Tuesday, October 25, 2016

(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்

"என்னடா ரொம்ப நாளா ஆளக் காணோமே, அப்படியே ஓடிட்டானா?" என்றெல்லாம் யோசித்தவர்களுக்கும், "தப்பிச்சோன் சாமி" என்று எண்ணியவர்களுக்கும், "பயபுள்ள நல்லாத்தானே எழுதினான், என்னாச்சோ பாவம்!" என்று கூட எண்ணியவர்களுக்கும் எனது நன்றிகள்.மீண்டு(ம்) வந்து விட்டேன்.

ஒன்றும் பெரிய விஷயம் எல்லாம் இல்லை. வேறு நிறுவனம் மாறி விட்டேன். நான் சேர்ந்த நேரம் "சிக்குனாண்டா" என்று சற்றே போட்டு தாளித்து விட்டனர். இப்போதுதான் மூச்சு விடவே நேரம் கிடைத்தது. கிடைத்த நேரத்தில், இந்தப் பதிவு.

"நீ அடிக்கடி மாத்திக்கிட்டே இருக்கற மாறி தெரியுதே" என்கிறீர்களா? என்ன செய்ய. அந்தப் புலம்பலை தனியாக ஒரு பதிவில் சொல்கிறேன்.

மெட்ரோ:

நிறுவனம் மாறிய பிறகு, தங்கமணி, மகளை எங்கேயும் கூட்டிப் போகவில்லையே, "காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை விடுமுறைகளில் கூட அவர்களை மட்டும் ஊருக்கு அனுப்பி விட்டோமே, கபாலி படத்திற்கு பின்னர், திரையரங்கமே போகவில்லையே" என பல எண்ணங்கள் வந்ததால், கடந்த வாரம் வெளியே கிளம்பினோம். "மெட்ரோ ரயில் வந்து வருஷமாச்சு, இன்னும் அதுல போன பாடில்லை" என்று எனக்கு(ம்) தோன்றியதால், விமான நிலையத்தில் இருந்து வடபழனி பயணம். சும்மா சொல்லக்கூடாது. கட்டணம் அதிகம் என்றாலும், அதற்கான மதிப்பு இருந்தது. "If you see, in America" என்று சொல்லியவர்கள் எல்லாம் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு உள்ளது.

வடபழனியில் விஜயா போரம் மால் போனோம். ரெமோ படத்திற்கு இடமில்லை. எனவே, ஆண்டவன் கட்டளை படம் பார்த்து விட்டு, சாப்பிட்டு விட்டு, அங்கே உள்ள குழந்தைகள் விளையாடும் இடத்தில, விளையாட வைத்து விட்டு வந்தோம். குழந்தைக்கு 4 வயது ஆகி விட்டதால், எல்லா இடங்களிலும் சீட்டு வாங்க சொல்லி விட்டனர். அன்று மட்டும் ஆனா மொத்த செலவு அரை நாளும், 1500/- ரூபாயும். வீட்டுக்கு வந்தவுடன் தங்கமணி சொன்னது, "இன்னும் 3 மாசத்துக்கு வெளியவே போகக் கூடாது".

திரைப்படங்கள்:


ஜோக்கர், குற்றமே தண்டனை என்று பல படங்களை, திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை. ஆனாலும், அவற்றை இன்னும் நான் பார்க்கவும் இல்லை. இந்தியாவில், திரையரங்கில் ஓடி முடித்த படங்களை, வீட்டில் நியாயமாக பணம் கட்டிப் பார்க்கும் வசதி வந்து விட்டதா என்று தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை, ஒரு மாதம் கழித்து, யூடியூபில் விளம்பரங்களோடு விடலாம். அதுவே வருமானத்திற்கு வழி வகுக்கும். அல்லது பொதுவாக ஒரு வங்கி கணக்கு தொடங்கலாம். ஜோக்கர் படம் போல, அதற்காக மட்டும் இல்லாமல், பொதுவாக ஒரு கணக்கு. படம் பார்த்தா, அதற்கு பணம் அனுப்பலாம். இல்லையா. சும்மா இருக்கலாம்.

எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்கள் வந்தபோது, என் பெண், சிவகார்த்திகேயனின் விசிறி. விஜயும் பிடிக்கும். ஆனால், ரஜினி முருகன் படத்திற்கு பிறகு என்னவோ பிடிக்காமல் போய் விட்டது. சலீம் படம் பார்த்த பிறகு, விஜய் ஆண்டனியும், சேதுபதி படம் பார்த்த பின், விஜய் சேதுபதி விசிறி ஆகவும் மாறி விட்டாள்.

நாங்கள் முதலில் ரெமோ படம்தான் போகலாம் என முடிவு செய்திருந்தோம். அந்த என் வேடத்தை எல்லாம் காட்டி, என் பெண்ணை சம்மதிக்க வைத்திருந்தேன், ஆனால், டிக்கெட் இல்லாததால், சேதுபதி படத்தில் வநத ஆள் என்று சொல்லி, ஆண்டவன் கட்டளை போனோம். ஆனால், என் பெண்ணால், அது விஜய் சேதுபதி என்பதை ஒத்துக்கொள்ளவே முடியவில்லை. இது அந்த ஆள் இல்லை என்று சாதித்து விட்டாள். விஜய் சேதுபதி, அந்த இடத்தில் வென்று விட்டார்.

படம் பரவாயில்லை. இருந்தாலும், இன்னும் கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருக்கலாம். 

சில திரைப்படங்களை பார்த்தவுடனே, "அடடே, நல்லா இருக்கே. இதைப் பத்தி ஒரு பதிவு போட்டா, இன்னும் நெறைய பேர் படம் பாப்பாங்களே" என்று தோன்றும். அல்லது அதனைப் பற்றி மற்றவர்கள் நன்றாக எழுதியதால், தரவிறக்கம் செய்தாவது பார்க்கத் தோன்றும் (மெட்ரோ, உறியடி, அப்பா போன்றவை). 

இன்னும் பல படங்கள் உண்டு. அவற்றை பார்த்தவுடன், "அய்யய்யோ, உடனே, இதப்பத்தி சொல்லி, மத்தவங்கள காப்பாத்தணும்" என்று தோன்றும். சில படங்களை தரவிறக்கம் செய்து பார்த்தால் கூட, "அட ச்சீ" என்று தோன்றும். அப்படிப்பட்ட படங்கள், வாய்மை, நம்பியார், அட்றா மச்சான் விசிலு, திருநாள் போன்றவை. "ப்ப்பா, முடியல, உங்களுக்கு காசு கொடுத்து பாக்க சொன்னா கூட பாக்காதீங்க".

இப்போதைக்கு அவ்ளோதான். ஆனாலும், உங்களை விட மாட்டேன்.

2 comments:

  1. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

      Delete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..