Sunday, October 4, 2009

ரஜினி vs கமல் / மம்முட்டி vs மோகன் லால்

ஒரு வருடத்திற்கு சற்றே முன்பு, தசாவதாரத்தைப் பற்றி எழுதாமல் ஒரு பதிவர் இருந்தால், ஏதோ அவர் பதிவுத் துரோக குற்றம் செய்தவர் போல அனைவரும் பார்த்தனர். இப்போது அதே போல 'உன்னைப் போல் ஒருவன்'. பதிவு போடவில்லை என்றால், நீ என்னைப் போல் ஒருவன் இல்லை என்று ஒதுக்கி விடுவார்கள் போல. எனவே, என்னுடைய பங்கு, பதிவு.

எல்லோரும் படத்தைப் பற்றி அனைத்து விதங்களிலும் அலசி விட்டார்கள். நீரஜ் பாண்டே மற்றும் கமல் கூட அதைப் பற்றி யோசித்து இருக்க மாட்டார்கள். சாண்ட்விச் சாப்பிடுகிறார், உயர்தர செருப்பு அணிந்திருக்கிறார், துப்பாக்கி வைத்திருக்கிறார், கண்ணாடி போட்டிருக்கிறார், சட்டை வேறு அணிந்திருக்கிறார் என்பது வரை சொல்லி விட்டார்கள்.

நானும் ஒரு பதிவிட வேண்டும் என்று எண்ணியபின், எல்லாமே வந்து விட்டதே, ஏதாவது ஒரு நல்ல பதிவை எடுத்து ரீமிக்ஸ் பண்ணலாமா என்றும் யோசித்தேன். பிறகுதான் இந்த தலைப்பு ஞாபகம் வந்தது. பதிவும் வந்து விட்டது.

பதிவின் தலைப்பிற்கேற்ப, தளபதி மற்றும் உன்னைப் போல் ஒருவன் ஆகிய இரு படங்களைப் பற்றி எனது கருத்துக்களை எழுதுகிறேன்.

ஒரு புதன்கிழமை (A Wednesday) நான் ஏற்கனவே பார்த்திருந்ததால், கமல் அதை எப்படி தமிழ்ப்படுத்தியிருப்பார் என்ற எதிர் பார்ப்பு மட்டுமே இருந்தது. அதுவும் பாடல் வெளியிட்ட பின், அது இன்னும் எகிறி விட்டது. அந்த படத்தில் பாடல்களா என்று. ஆனால், கமல் நம்மைப் போல ஒருவர் இல்லையே! கலக்கி விட்டார்.

தளபதி. ரஜினி, மம்முட்டி, மணி ரத்னம், இளையராஜா, சந்தோஷ் சிவன் என்று அனைத்து ஜாம்பவான்களும் இணைந்து, இசைந்து(?) பணியாற்றிய படம். பொதுவுடமையாக்கப்பட்ட ஒரு கதையின் நவீன காலத்து ரீமேக்.

இரு படங்களுக்கும், கடினப்பட்டு, நான் கண்டு பிடித்த ஒற்றுமைகளாவன. இரண்டுமே ரீமேக். இரு படங்களிலும் தலா ஒரு முன்னணி தமிழ் மற்றும் மலையாள நாயகர்கள் நடித்துள்ளனர். மம்முட்டி, கமல் இருவரும் முதலில் கெட்டவர்கள் போல சித்தரிக்கப்படுவார்கள். இரு படங்களிலும் அருமையான பாடல்கள் படமாக்கப்படவில்லை. ரஜினி, கமல் இருவருமே தனது உண்மையான பெயரை சொல்லிக்கொள்ள மாட்டார்கள். (ரஜினி 'தளபதி என்று சொல்லிக்கொள்வார்). இருவரும் தான் செய்யும் வன்முறை/தீவிரவாத செயல்களுக்கு, பெண்களுக்கு நிகழ்ந்த வன்செயல்களை முக்கிய, தங்கள் செயல்களை நியாயப் படுத்த காரணமாக சொல்வார்கள். வேறெதாவது இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லவும்.

நடிப்பைப் பொறுத்தவரை, ரஜினி தவிர மற்ற மூவரும், விருதுகளுக்கான போட்டியில் சற்று முன், பின்னேதான் இருக்கிறார்கள். ரஜினியோ விருது பெறவில்லையே தவிர, சற்றும் சளைத்தவரல்ல என்பதை பல படங்களில் நிரூபித்துள்ளார்.

தளபதி படத்தில் நடிப்பதற்கான இடங்கள் அதிகம். ஆனால், உன்னைப் போல் ஒருவனில், வெறும் பேச்சு மட்டும்தான். இந்த இரு பாடங்களில், என்னைப் பொறுத்தவரை முதலிடம் மோகன் லாலுக்குத்தான். அலட்டிக்கொள்ளாமல், நவரசத்தையும் முக பாவங்களிலேயே காட்டி, அசத்தி விட்டார்.

திரைக்கதை, வசனம் இரண்டிலும் என்னைப் பொறுத்தவரை உன்னைப் போல் ஒருவன் முந்துகிறது. (இன்னும் சொல்வதென்றால், A Wednesday இன்னும் நன்றாக இருந்தது என்பது என் கருத்து. ஆங்கில வசனங்கள் அதில் நன்றாக பொருந்தியது. குறிப்பாக அந்த ஹாக்கர் முதலில் சொல்லும் He is good, but not the best அதன் பின் He is not just good, he is the best என்பதும், எனக்கு மிகவும் பிடித்தது.) ஒரு பொது மனிதன் இப்படி மாறுவதற்கு சொல்லும் காரணங்கள் ஹிந்தி படத்தில் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும். பெயரே தெரியாத, தினசரி உடன் பயணிக்கும் பயணியின் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளும் அந்த காட்சி. அதே போல உணர்ச்சியை தமிழில் கொடுக்கவே 'கருவறுத்தல்' போன்றவற்றை கமல் கொண்டு வந்திருக்க வேண்டும். அது நடந்தது யாருடைய மகளுக்கு என்பதை நம்முடைய அனுமானத்திற்கு விட்டிருப்பதும் அந்த உணர்ச்சிக்காகத்தான்.

தளபதியில் நிறைய விஷயங்களை காட்சிகளிலும், பின்னணி இசையிலும் புரிய வைத்து விடுவார்கள். ரஜினியும், மம்முட்டியும் அரவிந்தசாமியை சந்திக்கும் காட்சியில், "தேவா, சூர்யா ரெண்டு பேர்" என்ற வசனம் வரும்போது தேவா வரும் இடத்தில் ரஜினியையும், சூர்யா எனுமிடத்தில் மம்முட்டியையும் காட்டுவார்கள். நட்பின் ஆழத்தைக் காட்டும் இடம். பின்னணி இசைக்கு எதை சொல்ல, எதை விட? அந்த கோயில் காட்சி ஒன்று போதுமே.

A Wednesday படத்திற்கும், உன்னைப் போல் ஒருவனுக்கும் மேலோட்டமாக பார்த்தால், அந்த புதன் கிழமையைத் தவிர வேறு வித்தியாசமே இல்லை (வசனங்களை விட்டு விடுவோம்). நான் முதலில் போக்கிரி தெலுங்கு பார்த்தேன். பின் தமிழில் பார்த்த பின் நண்பர்களிடம், "எதுக்கு தேவையில்லாம திரும்ப எடுத்தாங்களோ? கிராபிக்ஸ்ல விஜய் முகத்த மட்டும் மகேஷ் பாபு முகத்துக்கு பதிலா மாத்தியிருக்கலாம், இலியானாவும் இருந்திருக்கும்" என்றேன். இப்போது உன்னைப் போல் ஒருவனை பார்த்த பின், எனக்குள் முதலில் எழுந்த எண்ணமும் கிட்டத்தட்ட அதேதான். கமலின் மற்ற ரீமேக் படங்களில், திரைக்கதையில் வித்தியாசங்கள் காட்டியிருப்பார். ஆனால், ஒரு நல்ல படத்தை அதன் சாரம் குறையாமல் மக்களிடம் கொண்டு சேர்க்க, கமல் செய்ததில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

மக்கள் கூறுவது போல, ஏதாவது ஒரு குப்பனோ, சுப்பனோ அந்த பாத்திரத்தில் நடித்திருந்தால், "அவர் குண்டு வைப்பதும், மோகன் லாலுக்கு சவால் விடுவது நம்பும்படியே இல்லை. வேறு யாராவது பெரிய ஆளை போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று சொல்வார்கள். அக்கரைப் பச்சை. கமலும் காய்த்த மரமல்லவா!!

மொத்தத்தில் இரண்டுமே அருமையான படங்களே. இரண்டு படங்களும் இந்த ஒரு காரணத்தால்/நபரால் வெற்றி பெற்றது என்று சொல்ல முடியாது என்று கூறி, இடப் போகும் பின்னூட்டங்களுக்கு நன்றி கூறி, விடை பெறுகிறேன். நன்றி, வணக்கம்.

இந்த இரு படங்களையும் ஒப்பிடுவது போல, வேறு மடத்தனம் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். நானும் அதைத்தான் நினைத்தேன். ஆனாலும் என்ன செய்ய. ஏதாவது செய்ய வேண்டுமே. உங்களது கருத்துக்களை இட வேண்டும்.


Wednesday, August 5, 2009

நான் ரீமேக் செய்ய விரும்பும் படங்கள்!!!

பல படங்களைப் பார்த்த பின்பு, 'அடடா, நல்லாத்தான் இருந்தது.. என்ன, நடுவுல அந்த சீன மட்டும் கொஞ்சம் மாத்தியிருந்தா படம் சூப்பரா இருந்திருக்கும்.. தேவையில்லாம லவ்வு சீன் வேற. அந்த பாட்டு வேற தேவையில்லாம' என்று நமக்கு பல கருத்துக்கள் தோன்றும்..

இது போல பல படங்கள் தேவையில்லாத காட்சியமைப்புகளாலேயே தோல்வியடைந்துள்ளன. சில படங்கள் ஆங்கிலப் படங்களை காப்பி அடித்திருந்தாலும், ஒழுங்காக அதை செய்யாததாலேயே தோல்வியடையும். நான் பார்த்த சில தமிழ் படங்கள், எனக்கு மிகவும் பிடித்தவை, ஆனாலும் சில காரணங்களால் தோல்வியடைந்திருக்கும். அவற்றைப்பற்றி என்னுடைய பார்வை. ஏன், எதனால், எப்படி போன்ற காரணங்கள் என்னுடைய மாறுகண்ணின் ஓரப்பார்வையில் அலசப்படுகின்றன..

சின்ன ராஜா:

கார்த்திக் இரு வேடங்களிலும், ரோஜா, பிரியா ராமன் மற்றும் மணிவண்ணன் நடித்து, வெளிவந்த படம்.. ஆங்கிலப்படத்தின் தழுவலா என்று தெரியவில்லை.

கார்த்திக்கின் தந்தைக்கு இரட்டைக் குழந்தைகள்.. இரண்டும் கார்த்திக்தான். ஒருவர் பாட்டியிடம் நல்லவராகவும், இன்னொருவர் பணக்கார தந்தையிடம் செல்லமாகவும், பொறுப்பற்ற ஊதாரியாகவும் வளருவார். இதை சகிக்க முடியாமல், அவரது அப்பா, சொத்தை நல்ல கார்த்திக் பெயரில் எழுதி வைத்து விடுவார். அதனால் கோபத்தில் அவரைக் கொன்று விடுவார்.

பழியும் கெட்ட கார்த்திக் மேல்தான் விழும். ஆனால், சின்ன ஆள்மாறாட்டம் செய்து, நல்ல கார்த்திக் பெயரில் அவர் வீட்டுக்கு வந்து விட்டு, அவரை சிறைக்கு அனுப்பி விடுவார். காதலி ரோஜா, பாட்டி அனைவரையும் தான்தான் நல்ல கார்த்திக் என்று நம்ப வைத்தும் விடுவார். மணிவண்ணனுக்கு மட்டுந்தான் சந்தேகம் இருக்கும். ஆனாலும், அதையும் காட்டிக்கொள்ளாமல் உடனிருப்பார்.

பிரியா ராமன் வக்கீலாக வந்து, சிறையிலுள்ள கார்த்திக்கு ஆதரவாக இருப்பார். அவர்தான் நல்ல கார்த்திக் என்று நிரூபிக்க அனைத்து ஆதாரங்களும், எதிராகவே திரும்பும். பார்த்தால், அவரும் கெட்ட கார்த்திக்கின் ஆள்தான். இறுதியில், சிறையில் சிறு சண்டையில் ஆளை மாற்றி விட்டு வெளியே வருவார். இதற்கு நடுவில் பிரியா, மணிவண்ணனையும் கொன்று விடுவார்கள். இறுதியில் சுபம்.

படம் பார்த்து வெகு நாட்களாகி விட்டது. எனவே, என்னுடைய திரைக்கதையும் உள்ளே இருக்கலாம். ஷொட்டு, குட்டு இரண்டும் எனக்கே சொந்தம்.

படம் பார்க்க எனக்கு மிகவும் பிடிந்திருந்தது. ஆனாலும், ஒரு சீரற்ற திரைக்கதையால் தடுமாறும். சின்ன வயதிலிருந்து வளர்த்த பாட்டியால் கூட கண்டு பிடிக்க முடியாமலிருப்பது. வழக்கம் போல காவல் துறை போன்றவை. இப்போது யாராவது நல்ல திரைக்கதை அமைத்தால் கண்டிப்பாக நான் பார்ப்பேன்.

சுதேசி:

விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு நல்ல ஆரம்பப்புள்ளியாக வந்திருக்க வேண்டிய படம். நிஜமாகவே நல்ல கதை. மொக்கை திரைக்கதை. தேவையில்லாமல் அத்தை மகள், டூயட் எல்லாம் வைத்து சொதப்பி விட்டார்கள்.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்ததே, கொலை செய்த காட்சியை வைத்து முதலமைச்சரை மிரட்டி, மக்களுக்கு நன்மை செய்ய வைப்பார். இறுதியில் அவர் திருந்தி, விஜயகாந்தை அரசியலுக்கு அழைப்பார். தான் சிறைக்குப் போவதாகவும் சொல்வார். ஆனால் அவரோ நீங்களே செய்யுங்கள். மக்களை பொறுத்தவரை நீங்கள் நல்லவராகவே இருங்கள். அந்த ஆதாரம் என்னிடமே இருக்கட்டும் என்று சொல்வார். இதிலிருந்து ஒரு பாதியை சுட்டு 'வாமனன்' படத்தை எடுத்திருப்பார்கள்.

கண்ணோடு காண்பதெல்லாம்:

அர்ஜுன் வித்தியாசமாக, எதிர் மறை கதாபாத்திரத்தில் நடித்த படம். தான் துரத்தி துரத்திக் காதலிப்பவளை, பெண் பார்க்க வரும் அர்ஜுனிடம், நாயகன் அவள் தன் காதலி என்று சொல்ல, அவரும் பெருந்தன்மையாக விலகி விடுவார்.

ஆனால் நாயகனின் தொந்தரவு தாங்க முடியாத நாயகி, அர்ஜுன் தன்னை திருமணம் செய்யப் போவதாகக் கூற, அவனோ இருக்காது என்று மறுக்க, இருவரும் அர்ஜுனைப் பார்க்க போவார்கள். அர்ஜுன் தன் கனவுப் பெண்ணைப் பார்த்து, அவளிடம் தனது காதலை சொல்லும் நேரத்தில், இவர்கள் வந்து குழப்பி விட, காதலி கோபித்துக் கொண்டு போய் விடுவாள். இதற்கிடையே, நாயகன் நாயகி இடையே காதலும் வந்து விடும். அர்ஜுனோ அவர்கள் சேரக்கூடாது என்று துரத்த, கடைசியில் வழக்கம் போல சொதப்பி இருப்பார்கள்.

படத்தில் ஒரு நல்ல பாடலும், சோனாலி பிந்த்ரே என்ற சுமாரான பிகரும் உண்டு. பரவாயில்லை.

சபாஷ்:

பார்த்திபன், திவ்யா உண்ணி, ரஞ்சித் நடித்தது.

அருமையான திரில்லர் படம். மனைவியை மானபங்கப்படுத்தி, தற்கொலைக்கு தூண்டிய நெருங்கிய நண்பனை (மனைவியின் பழைய காதலன்) பழி வாங்கும் நாயகன். கண் தெரியாதவன் போல நடிக்கும் நாயகனை எப்படியாவது மாட்ட வைக்கத் துடிக்கும் நண்பன். இறுதியில், நண்பனுக்கு தண்டனை கிடைக்க தன் பார்வையையே இழக்கும் நாயகன்.

படத்தில் பாடல்களையும், தேவையில்லாத காதல் காட்சிகளை நீக்கினால் அருமையான ஆங்கிலப் படம் போல இருக்கும். சமீபத்தில் இதே போல தோன்றிய படம் 'நியுட்டனின் மூன்றாம் விதி'.

புதிய முகம்:

லாஜிக் பொத்தல்களை மட்டும் தைத்து விட்டால், உண்மையிலே அருமையான படம். (எல்லா படமுமே அப்படித்தான் என்கிறீர்களா!?!) அருமையான பாடல்கள், பின்னணி இசை. ஆனாலும், மற்ற துறைகள் ஒத்துழைக்காததால், சற்று சறுக்கி விட்டது.

படத்தில், பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பின், குள்ளமான, ஒல்லியான வினீத், உயரமாக, குண்டாக மாறிவிடுவார். இது ஒரு பொத்தல் என்பது என் கருத்து. இதே போல நிறைய அங்கங்கே..

ஆஹா:

அருமையான, குடும்பப்பாங்கான, சிறு சிறு திருப்பங்களுடன் கூடிய நல்ல படம். நம்பவே முடியாமல் தேவா அருமையாக இசையமைத்த 'முதன் முதலில் பார்த்தேன்' என்ற பாடலும் உள்ள படம். 'பெப்சி' விளம்பரம் தந்த படம். தமிழர் கலாச்சாரத்தை காப்பாற்றும் இன்னொரு படம். ஆனாலும் ஏதோ குறையும் படம். கண்டு பிடித்துக் கொடுத்தால் 'ஆஹா!!' என்று சந்தோஷப் படுவேன்.

இவை தவிர நிறைய படங்கள் கிளைமாக்சில்தான் சொதப்பியிருப்பார்கள். அவற்றை தனிப்பதிவில்தான் இட வேண்டும். நான் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் (ஆஹா, புதிய முகம் தவிர) அவ்வளவாக தெரியாத படங்கள் என்று நான் நினைக்கிறேன். உங்களது தேர்வையும் பின்னூட்டத்தில் குறிப்பிடவும். நன்றி.

Saturday, July 4, 2009

வாசிப்பனுபவம் (கல்லூரி)

ஒரு வழியாக, ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்நிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி, பொதுத்தேர்வு, நுழைவுத்தேர்வு எல்லாவற்றையும் முடித்து விட்டு ஒரு வழியாக கல்லூரியில் சேர்ந்து விட்டேன். சென்னை என்னை வாடா வெண்ணை என்றது. முதன் முதலில் வீட்டைப் பிரிந்து விடுதியில். சுற்றிலும் நண்பர்கள் மட்டுமே. உலகத்திலேயே நாந்தான் நிறைய படிப்பேன் என்ற தலைக்கணத்திற்கு சம்மட்டியால் அடித்து போல, ஒவ்வொருவரும் தலையணை அளவில் புத்தகங்கள் வைத்திருந்தனர். சரிதான் என்று நினைத்தேன்.

கல்லூரியில்தான் மீண்டும் சுஜாதா (மச்சி, அது ஆம்பளைடா). பல கதைகள் புரியவேயில்லை. சென்னையில் உள்ள அத்தை வீட்டிற்கு அடிக்கடி போவேன். (சத்தியமாக அங்கு பெண்ணில்லை) அவர்களோ பயங்கரமாக படிப்பவர்கள். அங்குதான் கல்கி, சாவி, தேவன், சாண்டில்யன் போன்றோரின் புதினங்களைப் படித்தேன். ஊரில் நூலகத்தில் அவை இருந்தாலும், அவற்றை தேடும் அளவிற்கு ஞானம் வளரவில்லை.

சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு போவோம். (அப்போது நடந்தது காயிதே மில்லத் கல்லூரியில்.. கேர்ள்ஸ் காலேஜுடா.. ஏதாவது பிகர் இருக்குண்டா). ஆனாலும் எதுவும் வாங்குவதில்லை. வேலைக்கு போன பின் என்னென்ன வாங்க வேண்டுமென்று மட்டும் பார்ப்போம்.

ஒரு கால கட்டத்தில், ஆங்கில நாவல் ஒன்று விடுதி வட்டாரத்தில் சக்கை போடு போட்டது. The DaVinci Code. எல்லோரும் அதைப் படித்துவிட்டு, Last Supper Painting பாத்தியா என்றெல்லாம் கேட்க, என்னடா இது அரவிந்துக்கு வந்த சோதனை என்று, இ-புத்தகத்தை எடுத்து, அகராதிக்கென்று, இ-அகராதியையும் திறந்து படித்தேன், படித்தேன், படித்தேன். கிட்டத்தட்ட மூன்று வாரத்திற்கு மேல் ஆனது அதை முடிக்க. சற்றே பெருமையாகவும் இருந்தது. இனி நாளைய வரலாறு என் பேர் சொல்லும் என்ற பெருமை வேறு. என்னடா DaVinci Code தான் படிச்சியா, Angels & Demons படிக்கலியா என்று மீண்டும் கேட்க, கடுப்பாகி, டான் பிரௌனின் மீதி மூன்று நாவல்களையும் வாங்கி படித்து விட்டேன். சும்மா சொல்லக்கூடாது. நன்றாகவே இருந்தது.

அதன் பின் கொஞ்சம் கொஞ்சம் ஆங்கில நாவல்கள் படிக்க ஆரம்பித்தேன். இருந்தாலும், அவ்வளவாக பிடிக்கவில்லை. எனவே, தமிழாக்கம் செய்யப்பட்டதை படித்தேன். அதைப் படித்த பின்புதான், ஆங்கிலத்தில் படிப்பதே நல்லது என்று உணர்ந்தேன்.

கல்லூரி முடித்து, வேலைக்கு போக ஆரம்பித்த பின், வருடா வருடம் புத்தக கண்காட்சிக்குப் போய், ஒவ்வொரு வருடமும் கண்காட்சிக்குப் போய் குறைந்தது இரண்டாயிரதுக்குக் குறையாமல் அள்ளிக்கொண்டு வருவோம்.

பொதுவாக, போகும்போது 'இந்த புத்தகத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும்' என்று ஓரிரு புத்தகங்களைத்தான் நினைத்துக்கொண்டு போவோம். ஆனால், அதைத் தவிர மற்றவற்றை அள்ளிக்கொண்டு வருவோம். வேலைக்குப் போக ஆரம்பித்தவுடன், நான் வாங்க நினைத்த முதல் புத்தகம், விகடன் நிறுவனத்தாரின் 'கோல்'. அது தொடராக வந்தபோதே, என் துறை சம்பந்தப்பட்டது என்பதால், விரும்பிப் படிப்பேன். ஆனால், 'வந்தார்கள் வென்றார்கள்', 'வாவ் 2000', 'கற்றதும் பெற்றதும்' போன்றவற்றைத்தான் முதலில் வாங்கினேன்.

என் அத்தை வீட்டிலேயே மிகப்பெரிய நூலகம் இருப்பதால், நான் சற்று வித்தியாசனமான புத்தகங்களையே வாங்குவேன். மேலே சொன்ன 'கோல்' போன்றவை. அதே போல தேவனின் கதைகளையும் நான்தான் வாங்கினேன். முதலில் வாங்கியது, வேறென்ன, 'துப்பறியும் சாம்பு' தான்.

இந்த வருடம் 'சுஜாதா வருடம்'. 'குமரிப் பதிப்பகம்' ஸ்டாலில், எதேச்சையாக பார்த்தோம். பழைய புத்தகங்கள் போல இருந்தன. என்ன என்று பார்த்தல், எல்லாமே சுஜாதாவின் கதைகள், ஆனால் பழைய பதிப்பு. எனவே, விலையும் குறைவு. விக்ரம் 23 ரூபாய். 24 ரூபாய் தீவு 26 ரூபாய். முன்னமே எண்பது ரூபாய்க்கு வாங்கிய 21ம் விளிம்பு, வெறும் 40 ரூபாய். எனவே, இருந்த புத்தகங்கள் எல்லாவற்றிலும் ஒன்றை எடுத்து விட்டோம். இது மட்டுமின்றி, 'மேலாண்மை பொன்னுசாமி' புத்தகங்களும் அதே போல இருந்தன. கிட்டத்தட்ட, 32 புத்தகங்கள், 1200 ரூபாய்க்கு எடுத்தோம். பில் போடவே அரை மணிக்கு மேல் ஆனது.

தற்போது என்னுடைய வாசிப்பனுபவம் தொடருவது 'குமுதம்', 'விகடனில்' தான். அவ்வப்போது பழைய புத்தகங்கள் எடுத்து வாசிப்பதோடு சரி. அதுவும் அலுவலக பயண நேரங்களில்தான். வீட்டில் நமக்கு இணையத்தில் மேயவே நேரம் சரியாக உள்ளது. நிறைய இ-புத்தகங்கள் இருந்தும் படிப்பதில்லை.
இருந்தாலும் நாங்க விட மாட்டோமுல்ல!!!

இதோட இந்த தொடர் முடியுது..

அடுத்து வருவது,

என்னான்னு எனக்கே தெரியாது. உங்கள மாதிரியே நானும் செருப்போட (சீச்சீ) வெறுப்போட (அடங்க) ஆவலோட காத்திருக்கேன்.

வாசிப்பனுபவம் (மேல்நிலைக்கல்வி)

ஒரு வழியாக, ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்நிலைக்கல்வி எல்லாம் முடித்துவிட்டு, நாமக்கல் டவுனில் மேல்நிலைக்கல்விக்காக சேர்ந்தேன். படித்து முடித்த சந்தோசத்தை விட, இனி புத்தகங்கள் வாங்குவதில் பிரச்சினை இருக்காது என்பதில்தான் பெரும் சந்தோஷம்.

நாமக்கல்லிலேயே புகழ் பெற்ற அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (தெற்கு) தான் நான் சேர்ந்தது. சன் தொலைக்காட்சியில் ஏழெட்டு வருடங்களுக்கு முன், "உங்கள் மாவட்டத்தில் சிறந்த பள்ளி எது?" என்று முதலில் நடத்திய கருத்துக்கணிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் முதலாவதாக வந்தது. தமிழ் நாட்டிலேயே கருத்துக்கணிப்பில் அப்போது வந்த ஒரே அரசு பள்ளியும் எங்களுடையதுதான் என நினைக்கிறேன். அப்படிப்பட்ட 'தலை சிறந்த பள்ளி'.

சர்வ சாதாரணமாக 'A'ராளாமாக, Aனைத்து வகையான புத்தகங்களும் உலவிய இடம். டியுஷன் கட்டாயம் என்பதால், வகுப்பில் பெரும்பாலும் சும்மாவே இருப்போம். வீட்டிலிருந்து ஒவ்வொருவரும் புத்தகம் கொண்டு வந்து, மாற்றி மாற்றி படிப்போம். பல முறை அரிசியும், சில முறை உமியும். ஊதி ஊதி சாப்பிட வேண்டியதுதான்.

பத்தாவது வரையில், மதிப்பெண்கள் ஈரிலக்கமும், தரவரிசை ஓரிலக்கமும் இருக்கும். இங்கோ நிலைமை தலைகீழ் ஆகி விட்டது. வீட்டிலோ, எருமை மாடு வாங்க பணம் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். எனவே, சற்றே பாடங்களையும் படிக்க ஆரம்பித்து விட்டேன். புதியதாக எதுவும் ஆரம்பிக்கவில்லை. கல்லூரியில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன். அது அடுத்த பதிவில்.

Wednesday, June 3, 2009

வாசிப்பனுபவம் (உயர்நிலைக்கல்வி)

என்னுடைய ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி அனுபவங்கள் பற்றி படிக்க...

என்னதான் அரும்பு மீசை முளைத்து, நான்கு புத்தகங்கள் படித்துவிட்டு பீலா விட்டாலும், ஊருக்குள் நம்மை இன்னும் சின்ன பசங்க போலவே பார்க்கிறார்களே? ஏன் என்று வீட்டில், தனியறையில் யோசித்தோம். அப்போதுதான் மாத நாவல்களை விட, வார இதழ்கள் படித்து, நம் அறிவை சீக்கிரம் வளர்த்துக்கொள்ள வேண்டும். எனவே 'பல்சுவை வார இதழ்களை' படிக்க ஆரம்பித்தோம்.

குமுதம், ஆனந்த விகடன், கல்கி, கல்கண்டு, குங்குமம் (ஓசிதான்.. வாரா வாரம் நான்கு, ஐந்து ரூபாய்க்கு எங்கே போவது?). அதுவரை படித்த புத்தகங்களில் எல்லாம், மீறிப்போனால் பத்து நகைச்சுவைத் துணுக்குகளுக்கு மேல் இருக்காது. ஆனால், இவற்றில் உள்ள துணுக்குகளுக்காகவே விரும்பிப் படித்தேன்.

அதே நேரம், ஊரில், முழு நேர நூலகத்தை திறந்து விட்டார்கள். புத்தகங்களும் நூறிலிருந்து கிட்டத்தட்ட ஐநூறுக்கு மேல் ஆகி விட்டது. நூலகரும் புது நூலகர். ஆனாலும், என்னுடைய அருமை பெருமை எல்லாம் சொல்லி, ஓரளவு பெரியாளாக காட்டிக் கொண்டேன். சந்தாதாரராக நானும், பினாமியாக என் அம்மாவையும் சேர்த்து விட்டேன். அங்கேயே குமுதம், விகடன் எல்லாம் வரும். என்னுடைய 'பவர் ஆப் அட்டர்னியை' பயன்படுத்தி வீட்டுக்கு எடுத்து வந்து விடுவேன்.

அப்போதுதான் சிறுகதைகளின் பெருமைகளைப் பற்றி அறிந்தேன். சுஜாதா அப்போதுதான் அறிமுகம் (யாரந்த பிகர்னு தெரியலையே). அதன் பின் கேள்வி-பதில் பகுதி. மதன் பதில்கள், அரசு பதில்கள், அல்லி பதில்கள் முதல் சுண்டெலியார் பதில்கள் வரை அனைத்தும் பரிட்சயம்.

ஆனாலும், நூலகத்தில் நீதிக்கதைகளும், நாவல்களுமே பொழுதுபோக்கு. அவ்வப்போது கட்டுரைகளும் படிப்பதுண்டு. பத்தாவது அரையாண்டுக்குப் பின் வீட்டில் சொல்லி, என்னை நூலகத்தில் சேர்க்கக்கூடாது என்று தடையுத்தரவு போட்டு விட்டதால், படிப்பது கொஞ்சம் (கொஞ்சமே) குறைந்தது. என் வீட்டில் இல்லாமல், நண்பர்கள் வீட்டில் வைத்து படிப்பேன். என் வீட்டிலோ, 475க்கு மேல் எடுத்தால் சைக்கிள் என்றெல்லாம் ஆசை காட்டினார்கள். எனவே, சரி என்று சிறு நிறுத்தம் இட்டு வைத்தேன்.

மேல்நிலைக்கல்வியும், கல்லூரிக்கல்வியும் விரைவில்..

பத்தாம் வகுப்பு முடிவுதானே? வீட்டிற்கு வீண் செலவு வைக்கவில்லை.

Thursday, April 23, 2009

வாசிப்பனுபவம் (இடைநிலைக்கல்வி)

என்னுடைய ஆரம்பக்கல்வி அனுபவங்களைப் பற்றி முன்பே சொல்லி விட்டேன். அதிலிருந்தே என்னைப் பற்றி புரிந்திருக்கும். மன திடம் உள்ளவர்கள் மட்டுமே தொடரவும்.

சிந்துபாத் படிக்க ஆரம்பித்தவுடனே, படக்கதைகளின் மீதான ஆர்வம் தொடக்கி விட்டது. எனவே அடுத்த கட்டமாக 'ராணி காமிக்ஸ்' படிக்க ஆரம்பித்தேன். அப்போது அது இரண்டு ரூபாய். மாதமிரு முறை. அதுவும் யாராவது நாமக்கல் போனால்தான் கிடைக்கும். எனவே, எப்படியாவது நான்கு ரூபாயை தேற்றி, யாரையாவது வாங்கி வர சொல்வேன். அதை அப்படியே ரொடேஷனில் விட்டு 'அம்புலி மாமா' வாங்கி படிப்போம். ராணி காமிக்ஸில் ஒரு இதழ் விட்டு ஒரு இதழ் 'மாயாவியின்' கதை வரும். அதுதான் விரும்பிப் படிப்போம்.

லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் படித்தாலும், எனக்கு அவ்வளவாக பிடிக்காது. ஏனோ தெரியவில்லை. [ஆனாலும் டயானா சூப்பருங்க.. எனக்கு ரொம்ப நாளா அப்ப இருந்த சந்தேகம் என்னன்னா, மாயாவி டயானாவும், சார்லஸ் டயானாவும் ஒண்ணா வேறயா? ஒரு வேளை, சார்லஸ்தான் மாயாவியா?.. பாத்தா அப்படி தெரியலியே?. காமிக்ஸ்லயும் முகத்த காமிக்கல.. ஒரு வேளை அப்படி இருக்குமோ]

என் அம்மாவிற்கு காமிக்ஸ் படிப்பது பிடிக்காது. அவர்கள் நாமக்கல் போகும்போது வாங்கி வரச் சொன்னால் மதிக்கவே மாட்டார்கள். ஒரு கட்டத்தில் தொந்தரவு தாங்க முடியாமல், 'கோகுலம்' வாங்கி தந்தார்கள். அதன் பின் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள், மாதம் தவறாமல் கோகுலத்தின் வாசகனாக இருந்தேன். கோகுலம் கோடை இதழில் வரும் லேபில்கள்தான் என் பாட புத்தகங்களை அலங்கரிக்கும். நடுநடுவே 'அம்புலிமாமா' வேறு. விக்கிரமாதித்யனும் பேசிக்கொண்டேதான் இருக்கிறான். வேதாளமும் முருங்கை மரத்திற்கு தாவிக்கொண்டுதான் உள்ளது. அதிலுள்ள ஓவியங்களும் அருமையாக இருக்கும்.

இவையெல்லாம் 'சைடில்' போய்க்கொண்டிருந்தபோது, ஊரில் ஒரு பகுதி நேர நூலகம் ஆரம்பித்தார்கள். மாலை ஐந்து முதல் ஏழு வரை. என் அம்மாதான் நூலகர். இங்கே திரைக்கதையில் சிறு திருப்பம். நாந்தான் அம்மா. என் அம்மா ஒ. பன்னீர் செல்வம். அங்கே நூலகத்தில், 'மலரும் மாலையும், குழந்தைகளுக்கு நீதிக்கதைகள், 101 நீதிக்கதைகள், மரியாதை ராமன், முல்லா, தெனாலி ராமன் மற்றும் பீர்பால் கதைகள், தலைவர்களின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்' என்று படித்து தீர்த்தேன். இது போன்ற புத்தகங்கள் அலமாரியில் எங்கு இருக்குமென்று எனக்கு மட்டுமே தெரியும்.

நூலகம் இரண்டு வருடங்கள் மட்டுமே (நான் ஏழாவது முடிக்கும் வரை) இருந்தது. அதன் பின், முழு நேர நூலகம் கட்டப் போவதாக சொல்லி, இதை மூடி விட்டார்கள். எனக்குதான் ரொம்ப கஷ்டமாக போய் விட்டது. இந்த காலகட்டங்களில் புத்தகமின்றி ஒரு வேளை கூட சோறு இறங்காது. ஏனென்றால் நிறைய புத்தகங்கள். எல்லாவற்றையும் படிக்க வேண்டுமென்ற வெறி. சாப்பாடு கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேல் சாப்பிடுவேன். அதுவும் புத்தகம் படித்துக்கொண்டுதான். வீட்டில் என் மீது வன்முறை கட்டவிழ்த்து விடும்போதுதான், புத்தகத்தை சற்றே நகர்த்தி விட்டு சாப்பிட்டு முடிப்பேன்.

நூலகத்தை மூடியபின், புத்தகங்களின் வரவு குறைந்து விட்டதால், கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது. எதையாவது படித்துக்கொண்டே இருக்க வேண்டும். எனவே, அடுத்த கட்ட நடவடிக்கையாக, ஊரில் யார யார் எது போன்ற புத்தகங்கள் வாங்குகிறார்கள்/படிக்கிறார்கள் என்ற தகவலை திரட்டினோம். அப்போதுதான் ஊரில் உலாவும் சில முக்கிய புத்தகங்கள் பற்றி தகவல் தெரிந்தது. அவை!?!?

ஒன்னுமில்லீங்க.. நான் சொன்னது க்ரைம் நாவல், சூப்பர் நாவல், பாக்கெட் நாவல் போன்றவைதான். எட்டாவதில்தான் அவற்றின் அறிமுகமே கிடைத்தது. அப்போது என் அண்ணன் (பெரியம்மா பையன்) பதினொன்றாவது நாமக்கல்லில் சேர்ந்திருந்தான். அங்கே பழைய புத்தக கடைகளிலிருந்து பாதி விலைக்கு நாவல்களை வாங்கி வருவான். ஒரு கட்டத்தில் வாடகைக்கு வாங்கியே படிக்க ஆரம்பித்து விட்டோம். [அந்த கடையில் பாதி விலைக்கு வாங்கி, படித்த பின், மீண்டும் மூன்றில் ஒரு பாதி விலைக்கு அங்கேயே விற்போம். பின், டீல் பேசி, வாடகை ஆக்கி விட்டோம்].

ராஜேஷ் குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திர குமார் (ஙே!), இந்திரா சௌந்திரராஜன், பால குமாரன் என்று பெரும்படையே எங்களை ஆக்கிரமித்தது. கிட்டத்தட்ட இதே வரிசைதான் எங்களின் விருப்பமும். இப்படியாக எனது புத்தக அனுபவம், இடைநிலைக்கல்வி (எட்டாவது) வரை தொடந்தது.

"நீ என்ன கருமத்த படிச்சா எங்களுக்கென்ன, முடிஞ்சா அதப் பத்தி நீ என்ன நெனச்ச/நெனக்கிறேன்னு சொல்லுடா" அப்டின்னு நீங்க நெனக்கிறது தெரியுது.. வரும்.. அதுவும் வரும்..

Sunday, April 19, 2009

வாசிப்பனுபவம் (ஆரம்பக்கல்வி)

சுவாசிப்பு போல வாசிப்பு என்பதும் எனது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத செயல். எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் அதேதான். இந்த அனுபவங்களை ஒரே பதிவில் இட முடியாது என்பதாலும், பின்னால் பல பதிவுகள் இட வேண்டும் என்பதாலும் சில பல பாகங்களாக இடுகிறேன்.

அந்த காலத்தில்(?), என்னை LKG, UKG படிக்க வைக்க வேண்டுமென்று என் வீட்டில் ஆசைப்பட்டனர். பிற்காலத்தில் எப்படியும் PG பண்ண மாட்டேன் என்று அப்போதே தெரியுமோ என்னவோ. ஆனால் எங்கள் ஊரில் அப்போது அந்தளவு வசதி இல்லாததால், அங்கன்வாடியில்தான் (எங்களூரில் பால்வாடி என்று பெயர்) சேர்ந்தேன். வீட்டிலிருந்து பத்தடி தள்ளித்தான் அது. அங்கே அணில், ஆடு என்று சித்திரம் மூலம் படிப்பு தொடங்கியது. வீட்டிலும் அ, ஆ, என படிப்பு தொடங்கியது.

அங்கன்வாடி முடிந்ததும், அடுத்து பத்தடி தள்ளியிருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வி தொடங்கியது. இரண்டாவது முடியும்போது ஓரளவு எழுத்துக்கள் தெரிய ஆரம்பித்தவுடனே, எனது திறமையை யாருக்காவது காண்பிக்க வேண்டுமென்று தோன்றியது. அப்போது (இப்போதும்) எங்கள் பெட்டிக் கடைக்கு தினத்தந்திதான் வாங்குவோம். அதில் நம் கண்ணை உடனே கவர்வது 'கன்னித் தீவுதான்'. தினமும் அதை படித்து படித்து என் அம்மாவிடம் சொல்வதுதான் என் பணி. யோசித்துப் பார்க்கும்போது, பொறுமை என்பதை அம்மாவிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என தோன்றுகிறது.

கன்னித்தீவு அதன் பின் நான் ஊரில் இருந்த தொடர்ந்து இருந்தவரை (கல்லூரியில் சேரும் நாள் வரை.. கிட்டத்தட்ட பதினொரு வருடங்கள்) தவற விட்டதேயில்லை. எங்கேயாவது ஊருக்கு போனால் கூட, வந்து ஊரில் இல்லாத நாட்களில் வந்த செய்தித்தாள்களை எடுத்து படிப்பேன். நான் செல்லும் ஊரில் தினத்தந்தி வந்தாலும், எங்கள் கடையில் படித்தால்தான் எனக்கு சந்தோஷம். நானே அதன் பின் கதையை தொடர முடியும் என்று நம்பிக்கை வந்து விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

முதலில் கப்பல் பயணம். கப்பல் கவிழ வேண்டும். கடலுக்குள் ஒரு ஆபத்து.. அங்கே ஒரு இளவரசியை காப்பாற்ற வேண்டும். அவளை தாய் நாட்டில் சேர்த்து விட்டு, லைலா சிறியவளான கதை சொல்ல வேண்டும். மீண்டும் ஒரு கப்பலை வாங்கி, பயணத்தை தொடர வேண்டும். சில சமயம் இளவரசன் வர வேண்டும். முக்கியமான விஷயம், அடிக்கடி 'அப்போது' என்று தொடரும் போட வேண்டும்.

இது தவிர தினத்தந்தியில் கவர்ந்தது, 'சிரிப்பு' மற்றும் 'ஆண்டியார் பாடுகிறார்'. ரொம்ப நாளாக, எனக்கு புரியாத விஷயமாக இருந்தது, 'இந்த படத்திற்கு வசனம் தேவையில்லை.' இது என்னடா சிரிப்பு, அடிக்கடி வேறு வேறு படங்களுடன் வருகிறதே? புரிய வெகு நாளாயிற்று.

'இங்கு வெளியான இரண்டு சிரிப்பிற்கும் ரூ. 15 பரிசு. இங்கே படைப்பு இடம் பெற, 15 பைசா அஞ்சலட்டையில் இந்தியன் இங்கினால் வரைந்து அனுப்பவும்.' நானும் இங்க்கை சட்டையில் கொட்டி, வீட்டில் உதை வாங்கியதுதான் மிச்சம்.

ஆண்டியார் பாடுகிறார்.. 'ஒளியும் ஒலியும்' நிகழ்ச்சியில் வந்த பாடலின் வரிகள் வந்தால், உரு தட்டிக்கொண்டு போய், திறமையைக் காண்பிப்பேன்.

அப்போதெல்லாம், தொலைக்காட்சியில் வரும் (அட, நம்ம தூர்தர்ஷன் தாங்க) வாராந்திர தொடர்களின் கதையும், ஞாயிறு போடும் திரைப்படங்களின் கதையும் அன்றைய இதழில் வரும். அதையும், படித்து விட்டு போய், "டேய், இன்னைக்கு என்ன ஆகும் தெரியுமா?" என்று சொல்வேன். அப்போது எங்கள் வீட்டில் தொலைகாட்சி இல்லை. எனவே, ஏதாவது நண்பன் வீட்டில், அவர்களுடன் சேர்ந்துதான் பார்ப்பேன். அப்போது "பாத்தியா.. நாந்தான் அப்பவே சொன்னேன்ல" என்பேன். [இதைப் பற்றி பின்னால் ஒரு தனி பதிவே இடுகிறேன்.]

இவை தவிர, நான் மற்றபடி படிப்பது, கொலை, கொள்ளை பற்றிய செய்திகள்தான். (நாங்கெல்லாம் அப்பவே ஊர்ல பெரிய ரவுடிங்க..). அவற்றை என் சொந்த சரக்கோடு, பள்ளியில் கதை கட்டுவதுதான் அப்போதைய குலத் தொழிலே. [அப்போது ஊரிலேயே, எங்கள் கடைக்கு மட்டும்தான் செய்தித்தாள் வரும். எனவே, என் நண்பர்களுக்கு நான் சொல்வதுதான். மற்ற யாரும் அங்கே வந்து படிக்க மாட்டார்கள். அவர்கள் வீட்டில் யாரும் பார்த்தால் உதைதான். "ஒழுங்கா மொதல்ல பாடத்த படி.. அப்புறமா இத பாக்கலாம்.."].

இப்படியாக, என் ஆரம்பக் கல்வியின் பெரும்பகுதி சிரிப்பு, சிந்துபாத், ஆண்டியார், கொலை, கொள்ளை என்று தினத்தந்தியுடன் வளர்ந்தது. உயர்நிலைக் கல்வி அடுத்த பதிவில்....