Monday, February 8, 2016

நவீன தமிழனின் மூட நம்பிக்கைகள்

பார்த்தவுடன் பகிரவும்:

சுமார் 20 வருடங்களுக்கு முன் ஆடி மாதத்தில் சில பிரசுரங்கள் வரும். திருப்பதி கோயிலில் ஒரு பாம்பு வந்து அர்ச்சகர் முன் நின்று, நான் இப்படி வந்ததை உடனே 1000 துண்டு பிரசுரங்களாக அடித்து எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். யார் யாருக்கெல்லாம் கொடுக்கிறாயோ அவர்களும் அதே போல செய்ய வேண்டும். அப்படி செய்தால் என் அருள் கிடைக்கும் என்று சொல்லி மறைந்து விட்டது. இதை அவர் செய்தததால் அவர் வீட்டில் புதையல் கிடைத்தது. இதை மதிக்காமல் கிழித்துப் போட்டவர் பாம்பு கொத்தியது என்றெல்லாம் இருக்கும். அல்லது, இதுவே அஞ்சலட்டையில் வரும். இதே போல இன்னும் 15 பேருக்கு அனுப்ப வேண்டும்.

காலப்போக்கில், மரங்களின் அழிவை மனதில் கொண்டு மின்னஞ்சலிலும், குறும் செய்திகளாகவும் வந்தன. இப்போது முகப்புத்தம்தானே முக்கியம். எனவே, பார்த்தவுடன் 3 நொடிகளில் விரும்பி, உடனே பகிரவும் என்று சொல்கிறார்கள். இதில் இன்னும் கொடுமை, ஒரு பாம்பு படம் போட்டு, இதற்கு 'லைக்' போட்டு, 1 என கம்மெண்ட் போடுங்கள், உடனே பாம்பு உங்கள் முன்னே இந்திரன் படம் எடுக்கும் எனப் போட்டாலும், அதையும் நம் மக்கள் செய்வதுதான் கொடுமை.


அதே போல இந்த குழந்தையைப் பாருங்கள். இதன் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த பதிவை அந்த குழந்தைக்கு 10 பைசா கிடைக்கும். அதே போல இந்தக் குழந்தை காணாமல் போய் விட்டது. பெற்றோரிடம் கிடைக்க நாம் உதவி செய்யலாமே என நிறைய. கொஞ்சம் கூட விசாரிக்காமல் அப்படியே பகிர்வது. இதில் கொடுமை என்னவென்றால், அந்த குழந்தைகளே வளர்ந்து பெரியவர்களே ஆயிருக்கும். 

சரி இது கூட பரவாயில்லை. லிங்கிடுஇன் (Linkedin) என்ற தளம் உண்டு. அது மெத்தப்படித்தவர்களுக்கான தளம். அதிலேயே, நான் வேலை வாய்ப்புக்கு ஆள் எடுக்கிறேன், எனது பக்கத்தை விரும்பவும், உங்களது எண்ணைப் பதியவும் என இருக்கும். என்ன மாதிரி வேலை, ஏற்கனவே நிறைய பேர் அந்தப் பக்கத்தை விரும்பி உள்ளனரே, அத்தனை பேரின் விவரங்களைப் பார்த்து, நம்முடையதை பார்க்க எத்தனை நாளாகும் என்றெல்லாம் கூட யோசிக்காமல் நம் மக்கள் செய்யும் அட்டூழியம் உள்ளதே. அட போங்கப்பா. 

அந்த தினம் இந்த தினம்:

முன்பெல்லாம் உருப்படியான, எல்லோருக்குமான கொண்டாட்டம் என்பது பொங்கல், பங்குனி உத்திரம், ஆடி 18, தைப்பூசம், ஊரில் நடக்கும் திருவிழா இவைகள்தான். தீபாவளி கூட பட்டாசுக்காக மட்டும். மற்ற அனைத்து பண்டிகையிலும் பெரியவர்களுடன் சேர்ந்து கொண்டாட்டத்துடன், அவற்றுக்கென ஒரு அர்த்தமும் இருந்தது. ஆனால், இப்போது பெண்கள் தினம், அம்மா தினம், அப்பா தினம், சகோதரி தினம், சகோதரர் தினம் (Cousins Day என்று கூட உள்ளதாம்) என்று வைத்துக் கொண்டு அட்டூழியம் செய்கிறார்கள். வெளிநாடுகளில் அதை எதற்காக கொண்டாடுகிறார்கள், நமக்கு அது ஒத்து வருமா என்று கூட தெரியாமல், "வாங்கோ எல்லோரும் கொண்டாடலாம்" என்று கூப்பிடுகிறார்கள். இணையத்துலதாங்க, நேர்ல கூப்டுட்டாலும்.

புத்தாண்டு:

நமது கலாசாரத்தின்படி ஒரு நாள் என்பது ஒரு பகல், ஒரு இரவு. முதல் நாள் காலை சூரியன் உதயத்தில் இருந்து, அடுத்த நாள் சூரியன் உதிப்பது வரை ஒரு நாள். அதை மறந்து விட்டு இரவு 12 மணிக்கு (சித்திரையோ, தையோ) Happy Tamil New Year என செய்தி அனுப்புவது, டிசம்பர் 31ம் தேதி இரவு 12 மணிக்கு கோயிலுக்குப் போவது என நம்மாட்கள் பண்ணும் அலும்புக்கு அளவே இல்லை.

சரி பரவாயில்லை. 'இளமை இதோ இதோ' தான் சிறந்த புத்தாண்டுப் பாடல் என இன்னும் நிறைய பேர் நம்புவது, சிரிப்புதான் வருகிறது. அதில் பாடலுக்கு முன் வரும் 'ஹேப்பி நியு இயர்' என்பதைத் தவிர, மற்றதெல்லாம் தனி மனித துதிப் பாடல். தமிழில் புத்தாண்டு பற்றிய சில பழைய பாடல்கள் உள்ளன, ஆனாலும் அவை யாவும் வெற்றி பெறாததால் இதையே பிடித்துத் தொங்குகிறோம்.

பிரியாவிடை பாடல்:

கல்லூரிகளில் இறுதியாண்டில் பிரியாவிடை கொண்டாட்டத்தில், முஸ்தபா முஸ்தபா என்று போட்டுவிட்டு, கட்டிப்பிடித்து அழுவது. அந்தப் பாடல், நட்பைப் பற்றிய பாடல் அதில் பிரியாவிடை ஒரு பகுதிதான். 'பசுமை நிறைந்த நினைவுகளே' பாடல்தான் ஒரு முழுமையான, அழகான பிரியாவிடை கொண்டாட்ட பாடல். இதை சொன்னால், "அதெல்லாம் எங்களுக்கு தெரியாது, எங்களுக்கு முஸ்தபா முஸ்தபா வேணும். ஆங்" என்பார்கள்.


தாய் பற்றிய பாடல்:

'காலையில் தினமும் கண் விழித்தால்' என ஒரு பாதி கும்பல் சொல்லும். அதுவும் ஒரு வகையில் உண்மைதான். ஆனால், அந்தப் பாடலின் ஒரு பாதிதான் தாய் பற்றியது. மீதி, பெண் பாடும் வரிகள் தாய்மையுடன் காதலன் பற்றி பாடுவது. ஒரு முழு தாய் பற்றிய பாடல் பற்றி நான் சொல்ல மாட்டேன். உங்களுக்கே தெரியும்.


போராட்டம்:

முன்பெல்லாம் போராட்டம்: முன்பெல்லாம் போராட்டம் என்றால் சாலையில் இறங்கி, கோஷமிட்டு போராடுவார்கள். இப்போதெல்லாம் ஆன்லைனில் DP படத்தை மாற்றி போராட்டம் நடத்துகிறார்கள். இதைப் பற்றி பேசினால் பதிவு மிகவும் சீரியஸாக போய் விடும். இது சிரிப்புப் பதிவு. எனவே, மக்களும் பின்னூட்டத்தில் தங்களுக்கு தோன்றுவதைப் பதியலாம். இதுவும் நவீன மூட நம்பிக்கையே.

5 comments:

 1. உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது. ஆனால், கடைசியில் போராளிகளைப் புரிந்து கொள்ளாமல் எழுதியிருப்பது மனதுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது! முகப்புப் படத்தை மாற்றி விட்டு எத்தனை பேர் வீட்டிலேயே உட்கார்ந்து கொள்கிறார்கள், எத்தனை பேர் அதன் பின் நேரடியாகப் போராட்டத்திலும் கலந்து கொண்டு, அதைப் பற்றிய படங்களையும் பகிர்கிறார்கள் என்கிற புள்ளி விவரம் உங்களிடம் உண்டா? தெரியாமல் ஏன் பேசுகிறீர்கள்? போராட்டத்தில் கலந்து கொள்கிறவர்கள் அனைவருக்கும் இன்று சமூக வலைத்தளங்களில் கணக்குகள் இருக்கின்றன. அவர்கள் போராட்டத்துக்குப் போகும் முன்பு அதைப் பற்றித் தன் படத்தை மாற்றுவதன் மூலமாகவும், நிலைத்தகவல் இடுவது மூலமாகவும் தன் நண்பர்களுக்குத் தெரிவிப்பதில் என்ன தவறு?

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா. வீதியில் இறங்கி போராடுவோர் அனைவரும் சமூக வலைத்தளங்களில் கணக்குகள் வைத்திருக்கலாம். ஆனால், தன் படத்தை மாற்றுவோர் அனைவருமே வீதியில் இறங்கி போராடுவதில்லை. சமீபத்திய உதாரணம் ஜல்லிக்கட்டு. நிறைய சென்னையை சேர்ந்த அன்பர்கள் அனைவரும் I SUPPORT JALLIKKATTU என படத்தை மாற்றிக்கொண்டனர். ஆனால், எனக்கு தெரிந்து சென்னையில் போராட்டம் கூட நடக்கவில்லை. அதை மனதில் வைத்தே நான் சொன்னேன்.

   Delete

 2. அரவிந்த்,

  நல்ல பகிர்வு. Enjoyable read [ஆமாம், இத தமிழில் பொருத்தமான வார்த்தைகளுடன் எவ்வாறு சொல்வது..?? ]

  நேரம் அமையும் போது பார்க்க : ஜல்லி கட்டு.
  http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/blog-post_3.html

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ஐயா..

   Delete
 3. உங்கள் வலைப்பூ படித்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டன. நிறைவாக உள்ளது. சாமி அண்ணன்

  ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..