Sunday, November 4, 2018

தென்றல் வந்து தீண்டும்போது...

முதலில் பாடலைக் கேட்போம்.


தோணி பட விழாவில் நாசர் இந்த பாடல் உருவான கதையை சொல்லி இருந்தார். நகைச்சுவையாக இருந்தாலும், அவருடைய உண்மையான உணர்வுகளை சொல்லி இருப்பார். 


இதே பாடல் தெலுங்கில் சில வருடங்களுக்கு முன் 'எவடே சுப்பிரமணியம்' படத்தில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதை அவரே இன்னும் நன்றாக மெருகூட்டினார் என்று படித்தேன்.


சில நாட்களுக்கு முன் MOP வைஷ்ணவா கல்லூரியிலும், பின் எம்ஜிஆர் சத்யா பெண்கள் கல்லூரியிலும் இளையராஜாவின் 75ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த இரண்டு இடங்களிலும் கண்டிப்பாக மாணவிகள் 2000களின் ஆரம்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். ஆனாலும், இரண்டு இடங்களிலும் தானத்தந்த தானத்தந்த என்ற ஆரம்பித்தவுடன் அவர்களின் ஆரவாரத்தைக் கேட்டால் ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட அதே போலவே கோயமுத்தூர் PSG கல்லூரியிலும். அதே ஜனனி ஜனனி முதல், தென்றல் வந்து தீண்டும்போது வரை.


இந்த பாடல் அந்த அளவிற்கு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் மனதில் இருப்பது ஆச்சரியம். அங்கு அவரின் பேச்சும், மாணவிகளின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களும் காணொளியாக. நீங்களும் பாருங்கள், பொறுமை அவசியம்.




மூன்றிலும் நிறைய முறை தற்பெருமை பற்றி நிறைய பேசினாலும் ஒரு சில விஷயங்கள் நன்றாக பேசினார். குறிப்பாக, வாழ்க்கையில் வெற்றி பெறுவது பற்றிய கேள்விக்கு, வெற்றி என்பது நீங்கள் செய்யும் செயல்களுக்கு மட்டுமே. வாழ்க்கைக்கு இல்லை. அடுத்து மன நிம்மதிக்கு என்ன மாதிரி இசை என்ற கேள்விக்கு உன் மனதிற்கு என்ன பிடிக்குமோ அதைக்கேள். நான் எதையாவது சொல்லி, அது இன்னும் பிரச்சினை அதிகரித்து விடப் போகிறது என்றார். இது இரண்டும் கொஞ்சம் கூட தற்பெருமை இன்றி வயதுக்கேற்ற மாதிரியான பதில்கள். அதே போல உங்களது குடும்ப உறவுகள் இல்லாமல் உங்களுக்கு பிடித்த 3 பேர் என்ற கேள்விக்கு முதலில் மூகாம்பிகை என்றார். பிறகு தன்ராஜ் மாஸ்டர் மற்றும் GK வெங்கடேஷ் என்றார். அந்த வகையில் மகிழ்ச்சி.

ஆனால், MOPயில் கொஞ்சம் அதிகமாகவே 'நான், என்' விகுதி இருந்தது. அதிலும் ஒரு ஆட்டோ ஓட்டுனர் தன்னிடம் "ஸார், நீங்க மட்டும் இல்லேன்னா, நான் என் பொண்டாட்டிய கழுத்தை நெரிச்சிருப்பேன்" என்றதெல்லாம் கொஞ்சம் அதிகமாக தெரிந்தது. ஆனாலும், என்ன செய்ய. அது உண்மைதான். 

ஏன் நிறைய பேர் இளையராஜா என்று உருகிறார்கள் தெரியுமா. ஒவ்வொருவருக்குமே வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான நிகழ்வுகளும் சோக நிகழ்வுகளும் கலந்திருக்கும். அல்லது மறக்க முடியாத கணங்களும் இருக்கும். 1970களிலிருந்து 90கள் வரை பிறந்தவர்களுக்கு இப்போது இருப்பது போல நினைத்த நேரத்தில் நினைத்த பாடல்களை கேட்க முடியாது. ஆனால், அந்த குறிப்பிட்ட சமயத்தில் கேட்கும் பாடல் நம்மை கதறி அழ வைத்திருக்கும், கவலையை மறக்க வைத்திருக்கும். எத்தனையோ வருடங்கள் கடந்திருந்தாலும், இன்னும் அந்த பாடல் எங்காவது நமக்கு கேட்டால், நம்மை அறியாமல் பின்னோக்கி செல்வோம். இது பல பேருக்கு, ராஜாவின் பாடலாக அமைந்து விட்டது. இது பற்றிய பதிவு. இது 96 படம் வருவதற்கு முன்பே நான் எழுதியது.  

அதே போல ஜனவரி முதல் டிசம்பர் வரை, நாம் கொண்டாடும் அனைத்து பண்டிகைகள், தினங்கள் அனைத்திற்கும் ராஜாவின் ஏதாவதொரு பாடல் பொருந்தியிருக்கும் அல்லது நாமே பொருத்திக் கொண்டு இருப்போம். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் மட்டும் விதி விலக்கு. அதை மொத்தக் குத்தகைக்கு ரஹ்மான் எடுத்துள்ளார்.

ஜனவரி:
புத்தாண்டு - இளமை இதோ இதோ (சகலகலா வல்லவன்)
போகி - மார்கழிதான் ஓடிப் போச்சு (தளபதி)
பொங்கல் - தைப்பொங்கலும் பொங்குது (மகாநதி)
ஜல்லிக்கட்டு - தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.

பிப்ரவரி:
காதலர் தினம் - நிறைய பாடல்கள்.

மார்ச்:
மகளிர் தினம் - மகளிர் மட்டும் (மகளிர் மட்டும்)

ஏப்ரல்: 
சித்திரை 1 - தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.

மே:
உழைப்பாளர் தினம் - உழைப்பாளி இல்லாத (உழைப்பாளி)
அன்னையர் தினம் - அம்மா என்றழைக்காத (மன்னன்)

ஜூன்:
ரம்ஜான் - எங்குமுள்ள அல்லா (தர்மசீலன்)

செப்டம்பர்:
விநாயக சதுர்த்தி - அட சாமி வருது (உடன் பிறப்பு)

அக்டோபர்: ஆயுத பூஜை - தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.
தீபாவளி - பட்டாச சுட்டு சுட்டு (பூவே பூச்சூடவா)

டிசம்பர்:
கிறிஸ்துமஸ் - தேவனே (வெள்ளை ரோஜா) 

இது தவிர இன்னும் தாய்ப்பாசம், சகோதர பாசம், அதிலும் அண்ணன் தங்கைக்கு தனியாக, அண்ணன் தம்பிக்கு தனியாக, பிரியும்போது ஒரு பாடல், சேரும்போது ஒரு பாடல் என, அது கேட்க நன்றாக இருக்கிறதோ இல்லையோ, நம் நிலையை அப்படியே உணர்த்துவது போல இருக்கும், நம் வாழ்வோடு இணைந்து விடும். இது பற்றி ஏற்கனவே ஒரு நீயா நானா விவாதம் கூட நடந்தது. அதைப்பற்றிய பதிவு. 

இல்லை இல்லை. ராஜா 1000 படங்கள் இசையமைத்திருந்தாலும் அதில் பாதிதான் வெற்றி. மற்றவைகளை ஒரு முறை கூட கேட்க முடியாது. ஆனால், மற்றவர்கள் அப்படி இல்லை. வெற்றி சதவிகிதத்தை பாருங்கள், ஹிந்தியில ஒன்னும் பண்ண முடியலல்ல, ஹாலிவுட் தெரியுமா, எங்க சிம்பொனியை விட சொல்லுங்க, முகவரி படம் பார்த்தீர்களா, இசை படம் பார்த்தீர்களா, என்னவோ ராஜாதான் எல்லாத்தையும் பண்ணுனாரா, அவருக்கு முன்னால எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்திருக்காங்க, 2010க்கு அப்புறம் ஒரு நல்ல பாட்டு சொல்லுங்க பாப்போம், என்றெல்லாம் ஒரு கும்பல் வரும். 

அவர்கள் சொல்வதிலும் மிகச்சில விஷயங்கள் சரியாக இருக்கலாம். ஆனாலும், புத்திக்கு தெரியுது, மனசுக்கு தெரியல. மற்ற இசையமைப்பாளர்கள் கும்பலுக்கு. ராஜா எங்களுக்கு.

No comments:

Post a Comment

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..