Monday, December 7, 2015

தமிழகம் - மழையகம்

முன் குறிப்பு: நான் இப்போது சென்னையில் இல்லை. எனது மனைவியும், குழந்தையும் சென்னையில்தான் உள்ளனர். எனது வீடோ, பகுதியோ வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை.

சென்னையில் எப்போது மழை பெய்தாலும் குறிப்பிட்ட சில இடங்களில், ஆள் அளவிற்கு தண்ணீர் நிற்கும், அந்த பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்படுவார்கள். நான்கு நாட்கள் கழித்து வழக்கம் போல அவரவர் இடத்திற்கு சென்று விடுவார்கள். அவர்கள் விளிம்பு நிலை மனிதர்கள். ஒவ்வொரு வருடமும் அரசு அவர்களுக்கு நிவாரண முகாம்கள் அமைக்கும், நிவாரண நிதி கொடுக்கும். அதைத்தாண்டி அடுத்த வருடம் மழை அவர்களை பாதிக்கக்கூடாது என எந்த முயற்சியும் எடுத்ததில்லை. அவர்களும் கேட்பதில்லை.

ஆனால், மற்றபடி நடுத்தர வர்க்க இடங்களான வேளச்சேரி, மடிப்பாக்கம் போன்ற இடங்களில் முழங்கால் அளவிற்கு நீர் நிற்கும். மழையும் பொதுவாக இரவு பெய்யும். பகலில் வெயில் வாட்டும். நான்கு நாட்களில் அதுவும் வடிந்து விடும். இந்த ஆண்டு அப்படி இல்லாமல், மழையும் நிற்கவில்லை. அது மட்டுமின்றி வெள்ளத்தின் அளவு இரு மடங்காகி விட்டது. 

அந்த விளிம்பு நிலை மனிதர்கள் வழக்கம் போல வெளியேறி விட்டனர். ஆனால், அவர்களது உடைமைகள் அனைத்தும் இழந்து விட்டனர். அதைத் தாண்டி இந்த முறை பாதிக்கப்பட்டது நடுத்தர வர்க்க, யார் வம்பு தும்புக்கும் போகாத, தான் உண்டு தன் வேலை உண்டு என பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியாத நல்லவர்கள்தான்.

எப்படியாவது சென்னையில் ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என மாத சம்பளத்தில் பாதியை வட்டியாக கட்டும் மக்கள்தான். நாங்களும் யாருக்கும் எதுவும் செய்ய மாட்டோம், யாரும் எங்களுக்கும் எதுவும் செய்ய வேண்டாம் என வாழ்ந்த மக்கள் இந்த முறை பாதிக்கப்பட்டு விட்டனர். அந்த நடுத்தர வர்க்க பயம் இருந்ததால்தான், வீடு கிடைத்தால் போதும் என, எங்கே என்று கூட தெரியாமல் வீடு வாங்கினார்கள். "சென்னையில் வெள்ளமா, என்ன காமெடியா?" என்று கேட்டார்கள்.

இன்னும் அந்த பயம் இருந்ததால்தான் முதலில் வெள்ளம் வந்து வடிந்த பின்னும், வீட்டை விட்டு வெளியேறாமல், அடுத்த வெள்ளத்தில் மாட்டிக் கொண்டார்கள். ஒன்றுமே கிடைக்காமல் இருந்தபோதும், மற்றவர்கள் கொண்டு வந்து கொடுத்த உணவை வாங்க மறுத்தார்கள். ஆனால், மழை எல்லோரையும் மாற்றி விட்டது. யாரென்றே தெரியாதவர்களின் வீட்டில் தங்க வைத்து, தெரியாதவர்களை வீட்டில் கொண்டு வந்து தங்க வைத்தது. "வெளையாட்டுப் பசங்க" என்றெல்லாம் திட்டப்பட்டவர்கள் தண்ணீருக்குள் சென்று மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்கள்.

இவை எல்லாம் முகப்புத்தம் மூலம் அறிந்து கொண்டது. அதையும் தாண்டி, இந்த நேரத்திலும் கொள்ளையடிக்கும் 'நல்ல' உள்ளங்கள் பற்றியும் தெரிய வருகிறது. என் மனைவியே பால் 60 ரூபாய்க்கு ஒரு நாள் வாங்க நேரிட்டது. ஆனாலும், வரும் உதவிகள் அனைத்துமே, இந்த நடுத்தர வர்க்கத்தினருக்கே கேட்டு வருகின்றது. மிகவும் பாதிக்கப்பட்ட வட சென்னை, அடையாறு, கூவம் கரையோரப் பகுதிகள், கடலூர் மற்றும் கரையோர மாவட்ட மக்களுக்கு யார் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. வெளியே தெரியாமல் உதவி கிடைத்திருந்தால், மிகவும் சந்தோஷம்.

என்னுடைய ஒரே ஆசை என்ன என்றால், கீழே வரும் என்னுடைய கற்பனைக் கதை, நிஜத்தில் நடக்கக்கூடாது.

நிலத்தரகர்: வேளச்சேரியில ஒரு வீடு வெலைக்கு வருதுங்க, சதுர அடி 6000தான். முடிச்சிடலாமா? கம்மி வெலைங்க.

நான்: ஐயய்யோ, அங்க தண்ணி பயங்கரமா நிக்குமே, இந்த மழைக்கு பாத்திருப்பீங்களே.

நிலத்தரகர்: அட அதனாலதாங்க கம்மியா கெடைக்குது. மழை என்ன இதே மாதியா வருஷா வருஷம் பெய்யும். மறுபடியும் எத்தன வருஷம் கழிச்சு இப்படி பெய்யுமோ. அது மட்டும் இல்லாம, இனி என்ன இப்படியே விட்டுடுவாங்களா? பாதாள சாக்கட வந்துரும். அப்புறம், எவ்ளோ மழை பெஞ்சாலும் அஞ்சு நிமிஷம் கூட தண்ணி நிக்காது. அப்படியே இருந்தாலும், ஒரு ரெண்டு நாளு. அவ்ளோதான்.

நான்: கொஞ்சம் யோசிக்கணுமே.

நிலத்தரகர்: இதப் பாருங்க. இந்த வெல இப்பத்தான் கெடைக்கும். மழைக்கு முன்னாடி சதுர அடி 7500. ஏதோ மழையால இவ்ளோ கம்மி ஆயிருக்கு. இப்ப உட்டா கெடைக்காது. பார்ட்டி வித்துட்டு ஊர்ப்பக்கம் போகலாமுன்னு பாக்குது. ஏதோ நீங்க தெரிஞ்சவங்கன்னு சொன்னேன். நீங்க இல்லேன்னா பின்னாடி இன்னும் பத்து பேரு இருக்காங்க. பாத்துக்குங்க. வருஷத்துல ஒரு நாலு நாளுக்கு பயந்துக்கிட்டு இப்படி ஒரு வாய்ப்பை விட்டுடாதீங்க. சொல்லிப்புட்டேன்.

நான்: பின்னூட்டத்துல என்ன சொல்றாங்கன்னு பாத்துட்டு சொல்றேன்.

6 comments:

 1. வாங்கிப் போடுங்க. போனா வராது. மழை வந்தா அப்ப பாத்துக்கலாம்??????????????

  ReplyDelete
  Replies
  1. அதேதாங்க.. அப்ப பாத்துக்கலாம்..

   Delete
 2. கற்பனையே இல்லை. நடக்கப் போவது தான்! மக்களுக்கு ஞாபக சக்தி மிகக் குறைவு. ஒரு சின்ன உதாரணம்.. கடந்த பத்து வருடங்களில் பல முறை தி நகர் துரைசாமி பாலத்தில் தண்ணி நின்றிருக்கிறது. என்ன ஆனது? நிற்கும் போதெல்லாம் மோட்டார் போட்டு எடுத்து விடுவார்கள். வேறு ஒன்றும் கிடையாது. நம்மை விட பல சின்ன நாடுகளில் தொலை நோக்கு முறையில் இந்த பிரச்சனையை தீர்த்திருக்கும் போது நம்மால் ஏன் முடியவில்லை?

  ReplyDelete
  Replies
  1. இதோ.. இன்னும் ரெண்டு வாரத்துல நாம வழக்கம் போல நயந்தாராவோட நாலாவது கல்யாணத்தப் பத்தி கவலைப்படணும், கபாலி வேற வருது, கமலுக்கு வேற ஆளுங்கட்சியோட பிரச்சினை, இது பத்தி எல்லாம் கவலப்படவே நேரம் இல்ல. அடுத்த மழை வரும்போது பாத்துக்கலாம்..

   Delete
 3. சென்னைக்கு மிக, மிக அருகில் வேறு எங்கும் மனைகள் கிடைக்கவில்லையா?

  .

  ReplyDelete
  Replies
  1. இந்த இடம் சென்னைக்கு மிக அருகில் இருக்காங்க..
   அட என்ன பேசறீங்க.. இங்க மழை பெஞ்சா இடுப்பளவு தண்ணி நிக்கும்..
   அட அப்ப இது சென்னைதான்னு சொல்லுங்க..

   Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..