Friday, February 24, 2017

அரசியல் மல்லுக்கட்டு!

ஜெயலலிதா இறந்தவுடன் பதிவிட்ட பின்பு. பொங்கல் முடிந்து ஒரு பதிவு போடலாம் என்று நினைத்தால், தினமும் நடைபெற்ற போராட்டங்கள், அரசியல் மாற்றங்களால் எங்கே அசிங்கப்பட்டு விடுவோமோ என்று போடாமலே இருந்தேன். நான்கைந்து முறை திருத்தமும் செய்தேன். இப்போது கூட, சற்று சந்தேகத்துடன்தான் பதிவிடுகிறேன். ஆதியோடந்தமாக பார்ப்போம்.

ஜல்லிக்கட்டு போராட்டம்:

"ஜெயலலிதா இருந்திருந்தால், இப்படி ஒரு போராட்டம் நடந்திருக்குமா, போன 2 வருஷம் மட்டும் நடக்கலியே, அப்ப ஏன் போராட்டம் பண்ணல?" என்றெல்லாம் ஒரு சாரார் கேட்டனர். இதற்கு காரணம் எல்லாம் கேட்டால், பெரியார் காலத்தில் இருந்து வர வேண்டும். எளிமையாக சொல்கிறேனே. 

ஏற்கனெவே மத்திய அரசின் மீதிருந்த கோபம்தான், அதுவும் குறிப்பாக தமிழர்களை மதிக்காமல் இருப்பது, ஹிந்தி திணிப்பு, காவிரி விவகாரத்தில் அலட்சியம் போன்றவை நீறு பூத்த நெருப்பாக எல்லோர் மனத்திலும் இருந்ததுதான், போராட்டமாக வெடித்தது. இதை இன்னும் மக்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற எண்ணம்தான், போராட்டத்தில் "மோடி ஒழிக" என்று கத்த வைத்தது. (ஐயோ அது நான் இல்லிங்கோ!).

நமது அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் என்றாலும் சட்டத்தை மீறாதவர்கள்(?). அதாவது பாலத்தைக் கட்டாமலே, கட்டினேன் என்று சொல்ல மாட்டார்கள். மாறாக, கட்டுவதற்கு யார் யாரிடம் எவ்வளவு வாங்க முடியும் என்றுதான் யோசிப்பார்கள். அதனால்தான் காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவை கர்நாடகம் மதிக்காவிட்டாலும் சும்மா இருந்தனர். எந்த பிரச்சினை வந்தாலும், இங்கு யாருக்கும் எதுவும் நேரவில்லை.

ஆனாலும், இப்படி ஒரு போராட்டம் யாருமே எதிர்பாராதது. அதாவது, இது போராட்டமே அல்ல. எல்லோரும் ஒன்றாக குழுமினர். "காக்கைகள்தானே. இரை தீர்ந்தவுடன் கலைந்து விடும், இல்லையா ஒரு வெடி வெடித்தால் போதும்" என்றுதான் எல்லோரும் எண்ணியிருப்பர். அதே போல ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நாட்டிலும் கூடியது, உண்மையிலேயே மகிழ்ச்சி.

"அந்த பிரச்சினைக்கு கூடியிருக்கலாமே, இந்த பிரச்சினைக்கு கூடியிருக்கலாமே" என்றவர்களுக்கு பதில், அவையாவும் அரசாங்கமோ, சட்டமோ தீர்க்க வேண்டியவை. இது நம் உரிமை மறுப்பு, இன்னும் சொல்லப் போனால் நம்மை ஏமாற்றிக் கொண்டிருந்தனர் என்பதுதான் முதல் காரணம். இதே போல தினமும் இறங்கினால் அது நீர்த்துப் போய்விடும். மீண்டும் இது போல மக்கள் போராட்டம் நடக்கக் கூடாது என அரசு எண்ணினால், அது போல பிரச்சினைகளை வளரவிடக்கூடாது. அவ்வளவே.

முன்பு ஒரு பதிவில், இது போன்ற முகப்புத்தக போராட்டங்களைக் கிண்டல் செய்திருந்தேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அதே போல, "இதுவும் கடந்து போகும்" என்ற மனநிலை எல்லா தமிழர்க்கும் பொதுவான குணம். எனவே, அதே போல பொங்கல் வரை எதையாவது சொல்லி ஓட்டி விடலாம் என்று எண்ணியிருப்பர். பொங்கல் முடிந்தவுடன் எப்படியும் அவனவன் வேலையைப் பார்த்துக்கொண்டு போய் விடுவான் என்றுதான் நினைத்திருப்பர்.

ஒரு வேளை, ஜெயலலிதா இருந்து அதை வேறு விதமாக அடக்க முயன்றிருந்தால், வெற்றி கூட பெற்றிருக்கலாம். அதாவது போராட்டத்தின் இறுதியேதான் அப்போது ஆரம்பமாக இருந்திருக்கும்.பின் விளைவுகள் வேறு விதமாக இருந்திருக்கும். நடக்காததைப் பற்றி யோசிக்கத் தேவையில்லை.

சசிகலா:

காஸநோவா 99 என்றொரு நாவல் உண்டு. நான் கூட அதைப் பற்றி எழுதி உள்ளேன். அதே போல, 33 வருடங்கள் காத்திருந்து, சரியான சந்தர்ப்பத்தை நடராஜனும், சசிகலாவும் அடைந்துள்ளனர். ஆனால், அரசியலில் உள்ள அரசியலால் பொன் முட்டையிடும் வாத்தை அறுத்த கதையாகி விட்டது. என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதா ஒரு பொம்மைதான். இருந்தாலும், அதிகாரமே ஒரு போதைதானே. அது இல்லாமல் எப்படி என்று கூட எண்ணியிருக்கலாம். சசிகலா இன்னும் சற்று பொறுத்திருக்கலாம். பார்ப்போம்.

இப்போது குற்றவாளி என்று தீர்ப்பு வந்து விட்டது. ஜெயாவும் குற்றவாளிதான் என்று குதிப்பவர்கள், ஏன் 2001, 2011, 2016ல் அந்த குற்றவாளியைத் தேர்ந்தெடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். 2006-2011ல் திமுக ஆடிய ஆட்டம் அப்படி. கருணாநிதி, அதுவே தனக்கு இறுதி முதலமைச்சர் தருணம் என்று எண்ணினாரோ இல்லையோ, அவரை சார்ந்தோர் அப்படி எண்ணி ஆடிய ஆட்டம் 2016 வரை எதிரொலித்தது. 

இப்போது நமக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை என்பது போல தோன்றுகிறது. நமக்கு யாரும் வேண்டாம் என்று காண்பிக்க வேண்டும். என்ன செய்யலாம். பொறுத்திருப்போம். 2018 பாதிக்குள் நான் தேர்தலை எதிர்பார்க்கிறேன். (122-117=5) 6 பேரின் ஆட்டத்தைக் கலைப்பதெல்லாம் சாதாரணம்.

ஒரு நண்பர் கேட்டார். "எதுக்கு தேவையில்லாம அரசியல் எல்லாம் எழுதற. சும்மா காமெடியா நாள் போஸ்ட் போடு" என்றார். இது எனது ஆதங்கம். அவ்வளவே.

Sunday, January 8, 2017

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

கடைசியாக பணம் பற்றி எழுதிய பின்பு, 50 நாட்கள் கழித்து மீண்டும் எழுதலாம் என்று நினைத்தால் முடியவில்லை. அதற்குள் நிறைய நடந்து விட்டது. ஜெயலலிதா மரணம், புயல், புத்தாண்டு என காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது. 

சொல்ல மறந்து விட்டேனே. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். எழுதுவதற்கு நிறைய விஷயம் இருக்கிறது, ஆசையும் இருக்கிறது. ஆனால், நேரம்தான் இல்லை. சில விஷயங்கள் பற்றி மட்டும் சொல்கிறேன்.

ஜெயலலிதா:

நம்மூரில் எப்போதுமே ஒரு விஷயம் என்னவென்றால், ஒருவர் இறந்து விட்டால், அவரைப் பற்றி நல்ல விஷயங்கள் மட்டுமே பேச வேண்டும். கெட்ட விஷயங்களை மறந்து விட வேண்டும் என்பதுதான். நம் சட்டத்தில் கூட, ஒருவர் இறந்து விட்டால், அவர் பெயர் குற்றப் பத்திரிகையில் இருந்து நீக்கப்படும். இது சரியா என்று விவாதிக்கத் தேவையில்லை.

என்னைப் பொறுத்தவரை, கருணாநிதி, மன்மோகன்சிங், மோடி என யார் வந்தாலும், நான் என் வேலையை பார்த்துக் கொண்டுள்ளேன். இவர்களால் நேரடியாக பாதிக்கப்பட்டதில்லை. ஆனால், ஜெயலலிதா கொண்டு வந்த சட்டங்களால், நேரடியாக ஒரு முறை பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.

1999ல் கருணாநிதி ஒரு சட்டம் கொண்டு வந்தார். கிராமப்புற பள்ளிகளில் 12வது முடிக்கும் மாணவர்களுக்கு, பொறியியல் சேர்க்கையில் 15 சதவிகித இட ஒதுக்கீடு என்று. நான் அப்போதுதான் 10ஆவது முடித்திருந்தேன். ஆனால், நான் படித்த கிராமத்துப் பள்ளியில் அப்போதுதான் மேல்நிலைக்கல்வி ஆரம்பித்ததால், எதற்கு விபரீதம் என என்னை நாமக்கல் பள்ளியில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கே படித்த படிப்பைப் பற்றி ஏற்கனேவே சொல்லி இருக்கிறேன். சரி விடுங்கள்.

2001ல் 12ஆவது முடித்து, நுழைவுத் தேர்வும் முடிந்து விட்டது. தேர்தல் நடந்தது. அம்மா வந்தார்கள். கருணாநிதியைத் தூக்கி உள்ளே போட்டார்கள். அன்றுதான் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒற்றை சாளர முறைக்கான தரவரிசையை அறிவித்தார்கள். இந்த கொடுமையில் அதை ஒரு நாள் கழித்துதான் தெரிந்து கொள்ள முடிந்தது. அம்மா அறிவித்தார், இனி 15 சதவிகித ஒதுக்கீடு 25 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. அதுவும் இந்தக் கல்வியாண்டு முதலே என அறிவித்தார்.

கோயமுத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் கண்டிப்பாக கிடைக்கும் என நம்பிக்கையோடு இருந்த எனக்கு இடி. அதன் பின் எப்படியோ படித்து, இப்படி இருக்கிறேன். சரி இட ஒதுக்கீடு என்ன ஆனது என்கிறீர்களா? வழக்கம் போல சில பேர் வழக்கு போட்டார்கள். நீதிமன்றம், அந்த 25 சதவிகிதத்தை ரத்து செய்தது. அரசு மேல்முறையீடு செய்யவில்லை. அதன் பின் வந்த கருணாநிதி அரசும், அதைக் கண்டு கொள்ளவில்லை.

ஒருவேளை நான் கிராமத்துப் பள்ளியில் படித்து, அந்த இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்திருந்தால், நான் வேறு மாதிரி பேசியிருக்கலாம். அம்மாவிற்கு நன்றி கூட சொல்லியிருக்கலாம். யாருக்குத் தெரியும். இப்போதும் நான் நன்றாகவே உள்ளேன். எங்கள் வீட்டில் அப்போது சொன்னது, "எங்கிருந்தாலும் நல்ல படிச்சா பிரச்சினையே இல்ல". படித்தால்தானே.

அது மட்டுமின்றி, என்னைப் பொறுத்தவரை, கடைசி வரை ஜெயலலிதா ஒரு பொம்மைதான். ஆட்டி வைத்தவர்கள் நிறைய. இப்போது சசிகலா வந்தாலும், அவரும் கைப்பாவைதான். எப்போதும் அமைச்சர்கள் கையில் அதிகாரம் இருந்தாலும், ஆட்சி செய்வது அதிகாரிகள்தான். நடராஜனும் ஒரு அரசு அதிகாரியாக இருந்தவர். ஆட்சியும் கையில் இருந்தால், ஒரு காட்டு காட்டுவார் என்றுதான் தெரியவில்லை. பார்ப்போம்.

வார்த் புயல்:

வார்தா, வரதா, வல்லையா என்றெல்லாம் சொன்னாலும், நான் புயல்டா என்று ஒரு காட்டு காட்டி விட்டது. அந்த திங்கள் காலைதான் ஊரில் இருந்து எல்லோரும் நனைந்து கொண்டே சென்னை வந்தோம். தாமதம் ஆனதால், அலுவலக வண்டி போய் விட்டது. மழை பெய்ததால், எதற்கு என்று வீட்டிலேயே உட்கார்ந்தேன்.

மதியத்திற்கு மேல், ஆடிய ஆட்டத்தில் "தப்பிச்சோண்டா சாமி" என்றுதான் தோன்றியது. அன்று மாலை 6 மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பியவர்கள், விடியற்காலை 3 மணி, 4 மணிக்கெல்லாம் வீட்டிற்கு போய் சேர்ந்திருக்கிறார்கள். புயல் என்றால் வழக்கம் போல ஆந்திரா, ஒரிசா பக்கம் போய் விடும் என்று எண்ணியவர்களுக்கெல்லாம் தண்ணி காட்டி விட்டது. சென்னையில் இத்தனை மரங்கள் இருந்தனவா என எண்ணியவர்களுக்கெல்லாம் யுவகிருஷ்ணா பதில் அளித்துள்ளார்.

பொழுதுபோக்கு:

இபோது தினமும் அலுவலக வண்டியில் காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் பயணம் என்பதால், தினமும் ஒரு படம் பார்த்து விடுகிறேன். வீட்டிலும், இப்போது ஏர்டெல் இணைப்பு வாங்கி, உள்ள டேட்டாவை காலி செய்ய படமாக இறக்கித் தள்ளியாகி விட்டது. கலைக்கு மொழி கிடையாது என்பதால் மானாவாரியாக படம் தரவிறக்கம் செய்தாகி விட்டது.

ஆண்டவன் கட்டளை படத்திற்கு பிறகு, திரையரங்கமும் செல்லவில்லை. அதன் பிறகு வந்த படங்களின் விமர்சனங்கள் எதையும் பார்க்க வேண்டும் என்றே தோன்றவில்லை. விமர்சனங்கள் நன்றாக இருந்ததால், துருவங்கள் 16 படம் திரையரங்கம் சென்று பார்த்தோம். உண்மையிலேயே அருமை.

எப்போதும், யாரோ செய்யும் தவறுகளால், சம்பந்தமே இல்லாத நபர் பாதிக்கப்படுவார். சாலையில் திடீரென ஒருவர் திரும்பும்போது, பின்னால் வருபவர் பதறி நிற்க, அதன் பின்னால் வருபவர் அவர் மேல் இடித்து இருவரும் சண்டை போட்டுக் கொள்வார்கள். உண்மையில் காரணமான நபர் வீட்டில் இருப்பார்.

அதே போல, ஒரு மழை பெய்யும் இரவில் நடக்கும் சில சம்பவங்கள், காவல்துறையின் விசாரணை என 16 மணி நேரத்தில் நடக்கும் கதை. முடிவுறா அந்த வழக்கு, 5 வருடம் கழித்து எப்படி முடித்து வைக்கப்படுகிறது என்பதே கதை. தவற விடக்கூடாத படம். இயக்குனரின் வயது 22 என்பது மிக ஆச்சரியமான விஷயம். தயாரிப்பு அவரது பெற்றோரே என்பது இன்னும் ஆச்சரியம்.

அச்சம் என்பது மடமையடா படம் பற்றி மட்டும் சொல்ல விரும்புகிறேன். உண்மையிலேயே இந்தப் படத்தை படக்குழுவினர் முடித்து விட்டு போட்டுப் பார்த்தார்களா, இல்லை இன்னும் தாமதம் ஆனால் என்ன செய்வது என அப்படியே வெளியிட்டு விட்டார்களா என்றே தெரியவில்லை. ஏன் துரத்துகிறார்கள் என்பதற்கு காரணம் சொல்கிறார்களே, முடியவில்லை. 3 வருடங்களாக சிம்புவைத் தேடுவதைத் தவிர வேறு வேலையே இல்லையா? மேனன் அவ்வளவுதானா? 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' தலைப்பே படத்தின் விமர்சனத்தைக் குறிக்கிறது என விமர்சனம் வராமல் இருந்தால் சரி.

மற்றபடி, பிறமொழிபடங்களில் நிறைய மனதைக் கவர்ந்தன. அவற்றைப் பற்றி தனியாக ஒரு பதிவில் சொல்கிறேன். எல்லாம் நீங்கள் பார்த்தவையாகத்தான் இருக்கும். இருந்தாலும், அண்ணன் ஒரு பதிவு போடணுமே.

Sunday, November 13, 2016

பணமாற்றம் 1!1

ஏற்கனவே 110 பதிவுகள். 111க்கான சரியான தீனி கிடைக்காமல் இருந்தேன். இதோ மோடி சொல்லி விட்டாரே. ஆரம்பிச்சுட வேண்டியதுதானே. முதலிலேயே சொல்லி விடுகிறேன். நான் இந்தக் கட்சியையும் சேர்ந்தவன் கிடையாது.

நான் நினைக்கும் நன்மைகள் என்னவென்றால்,

கண்டிப்பாக கறுப்புப் பணம் வெளியில் வந்து விடும். எல்லாருடைய பணமும் அல்ல. யார் யாரெல்லாம், கணக்காளர்கள், தணிக்கையாளர்களை (ஆடிட்டருக்கு தமிழில் என்ன?) நம்பாமல், கட்டு கட்டாக சேர்த்து வைத்தவர்கள் மட்டும்.

உண்மையில் கறுப்புப் பணம் பற்றி பேச நமக்கு அருகதையே இல்லை. கட்ட வேண்டிய 10 சதவிகித வரிக்கே, தந்தைக்கு வாடகை கொடுக்கிறேன் என கணக்கு கொடுப்பது, சொந்த வீட்டில் இருந்து கொண்டு வாடகை வீடு என கணக்கு காண்பிப்பது, ஏமாற்றி வாங்கும் மருந்து பொருட்களின் ரசீதுகள் என்று எவ்வளவோ.

தெரிந்தோ, தெரியாமலோ கள்ள நோட்டை வைத்திருப்பவர்கள்.

பெரும்பான்மையான மக்களின் பணம் வங்கிகளுக்கு வந்து சேரும். நிறைய பரிமாற்றங்கள், பணம் மூலமாக அல்லாமல், மின்னனு முறையில் நடைபெறும்.

வேறு வழி இன்றியோ தினசரி கூலி வேலை செய்பவர்கள் கூட அரசின் கண்காணிப்பிற்கு உள் வந்து விடுவார். இதனால், தவறான வேலைகள் செய்து சம்பாதிப்பவர்கள் மாட்டுவர். 

வருமான வரி கட்டுபவர்கள் எண்ணிக்கை கூடும்.

ஆனால்.

என்னடா இழுவை என்றால், கீழ்க்காணும் காரணங்கள்தான்.

வெறும் 4 மணி நேரத்திற்கு முன், மக்களிடையே அறிவித்தது.

சரியான திட்டமிடல் இல்லை.

நாட்டில் சிறு வணிகர்கள்தான் அதிகம் என்று தெரிந்தும், அவர்கள் தினசரி காலையில் பணம் எடுத்து, பொருள் வாங்கி, வியாபாரம் செய்து, வாங்கிய பணத்தை மாலையில் திருப்பிக் கொடுத்து, லாபத்துடன் வீடுகளுக்கு செல்பவர்கள். அதிகளவில் பாதிக்கப்படப் போவது சாதாரண பொது மக்கள் என்று தெரிந்தும், இதை அவசர அவசரமாக செய்தது.

நான் ஒன்றும் பெரிய பொருளாதார நிபுணன் இல்லை. இருந்தாலும், எப்படி செய்திருக்கலாம் என்று யோசித்தவை.

முதலில், புது 500 ரூபாய் நோட்டை எப்போதும் போல உள்ளே விட்டிருக்கலாம். பொதுவாக (சரி சினிமாவில்), யாரும் கறுப்புப் பணமாக அல்லது பரிவர்த்தனையில் புது நோட்டை வாங்குவதில்லை. பழைய நோட்டுக்களையே வாங்குகிறார்கள். எனவே, இன்னும் கொஞ்ச நாள் கழித்து பழைய 500 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று சொல்லி இருக்கலாம். இது சற்றே மொக்கைதான்.

முதலில் புது 500 ருபாய் நோட்டுக்களையே மாற்றி இருக்க வேண்டும். ஒரு 2000 ருபாய் நோட்டை வைத்து ஒரு சாதாரண அத்தியாவசிய தேவைக்கு என்ன செய்ய முடியும். 1000 ரூபாய்க்கு பொருள் வாங்கி, 2000 ருபாய் நோட்டு கொடுத்தால், கடைக்காரர் சொல்வார், "உங்களுக்கே சில்லறை கொடுத்துட்டா, மத்தவங்களுக்கு நான் எங்க போறது" என்று. அதையேதான் வாடிக்கையாளரும் சொல்வார்.

இன்றோடு 5ஆவது நாள். இன்றும் சகஜ நிலை திரும்பவில்லை. நான் சென்னையில் மட்டும் சொல்கிறேன். இன்றும் கூட வங்கிகளில் வெறும் 2000 ருபாய் நோட்டையே தருகிறார்கள். 100 மற்றும் அதற்கு குறைவான நோட்டுக்கள் ஒரு சிலருக்கே கிடைக்கின்றன.

முதலில் ஒவ்வொரு வங்கியிலும் எத்தனை வாடிக்கையாளர்கள், நாளொன்றுக்கு எவ்வளவு வரவு என்று பார்த்து, அதற்கேற்றாற்போல பணம் அனுப்பி இருக்க வேண்டும். அல்லது, வங்கிகள் வந்த பணத்தை, அதற்கேற்றாற்போல, ஒவ்வொருவருக்கும் இவ்வளவு என்றாவது திட்டமிட்டிருக்க வேண்டும்.

சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ஒரு பெரிய வங்கிக்கு, நாளொன்றுக்கு 10 லட்ச ரூபாய்க்கு புது நோட்டு வருகிறது. அவர்கள் வங்கிக் கணக்கு உள்ளவர்களுக்கு மட்டும், 10000 கொடுக்கின்றனர். எனவே 100 பேருக்கு மட்டுமே கிடைக்கிறது. அதிலும் முதலில் செல்வோர், கெஞ்சியோ மிரட்டியோ 50, 100 ரூபாய் கட்டுக்களை வாங்கி விடுகின்றனர். கடைசியில் செல்வோருக்கு 2000 ருபாய் நோட்டுக்கள் மட்டுமே கிடைக்கிறது.

ஊடகங்களின் அனாவசிய பயமுறுத்தல்.

மோடி அறிவித்த உடனே, ஊடகங்களில் வந்த செய்தி, இனி 500, 1000 செல்லாது. "இவனுங்க நல்லா சொன்னாலே, நரித்தனமா இருக்கும். நரித்தனமாவே சொன்னா?" உடனே எல்லோருக்கும் பயம். சில பேர் அப்போதே கையில் இருந்த பணம் முழுவதையும் செலவு செய்த கதையும் நடந்தது. தெளிவாக "பயப்பட தேவையில்லை" என்ற விவரம் தெளிவாக சொல்லப்படவே இல்லை. மிக விவரமாக இருந்த வணிகர்கள், இதை சாதகமாக்கி நல்ல வியாபாரமும் செய்தார்கள்.

ஏற்கனவே செய்திகளில் கேள்விப்பட்டவரை, இரு குழந்தைகள் இந்தப் பண விஷயத்தில் உயிரிழந்துள்ளனர். பணமில்லாமல் இறப்பதே மிக கொடுமையான விஷயம். இதில் கையில் பணம் இருந்தும், இவ்வாறு நடப்பது என்ன சொல்ல.

80:20 என்ற கருத்து உண்டு. அதாவது நாட்டில் 80 சதவிகித செல்வம், 20 சதவிகித ஆட்களிடம்தான் உள்ளது. இன்னொரு 20 சதவிகித ஆட்கள் அன்றாடம் காய்ச்சிகள். இதில் நடுவே உள்ள 60 சதவிகித மக்கள், நடுத்தர மக்கள் (பிச்சை எடுக்கவோ, பிச்சை போடவோ வழியில்லாமல் [உபயம் மதி-தினமணி], முகப்புத்தகம், கீச்சுகளில் புரட்சி செய்பவர்கள், பிரபல பதிவர்கள்) மோடிடா, வல்லரசுடா, விஜயகாந்த்டா என்றெல்லாம் கூவுகிறோம்.

நாம் அனைவருமே ஒரு லட்சம் சம்பளம் வாங்கினாலும், அதில் கையில் பணமாக எடுத்து செலவு செய்வது மாதத்திற்கு 2000 கூட இருக்காது. எனவே நம்மால் கருப்பு பணக்காரர்களின் கஷ்டமும் தெரியாது, சாமானியர்களின் வலியும் புரியாது.

இதைப்பற்றி விகடனில் வந்த கட்டுரை. விகடன் கட்டுரையில் வந்தது போல இந்தப் பணக்காரனும் வந்து வரிசையில் நிற்கவில்லை. ஒன்றும் தெரியாதவர்கள், நடுத்தர வர்க்கம், இவர்கள்தான். ராகுல் காந்தி நின்றார். உடனே விளம்பரம் என்று சொல்லி விட்டனர்.

சில பேர் "இலவசம் கொடுக்கும்போது நிக்கலயா, ஜியோ சிம் வாங்க நிக்கலையா, இப்போ நிக்க வலிக்குதா. நாட்டுக்காக ரெண்டு நாள் பட்னி கெடந்தா ஒன்னும் ஆவாது" என்றெல்லாம் கேட்கிறார்கள். என்னத்த சொல்ல.

நமது அரசியலமைப்பு சட்டம் சொல்வது "1000 குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது". ஆனால், மோடியின் கொள்கையோ "1000 ஏழைகள் பாதிக்கப்பட்டால் கூட பரவாயில்லை. ஒரு கறுப்புப் பணக்காரனாவது மாட்ட வேண்டும்" என்பதுதான். "காரில் போகும்போது நாய் குறுக்கே வந்தால் அடிபடும்" என்றவர்தானே.

இது குறுகிய நேரம். இதற்குள் நாம் எதையும் எதிர் பார்க்க முடியாது. காத்திருப்போம். ஆனால், நாம் நினைக்கும் நன்மைகள் அனைத்தும் நடக்கும்போது, இந்தியாவில் ஏழ்மையே இருக்காது. ஏனென்றால் ஏழைகளே இருக்க மாட்டார்கள்.

Tuesday, October 25, 2016

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

"என்னடா ரொம்ப நாளா ஆளக் காணோமே, அப்படியே ஓடிட்டானா?" என்றெல்லாம் யோசித்தவர்களுக்கும், "தப்பிச்சோன் சாமி" என்று எண்ணியவர்களுக்கும், "பயபுள்ள நல்லாத்தானே எழுதினான், என்னாச்சோ பாவம்!" என்று கூட எண்ணியவர்களுக்கும் எனது நன்றிகள்.மீண்டு(ம்) வந்து விட்டேன்.

ஒன்றும் பெரிய விஷயம் எல்லாம் இல்லை. வேறு நிறுவனம் மாறி விட்டேன். நான் சேர்ந்த நேரம் "சிக்குனாண்டா" என்று சற்றே போட்டு தாளித்து விட்டனர். இப்போதுதான் மூச்சு விடவே நேரம் கிடைத்தது. கிடைத்த நேரத்தில், இந்தப் பதிவு.

"நீ அடிக்கடி மாத்திக்கிட்டே இருக்கற மாறி தெரியுதே" என்கிறீர்களா? என்ன செய்ய. அந்தப் புலம்பலை தனியாக ஒரு பதிவில் சொல்கிறேன்.

மெட்ரோ:

நிறுவனம் மாறிய பிறகு, தங்கமணி, மகளை எங்கேயும் கூட்டிப் போகவில்லையே, "காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை விடுமுறைகளில் கூட அவர்களை மட்டும் ஊருக்கு அனுப்பி விட்டோமே, கபாலி படத்திற்கு பின்னர், திரையரங்கமே போகவில்லையே" என பல எண்ணங்கள் வந்ததால், கடந்த வாரம் வெளியே கிளம்பினோம். "மெட்ரோ ரயில் வந்து வருஷமாச்சு, இன்னும் அதுல போன பாடில்லை" என்று எனக்கு(ம்) தோன்றியதால், விமான நிலையத்தில் இருந்து வடபழனி பயணம். சும்மா சொல்லக்கூடாது. கட்டணம் அதிகம் என்றாலும், அதற்கான மதிப்பு இருந்தது. "If you see, in America" என்று சொல்லியவர்கள் எல்லாம் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு உள்ளது.

வடபழனியில் விஜயா போரம் மால் போனோம். ரெமோ படத்திற்கு இடமில்லை. எனவே, ஆண்டவன் கட்டளை படம் பார்த்து விட்டு, சாப்பிட்டு விட்டு, அங்கே உள்ள குழந்தைகள் விளையாடும் இடத்தில, விளையாட வைத்து விட்டு வந்தோம். குழந்தைக்கு 4 வயது ஆகி விட்டதால், எல்லா இடங்களிலும் சீட்டு வாங்க சொல்லி விட்டனர். அன்று மட்டும் ஆனா மொத்த செலவு அரை நாளும், 1500/- ரூபாயும். வீட்டுக்கு வந்தவுடன் தங்கமணி சொன்னது, "இன்னும் 3 மாசத்துக்கு வெளியவே போகக் கூடாது".

திரைப்படங்கள்:


ஜோக்கர், குற்றமே தண்டனை என்று பல படங்களை, திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை. ஆனாலும், அவற்றை இன்னும் நான் பார்க்கவும் இல்லை. இந்தியாவில், திரையரங்கில் ஓடி முடித்த படங்களை, வீட்டில் நியாயமாக பணம் கட்டிப் பார்க்கும் வசதி வந்து விட்டதா என்று தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை, ஒரு மாதம் கழித்து, யூடியூபில் விளம்பரங்களோடு விடலாம். அதுவே வருமானத்திற்கு வழி வகுக்கும். அல்லது பொதுவாக ஒரு வங்கி கணக்கு தொடங்கலாம். ஜோக்கர் படம் போல, அதற்காக மட்டும் இல்லாமல், பொதுவாக ஒரு கணக்கு. படம் பார்த்தா, அதற்கு பணம் அனுப்பலாம். இல்லையா. சும்மா இருக்கலாம்.

எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்கள் வந்தபோது, என் பெண், சிவகார்த்திகேயனின் விசிறி. விஜயும் பிடிக்கும். ஆனால், ரஜினி முருகன் படத்திற்கு பிறகு என்னவோ பிடிக்காமல் போய் விட்டது. சலீம் படம் பார்த்த பிறகு, விஜய் ஆண்டனியும், சேதுபதி படம் பார்த்த பின், விஜய் சேதுபதி விசிறி ஆகவும் மாறி விட்டாள்.

நாங்கள் முதலில் ரெமோ படம்தான் போகலாம் என முடிவு செய்திருந்தோம். அந்த என் வேடத்தை எல்லாம் காட்டி, என் பெண்ணை சம்மதிக்க வைத்திருந்தேன், ஆனால், டிக்கெட் இல்லாததால், சேதுபதி படத்தில் வநத ஆள் என்று சொல்லி, ஆண்டவன் கட்டளை போனோம். ஆனால், என் பெண்ணால், அது விஜய் சேதுபதி என்பதை ஒத்துக்கொள்ளவே முடியவில்லை. இது அந்த ஆள் இல்லை என்று சாதித்து விட்டாள். விஜய் சேதுபதி, அந்த இடத்தில் வென்று விட்டார்.

படம் பரவாயில்லை. இருந்தாலும், இன்னும் கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருக்கலாம். 

சில திரைப்படங்களை பார்த்தவுடனே, "அடடே, நல்லா இருக்கே. இதைப் பத்தி ஒரு பதிவு போட்டா, இன்னும் நெறைய பேர் படம் பாப்பாங்களே" என்று தோன்றும். அல்லது அதனைப் பற்றி மற்றவர்கள் நன்றாக எழுதியதால், தரவிறக்கம் செய்தாவது பார்க்கத் தோன்றும் (மெட்ரோ, உறியடி, அப்பா போன்றவை). 

இன்னும் பல படங்கள் உண்டு. அவற்றை பார்த்தவுடன், "அய்யய்யோ, உடனே, இதப்பத்தி சொல்லி, மத்தவங்கள காப்பாத்தணும்" என்று தோன்றும். சில படங்களை தரவிறக்கம் செய்து பார்த்தால் கூட, "அட ச்சீ" என்று தோன்றும். அப்படிப்பட்ட படங்கள், வாய்மை, நம்பியார், அட்றா மச்சான் விசிலு, திருநாள் போன்றவை. "ப்ப்பா, முடியல, உங்களுக்கு காசு கொடுத்து பாக்க சொன்னா கூட பாக்காதீங்க".

இப்போதைக்கு அவ்ளோதான். ஆனாலும், உங்களை விட மாட்டேன்.

Wednesday, August 17, 2016

கபாலி - இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கலாம்!

கபாலி படம் அறிவிக்கப்பட்ட உடனே, எல்லோரையும் போல எனக்கும் எதிர்பார்ப்பு எகிறியது. ஏனென்றால், ரஜினியின் வெற்றிக்கு மற்றவர்களும், பெரிய பின்னணி பட்டாளமுமே காரணம் என்றுதான் நான் சண்டை போடுவேன். ஆனால், இதில் ரஜினி தவிர மற்றவர்கள் எல்லோருமே கிட்டத்தட்ட புதியவர்கள், (நாசர் உள்ளார் என்பது கூட படம் வந்த பிறகே எனக்கு தெரியும்), ரஜினி வயதான வேடத்தில் நடிக்கிறார் என்றதும், இன்னமும் எதிர் பார்ப்பு கூடியது.

பாடல்கள் வெளிவந்த பிறகு எல்லோரும் "நெருப்புடா, நெருங்குடா" என்று கூவிக் கொண்டிருந்ததை வெறுப்புடா என்று பார்த்தாலும், அந்தப் பாடல் பிடிக்கவே செய்தது. அதே போல சங்கர் (அய்யய்யோ கோச்சுக்குவாரோ) ஷங்கர் போல ரகசியம் எல்லாம் வைக்காமல், இன்னார் இன்னார் இந்த இந்த வேடங்களில்தான் நடிக்கிறார்கள், இவர்களுக்குள் என்ன சம்பந்தம் என்பதுதான் கதை என்றே தைரியமாக ரஞ்சித் ரொம்ப நாள் முன்பு கொடுத்த பேட்டி. அட என்று எண்ண தோன்றியது.

படம் வெளிவருவதற்கு முன் தாணு செய்த அலப்பரைகளைப் பார்க்கும்போது எரிச்சல் வந்தாலும், அவர் ஒரு வியாபாரி, அப்படிதான் செய்வார் என்று தெரியும். எனவே விட்டு விடலாம். என் முதல் நாள் முதல் காட்சி மற்றும் லிங்கா பட பாதிப்புகளால், படம் ஓரளவு ஓடிய பிறகு, கட்டணமும் சாதாரண நிலைக்கு வந்த பிறகே நான் பார்த்தேன்.

படத்தின் பலம் முதலில் ரஜினிதான். தேவையில்லாத துவக்கக் காட்சி இல்லை, தலையை திருப்பும்போதெல்லாம் "விஷ்க், விஷ்க்" என்ற இசை இல்லை. ஆடிப் பாடும் காட்சிகள் இல்லை. இன்னும் சொல்லப் போனால், அடக்கி வாசித்துள்ளார் எனலாம்.

சிலர் சொல்கிறார்கள், நிறைய நாள் கழித்து ரஜினிக்கு நடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் என. இன்னும் முத்துசிவா போன்றோர், அப்படி எல்லாம் இல்லை, அவர் எல்லாப் படங்களிலுமே தனது தேர்ந்த நடிப்பைக் காட்டியுள்ளார் என்கிறார்கள். ஆனால், அவையெல்லாம் ஊறுகாய் போல, இதில் கிடைத்த வாய்ப்புகள் நிறைய. குறிப்பாக மனைவி, மக்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள், மாயநதி பாடல் உள்பட.


பலவீனம் முதலில் திரைக்கதை. முதல் பாதி முடியும்போதே படம் முடியப்போகிறதோ என்று என்னும் அளவிற்கு இருந்தது. வெறும் 75 நிமிடங்கள்தான் முதல் பாதி, ஆனால், ரொம்ப நேரம் போல தோன்றியது. அந்த துப்பாக்கி சண்டையின் போது, ஒரு வேளை அந்த வெளிநாட்டு வில்லனும், கிஷோரும் இருந்திருந்தால், படம் அங்கேயே முடிந்திருக்கும். அப்பாடா என்றிருக்கும். சரி பரவாயில்லை என இடைவேளை முடிந்து வந்தால், ரஜினி சவால் விடுகிறார். "அட, இப்போ இடைவேளை விட்டிருந்தா நல்லா இருக்குமே" என்று எனக்கு மட்டும்தான் தோன்றியதா என தெரியவில்லை.

அதே போல முதல் பாதியில் நிறைய பாத்திரங்கள். யார் யார் என்றே புரியவில்லை. நான் ரொம்ப நேரம் கலையரசன் நாசரின் பையன் என்று நினைத்தேன், பின்னர்தான் தெரிந்தது அது பேரன் என்று. அட்டக்கத்தி தினேஷின் பாத்திரமே தேவையில்லை. இது போல பல குழப்பங்கள். அதே போல முதல் பாதியில் மனைவியை தேடுவது வந்திருந்தால் ஒரு வேளை இரண்டாம் பாதி வேகமாக முடிந்திருக்குமோ என்னவோ. ஒரே நாளில் கெட்டவர்களை அழிப்பதை, முன்னமே செய்திருக்கலாமே என்றெல்லாம் தோன்றியது.

ஆனாலும், எல்லாவற்றையும் தாண்டி, ரஜினி என்றால் இப்படித்தான் என்று எண்ணுபவர்கள் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்த்தால், தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். படத்தில் இன்னொரு ஆச்சரியம், 'டைகர்' வேடத்தில் வருபவர், மெட்றாஸ் படத்தில் வரும் 'ஜானி' வேடத்தில் நடித்தவர் என்பதுதான். "நடிகன்டா, நீ நடிகன்டா".

படத்தைப் பற்றிய அரசியல் எதுவும் நான் பேசவில்லை. இருந்தாலும் சிலவற்றை மட்டும் கூற விரும்புகிறேன். பொதுவாக மலேசிய வாழ் தமிழர்கள், இங்கிருந்து குடிபெயர்ந்து சென்ற தமிழர்களை மதிப்பதில்லை, 'ஊர்நாட்டான்' என்றெல்லாம் அழைப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். படத்தில் அது போன்ற அரசியல் எதுவும் காட்டப்படவில்லை. சரி கதை மலேசிய வாழ் தமிழர்கள் பற்றி மட்டும் வருவது, விட்டு விடலாம். மலேசிய வாழ் தமிழர்கள் என்ன கஷ்டப்படுகிறார்கள் என்றும் தெரியவில்லை. ஒரே காட்சியில் வந்து, போய் விடுகிறது.

ஒரு வேளை நன்றாகவே காண்பித்திருந்தாலும், நம் மண்டைக்கு அது உரைக்காது. அனேகன் படத்தில், பர்மாவில் வாழ்நத தமிழர்கள் எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தப்பட்டு, நம்மூருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள் என்று காட்டுவார்கள். நாம் யாரும் அதைப்பற்றி மதிக்கவேயில்லை. அதே போல இதையும் கடந்திருப்போம்.

படத்தின் இறுதிக்காட்சியில் இது நாயகன் போல போல இருக்குமா அல்லது தேவர் மகன் மகன் போல இருக்குமா என்ற குழப்பம் எனக்கு வந்தது. உண்மையில் அப்படி ஒரு முடிவு வைத்ததில் மக்கள் மற்ற குறைகளை மறந்து "என்ன நடந்திருக்கும்" என்ற குழப்பத்திலேயே இருப்பார்கள் என்றுதான் வைத்துள்ளார்கள் போல.

இந்தக் கருத்துகள் யாவும் என்னுடைய ஆதங்கமே. எத்தனை பேர் முதலில் வந்த அந்த திருட்டு விசிடி காணொளியைப் பார்த்தார்கள் என்று தெரியவில்லை. நான் ஒரு 45 நிமிடங்கள் பார்த்திருப்பேன். அதில் நன்றாக கவனித்தீர்கள் என்றால், முதல் 10 நிமிடங்கள் திரையரங்கில் ஒரே ஆரவாரமாக இருக்கும். அதற்குள்ளாகவே, டீசரில் வந்த காட்சிகள் எல்லாம் வந்திருக்கும். அதன் பின், அனைவரும் மிக அமைதியாக பார்ப்பார்கள். ஒரு சப்தமும் இருக்காது. 10 நாட்கள் கழித்து நான் திரையரங்கில் பார்க்கும்போதும் அதே நிலைதான்.

ரஜினி அவர்களே. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது, இதே போல நடியுங்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், ரஜினியை ரொம்பவும் கஷ்டப்பட வைக்காமல், அதே சமயம் வணிக நோக்கிலும் எடுக்க சரியான ஆள் ஹரிதான். ஒரு முறை முயன்று பாருங்கள். 

ரஜினியின் தற்போதைய மதிப்பிற்கு, அந்தளவிற்கு கனமான கதாபாத்திரமும் மிகவும் முக்கியம். அதே போல ரஜினி முழுவதும் கெட்டவனாக ஒரு படத்தில் , (நாயகனாக அவரே நடிக்காமல்) வர வேண்டும், ஏனென்றால், வில்லனுக்கு என ரசிகர் பட்டாளத்தை, முதலில் உருவானது அவருக்குத்தான்.

சந்திரமுகி படத்தில், 'ரா ரா' பாடலில் அவர் வரும்போது, 'ஜோதிகா எப்படி?' என ஒரு ராஜகுரு போன்ற ஒருவரிடம் கேட்பார். அதற்கு அவர் சைகையில் சொல்லும் பதிலும், அதற்கு ரஜினி கொடுக்கும் எதிர்வினையும் செம. எந்திரன் படத்தில், அது ஓரளவிற்கு திருப்தி அடைந்தாலும், ரஜினியால் இன்னும் முடியும். காத்திருப்போம்.

Thursday, June 9, 2016

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

சூடான செய்திகள் ஒன்றுமில்லை. ஆறிய பழங்கஞ்சிதான்.

தேர்தல் முடிவுகள்:

ஓரளவு எதிர்பார்த்ததுதான். எண்ணெய் சட்டியா, அடுப்பா என்பதுதான் சந்தேகமே. ஆனாலும் நம் மக்கள் மிக மோசம். என்ன செய்ய. தொங்கலில் விடுவார்கள் என்று பார்த்தேன். எனக்கென்னவோ புலியின் நகத்தைப் பிடுங்கி பல்லில்லா சிங்கத்திற்கு அதைக் கட்டியது போல உள்ளது. (புரிஞ்சுதா?).

அதிமுக 200ல் வென்று திமுக காணாமல் போயிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், திமுக முன்னேறி வந்துள்ளது, அதிமுக சற்றே பின்னடவை சந்தித்துள்ளது. "நாங்கதான் ஆளுங்கட்சி" என்பவர்களைப் பார்த்தால் நினைவுக்கு வருவது "ஏழாவது பாசுன்னே, பத்தாப்பு பெயில்னே".

ஆனாலும், நான் சொன்னது போல பல இடங்களில் NOTA வெற்றி வாய்ப்பை மாற்றியுள்ளது. இன்னும் குறிப்பாக சொன்னால், 22 தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நோட்டா வாக்குகளையும் விட குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். அதில் அதிமுக 14ல் வெற்றி, திமுக 8ல் வெற்றி. அதுவரை சந்தோஷம். இரு கட்சிகளும் அதை உணர்ந்து கொண்டால் நல்லது.

24 விமர்சனம்:

அப்படி ஒன்றும் ஆஹா ஓஹோ என்றெல்லாம் இல்லை. இதுவரை வந்த காலப் பயண படங்களை விட இதில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும், கேவலமாக இருந்தது. இதைப் பற்றி பதிவர் முத்துசிவா தெளிவாக விளக்கியுள்ளார். இருந்தாலும் மாசு, அஞ்சான் படங்களுக்கு இது பரவாயில்லை. "என்னடா இப்படி சொல்ற" என்பவர்களுக்கு, "நான் ஒரு பிரபல பதிவர்ங்க, எனக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம்"

இளையராஜா:

தேசிய விருது சர்ச்சை பற்றி எனது கருத்து. பழசி ராஜா படத்திற்கு விருது கொடுத்த போதே ராஜா அதை வாங்கவில்லை. அப்போதும் கூட தனித்தனியாக கொடுப்பதை எதிர்த்தார். இப்போது ஏன் அதை பெரிய விஷயமாக்கினார்கள் என தெரியவில்லை. எனது சில கருத்துகள். கங்கை அமரன் முந்திக்கொண்டு ராஜாவை வம்புக்கிழுத்தது பொறாமையா என தெரியவில்லை. ஆனாலும், தீயை அணைக்க எதிர்ப்பக்கம் தீப்பற்ற வைப்பது போல எனக்குத் தோன்றியது.

பாடல்கள் முதலில் அது வரும் காட்சிகள் மட்டும் சொல்லப்பட்டு மெட்டு போடப்படுகிறது. ஆனால், பின்னணி இசை, படம் முடிந்த பிறகு போடுவது. எனவே, அதில் இன்னும் அதிக ஈடுபாட்டுடன் இசையமைக்க முடியும். எனவே, பின்னணி இசைக்கு தனியாக விருது கொடுப்பது தப்பில்லை.

இசைக்கு கட்டாயமாக இரண்டு விருதுகள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பாடல்கள் இல்லாத அல்லது நிஜமாகவே பின்னணி இசை நன்றாக இருந்தால், கண்டிப்பாக தனியாக கொடுக்கலாம்.

கமல்:

சபாஷ் நாயுடு படத்திற்கு எதிர்ப்பு. மக்களுக்கு திரையில் நல்லவர்களாக நடிப்பவர்களைப் பிடிக்கிறது. நிஜ வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் கவலை இல்லை போல. படத்தில் சிறு குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பவர்களை ஓட ஓட அடிக்கும் நாயகன், சாலையில் அவர்களுக்கு ஐந்து பைசா கொடுத்தாரா என்று தெரியாது.

நிஜத்தில், மகள்களின் சான்றிதழ்களில் சாதி, மதம் என்ற இடங்களில் இல்லை என்ற சொன்னவர், திரையில் வரும் கற்பனைப் பாத்திரத்திற்கு சாதிப் பெயரை வைத்து விட்டார் என்று குதிக்கிறார்கள். தேவர் மகன் படத்தால் பெரிய பிரச்சினை வந்தது என நிறைய பேர் சொல்வார்கள். விவரம் தெரியாத நிறைய பேர் எண்ணுவது "அந்த படத்துல அப்படி ஒன்னும் இல்லையே" என்றுதான்.

ஆனால், அந்தப் படத்தில் வரும் பாடல், அதைப் பாடிய நபரின் சாதி, அதை வைத்து உயர் சாதியினர் தாழ்த்தப்பட்டோரை செய்த கிண்டல் கேலிகளும் ஒரு காரணம். உண்மையில் போராட வேண்டியது முத்தையா, பிரபாகரன் போன்ற இயக்குனர்களிடம்தான். கமலிடம் அல்ல.

ரொம்ப நாள் முன்பு "யாருடா மகேஷ்" என்ற படத்தின் டிரைலர் (மட்டும்) இணையத்தில் சக்கை போடு போட்டது. அதில் ஒரு வசனம் வரும் "ரத்னவேலுவை சுருக்கமா ரேண்டின்னு கூப்புட்டா, குழந்தைவேலுவை என்ன கு​​_டின்னு கூப்பிடுவீங்களா?" என்று.


உடனே, திரை உலகில் சில பேர் இது ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவை நக்கல் செய்வது போல உள்ளது எனக் குதிக்க, படத்தின் இயக்குனர் சொன்னார், "இந்த வசனத்திற்கு குழந்தவேலுதான் கோபப்படனும், ஏன் ரத்னவேலு குதிக்கிறார்?" அதே போல உண்மையில் நாயுடுக்கள் தான் போராட்டத்தில் இறங்க வேண்டும் கமல் தங்களை மட்டம் தட்டும் விதமாக படம் எடுக்கிறார் என.

அவ்வளவுதாங்க. மறுபடியும் ஏதாவதுன்னா ஒரு பதிவு போடுறேன்.

Friday, May 13, 2016

யாருக்கு வாக்களிக்கலாம்?

ஏற்கனவே தமிழக அரசியல் கட்சிகள் பற்றிய எனது பார்வை. அதைப் படித்து விட்டு இங்கே வந்தால் நலம்.

சரி இனி யாருக்கு வாக்களிக்கலாம் என்று யோசிப்போம்..

நோட்டா (NOTA):

'சார். இது வேஸ்ட். 49ஓ படம் பாத்தீங்களா. அதுல கவுண்டமணி சொல்வாருல்ல. இதுல நாம ஓட்டு போட்டா, கெட்டவனுக்கு போடலேன்னு வேணா ஆறுதல் அடையலாம். அதுக்கு யாருக்காவது சுயேச்சைக்கு போடலாம்" என்கிறார்கள். "எப்படி இருந்தாலும் 100க்கு 99 பேர் நோட்டாவுக்கு போட்டாலும், அந்த ஒரு ஓட்டு யாருக்கு விழுதோ, அவங்கதான் ஜெயிச்சவர் அப்டிங்கும்போது ஏன் இந்த நோட்டா" என்ற கேள்வியும் வரலாம். கொஞ்சம் பொறுங்கள். படியுங்கள்.

இப்போது விஜயகாந்திற்கு ஏன் இத்தனை தேவை என்று தெரியும் அல்லவா. அதையே நாம் ஏன் நோட்டாவிற்கு உருவாக்கக் கூடாது? அனைவருமே நோட்டாவிற்கு போட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால்,ஒரு தொகுதியில் 100 ஓட்டுகள், 4 வேட்பாளர்கள் முறையே 25, 20, 15, 10 ஓட்டுகள் வாங்குகிறார்கள். 10 பேர் ஓட்டே போடவில்லை. 20 பேர் நோட்டாவிற்கு போடுகிறார்கள். இப்போது வெற்றி வாய்ப்பை மாற்றியதில் முக்கிய பங்கு நோட்டா.

ஒரு கட்சி வேட்பாளர் இன்னொருவரின் வெற்றி வாய்ப்பைப் பறிக்கிறார் என்றால், அவரை, அந்தக் கட்சியை சரிக் கட்டுவது சுலபம். நோட்டாவில் வாக்களித்தவர்களுக்கு? இதே போல நிறைய தொகுதிகளில் நோட்டா கணிசமான வாக்குகள் வாங்கினால்? வேறு வழியில்லை. மக்களுக்கு ஏதாவது செய்தால்தான் அடுத்த முறை வேட்பாளர்களுக்கு ஓட்டு விழும். இல்லையென்றால், நோட்டாவிற்கே போகும் என்ற பயம் வரும். வர வேண்டும். இன்னும் குறிப்பாக சொன்னால், இளைஞர்கள் அனைவருமே நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும்.

பொதுவாக தாத்தா, பாட்டி இருவரும் சின்னங்களுக்கே வாக்களிப்பார்கள். பெற்றோர் கட்சி பார்த்து வாக்களிப்பார்கள். அதாவது பெரிய கட்சி போட்டியிடவில்லை என்றாலும், அதன் கூட்டணி கட்சிக்கு வாக்களிப்பார்கள். நானும், தங்கமணியும் (மிரட்டியாவது, அதாவது காலில் விழுந்து) நோட்டாவிற்கு.

"சொல்றது எல்லாம் சரிதாம்பா, ஆனா, நீ சொன்ன மாதிரி இந்த தேர்தலில் நோட்டாவுக்கு போட்டா இப்ப எதுவும் நடக்காதுல்ல, அடுத்த தேர்தலில்தான ஏதாவது நடக்கும்" என எண்ணாதீர்கள். அடுத்து உள்ளாட்சி தேர்தல் வரும், 3 வருடங்களில் பாராளுமன்ற தேர்தல் வரும். நல்லது நடக்கும் என காத்திருப்போம். இத்தன வருஷம் பொறுத்தாச்சு. இன்னும் கொஞ்ச நாள் பாப்போமே.

வேட்பாளர்:

"அதெல்லாம் முடியாதுங்க. நான் யாருக்காவது ஓட்டு போட்டே ஆகணும்" என்று விருப்பமா. முதலில் உங்கள் தொகுதியில் 35 வயதுக்கு உட்பட்ட, ஓரளவு படித்த ஆள் உள்ளாரா என்று பாருங்கள். அவரிடம் இப்போது உள்ள சொத்து, அவர் சம்பாதித்து வாங்கியதா என்று பாருங்கள். "யோவ், எங்களுக்கு வேற வேல இல்லையா" என முனகாதீர்கள். சில வாரிசுகள் நிற்கிறார்களே, அவர்களைப் பற்றி சொன்னேன். இருந்தால் அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, நம்பி ஓட்டளிக்கலாம். மேஜையை தட்டினாலும், கொஞ்சம் நன்மை கிடைக்க வாய்ப்பு உண்டு.

பாமக, நாம் தமிழர் கட்சிகளில் சிலர் உள்ளனர். மொத்த வேட்பாளர் விவரங்கள் தொகுதி வாரியாக இங்கே பார்க்கலாம். பார்த்து முடிவெடுங்கள். எங்கள் ஊரில் கூட நாம் தமிழர் வேட்பாளருக்கு போடலாமா என்ற எண்ணம் உள்ளது. பார்ப்போம்.

கட்சி:

"முடியாது, நான் ஏதாவது கட்சி ஆளுக்குத்தான் போடுவேன்" என்பவரா. சரி, அப்படியென்றால் மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களியுங்கள். அவசரப்படாதீர்கள். ஏன் என்று சொல்கிறேன். டெல்லியில் மாற்று சக்தி என்று கருதப்பட்ட ஆம் ஆத்மி என்ன சாதித்தது, இளம் ரத்தம் என்று வந்த அகிலேஷ் யாதவ் என்ன செய்தார், மோடியாலேயே முடியலாமா, விஜயகாந்த் செய்வாரா என்றெல்லாம் உடனே யோசிக்க வேண்டாம். விஜயகாந்தோ, மக்கள் நலக் கூட்டணியோ ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்பதுதான் உண்மை.

முதலில் இது ஒரு கூட்டணி ஆட்சியாக அமையும். எப்படியும் ஐந்து வருடங்கள் தாக்குப் பிடிக்காது. மக்களுக்கு நல்லது நடக்கிறதோ இல்லையோ, கெட்டது அதிகம் நடக்காது. இது பெரிய கட்சிகளுக்கு ஒரு பாடமாக அமையும். அதே போல திமுக, அதிமுகவிற்கு அடுத்துள்ள பெரிய கட்சி என்பது இதுதான். அது மட்டுமில்லாமல் அதிகாரம் ஓரிடத்தில் குவியாமல் இருக்கும். கூட்டணியின் பலமும், விஜயகாந்தின் தலைமை லட்சணமும் தெரியும். அதை விட முக்கியம், கருணாநிதி, ஜெயலிதா இருவரை விட நல்லதாகவோ, கெட்டதாகவோ வைகோ, விஜயகாந்த் இருவரும் மக்களிடையே தேர்தல் இல்லாத போது கூட ஓரளவு தொடர்பில் இருந்தனர்.

ஏன் பாமக, நாம் தமிழர் வேண்டாம் என்றால், இதேதான் காரணம். இரு கட்சிகளும், தங்களுக்கு சாதகமான தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு, வெற்றி பெற்று, அந்த தொகுதிகளை முன்னேற்றி, அதை வைத்து அடுத்த தேர்தலில் வாக்கு கேட்கலாம். பாமகவுக்கு அந்தத் தகுதி குறைந்து விட்டது. "இல்லீங்க, ஜெயிச்சா முதலமைச்சர்தான்" என்றால் ஒன்றும் செய்ய முடியாது. நாம் தமிழருக்கு வாக்களிக்கலாம். ஆனால், நாம் கொடுத்த அந்த வாக்கு சதவிகிதம், அடுத்தடுத்த தேர்தல்களில் விலை போகாமல், மீண்டும் தனியாகவே கம்பீரமாக இருந்தால், அடுத்த முறை யோசிக்கலாம்.

ஒரு வேளை, தொங்கு சட்டசபை அமைந்து, இவர்களில் யாரவது திமுக அல்லது அதிமுகவிற்கு ஆதரவு அளித்தாலும் இதேதானே என்ற போல கூட்டணி ஆட்சிதானே என்ற கேள்வி வரலாம். ஆட்சியில் கூட்டணி கிடையாது என அவர்களே சொல்லி விட்டார்கள். அது மட்டுமின்றி, அவர்கள் யாரையும் விலைக்கு வாங்க தயாராக இருப்பார்கள். பல அசிங்கங்கள் நடக்கும்.

சில எண்ணங்கள்:

தேர்தல் அறிக்கை என்பது குழந்தைகளைத் தூங்க வைக்க சொல்லும் கதை போன்றது. எனவே, வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டு அதை நம்ப வேண்டாம். தமிழகத்தின் இப்போதுள்ள கடனை குறைப்பது பற்றியோ அடைப்பது பற்றியோ யாரும் தெளிவாக எதுவும் சொல்லவில்லை. தமிழகத்தின் முக்கிய பிரச்சினை சாதி பற்றி யாரும் சொல்லவில்லை. அதை விட முக்கியம் எல்லா அறிக்கைகளும் மறைமுகமாக 'நிபந்தனைகளுக்கு உட்பட்டவை'.

அனைத்து கட்சிகளும் தேர்தல் நேரத்தில்தான் மக்களோடு உறவாடும். மற்ற நேரங்களில் வெறும் அறிக்கைதான். எல்லா பத்திரிக்கைகளின் மின்னிதழ்கள் இணையத்தில் உள்ளன (2006 முதல்). ஓய்வு நேரத்தில் அவ்வப்போது படித்துப் பாருங்கள். கண்டிப்பாக நான் சொல்வதை ஒப்புக் கொள்வீர்கள்.

உண்மையில் நியாயமாக கல்விக்கும், விவசாயத்திற்கும் கடன் வாங்கியவர்கள் அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என எதிபார்க்க மாட்டார்கள். மாறாக, கொஞ்சம் தவணையை வேண்டுமானால் நீட்டிக்க எண்ணுவார்கள். 90 சதவிகித கல்வி மற்றும் விவசாய கடன்கள் வட்டி குறைவு என்பதால் மற்ற தேவைகளுக்காகவே வாங்கப்படுகிறது. எனவே, சரியாக விசாரித்து தேவைப்பட்டவர்களுக்கு மட்டும் தள்ளுபடி செய்தால் வரிப்பணம் வீணாகாது.

இன்னொரு முக்கிய விஷயம். ஒரு வேளை நீங்கள் இப்போது உள்ள சட்டமன்ற வேட்பாளருக்கு, அல்லது ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்தாலோ அவர்கள் தண்டிக்கப்பட்டதாக எண்ண வேண்டாம். இவ்வளவு நாள் சம்பாதித்ததை இனி அதே வேகத்தில் சம்பாதிக்க முடியாது. அவ்வளவே. வந்தவரை லாபம். மற்றபடி பிடுங்கியதை திரும்ப வாங்கவே முடியாது.

நம் சமுதாயத்தில் இரண்டு கோடுகள் உண்டு. மேல் கோட்டுக்கு மேலே இருப்பவர்கள் வெயில் படாதவர்கள். எதையும் வளைக்கும் திறனுடையவர்கள். அரசியல்வாதிகள் அல்லது அவர்களைத் தீர்மானிப்பவர்கள். கீழ்க் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள், அன்றைய தினம் கழிந்தால் போதும். அவர்களே அடி மட்ட தொண்டர்கள். அவர்களை நம்பித்தான் கட்சி. அப்படி இல்லாதவர்கள் தேர்தலின்போது பணம் வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு வாக்களிப்பவர்கள்.

பெரும்பாலும் இவர்கள் வாக்கு திமுக அல்லது அதிமுகவிற்கே இருக்கும். வேட்பாளர்கள் கொடுக்கும் பணம் அப்போதைக்கு ஓரிரு நாட்கள் உதவுவதால், உடனே தேர்தலில் அவர்களுக்கு வாக்களித்துவிடுகிறார்கள் (இது என்னுடைய பொதுவான கருத்து)

இந்த இரண்டு கோட்டிற்கும் நடுவில் உள்ளவர்கள் தட்டிக் கேட்கவும் துணிவில்லாது, தேர்தலில் நிற்கவும் பயந்து, அடையாளம் கூட இல்லாமல் என்னைப் பதிவு எழுதுபவர்கள். இவர்களுக்கு யார் வந்தாலும் கவலை இல்லை, அவர்களால் இந்த மக்களுக்கு நன்மையையும் இல்லை, தீமையும் இல்லை. நம்மைப் போன்றவர்களே இந்த வெற்றியை தீர்மானிப்பவர்கள். அவ்வப்போது ஞானம் வரும். இதே போல பதிவிடுவோம். முகப்புத்தகத்தில் பகிர்வோம். அவ்வளவே. அதைத் தாண்டி ஒன்றும் கிழிக்க மாட்டோம். நமக்கு உள்ள ஒரே ஆயுதம் ஓட்டுதான்.

ஏன் வாக்களிக்க வேண்டும்:

"எதுக்கு சார் ஓட்டு போடணும், இவனுங்க திங்கறதுக்கா", " நான் ஒருத்தன் ஓட்டு போடலேன்ன குடியா முழுகிடும், எப்படி இருந்தாலும் ஒரு நல்லவன் வரப்போறதில்ல" என்றெல்லாம் புலம்ப வேண்டாம். சிறு துளிதான் பேரு வெள்ளம். உங்களை போலவேதான் இன்னும் பல பேர் எண்ணுவார்கள். அந்த எண்ணங்கள் ஒரே மாதிரிதான் இருக்கும், ஆனாலும் யாரும் வெளிக்காட்டாமல் "நாம சொல்றத எவன் கேப்பான்?" என நமக்குள்ளேயே புலம்பிக் கொள்கிறோம்.

நானே 2014 பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை. காரணம் அது நடந்தது வியாழன் அன்று. எனது வாக்கு சொந்த ஊரில் உள்ளது. வெள்ளியுடன் சேர்த்து 4 நாட்களுக்கு எல்லோரும் விடுமுறை கேட்டால் நிறுவனம் என்ன செய்யும்? போக முடியவில்லை. ஆனால், இந்த முறை அதனால்தான் திங்களன்று வைத்துள்ளார்கள் என நினைக்கிறேன். இதையும் தாண்டி வெளியூரில் உள்ள வாக்காளர்களுக்கும் தபால் ஓட்டு வைத்தால் இன்னும் நலம்.

ஓட்டுக்கு பணம்:

திமுக, அதிமுக இரண்டு விளம்பரங்களிலும் நடித்த கஸ்தூரி பாட்டி நடித்த ஒரு நல்ல தேர்தல் விளம்பரத்தைப் பாருங்கள். அதை வைத்தே முடிவு செய்யலாம். எனக்கென்ன அது சொல்ல வருகிறது என்றால், பணம் வாங்கிக்கொண்டு அவனுக்கு போட வேண்டாம் என்பது போல உள்ளது. மற்றபடி உங்கள் விருப்பம்.


சரிங்க. ஓட்டு போட ஊருக்கு போறேன். சிந்திச்சு செயல்படுங்க. தேர்தல் நாளையும், அடுத்த 5 வருடங்களையும் மட்டும் நினைக்காமல், அடுத்த 50 வருடங்களிலாவது முன்னேற என்ன வழி என யோசித்து வாக்களியுங்கள்.

"என் ஒருத்தன் ஓட்டு என்னத்த மாத்திட போகுது" என்று எண்ணாதீர்கள். நம் படுக்கையறையில் ஒரு செங்கல் இல்லையென்றால் என்ன வீடா இடிந்து விடும்?