Saturday, February 6, 2010

நான் படமாக்க விரும்பும் கதைகள் - 2

நான் முதலில் படமாக விரும்பிய கதையை படித்திருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த பதிவைப் படிக்கலாம். முதல் கதையைப் போல இதுவும் த்ரில்லர், ஆக்ஷன் கதைதான். இதை படமாக எடுத்தால், கண்டிப்பாக பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டும். நிறைய எதிர்ப்பு வரவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, படத்திற்கு விளம்பரம் கிடைக்கும். மற்றபடி படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லவும்.

காசனோவா '99:

எண்டமூரி வீரேந்த்ரநாத் என்ற தெலுங்கு கதையாசிரியரின் கதை. (தமிழ் மொழிபெயர்ப்பு கௌரி கிருபானந்தன்). இவர் படமெல்லாம் கூட இயக்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட பனிரெண்டு வருடங்களுக்கு முன் வந்த கதை. ஒரு சதவிகிதம் வரலாற்றையும், மிச்சம் கற்பனையும் கலந்த நாவல். படிக்கும்போது கீழே வைக்க முடியாமல் ஒரே மூச்சில் படித்த கதை. எனக்கு சரியாக, கோர்வையாக கதை சொல்ல வராது. எனவே, சற்றே பொறுத்துக் கொள்ளவும்.

1971 டிசம்பர் 16, பாகிஸ்தானின் படைகளைத் தோற்கடித்து விட்டு, பங்களாதேஷை, சுதந்திர நாடாக்குகிறது இந்தியா. அவமானத்தால் கொதிக்கும் பாகிஸ்தானோ, சதி வேலைகளில் ஈடுபட்டு, பங்களாதேஷின் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானைக் கொன்று விடுகிறது. மேலும், இந்தியாவையும் காஷ்மீரையும் பிரித்து தன்னுடன் இணைக்க விரும்புகிறது. (இத்துடன் வரலாறு முடிகிறது). அதற்காக ஒருவனைத் தேர்ந்தெடுக்கிறது. அவனுடைய திட்டமும் அபாரமாக இருக்கிறது. அதன் மூலம் எப்படியும் அடுத்த நாற்பது வருடங்களில் எப்படியும் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துவிடலாம் என்று நம்புகிறது. (அதாவது புட்டோ மட்டும்) அவன் ஒருவனை மட்டும் நம்பி, கிட்டத்தட்ட, நூறு கோடியை கொடுத்து, அவனை 1975ல் இந்தியாவுக்கு அனுப்புகிறார் புட்டோ. அவன் பெயர் ஃபாக்ஸ் (Farrook Om Xeviour - FOX).

இப்போது டைட்டில்ஸ்.

அதன் பின் பாகிஸ்தான், இந்தியா இரண்டிலும் நிறைய அரசியல் மாற்றங்கள். காலமும் யாருக்கும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. புட்டோ தூக்கிலடப்படுகிறார், ஜெனரல் ஜியோ விமான விபத்தில் இறக்கிறார், பெனாசிர், நவாஷ் என பாகிஷ்தானிலும், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மற்றும் பலர் என்று மாறி, தற்போது ஸ்ரீ வாத்சவா பிரதமராகி உள்ளார். பாக்ஸ் பற்றிய விஷயங்களும் பாக்கின் அதிகார வர்க்கத்தில் மறக்கப்படுகின்றன. இதெல்லாம், பின்னணியில் காண்பிக்கலாம்.

டைட்டில்ஸ் முடிந்தவுடன், டாக்டர் மதுஷாலினி, B.D.S போர்டு முன் காமரா நிற்கிறது. சென்னையில், திருவல்லிக்கேணியில், ஒரு சந்தில் உள்ள, அழகான பல டாக்டர். தானுண்டு, தன் வேலையுண்டு, உலகத்தில் அனைவரும் நல்லவர்களே என்று நம்புகிற அப்பாவி. தற்போது ராஜேஷ் என்ற பணக்கார இளைஞன் மட்டும் பின்னால் துரத்துகிறான். மற்றபடி பிரச்சினை எதுவுமில்லை.

அடுத்து, மாந்தாதா (Mandhatha). பிரதமரின் முதன்மை பாதுகாவலன். கடமைக்காவே வாழ்பவன். அதனாலேயே, அம்மாவின் முதுத்தண்டு உடைபட்டது, மனைவி பிரிந்து விட்டாள், உடன் பிறந்த தம்பி எங்கோ ஓடி விட்டான். ஆனாலும், கடமைக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவன்.

ஸ்வப்னமித்ரா. கடமைக்காக அம்மாவின் உயிரையும் பலியிட துணிந்த அண்ணனை விட்டு, தப்பி ஓடி வந்து, எப்படி எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு விமானப் பயிற்சி முடித்து விட்டவன். இவன்தான் காசனோவா (Casanova). எந்த பெண்ணும் திரும்பிப் பார்க்கும்வரை பின்னால் அலைவது, பார்த்தவுடன் கழட்டி விட்டு, வேறொரு பெண்ணை தேட வேண்டியதுதான். அவனது அடுத்த குறி, மது ஷாலினி.

இந்த மூவரையும் முக்கியமாக வைத்து, எப்படி பாக்ஸ் யார் என கண்டு பிடித்து நாட்டை காப்பாற்றுகிறார்கள் என்பதை, சூடாகவும், சுவையாகவும் சொல்லியிருப்பார். இவர்கள் தவிர, நிறைய கதாபாத்திரங்களை கதையில் நுழைத்திருப்பார். அவை, அங்கங்கே கதையின் திருப்பத்திற்கு உதவும். ஆனால், நாவலில் அவர்களில் முழு பின்னணியை விவரித்திருப்பார். அவற்றை தவிர்த்து விடலாம். உண்மையாகவே, கதையை முழுதாக படித்தீர்கள் என்றால், என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று உங்களுக்குப் புரியும்.

பல சம்பவங்கள் (இறுதிக்காட்சி உட்பட), பாகிஸ்தானில் நடக்கும். அது மட்டுமன்றி சீனா வேறு அங்கங்கே வந்து வில்லத்தனம் பண்ணும். அது மட்டுமன்றி, உலகளாவிய வகையில் உள்ள உளவுத்துறையினர் (பிளாண்டர்ஸ் - அடுத்த நாட்டில் நிரந்தரமாக குடியேறி, ரகசியங்களை வாங்கி சுந்த நாட்டிற்கு கொடுப்பவர்கள்) பற்றியும், கடைசியில் அவர்களுக்கு நிகழும் கதியும், அப்பப்பா.

கதையிலும், நிறைய லாஜிக் பொத்தல்கள் இருக்கின்றன. கோனூசி வைத்து தைத்து விடலாம். கதையின் நீதி, ஜீரணிக்க கஷ்டமாக இருந்தாலும், தசாவதாரம் வில்லன் கமல் சொல்வது போல, இந்தியாவில் பணமிருந்தால் யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதை அழகாக சொல்லியிருப்பார்.

நாவல் பற்றிய விவரங்கள்:
தலைப்பு : காசனோவா 99
ஆசிரியர் : எண்டமூரி வீரேந்த்ரநாத்
வெளியிடுவோர் : அல்லயன்ஸ் நிறுவனம்.
விலை : ரூ.75-

பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன2 comments:

 1. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

  ReplyDelete
 2. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..