Thursday, March 5, 2015

என் அத்தை !!

"சரி. இப்ப என்ன சொல்ல வர. உங்க அத்த இறந்து 3 வருஷம் ஆயிடுச்சுன்னு சொல்ற. மறந்துட்டேன்னு சொல்ற. திடீர்னு ஏன் அவங்க புகழ்" என்று உங்களுக்கு தோணலாம். ஒன்றுமில்லை. வேலையில்லா பட்டதாரி படம் பார்த்தவுடன் எனக்கு அவர்கள் நினைவு வந்து விட்டது. அதில் அம்மாவாக வரும் சரண்யா போட்டிருந்த கண்ணாடியா, அல்லது தன் மூத்த மகன் மீது வைத்திருந்த பாசமா இல்லை கூட இருக்க சொல்லியும் கிளம்பிப் போய் விட்டதாலா, ஏன் என்று தெரியவில்லை.

'அம்மா அம்மா' என்று ஜானகி பாடும்போது அம்மா நினைப்பில் எல்லோரும் கண் கலங்கினார்கள். எனக்கு என் அத்தை நினைவுதான் வந்தது. அப்போதே பதிவை எழுதி விட்டேன். ஆனால், வெளியிட தோன்றவில்லை. அவர் இருக்கும்போது ஒரு முறை "பின்னாடி நான் என்னோட சுய சரிதையை எழுதும்போது, உங்களைப் பத்தி நெறைய எழுதுவேன்" என்றேன். "கண்டிப்பா அந்த மாதிரி நீ வருவ கண்ணு" என்று மனதார சொன்னார். என்னால் அப்படி எழுத முடியுமா என்று தெரியவில்லை. அதனால், குறைந்தது பதிவாவது இருக்க வேண்டும் என்று பிரசுரித்து விட்டேன்.

நான் பதிவு எழுதுகிறேன் என்று என் நெருங்கிய நண்பர்களிடம் கூட நான் சொன்னது கிடையாது. கூச்சம் என்று எண்ணினாலும் சரி, திமிர் என்றாலும் சரி. ஆனால், அத்தையிடம் மட்டும் சொன்னேன். ஒவ்வொரு பதிவு இடும்போதும் அவரிடம் சொல்வேன். கருத்துக்கள் சொல்வார். "இதையெல்லாம் படிக்கும்போது, கண்டிப்பா பின்னாடி ஒரு புத்தகமாவது எழுதுவ" என்று வேறு உசுப்பேத்துவார்.

கணினியைக் கற்றுக் கொள்ள வேண்டும், பதிவு எழுத வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். அவருக்காக நாந்தான் மின்னஞ்சல், முகப்புத்தம், ஏன் ஒரு வலைப்பதிவு கூட ஆரம்பித்தாயிற்று. அந்தப் பதிவு இடவே அவருக்கு ஒரு நாள் ஆனது. ஆனால், ஒரு தாயாக, மாமியாராக, பாட்டியாக அவருக்கு இருந்த கடமைகளால் அதற்கு மேல் அவரால் எழுத முடியவில்லை. நானும் எவ்வளவோ சொன்னேன். நீங்கள் ஒரு நோட்டிலாவது எழுதுங்கள். நான் உங்களுக்கு கணினியில் அடித்துத் தருகிறேன் என்று. "எங்க போயிட போறேன். பாப்பா (மகனின் மகள்) கொஞ்சம் பெருசாகட்டும். அப்புறம் பாத்துக்கலாம்" என்றார்.

எப்போதுமே கொஞ்சம் நிதர்சனமாக பேசுவார். ஆனால், தன் மகன்கள் விஷயத்தில் (என்னையும் சேர்த்து) மட்டும் விட்டுக் கொடுக்கவே மாட்டார். கல்லூரி இறுதி ஆண்டில், நேர்முகத் தேர்வுகளில் கணிப்பொறி நிறுவனங்கள் மாணவர்களை அள்ளி எடுக்க, நானோ தேர்வாகவில்லை. "அவன் மெக்கானிகல் படிக்கறதால, அந்த பீல்டுலதான் போவேன்னு நிக்கிறான்" என்று யார் கேட்டாலும் எனக்காக பதில் சொல்லுவார். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் கால் சென்டர் நிறுவனங்கள் எல்லாவற்றிற்கும் போனேன். "பொறுமையா இரு. எல்லாம் நல்லதுக்குத்தான்" என்றார். கடைசியில் அவர் ஆசைப்பட்ட மாதிரியே என்னுடைய துறையில் சேர்ந்து, இதுவரை அப்படியே உள்ளேன். (என்னுடைய இப்போதைய நிறுவனம் மென்பொருள்தான், ஆனால் நான் வேலை செய்வது மெக்கானிகல் சார்ந்ததுதான்).

அவர் அமெரிக்கா போன புதிதில், "ஊர்ல மாதிரி இங்க தெனமும் எல்லோருக்கும் போன் பேசாதீங்க" என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். இவரும் எல்லோருக்கும் எதற்கு என்று எனக்கு மட்டும் தினம் இரு முறை பேசுவார். ஆனால், அழைப்பு அட்டை (கால்லிங் கார்டு) மூலம் எப்படி பேசுவதென்று தெரியாமல் எப்படியோ ஏனோதானோவென்று போன் செய்து இரண்டே நாளில் எல்லா காசையையும் அழித்து விட்டார். அவர் மகன் பயங்கரமாக திட்டி, எப்படி டயல் செய்தால் குறைவான காசு என்றெல்லாம் தெரிந்து கொண்டு, மீண்டும் எனக்கு போன் பண்ணி சிரி சிரி என்று சிரித்தார்.

அவரின் இரண்டு மகன்களும் வெளிநாடு போய் விட்டு வந்ததால், நானும் போக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால், திருமணத்திற்கு முன் நிறுவனம் மாறலாம் என்று எண்ணியபோது "கண்ணு, சாப்ட்வேர் கம்பெனியா பாத்துப் போ" என்றார். அவர் ஆசைப்படி எல்லாமே நடந்தது. என்ன, எனக்கு அவர் இறந்து மூன்று நாள் கழித்து விசா நேர்முகத்தேர்வு. முடிந்தவுடன் அவரிடம் சொல்லி ஆச்சரிப்படுத்த வேண்டும் என்றிருந்தேன். அதே போல சென்னையில் நானும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். நடக்கும்போது அவர் இல்லை.

அவர், அவரது அண்ணன்கள் என அனைவருக்குமே பையன்கள் என்பதால் (ஒரு தலைமுறைக்கே பெண்கள் இல்லை) அவருக்கு பேத்திதான் வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டார். அதே போலவே பெண். எனக்கும் பெண்தான் பிறக்கும் என தமிழ்நாடு முதல் சீனா ஜோதிடம் வரை எல்லாம் பார்த்துக் கணித்தார். அதே போலவே பெண்தான் பிறந்தது. அப்போது அவர் இல்லை. சரி விடுங்க.

பெரியாரை பிடிக்கும். ஆனாலும் கடவுள் நம்பிக்கையும் உண்டு. கேட்டதற்கு பெண் விடுதலைக்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் அவர் உழைத்ததை சொல்லுவார். "பெரியார் மட்டும் இல்லேன்னா, என்ன படிக்க வச்சிருக்க மாட்டாங்க. அது மட்டுமில்லாம, நாம அதிகபட்சம் கணக்கு எழுதத்தான் போயிருக்க முடியும்" என்பார்.

அவரின் இரு மகன்களுக்கும் கிரிக்கெட் மட்டும்தான் பொழுதுபோக்கு. இல்லையென்றால் டிவி. புத்தகம் படிப்பதோ, வெளியில் படம் பார்ப்பதோ கிடையாது. எனவே நானும் அவரும்தான் படம் பார்க்க போவோம். படத்தைப் பற்றி நான் சொன்ன கருத்துகள் ஏதாவது குமுதம், விகடனில் வந்தால் "பாத்தியா கண்ணு, நீ சொன்ன மாதிரியே இவனும் போட்டிருக்கான்" என்பார்.

புத்தக கண்காட்சி காயிதே மில்லத் கல்லூரியில் நடக்கும்போது அவருடன் ஓரிரு முறையே சென்றுள்ளேன். அப்போது நானும் படித்துக் கொண்டிருந்ததால் சும்மா சுற்றிப் பார்ப்பேன், எதுவும் வாங்க மாட்டேன். பின் வேலைக்குப் போக ஆரம்பித்த பின், மைசூரில் இருந்த திரும்பிய போது, பச்சையப்பன் கல்லூரி அருகே மாற்றினார்கள். அது மிகவும் அருகாமையில் என்பதால் இன்னும் வசதியாகி விட்டது. 2007ம் ஆண்டு முதல் 2012 வரை, ஆறு வருடங்களில் நாங்கள் இருவரும் சேர்ந்து கண்டிப்பாக குறைந்தது 20,000 ரூபாய்க்காவது புத்தகங்கள் வாங்கி இருப்போம். நான் பொதுவாக கதைகளாக வாங்குவேன். அவர் வித்தியாச வித்தியாசமான புத்தகங்கள் வாங்குவார். லா. சா. ரா, அசோகமித்திரன், தி. ஜா. என நிறைய வாங்குவார். நான் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், ஏனோ படிக்க தோன்றியதில்லை.

அவருக்கு டான் பிரௌன், சேத்தன் பகத் புத்தகங்களை நாந்தான் சொன்னேன். அப்போது அவை கல்லூரியில் எல்லோரும் படித்ததால் நானும் படித்தேன். அதன் பின் எப்போது அவர்கள் கதை வந்தாலும், உடனே வாங்கி, எனக்கு முன் படித்து விடுவார். என்னிடம் தி. ஜாவின் 'மரப்பசு' மற்றும் 'அம்மா வந்தாள்' கதைகளைப் படிக்க சொல்லி சொன்னார். நானோ "அதெல்லாம் அழுகாச்சியா இருக்கும்" என்றேன். "நீ மொதல்ல படி, அப்புறம் சொல்லு" என்றார். முதலில் அம்மா வந்தாள் படித்து அரண்டு போய் விட்டேன். அப்படி ஒரு கருவை நான் எதிர் பார்க்கவே இல்லை. அதன் பிறகுதான் மற்றவர்களின் கதைகளையும் படித்தேன்.

இப்போதெல்லாம் மக்கள் தமிழ் இலக்கியம் என்றவுடன் 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்' என்று நினைக்கிறார்கள். புத்தக கண்காட்சியில் வருவோர் போவோர் எல்லாம் அதை வாங்கும்போது சொல்வார் "இவங்க யாரும் இத முழுசா படிக்க மாட்டாங்க. அப்படியே படிச்சாலும் அதுக்கப்புறம் வேறதுவும் வாங்க மாட்டாங்க. இத மட்டும் வீட்டு செல்புல, வர்றவங்க பாக்குற மாதிரி வச்சுக்குவாங்க" என்று சொல்வார். எனது பாட்டி (அவரது அம்மா) அது முதல் முறை கல்கியில் தொடராக வந்ததையே கோர்த்து (பைண்ட்??) ரொம்ப நாள் வைத்திருந்தார்.

2012ம் ஆண்டு கண்காட்சிதான் நாங்கள் (நானும்) கடைசியாக சென்றது. கிட்டத்தட்ட 6000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கினோம். அப்போது சாகித்ய அகாடமி விருது பெற்ற 'காவல் கோட்டம்' புத்தகமும் வாங்கினோம். "எனக்கு படிக்க நேரம் இல்ல. நீ மொதல்ல படி. நான் மத்ததெல்லாம் படிச்சிட்டு இதப் படிக்கிறேன்" என்றார். நானும் பாதி கூட படிக்கவில்லை. அதற்குள் இறந்து விட்டார். இன்று வரை அதை நான் படித்து முடிக்கவில்லை. அதன் பின் புத்தக கண்காட்சிக்கும் செல்லவில்லை. இத்தனைக்கும் இப்போது நடக்கும் நந்தனம், அலுவலகம் மிக அருகில். முன்பே கூறியது போல, இனி மகளுடன் தான் அங்கே செல்வது என்று உள்ளேன்.

கண் பார்வையற்ற, உயர் படிப்பு படிக்கும் மாணவர்களுக்காக பாடம் படிப்பது, தேர்வு எழுதுவது என உதவிகள் செய்வார். ஆனால், அவர் இப்படி செய்வது மிகச் சிலரைத் தவிர யாருக்கும் தெரியாது. பேத்தி பிறந்த பின், வேறு வழியே இல்லாமல் அதை நிறுத்த நேரிட்டது. அவர் மிகவும் வருத்தப்பட்ட விஷயம் அதுதான்.

காலில் வலி இருந்ததால் பொதுவாக ஆட்டோவில்தான் போவார். அவர் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் அருகே இருந்த ஆட்டோ நிறுத்தத்தில் அவர் எப்போது வந்தாலும் ராஜ மரியாதைதான். ஏனென்றால் பேரம் பேச மாட்டார். எவ்வளவு கேட்டாலும் கொடுப்பார். "அவங்க சங்கத் தலைவியே நீங்கதான்" என்றெல்லாம் சொல்லுவேன். ஒரு முறை நான் அங்கே ஆட்டோ எடுத்தேன். இறங்கும்போது சில்லறை பிரச்சினை. அப்போது அந்த ஓட்டுனர் "நீங்க அங்கயா குடியிருக்கீங்க?" என்றார். நான் "இல்லை. என் அத்தை வீடு அங்கெ உள்ளது" என்று அடையாளம் சொன்னவுடனே "அட விடுங்க சார், நான் அவங்ககிட்ட அடுத்த வாட்டி வாங்கிக்கிறேன்" என்றார். அத்தை இறந்த போது அவர்கள் அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

எப்போதுமே என்னை "கண்ணு" என்று அழகான கொங்கு தமிழில் அழைப்பார். அவரது மகன் உட்பட மற்ற அனைவருமே நான் வந்தால் "உங்க கண்ணு வந்திருச்சு" என்று நக்கல் செய்வார்கள். ஏதாவது வித்தியாசமாக சமைத்தால், நான் எப்படி சாப்பிடுகிறேன் என்று பார்ப்பார். பொதுவாக எனக்கு உப்பு, காரம் எல்லாம் சரி பார்க்கத் தெரியாது. தெரிந்தாலும் அதை வெளியே சொல்ல மாட்டேன். நான் ஒரு வேளை நன்றாக சாப்பிட்டால், அதை அடிக்கடி செய்து தருவார். ஒரு சிலவை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று அவர் சொல்லித்தான் எனக்கே தெரியும். என் மனைவியிடம் அவர் என்னைப் பற்றி சொன்ன நிறைய விஷயங்கள்தான் இன்று வரை என்னை அடி வாங்காமல் காப்பாற்றிக் கொண்டு வருகிறது.

அவர் இருந்த வரை, எல்லோருக்கும் ஒரு உறவுப் பாலமாக இருந்தார். அவரது மகன்கள் அவ்வளவாக யாருடனும் பேச மாட்டார்கள். ஆனால், இவர் எப்படியாவது மாதம் ஒரு முறையாவது அனைத்து சொந்தக்காரர்களிடமும் பேச வைத்து விடுவார். (இன்னைக்கு அவங்க பொறந்த நாள், கல்யாண நாள், விஷ் பண்ணு). அவர் இறந்த பின் அவ்வளவுதான். நானே அங்கு போவதை குறைத்து விட்டேன்.

என்னிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம், ஒரு விஷயம் முடிந்து விட்டால், அதை மறந்து விடுவேன், அல்லது நினைக்க மாட்டேன். பள்ளியில் இறுதித் தேர்வு முடிந்து விட்டால் அந்த பாடங்களைப் பற்றி நினைக்க மாட்டேன். அதுவே கல்லூரிக் காலங்களில் எனக்கு எதிராக முடிந்தது. அதே போலத்தான். அத்தை இறந்து விட்டார். இனி எங்களோடு இல்லை. அவரை நினைத்துக் கொண்டு என்ன ஆகப் போகிறது. திதி கொடுக்கக் கூட போகவில்லை. "இருக்கும்போது பச்சைத் தண்ணி கூட கொடுக்காம, செத்தப்புறம் விருந்து வச்சு என்ன செய்ய" என்று நானே அவரிடம் ஒரு முறை வேறொரு சம்பவத்தின் போது கூறி இருக்கிறேன்.

இன்றோடு அவர் இறந்து 3 வருடங்கள் முடிகிறது. வழக்கம் போல இந்த வருடமும் நான் போகவில்லை. ஆனால், அவரைப்பற்றி இன்று ஓரிருவராவது என்னுடைய பதிவைப் படித்து அவருக்காக மனதளவில் வருத்தப்பட்டால் கூட எனக்குப் போதும். என்னைப் பற்றி என் அத்தை புரிந்து கொண்டிருப்பார்.

தொடரலாம்.

2 comments:

  1. \\பழனி. கந்தசாமி said...
    நல்ல நினைவுகள்.\\

    நன்றி ஐயா!

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..