படம். இப்போது பாருங்கள். பாடல் பதிவு செய்த உடனே வந்து விடுகிறது. நினைத்த நேரம், நினைத்த பாடல். காத்திருக்கவே தேவை இல்லை. மக்களும் அனிருத் என் உயிர், இமான் தான் உயிர் என்றெல்லாம் இல்லாமல் கேட்டுக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். அதை விட முக்கியம் இவர்கள் யாருக்கும் பதிவிட நேரம் இல்லை. கேட்டால் "அவன் அவன் டிவிட்டர்ல 140 எழுத்தே போட கஷ்டப்படுறான், இதுல, பதிவு வேற ஒரு கேடா" என்கிறார்கள்.

பதிவுகள் என்பதே "ஊர்ல ஒரு பய கொஞ்ச நேரம் நாம சொல்றத கேக்க மாட்டேங்குறான், எவனாவது நாலு முகம் தெரியாத ஆட்களாவது வந்து படிச்சு ஏதாவது சொல்லட்டும்" என்ற ஆதங்கத்தில்தான் நிறைய பேர் (குறிப்பாக நான்) எழுதுவது. அதில் வந்து ராஜாதான் என் உயிர் என்று சொல்லுங்கள் தப்பில்லை. ஆனால், மத்தவங்க எல்லாம் ​​_ யிர் என்று சொல்ல வேண்டாம். அதே போல "ராஜாவெல்லாம் ஒண்ணுமேயில்ல, அதுக்கு 1500 வருஷத்துக்கு முன்னாடியே இந்த இசை வந்திருச்சு" என்று சொல்லாமல், "இந்த பழைய இசையையும் கேளுங்கள்" என்று சொல்லுங்கள்.

எனக்குத் தெரிந்து நிறைய பேர் பாடகர்களுக்காக வெறித்தனமான ரசிகர்களாக உள்ளனர். என் நண்பன் SPBயின் வெறித்தனமான ரசிகன். அவனுக்கு இசை யார் என்பதெல்லாம் முக்கியமில்லை. அதே போல நிறைய பேர் TMS, ஜானகி, யேசுதாஸ், சுசீலா போன்றோருக்கு வெறித்தனமான ரசிகர்களாக உள்ளனர். பதிவுலகிலும் சில பேரைப் பார்த்ததுண்டு. ஆனால், அவர்களுக்கு வராத எதிர்ப்பு ராஜா ரசிகர்களின் பதிவிற்கு வருகிறது என்றால், அந்த பதிவர்களும் சற்றே யோசித்து, தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த மொத்தப் பதிவுமே செவிடன் (மன்னிக்கவும் இந்த வார்த்தைக்கு) காதில் ஊதிய சங்கு என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும், என்ன செய்ய.சொல்ல வேண்டியது என் கடமை. சொல்லிட்டேன். "அதெல்லாம் சரி, கடைசி வரைக்கும் தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லையே" என்கிறீர்களா? சும்மா. வெவ்வெவ்வே. நல்லதே பதிவில் எழுதுவோம், கெட்டதே தலைப்பில் வைப்போம்.

Thursday, April 2, 2015

சென்னையின் வாகன ஓட்டிகள்

வாகனங்களின் வகைகள் (இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள்) மற்றும் ஓட்டுனர்கள் (பாவப்பட்டவர்கள், ஆபத்தானவர்கள், மிக ஆபத்தானவர்கள்) இரண்டைப் பொறுத்து, என்னுடைய அனுபவத்தில் வகைப்படுத்தி உள்ளேன். இது என்னுடைய முந்தைய பதிவின் தொடர்ச்சி ஆகும். இன்னொரு முக்கிய குறிப்பு. இது சென்னைக்கு மட்டுமே பொருந்தும். நெடுஞ்சாலைகள், மற்ற ஊர்களுக்கு இது பொருந்தாது.

மாநரக பேருந்துகள் - ஆபத்தானவர்கள்:
 
இவர்களை உண்மையில் 'பாவப்பட்டவர்கள்' என்ற வகையில்தான் சேர்க்க வேண்டும். இவர்கள் முட்கள் போல. சேலை இதன் மீது விழுந்தாலும், இதன் மீது சேலை விழுந்தாலும், ஆபத்து என்னவோ சேலைக்குத்தான். அதனால்தான் ஆபத்தானவர்கள் என்று சொல்கிறேன். தினமும் அதிகபட்சம் இரண்டு மணி நேரம் அலுவலகம் சென்று திரும்ப பயணம் செய்யும் நமக்கு எவ்வளவு பிரச்சினை என்றால், 10 மணி நேரம் அவ்வளவு பெரிய வண்டியை இந்த சென்னை சாலையில் ஓட்டுவது என்பது எவ்வளவு பெரிய கொடுமை. அதுவும் எந்தப் பக்கம் எவன் வருவான் என்றும் தெரியாது. படியில் தொங்கி எவனாவது விழுந்தாலும் தொல்லை. திட்டுகளையும் ஏற்க வேண்டும். ஒரே குஷ்டமப்பா. பொதுவாக இவர்களுக்கு வழி விட்டு விடுவது நல்லது.

பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் - மிக ஆபத்தானவர்கள்: 
பீக் அவர்' எனப்படும் நெரிசலான நேர நெருக்கடிக்கு முக்கிய காரணம். இவர்களாக ஒரு இடத்தை 'நிறுத்தம்' என வைத்துக் கொண்டு, அனைவரையும் படுத்துவார்கள். எங்கேயாவது, ஏதாவது நெருக்கடி, நேரமாகி விட்டது என்றால், யாரையும் இடித்துத் தள்ளக் கூட தயங்க மாட்டார்கள். சென்னையின் கல்வித் தந்தையின் கல்லூரி வாகனங்கள் ஏற்படுத்திய விபத்துகளும், அவற்றின் ஓட்டுனர்களின் நடத்தையையும், ராஜீவ் காந்தி சாலையில் செல்லும் அனைவரும் அறிவார்கள். வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்று எழுதி இருக்குமே தவிர, உள்ளே இருக்குமா என்று தெரியாது. மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ஆட்கள்.

தண்ணீர் மற்றும் குப்பை லாரிகள் - மிக மிக ஆபத்தானவர்கள்: 
உண்மையிலேயே வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட வேண்டிய வாகனங்கள். சென்னை போன்ற ஓர் நகரத்தில், தண்ணீர் கொண்டு செல்லும் லாரி அவ்வளவு வேகமாக செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இன்னொரு முக்கிய காரணம், இந்த வேலை செய்பவர்களை பொதுவாக அனைவரும் சற்று இளக்காரமாகவே பார்ப்பார்கள். எனவே, "நீ என்ன மதிக்கிறதில்லை, நானும் உன்ன மதிக்க மாட்டேன். நான் இப்படித்தான்" என்று வண்டி ஓட்டுவார்கள்.

பாதசாரிகள் - ஆபத்தானவர்கள்:
"ஹல்லோ, இருக்கிறதிலேயே பாவமானவங்க நாங்கதான்" என்று சொல்கிறீர்களா? நானும் பாதசாரிதான் சார். எப்பவுமேவா வண்டில போக முடியும்? ஏன் ஆபத்தானவர்கள் என்றால், அவர்கள் சாலையைக் கடக்க சிக்னல் இருந்தாலும், வாகன ஓட்டிகள் மதிப்பதில்லை. எனவே, சாலையில் சற்றே வாகனங்கள் குறைவாக இருக்கும்போது கடப்பது, அப்போது திடீரென முன்னால் வரும் வண்டி நிற்கும், அதை எதிர் பாராமல் பின்னால் வருபவன் இடிக்க, அவர்கள் இருவரும் சண்டை போட ஆரம்பிப்பார்கள், பாதசாரி ஜாலியாக அந்தப் பக்கம் போயிருப்பார்.

அதே போல போன் பேசிக்கொண்டே கடப்பது, பாட்டு கேட்டுக் கொண்டு கடப்பது, ஒரு கையைத் தூக்கிக் கொண்டு மெதுவாக நடப்பது என சில தொல்லைகள். அது மட்டுமில்லாமல் சுரங்கப்பாதை, நடை மேம்பாலம் இருந்தாலும், "நாங்க ரோட்டுக்கு நடுவுலதான் நடப்போம்" என்று நடப்பது. அதை விட முக்கியம், சாலையின் எந்தப் பக்கம் நடப்பது என்பது இதுவரை யாருக்கும் தெளிவாக தெரியாது. நடப்பதற்கு பாதையும் கிடையாது.

சாலையில் அப்படியே ஆட்டோவையோ, ஷேர் ஆட்டோவையோ நிறுத்தி பேரம் பேசுவது,மெதுவாக செல்லும் பேருந்தில் இருந்து திடீரென குதிப்பது, வெளியே குப்பை போடுவது, எச்சில் துப்புதுவது என கொஞ்சம் அக்கப்போரான ஆட்கள்தான். அதிலும் எங்கேயாவது சிறிய அல்லது சேரி போன்ற இடம் என்றால், அவர்கள் நடந்து போகும் வரை நாம் பொறுமையாக பின்னால் போய்த்தான் ஆக வேண்டும். அவர்களையும் குறை சொல்ல முடியாது. ஐந்தாறு வருடங்களுக்கு முன், அந்த சாலையில் தினமும் ஒரு வண்டி வந்தாலே அதிசயம். ஆனால், இன்று அப்படியா? அவர்கள் அப்படியே வாழ்ந்து பழகி இருப்பார்கள்.

ஆட்டோ, ஷேர் ஆட்டோ - மிக மிக ஆபத்தானவர்கள்:
ஒரு 'மிக' போடவா, இல்லை இரண்டு போடவா என சின்ன குழப்பம். ஒரு காலி ஆட்டோ வேகமாக போய்க் கொண்டிருக்கும். திடீரென ஒரு பாதசாரி 'ஆட்டோ' என்று கூப்பிடுவார். பின்னால் யார் வருகிறார்கள் என்று கூட பார்க்காமல், திடீரென நடு ரோட்டில் இருந்து இடது புறம் ஆட்டோ ஒதுங்கும். பின்னால் வருபவன் ஆட்டோவை இடித்து விட்டால், அவன் பரம்பரையே காலி. அதே போல ஷேர் ஆட்டோவில், உள்ளே உட்கார்ந்திருப்பவர் திடீரென "அண்ணே, அப்படியே லெப்ட்ல நிறுத்துங்க" என்பார். அதே பிரச்சினை. அதே கெட்ட வார்த்தை. போகும் பாதையில் சிக்னல் அல்லது ட்ராபிக், உடனே வண்டி மெதுவாக கூட போகாமல் உடனே வலதோ, இடதோ திரும்பும். அதே டெய்லர், அதே வாடகை.

இதுவரை மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டியவர்களைக் கூட பார்த்துள்ளேன். ஆனால், விதிகளை மதித்து, யாரையும் திட்டாமல் இருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரைக் கூட நான் கண்டதில்லை.

மகிழ்வுந்துகள் - மிக ஆபத்தானவர்கள்:
இவர்களும் ஆட்டோ போலத்தான். என்ன, திடீரென நடு ரோட்டில் நிற்க மாட்டார்கள், அது மட்டுமல்ல எங்குமே நிற்க மாட்டார்கள். திடீரென தங்கள் பாதையில் இருந்து விலகி பின்னால் வருபவர்களை பதறடிப்பார்கள். பொதுவாக எந்த வகையாக இருந்தாலும் சில விதி விலக்கானவர்கள் இருப்பார்கள். ஆனால், இந்த 'டெம்போ' வகை வண்டிகள் இதுவரை ஒன்று கூட ஒழுங்காக ஓடி நான் பார்த்ததே இல்லை. அவை கார் போல மிக எளிதாக ஓட்டவும், பேருந்து போல மிக பெரியதாக இருப்பதும்தான் பிரச்சினை என நினைக்கிறேன். "நீ எம்மேல வந்து இடி, சாவு, நான் பாட்டுக்கு போய்க்கிட்டே இருப்பேன்" என்ற தொனியில் செல்வார்கள். அதையும் மீறி, ஏதாவது சொன்னால், போகிற போக்கில் நம்மை 'ஒதுக்கி' விட்டு செல்வார்கள்.

மகிழ்வுந்துகள்-பாவப்பட்டவர்கள்:
இவர்கள் பொதுவாக இந்த சோப்பு டப்பா கார் வாங்கியவர்கள். இவர்கள்தான் சாலையில் ஒரே கோட்டில் செல்வார்கள். பொறுமையாக உள்ளே பண்பலை கேட்டுக்கொண்டு, சிக்னலை மதித்து பொறுமையாக போவார்கள். இருபுறமும் இரு சக்கர வாகனங்கள் வந்து உரசி, டொக்கு ஆக்கினாலும், பொறுமையாக சகித்துக் கொண்டு, அவர்களின் திட்டுகளையும் வாங்கிக் கொண்டு போவார்கள். (முக்கிய குறிப்பு. நான் இன்னும் மகிழ்வுந்து வாங்கவில்லை)

மகிழ்வுந்துகள் - மிக ஆபத்தானவர்கள்:

பொதுவாக பெரிய கார்கள். அல்லக்கைகள் அலப்பரை செய்யும் டாடா சுமோ, ஸ்கார்பியோ போன்றவை. இவை தவிர ரொம்ப நாளாக இரு சக்கர வாகனங்கள் ஓட்டி விட்டு, புதிதாக மகிழ்வுந்து வாங்கியவர்கள் எல்லாமே கொஞ்சம் ஆபத்தானவர்கள்தான். இவர்களை அடையாளம் கண்டு கொள்வதும் சுலபம். கண்டிப்பாக பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்திருக்கும் அல்லது மடக்கப்பட்டிருக்கும். காரில் டொக்கு விழுந்திருக்கும். பேன்சி எண்ணாக இருக்கும்.

இரு சக்கர வாகனங்கள் - மோசமானவர்கள்:

"என்ன, மிக, மிக மிக ஆபத்தானவங்க அப்டிதான சொல்லுவா, அதென்ன மோசமாவனங்க" என்கிறீர்களா? பொதுவாக நம் வண்டியை யாராவது இடித்தாலோ, அல்லது இடிப்பது போல போனாலோ, திட்டுவோம் அல்லது அப்படியே விட்டு விடுவோம். அப்படி இல்லாமல், யாரென்றே தெரியாத ஒருவனை "இவன்லாம் சாகத்தான் போறான்" என்று நினைப்போம் அல்லவா, அந்த வகையினர். சாலையில் போகும் அனைவரையும் பயமுறுத்துவோர். இவர்களை அடையாளம் கண்டு கொள்வது மிக சுலபம். பார்த்தாலே போதும். "என்னப்பா, இப்படி சொல்ற. அப்படி நீ யாரைத்தான் சொல்ற" என்கிறீர்களா? 

ஹெல்மட்டை தலைக்குப் போடாமல் பெட்ரோல் டேங்குக்கு போட்டிருப்பார்கள்.


இண்டிகேட்டர் கண்டிப்பாக உடைந்திருக்கும்.


காதில் பாட்டு கேட்டுக்கொண்டு அல்லது போன் பேசிக்கொண்டு செல்பவர்கள்.


150cc அல்லது அதற்கு மேல் உள்ள வண்டி எனில், கண்டிப்பாக இந்த சாதிதான். ("அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல" என்பவர்களுக்காக. "சொம்மா உர்ர் உர்ருன்னு உருட்டறத்துக்கா இந்த வண்டி வாங்கி இருக்கோம்" என்றுதான் இதுவரை நான் வாங்கிக் கட்டியுள்ளேன்). அதிலும் பின்னால் ஒரு பெண் கட்டிப் பிடித்து உட்கார்ந்திருந்தால், ____(கெட்ட வார்த்தைங்க)


ஸ்கூட்டர் வண்டிகள் ஓட்டுபவர்கள், பெரும்பாலும். (நானும் ஒரு காலத்தில் கல்யாணத்திற்கு முன் ஆக்டிவாதான் ஓட்டினேன். என்னைத் தாண்டிபோய் நிறுத்தி எல்லாம் திட்டி வீடு போயிருக்கிறார்கள். அதன் பிறகுதான் திருந்தினேன்.) இந்த வண்டி பிக் அப் அதிகம் என்பதால் மற்ற வண்டிகள் கியர் மாற்றுவதற்குள் போய் விட வேண்டும் என்று பறப்பார்கள். பின்னால் ஆள் இல்லாவிட்டாலும், கால் வைப்பதற்கான பிளேட்டை மடக்காமல் அடுத்த வண்டியை கீறுவார்கள்.


டேங்கில் ஒரு குழந்தை, நடுவில் ஒரு குழந்தை, பின்னால் மனைவி.யாராவது இடித்தால் கூட குழந்தை செண்டிமெண்ட் கை கொடுக்கும்.


எல்லாவற்றையும் மூடிக்கொண்டு ஓட்டும் பெண்கள். என்னதான் இவர்கள் தவறு செய்தாலும், யாரும் அவர்களை எதுவும் சொல்ல மாட்டார்கள்.


வண்டி ஓட்டும் வயதானவர்கள். இவர்கள் மேல் மோதவே இல்லை என்றாலும் "அய்யய்யோ" என்று கத்தினால், கதை காலி.


வண்டியில் காவல், வழக்கறிஞர், பத்திரிகை என்று எழுதி இருந்தால் (புடிச்சா கேஸ் போட முடியாதுல்ல).


சும்மா சிம்ரன், இலியானாவிற்கு போட்டியாக இடுப்பை வளைத்து, வண்டியை சைடு வாங்கி, மற்றவர்களை பதறடிப்பார்கள்.

இரு சக்கர வாகனங்கள் - மிக மோசமானவர்கள்:

"காலை 8:30க்கு தாம்பரத்தில் இருந்து நான் கிளம்புவேன். 9 மணிக்கெல்லாம் பாரிஸ் கார்னரில் உள்ள ஆபீஸில் நான் இருக்க வேண்டும், டாட்" என்பார்கள். இவர்கள் மிக மோசமான வகையினர். தாங்கள் சாலையில் செல்வதற்காக எந்த அளவிற்கும் போவார்கள். மேலே கூறிய ஆட்கள் இதுலும் வருவார்கள். ஆனாலும், இவர்களை அவர்கள் செய்யும் செயலை வைத்துதான் அறிய முடியும்.

நீங்கள் சிக்னலில் நிற்கும்போது, உங்கள் வண்டிக்கும், முன்னால் ஒரு அங்குல இடைவெளி இருந்தாலும், தங்கள் வண்டி முன் சக்கரத்தை அதில் விட்டு, "சார், கொஞ்சம் வழி விடுங்க" என்பார்கள்.


ஒலிப்பானை திருப்பங்கள், சந்துகளில் எல்லாம் பயன்படுத்த மாட்டார்கள். சிக்னலில் சிகப்பு இருந்தாலும், அழுத்திக் கொண்டே இருப்பார்கள்.


இண்டிகேட்டர், லைட் போடவே மாட்டார்கள், எந்த நேரமாக இருந்தாலும். அல்லது வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகம் போகும் வரை ஏதாவது ஒரு பக்கம் மட்டும் எரிந்து கொண்டே இருக்கும். எண்பதாயிரம் போட்டு வண்டி வாங்கியவர்கள், எண்பது ரூபாய் போட்டு ஒரு இண்டிகேட்டர் சைரன் வாங்கி வைத்திருக்க மாட்டார்கள்.


கொஞ்சம் கூட கூச்சமே இன்றி தவறான திசையில் வருவது, அவர்களுக்கு சிகப்பு போட்டிருந்தாலும் மீறுவது.


திடீரென பாதையில் இருந்து விலகி, அடுத்த சாலைக்கு செல்வது (இதில் பின்னால் வரும் இரண்டு வாகனங்கள் இடித்துக் கொண்டு, சண்டை போடுவார்கள். நம்மாள் அது தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் போயே போயிருப்பார்)


உலக அமைதி பேச்சு வார்த்தை நடத்துவது போல இரண்டு வண்டிகளில் பேசிக் கொண்டே செல்பவர்கள்.


ஏதாவது திருப்பத்தில் வந்து சாலையில் இணையும்போதும், அல்லது வண்டியை எடுக்கும்போதும், ஒரு கடமைக்குக் கூட திரும்பி ஏதாவது வண்டி வருகிறதா என்று பார்க்க மாட்டார்கள்.


நடைமேடையில் வண்டியை ஒட்டிக்கொண்டு போய், அதில் நடப்பவர்களைத் திட்டுவார்கள்.


எங்கேயாவது கும்பல் இருந்தால், வண்டியை ஓரமாகவும் இருத்த மாட்டார்கள், வண்டியை விட்டு இறங்கவும் மாட்டார்கள். "என்னவாம்" என்று யாரிடமாவது கதை கேட்பார்கள்.


ஒரு சிறிய சாலையில், எதிரில் வரும் வண்டி செல்வதற்காக வழி விட்டு நிற்போம். நேராக வந்து அந்த வழியை அடைத்து விட்டு, பின் நம்மைப் பார்த்து "ஏன் இந்தப் பக்கம் வர்ர, அந்தப் பக்கம் போ" என்று எகிறுவார்கள்.


பள்ளி செல்லும் குழந்தைகளை உட்கார வைத்து, எல்லா விதிகளையும் மீறி பள்ளியில் கொண்டு போய் விடுவார்கள். "சாலை விதிகளை மதிக்க வேண்டும்" என பாடம் படித்ததை அது பின்பற்றுமா அல்லது தன் தந்தை என்ன செய்வாரோ அதை செய்யுமா?

இரு சக்கர வாகனங்கள் - பாவப்பட்டவர்கள்:

இவர்களும் கிட்டத்தட்ட மேற்கூறிய வகை ஆட்கள்தான். இவர்களும், அந்த இரு சக்கர மிக மோசமான வாகன ஓட்டிகளும் ஒரே மாதிரிதான் இருப்பர். இருந்தாலும், இன்னும் இவர்களை இனம் கண்டு கொள்வது எப்படி?

சிக்னலில் நிற்கும்போது, நேரம் நிறைய இருந்தால் வண்டியை நிறுத்தி விடுவார்கள்.


சாலையில் போய்க் கொண்டிருக்கும்போது, முடிந்தவரை ஒரே கோட்டில் செல்வார்கள்.


சிகப்பு எந்த நேரத்திலும், எந்த இடத்தில் போட்டிருந்தாலும் நின்று விடுவார்கள்.
பின்னால் இருந்து யாராவது ஒலிப்பானை அழுத்திக் கொண்டிருந்தாலும், என்ன திட்டினாலும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.


சற்றே இடதோ, வலதோ திரும்பினாலும் இண்டிகேட்டர் போடுவார்கள். 
தேவையில்லாமல் ஒலிப்பானை பயன்படுத்த மாட்டார்கள்.

சில சமயம் இவர்களும் மோசமானவர்களாக மாற வாய்ப்பு உள்ளது, அவர்கள் அறியாமலேயே. ஆனால், மோசமானவர்கள் இவர்களாக தெரியாமல் கூட ஆக முடியாது. இன்னொரு கசப்பான உண்மை என்னவென்றால், அந்த மிக மோசமானவர்களிடம் இதில் ஏதாவது ஒரு குணம் இருக்கும்.

இவை எல்லாவற்றிலும் விதி விலக்குகள் உண்டு. ஆனால், மோசமானவர்கள் -ஆபத்தானவர்கள் - பாவப்பட்டவர்கள் என்பதை நீங்கள் லேசாக இடித்து விட்டாலே தெரிந்து விடும். உடனே இறங்கி என்ன, ஏது, யார் மீது என்றெல்லாம் பார்க்காமல் எந்த அளவிற்கு திட்டுகிறார்களோ அதைப் பொறுத்து நீங்கள் ஆபத்தானவர்கள், மிக மிக என்று மோசமானவர்கள் வரை போகலாம்.


இவை தவிர இன்னும், இரவு நேர அட்டூழியம் செய்யும் ஆம்னி பேருந்துகள், கன ரக வாகனங்கள், 'குடி' வண்டிகள், உள்ளே ஆட்கள் இருக்கிறார்களா இல்லையா என்று கூட தெரியாமல் செல்லும் ஆம்புலன்ஸ் வண்டிகள், சைக்கிள் மற்றும் பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும் மூன்று சக்கர வண்டிகள் என நிறைய உள்ளன. என்ன, எல்லோரும் ஒரு 'புரிந்துணர்வு' ஒப்பந்தத்துடன் வண்டி ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிக்காமல் உள்ளது என நினைக்கிறேன்.

வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் கூட இங்கு வந்து வண்டி ஓட்டினால், "இவன்லாம் எங்கயாவது விழுந்து சாகத்தான் போறான்" என்று என்னும் அளவிற்கு நம்மாட்கள் வைத்து விடுவார்கள்.

ஓர் ஆள் 'எப்படியாவது' 10 நிமிடத்தில் வீடு வந்து சேருகிறார் என்றால், கொஞ்சம் பொறுமையாக, எல்லா விதிகளையும் மதித்து சென்றால், அவர் உட்பட அனைவருமே 15 நிமிடங்களில் வீட்டிற்கு போகலாம். "விடுவமா, நாங்க .எங்களுக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவால்ல. உனக்கு ஒரு கண்ணாவது போகணும்" என்றல்லவா உள்ளோம்.

Thursday, March 26, 2015

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

என்னடா மறுபடியும் பிட்டு போடறானே அப்டின்னு யோசிக்கிறீங்களா? வேற ஒன்னும் இல்ல. கடைசி ரெண்டு பதிவுமே ரொம்ப அழுகாச்சியா போயிடுச்சு. மகளிர் தினத்துக்காக இன்னொரு பதிவு போடலாம்னுதான் பாத்தேன். ஆனா மக்கள் ரொம்பவும் கண்ணீர் சிந்தக் கூடாதேன்னு இந்த பிட்டு.

விமர்சனம்:

ராஜ தந்திரம்: மீண்டும் ஒரு திருட்டுக் கதை (கதைத் திருட்டு அல்ல). முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பது போல, ஏமாற்றியவர்களை நாமும் ஏமாற்ற வேண்டும் என்று சொல்லும் படம். மற்றபடி கருத்தை எதிர் பார்க்காமல் சென்றாமல், உண்மையிலேயே அட்டகாசமான படம். முதல் பாதி சற்றே மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதி பறக்கிறது.

ஆங்கிலப் படங்கள் நிறைய பார்த்திருந்தால், இந்தப் படம் உங்களுக்கு Oceans படங்களை நினைவூட்டலாம். காட்சிகள் காப்பி அடிக்கப்படவில்லை. ஆனால், படமாக்கப்பட்ட விதம் அப்படி. இந்தப் படத்துடன் நிறைய சிறிய படங்கள் வந்ததால், நேரம் கிடைக்காமல் இருந்தது. பின், சத்யமில் இரவு நேரக் காட்சி இருந்ததால் போய் பார்க்க முடிந்தது. கொடுத்த காசுக்கு திருப்தி.

அனேகன்: பொதுவாக எந்த புதுப்படமாக இருந்தாலும் முதல் வார இறுதி நாட்கள் மட்டுமே டிக்கெட் கிடைக்காது. அதன் பிறகு வார நாட்களில் எப்படியாக இருப்பினும் ஒரு டிக்கெட்டாவது கிடைக்கும். ஆனால், இந்தப் படத்திற்கு ஒரு வாரம் முழுதும் இரவுக்காட்சிக்கு டிக்கெட்டே இல்லை. நான் இணையத்தில் 'டிக்கெட் இருக்கா' என்று பார்த்து விட்டு, நேரில் போய்தான் வாங்குவேன். இரண்டு நாட்கள் சத்யம், பின் S2 எல்லாம் போயும் டிக்கெட் இல்லை. எல்லாம் 'டங்கா மாரியின்' காரணமாக கூட இருக்கலாம்.

படம் எனக்கு மிகவும் பிடித்தது. காரணம் சமீப கால படங்களில் எனக்கு மிக விரைவாக முடிந்தது போல தோன்றிய படம் இதுதான். வழக்கம் போல பாடல்கள் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். கொஞ்சம் தசாவதாரம் போல உண்மையா அல்லது கற்பனையா என்றெல்லாம் மக்கள் குழம்பட்டும் என்று நினைத்திருப்பார்கள் போல. விமர்சகர்கள் கிழித்துத் திங்க விட்டாலும், படம் நன்றாகவே இருந்தது.

காக்கி சட்டை: படம் ஆரம்பித்த உடனே ஒரு பயங்கர ஆரவாரத்தோடு பில்டப் காட்சி. அப்போதே சின்ன சந்தேகம். பிறகு அது கனவாம். 'சாரே, இது கொஞ்சம், இல்லல்ல ரொம்பவே பழைய டெக்னிக்'. இன்னும் கொஞ்சம் யோசிங்க. மற்றபடி ஒரு முறை பார்க்கலாம். சிவகார்த்திகேயனை நாம் எதற்காக நம்பி போகிறோமோ, அதை நன்றாகவே கொடுத்துள்ளார். படத்தை சீரியஸாக எடுப்பதா இல்லை காமெடியாக எடுப்பதா என்று தெரியாமல் எடுத்திருக்கிறார்கள். அது நமக்கு இன்னும் காமெடியாக இருக்கிறது. 

இப்போதெல்லாம் அடிக்கடி மூளை சாவு, உடல் உறுப்பு தானம், 20 நிமிடங்களில், போக்குவரத்தை நிறுத்தி 'இதயம்' பயணம் செய்தது என்றெல்லாம் படிக்கும்போது பொதுவாகவே எல்லோருக்கும் சில சந்தேகங்கள் வரும்.

"அது எப்படி திடீர்னு கடந்த நாலஞ்சு வருஷமா மட்டும் மூளைச்சாவு நடக்குது?"

"ஹல்லோ. இப்பதான் அது வெளியே தெரியுது. அதனால எல்லோரும் உடல் உறுப்பு தானம் செய்யறாங்க."

"சரிங்க. சந்தோஷம். ஆனா, அது எல்லாமே ஏன் பணக்கரங்களுக்கே மாத்தறாங்க. ஏழைங்களுக்கு எதுவும் மாத்த வேண்டியது இல்லையா?"

"அதுவும் செய்யறாங்க. ஆனா, வெளிய அவ்வளவா தெரியறது இல்ல"

"அப்படி நடந்தா நல்லதுதான். ஆனா, சுஜாதா அவரோட ஒரு நாவல்ல என்ன சொல்றாருன்னா?"

"இப்ப நீ போறியா, இல்ல உன் உறுப்புகளையும் தானம் செய்யவா?"

எனக்குள் ஒருவன்: எனக்கு 'லூசியா'வே அவ்வளவாக பிடிக்கவில்லை. புரியவில்லை என்று கூட வைத்துக் கொள்ளலாம். அதனால் இதை நான் பார்க்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. 'லூசியா' பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக இந்தப் படம் பிடிக்காது என்பது என் எண்ணம்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்: இதுவும் ஒரு நல்ல டைம் பாஸ் படம். ஒரு முறை பார்க்கலாம். நகைச்சுவையாக இருந்தாலும் 'ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பதை அட்டகாசமாக விளக்கி உள்ளார்கள். அதிலும் ஊர்வசி சொல்லும் "இந்த காலத்துப் பசங்க என்னதான் படிச்சாலும், கொஞ்சம் கூட பிராக்டிகல் அறிவே இல்ல" என்பது 110% உண்மை. இது கடந்த 15 வருடங்களுக்கு முன் படித்து முடித்தவர்களுக்குக் கூட பொருந்தும். (நானும்தான்).

மற்ற படங்கள் பார்க்கவில்லை. இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சீக்கிரம் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ' ரொம்ப நல்லவன்டா நீ', 'இவனுக்கு தண்ணில கண்டம்' இரண்டு படங்களின் மூலப்படம் என்ன என்று யாராவது சொன்னால் அதை முதலில் பார்க்கலாம் என்று இருக்கிறேன். மற்றவை எதையாவது பார்த்தால், அடுத்த பிட்டில் எழுதுகிறேன்.

சில எண்ணங்கள்:

வர வர ஹாரிஸ் ஜெயராஜ் தேவா போலவே ஆகி விட்டார். எல்லா விஷயங்களிலும்தான். ஹாரிஸின் சமீப கால படங்கள் அனைத்திலுமே ஒரு பயங்கரமான கானா அல்லது குத்துப் பாட்டு வருகிறது. இந்த மாதிரி பாட்டு கேட்டார் என்றுதான் சாமி, அருள் படங்களுக்குப் பின் ஹரியை ஒதுக்கி விட்டார் என ஒரு கிசுகிசு படித்திருக்கிறேன். காலம் எல்லாவற்றையும் மாற்றி விடும் அல்லவா.

அதே போலத்தான் அஜித் கவுதம் மேனன் கூட. முன்பு ஒரு முறை அஜித்துடன் படம் என்று கூறி பின் அது நின்று விட, அப்போது ஒரு கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தபோது, "எங்க தல கூட எப்ப படம் பண்ணுவீங்க" என்று கத்த, இவரோ "யாரு தல" என்று நக்கலாக கேட்டார். எல்லாம் நேரம்.

'என்னை அறிந்தால்' படத்தில் இளம் அஜித்தாக வரும் சிறுவனைப் பார்த்தால், எனக்கு ஹாரிஸ் ஜெயராஜின் முகம் போல தோன்றியது. ஏனென்று தெரியவில்லை. ஒரு வேளை ஹாரிஸின் சொந்தக்காரப் பையனோ என்னவோ. உங்களுக்கு எப்படி தோன்றுகிறது?


ரசித்தது:

ஒரே நேர்க்கோட்டில் அமையாமல் மாறி செல்லும் நான்-லீனியர் திரைக்கதையை க்வெண்டின் டாரண்டினோ, நோலன், ஷங்கர் எல்லாம்தான் நன்றாக செய்வார்கள் என்று நானும் நம்பினேன். ஆனால், இந்தப் படமும் அப்படித்தான். பாருங்களேன்.


இந்த காணொளியை கண்டு அழுதேன், துடித்தேன் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். எனக்கு அந்த தந்தையைப் பற்றிக் கூட தோன்றவில்லை. நிறைய அப்பாக்கள் இதே போல தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, தன் குழந்தை அந்த கஷ்டம் தெரியாமல் வளர வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆனால், அந்த சிறு குழந்தை தன் தந்தை எப்படி கஷ்டப்படுகிறார் என்பதை உணர்ந்துள்ளது. அதுதான் எனக்கு இதில் மிகவும் பிடித்தது. உண்மையில் இதற்கான வாய்ப்பு மிக மிக குறைவே. நான் அதற்காக கண் கலங்கினேன்.

இதுவும் மிகப் பழையதுதான். ஆனாலும், இப்போது பார்த்தவுடன் பகிர வேண்டும் என் தோன்றியது. குறிப்பாக அந்த சிறுவனின் கற்பனைகள் மற்றும் கடைசியில் கம்பீரமாக நடப்பது. நீங்களும் ரசியுங்களேன்.


இன்னும் சில குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு காணொளிகள் உள்ளன. அவற்றின் சுட்டிகள் கீழே. பார்க்க விரும்புவர்களுக்காக மட்டும்.

தெலுங்கானா விழிப்புணர்வு காணொளி

கோமல் - தமிழ்.

வற்றைப் பார்த்தால், நாம் நம் குழந்தைகளை யாரிடமும் பழகவே விடக் கூடாது போலவே என்று தோன்றும். ஆனாலும், நடந்த பின் 'குய்யோ முய்யோ' என்று அலறக் கூடாதே. எனது மகள் ஓரளவு நடக்க, பேச ஆரம்பித்த புதிதில் சென்னையிலேயே இருந்ததால், வீட்டிலேயே இருந்து பழக்கம். எங்கள் இருவரைத் தவிர வேறு யாரிடமும் செல்ல மாட்டாள். படிப்பிற்காக மனைவி ஊரிலேயே இந்த வருடம் தங்கி இருப்பதால், மகளும் அங்கேயே. ஆனாலும் சென்னைப் பழக்கம் போகவில்லை. எங்கள் இருவரின் பெற்றோருடன் இருந்தாலும், மாலையில் அம்மா கண்டிப்பாக வேண்டும். அதே போல என்னதான் பக்கத்து வீடு, எதிர்த்த வீடு என்று சென்று விளையாண்டாலும், யாரும் தூக்க வந்தால் ஓடி வந்து விடுவாள், இல்லையென்றால் கத்துவாள்.

ஆனால், யாராவது மிட்டாய் கொடுத்தால் தூக்கலாம். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அதையும் தவிர்க்க பழக்கி உள்ளோம். யாரவது மிட்டாய் கொடுத்தால் "அப்பா அம்மா வாங்கித் தருவாங்க, எனக்கு வேண்டாம்" என்று சொல்லப் பழக்கி உள்ளோம். அதே போல அவள் எங்களிடம் கேட்டால், "சளி பிடிக்கும்" என்றெல்லாம் ஏமாற்றாமல் வாங்கித் தருவோம். ஒரு வேளை ஜலதோஷம் பிடித்திருந்தாலும், "சரியானப்புறம் கண்டிப்பா வாங்கித் தரோம்" என்று சொல்லி விடுவோம். இது ஓரளவுக்கு வேலை செய்கிறது.

இதோ, இன்னும் இரண்டு மாதம்தான். மீண்டும் சென்னை. பள்ளி வேறு செல்ல வேண்டும். சொல்லித் தர வேண்டியது நிறைய உள்ளது. "என்ன ரைம்ஸா?, லெட்டர்ஸா?, நம்பர்ஸா?" என்று கேட்காதீர்கள். இது வேறு. சரி, மறுபடியும் கொஞ்சம் சீரியசான விஷயங்கள் வந்துடுச்சு. மன்னிச்சு. .