Thursday, April 9, 2015

இளையராஜாவைத் திட்டினால் இணையராஜா!

தலைப்பே எதைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று விளங்கி விடும். ஒரு சாரார், இளையராஜா என் உயிருக்கு மேல் என்க, இன்னொரு தரப்போ, அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் இல்ல என்கிறது, இரு தரப்பிலும் எது சரி, எது தவறு என்றெல்லாம் நான் சொல்லவில்லை. "தூத்து, ச்சீ ச்சீ, போ போ, நீயெல்லாம் சின்னப்பய பேசப்படாது, உனக்கென்ன தெரியும்னு சொல்ல வந்துட்ட" என்று சண்டைக்கு வர வேண்டாம். முதலில் முழுதாகப் படிக்கவும்.


பள்ளியில் படிக்கும்போதெல்லாம், இளையராஜா ரசிகன் என்றாலும், யாரிடமும் விவாதிக்க நேரமோ, விஷயமோ இருந்ததில்லை. பொதுவாக எல்லோருடைய பாடல்களைக் கேட்டாலும், ராஜாவின் பாடல்கள் அதில் அதிகம். கல்லூரி வந்தபிறகுதான் ராஜாவா, ரஹ்மானா என்ற பிரச்சினை ஆரம்பித்தது. தினமும் இரவு சாப்பிட்டு விட்டு வந்த பிறகு பேச ஆரம்பித்தால், இரண்டு மணிநேரம் சண்டை போட்டு விட்டுத்தான் தூங்குவோம். "சரி வேணும்னா எல்லார்கிட்டயும் கேக்கலாமா?" என்று சும்மா விசாரித்தால், "ஏய், ஓரமா போயி வெளையாடுங்கப்பா" என்ற மாதிரி பார்ப்பார்கள். அதையும் தாண்டி ரஹ்மான்தான் அதிகம் சொன்னார்கள். உடனே நானோ "இல்லல்ல இது போங்காட்டம்" என்றேன்.

அதே நேரத்தில் டும் டும் டும், துள்ளுவதோ இளமை என 'இளைய'ராஜாக்கள் வேறு வர, நானும் அந்தப் பாடல்களையே அடிக்கடி கேட்பேன். "ஏண்டா, நீ ராஜா குடும்பத்துப் பாட்ட தவிர வேற எதுவும் கேக்க மாட்டியா" என்று என்னைக் கேட்கும் அளவிற்கு இருந்தேன். எனது வகுப்பில் ஒரு வடக்கிந்திய பையன். அவனிடம் நான் தனியாக கேட்டேன். வழக்கம் போல 'ரஹ்மான்' என்றான். உனக்கு இளையராஜா தெரியுமா என்றால், யார் அது என்றான். நான் சத்மா படத்தின் இசையமைப்பாளர் என்றேன். அப்படி ஒரு படமா என்றான். பிறகு சொன்னான் "நான் அவ்வளவாக படம் பார்க்க மாட்டேன், என்னுடைய பொழுதுபோக்கே வேறு. நீ கேட்டவுடன் என் மனதில் வந்த பெயர் ரஹ்மான். அதுதான் சொன்னேன்" என்றான். எப்படியோ, அப்போது எனக்கு ரஹ்மான் மீது வெறுப்பு வந்து, எப்படி எல்லாம் குற்றம் கண்டு பிடிக்க முடியும் என்ற எண்ணம்தான் வந்தது.

கல்லூரி முடிந்து வேலைக்குப் போக ஆரம்பித்த உடனே, யாஹூ ராஜா மற்றும் ரஹ்மான் குழு இரண்டிலும் இணைந்தேன். அதில் ஏதாவது தகவல் கிடைக்கும்(?). ஆனால், அவை இரண்டு குழுமும் மிக மிக கட்டுக் கோப்பாக, அவரவர்களின் பெருமைகளை மட்டும் பேசுமே தவிர, மற்றவர்களை கேவலப்படுத்தாது. அதே நேரம் ஆர்குட் வந்தது. அதில் தினமும் போய் ரஹ்மானுடைய குழுமத்தில் எத்தனை பேர், ராஜாவின் குழுமத்தில் எத்தனை பேர் என தினமும் பார்ப்பேன். நான் எந்தக் கருத்துமே இட மாட்டேன். மற்றவர்களின் கருத்தை அறிந்து, அறிவை(?) மட்டும் வளர்த்துக் கொள்வேன். இங்கும் ரஹ்மானே ஜெயித்தார். அதன் பின்னர்தான் நானும் வலையுலகில் நுழைந்தேன். இதற்கு முன்பே இதே மொக்கையை நான் பதிவாக இட்டுள்ளேன். தைரியம் உள்ளவர்கள் மட்டும் படிக்கவும்.
- இடைவேளை - 

"தம்பி, நீ ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கே" என்கிறீர்களா. சும்மா. வலையுலகில்தான் முதல் முறையாக இளையராஜாவிற்காக அளவு கடந்த ஆதரவைப் பார்த்தேன். அல்லது நான் பார்த்தவை எல்லாம் அப்படி இருந்திருக்கலாம். அதிலும் ராஜாவை உடல், உயிர் என்றெல்லாம் படித்தவுடன் "தாய்ப்பாசத்துல நம்மள மிஞ்சிறுவான் போல இருக்கே" என்றெல்லாம் எண்ணினேன். ஏனென்றால் அப்போது தினத்தந்தியில் வந்த இளையராஜாவின் வரலாற்றை படித்து முடித்திருந்தேன். அதே போல, பள்ளிக் காலத்தில், நூலகத்தில் தமிழ் சினிமா பற்றிய புத்தகங்களைப் படித்து, ராஜா பற்றிய பொது அறிவை வளர்த்து வைத்திருந்தேன். அதன் பின் போக போக இசையைத்தான் ரசிக்க வேண்டும் என்ற புத்தி வந்து, திருந்தி அடங்கி உள்ளேன். 

"சரி, தலைப்புக்கும், இவ்ளோ நேரம் நீ போட்ட மொக்கைக்கும் சம்பந்தமே இல்லையே" என்கிறீர்களா? தலைப்பைப் பார்த்தவுடன் நிறைய பேர் சூடாகி இருப்பார்கள். அவர்களை குளிர்விக்கவே இது. இனி விஷயத்திற்கு வருவோம். கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகி விட்டது பதிவுலகிற்கு வந்து. ராஜாவைப் பற்றி மிகையான கருத்துகளும் படித்துள்ளேன். நிறைய பதிவுகள் ராஜாவைப் பற்றி கேவலமாகப் படித்து விட்டேன். நிறைய முறை உடனே ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றும். ஆனால், என்ன செய்ய, மீறி மீறிப் போனால் ஒரு பதிவுதான் போட முடியும். பல முறை சிரிப்பு வரும். சில பின்னூட்டங்கள் கூட போட்டு, திட்டு வாங்கி உள்ளேன்.

இளையராஜா பக்தர்களுக்கு (சரி ரசிகர்களுக்கு) ஏன் அவரை அவ்வளவு பிடிக்கிறது? இது பற்றி நிறைய பேர் அலசி விட்டாலும், நானும் ஒரு பதிவர் என்ற முறையில் ஏதாவது சொல்ல வேண்டுமல்லாவா. அதனாலதான்.

பொதுவாக 30 வயதிற்கு மேல், 50 வயதிற்கு உட்பட்ட நபர்களே (அனைவரும் அல்ல. ஆனால், இந்த பக்தர்கள் கண்டிப்பாக இந்த வகையாகத்தான் இருக்கும்) ரசிகர்கள், இல்லை வெறியர்கள், இல்லை இல்லை பக்தர்கள் என்பார்கள். ஏனென்றால் இவர்கள் (நானும்) அனைவரும் தங்கள் பதிமன் பருவத்தில் (80களின் இறுதி, 90களின் ஆரம்பம்) ராஜாவையும், அந்த கால ரஹ்மான், தேவாவையும் கேட்டு வளர்ந்தவர்களாக இருப்பார்கள். சில பேர் இது இது மிகையான கருத்து, லொட்டு லொசுக்கு என்றாலும், ஒரு நாளைக்கு 10 பாடல்கள் கேட்டால், அதில் குறைந்தது 6ஆவது இளையராஜாவாகவே இருக்கும்.

அதை விட முக்கியம் காத்திருப்பு. பாடல் நாம் நினைத்த நேரத்தில், நினைத்த பாடலை கேட்க முடியாது. ஒரு பாடல் நன்றாக உள்ளது என யாராவது சொன்னால், எங்கேயாவது முதலில் போய் அதைக் கேட்டு, நமக்குப் பிடித்தால் அந்த ஒலி நாடாவை வாங்கி (அல்லது அந்தப் பாடலை பதிவு செய்து), அதில் அந்தப் பாடலை தேடிக் கண்டு பிடித்துக் கேட்கும்போது வரும் சுகம் இருக்கிறதே. அப்படி அலாதியானது. இப்போது அந்தப் பாடலை நினைத்த நேரம் கேட்க முடிந்தாலும், கேட்கும்போதெல்லாம் நம் மனம் பின்னோக்கிப் பறக்கும்.



இது நமக்குப் பிடித்த பெண்ணைப் பார்க்கும்போது ஒலித்த பாடல், நாம் மிக சந்தோசமாகவோ/சோகமாகவோ இருக்கும்போது நாம் கேட்ட பாடல் என இவர்களின் வாழ்வில் தெரிந்தோ, தெரியாமலோ ராஜா வந்து விடுகிறார். ஏன் இது 70களுக்கு முன்னால் கிடையாதா என்றால், என் சிற்றறிவுக்கு எட்டியவரை அப்போதெல்லாம் மக்கள் நிறைய வேலைக்குத்தான் செல்வார்கள். இரவானால், இரண்டாம் ஆட்டம், ஊரில் கூத்து, அவ்வப்போது திருவிழா, அதில் ஒலிப்பெருக்கியில் பாடல், ஊரில் உள்ள ஒன்றிரண்டு வானொலியில் தினமும் செய்தி, அவ்வப்போது பாடல்கள் என இருந்திருக்கலாம். அப்போது காதல் என்ற உணர்வு அவ்வளவாக மக்களிடம் இல்லை. படங்களும் குடும்பம், அரசியல் என்றே இருந்தன. அதை விட முக்கியம், அவர்களில் அதிகம் இப்போது பதிவர்கள் கிடையாது.



80களில், ஓரளவு மக்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். காதல் படங்கள் நிறைய வர ஆரம்பித்தன. இனக்கவர்ச்சி/காதல் போன்ற உணர்வுகளைத் தூண்டும் வகையில் பாடல்கள். இங்குதான் ராஜாவின் ராஜாங்கம் ஆரம்பித்தது. அதே போல, காத்திருந்து நாம் ஒரு பாடலைக் கேட்பதற்குள், அடுத்து ஒரு படம் வந்து, அதன் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கும். அதே போல, இந்த கால கட்ட ஆசாமிகள்தான் நிறைய பதிவர்களாக உள்ளனர்.

90களுக்கு மேல், ஓரளவு இந்தக் காத்திருப்பு குறைய ஆரம்பித்து விட்டது. பாடல் வந்தால், அதிகபட்சம் அன்று மாலைக்குள் ஒலி நாடா. அனைவரது வீட்டிலும் 2-இன்-1. இன்னும் 2000க்கு மேல் ஒலித்தகடு வந்த பின் கேட்கவே வேண்டாம். எனவே, ரஹ்மான் செய்த புத்திசாலித்தனமான வேலை, காத்திருப்பை உருவாக்கினார். வருடத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு படம். இப்போது பாருங்கள். பாடல் பதிவு செய்த உடனே வந்து விடுகிறது. நினைத்த நேரம், நினைத்த பாடல். காத்திருக்கவே தேவை இல்லை. மக்களும் அனிருத் என் உயிர், இமான் தான் உயிர் என்றெல்லாம் இல்லாமல் கேட்டுக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். அதை விட முக்கியம் இவர்கள் யாருக்கும் பதிவிட நேரம் இல்லை. கேட்டால் "அவன் அவன் டிவிட்டர்ல 140 எழுத்தே போட கஷ்டப்படுறான், இதுல, பதிவு வேற ஒரு கேடா" என்கிறார்கள்.

பதிவுகள் என்பதே "ஊர்ல ஒரு பய கொஞ்ச நேரம் நாம சொல்றத கேக்க மாட்டேங்குறான், எவனாவது நாலு முகம் தெரியாத ஆட்களாவது வந்து படிச்சு ஏதாவது சொல்லட்டும்" என்ற ஆதங்கத்தில்தான் நிறைய பேர் (குறிப்பாக நான்) எழுதுவது. அதில் வந்து ராஜாதான் என் உயிர் என்று சொல்லுங்கள் தப்பில்லை. ஆனால், மத்தவங்க எல்லாம் ​​_ யிர் என்று சொல்ல வேண்டாம். அதே போல "ராஜாவெல்லாம் ஒண்ணுமேயில்ல, அதுக்கு 1500 வருஷத்துக்கு முன்னாடியே இந்த இசை வந்திருச்சு" என்று சொல்லாமல், "இந்த பழைய இசையையும் கேளுங்கள்" என்று சொல்லுங்கள்.

எனக்குத் தெரிந்து நிறைய பேர் பாடகர்களுக்காக வெறித்தனமான ரசிகர்களாக உள்ளனர். என் நண்பன் SPBயின் வெறித்தனமான ரசிகன். அவனுக்கு இசை யார் என்பதெல்லாம் முக்கியமில்லை. அதே போல நிறைய பேர் TMS, ஜானகி, யேசுதாஸ், சுசீலா போன்றோருக்கு வெறித்தனமான ரசிகர்களாக உள்ளனர். பதிவுலகிலும் சில பேரைப் பார்த்ததுண்டு. ஆனால், அவர்களுக்கு வராத எதிர்ப்பு ராஜா ரசிகர்களின் பதிவிற்கு வருகிறது என்றால், அந்த பதிவர்களும் சற்றே யோசித்து, தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த மொத்தப் பதிவுமே செவிடன் (மன்னிக்கவும் இந்த வார்த்தைக்கு) காதில் ஊதிய சங்கு என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும், என்ன செய்ய.சொல்ல வேண்டியது என் கடமை. சொல்லிட்டேன். "அதெல்லாம் சரி, கடைசி வரைக்கும் தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லையே" என்கிறீர்களா? சும்மா. வெவ்வெவ்வே. நல்லதே பதிவில் எழுதுவோம், கெட்டதே தலைப்பில் வைப்போம்.

14 comments:

  1. பின்னூட்டம் இட விரும்புவோருக்கு சிறிய வேண்டுகோள். தயவு செய்து யாரையும் குறிப்பிட்டோ, திட்டியோ இட வேண்டாம் (சத்தியமாக வஞ்சப்புகழ்ச்சி இல்லை). நானெல்லாம் கத்துக்குட்டி. என்னையும் மதித்து, படித்ததற்கே நன்றி.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. \\நல்ல பதிவு. உங்கள் சேவை தொடரட்டும்.
    இப்படிக்கு அன்புள்ள,\\Anony..
    இதுவரை மட்டும் போதும். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. உங்களுக்கு நீங்கள் ரசிகர் என்பது புரிகிறது... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார். உண்மையில் உங்களை வியக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு மனிதன் இவ்வளவு நிலைமையோடு இருக்க முடியுமா? "இவ்ளோ மோசமா ஒரு பதிவா, இவன ஏதாவது திட்டி எழுதனுமே" என எண்ணப்படும் பதிவுகளில் கூட, அதில் ஒரு ஒரு சரியான கருத்தை நீங்கள் மட்டும் புரிந்து பின்னூட்டம் இடுகிறீர்கள். பதிவில் சொல்ல வந்த கருத்தை நச்சென்று பிடித்தீர்கள். உங்களைப் போலவே படித்து, புரிந்து, யார் மனமும் புண்படாமல் பின்னூட்டம் இட வேண்டும். அது முடியவில்லை என்பதால்தான் பல இடங்களில் நான் பின்னூட்டமே இடுவதில்லை, இட்டாலும் பிரச்சினை.

      Delete
  5. திரு அரவிந்த்,

    ஏற்கனவே உங்களின் ராஜா ரசிகனும் ரஹ்மானும் என்ற பதிவைப் படித்துவிட்டு பின்னூட்டம் இடலாம் என்றிருந்தேன். இந்தப் பதிவைப் படித்ததும் அதைச் செய்கிறேன். எதிர் கருத்தாக இருந்தாலும் நடுநிலையோடு என் கருத்தை உள்வாங்குவீர்கள் என்றே நினைக்கிறேன். அதற்கு முதலில் நேர்மையாக இதை எழுதியதற்கு பாராட்டுக்கள்.

    இன்று இணையத்தில் எழுதும் பலர் 30-50 வயதைச் சார்ந்தவர்கள் என்பது உண்மையே. அவர்கள் இரா இசையினால் வார்க்கப்படவர்கள். அவரது இசையை (மட்டுமே) கேட்டவர்கள் எனலாம். எனவே அவர்கள் எழுதும் பதிவில் இரா பெரிதாக மிகையாக புகழப் படுவதில் வியப்பில்லைதான். இதைத்தான் நான் என்னிடம் வம்புக்கு வரும் இராவாசிகளிடம் சொல்லியிருக்கிறேன். இரண்டாவது எம் எஸ் வி இசையை கேட்டு வளர்ந்தவர்கள் அதிகம் இணையம் பக்கம் வருவதில்லை. எனவே இசையைப் பற்றிய ஒரு மாற்றுக் கண்ணோட்டம் பரவலாக இங்கே காணப்படவில்லை. அப்படி எம் எஸ் வி காலத்து இசை பற்றி எழுதும் வெகு சிலரில் திரு அமுதவனும் ஒருவர். அவர் கூறும் கருத்துக்களை வெகு சாதாரணமாக புறம் தள்ளிவிட முடியாது. இராவுக்கு முன்பே இசை அதுவும் மிக தரமான இசை நம்மிடம் இருந்தது. இரா வந்து என்ன செய்தார் என்பது அவருக்கு முன்னே இருந்த இசைவடிவங்களை கேட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவேதான் சிலர் அதை விமர்சனம் செய்கிறார்கள். இரா விமர்சனதிற்கு அப்பாற்பட்டவர் என்று கண்மூடித்தனமாக நம்பும் அவரது ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை. முட்டல்கள், மோதல்கள் இதன் அடுத்த பரிணாமம்.

    ------ஏன் இது 70களுக்கு முன்னால் கிடையாதா என்றால், என் சிற்றறிவுக்கு எட்டியவரை அப்போதெல்லாம் மக்கள் நிறைய வேலைக்குத்தான் செல்வார்கள். இரவானால், இரண்டாம் ஆட்டம், ஊரில் கூத்து, அவ்வப்போது திருவிழா, அதில் ஒலிப்பெருக்கியில் பாடல், ஊரில் உள்ள ஒன்றிரண்டு வானொலியில் தினமும் செய்தி, அவ்வப்போது பாடல்கள் என இருந்திருக்கலாம். அப்போது காதல் என்ற உணர்வு அவ்வளவாக மக்களிடம் இல்லை. படங்களும் குடும்பம், அரசியல் என்றே இருந்தன. ----

    உங்களின் இந்தக் கருத்து முதிர்ச்சியற்றது என்று தோன்றுகிறது. நம் வாழ்வியலின் பல அம்சங்கள் குறிப்பாக காதல் போன்ற அனுபவங்கள் 70களுக்கு முன் இல்லை என்பது நகைப்புக்குரியது. நான் எழுபதுகளைச் சார்ந்தவன். எனவே உங்களின் இந்தக் கருத்து முற்றிலும் தவறு என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

    -----அதில் வந்து ராஜாதான் என் உயிர் என்று சொல்லுங்கள் தப்பில்லை. ஆனால், மத்தவங்க எல்லாம் ​​_ யிர் என்று சொல்ல வேண்டாம். அதே போல "ராஜாவெல்லாம் ஒண்ணுமேயில்ல, அதுக்கு 1500 வருஷத்துக்கு முன்னாடியே இந்த இசை வந்திருச்சு" என்று சொல்லாமல், "இந்த பழைய இசையையும் கேளுங்கள்" என்று சொல்லுங்கள்.----

    நல்ல கருத்து. அப்படியே சொன்னாலும் தீவிர இராவாசிகள் விட்டுவிடவா போகிறார்கள்?

    பை த வே,

    நல்ல நடுநிலையான பதிவு. இரா ரசிகராக இருந்தாலும் இப்படி எழுதுவது சிலருக்கு மட்டுமே வரும். அந்த விதத்தில் உங்களைப் பாராட்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க காரிகன். முதலில் உங்களது பாராட்டுக்கு எனது நன்றிகள். அடுத்து, நடுநிலைமையை புரிந்து கொண்டமைக்கு, மிக மிக சந்தோஷம். எதிர்க் இல்லையெனில் இருக்காது அல்லவா. இதை ராஜா ரசிகர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதும் உண்மைதான்.

      70களுக்கு முன் மக்களின் வாழ்வியல் பற்றிய கருத்து தவறாக இருக்கலாம். ஆனால், திரைப்படங்களில் காதலை விட குடும்பம், சமூகம் சார்ந்த படங்கள் அதிகம் என்பது என்னுடைய கருத்து. அதை நீங்கள்தான் நிவர்த்தி செய்ய வேண்டும். (நான் 80களின் பாதியில் பிறந்தவன். உங்களைப் பொருத்தவரை சின்னப் பையன். ஆனாலும், 'அங்கிள்' ஆகி விட்டேன்).

      மீண்டும் பாராட்டியதற்கு மீண்டும் நன்றிகள். கண்டிப்பாக என்னிடமும் நீங்கள் இனி 'ஆரோக்கியமான' (வி)வாதங்களை எதிர் பார்க்கலாம்.

      Delete
  6. For this only, there is a option called anonymous..

    ReplyDelete
    Replies
    1. இப்ப மட்டும் என்ன அட்ரசும் போன் நம்பரும் கொடுத்துட்டா பின்னூட்டம் போடுறோம். ஏற்கனவே எல்லாம் வேஷம்தான.

      Delete
  7. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் அனைவருக்குமே எனது சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

      Delete
  8. இந்தப் பதிவை விட அமுதவன் சார் அவர்களின் பதிவில் உங்கள் பின்னூட்டம் நன்றாக இருந்தது. நீக்கப் பட்ட பின்னூட்டங்களை நானும் படிக்கவில்லை, ஏதோ சண்டையா? ஐயாம் எஸ்கேப்!!

    ReplyDelete
    Replies
    1. சண்டை எல்லாம் ஒன்னுமில்லீங்க. வாய் ஜாஸ்தி, கை நீளம் (பின்னூட்டுதுல மட்டும்), அதோட நக்கல் வேற. அதனால கொஞ்சம் ஓவரா போயிடுச்சின்னு .சொன்னாங்க. உண்மைதான்னு மன்னிப்பு கேட்டுட்டேன். நானும் எஸ்கேப்.

      Delete
  9. ஏன் இது 70களுக்கு முன்னால் கிடையாதா என்றால், என் சிற்றறிவுக்கு எட்டியவரை அப்போதெல்லாம் மக்கள் நிறைய வேலைக்குத்தான் செல்வார்கள். இரவானால், இரண்டாம் ஆட்டம், ஊரில் கூத்து, அவ்வப்போது திருவிழா, அதில் ஒலிப்பெருக்கியில் பாடல், ஊரில் உள்ள ஒன்றிரண்டு வானொலியில் தினமும் செய்தி, அவ்வப்போது பாடல்கள் என இருந்திருக்கலாம். அப்போது காதல் என்ற உணர்வு அவ்வளவாக மக்களிடம் இல்லை. படங்களும் குடும்பம், அரசியல் என்றே இருந்தன.

    தப்பு - வீட்டில் பாட்டு போட முடியாது - கேசட் கிடையாது .
    ஆனால் வெளியே பாட்டு போடுவார்கள் .- டீ கடை !

    ரேடியோ சிலோனில் மாலை 5.58 வரை பாட்டு போடுவார்கள் .மத்தப்படி தி மு க கூட்டம் என்றால் எம் ஜி ஆர் பாட்டு உண்டு .
    கோவில் திருவிழா , வீட்டில் கல்யாணம் என்றால் ஸ்பீக்கர் செட் அலறும்.
    இப்ப எல்லாம் கொண்டை ஸ்பீக்கர் பார்க்க முடியவில்லை .

    காதல் என்ற உணர்வு வயசுக் கோளாறு - எல்லாக் காலத்திலும் உண்டு !

    ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..