Sunday, January 25, 2009

ஒரு தமிழனும், மூன்று ஹிந்தி படங்களும்

நாங்கள் எப்போதும் 'சார்லி சாப்ளின்' படங்களையும் 'ஷகீலா' படங்களையுமே மௌன படங்களாக பார்ப்போம். ஆனால், காலம் செய்த கோலம், ஒரு நல்ல ஹிந்தி படத்தையும் அப்படி பார்க்க வேண்டியதாக போய் விட்டது. விவரங்கள் கீழே.

இந்த வாரம் மூன்று நாள் விடுமுறை என்று, எப்போதோ பதிவிறக்கம் செய்யப்பட்ட மூன்று திரைப்படங்களை பார்த்தோம். அவை முறையே,

1. SlumDog Millionaire (குப்பைநாய் பணக்காரன்), [மன்னிக்க.. இதை நான் ஹிந்தியில் சேர்த்து விட்டேன்.. பதிவின் தலைப்புக்காக]

2. A Wednesday (ஒரு புதன்கிழமை).. [இதுதான் மௌனப்படம்.. ]

3. கஜினி [இதெல்லாம் போன வருஷமே போயாச்சு நீங்க சொல்றது புரியுது.. என்ன செய்ய..]

இவற்றை பற்றி நான் விமர்சனம் எழுதவில்லை. சும்மா.. சொல்ல வேண்டும் என்று தோன்றியது மட்டும்..

SlumDog Millionaire (குப்பைநாய் பணக்காரன்)

உண்மையிலேயே அருமையான திரைக்கதை, இசை, இயக்கம்.. அந்த சிறுவர்களின் நடிப்பும் அட்டகாசம். அந்த கடைசி கேள்வியும், அதற்கான flashback, தொடர்ந்து வரும் காட்சிகள் அனைத்துமே அருமை. எனக்கு இந்த வீடியோதான் நினைவுக்கு வந்தது. பின்னணி இசை அற்புதம். அது பற்றி தனி பதிவு உண்டு. மற்றபடி என்னால் வேறு எடையும் அலசி காயப்போட முடியவில்லை.. மன்னிக்கவும்.

படம் முடிந்த பின்னர், படத்தை பற்றி விவாதிக்கும்போதுதான் logic பற்றி பேசினோம்.. படத்தில் யாருமே நல்லவர்கள் இல்லை. இர்பான் கான் மட்டும்தான் ஓரளவு நல்லவர் போல இருந்தது. மற்றபடி யாருமில்லை. நாயகன் வாழ்வில் நடந்த சம்பவங்களை வைத்து கேள்விகளுக்கு விடை அளிக்கிறான். அதுவும் அடுத்தடுத்த கேள்விகளுக்கேற்ப வயதும் ஏறுகிறது. உள்ளூர் ஆட்கள் அனைவரும், ஏன் அண்ணன் தம்பி கூட ஆங்கிலத்தில்தான் பேசிக் கொள்கிறார்கள். கேட்டால் 'ஆங்கில படம்' என்கின்றனர்.

ஒரு ரசிகனாக எனக்கு படம் மிகவும் பிடித்தது. ஒரு இந்தியனாக பிடிக்கவில்லை. படத்தில் வருபவை அனைத்தும் பொய்யில்லாமல் இருக்கலாம். ஆனால், அவை மட்டுமே உண்மையில்லை என்பது என் தாழ்மையான/உயர்மையான கருத்து..

A Wednesday (ஒரு புதன்கிழமை)

முன்பு பார்த்த படத்திற்கு அப்படியே எதிர்.. படத்தில் வரும் முக்கிய பாத்திரங்கள் அனைவருமே மிக நல்லவர்கள்.. [தீவிரவாதிகளை விட்டுவிடுங்கள்].. படத்திற்கு audio ஏதோ பிரச்சினை. எனவே, sub-title வைத்து சமாளித்து விட்டோம். [சத்தம் இருந்திருந்தாலும் வைத்திருப்போம் என்பது வேறு விஷயம்]. எனக்கு அனுபம் கேரின் கதாபாத்திரம் மிகவும் பிடித்தது. பிரச்சினையின் தீவிரத்தை உணரும்போதும், பின் உத்தரவிடுவதும் கம்பீரம். அதை விட மிக பிடித்தது, கடைசியில் வரும் அனுஜ், Hacker. படத்தில் முக்கியமான ஐந்து பாத்திரங்கள்.. ஐவருமே அழகாக செய்துள்ளனர். இறுதியில், நஸ்ருதீன் ஷாவின் பெயர்.. உண்மையாகவே அருமை.

கஜினி

படம் பார்த்தபோது, பரவாயில்லையே, தமிழில் கோட்டை விட்ட இடங்களை எல்லாம் முருகதாஸ் சரி செய்து விட்டாரே என்று நினைத்தேன். ஆனாலும் தமிழ் அளவுக்கு இல்லை.. ஏனென்று தெரியவில்லை. அமீர் கான் சண்டைக் காட்சிகளில் சட்டையை கழட்டுகிறார் மன்னிக்க பட்டையை கிளப்புகிறார்.. மற்ற காட்சிகளை நம்மையும் அறியாமல் 'சூர்யா நல்ல பண்ணியிருந்தார்' என்று நினைக்க வைக்கிறார். குறிப்பாக, அசின் சஞ்சயாக நடிக்க ஆள் தயார் செய்யும்போது சூர்யா வருவார். 'சஞ்சய் வந்திருக்காரு' என்று அசின் சொல்லும்போது சூர்யாவின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கும். அதே போல, அசின் காதலை சொன்னவுடன், 'நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லணும்' என்று வாயசைப்பார். ஆனால், அதையே அசினும் சத்தமாக சொல்லுவார். அது இவை இரண்டும் அமீரிடம் இல்லை. ஜியா கான் வந்து மருத்துவமனையில் பார்த்து உண்மையை சொல்லும்போது, அவர் கதறுவார். எங்களுக்கு கண்ணில் நீர் வந்து விட்டது [சிரித்து சிரித்து].. ரஹ்மான் வழக்கம் போல அருமை.அமீர் ஜியாகானை துரத்தும்போது வரும் 'Run run' மிக அருமை. அதுதான் இப்போது என் ring tone.

சரி அது ஏன் தமிழன் என்று கேட்கிறீர்களா?? 'தமிழன்டா நான் ஒரு தமிழன்டா' என்ற பாடலுள்ள 'சிலம்பாட்டம்' படத்தை திருட்டு வீடியோவில் கூட நான் பார்க்கவில்லை. நான் கடைசியாக பார்த்த தமிழ் படம் 'Shanghai KNights'. [உபயம் சன்.. இப்போதுதான்].. சும்மா தமாசு..

எனவே மக்களே, உங்களது கருத்துகளையும் கொட்ட வேண்டுகிறேன். [என் தலையில் அல்ல]..

No comments:

Post a Comment

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..