Thursday, April 23, 2009

வாசிப்பனுபவம் (இடைநிலைக்கல்வி)

என்னுடைய ஆரம்பக்கல்வி அனுபவங்களைப் பற்றி முன்பே சொல்லி விட்டேன். அதிலிருந்தே என்னைப் பற்றி புரிந்திருக்கும். மன திடம் உள்ளவர்கள் மட்டுமே தொடரவும்.

சிந்துபாத் படிக்க ஆரம்பித்தவுடனே, படக்கதைகளின் மீதான ஆர்வம் தொடக்கி விட்டது. எனவே அடுத்த கட்டமாக 'ராணி காமிக்ஸ்' படிக்க ஆரம்பித்தேன். அப்போது அது இரண்டு ரூபாய். மாதமிரு முறை. அதுவும் யாராவது நாமக்கல் போனால்தான் கிடைக்கும். எனவே, எப்படியாவது நான்கு ரூபாயை தேற்றி, யாரையாவது வாங்கி வர சொல்வேன். அதை அப்படியே ரொடேஷனில் விட்டு 'அம்புலி மாமா' வாங்கி படிப்போம். ராணி காமிக்ஸில் ஒரு இதழ் விட்டு ஒரு இதழ் 'மாயாவியின்' கதை வரும். அதுதான் விரும்பிப் படிப்போம்.

லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் படித்தாலும், எனக்கு அவ்வளவாக பிடிக்காது. ஏனோ தெரியவில்லை. [ஆனாலும் டயானா சூப்பருங்க.. எனக்கு ரொம்ப நாளா அப்ப இருந்த சந்தேகம் என்னன்னா, மாயாவி டயானாவும், சார்லஸ் டயானாவும் ஒண்ணா வேறயா? ஒரு வேளை, சார்லஸ்தான் மாயாவியா?.. பாத்தா அப்படி தெரியலியே?. காமிக்ஸ்லயும் முகத்த காமிக்கல.. ஒரு வேளை அப்படி இருக்குமோ]

என் அம்மாவிற்கு காமிக்ஸ் படிப்பது பிடிக்காது. அவர்கள் நாமக்கல் போகும்போது வாங்கி வரச் சொன்னால் மதிக்கவே மாட்டார்கள். ஒரு கட்டத்தில் தொந்தரவு தாங்க முடியாமல், 'கோகுலம்' வாங்கி தந்தார்கள். அதன் பின் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள், மாதம் தவறாமல் கோகுலத்தின் வாசகனாக இருந்தேன். கோகுலம் கோடை இதழில் வரும் லேபில்கள்தான் என் பாட புத்தகங்களை அலங்கரிக்கும். நடுநடுவே 'அம்புலிமாமா' வேறு. விக்கிரமாதித்யனும் பேசிக்கொண்டேதான் இருக்கிறான். வேதாளமும் முருங்கை மரத்திற்கு தாவிக்கொண்டுதான் உள்ளது. அதிலுள்ள ஓவியங்களும் அருமையாக இருக்கும்.

இவையெல்லாம் 'சைடில்' போய்க்கொண்டிருந்தபோது, ஊரில் ஒரு பகுதி நேர நூலகம் ஆரம்பித்தார்கள். மாலை ஐந்து முதல் ஏழு வரை. என் அம்மாதான் நூலகர். இங்கே திரைக்கதையில் சிறு திருப்பம். நாந்தான் அம்மா. என் அம்மா ஒ. பன்னீர் செல்வம். அங்கே நூலகத்தில், 'மலரும் மாலையும், குழந்தைகளுக்கு நீதிக்கதைகள், 101 நீதிக்கதைகள், மரியாதை ராமன், முல்லா, தெனாலி ராமன் மற்றும் பீர்பால் கதைகள், தலைவர்களின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்' என்று படித்து தீர்த்தேன். இது போன்ற புத்தகங்கள் அலமாரியில் எங்கு இருக்குமென்று எனக்கு மட்டுமே தெரியும்.

நூலகம் இரண்டு வருடங்கள் மட்டுமே (நான் ஏழாவது முடிக்கும் வரை) இருந்தது. அதன் பின், முழு நேர நூலகம் கட்டப் போவதாக சொல்லி, இதை மூடி விட்டார்கள். எனக்குதான் ரொம்ப கஷ்டமாக போய் விட்டது. இந்த காலகட்டங்களில் புத்தகமின்றி ஒரு வேளை கூட சோறு இறங்காது. ஏனென்றால் நிறைய புத்தகங்கள். எல்லாவற்றையும் படிக்க வேண்டுமென்ற வெறி. சாப்பாடு கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேல் சாப்பிடுவேன். அதுவும் புத்தகம் படித்துக்கொண்டுதான். வீட்டில் என் மீது வன்முறை கட்டவிழ்த்து விடும்போதுதான், புத்தகத்தை சற்றே நகர்த்தி விட்டு சாப்பிட்டு முடிப்பேன்.

நூலகத்தை மூடியபின், புத்தகங்களின் வரவு குறைந்து விட்டதால், கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது. எதையாவது படித்துக்கொண்டே இருக்க வேண்டும். எனவே, அடுத்த கட்ட நடவடிக்கையாக, ஊரில் யார யார் எது போன்ற புத்தகங்கள் வாங்குகிறார்கள்/படிக்கிறார்கள் என்ற தகவலை திரட்டினோம். அப்போதுதான் ஊரில் உலாவும் சில முக்கிய புத்தகங்கள் பற்றி தகவல் தெரிந்தது. அவை!?!?

ஒன்னுமில்லீங்க.. நான் சொன்னது க்ரைம் நாவல், சூப்பர் நாவல், பாக்கெட் நாவல் போன்றவைதான். எட்டாவதில்தான் அவற்றின் அறிமுகமே கிடைத்தது. அப்போது என் அண்ணன் (பெரியம்மா பையன்) பதினொன்றாவது நாமக்கல்லில் சேர்ந்திருந்தான். அங்கே பழைய புத்தக கடைகளிலிருந்து பாதி விலைக்கு நாவல்களை வாங்கி வருவான். ஒரு கட்டத்தில் வாடகைக்கு வாங்கியே படிக்க ஆரம்பித்து விட்டோம். [அந்த கடையில் பாதி விலைக்கு வாங்கி, படித்த பின், மீண்டும் மூன்றில் ஒரு பாதி விலைக்கு அங்கேயே விற்போம். பின், டீல் பேசி, வாடகை ஆக்கி விட்டோம்].

ராஜேஷ் குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திர குமார் (ஙே!), இந்திரா சௌந்திரராஜன், பால குமாரன் என்று பெரும்படையே எங்களை ஆக்கிரமித்தது. கிட்டத்தட்ட இதே வரிசைதான் எங்களின் விருப்பமும். இப்படியாக எனது புத்தக அனுபவம், இடைநிலைக்கல்வி (எட்டாவது) வரை தொடந்தது.

"நீ என்ன கருமத்த படிச்சா எங்களுக்கென்ன, முடிஞ்சா அதப் பத்தி நீ என்ன நெனச்ச/நெனக்கிறேன்னு சொல்லுடா" அப்டின்னு நீங்க நெனக்கிறது தெரியுது.. வரும்.. அதுவும் வரும்..

7 comments:

 1. கொடுத்து வச்ச ஆளுங்க நீங்க.. அம்மாதான் நூலகர்...ம்ம்ம்ம்...
  மச்சம்யா...
  /விக்கிரமாதித்யனும் பேசிக்கொண்டேதான் இருக்கிறான். வேதாளமும் முருங்கை மரத்திற்கு தாவிக்கொண்டுதான் உள்ளது. //
  இதுதான் வாழ்க்கையின் தத்துவம்...விக்ரமாதித்யனுக்குப் பதில் ‘மனைவி’, வேதாளத்துக்குப் பதில் ,’கணவன்’ இது எப்படி இருக்கு..?
  //சாப்பாடு கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேல் சாப்பிடுவேன். அதுவும் புத்தகம் படித்துக்கொண்டுதான். வீட்டில் என் மீது வன்முறை கட்டவிழ்த்து விடும்போதுதான், புத்தகத்தை சற்றே நகர்த்தி விட்டு சாப்பிட்டு முடிப்பேன்//
  சேம் பிளட்...
  நல்லாக் கோர்வையா இருக்கு அரவிந்த்...

  ReplyDelete
 2. \\இதுதான் வாழ்க்கையின் தத்துவம்...விக்ரமாதித்யனுக்குப் பதில் ‘மனைவி’, வேதாளத்துக்குப் பதில் ,’கணவன்’ இது எப்படி இருக்கு..?\\

  அனுபவம் பேசுகிறது??

  ReplyDelete
 3. பதிவு நல்லா இருக்கு...

  /-- அங்கே நூலகத்தில், 'மலரும் மாலையும், குழந்தைகளுக்கு நீதிக்கதைகள், 101 நீதிக்கதைகள், மரியாதை ராமன், முல்லா, தெனாலி ராமன் மற்றும் பீர்பால் கதைகள், தலைவர்களின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்' என்று படித்து தீர்த்தேன். --/

  கொடுத்து வைத்தவர் சரியான வயதில் குழந்தைகள் இலக்கியத்தை பரவலாக தேடித் தேடி படித்துள்ளீர்கள். சமீபத்தில் அரபிய இரவுகள் புத்தகம் படித்தேன். அதில் சிந்துபாத், மற்றும் அலாவுதீன் கதைகள் மறுவாசிப்பு செய்ய நேர்ந்தது. அருமையான கதைகள்...

  /--ராஜேஷ் குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திர குமார் (ஙே!), இந்திரா சௌந்திரராஜன், பாலகுமாரன் என்று பெரும்படையே எங்களை ஆக்கிரமித்தது.--/

  நெறைய படிப்பீங்க போல... மேலும் படிக்கிற புத்தகங்களைப் பற்றி தனியாக ஒரு பதிவிடலாமே. இல்லை படைப்பையே தனியாக உங்களுடைய கற்பனை கலந்த பதிவாக இடலாமே...

  கிருஷ்ண பிரபு
  www.online-tamil-books.blogspot.com

  ReplyDelete
 4. Aarvind, Sopper . . . . interesting to read. I can feel as if you are speaking to me, which is a very good part of your blogs.

  ReplyDelete
 5. //நூலகத்தை மூடியபின், புத்தகங்களின் வரவு குறைந்து விட்டதால், கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது//

  ஹா ஹா..... பயங்கர டெரர்ரா படிச்சு இருப்ப போல

  ReplyDelete
 6. வருகைக்கு நன்றி நண்பர்களே!!

  \\நீங்கள் வாண்டுமாமா கதைகளை படித்தது இல்லையோ?\\

  வாண்டு மாமா படித்துள்ளேன். ஆனாலும், அவ்வளவாக நினைவில் இல்லை. உங்கள் உரலிக்கு நன்றி.

  ReplyDelete

உங்களின் கீழ்/மேலான கருத்துக்கள்..