Monday, May 20, 2013

ஆச்சரியப்படுத்தும் புதுமுகங்கள்!!

ஒரு வழியாக, ஆரம்பித்து ஆறு வருடங்கள் கழித்து, நாலு பேரைக் கெஞ்சிக் கூத்தாடி எப்படியோ, 10000 பேரின் வருகைகளை சம்பாதித்து விட்டேன். நன்றி நண்பர்களே..

சமீப காலமாக வந்த படங்களில், பெரிய இயக்குனர்களின் படங்களை விட, புது இயக்குனர்களின் படங்கள்தான் நன்றாக உள்ளன. சில படங்கள் வெற்றியடையவில்லை என்றாலும், மிக நன்றாகவே இருந்தன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம். இவற்றில் பல இயக்குனர்களின் இரண்டாவது படத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன். சில படங்களை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன், ஆனாலும், மீண்டும் குறிப்பிடுகிறேன். சில படங்களை மறந்திருந்தால், பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

எந்தவொரு இயக்குனரும் தனது இரண்டாவது படத்தில்தான் தனது திறமையை நிரூபித்து உள்ளனர். உதாரணமாக பாரதி ராஜா, ஷங்கர், லிங்குசாமி போன்றோர் (வெற்றிக்கு), சசிகுமார் மற்றும் பலர் (தோல்விக்கு). அனைவருமே, தங்களின் இரண்டாவது படம் பார்க்கும்போது, முதல் படம் நினைவுக்கு வராமல், முற்றிலும் வித்தியாசமான கதைக்களனைக் கையாண்டுள்ளனர். ஆனால், அவர்களின் முதல் படம் நம் நினைவுக்கு வராமல், இரண்டாவது படத்திலேயே ஒன்ற வைத்ததில் தான் வெற்றி அடங்கியுள்ளது. கீழ்க்கண்ட அனைவரும் எந்த வரிசையில் வருகிறார்கள் என்று பார்ப்போம்.

எங்கேயும் எப்போதும் - சரவணன்:

என்னைப் பொறுத்த வரை, 2012ம் ஆண்டில் வந்த மிகச்சிறந்த படம். இயக்குனர் நாமக்கல்காரர் என்பதால் மட்டுமல்ல. படமும் நல்ல படம் என்பதால்தான். அடுத்து விக்ரம் பிரபுவை வைத்து இயக்குவதாக செய்தி. பார்ப்போம்.

படம் பார்க்காதவர்களுக்காக:

 

ஈரம் - அறிவழகன்:

பேயே இல்லாமல் வந்த பேய்ப்படம். இப்போது வல்லினம் படத்தை ஆவலோடு எதிர் பார்க்கிறேன். படம் கூடைப்பந்து விளையாட்டை மையப்படுத்தி அமைந்துள்ளது போல. பார்ப்போம்.


ஆச்சரியங்கள் - ஹர்ஷவர்தன்:

படம் 'One Night at a Call Center' படத்தை நினைவூட்டினாலும், உண்மையிலேயே அப்படியொன்றும் குறை கூறும் அளவிற்கு இல்லை. தேவையில்லாத, லாஜிக் மீறல் இல்லாத காட்சிகள் எதுவும் இல்லை. இந்தப் படம் அவ்வளவாக வெற்றி அடையா விட்டாலும் கண்டிப்பாக அடுத்த படத்தில் சாதிப்பார் என்று நம்புகிறேன். இப்போது வந்துள்ள 'நேரம்' படமும் இதைப் போலவேதான் என்றும் நினைக்கிறேன்.

படம் பார்க்காதவர்களுக்காக:

 

புதுமுகங்கள் தேவை - மனீஷ் பாபு:

படம் எடுப்பதைப் பற்றி நிறைய படங்கள் நிறைய வந்துள்ளன. சில படங்கள் குழப்பத்தையே உண்டாக்கின (பொம்மலாட்டம் போன்றவை). ஆனால் இந்தப் படம், மிகத் தெளிவான குழப்பத்தை உண்டாக்கியிருப்பர். கடைசி காட்சி வரை 'எங்கடா, continuity இல்லையே' என்ற குழப்பம்தான் இருந்தது. இன்னும் எனக்கு பெயர்க் குழப்பம் தீரவேயில்லை. கீழே வரும் இந்த காணொளியை பாருங்கள், அதன் பின் இந்தப் படத்தைப் பாருங்கள். நீங்களும் நிறைய கண்டு பிடிக்கலாம்.

ஆரண்ய காண்டம் - தியாகராஜன் குமாரராஜா:

இந்தப் படத்திற்கு எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தங்கமணி இந்தப் படத்தைப் பார்த்து விட்டு என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு போய் விட்டார்கள். ஆனாலும் எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்தது. எங்கே போயிட்டீங்க தியாகராஜன்?? படத்தின் பின்னணி இசைதான் என்னை மிகவும் கவர்ந்தது. அதன் தொகுப்பு இங்கே.

 

மௌன குரு, சாந்தகுமார்:

சாதாரணமாகவே மிக நல்ல படம். ராஜபாட்டை போல மொக்கை படத்துடன் வந்ததால் இன்னும் ரொம்ப நன்றாகவே இருந்தது. நீங்களும் எங்கே இருக்கீங்க சாந்தகுமார்?.

தடையற தாக்க - மகிழ் திருமேனி:

அடடே, திருட்டுத்தனமாகப் பார்க்கிறோமே என்று நினைக்க வைத்த படம். அருமையான திரில்லர் படம். நன்கு கவனிக்கப்பட்ட அளவிற்கு வசூல் இல்லை என்று நினைக்கிறேன். Youtubeல் அதிகமாக பார்க்கப் பட்ட தமிழ்ப் படங்களில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன்.


நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் - பாலாஜி தரணீதரன்:

இப்படி எல்லாம் கூட படம் எடுக்க முடியுமா என்று வாயைப் பிளந்து பார்த்த படம். அடடே, நண்பர்களுடன் பார்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று நினைக்க வைத்த படம்.

இன்னும் குள்ளநரிக்கூட்டம் - ஸ்ரீபாலாஜி, நான் - ஜீவா சங்கர், சாட்டை - அன்பழகன் என்று பலரும், வழக்கமான பாணியை விட்டு விட்டு வித்தியாசமான கதைக்களங்களை உருவாக்கியுள்ளனர்.

இவர்களைத் தவிர, பிட்சா - கார்த்திக் சுப்பாராஜ், காதலில் சொதப்புவது எப்படி - பாலாஜி மோகன், சூது கவ்வும் - நளன் குமாரசாமி போன்றோரும் உள்ளனர், ஆனாலும் அவர்கள் அனைவரும் என்னைப் பொறுத்தவரை குறும்படங்களிலேயே தமது திறமையை நிரூபித்து விட்டனர். என்றாலும் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இப்போது யாருடைய அடுத்த படம் வந்தாலும், அவர்களின் முதல் படம் நம் நினைவுக்கு வராமல், முழுதும் வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..