Tuesday, July 1, 2008

தசாவதாரம்

தசாவதாரம்:
பல நாட்களாக புதிதாக எந்த பதிவும் போடவில்லை. இதற்காகவே பதிவர் சங்கத்திலிருந்து நீக்கப்படுவதாக செய்தி வந்தது. புதிதாக போட்டாலும் தசாவதாரம் பற்றி போடாவிட்டால் நீக்கி விடுவார்களாம். எனவே நானும் பரங்கிமலை சீச்சி.. மன்னிக்கவும். ஜோதியில் கலக்கிறேன்.

படத்தின் கதை பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. படத்தை பற்றிய என்னுடைய கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.முதலில் 10 வேடங்களில் வருவது பற்றிய வாதம். ஏற்கனவே 27 வேடங்களில் ஒருவர் நடித்துள்ளார். 12 வேடங்களில் மற்றொருவர் நடித்துள்ளார் என சில பதிவுகளில் பார்த்தேன். முதலில் தோற்றங்களுக்கும், வேடங்களுக்கும் உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொள்ள வேண்டும். கமல் 'எல்லாம் இன்பமயம்' படத்தில் 10 தோற்றங்களில் வருவார். தசாவதாரத்தில் 10 வேடங்களில் வருகிறார். இதில் கமல் இரண்டாமிடம்தான் என நான் நினைக்கிறேன்.

கதை. அனைவரின் வருத்தமும் இதில் அழுத்தமான கதை இல்லை என்பதுதான். என்னுடைய கருத்து என்னவென்றால், ஒரு சாதாரண ஒரு வரிக் கதையை, 3 மணி நேர திரைக்கதையாக்கி, அதில் 10 வேடங்களை இணைப்பது கொஞ்சம் கடினம் என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய செயல். ஒரு திரைக்கதையாசிரியராக கமல் வென்றுள்ளார் என்பது என் கருத்து.

வசனம். சில இடங்களில் சுஜாதா (நம்பி), பல இடங்களில் கிரேசி மோகன் (நாயுடு, அசின்-கோவிந்த்), அவ்வப்போது கமல் என பல விதம். இயக்கம்: ரவிக்குமார் உள்ளதால்தான் இது ஒரு 'நல்ல பொழுதுபோக்கு படமாக' உள்ளது. ஒருவேளை கமல் இயக்கியிருந்தால், நடு நடுவே வரும் கடவுள் உள்ளாரா இல்லையா என்ற கேள்விக்கு இடமின்றி எல்லாமே தற்செயல் என கொண்டு வந்திருப்பார் என்பது என் கருத்து. படம் கண்டிப்பாக 'நல்ல படமாக' இருந்திருக்கும். ஆனால், 'ஹே ராம்' படம் போல மக்கள் ஏதோ சொல்ல வராருப்பா, ஆனா என்னானுதான் தெரியல என்பர். பொதுவாக தமிழ் மக்களுக்கு கதையில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் வரும் காட்சிகளால் ஆர்வம் இன்னும் கூடும். (சந்திரமுகி படத்தில் வரும் பாம்பு ஒரு நல்ல உதாரணம்).

ஒப்பனை. கமல் ஏன்தான் இப்படி சப்பாத்தி மாவு, கடலை மாவை முகத்தில் அப்பிக்கொண்டு வருகிறாரோ தெரியவில்லை. வலது கண்ணுக்கு கீழ் ஒரு மச்சம். ஒரு வேடம் முடிந்தது. இடது கண்ணுக்கு கீழ் ஒரு மச்சம். இன்னொரு வேடம் முடிந்தது. சற்றே சிறிய தாடி. கலிஃபுல்லாகான் முடிந்தது. அதை விட்டு விட்டு தேவையில்லாமல் சேச்சே.. கமல் சுமார் இருபது வருடங்களுக்கு முன் செய்ததுதான். இப்போது மக்கள் மாறியிருப்பார்கள் என நினைத்தது அவர் குற்றம்தான். என்ன செய்ய..

படத்தில் நிறைய்ய்ய இடங்களில் லாஜிக் இடிக்கிறதாம். இடித்தால் தள்ளி உட்கார வேண்டியதுதானே?? வில்லன் கமல் சென்னையை நன்றாக தெரிந்தவர் போல சுற்றுகிறாராம். அவர் எப்போதுமே கோவிந்த் கமலை தொடர்ந்துதான் செல்வார். மற்றபடி வேட்டி அழுக்கு ஆகவில்லை, அவர் 'சூச்சாவே' போகவில்லை என்று சொல்பவர்களுக்கெல்லாம் )(*&^%$#!#%^.

இசை. எத்தனை பேர் வந்தாலும், நம்மவர்கள் போல வராது என நிரூபிக்கின்றனர். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு அருமை என்ற ஒரு சொல் பத்தாது. பொறுமையோடு உழைத்த அனைத்து கலைஞர்களின் உழைப்பு வீண் போகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கமல் நிறைய தயாரிப்பாளர்களை அழித்து விட்டார் என்பவர்களே, அப்படியெனில் ஏன் இன்னும் அவரை நம்பி படம் எடுக்கிறார்கள். படத்தில் குற்றம் சொல்லும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். எவ்வளவு கேவலமான படமாக இருந்தாலும், அதில் குறைந்தபட்சம் ஒரு ரசிக்கக்கூடிய விஷயம் இருக்கும். குறை கூறலாம். குறை மட்டும் கூறக்கூடாது என்பது என் கருத்து. இதிலும் குறைகள் உண்டு. அவை தவிர்க்க முடியாதவை என்பது என் கருத்து. நாயுடுவையும் அதி புத்திசாலியான ஆளாக கொண்டு போயிருந்தால் இப்போது போல அதை ரசிக்க முடியாது.

கமல் அவர்களே, உங்களின் வருங்கால முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இப்படிக்கு, ஒரு உண்மையான கமல் ரசிகன்.

(ஒரு எண்ணம்: மல்லிகா வரும் பாட்டில், செப்டம்பர் 11ல் Twin Tower சாய்ந்தது, என் Tower சாய்வதில்லை என்று வரும். இதை வைரமுத்து மிகவும் பெருமையாக ஒரு பேட்டியில் சொன்னார். யாரும் அதை கண்டு கொள்ளவில்லையா?? இல்லை அவர் அப்படித்தான் என விட்டு விட்டார்களா??)

No comments:

Post a Comment

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..