Thursday, September 6, 2018

கலைஞர் கருணாநிதி முதல் கருணாநிதி வரை!

கருணாநிதி மறைவு செய்தி வந்தவுடனே, இணையத்தில் இரு பிரிவுகளின் மோதல் ஆரம்பித்து விட்டது. தமிழ்நாட்டை பிடித்த சாபம் போய் விட்டது என ஒரு பிரிவு, இனி தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என இன்னொரு பிரிவு. கருணாநிதி அவ்வளவு முக்கியமாக தமிழகத்துக்கு இருந்தாரா, என்னுடைய பார்வையில் இந்த பதிவு. என்னுடைய கேள்வி அறிவை வைத்தே இந்த பதிவு. ஏதேனும் தவறு இருந்தால், கருத்திடவும். திருத்திக்கொள்கிறேன். 


பொதுவாக, ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது, மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறதா என்றால், முதலிடம் என்று சொல்ல முடியா விட்டாலும், முதல் 5 இடங்களுக்குள் கண்டிப்பாக இருக்கும். இதற்கு அடித்தளம் இட்டவர்கள் இரண்டு பேர். பெரியார் மற்றும் காமராஜர். 

முதலாமர், எல்லோருக்கும் கல்வி வேண்டும், அனைவரும் சமமாக கல்வி கற்க வேண்டும் என்று சொன்னவர். இரண்டாமவர், நிறைய பள்ளிகளைத் திறந்தவர், மதிய உணவு போட்டவர். இன்றைய 30 வயதிற்குள் உள்ள இளைய தலைமுறையினரே, உங்களது பெற்றோரின் ஆசிரியர்கள் அல்லது உங்களது தாத்தா படித்தவராக இருந்தால் அவர்களிடம் கேளுங்கள், அதிலும் பெண்கள் இருந்தால் கண்டிப்பாக கேளுங்கள். இவர்களது அருமையை சொல்வார்கள். எனக்கு இவர்கள் பற்றி முழுமையாக தெரிய வைத்தது என் அம்மாவும், என் அத்தையும்

காமராஜருக்குப் பிறகு அண்ணா. அவர் எதையும் பெரியதாக செய்வதற்கு முன்பே இறந்து விட்டார். அதன் பிறகு தமிழகத்தை ஆண்டது 3 பேர்தான். அதில் தமிழகம் இந்த அளவிற்கு முன்னேறி உள்ளது. அதற்கு முதல் காரணம் கருணாநிதி, காரணம், பெரியாரும் காமராஜரும் இட்ட அடித்தளத்தில், சரியான முறையில் கட்டடம் கட்டியவர் அவர்தான். பிறகுதான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா. 

இன்று பொறியியல் படிப்பு இந்த அளவுக்கு நாறிப்போய் கிடைப்பதற்கு முக்கிய காரணம் எம்ஜிஆர். தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆரம்பிக்க அனுமதி அளித்து, அதிலும் தனக்கு வேண்டப்பட்ட அனைவருக்கும் அனுமதி கொடுத்துள்ளார். சத்யராஜ் கூட ஒரு பேட்டியில் எம்ஜிஆர் தன்னை ஒரு பொறியியல் கல்லூரி வேண்டுமானால் ஆரம்பித்துக்கொள் என்று சொன்னதாகவும், தான் அதை மறுத்து விட்டதாகவும் கூறினார். அதற்காக இருவரும் எந்த நன்மையும் செய்யவில்லை என்று அர்த்தமில்லை. ஆனால், அதனைத் தொடர்ந்து இன்று வரை அதை நிறுத்தாமல் தொடர்ந்ததன் விளைவு, எல்லா திமுக,அதிமுக மாவாட்டும் செயலாளர்களும் ஆளுக்கு இரண்டு பள்ளிகள், நான்கு கல்லூரிகளும் வைத்துள்ளனர். 

பொதுவான வரலாறு என்னவென்றால், அண்ணா இறந்த பிறகு, 'அரசியல்' செய்து கருணாநிதி முதல்வராகிறார். அப்போது 'எமர்ஜன்சி' காலம். அதை எதிர்த்தார். 5 ஆண்டுகள் முடியும் முன்பே ஆட்சி கலைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் அவர் என்ன சாதனைகள் செய்தார் என எனக்கு தெரியவில்லை. அதன் பிறகு, 13 ஆண்டுகள் வனவாசம். மீண்டும் ஆட்சி கிடைத்தாலும், 2 ஆண்டுகளில் கலைக்கப்படுகிறது. ராஜீவ் காந்தி கொலை வேறு நடக்க, படு தோல்வி அடைகிறது கட்சி, ஆனாலும் அவருக்கு வெற்றி. 5 ஆண்டுகள் கழித்து வெற்றி பெறுகிறார். 5 ஆண்டுகள் முழுமையாக ஆளுகிறார், மீண்டும் தோற்கிறார். 5 ஆண்டுகள் கழித்து அரைகுறையாக வெற்றி பெற்று, எப்படியோ 5 ஆண்டுகளை ஓட்டுகிறார். அவ்வளவுதான், முற்றும்.

கருணாநிதி என்னென்ன நன்மைகள் செய்தார் என்பது இருக்கட்டும். ஆனாலும் எனக்கு என்ன சந்தேகம் என்றால், அரசியல் ஆளுமை உள்ள ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர் என பல ஆளுமைகளுடன் போட்டி போட்டு வென்ற கருணாநிதியால், கடைசி 15 ஆண்டுகளில் ஏன் ஜெயலிதாவை முழுமையாக தோற்கடிக்க முடியவில்லை. அது ஜெயலலிதாவின் வெற்றியா? கண்டிப்பாக இல்லை. கருணாநிதியின் தோல்வி. அது ஏன்? பிறகு பார்ப்போம். 

கருணாநிதி நமக்கு (சரி எனக்கு) என்னென்ன செய்தார் என்று பார்ப்போம். பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச பேருந்து பயணச்சீட்டு, முதலில் 8ம் வகுப்பு வரை இருந்தது, பிறகு 12ம் வகுப்பு வரை கொடுக்கப்பட்டது. இரண்டுமே கருணாநிதி ஆட்சியில்தான். கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் 15 சதவீத இட ஒதுக்கீடு. இது ஜெயலலிதா அரசால், சாமர்த்தியமாக ஒழிக்கப்பட்டது, மீண்டும் கொண்டு வரப்படவில்லை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று பல உள்ளன. மறுக்கவோ, மறைக்கவோ முடியாதது இட ஒதுக்கீடு. பல குடும்பங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள் வெளிவந்து, நல்ல வேலையில் உள்ளனர் என்றால், அது கருணாநிதி கொண்டு வந்த பல திட்டங்களால்தான். 

சரி, மற்றவர்கள் கருணாநிதி ஏன் கெட்டவர் என்று சொல்கிறார்கள் என்று பார்ப்போம். அவர்தான் மதுக்கடைகளை திறந்தார். சரி, அதற்கு பிறகுதானே எம்ஜிஆர் வந்தார், அவர் மூடி இருக்கலாமே? ஜெயலலிதா வந்தார், அவைகளை அரசுடைமையாக்கி விட்டார். ஹிந்தி படிக்க விடாமல் செய்து விட்டார். இதற்கு எதை சொன்னாலும் அவர்களுக்கு புரியாது. ஹிந்தி கட்டாயம் என்பதைத்தான் எதிர்த்தார்கள். இன்னொன்றும் சொல்கிறேனே. ராஜாஜி குலக்கல்வி முறையை கொண்டு வந்தார். "சரி, இதிலென்ன தப்பு, படிக்கும்போதே ஒரு வேலைய தெரிஞ்சுக்கலாமே" என்றார்கள். ஆனால் அவர் சொன்னது தந்தையின் தொழிலைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று. அதைத்தான் எதிர்த்தார்கள். 

சரி, ஏன் வீழ்ந்தார். முதலாவது, குடும்ப ஆதிக்கம். ஸ்டாலின் உறுப்பினராகி, பிறகு படிப்படியாக தலைவர் ஆனார் என்பார்கள். சரிதான், ஆனால், ஸ்டாலினைத் தவிர வேறு யாருமே ஏன் அப்படி வரவில்லை, வந்த வைகோவையும் அனுப்பி விட்டீர்கள். அது அவரிடம் மட்டும் இல்லை. எல்லா திமுக ஆட்களிடமும் இருக்கிறது. 

அதே போல ஆரம்ப கட்டத்தில் வேலை வாய்ப்பு பதிவின் முதிர்வு அடிப்படையில் வேலை என்றாலும் கூட, அரசு வேலைகள் அனைத்தும் திமுகவை சார்ந்த நபர்களுக்கே தரப்பட்டன. தகுதியான நபர் என்பதை விட கட்சிக்காரர் என்பதற்குத்தான் முக்கியத்துவம். நடராசன் (சசிகலாவின் கணவர்) கூட ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர் என்றுதான் அவருக்கு அரசு வேலை தரப்பட்டது, இதை அவரே சொல்லி இருக்கிறார். நெல்லுக்கு பாயும்போது, புல்லுக்கு பாய்வது போல சில சரியானவர்களுக்கும் வேலை கிடைத்தது. அதனாலேயே பொதுவாக வயதான பல அரசு ஊழியர்கள் கருணாநிதியின் விசுவாசிகளாக இன்னும் இருக்கிறார்கள். 

எல்லோரும் ஊழல் செய்கின்றனர். அதனாலேயே மாறி மாறி ஆட்சி நடந்தது. 2015 வெள்ளத்தின்போது அதிமுக அரசு காட்டிய அலட்சியம், அது முடிந்தவுடனே ஆளும் கட்சி விழாவிற்காக நடந்த அட்டகாசம், இவையனைத்தையும் தாண்டியும் ஏன் 2016ல் திமுக தோற்றது? ஏனென்றால், திமுக நேரடியாக மக்களின் வயிற்றில் அடித்தது. ஒரு பாலம் காட்டியதில் ஊழல், குட்கா ஊழல் எல்லாம் எந்த தனி மனிதனையும் பாதிக்கவில்லை, சமூகத்தை பாதித்தது (அதற்காக அதை நான் நியாயப்படுத்தவில்லை). 

2006-11 வரையிலான திமுக ஆட்சியில் மக்களின் நிலங்கள் மிரட்டியும், விரட்டியும் பிடுங்கப்பட்டன. அது மட்டுமே மிக முக்கிய காரணம். இன்னமும் பலர் வயிறெரிந்து சொல்வார்கள். பலர் இன்னும் கண்ணீருடன் அதை மீட்க அலைந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் குறிப்பாக சொன்னால், எங்கெங்கெல்லாம் பணம் வரும் என்பதை திமுக கண்டு பிடிக்கும், அதிமுக அதை தொடரும். 

2006 வரை கலைஞராக இருந்த அவர், பிறகு கருணாநிதியாக மாறியதற்கு காரணம் அவர் மட்டுமே. இலவசங்கள், பல விளம்பரங்கள், தேவையில்லாத பாராட்டு விழாக்கள், மதுரையில் தினகரன் அலுவலக தீ விபத்து, (அழகிரியின் மதுரை சாதனைகள் பற்றி தனியாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை), 3 பேர் இறப்பிற்கு பின் இவர்களது குடும்பம் இணைய 'கண்கள் பனிக்க, இதயம் இனிக்க' என்று கூறியது, செம்மொழி மாநாடு என்ற பெயரில் கோயமுத்தூரில் நடந்த குடும்ப விழா என்று இன்னும் சில சம்பவங்கள் உள்ளன, அவற்றை நான் குறிப்பிட விரும்பவில்லை, எல்லோருக்கும் தெரியும். 

கடைசியாக சொல்வது என்னவென்றால், 2001 வரை இருந்த கலைஞர் கருணாநிதியை எனக்கு பிடிக்கும். அது வரை மக்களுக்காக உழைத்தார், அதன் பிறகும் மக்களுக்காகவே உழைத்தார், சொந்த மக்களுக்காக. அவர் ஒரு சில பேர் மீது கட்சி சார்பாக நடவடிக்கை எடுத்திருந்தால் கூட, 2016ல் ஆட்சியைப் பிடித்திருக்க முடியும். எல்லாவற்றையும் தாண்டி ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிடியில் இருந்து கல்வி, அரசு, பதவிகளை கடைக்கோடி ஏழை வரை கொண்டு சென்றது கருணாநிதிதான் என்பதை மறுக்க இயலாது. 

பின் குறிப்பு: "சூப்பருங்க. இந்த திராவிட ஆட்சியாலதான் நாம் இப்படி இருக்கோம், இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது" என்று யாரும் வரவேண்டாம்.    

Monday, August 6, 2018

யார்ரா நீ!!

ஆடி மாத வணக்கம். சில திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்கள். இவையாவும் வந்து மாமாங்கம் ஆயிருக்கலாம். ஆனால், நான் இப்போதுதானே பார்த்தேன். 

காலா:

முதலில் ரஜினியை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். தன வயதிற்கு ஏற்ற பாத்திரம். டூயட் இல்லை. பறந்து பறந்து அடிக்கும் சண்டை இல்லை. ஆனால், ரஜினி ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட மகிழ்ச்சி அளிக்காத மொக்கைப் படம். "அதெல்லாம் ஒண்ணுமில்ல, நான் நாலு வாட்டி பாத்தேன். அதுவும் தியேட்டர்ல" என்று சொன்னால், இருக்கலாம். படம் பிடித்ததா என்றால், "பிடிக்காமையா நாலு வாட்டி பாத்தேன்" என்பார்கள். படம் "நல்லாருக்கா, புடிச்சிருக்கா இல்லையா" என்றால், நெளிந்து கொண்டே "கொஞ்சம் மொக்கைதான்" என்பார்கள்.எனக்கென்னவோ, படத்தில் வந்த இளமைப்பருவ கதையை மட்டும் தனிப்படமாக எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. 

கபாலியில் திருமணம் முடிந்தபிறகு தகராறு நடக்கும், கணவன் மனைவி பிரிந்து விட்டு பல வருடம் கழித்து இணைவார்கள். இதில் திருமணத்திற்கு முன்பே நடக்கிறது. எது நடந்தாலும் திடீரென நான்கு பேர் வந்து "காலா, துவைக்க வேணும் ஆலா, கால் டாக்ஸினா ஓலா" என்று பாடுகிறார்கள். நல்ல வேளை, ஆட்களை மாற்றினார், இல்லையென்றால் "காலாவா, இல்ல கபாலியா" என்று குழம்பி இருப்போம். 

நிஜ வாழ்க்கையில் உள்ள ரஜினிக்கு எதிரான ரஜினியை காட்டியதுதான் தோல்வி என்று சிலர் சொன்னார்கள். மொத்தத்தில் ரஞ்சித் எதை செய்ய வேண்டுமோ அதை நாரதராக, மன்னிக்கவும் நன்றாக செய்து விட்டார். ரஜினியை வைத்து சொல்ல வேண்டிய கருத்துக்களைத்தான் கபாலியில் சொல்லியாயிற்றே, இதைக் கொஞ்சம் மசாலா படமாக எடுத்திருக்கலாம். பார்ப்போம். 

அசுரவதம்:

என் மகள் இந்தப்படம் பார்த்து விட்டு "யார்ரா நீ, யார்ரா நீ" என்று 2 நாட்களாக கத்திக்கொண்டே இருந்தால் (அந்த சில முக்கிய காட்சிகளை நாங்கள் ஓட்டி விட்டோம், என்ன நடக்கிறது என்று எங்களுக்கு புரிந்ததால்). பழி வாங்கும் கதை, தேவையே இல்லாத படம். ஒரு வேளை, சசிகுமார் வேடத்தில் வில்லனும், அந்த பாத்திரத்தில் சசியும் நடித்திருந்தால் நமக்கு ஒரு ஆர்வம் வந்திருக்கும். 

சசி கொல்ல போகிறார் என்று கதை ஆரம்பித்ததும், எல்லோருக்கும் "அவன் நல்லவனாத்தான் இருப்பான்" என்று தோன்றியது. அதே போல வில்லன் பெண் பித்தன் என்பதும், பெண்களை அடைய எந்த அளவிற்கும் போவான் என்பது சொல்லப்பட்டு விட்டது. பிறகு அப்படி ஒரு முன்கதை தேவையா? அதுவே பெரிய சறுக்கல். 

'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் வந்தது போல யாராக வேண்டுமானாலும் இருக்கலாமே என்றோ, அல்லது முடிந்தவுடன், ஓரிரு காட்சிகளில் காண்பித்திருந்தாலே போதும். அய்யய்யோ, என் மகள் ஆரம்பித்து விட்டாள் "யார்ரா நீ, உன்ன கொல்லாம விட மாட்டேண்டா". 

டிக் டிக் டிக்:

மாற்றான் படம் வருவதற்கு முன்பு 'துருவன்' என்றொரு படம் வந்தது. அதில் 'தமிழின் முதல் ஓட்டிப் பிறந்த இரட்டையர் படம்' என்று விளம்பரம் செய்தார்கள். அதே போலத்தான் இந்த இயக்குனரும். மொக்கைப்படங்களாக எடுத்து விட்டு, தமிழின் முதல் ஜோம்பி திரைப்படம், தமிழின் முதல் விண்வெளி திரைப்படம் என்று விளம்பரம் செய்தால் ஓடி விடும் என்று நினைக்கிறார் போல. முதலில் நீங்கள் சொந்தமாக ஒரு கதையை யோசித்து படம் எடுங்கள். 

இனி எப்படி படம் எடுப்பது என நான் பாடம் எடுக்கப் போவதில்லை. ஒரே ஒரு வேண்டுகோள்தான் ஜெயம் ரவி அவர்களே. தயவு செய்து இனி பழைய படங்களின் தலைப்பில் படம் எடுக்காதீர்கள் (சகலகலா வல்லவன், டிக் டிக் டிக்), எடுத்தாலும் நடிக்காதீர்கள். என்னாது ஜெயம் ரவி நடிக்கிறாரா என்று கேட்காதீர்கள். 

தமிழ்ப்படம் 2:

2010ல் 'தமிழ்ப்படம்' வந்தபோது அது புதிதாக தெரிந்தது. என்னதான் லொள்ளு சபா இருந்தாலும், முழு நேர 'கலாய்' படமாக இருந்ததால் வெற்றி பெற்றது. அதிலும் 2ம் பாதி மொக்கைதான். இப்போது இரண்டாம் பாகமும் அதே போல கொஞ்சம் மொக்கைதான். நிறைய சிறு சிறு விஷயங்களில் (HBO, Star Movies, NGC செய்திகள், போகிற போக்கில் வரும் சில வசனங்கள்) நன்றாக இருந்தாலும், மொத்தமாக சற்று குறைதான். ஒரு முழுமையான கதை, திரைக்கதையில் காட்சிகளை நக்கல் செய்வது போல வைத்திருந்தால் பரவாயில்லை. வெறும் காட்சிகள் மட்டுமே என்பதால் இழுவையாகி விட்டது. 

Mr. சந்திரமௌலி: 

பார்த்ததிலேயே கொஞ்சம் நன்றாக இருந்த தமிழ் படம். ஒரு வேளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் இருக்கும். நிறைய சிறு சிறு விஷயங்களில் கவனம் செலுத்தி இருந்தனர் (வில்லன் குத்து சண்டை போடுவது, உண்மையில் நடந்த பரிட்சையில் காப்பி அடிப்பதை பயன்படுத்திய விதம், முதலில் வரும் சம்பந்தமில்லாத காட்சிகள், பிற்பாதியில் இணைக்கப்படுவது). இருந்தாலும் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். அதே போல இனி மக்கள் கால் டாக்சி எடுக்கவே யோசிக்கும் அளவிற்கு 'செய்து' விட்டார்கள். கண்டிப்பாக நம்பி பார்க்கலாம். 

102 Not Out: 

என்னுடைய முந்தைய ஒரு பதிவில் சொன்ன ஒரு விஷயம்தான் இந்தப் படத்தின் கரு. இரு நண்பர்கள். இருவரின் பரம்பரையிலும் சர்க்கரை வியாதி உண்டு. முதலாமவன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எல்லாம் சாப்பிடுவான். கேட்டால் "எப்படியும் எனக்கு சுகர் வரத்தான் போவுது, அது வரைக்கும் அனுபவிக்கிறனே". இரண்டாமவன் பயங்கர பத்தியம். "எப்படியும் எனக்கு சுகர் வரத்தான் போவுது, இப்பவே கண்ட்ரோல் பண்ணிக்கிட்டா பின்னாடி பிரச்சினை இருக்காது". இதுதான் கரு. 

102 வயது கொள்ளுத்தாத்தாவுக்கும் (மனதின் வயது 16) எப்போதும் மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், வயதே ஆகாது என்ற எண்ணத்தில் உள்ள அமிதாப், 75 வயது தாத்தாவுக்கும் (மனதின் வயது 75), நமக்கு வயசாயிடுச்சி, அதுக்கேத்த மாதிரி நடந்துக்கனும் எனும் சசி கபூர் இடையே நடக்கும் போராட்டம். இவர்களுக்கு நடுவே ஒரு அப்பாவி இளைஞன். அட்டகாசமான படம். 

உண்மையில் ரஜினி இது போன்ற படங்களை முயற்சிக்கலாம். தில்லு முல்லு போல நல்ல நகைச்சுவை படமாக கண்டிப்பாக வெற்றி அடையும். 

Secret Superstar:

PK படம் வெற்றி பெற்ற உடனே, பல இந்து அமைப்புகள் அமீர்கான் முஸ்லிம்தானே, முடிந்தால் அவரது மதத்தை கிண்டல் செய்யட்டும் என்றனர். அவர்களுக்காகவே எடுத்திருப்பார் போல. மிகவும் கட்டுக்கோப்பான முஸ்லீம் குடும்பத்தின் பெண் வாரிசு, பாடகியாக வேண்டும் என்று ஆசை. பெண் என்பதால், கருவிலேயே கொல்ல முயன்ற குடும்பம் அது. எப்படி சாதிக்கிறார் என்பதுதான் கதை. 

ஹீரோயிஸம் எதுவுமின்றி, அழகான ஒரு துணைக்கு கதாபாத்திரத்தில் அமீர்கான். அவரும் பெரிய நல்லவர் என்றெல்லாம் கூட காண்பிக்க மாட்டார்கள். தம்பி, தோழன் என்று சிறு சிறு பாத்திரங்களும் நன்றாக நடித்துள்ளனர். உண்மையில் எப்படியெல்லாம் மற்ற மொழிகளில் நாயகர்கள் (முதலில் மலையாளம், பின் ஹிந்தி) இப்படி நடிக்கிறார்களோ தெரியவில்லை. தமிழில் விஜய் சேதுபதி இது போல முயற்சிக்கிறார். தெலுங்கில் எல்லாம் வாய்ப்பே இல்லை. தவற விடாதீர்கள். 

சில எண்ணங்கள்: 

இதில் காலா, 102 Not அவுட் இவை இரண்டு படங்களும் அமேசான் பிரைமில் உள்ளது. தமிழ்ப்படம் 2 திரையரங்கில். மற்றவை வழக்கம் போலத்தான். நம் தயாரிப்பாளர்கள் எதற்கு யோசிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஒரு சில ஆட்டோ ஓட்டுனர்கள் "வந்தா கொறஞ்சது 200 ரூபா கொடுக்கணும்" என்பார்கள். "நான் சொன்ன எடம் கொஞ்ச தூரம்தாங்க" என்றால் "முடியாது போ" என்பார்கள். அதே போல திரையரங்குகளில்தான் விடுவேன், அதன் பின் என் படத்தை எங்கும் பார்க்க முடியாது, பார்க்கவும் கூடாது என்று நினைக்கிறார்கள் போல. 

ஹிந்திப்படங்கள் எல்லாம் 15 நாட்கள் ஓடிய பின் அமேசானில் வந்து விடுகிறது. காலா 50 நாட்களுக்கு பிறகு வந்து விட்டது. தமிழின் பல பழைய படங்கள் இன்னும் எதிலும் வரவில்லை. "ஏன் அப்படி பாக்கணும், கம்முனு உக்காரு" என்றும் சொல்வார்கள் போல. 

என்னவோ போடா மாதவா. தமிழ் ராக்கர்ஸ் என்னவோ முழு நேர பணியாக, ஒரு 11 பேர் கொண்ட குழுவாக பனி புரிகிறார்கள் போல. பழைய ஆங்கில படங்களை அவர்களே தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் மாற்றி, அவர்களே பேசி வெளியிடுகிறார்கள். 

மக்கள் யாருக்கும், படம் வெளிவந்த உடனே, திருட்டுத்தனமாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதில்லை. குடும்பத்துடன் திரையரங்கம் செல்ல முடியாது, கையைக்கடிக்கும் செலவு என்பதுதான். அதில் பாதி பேருக்கு மேல் இணையத்தில் பணம் கட்டிப் பார்க்க தயாராக இருந்தாலும், வாய்ப்பை பயன்படுத்த திரையுலகினர் மறுக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 

எனக்குத் தெரிந்து இதை நான்கைந்து முறை சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன். சங்கை ஊதிக்கொண்டே இருப்போம்.

Thursday, July 26, 2018

பணம் கேட்கும் பள்ளிகள்!

பொதுவாகவே ஊடகங்களிலும், இணையத்திலும் வெளிவரும் செய்திகளை வைத்து நான் பதிவு இடுவது இல்லை. ஏனெனில் அவை அனைத்துமே பொய் என்று அர்த்தமல்ல. ஆனால், இன்னும் பல உண்மைகள் இருக்கும், அவர்கள் கூறவில்லை அல்லது கூற விரும்பவில்லை. அதே போல உண்மை என்ன என்றும் தெரியாமல் அதைப்பற்றி கன்னாபின்னா என்று கருத்துக்களும் வரும். திடீரென அது இல்லை, இதுதான் உண்மை என செய்தி வரும், உடனே "நாந்தான் அப்பவே சொன்னேன்ல" என்றும் கருத்திடுவார்கள். இப்போது அதை கண்கூடாக கண்டதால், அதனைப்பற்றி ஒரு பதிவு. 

கடந்த ஒரு வாரமாக குரோம்பேட்டை மற்றும் பெருங்களத்தூரில் ஒரு பிரபல பள்ளி, அதுதான் போட்டு கிழிச்சுட்டாங்களே, ஸ்ரீமதி சுந்தரவள்ளி நினைவு பள்ளி (சுருக்கமாக SSM School) பள்ளியில் நடந்த கட்டணக்கொள்ளை, பெற்றோர்களை பணம் கேட்டு மிரட்டிய அந்த தாளாளர் சந்தானம் பற்றிய ஒரு பதிவு. 

"இப்போ மட்டும் என்ன ___க்கு பதிவு" என்பவர்களுக்கு, அந்த பாதிக்கப்பட்ட பெற்றோர்களில் நானும் ஒருவன். எனது மகளும் அங்கேதான் ஆரம்பம் முதல் படிக்கிறாள். இந்தப் பள்ளியின் STD எல்லாம் நீங்கள் இணையத்தில் படித்து தெரிந்து கொள்ளவும். முதலில் செய்திகளில் வந்துள்ள உண்மைகளைப் பற்றி பார்ப்போம். 

1. 2 லட்சம் கட்டவில்லை என்றால் பள்ளியை விட்டு வெளியேறவும். 
2. பெற்றோர்களைப் பற்றி திட்டி பள்ளியில் திட்டியது. 
3. முதலில் 2 லட்சம் கேட்டவுடன், அதைப்பற்றி கேட்க சென்ற பெற்றோர்களிடம் "ஆமா, அப்படிதான் கேப்பேன்" என்றது. 
4. பள்ளிகளை உடனே மூடி விடுவேன், வேறு யாருக்காவது விற்று விடுவேன் என்றது, 
5. பள்ளிகளின் வசதிகளை குறைத்து விடுவேன் என்றது 

எல்லாமே உண்மைதான். அதற்கு இரு வாரங்களுக்கு முன்புதான் எல்லா மாணவர்களின் பெற்றோர்களுடன் உரையாடினார். அப்போது கூட எதுவும் சொல்லவில்லை. அந்தப் பள்ளியில் உள்ள பிரச்சினையே அதுதான். எந்த விஷயமும் பெற்றோர்களுடன் நேருக்கு நேர் விவாதிப்பதே இல்லை. எந்த சந்திப்பாக இருந்தாலும், அவர் பேசுவார், மற்றவர்கள் கேட்க வேண்டும். 

திடீரென பள்ளியில் இருந்து குழந்தைகள் மூலமாக அறிவிப்பு வரும். அடுத்த ஓரிரு தினங்களில் அதை ஆதரிக்கிறேன் அல்லது இல்லை என்று திருப்பி கொடுத்தனுப்பி விட வேண்டும். கேட்கலாம் என்று இதுவரை நான் போனதில்லை. போனாலும் ஒன்றும் நடக்காது என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். அப்படிதான் இருக்கும். 

30 வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் எப்படி இருந்தார்களோ, அப்படியே இப்போதும் இருப்பார்கள் என்று நினைத்து விட்டார் போல. அப்போதெல்லாம் பெற்றோர் பள்ளிக்கு வந்து "நீங்க எங்க வேணும்னாலும் அடிச்சிக்கோங்க, மூஞ்சுல மட்டும் வேணாம்", "நல்லா வெளுத்து விடுங்க சார்" என்றெல்லாம் சொல்லி விட்டு போவார்கள். இப்போதெல்லாம் அப்படியா, ஆசிரியர் கையை ஓங்கினாலே, மாணவன் கண்ணை மூடிக்கொள்கிறான், உடனே "ஆசிரியர் அராஜகம், மாணவன் மயக்கம்" என்று செய்தி வந்து விடுகிறது. 

அடுத்து இன்னொரு முக்கியமான செய்தி, தனது தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க, பெற்றோரிடம் இப்படி பணம் கேட்கிறார். இதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. அவர் ஏற்கனவே நிறைய பெற்றோரிடம் கடன் வாங்கி, அதையும் முறையாக வட்டியுடன் திருப்பியும் கொடுத்துள்ளார். 

முதன் முதலில் பிரச்சினை ஆன சுற்றறிக்கையில் சொல்லப்பட்டது என்னவென்றால், "திருப்பி தரப்படக்கூடிய காப்புத் தொகை அனைத்து மாணவர்களுக்கும் 2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இது பள்ளியின் முன்னேற்றத்திற்காக. அதை அடுத்த கல்வி ஆண்டு ஆரம்பத்தில் செலுத்த வேண்டும். இதற்கு சம்மதமா இல்லையா என்பதை இந்த மாத இறுதிக்குள் சொல்லி விட வேண்டும். இப்போது சரி என்று சொல்லி விட்டு, பின்னர் இல்லை என்றால், ஏற்கனவே உள்ள காப்புத்தொகை திருப்பி தரப்பட மாட்டாது" என்பதுதான். 

எனக்கும் கோபம் வந்தது. இன்னும் 9 மாதம் கழித்து நிலைமை எப்படியிருக்கும் என்று சொல்ல முடியாது. அதே போல இன்னும் எதை முன்னேற்றப் போகிறாராம், சும்மா காசு காசு என்று அலைகிறார் என்று தோன்றியது. கிட்டத்தட்ட 80 சதவிகித பெற்றோர்களுக்கு இதுதான் தோன்றியது. "இன்னும் 3 வருஷம் கழிச்சு மறுபடியும் 2 லட்சம் கொடுங்கன்னு கேட்டா என்ன செய்யுறது" என்றுதான் எல்லோருக்கும் தோன்றியது. அதைக் கேட்க சென்ற போதுதான் "நான் சொல்ல வேண்டியதை எல்லாம் அந்த சர்க்குலர்ல சொல்லிட்டேன். போலீஸ் நீங்கதான் இங்க என்ன நடந்தாலும் பொறுப்பு" என்று சொல்லிவிட்டு போனவுடன் நிறைய பேருக்கு இன்னும் கோவம். 

அன்றைய தினம் அவருக்கு ஆதரவு என்று யாருமே இல்லை. அப்போதே கையெழுத்து போட்டுக் கொடுத்த பெற்றோர்கள் கூட அவருக்கு ஆதரவாக பேசவில்லை. "இத்தன வருஷம் இங்கேயே படிச்சாச்சு. அதுக்கப்புறம் எல்லாம் போய் ஸ்கூல தேட முடியாது. திருப்பிதான் கொடுத்திடுவார்ல, அதான். அந்த நேரத்துல காலேஜுக்கு கூட தேவைப்படும்" என்று அவர்களை அவர்களே சமாதானம் செய்து கொண்டார்கள். 

அதன் பின் பள்ளி இணைய தளத்தில் கொடுக்கும் பணத்தை வைத்து என்னென்ன செய்ய போகிறோம் என்று சொல்லி இருந்தார்கள். "இத அப்பவே சொல்லி கேட்ருக்கலாமே" என்றுதான் பாதி பேருக்கு தோன்றியது. சரி அதுதான் 31 வரை அவகாசம் உள்ளதே, பொறுமையாக கொடுக்கலாம் என்றுதான் காத்திருந்தார்கள். ஆனால், அவரோ அவசரப்பட்டு மாணவர்கள் மத்தியில் தேவையின்றி வார்த்தைகளை விட, பிரச்சினை வேறு விதமாக மாறிப்போய் விட்டது. 

பெரிய பிரச்சினையே அவர் சொன்னால் எல்லோரும் கேட்க வேண்டும் என்று அவர் எண்ணுவதுதான். இப்போதைய சுற்றறிக்கையின்படி, அரசு 3% மட்டுமே கல்விக்கு ஒதுக்குவதால் , மாதம் ஒரு லட்சம் வாங்கும் பெற்றோர்கள் வருடத்திற்கு 36,000 மட்டுமே கல்விக்கு செலவிடலாம். எனவே இனி, அதற்கேற்றார் போல வசதிகள் குறைக்கப்படும், ஒரு சாதாரண பள்ளி எப்படி இருக்குமோ அப்படிதான் இருக்கும், SSM பள்ளி என்ற தனித்துவம் இருக்காது என்று வந்துள்ளது. "முடியலடா சாமி, கொஞ்சம் எங்களை கூப்பிட்டுதான் பேசுங்களேன்" என்றுதான் தோன்றியது. 

சரி, இதுவரை நடந்தது எல்லாமே வீட்டில் பெரியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே நடக்கும் சண்டைதான். "நீங்க பாட்டுக்கு உங்க இஷ்டத்துக்கு பண்ணிக்கிட்டிருக்கீங்க" என்று சண்டை போட தோன்றியதே தவிர, "புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்" அளவுக்கு எல்லாம் இல்லை. ஏனென்றால், 

SSM பள்ளியில், கட்டண விவரங்கள் அனைத்தும் பள்ளியின் இணையத்தில் இருக்கும். கட்டணம் 
இதுவரை ஒரு முறை கூட நான் பணமாக செலுத்தியதில்லை. எல்லாமே மின்னணு பரிவத்தனை அல்லது வரைவோலைதான். எனவே எப்படி இருந்தாலும், என் பணம் கறுப்புப் பணமாக இல்லை என்பது நிச்சயம். 
அதே போல, நாம் கொடுக்கும் கட்டண அளவிற்கு ஏற்றாற்போல போல பள்ளியில் வசதிகள் உண்டு. குரோம்பேட்டையில் இல்லை என்றால், மாணவர்களை பேருந்தில் ஏற்றி பெருங்களத்தூர் கூட்டிக் கொண்டு போவார்கள். 
மாணவர்கள்: பணியாளர்கள் விகிதம் இந்தப் பள்ளியிலும் பார்க்க முடியாது. காலையில் பள்ளியில் இறக்கி விடும் இடத்தில இருந்து, பள்ளிக்கு உள்ளே செல்லும் வரை, பத்தடிக்கு ஒரு பணியாளரோ, ஆசிரியையோ இருப்பார்கள். 
பெற்றோரை மதிக்கிறாரோ இல்லையோ, குழந்தைகளை இதுவரை எந்தக் குறையும் இல்லாமல் கவனித்துக் கொண்டனர். 
பேருந்தில், ஓட்டுநர் இல்லாமல் குறைந்தது 3 பேராவது குழந்தைகளை பார்த்துக்கொள்ள இருப்பார்கள். 
"சார், தினம் என்ன நடக்குதுன்னு கொஞ்சம் சொல்லுங்க" என்று கேட்டால், "உங்கள விட உங்க குழந்தைங்க எங்களுக்கு முக்கியம், 30 வருஷமா பாத்துக்கிட்டு இருக்கோம். நாங்க இருக்கோம்" என்றுதான் சொல்வார். 
10 வயது சிறார்கள் வகுப்பறையில் இருந்து கழிவறைக்கு செல்லும் போது கூட ஒரு பணியாளர் உடன் பாதுகாப்பிற்கு வருவார். 
நேற்று தெரிந்து கொண்டது, ஒரு மாற்று திறனாளிக்காக தனி கழிவறை கட்டி, அந்த ஒரு மாணவருக்காக தனி பணியாளரையும் நியமித்திருக்கிறார். 
அதே போல நன்கொடை, அரசியல்வாதிகளின் பரிந்துரை எதுவுமே செல்லாது. 
அரசு கூறிய விதிகளின்படி, வசதிகளுக்கேற்ப கட்டணம் உள்ளது. மறைமுக கட்டணம் இதுவரை வாங்கியதே இல்லை. 
ஆறாம் வகுப்பிற்கு மேல், சுற்றுலா உண்டு. அதுவும் இதே கட்டணத்தில் அடங்கும், அதிலும் 12ம் வகுப்பில் சிங்கப்பூருக்கு கூட்டி செல்வார்கள். 

நிறைய முறை அரசியல்வாதிகளால் பாதிக்கப்பட்டும் "நான் சரியா இருக்கேன், எவனாலயும் என்னை ஒன்னும் செய்ய முடியல" என்றே தைரியமாக சொல்வார். எங்கேயாவது தவறும் என்று காத்திருந்தார்கள். மாட்டி விட்டார். 

கடந்த இரண்டு வருடங்களாக உள்ள வதந்தி, இந்த பள்ளிகளை வாங்க நிறைய அரசியல்வாதிகள் முயற்சி செய்கிறார்கள் என்று. கூட்டிக், கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வருகிறது. தினகரனில், இந்த பள்ளி பற்றி உடனே உடனே செய்தி வருகிறது. சந்தானம் அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் பற்றி செய்தி வரவில்லை. " தப்பி ஓடினார், துரத்திப் பிடித்தது காவல்துறை" என்றெல்லாம் செய்தி வருகிறது. அதைப் பற்றி 7 நிமிட செய்தி, அதில் 100 பொய்கள். 4 லட்சம் நன்கொடை என்பதெல்லாம் கட்டுக்கதை. 

வெளியூரில் உள்ளவர்கள் "இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் தூக்குல போடணும், இந்த பள்ளியை விட்டால் வேறு பள்ளியே இல்லையா, நீங்க ஏன் அரசு பள்ளியில சேக்க மாட்டேன்கிறீங்க, அதான் இப்படி" என்றெல்லாம் கருத்து சொல்கிறார்கள். உங்கள் அனைவருக்கும் இன்னும் இரண்டொரு நாட்களில் வேறொரு பிரச்சினை வரும். எல்லா கருத்து கந்தசாமிகளும் இதை விட்டு விட்டு அங்கு ஓடி விடுவார்கள். தலைவலியும் திருகுவலியும் தனக்கும் வருமல்லவா.

பள்ளிப் பேருந்தில் இருந்து மாணவி தவறி விழுந்து இறந்து 6 வருடம் ஆகிறது, இதுவரை அந்த பெற்றோர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. பேருந்து எங்களுடையதே இல்லை என்று பள்ளி சொல்கிறது. தினமும் தாம்பரம் MEPZ சந்திப்பில், அந்தப் அந்த மக்களால் எரிக்கப்பட்ட, சாலையோரம் கிடைக்கும் அந்த பேருந்தை பார்க்கும்போதெல்லாம் மனது ஏதோ செய்யும். இன்று தாம்பரம் அருகே பள்ளியில், பள்ளி பேருந்தில் ஒரு பணியாளர் குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அதைப்பற்றி ஒரு செய்தியும் இல்லை. கும்பகோணம் தீ விபத்து நடந்து 14 வருடங்கள் ஆகிறது. இன்னும் பெற்றோர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை. தண்டனை பெற்றவர்கள் வெளியே வந்து விட்டார்கள். 

எல்லா தொலைக்காட்சிகளும் 'மிக கவனமாக' செய்திகளை திரித்து சொல்கின்றன. மிகக்குறிப்பாக சன், பாலிமர். மற்ற நாளிதழ்கள், செய்திகளில், மிகச்சிலர்(?) அவருக்கு ஆதரவாக போராடுகிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளதாம். சன் நியூஸ் விவாத மேடையில் பணம் பார்க்கும் பள்ளிகள் என்று விவாதம். அதில் மீண்டும் மீண்டும் அவரை கைது செய்வதையும், இந்தப் பள்ளியையும் மீண்டும் மீண்டும் காண்பிக்கின்றனர்.

எதிராக போராடுபவர்கள் மிரட்டப்படுகிறார்கள். உண்மையில் குரோம்பேட்டை பள்ளியில், ஆதரவாக போராடிய பெற்றோர்களிடம், காவல்துறை முதலில் மிரட்டியது, பிறகு "எல்லாம் கை மீறிப் போயிடுச்சுங்க, சொன்னா புரிஞ்சுக்குங்க, மேலிடத்திலிருந்து உத்தரவு, தயவு செஞ்சு கூட்டம் போடாதீங்க" என்று சொன்னது. பள்ளியை சுற்றி கிட்டத்தட்ட 144 போல உள்ளது. 3 பேர் நின்று பேசிக்கொண்டிருந்தாலே, "இங்கெல்லாம் நிக்காதீங்க, கிளம்புங்க" என்று சொல்கிறார்கள். 

ஒரு வேளை பள்ளி கை மாறுகிறது அல்லது முன்பு போல இல்லை என்ற நிலை வந்தால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏனென்றால், வீட்டிற்கு மிக அருகில் உள்ளது. என்ன நடக்கும் என்று தெரியவில்லை. பார்ப்போம்.  

பின் குறிப்பு: அவர் 2 லட்சம் கேட்டதை நான் ஆதரிக்கவில்லை. ஆனால், அரசு விதிகளின்படி, அவர் சொன்ன வசதிகளை கொடுத்து விட்டு, கட்டணத்தை ஒரு லட்சம் கூட ஆக்கலாம். சட்டம் அதனை எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால், வருடம் 1 லட்சம் வாங்கும் பள்ளிகளின் தரம், எல்லோருக்கும் தெரியும். 

இனி ஏதாவது செய்திகளில் கருத்து சொல்ல வேண்டும் என்று நினைத்தால், தயவு செய்து தீர விசாரித்து விட்டு கருத்து சொல்லவும்.

Friday, June 29, 2018

திரைப்பட (விமர்சனம் அல்ல) அலசல்!

எல்லோரும் நல்லா இருக்கீங்களா? வாங்க படிப்போம். இந்த முறை மொத்தமாக திரைப்படங்கள் மட்டுமே. 

இன்னும் 'காலா' பார்க்கவில்லை. குடும்பத்துடன் போகலாம் என்றால் அவர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, காத்திருக்கிறேன். மற்றபடி பார்த்ததில் (போன பிட்டுக்கும் இந்த பிட்டுக்கும் நடுவில்) அவ்வளவு ஒன்றும் பெரிதாக கவரவில்லை. 

மெர்க்குரி படம் திரையரங்கில் சென்று பார்த்து நொந்தே விட்டேன். 'சில சமயங்களில்' படம் இணையத்தில் (Netflix) பார்த்தேன். வித்தியாசமான முயற்சி. ஆனால், சற்றே இழுவை. 'பக்கா' என்று ஒரு படம். சத்தியமாக முடியவில்லை. தமிழ் படம் போல மற்ற படங்களை கிண்டல் அடிக்கிறார்களா அல்லது சீரியஸாகவே எடுத்துள்ளார்களா என்றே புரியவில்லை.  தியா, இரவுக்கு ஆயிரம் கண்கள் செம, காளி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்றவை ஒரு முறை பொழுது போக்கிற்கு பார்க்கலாம். 

இரும்புத்திரை: பார்க்க பார்க்க பயமுறுத்துகிறார்கள். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக ஒரே தொலைபேசி எண்ணை பயன்படுத்துகிறேன். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, எங்கே சென்றாலும், அங்கே அலை பேசி எண்ணை கேட்டால் கொடுத்து விடுவேன். திருமணம் ஆன புதிதில் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு மனைவி முன் 'கெத்தாக' பணம் கொடுத்தேன். அலைபேசி எண்ணையும்தான். 

அதன் பிறகு ஆரம்பித்தது தொல்லை, 'சார் எங்களுக்கும் உதவி பண்ணுங்க சார்" என்று தினமும் அழைப்புகள், தொலைபேசி எண்ணையே மாற்றி விடலாமா என்று கூட தோன்றியது. பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக எங்கே போனாலும் கொடுக்காமல் உள்ளேன். "சார், நம்பர் கொடுத்தா 15% டிஸ்கவுண்ட்" என்பார்கள். அடித்தாலும் கொடுக்க மாட்டேன். ஆனால், எப்போதோ கொடுத்ததன் விளைவை இன்று வரை அனுபவிக்கிறேன். இன்றும் கூட தினமும் 2,3 அழைப்புகள் கடன் அட்டை, லோன் என்று வந்து கொண்டே இருக்கிறது. 

கொஞ்சம் ஜாக்கிரதையாக உபயோகிப்பதால் பெரிய தொந்தரவு இல்லை. ஆனால், என் மனைவிக்கு ஸ்டேட் பேங்கில் கணக்கு உள்ளது. 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது "மேடம் உங்க கார்டு எக்ஸ்பைரி ஆக போகுது" என்று உடைந்த தமிழில் அழைப்பு வரும். என் மனைவியோ "எல்லாம் என்ற வூட்டுக்காரனுக்குத்தானுங்க தெரியும்" என்று சொல்லி வைத்து விடுவார். 

இந்த படத்தில் வருவது போல ஒரே ஆள் எல்லாவற்றையும் செய்வதில்லை. மற்றபடி எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதில் பாதி உண்மைதான். எளிமையாக சொன்னால், அதிகம் ஆசைப்படாமல் இருந்தாலே போதும். 

நடிகையர் திலகம்: இரண்டு வருடங்களுக்கு முன் தினமலர்-வாரமலரில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தொடர் வந்தது. அப்போதே "ச்சே எப்படி வாழ்ந்து கெட்டிருக்காங்க" என்று தோன்றியது. படத்தில் அதில் படித்ததில் பாதி கூட வரவில்லை. ஜெமினியை கெட்டவனாக காட்டி, சமந்தா-விஜய் காதல் கதை வேறு குறுக்கே குறுக்கே. இன்னும் அவரது சிறப்புகளையும், அந்த பிடிவாத குணம் பற்றியும் நன்றாக சொல்லி இருக்கலாம். சந்திரபாபு வரவேயில்லை. 

இந்த படத்தை அமேசான் பிரேமில் தான் பார்த்தேன். ரொம்ப நாளாக எந்த தமிழ் படமும் அதில் வரவே இல்லை. நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் தமிழ் திரையுலகம் அதை வீணடிக்கிறது என்று நினைக்கிறேன். 

தினமும் அலுவலகத்திற்கு அலுவலக வாகனத்தில் பயணிப்பதால் நிறைய படங்களை பார்ப்பதுண்டு. மொழி பேதம் கிடையாது. அந்த வகையில் பார்த்த ஒரு நல்ல திரைப்படம் (Feel Good) ராணி முகர்ஜீ நடித்த Hichki, ஹிந்தி திரைப்படம். 

நரம்பு குறைபாட்டால் (திடீரென தலையாட்டி, ஒரு வினோதமான சப்தம் எழுப்புவார். என் அத்தை ஒருவருக்கு இதே போல உள்ளது. அவர் சப்தம் எழுப்ப மாட்டார். ஆனால், தலை தன்னை அறியாமல் ஆடும்) பாதிக்கப்பட்ட ராணி முகர்ஜீ பள்ளி ஆசிரியராக ஆசைப்படுவார். அவரை, அவர் படித்த பணக்கார பள்ளியில், கல்வி உரிமையின் கீழ் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு ஆசிரியராக சேர்க்கிறார்கள். யாரையும் மதிக்காத, யாராலும் மதிக்கப்படாத அந்த மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். எப்படி ராணி சமாளிக்கிறார் என்பதே படம். 

பொதுவாக விளையாட்டு (இறுதி சுற்று, கேக் தி இந்தியா, தங்கல், இன்னும் பல) மற்றும் கல்வி (ஹிந்தி மீடியம், தாரே ஜமீன் பர், சாட்டை, பசங்க 2 இன்னும் சில) எல்லவற்றிலும் பார்த்தால், நாயகன்/நாயகி வருவார். அவர் கண்டிப்பாக தோல்வி அடைந்தவராக இருப்பார். அவரிடம் இருப்பதிலேயே மோசமான குழுவோ, தனியாளோ வருவார்கள். அவர்களிடம் உள்ள தனித்திறமையை கண்டறிந்து வெற்றி பெற வைப்பார்கள். இதுதான் கதை. ஆனால், திரைக்கதையில் உள்ள வித்தியாசம்தான் படங்களை வெற்றி அடைய வைக்கும். அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்று நமக்கு தெரியும். இருந்தாலும் அதை சலிப்பு தட்டாமல் கொண்டு போகிறார்கள். கண்டிப்பாக பார்க்கலாம். 

அட்லீ சுட்ட இட்லி: 

The Frighteners, Judgement Night என்று இரண்டு படங்கள் பார்த்தேன். "ஏற்கனவே எங்கேயோ பாத்திருக்கமே, அதுவும் ஒரே ஆளோடதாச்சே" என்று பார்த்தல், நம்ம வெங்கட் பிரபு. மாஸ் என்கிற மாசிலாமணி, சரோஜா படங்களின் மூலம். அடச்சே என்று தலையிலடித்துக் கொண்டேன். 

அதே போல 'தெறி' என்ற மட்டமான படம். இருந்தாலும் அதில் ஒரு சில காட்சிகள் கொஞ்சம் பிடிக்கும். பாரிஸ் கார்னரில், குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பவர்களை அடிப்பது. அதில் சண்டை ஆரம்பிப்பதற்கு முன், ரவுடி "பாத்தல்ல, நாங்க எத்தனை பேருன்னு" என்பார். உடனே விஜய் "என்ன, 5 பேரு" என்றவுடன், "கணக்குல பெயிலா நீ. நாங்க 11 பேர்" என்றவுடன், விஜய் " நான் மொதல்ல இவன அடிப்பேன். அப்ப 2 பேர் ஓடிருவானுங்க" என்றெல்லாம் கணக்கு சொல்வார். "படம் மொக்கையா ஈ அடிச்சான் காப்பியா இருந்தாலும், நல்ல சீன்லாம் வச்சிருக்காம்பா" என்றெல்லாம் எண்ணினேன். (காணொளியை 02:20ல் இருந்து காணவும். அதே வசனம்)  


Jack Reacher என்றொரு படம். அதில் இதே காட்சி அப்படியே இருந்தது. அடேய் அட்லீ, அடுத்தவன் மாவு எடுத்து இட்லி சுட்டா பரவாயில்லடா, ஆனா, அடுத்தவன் இட்லியையே ஏண்டா சுடர. (காணொளியை 02:50ல் இருந்து காணவும். அதே வசனம்)


மீண்டும் சந்திப்போம். மற்றபடி மிக மிக ஆவலாக பார்க்க வேண்டும் என்று காத்திருப்பது தமிழ் படம் 2.O தான்.



Thursday, May 10, 2018

நுழைவுத் தேர்வு கட்டாயம் தேவை!

தமிழகத்தின் தற்போதைய பிரச்சினை நீட் (NEET) எனப்படும் நுழைவுத் தேர்வுதான். அதைப்பற்றி என்னுடைய சிறு பார்வை. என்னுடைய சொந்த அனுபவத்தையே சொல்கிறேன். 

2006 வரை இந்த நுழைவுத்தேர்வு இருந்தது. அப்போதைய மாநில அரசின் மருத்துவம் மற்றும் பொறியியலுக்கான நுழைவுத்தேர்வு, அண்ணா பல்கலைக்கழகம் நடத்துவது, இப்படித்தான் இருக்கும். 

சனி காலை - தாவரவியல் மற்றும் விலங்கியல் - 90 வினாக்கள் - 50 மதிப்பெண்கள். 
சனி மதியம் - இயற்பியல் மற்றும் வேதியியல் - 90 வினாக்கள் - 50 மதிப்பெண்கள். 
ஞாயிறு காலை - கணிதம் - 90 வினாக்கள் - 50 மதிப்பெண்கள். 

மருத்துவம் படிக்க, முதலிரண்டு தேர்வுகளும், பொறியியல் படிக்க கடைசி இரண்டு தேர்வுகளும் எழுத வேண்டும். நுழைவுத் தேர்வு 'சரியான விடையை தேர்ந்தெடுக்கும் முறை (4 பதில்களில் சரியான விடையை தேர்ந்துதெடுப்பது). இந்த கேள்விகள் அனைத்தும் மாநில பாட திட்டத்தில் இருந்தே கேட்கப்படும். மொத்தம் 4 வகையில் கேள்வித்தாள்கள் இருக்கும், வெவ்வேறு வண்ணங்களில் இருக்கும். மொத்த கேள்விகள் ஒன்றுதான், ஆனால், வரிசை மாறி இருக்கும். தவறாக விடையளித்தால் மதிப்பெண் குறைக்கப்படாது.  

மற்றபடி எல்லோருக்கும் தெரிந்ததுதான், எப்படி மதிப்பெண்கள் கணக்கிடுவது என்பது. நாம் பொறியியலை எடுத்துக் கொள்வோம். 
கணக்கு மதிப்பெண்கள் - 100க்கு. 
இயற்பியலின் மதிப்பெண்கள் - 50க்கு, 
வேதியியலின் மதிப்பெண்கள் 50க்கு, 
கணித நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் - 50க்கு, 
இயற்பியல் மற்றும் வேதியியல் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் - 50க்கு. 
மொத்தம் 300க்கு எவ்வளவு என்று கணக்கிடப்படும். 

கீழே ஒரு உதாரணம் 


அப்போது ஒவ்வொருவரும் கட் ஆப் (cut-off) மதிப்பெண்கள் இரு தசமத்தில் இருக்கும். .0.01 வித்தியாசமெல்லாம் சாதாரணம் (90 வினாக்கள், 50 மதிப்பெண்கள்தான் காரணம்). அந்த நுழைவுத் தேர்வு ஒன்றும் சிம்ம சொப்பனம் கிடையாது.

சந்தித்த பிரச்சினைகள்: 

எப்போதும் உள்ள பொதுவான பிரச்சினைகளைத்தான் சந்தித்தோம். தவறான கேள்விகள், நான்குமே தவறான விடைகள், ஆங்கிலத்தில் ஒன்றும், தமிழில் வேறு மாதிரியும் இருப்பது, கேள்வி முன்னரே வெளிவருவது, விடைகளை பென்சிலால் கருமையாக வேண்டும். சரியாக, முழுமையாக செய்யாவிட்டால் அவ்வளவுதான் என நிறைய பஞ்சாயத்துகள் நடந்தன. 

இவை பொதுவானவை. தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு பெரிய பிரச்சினை எனக்கு தெரிந்து எதுவும் இல்லை. அப்போது பொதுத் தேர்வுகள் முடிந்து எப்படியும் 45 நாட்கள் கழித்து நுழைவுத்தேர்வு இருக்கும். அதற்காக தனி வகுப்புகள் நடக்கும். 

அந்தியூர், ராசிபுரம், திருச்செங்கோடு எல்லாம் உண்டு, உறைவிடத்தோடு வகுப்புகள் நடக்கும். பல ரகசிய வழிமுறைகள் எல்லாம் சொல்லித் தந்து "வெளிய யார்கிட்டயும் சொல்லக்கூடாது" என்று சத்தியம் வாங்குவார்கள். இறுதி தேர்வில் 10 மதிப்பெண்ணிற்கு வரும் வினா இங்கே இருக்கும், அதற்காக அரை மணி நேரம் செலவு செய்ய முடியாது. அதை ஒரு நிமிடத்தில் தீர்க்கும் வழிமுறைகள் எல்லாம் அப்போதுதான் சொல்லுவார்கள். வீட்டிலேயே படிக்கும் மாணவர்களுக்கு அது மிகவும் கஷ்டம். புரிந்து படிப்பவர்களுக்கு சுலபம்.

நுழைவுத் தேர்வில் ஒரு கேள்வி தவறானாலும் 0.56 மதிப்பெண்கள் அவ்வளவுதான். தலையெழுத்தே மாறி விடும். ஆனால், முடிவில், ஒரே மாதிரி மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள் குறைவு. அப்படியே இருந்தாலும், முதலில் கணிதம், பின் மற்ற பாடங்களை பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். முதல் மதிப்பெண் எப்போதுமே 299.xx என்று வரும். அதுவும் ஓரிருவரே. 298.75க்கும் 299.00க்கும் நடுவில் ஒவ்வொரு 0.01 வித்தியாசத்தில் நிறைய பேர் இருப்பார்கள். 

அப்போது திருச்சியில் உள்ள REC (தற்போதைய NITயில் கூட 50 சதவீதம் சேர்த்தார்கள்). மற்ற மாநிலங்களில் உள்ள RECல் சேர அகில இந்திய அளவல் நடக்கும் தேர்வு எழுத வேண்டும். இதே நீட் போல அதற்கும் தமிழ்நாட்டில் மொத்தம் 10 மையங்கள்தான், ஆங்கில மற்றும் ஹிந்தியில்தான் எழுத முடியும் என்றெல்லாம் இருந்தது, அதனாலேயே எழுதவில்லை. 

ஆனால், CBSE மாணவர்களுக்கு "இதெல்லாம் சப்ப" என்றுதான் சொல்வார்கள். அவர்களால், பொதுத்தேர்வில் அவ்வளவு மதிப்பெண்கள் பெற முடியாது. நிறைய பேர் (என்னுடைய நண்பர்கள்) 10ம் வகுப்பு வரை CBSEல் படித்துவிட்டு, பின் மாநில பாடத்திட்டத்திற்கு மாறினார்கள். 

நுழைவுத் தேர்வு நீக்கப்பட்டவுடன் என்ன நடக்கிறது. 

2001க்கு பின், நாமக்கல்லில் புற்றீசல் போல நிறைய பள்ளிகள் முளைத்தன (தமிழகம் முழுவதும்தான்). நுழைவுத் தேர்வு இல்லை என்றவுடனே, எல்லா பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு மனப்பாடம் செய்வதை ஊக்குவித்தன. புத்தகத்தை அப்படியே முழுங்கி, தேர்வில் போய் வாந்தி எடுக்க வேண்டியதுதான். அது மட்டுமில்லாமல் 11ம் வகுப்பில் இரண்டாம் மாதத்திலேயே 12ம் வகுப்பை ஆரம்பித்து விடுவார்கள். "கேள்வியைப் படி. 5 முறை பார்த்து எழுது. பிறகு, 10 முறை பார்க்காமல் எழுது". இதுதான் நடக்கும். இனி 11ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்பதால், இந்த தொந்தரவு குறையலாம்.  

பொதுவாக நிறைய தவறுகள் நடப்பது ஒரு மதிப்பெண் கேள்விகளில்தான் (சரியான விடையை தேர்ந்தெடுப்பது, கோடிட்ட இடங்களை நிரப்புவது, பொருத்துக என ) மதிப்பெண்கள் இப்படித்தான் இருக்கும். எல்லா தனியார் பள்ளிகளும் எப்போதும், அவர்களுடைய பள்ளிகளே தேர்வு மையங்களாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். எனவே, எல்லா மாணவர்களுக்கும் இந்த 30 மதிப்பெண்கள் கிடைக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். இன்று வரை இதுதான் நடக்கிறது. மற்ற 2, 5 மற்றும் 10 மதிப்பெண் கேள்விகள் அதே வாந்தி, பேதிதான்.

பொதுவாக இறுதி தேர்வுகள் பாடங்களின் முடிவில் இருக்கும் கேள்விகளையே மீண்டும் கேட்டிருப்பார்கள். அதிலும், இயற்பியலில் மின்னணுவியல் (Electronics) என்ற பாடம் உண்டு, அதிலிருந்து கேள்வியே வராது என்று எல்லோரும் சொல்வார்கள், அதை படிக்க தேவையில்லை என்று ஆசிரியரும் சொல்வார். ஒரு 10 மதிப்பெண் கேள்வி கட்டாயம் எழுத வேண்டும். அதற்கும், குறிப்பிட்ட 10 கேள்விகளே மீண்டும் மீண்டும் வரும். எனவே, நன்கு மனப்பாடம் செய்ய தெரிந்தாலே போதும் என்ற நிலைதான். 

கட் ஆப் இப்போது 200க்கு மட்டுமே. இதன் விளைவாக 200க்கு 200 மதிப்பெண்களே ஒரு 30, 40 பேர் வாங்குகிறார்கள். அடுத்தது 199.75, அதில் ஒரு 100 பேர். இவர்கள் அனைவருக்கும் கணிதம், மற்ற பாடங்கள், மொத்த மதிப்பெண்கள் என பார்த்து தரவரிசை அளிக்கப்படும். இவை எல்லாமே ஒரே மாதிரி இருந்தால், பிறந்த தேதியைப் பொறுத்து முன்னுரிமை. கொடுமையோ கொடுமை. 

2006க்கு முன் மருத்துவம், அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தவர்களில் அரசு பள்ளிகளிலும், தமிழ் வழியிலும் படித்த மாணவர்களின் சதவிகிதமும், நுழைவுத் தேர்வு நீக்கப்பட்ட பின் படிப்பவர்களின் சதவீதத்தையும் பாருங்கள், பயங்கரமாக குறைந்திருக்கும். நான் படிக்கும்போது ஒவ்வொரு வருடமும் குறைந்தது 30 சதவீதமாவது தமிழ் வழிக்கல்வியில் படித்திருப்பார்கள். அதன் பின் படிக்க போன என்னுடைய தெரிந்த, சொந்தக்காரர்களிடம் (அவர்கள் தனியார் பள்ளி, ஆங்கில வழி கல்வி) விசாரித்தால், 10 சதவீதம் கூட தமிழ் வழி படித்தவர்கள் இல்லை. அரசு பள்ளிகளில் படித்தவர்கள் இன்னும் குறைவு. 

2001 வரை இந்த மக்கள் அதிகம் இருப்பார்கள். காரணம் கருணாநிதி 1998ல், கிராமப்புற பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு அளித்தார். 2001ல் ஆட்சி மாறி ஜெயலலிதா வந்தவுடன், அதாவது மே மாதம் ஆட்சிக்கு வந்த உடனே, அதை 25 சதவிகிதமாக மாற்றினார். நான் உள்பட பல பேர் இதனால் பாதிக்கப்பட்டோம். (ஏனென்றால் 11,12ம் வகுப்பை நாமக்கல்லில் படித்தேன்), ஆனால் பல கிராமப்புற மாணவர்கள் பயன் பெற்றனர். 

ஆனால், எதற்காக ஜெயலலிதா அதை மாற்றினாரோ அதுதான் நடந்தது. சில பேர் வழக்கு போட்டனர். நீதிமன்றம் 25 சதவிகிதத்தை நீக்கியது. மேல் முறையீடு செய்யப்படவில்லை. மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தாலும், இது கொண்டுவரப்படவில்லை. ஏனென்றால் முக்கால்வாசி அரசியல்வாதிகள் பள்ளி, கல்லூரி முதலாளிகள் ஆகி விட்டிருந்தனர். 

சரி இனி என்ன செய்யலாம்: 

இந்தியா முழுவதும் ஒரே நுழைத்த தேர்வு என்றால், ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வரப்பட வேண்டும். 
இல்லையா, அந்தந்த மாநிலங்களே நுழைவுத் தேர்வு நடத்தி, அந்த மாநிலத்தில் உள்ள 90 அல்லது 95 சதவிகித இடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
கண்டிப்பாக அரசுப்பள்ளிகளுக்கு, தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். முன்னர் இருந்த மாநில அளவிலான நுழைவுத் தேர்வில் இருந்த குழப்பங்களை களைந்து, இப்போதுள்ள சமச்சீர் பாடதிதிட்டத்தில் கீழ் உருப்படியான ஒரு நுழைவுத்தேர்வை கொண்டு வரலாம்.

மீண்டும் சொல்கிறேன். நுழைவுத் தேர்வு கட்டாயம் தேவை. ஆனால், நீட் (NEET) சரியான தேர்வு அல்ல. 

இதற்கெல்லாம் நான் சர்வாதிகாரி ஆனால்தான் முடியும். 

Sunday, April 29, 2018

தேடல்

பொழுது போகாத ஒரு நாளில், திடீரென நீயா நானா - இளையராஜா ரேடியோ ரசிகர்கள் என்ற காணொளியைப் பார்க்க நேர்ந்தது. 80களில் இளையராஜா பற்றிய கலந்துரையாடல். 50 வயதுக்கு மேற்பட்ட பலர் கலந்து கொண்டு அவர்களது வாழ்வில் இளையாராஜா எப்படி தாக்கத்தை உண்டாக்கினார் என்பது பற்றிய விவாதம். நன்றாகவே இருந்தது. மொத்தமாக பார்த்ததில் தோன்றிய சில விஷயங்கள். 

பல பேருக்கு அவர்கள் சொன்ன பாடலுக்கு ராஜா இசை இல்லை என்பதே தெரியவில்லை. 80களின் இசை என்று தலைப்பு வைத்திருக்கலாம். 

கலந்து கொண்டவர்கள் அனைவருமே "கேட்டுண்டே இருக்கச்சே" வகையினர். அது மட்டுமில்லாமல் அனைவரும் படித்து, உயர் பதவியில் உள்ள மேல்குடி மக்கள். அந்த காலத்திலேயே "நாங்களே ரெக்கார்ட் பண்ணி பாடிந்திருந்தோம்" என்றனர். 

உண்மையில் ராஜாவின் பாதிப்பை மிகச்சரியாக சொன்னது சிறப்பு விருந்தினராக வந்த தாமிரா. கீழக்கரையில் பீடி சுற்றும் பெண்கள் எப்படி கேட்ட மாத்திரத்தில் அந்த பாடலை பாடுவார்கள் என்று சொன்னார்.

எல்லாவற்றையும் விட முக்கியம். தேடல். முன்பெல்லாம் ஒரு பாடலை நினைத்தவுடன் கேட்டு விட முடியாது. அதில் ஒருவர் சொன்னது போல ஒரு பாடல் ஒலிபரப்பாகும், அது என்ன படம் என்று தெரியாமல் தேடுவோம் என்றார். அது போன்ற பாடல்கள் நம் மனதை விட்டு மறக்காது. 

எனக்கெல்லாம் 2001ல் சென்னை வரும்வரை அந்த பிரச்சினை இருந்தது. மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போது(?) தனி வகுப்பு எல்லாம் முடித்து விட்டு கடைசி பேருந்தில் ஊருக்கு செல்ல கிட்டத்தட்ட 30 நிமிடம் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருக்கும். அப்போது வரிசையாக உள்ள கேசட் கடைகளில் பாடல்கள் ஓடிக் கொண்டிருக்கும். எங்கே நமக்கு பிடித்த பாடல் ஓடுகிறதோ அங்கே சென்று கேட்க வேண்டியது. 


ஏதாவது பாடல் கேட்க நன்றாக இருந்து, என்ன படம் என்று தெரியவில்லை எனில், அவர்களிடமே கேட்டுக்கொள்வேன். பின், கையில் கொஞ்சம் காசும் (T60 கேசட் என்றால் 45 ரூபாய், மொத்தம் ஒரு மணி நேர பாடல்கள் கிடைக்கும். T90 என்றால் 60 ரூபாய், 90 நிமிடம்), 10 பாடல்களும் சேர்ந்த பின், அவற்றை பதிவு செய்து கொள்வேன். அல்லது, மொத்தமாக ஒரு கலவையான படங்கள் உள்ள கேசட். அது 25 அல்லது 30 ரூபாய் மட்டுமே. அப்போது எல்லோரும் படிப்பு படிப்பு என்று தொந்தரவு செய்து தொலைக்காட்சியை பார்க்கவே விட மாட்டார்கள். இது மட்டும்தான் ஒரே பொழுதுபோக்கு. 


ஒரு கலவையான படங்கள் உள்ள கேசட்


அதே போல ஒரு படம் பார்க்கவும், அதாவது பழைய படங்கள், நிறைய காத்திருக்க வேண்டும். அப்போது சன் மூவீஸ் என்றொரு சேனல் இருந்தது. 24 மணி நேரமும் படம்தான். நமக்கு படித்த படம் அதிகாலை 3 மணிக்கு கூட போடுவார்கள். வீட்டில் உதைப்பார்களே என்ற காரணத்தில், அதை பார்ப்பதில்லை.

ரஹ்மான் கூட இந்த தேடல் குறைகிறது என்றபொழுது அவர் தேடலை உருவாக்கினார். அதைப்பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். இன்றைய தலைமுறையிடம் அந்த தேடல் என்பதே கிடையாது. எதுவாயினும் உடனே கூகுளாண்டவர்.

25 வயதிற்கு மேல் உள்ளவர்களிடம் அந்த காலத்தில் ஒரு படம் பார்க்க திரையரங்கம் செல்வது எப்படி என்று கேட்டுப் பாருங்கள் தெரியும். இப்போதெல்லாம், படம் வந்த அடுத்த நிமிடம் மொபைலில் வந்து விடுகிறது. அடுத்தடுத்து, பழையதை மறந்து விட்டு, புதியதை தேடி ஓடுகிறார்கள். 

உங்களுடைய முதல் மொபைல் எதுவென்று உங்களுக்கு நினைவிருக்கும். ஆனால், அதன் பின் எத்தனை மாற்றி இருப்பீர்கள் என்று தெரியாது. தேடல் தொலைவதற்கு இன்னொரு காரணம் பெற்றோர். அதைப் பற்றி சொல்ல ஒரு பதிவு போதாது. என்ன சொல்ல. வழக்கம் போல பெரு மூச்சு விட்டு கொண்டு, "அந்த காலத்துல எல்லாம்" என்று ஒரு பதிவிட்டு விட்டு போக வேண்டியதுதான்.

Sunday, April 1, 2018

கமல் அதுக்கு சரிப்பட்டு வருவாரா?

எப்படியோ ஒரு வழியாக வரவே மாட்டேன் சொன்ன கமலும், இந்தா வந்து விடுகிறேன் என்று நான் ஐந்தாவது படிக்கும்போது சொன்ன ரஜினி, என் மகளுக்கு ஐந்து வயது ஆன பின்பும் அரசியலுக்கு வந்து விட்டனர். என்னதான் இருந்தாலும், கமல் ரசிகன்தானே. அவருக்குத்தான் முட்டுக்கொடுக்க வேண்டும். இருந்தாலும் சில விஷயங்கள் பற்றி விவாதிப்போம். 


கமலை ஏன் ஆதரிக்கக் கூடாது: 

ஒரு வருடம் முன்பு வரை கூட, கமலிடம் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டால், "நான் அரசியலில் இல்லை என்று யார் சொன்னது" என்பார். அல்லது "அரசியலில் இறங்கித்தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றில்லையே" என்பார். அப்படி இருக்கையில் திடீரென ஏன் அரசியலில் இறங்க வேண்டும்? கருணாநிதியும் ஜெயலலிதாவும் இருந்தபோது இது போல ஒவ்வொரு விஷயங்களுக்கும் கருத்து சொல்லவில்லையே? அப்படி என்றால், வெற்றிடம் உள்ளது என்று இறங்குகிறீர்களா? 

ஒரு சில நேரங்களில் அவர் சொல்வது நான் முதலமைச்சர் ஆனால்" என்றே உள்ளது.ஆனால், கண்டிப்பாக கமலை விட திறமையான ஆளுமை உள்ளவர்கள் உண்டு, அவர்களை ஆக்குவாரா என்றும் சொல்லவில்லை. 

இப்போது தமிழ் திரையுலகம் பிரச்சினையில் உள்ளது. ஒரு தலைவராக, தான் இதுவரை சார்ந்துள்ள துறையில் உள்ள பிரச்சினைகளை ஏன் தீர்க்கவில்லை, அல்லது தீர்க்க முடியவில்லை. அவர் 60 வருடங்கள் இருந்த துறையிலேயே பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை என்றால், எப்படி அவர் சாராத துறைகளின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்? 

இப்போது அவர் பேசுவது எப்படி உள்ளது என்றால், இந்த ஒரு வருடத்தில் தமிழகம் அழியும் நிலைக்கு வந்து விட்டது போலவும், இதற்கு முன் இருந்தவர்கள் இன்னும் குறிப்பாக எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் எப்படி ஆட்சி செய்தனர். நல்லதா இல்லை கெட்டதா என்று அவர் சரியாக கூறவில்லை. 

தினமும் கட்சி சார்பில் ஏதேனும் அறிக்கையோ, பேசுவதோ யார் என்றால், கமல், கமல், கமல் மட்டுமே. அவருக்கு பதிலாக, அல்லது அவருக்கு அடுத்து யார்? ஸ்ரீப்ரியா, ஞானசம்பந்தன் என்றால், அவர்கள் ஏன் அறிக்கையோ, பேட்டியோ கட்சி சார்பில் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். 

பொதுவாக கமல் படங்களில், இயக்குனரையும் தாண்டி கமல் மட்டுமே தெரிவார், அந்த படங்கள் அத்தனையும் என்ன ஆகின என்று எல்லோருக்கும் தெரியும். இதே போல நடந்தால், கமலுக்கு அரசியலும் அப்படிதான் ஆகும். 

மற்ற கட்சிகளில், ஏதாவது ஒருவர் தவறாக சொல்லி விட்டால், ஒன்று அதற்கு ஆதரவாக பேசியாக வேண்டும், அல்லது அது அவரது சொந்தக் கருத்து என்று தப்பிக்க வேண்டும். இது போல நடந்து விடக்கூடாது என்பதற்காகவே இப்படி செய்கிறீர்களா?  

"ஏம்பா, ஒரு பொம்பள கூட உருப்படியா, ஒத்துமையா இருக்க முடியல, எப்படிப்பா ஊருல எல்லோருக்கும் இவரு நல்லது பண்ணுவார்?" என்று பொதுவாக கூறுகிறார்கள். அதற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் கருத்து வேற்றுமை என்பது தான் இங்கே கூற விழைவது. 

இன்னும் தமிழ்நாட்டில் உள்ள நிறைய பிரச்சினைகளுக்கு கமல் கருத்து கூறவில்லை. நெடுவாசல், கூடங்குளம், மணல் கொள்ளை, என பல விஷயங்கள். 

தேர்தல் காலத்தில் கூட்டணி அமைப்பாரா? அப்படி அமைத்தால் என்ன மாதிரி கட்சிகளுடன் கூட்டணி? ஒரு வேளை அவரது ஆதரவு தேவைப்பட்டால், யாருக்கு அளிப்பார். கெஜ்ரிவால் போல எதிரிகளுடன் கூட கூட்டணி அமைப்பாரா? 

அடுத்து, மிக முக்கியமான ஒன்று பேச்சுத் திறமை: கமலிடம் அது நிறையவே உள்ளது. ஆனால், அது நேரடியான, எல்லோருக்கும் புரியும்படியாக இல்லை. இது மிகப் பெரும் குறை. "நீங்க புரியற மாறி பேசணும்னு சொல்லல, ஆனா, பேசுனா நல்லாருக்கும்னுதான் சொல்றோம்". 

இதன் விளைவு என்னவென்றால், கமல் நம்மில் ஒருவர் என்றில்லாமல், அவர் எங்கேயோ இருப்பவர் என்றாகிறது. 

கமலை ஏன் ஆதரிக்க வேண்டும்: 

தேசியம், கழகம் என்று பெயரை வைத்து ஊரை ஏமாற்றவில்லை, மக்களை குழப்பவில்லை. 

ஒரு விஷயம் செய்வதற்கு முன், நிறைய ஆராய்ந்து, அல்லது ஆராய்வது போல தோற்றமளிக்க வைக்கிறார். கொசஸ்தலம் செல்வதற்கு முன், 'பூவுலகின் நண்பர்கள்' மூலம் தகவல் பெற்றது. கட்சி ஆரம்பிப்பதற்கு முன் நல்லகண்ணு, கருணாநிதி, வக்கீல்களை சந்தித்தது. எதுவாக இருந்தாலும், முந்திரிக்கொட்டை போல பேசாமல், சற்றே அலசி ஆராய்ந்து கருத்து சொல்வது. 

எதிரிக்கட்சியாக இல்லாமல், சில நல்ல விஷயங்களையும் பாராட்டுவது. குரங்கணி தீ விபத்தில், அரசை குறை கூறாமல் நிவாரப்பணிகளை மேற்கொண்டதில் குறைகள் கூறாமல் இருந்தது. 

மக்களை ஏமாற்றாமல் எப்படி செயல்படுவேன் என்று கூறுவது. மது விலக்கை உடனே அமுல்படுத்த முடியாது என்றும், அது ஏன் என்றும் கூறியது. அது உண்மைதான். 

இன்னும் குறிப்பாக சொன்னால், இப்போது மத்தியில் உள்ள ஆளும் கட்சி "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை 50க்கு கீழ் குறையும், வருமான வரி விலக்கு 5 லட்சம்" என்றெல்லாம் கூவினார்களே, அதெல்லாம் செய்ய முடியாது என்று அவர்களுக்கும் தெரியும், ஆனால், ஏமாற்றினார்கள். 

அதே போல கமல் சொன்ன இன்னொரு முக்கியமான விஷயம், "நான் ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை ஒழிப்பேன். ஸ்கூட்டரும் கிடையாது, குவாட்டரும் கிடையாது" என்று. அந்த தைரியம். தனித்துவம். 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கமலை எதிர்க்கின்றன. கமல் பொதுவாக ஒரு கருத்து சொன்னாலும், உடனே எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு வருகின்றனர். அந்த பயம் நல்லது. 

பொதுவாக கமல் ரசிகர்கள் எல்லோரும் கண் மூடித்தனமாக அவரை தொடர்வதில்லை, யாரும் இதுவரை கட்சி ஆரம்பிப்பார், பதவி கொடுப்பார் என இருந்ததில்லை. எனவே, சம்பாதிக்க வேண்டும் என்று வருபவர்கள், குறைவாக இருக்கலாம். 

அதே தனித்துவம். "ஏதோ சொல்றாருப்பா. கண்டிப்பா செய்வாருப்பா" என்று சில (மிகச்சிலர்) நம்புகின்றனர். 

மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களை, அப்படியே தமிழில் மசாலா கலந்து அடிப்பதில் வல்லவர். எனவே, மற்ற மாநிலங்களிலோ அல்லது நாடுகளிலோ உள்ள நல்ல திட்டங்களை கண்டிப்பாக, சொந்த திட்டம் போல கொண்டு வருவார்.

மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்த்தால், கமல் கொஞ்சம் வேகமாக போவது போல தோன்றுகிறது. விஜயகாந்தும் இதே போல எடுத்தவுடன் முதலமைச்சராவேன் என்று 234 தொகுதிகளிலும் நின்றார். அது மாதிரி இல்லாமல், ஒரு குறிப்பிட்ட 10 அல்லது 20 தொகுதிகளில் மட்டும் நின்று, அதில் சொன்ன வாக்குறுதிகளைக் காப்பாற்றி ஒரு முன் மாதிரியாக செய்யலாம். நிழல் அமைச்சரவை அமைக்கலாம். (இதையேதான் ராமதாஸும் செய்கிறார். ஆனால், அவர் மீது விழுந்த கறை அப்படி) 

இன்னும் கொஞ்சம் முன் மாதிரியாக மற்றவர்களிடம் இருந்து எந்தளவிற்கு வேறுபட்டு செயல்படுகிறார் என்பது முக்கியம். ஆனால், ஒரு சாமானியனுக்கு அந்த வித்தியாசமே ஒரு அவ நம்பிக்கையை உண்டாக்கி விடக் கூடாது. 

இதுநாள் வரை என் வாக்கு NOTAவிற்கே. இனி உங்களுக்குத்தான் என இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கு இன்னும் கொஞ்சம் நாள் இருப்பதாக நான் கருதுகிறேன். 

வாழ்த்துக்கள் கமல்.