பார்த்து, ரசித்த, கண்டிப்பாக விடுமுறையை வீட்டில் கழிக்க சில திரைப்படங்கள். அனைத்துமே இருக்கை நுனியில் (seat edge thriller) அமர வைக்கும் படங்களே. அந்தாதுன் - ஹிந்தி - 2018 (Andhadhun): ஒரு பார்வையற்ற இசைக்கலைஞன். அவன் காதல், ஒரு கள்ளக்காதல், அதனால் ஒரு கொலை, யாருமில்லாதவர்களின் உறுப்புகளைத் திருடி விற்கும் கும்பல், இவர்களோடு வயலில் உள்ள காய்கறிகளை உண்ணும் முயலைக் கொல்லும் நோக்கத்தோடு துப்பாக்கியுடன் ஒரு விவசாயி இவர்கள் அனைவருக்கும் இடையே நடக்கும் ஒரு கண்ணாமூச்சி ஆட்டமே அந்தாதுன்.
படத்தில் சில திருப்பங்களை நீங்கள் உலகப்படம் பார்ப்பவர்களாக இருந்தால், சுலபமாக யூகிக்கலாம். ஆனாலும், அதைத்தாண்டி படத்தில் நிறைய சிறு சிறு ஆச்சரியங்கள் உள்ளன. நாயகன், தபு, நாயகனுக்கு உண்மையிலேயே பார்வை இருக்கிறதா என்று சோதிக்கும் சிறுவன் என அனைவருமே கவனம் ஈர்க்கின்றனர். படம் உண்மையில் நகைச்சுவைப்படம்தான், இருந்தாலும், இந்தப்பக்கம் அந்தப்பக்கம் திரும்ப விடாமல் கவனம் ஈர்க்க வைக்கிறது. தடம் - தமிழ் - 2019: ஒரு கொலை. கொலைகாரன் ஒரு புகைப்படத்தில் உள்ளான். ஒரே பிரச்சினை, ஒரே மாதிரி இரண்டு பேர். இரண்டு பேரில் ஒருவர்தான் குற்றவாளி, யார் அது, எதற்காக கொன்றான், தண்டனை கிடைத்ததா இல்லையா என்பதை, நிஜமாகவே கடைசி வரை அங்கும், இங்கும் திரும்ப வைக்காமல், நிஜமாகவே மண்டை காய வைத்து விட்டார்கள். உண்மையில் அட்டகாசமான திரைப்படம்.
பொதுவாக துப்பறியும் படங்களில் இவனா, அவனா, என்று நிறைய பேரை சந்தேகப்படுமாறு காட்டுவார்கள். இதில் இரண்டே பேர். இவனா, அவனா என கடைசி வரை, அப்பப்பா. அதிலும் காவல் துறையில், வயதில் சிறியவர் பெரிய பதவியில் இருந்தால் என்ன நடக்கும், ஒருவனை சிக்க வைக்க காவல் துரை எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை எல்லாம் சரியாக காண்பித்துள்ளனர். ஆய்வாளருக்கும், நாயகனுக்கும் உள்ள பிரச்சினையை காட்சிகள் இன்றி வசனங்களில் சொன்ன விதம், கடைசியில் நீதிபதி பேசும் இடம் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. மகிழ் திருமேனியின் அனைத்து படங்களுமே தவற விடக்கூடாதவை. அதில் இது முதலிடம். அந்தரிக்ஷம் - தெலுங்கு - 2018 (Anthariksham): இதுவரை நீங்கள் பார்த்த அனைத்து ஆங்கில திரைப்படங்களில் வருவதுதான். ஒரு பழைய செயற்கை கோள் கட்டுப்பாட்டை இழக்கிறது. அதை மீட்க வேண்டும் என்றால், நாயகன் வர வேண்டும். அவனோ வழக்கம் போல வேறு ஒரு பிரச்சினையால் இது எதுவும் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறான். இப்போது, இதையும், தன் பழைய கணக்கையும் எப்படி தீர்க்கிறான் என்பதுதான் படம்.
தமிழில் டிக் டிக் டிக், தமிழின் முதல் விண்வெளி படம் என்று மொக்கையாக ஒரு படம் எடுத்தார்கள். ஆனால், தெலுங்கில், நிஜமாகவே நன்றாக எடுத்துள்ளார்கள். என்ன, கொஞ்சம் இல்லை இல்லை, நிறையவே இயற்பியல் தெரிந்திருக்க வேண்டும். உண்மையில் பக்காவாக ஆராய்ந்து எடுத்துளார்கள். கட்டுப்பாட்டு அறை, செயற்கை கோள், விண்வெளி என்று அனைத்தும், ஆங்கில படங்கள் அளவுக்கு உள்ளன. நல்ல முயற்சி. வெள்ளைப்பூக்கள் - தமிழ் - 2019: ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி, காதல் திருமணம் செய்து, அமெரிக்காவிலேயே குடியேறிய மகனின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு நடக்கும் சில கடத்தல்களை, தனது பாணியில், அங்குள்ள நண்பனோடு சேர்ந்து ஆராய்கிறார். கண்டுபிடிக்கிறாரா என்பதுதான் கதை.
படத்தில் இசையமைப்பாளர் உட்பட நிறைய பேர் MITயில் படித்தவர்கள். அவர்களுக்காக பார்த்தேன். பரவாயில்லை. எதிர் பார்த்ததை விட நன்றாகவே இருந்தது. விவேக், சார்லி அட்டகாசமான நடிப்பு. திறமையான நடிகர் சார்லி, நகைச்சுவை, குணச்சித்திரம் இரண்டிலும் கலக்கக்கூடியவர் அவர். இன்னும் பல நல்ல வாய்ப்புகளை அவருக்கு கிடைக்க வேண்டும். தில்லுக்கு துட்டு 2: பெரிதாக ஒன்றுமில்லை. ஊருக்குள் அட்டகாசம் செய்யும் நாயகனை சிக்க வைக்க, மந்திரவாதியின் பெண்ணுடன் காதல் வர வைக்கின்றனர். காதல் என்றாலே கொல்ல துடிக்கும் பேயைத் தாண்டி, எப்படி நாயகியை திருமணம் செய்கிறார் நாயகன் என்பதுதான் கதை.
என் பெண்ணிற்கு மிகவும் பிடித்த படம். தொடர்ச்சியாக நான்கைந்து முறை கூட பார்க்கிறாள். அதிலும் இரண்டாம் பாதியின், இரண்டாம் பாதி, அதாவது பேய் வீட்டிற்கு போன பிறகு நடக்கும் காட்சிகள் வயிற்றைப் பதம் பார்க்கும். நிச்சயம் பொழுதுபோக்கிற்கு உகந்த படம். இவை தவிர, தப்பித்தவறி கூட பார்த்து விடக்கூடாத படங்கள் சில உள்ளன. பொட்டு: யப்பா, முடியலடா சாமி. மனசுல பெரிய லாரன்ஸ் அப்டின்னு நெனப்பு போல. தேவ்: என்னவாம். ஒண்ணுமில்ல. சும்மா ஊர் சுத்துனாங்களாம். அப்ப எடுத்த கொஞ்ச நஞ்சத்த படம்னு சொல்றாங்க. கண்ணே கலைமானே: நெடுத்தொடரை விட தூரமாக போகிறது, போகிறது. கடைசியில் படம் முடியவில்லை, அதுதான் கொடுமை. பூமராங்: Face/off ஒரு சிட்டிகை. தெலுங்கில் வந்த எவடு இரண்டு கரண்டி, கடைசியாக கொஞ்சம் கத்தி படத்தை போட்டு கடைந்தால், பூமராங். ஐரா: இருப்பதிலேயே பெருங் கொடுமை இதுதான். கருப்பு நயன்தாரா, வெள்ளை நயன்தாராவை பழி வாங்க ஒரு காரணம் வரும் பாருங்கள். பொதுவாக கடைசியாக வரும் திருப்பங்கள், படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும், பரவாயில்லை என்று தோன்றும். ஆனால் இதில், அப்படியே தலைகீழ். அவ்வளவுதாங்க. கண்டிப்பாக குறிப்பிட்டுள்ள படங்களை பாருங்கள்.
இதோ, அடுத்த திருவிழா ஆரம்பித்து விட்டது. இதில் நாம் வழக்கம் போல பெரிய ஆர்வம் காட்ட மாட்டோம். ஏனென்றால், நமக்கு இதில் பெரிய பலன் இருக்காது. எப்படி என்று கேட்கிறீர்களா? ஒவ்வொன்றாக பார்ப்போம். யார் வென்றாலும், ஆட்சி அமைத்தாலும் சரி, நம்மூரில் வெல்பவர்கள் எதிரணியாகவே இருப்பார்கள், அது மட்டுமில்லாமல், எப்படி இருந்தாலும், நாம் தமிழர்கள், அவர்கள் வட நாட்டவர்கள். காவிரியாக இருந்தாலும், முல்லை பெரியாறாக இருந்தாலும், நமக்கு எதிராகவே செயல்படுவார்கள். காலம் காலமாக நடப்பதுதான். அனைத்து சமூக வலைத்தளங்களிலும் 50 ஆண்டுகால திராவிடத்தால் வீழ்ந்தோம், இல்லை இல்லை வாழ்ந்தோம் என்று மோதிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் வாழ்ந்தோமா இல்லையா என்பதை என் சிற்றறிவுக்கு எட்டிய வரை சொல்கிறேன். இன்னொன்று, நான் வெளிமாநிலங்களில் ஒரே ஒரு வருடம், அதுவும் மைசூரில் வேலை பார்த்தேன். ஒரு சில மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளேன், அவ்வளவே. மற்றபடி எல்லாமே ஏட்டறிவே. திராவிட புரட்சியாளர்களைப் பாருங்களேன், நீட் தேர்வு, எய்ம்ஸ் பற்றி பேச்சு வரும்போதெல்லாம் தமிழகம் எப்படியெல்லாம் முன்னேறியுள்ளது என்று பேசுவார்கள், ஆனால் டெங்கு வரும்போது தமிழகம் மருத்துவத்துறையில் பயங்கரமாக பின் தங்கியுள்ளது என்பார்கள். இவர்களுக்கு இதே வேலைதான். சரி விடுங்கள். புள்ளி விவரங்கள் அடிப்படையில் பார்த்தால், தமிழகம் மற்ற மாநிலங்களை விட எவ்வளவோ பரவாயில்லை. அதற்காக முதலிடம் என்றும் சொல்ல முடியாது. முதல் 5 இடங்களுக்குள் கண்டிப்பாக இருக்கும். இவை எல்லாவற்றிக்கும் காரணம், அடித்தளம் என்பது இரண்டு பேர்தான். காமராஜர், பெரியார். கிராமப்புறங்களில், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில், குறைந்தபட்சம் எழுதப்படிக்க தெரிந்தவர்களிடம் கேளுங்கள், காமராஜர் பற்றி சொல்வார்கள், அதே போல பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் பெரியார். பெரியார் என்னத்தைக் கிழித்தார், மகளைக் கல்யாணம் செய்தார் என்று பேசுவோர் எல்லாம் கூறுபவர்களைப் பார்த்தால் சிரிப்பாக வரும். அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல என்பதை அவரே சொல்லி இருக்கிறார். அவரைப்பற்றி பிறகு தனிப்பதிவில் பார்ப்போம். காமராஜர் திராவிட கட்சி இல்லையே, பெரியார் அரசியல்வாதி இல்லையே என்பவர்களுக்கு, உண்மைதான். அடித்தளமிட்டவர்கள் இவர்கள்தான். ஒரு வேளை சோறு கிடைக்குமே என்று பள்ளிக்கு சென்றவர்கள், இன்று இருக்கும் நிலைமையே வேறு. இவர்கள் போட்ட சாலையை அகலப்படுத்தியது கருணாநிதிதான். ஆனால், ஒரு கட்டத்தில் ருசி கண்ட பூனையாக மாறி விட்டார்கள். எம்ஜிஆர் வருவதற்கு முன் தனியார் கல்லூரிகள் குறைவு. அவர் அனுமதி கொடுத்த பிறகு, எப்படி பணம் பார்ப்பது என்பதைக் கண்டு பிடித்த பிறகு தடம் மாறியது. அடுத்தடுத்த ஆட்சிக்காலங்களில் இன்னும் மோசமாக மாறி விட்டது. நம் மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக 'நமக்கென்ன வந்தது' மனநிலைக்கு வந்து விட்டார்கள். இவ்வளவு ஏன், முருகதாஸ் கூட கண்டிப்பாக அரசுப்பள்ளியில், அரசு கொடுத்த இலவச பஸ் பாஸ் வசதியைக் கூட பயன்படுத்தி இருக்கலாம். இப்போது இலவசங்கள் வேண்டாம் என்கிறார். மனிதன் ஒரு நிலையில் இருந்து கொஞ்சம் மேலே போன பிறகு, கீழே இருப்பவர்களைப் பார்த்தால் இளக்காரமாகாத்தான் இருக்கும். இன்னொன்று, நாம் எப்போது கடைசியாக உபயோகித்தோமோ, அதே நிலைமையிலேயே இன்னும் இருக்கும் என்று நினைக்கிறோம். இதுதான் சாதாரண மனிதனுக்கான பிரச்சினை. சரி விடுங்கள். யாருக்கு வாக்களிக்கலாம் என்று முன்பே ஒரு முறை எழுதியுள்ளேன். அதேதான் இப்போதும். "அப்ப நீ சொன்ன மக்கள் நல கூட்டணி என்னாச்சு பாத்தல்ல" என்பவர்களுக்கு, உண்மைதான். அது ஒரு உப்புமா கூட்டணி என்பது தெரிந்ததுதான். மாற்று சக்தி என்பதே நமக்கு இல்லை. உப்புமா என்றவுடன்தான் இப்போது உலாவும் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.உப்புமா வேண்டாம் என்று எல்லோரும் வேறு வேறு உணவுகளுக்கு மக்கள் வாக்களிக்க, கடைசியில் உப்புமாவே வெல்கிறதாம். மற்ற மாநிலங்களில் எப்படியோ, நம்மூர் மக்கள் வித்தியாசமானவர்கள். பார்ப்போம். மீண்டும் சொல்கிறேன். மாற்றம் ஒரே நாளில் நிகழாது.
அனைவருக்கும் வணக்கம். தீபாவளி வந்ததே தெரியவில்லை. அதற்குள் பொங்கலே முடிந்து விட்டது. முன்பு ஒரு முறை வேலை பற்றி சொன்னேன் அல்லவா. இப்போது மீண்டும் பழைய நிறுவனத்திற்கே வந்து விட்டேன், நான் வந்த நேரமோ என்னவோ தெரியவில்லை. ஒரு மொக்கை வேலையில் மாட்டி கிட்டத்தட்ட ஒரு மாதம் எல்லா நாளும் அலுவலகம் செல்ல வேண்டி வந்து விட்டது. இப்போதுதான் கொஞ்சம் விடுதலை கிடைத்தது போல உள்ளது. அக்கரைப்பச்சை என்பது எப்போதும் உண்மைதான். எப்படியோ இந்த ரணகளத்திலும் கொஞ்சம் கிளுகிளுப்பாக ஏதாவது பதிவிட வேண்டும் என்று தோன்றுகிறது. வருடா வருடம் ஏதாவதுஒரு சபதம் எடுப்பதற்கு பதில், ஒவ்வொரு வருடமும் ஒரே சபதம் தான். இந்த வருடமாவது ஒழுங்காக பதிவிட வேண்டும் என்பதுதான் அது. முதல் மாதமே விட்டு விட்டேன். பார்ப்போம். விமர்சனங்கள்: பேட்ட: நான் முன்பே நிறைய முறை சொல்லியுள்ளேன். சிறு வயதிலிருந்தே கமல் ரசிகன். ஆனாலும், ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, மனிதன் போன்ற படங்கள் எப்போது போட்டாலும் விரும்பிப் பார்த்த காலங்கள் உண்டு. பேட்ட பார்க்கும் போது அப்படிதான் உணர்ந்தேன். இரண்டாம் பாதி நீளம், நிறைய லாஜிக் குறைபாடுகள் என்று இருந்தாலும் 3 மணி நேர பொழுது போக்கிற்கு உத்திரவாதம் உண்டு. கடைசி நேர 'கார்த்திக் சுப்பாராஜ்' வகை திருப்பம் இருந்தாலும், மற்றபடி பெரிய திரைக்கதை திருப்பமெல்லாம் இல்லை. ஓட்டைப் பானையாக இருந்தாலும், தங்கப்பானை அல்லவா. விசுவாசம்: படத்தில் அடுத்து என்ன காட்சி வரும் என்பதை என் 6 வயது மகளே சொல்கிறாள். அவ்வளவு அரதப்பழசான திரைக்கதை. படத்தின் நீளம் மட்டுமே படத்தின் பலம். சர்க்கார்: இது இன்னொரு வகையான மொக்கை. முருகதாஸ் தன்னை இன்னொரு ஷங்கர் என்று நினைத்துக் கொள்கிறார் போல. 2.O: துள்ளுவதோ இளமை படத்தில் எல்லா தவறையும் செய்த பிறகு இறுதியில் இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று விஜயகுமார் சொல்வார். அதே போல தேவையில்லாத ஆணியெல்லாவற்றையும் பிடுங்கி விட்டு, கடைசியில் "சோறு வைங்க, தண்ணி ஊத்துங்க" என்று சொல்வது என்ன வகையோ. பேய்ப்படமும் இல்லாமல், தொழில்நுட்பமாகவும் இல்லாமல் இரண்டுக்கெட்டானாக உள்ளது. என் மகள் முப்பரிமாண முறையில் ரசித்துப் பார்த்தாள். இவை அனைத்துமே திரையரங்கம் சென்று பார்த்தோம். உண்மையில் கொடுத்த பணத்திற்கு 3 மணி நேர பொழுதுபோக்கிற்கு பரவாயில்லை. செக்கச் சிவந்த வானம்: மதனின் 'வந்தார்கள் வென்றார்கள்' படித்திருப்பார் போல மணிரத்னம். பதவிக்காக தந்தை, சகோதரர்களையே கொல்லும் அளவிற்கு செல்லும் மகன்கள், திருப்பம் தரும் தளபதி என்று அடுத்த வலது, உடனே இடது என தெரிந்த திருப்பங்கள்தான் உள்ளன. மற்றபடி இன்னும் ராட்சஸன், வட சென்னை, பரியேறும் பெருமாள் படங்கள் கண்டிப்பாக தவற விடக்கூடாதவை. அடங்க மறு, கனா, துப்பாக்கி முனை, ஜருகண்டி, திமிரு புடிச்சவன் படங்களை கண்டிப்பாக பார்க்கலாம். வருத்தப்பட வைக்காத படங்கள். இசை: இளையராஜாவைப் பார்த்தால் பாவமாக உள்ளது. ஏதோ ஓரிரு கல்லூரிகளுக்குத்தான் செல்கிறார் என்று பார்த்தால், எல்லா கல்லூரிகளுக்கும் சென்று 'நான் மட்டுமே இசையமைப்பாளர், ஆனால், எனக்கு இசை பற்றி ஒன்றுமே தெரியாது' என்று சொல்லி வருகிறார். இப்போதெல்லாம் இளையராஜாவிடம் எந்த இயக்குனர் சென்றாலும், அவரது பேச்சுக்கு மறு பேச்சு சொல்லாமல் எந்த இசை கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறார்கள் போல. அதனாலேயே பாடல்கள் மனதில் பதிய மறுக்கின்றன. இருந்தாலும் பின்னணி இசையில் மனிதன் இன்னும் பின்னுகிறார். எனக்கு அவர் படங்களை எல்லாம் விட்டு விட்டு How to Name it போல தனி இசைக்கோர்வைகளை வெளியிடலாம். இன்னும் அவரிடம் உள்ள திறமைகளை அவரே வெளிக்கொண்டு வரலாம். ஞானி, எல்லாம் அறிந்தவர், இசைக்கடவுள் என்ற புகழ்ப்போர்வையை வைத்து அவரது திறமைகளை மூடி வைத்து விட்டனர். பார்ப்போம். ரஹ்மான் வர வர பின்னுகிறார். சர்க்கார், செக்கச்சிவந்த வானம், 2.ஓ படங்களில் நிஜமாகவே அவரது பின்னணி இசை அட்டகாசம். நான் கடைசியாக ரஹ்மானின் பாடல்களைக் ஒழுங்காக கேட்டது 24 படத்தில் தான். இப்போது மீண்டும் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கும் வகையில் இருந்தது இப்போதுதான். யுவன் எல்லாம் சராசரியாக மாறி விட்டார். அனிருத் பட்டையை கிளப்புகிறார். இப்போதைக்கு என் பெண்ணிற்கு பிடித்த பாடல் 'மரணம் மாஸு மரனம் பாடல்தான். வருங்காலங்களில் எப்படி மாறுகிறது என்று பார்ப்போம்.
தோணி பட விழாவில் நாசர் இந்த பாடல் உருவான கதையை சொல்லி இருந்தார். நகைச்சுவையாக இருந்தாலும், அவருடைய உண்மையான உணர்வுகளை சொல்லி இருப்பார்.
இதே பாடல் தெலுங்கில் சில வருடங்களுக்கு முன் 'எவடே சுப்பிரமணியம்' படத்தில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதை அவரே இன்னும் நன்றாக மெருகூட்டினார் என்று படித்தேன்.
சில நாட்களுக்கு முன் MOP வைஷ்ணவா கல்லூரியிலும், பின் எம்ஜிஆர் சத்யா பெண்கள் கல்லூரியிலும் இளையராஜாவின் 75ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த இரண்டு இடங்களிலும் கண்டிப்பாக மாணவிகள் 2000களின் ஆரம்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். ஆனாலும், இரண்டு இடங்களிலும் தானத்தந்த தானத்தந்த என்ற ஆரம்பித்தவுடன் அவர்களின் ஆரவாரத்தைக் கேட்டால் ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட அதே போலவே கோயமுத்தூர் PSG கல்லூரியிலும். அதே ஜனனி ஜனனி முதல், தென்றல் வந்து தீண்டும்போது வரை.
இந்த பாடல் அந்த அளவிற்கு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் மனதில் இருப்பது ஆச்சரியம். அங்கு அவரின் பேச்சும், மாணவிகளின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களும் காணொளியாக. நீங்களும் பாருங்கள், பொறுமை அவசியம்.
மூன்றிலும் நிறைய முறை தற்பெருமை பற்றி நிறைய பேசினாலும் ஒரு சில விஷயங்கள் நன்றாக பேசினார். குறிப்பாக, வாழ்க்கையில் வெற்றி பெறுவது பற்றிய கேள்விக்கு, வெற்றி என்பது நீங்கள் செய்யும் செயல்களுக்கு மட்டுமே. வாழ்க்கைக்கு இல்லை. அடுத்து மன நிம்மதிக்கு என்ன மாதிரி இசை என்ற கேள்விக்கு உன் மனதிற்கு என்ன பிடிக்குமோ அதைக்கேள். நான் எதையாவது சொல்லி, அது இன்னும் பிரச்சினை அதிகரித்து விடப் போகிறது என்றார். இது இரண்டும் கொஞ்சம் கூட தற்பெருமை இன்றி வயதுக்கேற்ற மாதிரியான பதில்கள். அதே போல உங்களது குடும்ப உறவுகள் இல்லாமல் உங்களுக்கு பிடித்த 3 பேர் என்ற கேள்விக்கு முதலில் மூகாம்பிகை என்றார். பிறகு தன்ராஜ் மாஸ்டர் மற்றும் GK வெங்கடேஷ் என்றார். அந்த வகையில் மகிழ்ச்சி.
ஆனால், MOPயில் கொஞ்சம் அதிகமாகவே 'நான், என்' விகுதி இருந்தது. அதிலும் ஒரு ஆட்டோ ஓட்டுனர் தன்னிடம் "ஸார், நீங்க மட்டும் இல்லேன்னா, நான் என் பொண்டாட்டிய கழுத்தை நெரிச்சிருப்பேன்" என்றதெல்லாம் கொஞ்சம் அதிகமாக தெரிந்தது. ஆனாலும், என்ன செய்ய. அது உண்மைதான். ஏன் நிறைய பேர் இளையராஜா என்று உருகிறார்கள் தெரியுமா. ஒவ்வொருவருக்குமே வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான நிகழ்வுகளும் சோக நிகழ்வுகளும் கலந்திருக்கும். அல்லது மறக்க முடியாத கணங்களும் இருக்கும். 1970களிலிருந்து 90கள் வரை பிறந்தவர்களுக்கு இப்போது இருப்பது போல நினைத்த நேரத்தில் நினைத்த பாடல்களை கேட்க முடியாது. ஆனால், அந்த குறிப்பிட்ட சமயத்தில் கேட்கும் பாடல் நம்மை கதறி அழ வைத்திருக்கும், கவலையை மறக்க வைத்திருக்கும். எத்தனையோ வருடங்கள் கடந்திருந்தாலும், இன்னும் அந்த பாடல் எங்காவது நமக்கு கேட்டால், நம்மை அறியாமல் பின்னோக்கி செல்வோம். இது பல பேருக்கு, ராஜாவின் பாடலாக அமைந்து விட்டது. இது பற்றிய பதிவு. இது 96 படம் வருவதற்கு முன்பே நான் எழுதியது. அதே போல ஜனவரி முதல் டிசம்பர் வரை, நாம் கொண்டாடும் அனைத்து பண்டிகைகள், தினங்கள் அனைத்திற்கும் ராஜாவின் ஏதாவதொரு பாடல் பொருந்தியிருக்கும் அல்லது நாமே பொருத்திக் கொண்டு இருப்போம். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் மட்டும் விதி விலக்கு. அதை மொத்தக் குத்தகைக்கு ரஹ்மான் எடுத்துள்ளார். ஜனவரி: புத்தாண்டு - இளமை இதோ இதோ (சகலகலா வல்லவன்) போகி - மார்கழிதான் ஓடிப் போச்சு (தளபதி) பொங்கல் - தைப்பொங்கலும் பொங்குது (மகாநதி) ஜல்லிக்கட்டு - தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம். பிப்ரவரி: காதலர் தினம் - நிறைய பாடல்கள். மார்ச்: மகளிர் தினம் - மகளிர் மட்டும் (மகளிர் மட்டும்) ஏப்ரல்: சித்திரை 1 - தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம். மே: உழைப்பாளர் தினம் - உழைப்பாளி இல்லாத (உழைப்பாளி) அன்னையர் தினம் - அம்மா என்றழைக்காத (மன்னன்) ஜூன்: ரம்ஜான் - எங்குமுள்ள அல்லா (தர்மசீலன்) செப்டம்பர்: விநாயக சதுர்த்தி - அட சாமி வருது (உடன் பிறப்பு) அக்டோபர்: ஆயுத பூஜை - தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம். தீபாவளி - பட்டாச சுட்டு சுட்டு (பூவே பூச்சூடவா) டிசம்பர்: கிறிஸ்துமஸ் - தேவனே (வெள்ளை ரோஜா) இது தவிர இன்னும் தாய்ப்பாசம், சகோதர பாசம், அதிலும் அண்ணன் தங்கைக்கு தனியாக, அண்ணன் தம்பிக்கு தனியாக, பிரியும்போது ஒரு பாடல், சேரும்போது ஒரு பாடல் என, அது கேட்க நன்றாக இருக்கிறதோ இல்லையோ, நம் நிலையை அப்படியே உணர்த்துவது போல இருக்கும், நம் வாழ்வோடு இணைந்து விடும். இது பற்றி ஏற்கனவே ஒரு நீயா நானா விவாதம் கூட நடந்தது. அதைப்பற்றிய பதிவு. இல்லை இல்லை. ராஜா 1000 படங்கள் இசையமைத்திருந்தாலும் அதில் பாதிதான் வெற்றி. மற்றவைகளை ஒரு முறை கூட கேட்க முடியாது. ஆனால், மற்றவர்கள் அப்படி இல்லை. வெற்றி சதவிகிதத்தை பாருங்கள், ஹிந்தியில ஒன்னும் பண்ண முடியலல்ல, ஹாலிவுட் தெரியுமா, எங்க சிம்பொனியை விட சொல்லுங்க, முகவரி படம் பார்த்தீர்களா, இசை படம் பார்த்தீர்களா, என்னவோ ராஜாதான் எல்லாத்தையும் பண்ணுனாரா, அவருக்கு முன்னால எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்திருக்காங்க, 2010க்கு அப்புறம் ஒரு நல்ல பாட்டு சொல்லுங்க பாப்போம், என்றெல்லாம் ஒரு கும்பல் வரும். அவர்கள் சொல்வதிலும் மிகச்சில விஷயங்கள் சரியாக இருக்கலாம். ஆனாலும், புத்திக்கு தெரியுது, மனசுக்கு தெரியல. மற்ற இசையமைப்பாளர்கள் கும்பலுக்கு. ராஜா எங்களுக்கு.
எப்போது செய்திகள் பார்த்தாலும், கொலை, கொள்ளை. தினமும் நாம் பார்க்கும் நிகழ்வுகள் எல்லாமே, நமக்கு எதிர்மறை எண்ணங்களையே தூண்டுகின்றன. அப்படிப்பட்ட சமயங்களில் இந்தியன், அந்நியன் போன்ற ஷங்கர் படங்கள், பழைய SA சந்திரசேகர் படங்கள் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியதுதான். நிஜத்தில், யாராவது தவறு செய்யும்போது "அட ஏம்பா இப்படி பண்ற" என்று கேட்கக்கூட நமக்கு (எனக்கு) பயம். நமக்கெதுக்கு வம்பு, யார்க்குதானே நடக்குது என்று போய் விடுகிறேன். அதே போல ராட்ஷசன் படத்தில் வரும் கொலைகாரன் போல ஆட்களைப் பார்க்கும்போது "எப்படித்தான் இந்த பண்றதுக்கு மனசு வந்துச்சோ தெரியல" என்கிறோம். உண்மையில் நாம் ஒவ்வொருவருக்கும் குரூரமான, வக்கிரமான எண்ணங்களும் ஆசைகளும் இருக்கும். ஆனால் நம் ஆழ் மனதில் உள்ள பயம் அதை செய்ய விடாது. அதை தாண்டி ஒரு முறை எதையாவது செய்து விட்டால் அவ்வளவுதான். ருசி கண்ட பூனையாக மாறி விடுவோம். தற்கொலை எண்ணம் கூட அப்படிதான். எனக்கென்னவோ நிறைய படங்களில் வரும் கொடூரமான காட்சிகளை பார்க்கும்போது அது அந்த இயக்குனரின் ஆழ் மனதின் ஆசைகளாக இருக்குமோ என்று தோன்றும். சரி விடுங்க. "உங்களுக்கு ஒரு வாய்ப்பு. ஒரு நாள் ராத்திரி, நீங்க யாரை வேணும்னாலும் கொல்லலாம். யாரும் இந்தக் கேள்வியும் கேக்க மாட்டோம்" என்று அரசு சொல்கிறது எனில், என்ன செய்வீர்கள். சிறு வயதில் நம்மை அடித்த பள்ளி வாத்தியார் முதல், அலுவலகத்தில் உள்ள மேலாளர் வரை எல்லோரையும் கொல்ல தோன்றும் அல்லவா. அதே போல, நம்மையும் கொல்ல வேண்டும் என்று சிலருக்கு தோன்றும் அல்லவா. இப்போது நம் நிலை வாழ்வா, சாவா என்றாகி விட்டது. குறிப்பாக சொன்னால், புதுப்பேட்டை படத்தில் வருவது போல "இன்னைக்கி ராத்திரி தாண்டுவியான்னு பார்ப்போம்" என்றாகி விடும். இப்படி ஒரு எண்ணம்தான் ஒருவருக்கு தோன்றியது. அதன் விளைவுதான் The Purge series. இதுவரை 4 பாகங்கள் வந்துள்ளன. ஒரு சிறு பார்வை. The Purge (2013):
அமெரிக்காவில், 2014ல் புதியதாக ஆட்சிக்கு வரும் ஒரு கட்சி, பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் என்பதால், அதைக் குறைக்க ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ம் தேதி இரவு 7 மணி முதல், அடுத்த நாள் காலை 7 மணி வரை, கொலை உட்பட எந்த குற்றங்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். தண்டனை கிடையாது என்று சட்டம் கொண்டு வருகிறது. இதற்கு Purge Day (களையெடுப்பு நாள்) என்று பெயர். இதன் விளைவாக அடுத்த ஏழெட்டு வருடங்களில் வேலை வாய்ப்பின்மை, வறுமை, சட்ட விரோத நடவடிக்கைகள் எல்லாமே கட்டுக்குள் வருகிறது. 2022ல், ஜேம்ஸ், பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனர், மனைவி கல்லூரியில் படிக்கும் மகள், பள்ளியில் படிக்கும் மகன் என வாழ்ந்து வருகிறார். மகள் தன்னை வயது மிக மிக அதிகமான ஒருவனைக் காதலிப்பது அப்பாவுக்கு பிடிக்கவில்லை. இவர்கள் தயாரிக்கும் பாதுகாப்பு உபகரணங்களைத்தான் நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள். அதனாலேயே குறுகிய காலத்தில் பெரிய பணக்காரன் ஆனதால், அண்டை வீட்டாரும் பொறாமை வேறு. 2022 மார்ச் 21 இரவு வீட்டிற்கு வந்து எல்லா பாதுகாப்பையும் உறுதி செய்து மனைவி மக்களோடு சாப்பிட்டு விட்டு இருக்கும்போது, மகளின் காதலன், ஏற்கனவே வீட்டிற்கு வந்து ஒளிந்து கொண்டிருந்தவன், ஜேம்ஸை கொல்ல நினைக்கிறான். அதே நேரம், சாலையோரம் இருக்கும் ஏழை ஒருவனை ஒரு கும்பல் சும்மா கொலை செய்ய முயற்சிக்க, ஜேம்ஸின் மகன் வீட்டின் பாதுகாப்பை விலக்கி, அவனை வீட்டிற்கு வரவைத்து காப்பாற்றுகிறான். அதே நேரம் காதலன் ஜேம்ஸை சுட, அவன் தப்பித்து, மகளின் காதலனை சுட்டு விடுகிறான். உள்ளே வந்த வெளியாள், அவ்வளவு பெரிய வீட்டில் போய் ஒளிந்து கொள்கிறான். அவனை தேடி வந்த கும்பல், அவனை வெளியே விடவில்லை என்றால், ஜேம்ஸ் மற்றும் குடும்பத்தினரை கொள்ள வேண்டி இருக்கும் என மிரட்டுகிறது. எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே படம். The Purge: Anarchy (2014):
2023 மார்ச் 21. வருடாந்திர களையெடுப்பு (purge) நிகழ்வு இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆரம்பிக்க இருக்கிறது. ஒரு உணவகத்தில் வேலை பார்க்கும் பெண், வயதுக்கு வந்த மகள், உடல் நிலை சரியில்லாத தந்தையுடன் இருக்கிறார். ஒரு இளம் கணவன், மனைவி. தங்களுக்கு கருத்து வேற்றுமை இருப்பதால், விவாகரத்து பற்றி சகோதரியுடன் பேச செல்கிறார்கள். தனியாக ஒரு காவல் அதிகாரி. போதையில் வண்டி ஓட்டி, தனது மகனை கொன்று விட்டு எப்படியோ வெளியில் வந்து விட்ட பணக்காரனை இன்று கொல்ல வேண்டும் என்று துடிக்கிறான். இவர்களுக்குள் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டமே இந்தப்படம். போன படத்திற்கும் இதற்கும் பெரியதாக தொடர்பு இருக்காது. அதில் வெளியாளாக வருபவர், இதில் போராளியாக வருவார். இதில் பணக்காரர்கள் எப்படி இந்த களையெடுப்பு நாளை கொண்டாடுகிறார்கள் என்றெல்லாம் வரும். பணம் கொடுத்து, ஆளை கூட்டி வந்து கொலை செய்வது, எங்கெங்கு எல்லாம் வீடில்லாத ஏழைகள் இருப்பார்களோ அவர்களை தேடிப்போய் கொள்வது என்றெல்லாம் வரும். இந்தப் படம் பார்க்கும் போதுதான் தோன்றியது இப்படியெல்லாமாடா யோசிப்பீங்க? The Purge: Election Year (2016):
இந்த களையெடுப்பு நிகழ்வால் தனது குடும்பத்தை இழந்த ரோன் என்ற பெண், அதற்காக போராடி, ஜனாதிபதி தேர்தலில் நிற்கிறார். தான் வென்றால், இந்த நிகழ்வு ஒழிக்கப்படும் என்கிறார். அவரது பாதுகாப்பிற்க்கு போன படத்தில் வநத காவல் அதிகாரிதான் இருக்கிறார். முதல் இரண்டு படங்களில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் கொல்லக்கூடாது என்ற விதி இருக்கும். ஆனால், இதில் அந்த விதி நீக்கப்பட்டு விடும், ரோனைக் கொல்வதற்காக. இதற்கு நடுவில் எப்படியாவது தனது கடையைக் காப்பாற்ற வேண்டி துடிக்கும் ஒரு மளிகை கடைக்காரர்(?) அவரின் உதவியாளர், தோழி மற்றும் புரட்சியாளாரான முதல் பாகத்தில் வந்த அந்நியர். ரோன் கடத்தப்படுகிறார். கடைசியில் என்ன நடக்கிறது என்று நீங்களே பாருங்கள். இதில் மருத்துவ சுற்றுலா போல களையெடுப்பு சுற்றுலா என கொலை செய்வதற்காகவே அமெரிக்கா வருவார்கள். ஆத்தி என்று தோன்றியது. The First Purge (2018):
இது முந்தைய கதை. எப்படி இந்த களையெடுப்பு நிகழ்வு தோன்றியது. முதன் முதலில் நியூயார்க் நகரில் ஒரு குறிப்பிட்ட, ஏழைகள் நிறைந்த இடத்தில் ஒரு முன் மாதிரி நிகழ்வாக அறிமுகப்படுத்துகிறார்கள். பல பேர் அதை எதிர்க்கின்றனர். இருந்தாலும் பணம் கொடுத்து மக்களைத் தூண்டுகின்றனர். ஒரு போதைப்பொருள் வியாபாரி, அவனுடைய முன்னாள் காதலி, அவளது தம்பி, இரு தோழிகள், தம்பியை சீண்டிக்கொண்டே இருக்கும் ஒருவன் என வழக்கம் போல ஆட்கள். மக்களுக்கு சரியாக புரியாமல் எல்லோரும் இந்த நிகழ்வை சந்தோசமாக கொண்டாட, அதை மாற்ற அரசே ஆட்களை இறக்கி நிறைய பேரைக் கொல்கிறது. பிறகுதான் மக்களுக்கு விளைவுகள் புரிகிறது. இருந்தாலும், இதே வெற்றி என்று சொல்லி அரசு அதை நடைமுறைப்படுத்துகிறது. அவ்வளவுதான் நான்கு பாகங்களும். பொதுவாகவே அமெரிக்க மக்கள் கொஞ்சம் பயந்தவர்கள். "இந்த உலகம் சீக்கிரம் அழியப்போகுது, நம்மள காப்பாத்த யாராவது இருந்தா நல்ல இருக்கும்" என்ற எண்ணங்களே அங்கு சூப்பர் ஹீரோ படங்கள் வெற்றி பெற காரணம் என்று எங்கோ, எப்போதோ படித்துள்ளேன். இதுவும் அதே போல "ஒருவேளை இப்படி இருந்தா நல்லா இருக்குமோ" என்று எண்ணும் அளவிற்கு இருக்கும். ஆனால்,இதை வைத்து எப்படி ஏழைகள் கொல்லப்படுகிறார்கள், பணக்காரர்கள் எப்படி இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள் என்றெல்லாம் காண்பித்திருப்பார்கள். "சரி, இதைப்பத்தி இவ்ளோ சொல்ற அளவுக்கு என்ன இருக்கு" என்று நினைப்பவர்களுக்கு, படத்தில் வரும் சில காட்சிகள்/வசனங்கள். ஏழ்மையை ஒழிக்கிறேன் என்று சொல்லி ஏழைகளைக் கொல்வார்கள். அடிக்கடி புதிய அமெரிக்கா பிறக்கிறது என்பார்கள். ஒரு நாடு நன்றாக இருக்க நீ உன் உயிரை தியாகம் செய்கிறாய் என்று சொல்லி சொல்லி கொலை செய்வார்கள். நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கெல்லாம் முந்தைய அரசே காரணம் என்பார்கள். நாடு சுத்தமாக இது போன்ற அறுவை சிகிச்சை அவசியம் என்பார்கள். இது எல்லாவற்றையும் எங்கோ கேட்டது போல இருக்கிறதா. அதுதான் அதேதான்.
அருமையான குடும்பப் படம். சில இடங்களில் நாடகத்தனம் இருந்தாலும், கண்டிப்பாக ரசிக்கக்கூடிய படம்தான். கதை அனைவருக்கும் தெரிந்ததுதான். 5 பெண்களுக்கு பிறகு பிறக்கும் ஆண், அவனுக்காகவே வளர்ந்து நிற்கும் இரு அக்கா மகள்கள், பையனுக்கோ வெளியிலே காதல், இதனால் ஏற்படும் குடும்ப சிக்கல்கள், நடுவே ஒரு ஆணவக்கொலை வேறு. கடைசியில் எப்படி சுபமாக முடிக்கிறார் நாயகன் என்பதே கதை. நான் ஒரே பையன்தான். ஆனால், மிக நெருங்கிய சொந்தக்காரர் ஒருவருக்கு கிட்டத்தட்ட இந்த படத்தில் வந்த நிலைதான். தனது மகளைக் கட்ட வேண்டும், சொந்தம் விட்டுப் போக கூடாது என அக்காவும், அம்மாவும் இருக்க, இவரோ மறுக்க, பெரிய பஞ்சாயத்து. ஒரு வழியாக சமாதானம் ஆகி, வேறு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து முடித்திருந்தாலும், இன்னும் சுபம் ஆகவில்லை. யாரையாவது பலிகடா ஆக வேண்டும் என்ற நிலையில் என் தலை கூட வெட்டப்பட இருந்தது. அந்த ஒரு காரணமே என்னால் படத்துடன் ஒன்ற முடிந்தது. அது ஏன் தேவையே இல்லாமல் நிறைய படங்களில் இரு மனைவிகளை படத்தில் கொண்டு வருகிறார்கள் என்றே தெரியவில்லை. இதில் கூட ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் போகும் பாத்திரம் என்பதால் ஒத்துக் கொண்டாலும், சுந்தர பாண்டியன், கோலி சோடா படத்திலும் தேவையே இல்லாத இரு மனைவிகள் பாத்திரம். குடும்பத்துடன் முகம் சுழிக்க வைக்காமல் ரசித்து பார்க்கலாம். விஸ்வரூபம் 2:
விஸ்வரூபம் முதல் பாகத்திலேயே, அடுத்தது நட்டுக்கொள்ளும் என்று தெரிந்து விட்டது. அடுத்த ஒரு வருடத்திற்குள் வந்திருந்தால் கூட ஓரளவு வெற்றி பெற்றிருக்கும். இப்போது அரசியலில் வேறு இறங்க போவதால் மக்கள் நிறைய எதிர் பார்த்திருப்பார்கள். பொறுத்திருந்து இந்தியன் 2 வந்த பிறகு வெளி விட்டிருக்கலாம். படம் பார்த்த பிறகு தோன்றியது 'விஸ்வரூபம் 1 பார்த்து விட்டு சிலிர்த்து போய் சில்லையெல்லாம் வீசி எறிஞ்சேன், பெரிய பதிவெல்லாம் வேற போட்டேன். பாதிக்கு மேல் பழைய படத்தில் வந்த காட்சிகள். மீதி கூட படத்தொகுப்பின் மிச்சம் மீதி இருந்த காட்சிகள் என்று தெளிவாக தெரிகிறது. கடைசி சண்டை கூட போன படத்தின் இறுதியில் சும்மா காண்பிப்பார்கள். அம்மா, ராணுவம், கொஞ்சம் லண்டன் காட்சிகள் மட்டும் புதிது. பேசாமல் கமல் இணையத்திலேயே விட்டுருக்கலாம். கோவணமும், கொஞ்ச நஞ்ச மானமுமாவது மிஞ்சியிருக்கும். குறைந்தது புதுமை (போன முறை சொன்ன D2H போல) என்றாவது சொல்லி இருக்கலாம். இந்தியனுக்காகவும், நாயுடுக்காகவும் காத்திருக்கிறேன்.' மேற்கு தொடர்ச்சி மலை:
எந்த பொருளுமே கொஞ்சமாவது கலப்படம் இருந்தால்தான் நன்றாக இருக்கும். தங்கத்தில் செம்பு போல. அப்படியே இருந்தால் கொஞ்சம் கஷ்டம். இந்தப் படத்தில் அதுதான் நடந்துள்ளது. நம்முடைய வாழ்க்கையை படமாக எடுத்தால் நன்றாக இருக்குமா? நாமே பார்க்க மாட்டோம். முதல் 30 நிமிடங்கள் ஊர் சுற்றிக் காண்பிக்கிறார்கள். படத்தில் எல்லோரும் நாயகனுக்கு நன்மையே செய்கிறார்கள். இயற்கையான மனிதர்கள் என்பதால் நடிப்பு இயல்பாக இல்லை. நிறைய நாடகத்தன்மை அதனாலேயே வந்து விட்டது. குறிப்பாக ஒரு காட்சி, முதலாளியிடம் ஏலக்காய் மூட்டை கணக்குப்பிள்ளை கேட்கும் காட்சி. என்னதான் இருந்தாலும், இப்படியும் இன்னும் இது போல மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை சொன்ன விதத்தில் படம் வெற்றி பெற்றுள்ளது. வர வர இளையராஜாவும் இசையை சுருக்கி விட்டார். பாடல்களும் படத்துடன் பார்க்க, கேட்க நன்றாக உள்ளது. சில சமயங்களில், மேற்கு தொடர்ச்சி மலை படங்களில் மொத்த பின்னணி இசை 15 நிமிடங்கள் கூட இருக்காது. ஆனாலும், அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. இயல்பான பின்னணி இசையை நிறைய கொடுத்து விட்டார். மற்ற காதல் படங்களில் எல்லாம் (திருவாசகம் உட்பட) ஸிம்போனி இசை போல மாதா கோயில் மணி ஓசையும், 'ஓஓஓஓஓ' என்று வெளிநாட்டுக்காரர்கள் பாடுவதும் வேறு நிறைய வரும். மிஷ்கினின் சைக்கோவை எதிர்பார்க்கிறேன். மீண்டும் ஒரு நூறாவது நாள், 24 மணி நேரம் போல இருக்க வேண்டும். Memoir of a Murderer (கொரியன்):
முன்பெல்லாம் நிறைய உலகப்பட விமர்சகர்கள் இருந்தார்கள். ஆங்கிலம் தவிர கொரியா, ஜப்பான், மொழிப்படங்கள் பற்றி நிறைய பதிவுகள் வரும். நாமும் அதில் கொஞ்சம் பொறுக்கி எடுத்துக் பார்ப்போம். இப்போதெல்லாம் யாரும் கொரியப் படங்கள் பற்றி எழுதுவதில்லை. நாமும் சரி எதையாவது பார்த்து சொல்லலாம் என்றால், நமக்கென்று சரியாக அமையவேயில்லை. கடைசியாக தேறியது இதுதான். சிறு வயதில் தந்தையின் கொடுமையால் பாதிக்கப்பட்டு, அவரை முதல்கோலை செய்யும் ஒருவன், அதன் பிறகு அந்நியன் போல சமூகத்தில் இருக்கும் தவறான மனிதர்களை தொடர்ச்சியாக கொலை செய்கிறான். ஒரு முறை ஒரு விபத்து நடக்க, அதன் பின் தன மகளுக்காக சாதாரண மனிதனாக வாழ்கிறான். 15 வருடங்கள் கழித்து மறதி நோய் பாதிக்கிறது. அடிக்கடி தான் யார், எங்கே இருக்கிறேன் என்பதையே மறந்து, எங்கேயாவது போய் விடுகிறான். அதே நேரம் மீண்டும் தொடர்ச்சியாக கொலைகள் மீண்டும் நடக்கின்றன. அவனுக்கே, தான்தான் அந்தக் கொலைகளை செய்கிறோமோ என்ற குழப்பம், மகளின் காதலனான ஒரு காவலனின் மீது சந்தேகம், கடைசியாக இதில் தன் மகளே கொல்லப்பட போகிறாள் என்பதையும் உணர்கிறான். யார் உண்மையான கொலைகாரன், மகளை காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பதே படம். உண்மையில் அட்டகாசமான உருவாக்கம். ஒரு காட்சி கூட தேவையின்றி இல்லை. முதல் காட்சியில் குனிந்து தனது வெள்ளைக் காலணியை பார்ப்பது கூட ஒரு காரணம் உண்டு. தமிழிலும் கூட மறதியை வைத்து படங்கள் வருகிறதே. கஜினிகாந்த் - யப்பா முடியலடா சாமி. 60 வயது மாநிறம் - கன்னடத்தில் (கோதி பண்ணா சாதாரண மைக்கட்டு) ஏற்கனவே பார்த்து விட்டேன். முடிந்தவரை அதன் அசலை பார்த்து விடுவது. பிற்பாடு நேரம் போகவில்லை என்றால் நகலை பார்ப்பது. அதனால் தமிழில் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. இத்தனைக்கும் ராதாமோகன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர், இளையராஜாவும் கூட இருக்கிறார். ஆனாலும் மொழி மாற்றுப் படங்களின் மீது அவ்வளவு ஈர்ப்பு இல்லை. கஜினிகாந்த் கூட தெலுங்கில் பார்த்தேன். தமிழில் நகைச்சுவை நன்றாக இருக்குமோ (வானம் படம் போல) என்று நினைத்தேன். ஆனால் இல்லை. U-Turn கூட ஏற்கனவே கன்னடத்தில் பார்த்து விட்டேன். பியார் பிரேமா காதல், ஒன்றும் சொல்வதற்கில்லை. 90களில் பிறந்தவர்களுக்கே அந்தப் படம் பார்க்க தகுதி இல்லையாம். நானெல்லாம் 80களின் ஆரம்பம். அப்புறம் எப்படி. RX 100 (தெலுங்கு):
மறுபடியும் ஒரு மொக்கை காதல் கதையா (ஊர் சுற்றும் நாயகன், பண்ணையார் வீட்டு நாயகி, காதலுக்கு எதிர்ப்பு) என்று சலிப்படைந்து தருணத்தில், படத்தில் வந்த அந்த திருப்பம். நாடோடிகள் படத்திலும் அதுதான் நினைத்தேன், அதற்கு மாறாக நடந்தது. இருந்தாலும், தலைப்பிற்கும் படத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஒரே ஒரு இடத்தில, நீ இல்லாமல் நான் என் பைக்குடன் பேசிக்கொண்டு நாட்களை கடத்தினேன் என்கிறான் நாயகன். அவ்வளவுதான். அதை எரித்ததற்கு கூட ஒரு எதிர் வினையும் இல்லை. நம்ம செந்தூரப்பூவே ராம்கி கூட உள்ளார். இப்போதெல்லாம் பாலிவுட், ஹாலிவுட் அளவிற்கு போய் விட்டது. தெலுங்கு மற்றும் தமிழ்ப்படங்கள் பாலிவுட் அளவிற்கு வந்துள்ளன. எப்படி என்றால், ஹிந்திப்படங்களில் தேவையற்ற நிர்வாண, பாலுறவு காட்சிகள். நம்மூரில் முத்தம், முத்தம் முத்தம். அப்படி என்ன கதைக்கு தேவை என்று இதுவரை எனக்கு புரியவில்லை. அர்ஜுன் ரெட்டி, RX100 படங்களை என்ன தைரியத்தில் நம்மூரில் எடுக்கிறார்கள் என்று புரியவில்லை. சரி கலைக்கண்ணோடு பார்ப்போம். அர்ஜுன் ரெட்டி படத்தில், நாயகியின் தம்பியிடம் நாயகன், "நான் அர்ஜுன்" என்பான். அவன் உடனே " அர்ஜுன் what?" என்று கேட்பான். நம்மூரில் அப்படியா? "அப்புறம் தம்பி அப்பா அம்மா என்ன செய்யுறாங்க, எந்த கோயிலுக்கு போறீங்க" என்று போகும். பாலா எப்படி எடுத்திருக்கிறார் என்று பார்ப்போம். அவருக்கு பரோட்டாவிலேயே கொத்து பரோட்டாதான் பிடிக்கும். இதில் எப்படி கொத்தி இருக்கிறார் என்று பார்ப்போம். ஷூட்டர் - Shooter (ஆங்கிலம்):
உரிமை கீதம் என்றொரு படம். பிரபு, கார்த்திக் நடித்தது. RV உதயகுமாரின் முதல் படம். அதில் ஏழையான பிரபுவிடம் பணம் கொடுத்து ஒரு அரசியல்வாதியை பொதுக்கூட்டத்தில் கொல்வது போல நடிக்க சொல்வார்கள். கேட்டால், அப்போதுதான் அவர் மீது பரிதாபம் வரும், உனக்கும் எதுவும் ஆகாது என்பார்கள். பார்த்தால் நிஜமாகவே அவரை யாரோ சுட்டு விட, பழி பிரபு மீது விழும்.அந்த அரசியல்வாதியின் மகனாக கார்த்திக். இருவரும் எப்படி கெட்டவர்களை பழி வாங்குகிறார்கள் என்பதுதான் கதை.
இந்தப் படத்தில் நண்பன் இறந்ததால், ராணுவத்தில் இருந்து வெளியேறும் நாயகன் (எவ்வளவு தூரத்திலும் சரியாக குறி பார்த்து சூடுபவன் - Sniper/Shooter). அவனிடம் அமெரிக்க ஜனாதிபதியை கொல்ல போவதாக தகவல் வந்துள்ளது எனவும், என்னென்ன வழிகள் இருக்கும் என கண்ணுட் பிடித்தும் சொல்ல சொல்வார்கள். அதே போல செய்தால், அதை வைத்து ஒரு கொலை செய்து பழியை நாயகன் மேலே போட்டு விடுவார்கள். இதை ஒரு அப்பிராணி FBI கண்டு பிடித்து விட, அவரையும் கொல்ல துரத்துகிறார்கள். எப்படி தப்பிக்கிறார்கள், பழி வாங்கினார்கள் என்பதுதான் படம். பரவாயில்லை. பார்க்கலாம். The Jackal (ஆங்கிலம்):
இதுவும் ஒரு வகை எலி பூனை கதைதான். எனக்கென்னவோ எலி பூனை என்பதை விட பாம்பு கீரி என்று சொல்லலாம் என நினைக்கிறேன். ரஷ்யாவில் ஒரு தீவிரவாதி தலைவனின் தம்பியை அமெரிக்கா, ரஷ்யா அதிகாரிகள் இணைந்து கொன்று விட, அதற்கு பதிலாக அமெரிக்காவின் ஒரு பெரிய மனிதரைக் கொல்ல சொல்லி அந்த தீவிரவாத தலைவன் ஒரு கூலிப்படை ஆளை அமர்த்துகிறான். இதை மோப்பம் பிடிக்கும் அரசு, அவனை பிடிக்க சிறையில் உள்ள ஒரு குற்றவாளியின் உதவியை நாடுகிறது. அவர்கள் இருவருக்கும் இடையே வேறு ஒரு பழைய கணக்கு உள்ளது. இறுதியில் யார் வெல்கிறார்கள் என்பதே படம். அவ்வளவுதாங்க.
கருணாநிதி மறைவு செய்தி வந்தவுடனே, இணையத்தில் இரு பிரிவுகளின் மோதல் ஆரம்பித்து விட்டது. தமிழ்நாட்டை பிடித்த சாபம் போய் விட்டது என ஒரு பிரிவு, இனி தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என இன்னொரு பிரிவு. கருணாநிதி அவ்வளவு முக்கியமாக தமிழகத்துக்கு இருந்தாரா, என்னுடைய பார்வையில் இந்த பதிவு. என்னுடைய கேள்வி அறிவை வைத்தே இந்த பதிவு. ஏதேனும் தவறு இருந்தால், கருத்திடவும். திருத்திக்கொள்கிறேன்.
பொதுவாக, ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது, மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறதா என்றால், முதலிடம் என்று சொல்ல முடியா விட்டாலும், முதல் 5 இடங்களுக்குள் கண்டிப்பாக இருக்கும். இதற்கு அடித்தளம் இட்டவர்கள் இரண்டு பேர். பெரியார் மற்றும் காமராஜர். முதலாமர், எல்லோருக்கும் கல்வி வேண்டும், அனைவரும் சமமாக கல்வி கற்க வேண்டும் என்று சொன்னவர். இரண்டாமவர், நிறைய பள்ளிகளைத் திறந்தவர், மதிய உணவு போட்டவர். இன்றைய 30 வயதிற்குள் உள்ள இளைய தலைமுறையினரே, உங்களது பெற்றோரின் ஆசிரியர்கள் அல்லது உங்களது தாத்தா படித்தவராக இருந்தால் அவர்களிடம் கேளுங்கள், அதிலும் பெண்கள் இருந்தால் கண்டிப்பாக கேளுங்கள். இவர்களது அருமையை சொல்வார்கள். எனக்கு இவர்கள் பற்றி முழுமையாக தெரிய வைத்தது என் அம்மாவும், என் அத்தையும். காமராஜருக்குப் பிறகு அண்ணா. அவர் எதையும் பெரியதாக செய்வதற்கு முன்பே இறந்து விட்டார். அதன் பிறகு தமிழகத்தை ஆண்டது 3 பேர்தான். அதில் தமிழகம் இந்த அளவிற்கு முன்னேறி உள்ளது. அதற்கு முதல் காரணம் கருணாநிதி, காரணம், பெரியாரும் காமராஜரும் இட்ட அடித்தளத்தில், சரியான முறையில் கட்டடம் கட்டியவர் அவர்தான். பிறகுதான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா. இன்று பொறியியல் படிப்பு இந்த அளவுக்கு நாறிப்போய் கிடைப்பதற்கு முக்கிய காரணம் எம்ஜிஆர். தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆரம்பிக்க அனுமதி அளித்து, அதிலும் தனக்கு வேண்டப்பட்ட அனைவருக்கும் அனுமதி கொடுத்துள்ளார். சத்யராஜ் கூட ஒரு பேட்டியில் எம்ஜிஆர் தன்னை ஒரு பொறியியல் கல்லூரி வேண்டுமானால் ஆரம்பித்துக்கொள் என்று சொன்னதாகவும், தான் அதை மறுத்து விட்டதாகவும் கூறினார். அதற்காக இருவரும் எந்த நன்மையும் செய்யவில்லை என்று அர்த்தமில்லை. ஆனால், அதனைத் தொடர்ந்து இன்று வரை அதை நிறுத்தாமல் தொடர்ந்ததன் விளைவு, எல்லா திமுக,அதிமுக மாவாட்டும் செயலாளர்களும் ஆளுக்கு இரண்டு பள்ளிகள், நான்கு கல்லூரிகளும் வைத்துள்ளனர். பொதுவான வரலாறு என்னவென்றால், அண்ணா இறந்த பிறகு, 'அரசியல்' செய்து கருணாநிதி முதல்வராகிறார். அப்போது 'எமர்ஜன்சி' காலம். அதை எதிர்த்தார். 5 ஆண்டுகள் முடியும் முன்பே ஆட்சி கலைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் அவர் என்ன சாதனைகள் செய்தார் என எனக்கு தெரியவில்லை. அதன் பிறகு, 13 ஆண்டுகள் வனவாசம். மீண்டும் ஆட்சி கிடைத்தாலும், 2 ஆண்டுகளில் கலைக்கப்படுகிறது. ராஜீவ் காந்தி கொலை வேறு நடக்க, படு தோல்வி அடைகிறது கட்சி, ஆனாலும் அவருக்கு வெற்றி. 5 ஆண்டுகள் கழித்து வெற்றி பெறுகிறார். 5 ஆண்டுகள் முழுமையாக ஆளுகிறார், மீண்டும் தோற்கிறார். 5 ஆண்டுகள் கழித்து அரைகுறையாக வெற்றி பெற்று, எப்படியோ 5 ஆண்டுகளை ஓட்டுகிறார். அவ்வளவுதான், முற்றும். கருணாநிதி என்னென்ன நன்மைகள் செய்தார் என்பது இருக்கட்டும். ஆனாலும் எனக்கு என்ன சந்தேகம் என்றால், அரசியல் ஆளுமை உள்ள ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர் என பல ஆளுமைகளுடன் போட்டி போட்டு வென்ற கருணாநிதியால், கடைசி 15 ஆண்டுகளில் ஏன் ஜெயலிதாவை முழுமையாக தோற்கடிக்க முடியவில்லை. அது ஜெயலலிதாவின் வெற்றியா? கண்டிப்பாக இல்லை. கருணாநிதியின் தோல்வி. அது ஏன்? பிறகு பார்ப்போம். கருணாநிதி நமக்கு (சரி எனக்கு) என்னென்ன செய்தார் என்று பார்ப்போம். பள்ளி மாணாக்கர்களுக்கு இலவச பேருந்து பயணச்சீட்டு, முதலில் 8ம் வகுப்பு வரை இருந்தது, பிறகு 12ம் வகுப்பு வரை கொடுக்கப்பட்டது. இரண்டுமே கருணாநிதி ஆட்சியில்தான். கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் 15 சதவீத இட ஒதுக்கீடு. இது ஜெயலலிதா அரசால், சாமர்த்தியமாக ஒழிக்கப்பட்டது, மீண்டும் கொண்டு வரப்படவில்லை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்று பல உள்ளன. மறுக்கவோ, மறைக்கவோ முடியாதது இட ஒதுக்கீடு. பல குடும்பங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள் வெளிவந்து, நல்ல வேலையில் உள்ளனர் என்றால், அது கருணாநிதி கொண்டு வந்த பல திட்டங்களால்தான். சரி, மற்றவர்கள் கருணாநிதி ஏன் கெட்டவர் என்று சொல்கிறார்கள் என்று பார்ப்போம். அவர்தான் மதுக்கடைகளை திறந்தார். சரி, அதற்கு பிறகுதானே எம்ஜிஆர் வந்தார், அவர் மூடி இருக்கலாமே? ஜெயலலிதா வந்தார், அவைகளை அரசுடைமையாக்கி விட்டார். ஹிந்தி படிக்க விடாமல் செய்து விட்டார். இதற்கு எதை சொன்னாலும் அவர்களுக்கு புரியாது. ஹிந்தி கட்டாயம் என்பதைத்தான் எதிர்த்தார்கள். இன்னொன்றும் சொல்கிறேனே. ராஜாஜி குலக்கல்வி முறையை கொண்டு வந்தார். "சரி, இதிலென்ன தப்பு, படிக்கும்போதே ஒரு வேலைய தெரிஞ்சுக்கலாமே" என்றார்கள். ஆனால் அவர் சொன்னது தந்தையின் தொழிலைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று. அதைத்தான் எதிர்த்தார்கள். சரி, ஏன் வீழ்ந்தார். முதலாவது, குடும்ப ஆதிக்கம். ஸ்டாலின் உறுப்பினராகி, பிறகு படிப்படியாக தலைவர் ஆனார் என்பார்கள். சரிதான், ஆனால், ஸ்டாலினைத் தவிர வேறு யாருமே ஏன் அப்படி வரவில்லை, வந்த வைகோவையும் அனுப்பி விட்டீர்கள். அது அவரிடம் மட்டும் இல்லை. எல்லா திமுக ஆட்களிடமும் இருக்கிறது. அதே போல ஆரம்ப கட்டத்தில் வேலை வாய்ப்பு பதிவின் முதிர்வு அடிப்படையில் வேலை என்றாலும் கூட, அரசு வேலைகள் அனைத்தும் திமுகவை சார்ந்த நபர்களுக்கே தரப்பட்டன. தகுதியான நபர் என்பதை விட கட்சிக்காரர் என்பதற்குத்தான் முக்கியத்துவம். நடராசன் (சசிகலாவின் கணவர்) கூட ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர் என்றுதான் அவருக்கு அரசு வேலை தரப்பட்டது, இதை அவரே சொல்லி இருக்கிறார். நெல்லுக்கு பாயும்போது, புல்லுக்கு பாய்வது போல சில சரியானவர்களுக்கும் வேலை கிடைத்தது. அதனாலேயே பொதுவாக வயதான பல அரசு ஊழியர்கள் கருணாநிதியின் விசுவாசிகளாக இன்னும் இருக்கிறார்கள். எல்லோரும் ஊழல் செய்கின்றனர். அதனாலேயே மாறி மாறி ஆட்சி நடந்தது. 2015 வெள்ளத்தின்போது அதிமுக அரசு காட்டிய அலட்சியம், அது முடிந்தவுடனே ஆளும் கட்சி விழாவிற்காக நடந்த அட்டகாசம், இவையனைத்தையும் தாண்டியும் ஏன் 2016ல் திமுக தோற்றது? ஏனென்றால், திமுக நேரடியாக மக்களின் வயிற்றில் அடித்தது. ஒரு பாலம் காட்டியதில் ஊழல், குட்கா ஊழல் எல்லாம் எந்த தனி மனிதனையும் பாதிக்கவில்லை, சமூகத்தை பாதித்தது (அதற்காக அதை நான் நியாயப்படுத்தவில்லை). 2006-11 வரையிலான திமுக ஆட்சியில் மக்களின் நிலங்கள் மிரட்டியும், விரட்டியும் பிடுங்கப்பட்டன. அது மட்டுமே மிக முக்கிய காரணம். இன்னமும் பலர் வயிறெரிந்து சொல்வார்கள். பலர் இன்னும் கண்ணீருடன் அதை மீட்க அலைந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் குறிப்பாக சொன்னால், எங்கெங்கெல்லாம் பணம் வரும் என்பதை திமுக கண்டு பிடிக்கும், அதிமுக அதை தொடரும். 2006 வரை கலைஞராக இருந்த அவர், பிறகு கருணாநிதியாக மாறியதற்கு காரணம் அவர் மட்டுமே. இலவசங்கள், பல விளம்பரங்கள், தேவையில்லாத பாராட்டு விழாக்கள், மதுரையில் தினகரன் அலுவலக தீ விபத்து, (அழகிரியின் மதுரை சாதனைகள் பற்றி தனியாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை), 3 பேர் இறப்பிற்கு பின் இவர்களது குடும்பம் இணைய 'கண்கள் பனிக்க, இதயம் இனிக்க' என்று கூறியது, செம்மொழி மாநாடு என்ற பெயரில் கோயமுத்தூரில் நடந்த குடும்ப விழா என்று இன்னும் சில சம்பவங்கள் உள்ளன, அவற்றை நான் குறிப்பிட விரும்பவில்லை, எல்லோருக்கும் தெரியும். கடைசியாக சொல்வது என்னவென்றால், 2001 வரை இருந்த கலைஞர் கருணாநிதியை எனக்கு பிடிக்கும். அது வரை மக்களுக்காக உழைத்தார், அதன் பிறகும் மக்களுக்காகவே உழைத்தார், சொந்த மக்களுக்காக. அவர் ஒரு சில பேர் மீது கட்சி சார்பாக நடவடிக்கை எடுத்திருந்தால் கூட, 2016ல் ஆட்சியைப் பிடித்திருக்க முடியும். எல்லாவற்றையும் தாண்டி ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிடியில் இருந்து கல்வி, அரசு, பதவிகளை கடைக்கோடி ஏழை வரை கொண்டு சென்றது கருணாநிதிதான் என்பதை மறுக்க இயலாது. பின் குறிப்பு: "சூப்பருங்க. இந்த திராவிட ஆட்சியாலதான் நாம் இப்படி இருக்கோம், இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது" என்று யாரும் வரவேண்டாம்.